திருவேங்கடமுடையான் திருமங்கையாழ்வார் 4 (வானவர் தங்கள் சிந்தை)

தொடக்கம்

பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம்.

திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே என்று நம் பெரியவர்கள் கூறி உள்ளார்கள்.).

பொதுவாக முதலாழ்வார்களுக்கு வேங்கடமுடையானிடம் அதிக பற்று கொண்டு இருந்தார்கள் என்பதும் அவர்கள் அவனுக்கு நிறைய பாடல்கள் பாடினார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து திருவேங்கடமுடையானை முன்னிட்டு

  • பொய்கையாழ்வார் இயற்றிய முதல் திருவந்தாதியில் இருந்து பத்து பாசுரங்களை முன்பு பார்த்தோம்.
  • அடுத்த ஆழ்வார், பூதத்தாழ்வார், அவரின் இரண்டாம் திருவந்தாதியில் இருந்து திருவேங்கடமுடையானை பற்றி பதினோரு பாசுரங்களில் சொல்வதை இங்கே  சுருக்கமாக பார்த்தோம்.
  • அடுத்த ஆழ்வாரான பேய்ஆழ்வாரின் திருவேங்கடமுடையான் பாசுரங்களை (19) இங்கே காணலாம்.
  • அடுத்து, திருமழிசை ஆழ்வார் திருவேங்கடமுடையானை பற்றி பாடல்களை (16) பார்த்தோம்.
  • திருப்பாணாழ்வார் பாடிய அமலனாதிபிரான் பிரபந்தத்தில் இருந்து இரண்டு பாடல்களை இங்கே பார்க்கலாம்.
  • அடுத்து குலசேகராழ்வாரின் பதினோரு பாடல்களை இங்கே கண்டோம்.
  • பெரியாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 7 பாசுரங்களை இங்கே பார்த்தோம்.
  • அடுத்து பெரியாழ்வாரின் புதல்வியாகிய ஆண்டாள் நாச்சியார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 16 பாசுரங்களை இங்கே கண்டோம்.

இனி ஆழ்வார்களின் தலைவராக கொண்டாப்படும் ஸ்வாமி நம்மாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய பாசுரங்கள் பற்றி காண்போம். நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்கள் இயற்றி உள்ளார். அவை திருவிருத்தம், திரு ஆசிரியம், பெரிய திருவந்தாதிதிருவாய்மொழி எனும் நான்கு தமிழ் மறைகள் ஆகும்.

ஸ்வாமி நம்மாழ்வார் மொத்தம் 37  திவ்யதேசங்களைப் பற்றி பாடியுள்ளார். அவைகளில் ஆழ்வாருக்கு திருவேங்கடமுடையானிடம் அதீத ஈடுபாடு. ஆழ்வார் முதலில் பாடிய திவ்யதேசம், திருவேங்கடமுடையானின் திருமலை ஆகும்.

இவற்றில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்து சில பாசுரங்களை முன்பு பார்த்து உள்ளோம். இங்கு திருவேங்கடவன் மேல் பாடிய அனைத்து பாசுரங்களையும் ஒவ்வொரு ப்ரபந்தமாக பார்ப்போம். திருவிருத்தத்தில் உள்ள 8 பாசுரங்களை முன்பு பார்த்தோம். இப்பொழுது திருவாய்மொழியில் உள்ள 40 பாசுரங்களை மூன்று பகுதிகளாக காண்போம்.

பெரியதிருவந்தாதியில் திருவேங்கடமுடையானை பற்றிய ஒரு (1) பாடலை இங்கே காணலாம்.

இனி திருமங்கையாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் அருளிச்செய்த 61 பாசுரங்களைப் பற்றி இங்கே சுருக்கமாக காணலாம்.

பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் ஆறு திவ்யப்ரபந்தங்களை அருளி உள்ளார். அவை,

  • பெரிய திருமொழி
  • திருவெழுகூற்றிருக்கை
  • சிறிய திருமடல்
  • பெரிய திருமடல்
  • திருகுறுந்தாண்டகம்
  • திருநெடுந்தாண்டகம்

ஆழ்வார் பெரிய திருமொழியில் பற்பல திவ்யதேச எம்பெருமான்களை பற்றி பாடுகிறார். முதலில் ஜோஷிர்மட், பத்ரிகாசிரமம் என்று தொடங்கி வடநாட்டு திவ்யதேசங்களில் தொடங்கி தெற்கு நோக்கி தன்னுடைய ஆடல்மா என்ற குதிரையில் பயணம் செய் து பற்பல திவ்யதேசங்களுக்கு சென்று அங்குள்ள எம்பெருமான்களை மங்களாசாசனம் செய்கிறார். அதில் திருவேங்கடம் பற்றி நான்கு பதிகங்கள் பாடி உள்ளார்.

அவற்றில் முதல் பதிகமான கொங்கு அலர்ந்த என்பதை இங்கே பார்த்தோம். அடுத்த பதிகமான தாயே தந்தையே என்ற பதிகத்தில் உள்ள பாசுரங்களை இங்கே கண்டோம். அடுத்த பதிகமான கண்ணார் கடல் சூழ் என்ற பதிகத்தின் பாசுரங்கள் பற்றி இங்கு பார்த்தோம்.

இனி அடுத்த பதிகமான வானவர் தங்கள் சிந்தை என்ற பெரிய திருமொழி (2.1) இரண்டாம் பத்தின் முதல் பதிகத்தை பற்றி சிறிது இங்கே காணலாம்.

பெரிய திருமொழி (2.1)

அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டு அருளே என்றும், இனி யான் உன்னை என்றும் விடேன் என்றும், கைங்கர்ய லாபத்திற்காக அவன் திருவடிகளை அடைந்து சரண் புகுந்ததும், அந்த கைங்கர்யமே எப்போதும் வேண்டும் என்கிற ஒரு ஆசை பிறந்ததையும் ஆழ்வார் கருத்தில் கொண்டு, அது எப்படி தன்பக்கலில் வந்தது என்று ஆராய்ந்து, மற்றவர்கள் (பொங்கு பொதியும் (2.1.5), துவரியாடையர் (2.1.6) பாடல்களாலும் இந்த பிறவி பலன் தெரியாமல் பாழ்பட்டு நிற்க, தனக்கு மட்டும் கைங்கர்யம் செய்ய ஆசை பிறந்ததற்கு காரணம் தன் நெஞ்சே (என் நெஞ்சம் என்பாய் , பெரிய திருமொழி 2.1.2 முதல் 2.1.8) என்று உணர்ந்து கொண்டு திருவுள்ளதோடு கூடி இனியர் ஆகின்றார்.

பெரிய திருமொழி முதல் பத்தில், ஆழ்வார், திருமந்திரத்தின் பலன்களையும், திருமந்திரத்தின் அர்த்தங்களை அருளி செய்ததையும், அந்த மந்திரம் விளைந்த நிலங்களில் தனக்கு உண்டான ஆசை மற்றும் அபிமானங்களை அருளி செய்தார். ஸ்ரீ சாளக்ராமம், ஸ்ரீ நைமிசாரண்யம், ஸ்ரீ அகோபிலம், ஸ்ரீ வெங்கடாச்சலம் இவற்றின் மேல் எழுந்த ஆசையினால் அவற்றை அனுபவித்து தமக்கு பகவத் விஷயத்தில் மிகவும் உகந்தது நித்ய கைங்கர்யமே என்று உறுதியாக சொன்னார்.

இனி இரண்டாவது பத்தில், திருவேங்கடம், திருஎவ்வளுர், திருவல்லிக்கேணி, திருநீர்மலை, திருகடல்மல்லை, திருவிடவெந்தை, திரு அட்டபுயகரம், திருபரமேச்சுர விண்ணகரம், திருக்கோவலூர் இவற்றில் உகந்து எழுந்தருளி இருக்கின்ற எம்பெருமான்களை அனுபவித்து பாடி, தன்னுடைய ஸ்வரூபம், பாகவத கைங்கர்யத்திற்கு இன்னும் பொருத்தமாய் இருக்கும் என்று சொல்லி, முதல் பத்தில் சொன்ன எம்பெருமான் நித்ய கைங்கர்யம் அவன் அருளாலே வரவேண்டும் என்பதால், பாகவத கைங்கர்யத்தை கொண்டு, அதனை ஒதுக்கி விடுகிறார்.

முதல் பாடல் (2.1.1)

வானவர் தங்கள் சிந்தை போலேன் நெஞ்சமே.இனிது வந்து, மாதவ மானவர் தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற எந்தை, கானவர் இடு காரகிற் புகை ஓங்கு வேங்கடம் மேவி, மாண் குறள் ஆன அந்தணற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே.

“என்னுடைய நெஞ்சமே, மிக்க தவம் செய்த மனிதர்கள் நெஞ்சங்களில் பொருந்தி நித்யவாஸம் செய்கின்ற என் ஸ்வாமியாய், வேடர்கள் வைரம் கொண்டு அறுத்த கருமையான அகில் மரங்களை நெருப்பில் இடுவதால் உண்டான புகை பரவி இருக்கின்ற உயர்ந்த திருமலையில் நித்யவாஸம் செய்கின்றவனாய், அழகிய வேடம் கொண்ட வாமனன் என்ற பிராமணனாக திகழும் எம்பெருமானுக்கு, நித்யஸூரிகளுடைய இதயங்களை போலவே இனிதாக உவந்து வந்து இப்பொழுது கைங்கர்யம் செய்வதில் ஆசைகொள்கின்றாயே” என்று ஆழ்வார் பாடுவது இந்த பாடலின் பொழிப்புரை ஆகும்.

தன்னுடைய நெஞ்சத்தினை குறித்து, ஆழ்வார், என் நெஞ்சில் உளானே என்றும், என் சிந்தையுள் நின்ற மாயன் என்றும் சொல்லி, அவன் தன் திருவுள்ளத்தில் வந்த அமர்ந்து இருக்கின்ற தன்மையை சிறப்பாக கூறி, மஹா தபஸ்விகள் இருதய கமலத்தில் வீற்று இருக்கும் ”மாண் குறள் ஆன அந்தணர்க்கு அடிமை பூண்டாயே” என்று பெருமையுடன் சொல்கிறார். தன்னுடைய உடைமையை பெறுவதற்கு தானே இரப்பாளனாகி வந்தமை மாண் என்பதன் மூலம் சொல்லப்பட்டது. மண் இரக்க வாமன அவதாரம் எடுத்தது போல் இப்பொழுது தன்னை அடிமை கொள்ள தன் நெஞ்சில் வாமன அவதாரம் எடுத்ததாக சொல்கிறார். அவனும் இரந்து நின்ற பின், தன் நெஞ்சமும் அவன் நினைவின்படியே போகின்றதே என்கிறார்.

நித்யஸூரிகளின் இதயம் பகவத் கைங்கர்யத்தில் எப்பொழுதும் ஆசையும் அபிமானமும் கொண்டு இருப்பதுபோல், என் நெஞ்சமான நீ அவன் திருவடிகளில் உகப்போடு ஈடுபாடு கொண்டு இருக்கிறாய் என்று சொல்கிறார்.

இரண்டாம் பாடல் (2.1.2)

உறவு சுற்றம் என்று ஒன்று இலா ஒருவன் உகந்தவர் தம்மை, மண்மிசைப் பிறவியே கெடுப்பானது கண்டு என் நெஞ்சம் என்பாய், குறவர் மாதர்களோடு வண்டு குறிஞ்சி மருளிசை பாடும் வேங்கடத்து, அறவ நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே.

ஆழ்வாரின் நெஞ்சம், ஆழ்வாரிடம், ‘நீர் எம்மை கொண்டாடுகிறீர், கைங்கர்யம் நமக்கு தொடர்ந்து நித்யம் கிடைக்குமோ என்று கவலை படும்படியான பாவங்கள் நிறைந்த பூமியில் அன்றோ நாம் வாழ்கிறோம்,” என்று சொல்லி, எம்பெருமானுடைய மோக்ஷம் அளிக்கும் மேன்மையே ஆழ்வார் இங்கே கொண்டாடுகிறார்.

நெஞ்சமே! திருவேங்கடமுடையானுடைய திருக்குணங்களை அறிந்து நீ அவனிடத்தில் அடிமைத் தொழில் பூண்டாயே! நாம் பந்துக்களென்று சிலரை எண்ணிக்கொண்டு அவர்களுக்கு நன்மை செய்வதும், சிலரை எதிரிகள் என்று எண்ணிக்கொண்டு அவர்களுக்குத் தீமை செய்வதுமாக இருக்கிறோமே, எம்பெருமானுடைய ஸ்வபாவம் அது போல் அல்ல. அவன் கர்மத்தின் காரணமாக / நிர்பந்தமாக உறவு சுற்றம் என்று ஒன்றும் இல்லாத ஒருவன். எல்லாரிடத்திலும் வேறுபாடு இன்றி அன்புடையவனாக இருப்பவன். தன்னை யார் உகக்கின்றார்களோ அவர்களின் பாபங்களை களைந்து, அவர்களை ஸம்ஸாரத்தில் இருந்து நீக்கி, நித்ய ஸூரிகளுடைய கூட்டத்திலே நிறுத்துபவன். அதனைப்பார்த்து அவன் மேல் அடிமைத் தொழில் பூண்டாயே” என்று தன் நெஞ்சிடம் சொல்வதாக சொல்வார்கள்.

உகந்தவர் தம்மை’ என்பதற்கு, ‘தன்னிடத்தில் எவர் அன்பு வைக்கிறார்களோ, அவர்களை’ என்றும், ‘எம்பெருமான் தான் எவர்களிடத்தில் அன்பு வைக்கிறானோ அவர்களை’ என்றும் உரைக்கலாம்.

அறவன் என்பதற்கு “ தண்ணீர்ப் பந்தலை வைத்து, நம்மை அடிமையாக பெறுகைக்குத் தம்மை நமக்குத் கொடுத்து நிற்கின்ற பரம தார்மிகன்” என்பது பெரியவாச்சான் பிள்ளையின் விளக்கம். நம்மிடத்தில் கைங்கரியம் கொள்வதற்காக திருமலையிலே வந்து நித்ய வாசம் செய்கிற பெரிய தருமத்தைச் செய்த எம்பெருமான் என்று சொல்கிறார்.

மூன்றாம் பாடல் (2.1.3)

இண்டையாயின கொண்டு தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும், வானிடைக் கொண்டு போயிடவும் அது கண்டு என் நெஞ்சமென்பாய், வண்டு வாழ் வட வேங்கட மலை கோயில் கொண்டதனோடும், மீமிசை அண்ட மாண்டிருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே.

பரமபதத்தில் எப்பொழுதும் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்கிற ஆசையில் இருக்கின்ற நெஞ்சத்தை மீண்டும் அன்போடு கொண்டாடுகிறார்.

பலவகைப்பட்ட பூக்களை எடுத்துக்கொண்டு எம்பெருமானை துதிக்க வருகின்ற தொண்டர்களையும் அவர்களோடு ஸம்பந்தம் உள்ள மற்றவர்களையும் அவன் ஏற்றுக்கொண்டு, பரமபதத்திலே கொண்டு சேர்க்கிறான் என்கிற இந்த சிறந்த குணத்தைக் கண்டு நெஞ்சே, அந்த திருவேங்கடமுடையானுக்குத் தொண்டு பூண்டாயே என்று மகிழ்கிறார்.

இண்டை என்பது பூமாலை. ” எண்டிசையுமுள்ள பூக்கொண்டேத்தி” (திருவாய்மொழி, 4.7.8) என்று நம்மாழ்வார் சொன்னபடி, பூமாலை என்று பெயர் கொண்ட ஒன்றை ஏந்திக்கொண்டு சென்றாலும் போதும் என்கிறார்.

தொண்டர்களெத்துவார் என்பதனால், தொண்டர்கள் பகவத் விஷயத்தில் “கையினால் பூக்களை கொண்டு, வாயினால் எம்பெருமானை பாடி” என்று ஆழ்வார் சொல்வதாக உரையாசிரியர் கூறுகிறார்.

உறவோடும் வானிடைக் கொண்டு போயிடவும் அது கண்டு என்று சொல்வதால் தொண்டர்கள் மட்டுமின்றி அவர்களோடு ஸம்பந்தம் உள்ள அனைவர்க்கும் மோக்ஷம் என்று ஆழ்வார் கூறுகிறார். இங்கு சம்பந்தம் என்பது ஒருநாள் காரியம் செய்தாலும் என்று கொண்டு, வேறுபாடு இல்லாமல் அழைத்து செல்கிற குணம் என்கிறார்.

இங்குத்தை இருப்பு தன்னையும் இழக்கிறோமோ என்று அஞ்சி அவன் அருகே சென்று கைங்கர்யம் செய்ய ஆசை கொண்ட நெஞ்சே என்று நெஞ்சத்தினை கொண்டாடும் போது, அஞ்சி என்பது இந்த உலகத்தில் உள்ள லௌகீகர்கள் அஞ்சுவது போல் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்டம் என்று சொல்வது ஆகாயம் என்று பொருள். வெறும் ஆகாயத்தை என்று சொன்னால் அது சொர்க்கத்தை மட்டுமே குறிக்கும் என்பதால் மீமிசை அண்டம் என்று சொல்லி, மஹா ஆகாயம் அல்லது பரம ஆகாயம் என்று சொல்லி, பரமபதத்தையும் சேர்க்கிறார்.

அவாப்த ஸமஸ்த காமன் (எல்லா ஆசைகளும் நிறைவேறியவன் அல்லது நிறைவேறாத ஆசை ஒன்றும் இல்லாதவன்) என்று சொல்லப்படும் எம்பெருமானுக்கு, இவரை அடிமை செய்யாவிட்டால் என்ன குறை என்று கேட்டுக்கொண்டு, திருமலையில் ஆழ்வார் வந்து புகுந்து எம்பெருமானிடம் அடிமை கொள்வதற்கு முன்பு, இந்த பூ உலகத்தை ஒரு ஐஸ்வர்யமாக நினைத்தது கிடையாது. (தனலுப்தன்) ஒரு ஏழை அல்லது கஞ்சன் ஒரு காசு விழுந்த இடத்தில் துழாவி கையெல்லாம் புழுதியாகி நிற்பதைப்போல் அவன் திருமலையில் நிற்கிறான் என்று உரையாசிரியர் எழுதுகிறார்.

நான்காம் பாடல் (2.1.4)

பாவி யாது செய்தாய் என் நெஞ்சமே பண்டு தொண்டு செய்தாரை, மண்மிசை மேவி ஆட் கொண்டு போய் விசும்பேற வைக்கும் எந்தை, கோவி நாயகன் கொண்டல் உந்து உயர் வேங்கடமலை ஆண்டு, வானவர் ஆவியாய் இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே.

இந்த ஆழ்வார் முன்பு பெரிய திருமொழி 1.4.4ல் “துணிவினி உனக்குச் சொல்லுவன்மனமே. தொழுதெழு தொண்டர்கள் தமக்கு, பிணியொழித்த அமரர்ப் பெரு விசும்பு அருளும் பேரருளாளன் எம்பெருமான்,’ என்று சொல்வதை ஆழ்வாருடைய நெஞ்சமானது குறிப்பிட்டு, ‘இப்படி நீங்கள் உபதேசம் செய்ததால் மோக்ஷத்தை பற்றி சொன்னேன்’ என்று கூற, அதற்கு ஆழ்வார் ‘தான் எத்தனை காலமாக உபதேசத்திருந்தாலும் அப்போதெல்லாம் மறுத்ததை நினைவில் கொண்டு, அதனால் இப்போதும் கேட்கமாட்டேன் என்று சொல்லாமல், உடனே இசைந்தாயே ‘ என்று நெஞ்சத்தை புகழ்கிறார்.

எம்பெருமான் இந்த மண்ணுலகத்திலே வந்து அவதரித்து, பக்தர்களிடத்தில் பற்பல கைங்கரியங்களை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு அருளி, அத்துடன் திருப்தி பெறாமல் இன்னமும் இவர்களிடத்தில் நித்ய கைங்கரியம் கொள்ள வேண்டும் என்று அவர்களை பரமபதத்திற்கு கொண்டு வைப்பவனாய் இருக்கும் கோபால கிருஷ்ணனான திருவேங்கடமுடையானுக்குத் தொண்டு பூண்டாயே நெஞ்சே என்று உகக்கிறார்.

முன்பு தமக்கு அடிமை செய்தவர்களை, தான் திருஅவதாரம் செய்து, இவன் எனக்கு மைத்துனன், இவன் எனக்கு நண்பன் என்று சொல்லி அவர்களோடு பொருந்தி, அவர்களுக்கு கைங்கர்ய ருசியை ஏற்படுத்தி, அவர்களை தனக்கு அடிமை செய்ய வைத்து, அவர்களை பரமபதத்தில் கொண்டு வைக்கும் சுவாமி என்கிறார். இங்கு மைத்துனன் என்றது அர்ச்சுனனை, நண்பன் என்று சொல்வது குகப்பெருமானை.

பாவியாது செய்தாய் என்பதில் உள்ள பாவி, என்பது பாவித்தலாகிய ஆராய்தல் என்பதை சொல்வது. ஆராயாதே செய்தாய் என்றதன் கருத்து, “அத்தைச் செய்வோமோ இத்தைச் செய்வோமோ” என்று அலைபாயாமல், உறுதியான எண்ணம் கொண்டு தொண்டு செய்தாயே என்று கூறுதல் ஆகும். இந்த உலக விஷயங்களில் மண்டி சம்சாரியாக இருக்கலாமா, எம்பெருமானுக்குத் தொண்டு செய்து பிறவிப்பயன் ஏய்தலாமா என்று தடுமாறாமல் சடக்கெனக் கைங்கரியத்தில் ஈடுபட்டாயே என்று சொல்கிறார்.

கோவிநாயகன் (கோபிநாயகன்) என்பது ஆய்ச்சிகட்கு அன்பன் என்று அர்த்தம் ஆகும். கோபியர்களுடன் கண்ணன் கலந்து விளையாடுவதைபோல் எம்பெருமான் தன்னுடைய அடியார்களோடு ஆர்வத்துடன் சேர்வான் என்பதை குறிக்க கோவிநாயகன் என்று கையாண்டு உள்ளார்.

ஐந்தாம் பாடல் (2.1.5)

பொங்கு போதியும் பிண்டியும் உடைப் புத்தர் நோன்பியர் பள்ளி உள்ளுறை, தங்கள் தேவரும் தாங்களுமேயாக என்நெஞ்சமென்பாய்! எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும் வேங்கடம் மேவி நின்றருள், அங்கணாயகற்கு இன்றடி மைத்தொழில் பூண்டாயே.

பாவியாது செய்தாய் என்று என்னை புகழ்வது ஏன் என்று நெஞ்சம் கேட்டபோது, ஆழ்வார் வெளியே இவ்வுலகில் கவலைப்பட வேண்டிய விஷயங்கள் பல உள்ளன என்று இந்த பாடலின் மூலம் ஆழ்வார் சொல்கிறார். உலகத்திலே ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம் மிகச் சுருங்கியும், ஜைநர் பௌத்தர் முதலிய புற மதத்தவர்களின் சமயம் வளர்ந்தும் வரும் இப்படிப்பட்ட உலகத்திலே விதிவசத்தாலே நாம் புற மதங்களிலே புகுந்தோ பிறந்தோ பாழாய்ப் போகாமல் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தாலே பிறந்து எம்பெருமானுக்கு அடிமைப்பட்டு வாழப் பெற்றோமே என்கிற தமது மகிழ்ச்சியை ஆழ்வார் இது முதல் மூன்று பாசுரங்களில் (2.1.5, 2.1.6 மற்றும் 2.1.7) வெளியிடுகிறார்.

பௌத்தர்களின் தேவதை அரச மரத்தடியை இருப்பிடமாக கொண்டும், ஜைநர்களின் தேவதை அசோகமரத்தடியை இருப்பிடமாக கொண்டும் இருப்பதை, பொங்குபோதியும்  பிண்டியுமுடைப் புத்தர் நோன்பியர் என்றார். போதி என்று அரசமரத்திற்குப் பெயர்;  அது கிளையும் கப்புமாக மிக வளர்ந்த மரமாதலால் பொங்குபோதி எனப்பட்டது.  பிண்டி என்று அசோக மரத்திற்குப் பெயர்.  ஜைநர்கள் அதிகமாக விரதங்களை கடைபிடிப்பவர் ஆகையால், நோன்பியர் எனப்பட்டனர்.  ஆக, புத்தர்களும், ஜைநர்களும் ஆகிய புற மதத்தவர்களும் இவர்களால் தொழப்படும் தெய்வங்களும் நிறைந்து இருக்கும் மண்ணுலகிலே, நெஞ்சமே! நீ அந்தத் தீயவழியில் செல்லாதே திருவேங்கட முடையானுக்கு அடிமைத் தொழில் பூண்டாயே, நீயே பாக்யசாலி என்று ஆழ்வார் உவக்கிறார்.

தாங்களுமேயாக என்பதற்கு ஆழ்வார் உட்கருத்தாக சொல்வது, லோகத்தில் உள்ள மற்றவர்கள் முக்தர்கள் ஆகும்படி என்பதாகும். எப்படி ஆழ்வாரது நெஞ்சம், மற்றவைகளை ஆதரிக்காமல், எம்பெருமான் விஷயத்தை ஆதரித்ததோ அதே போல் லோகத்தில் உள்ள மற்றவர்களும் எம்பெருமான் விஷயத்தை ஆதரித்து, பின்பற்றி முக்தர்கள் ஆவார்கள் என்கிறார்.

தானவரென்று அஸூரர்களைச்சொல்வதுடன் இந்த நிலவுலகத்தில் உள்ளவர்களையும் குறிப்பதாக சொல்வதுண்டு.   ஸ்தாநம் என்ற வடசொல் தானம் என திரிந்து ஸ்தானத்தில் உள்ளவர் என்பதை தானவர் என்று கொண்டு, அவ்வுலகத்தில் உள்ளவர்களும் இவ்வுலகத்தில் உள்ளவர்களும் நிறைந்து போற்றுமிடம் வேங்கடம் என்றும் கொள்ளலாம்.

அங்கணாயகற்கு (அம் கண் நாயகர்க்கு ) என்பதற்கு எம்பெருமானின் கண்ணழகிற்கு தோற்று அடிமை சாசனம் எழுதி கொடுத்தவர்கள் வழியில் சேர்ந்தாயோ என்று நெஞ்சத்தை கொண்டாடுகிறார்.

ஆறாம் பாடல் (2.1.6)

துவரிய ஆடையர் மட்டையர் சமண் தொண்டர்கள் மண்டியுண்டு பின்னரும், தமரும் தாங்களுமே தடிக்க என் நெஞ்சமென்பாய், கவரி மாக்கணம் சேரும் வேங்கடம் கோயில் கொண்ட கண்ணார் விசும்பிடை, அமர நாயகறகு இன்றடிமைத் தொழில் பூண்டாயே.

இடுப்பிலே காவி உடையை கட்டிக்கொண்டு மொட்டைத் தலையராகக் இருக்கிற சமணர்கள் கண்டபடி சோறுகளைத் தின்று அவ்வளவோடு திருப்தி பெறாமல், தங்களைப் போன்ற மற்றுமுள்ள சமணர்களுடனே பின்னையும் பெருங்கூட்டமாக இருந்து தின்று தின்று தடித்து இருப்பதை காண்கிறோம், நெஞ்சமே நீயும் அவர்களைப்போலே உண்டு உடல் பெருத்து போகாமல் திருவேங்கடமுடையானுக்குத் தொண்டு பூண்டு வாழப் பெற்றாயே என்று தன்னுடைய நெஞ்சத்தினை ஆழ்வார் உகந்தார்.

ஓ மனமே, காஷாய வஸ்திரம் அணிந்து மொட்டை தலையராக இருக்கிற சமணர்கள் ஒருவருக்கு மேல் ஒருவர் விழுந்து, மனம் போனபடி பல உணவுகளையும் உண்டு, அவர்களும் அவர்களை சேர்ந்தவர்களும் உடல் பருத்து இருக்க, நீயும் அவர்களைப்போல் உண்டு, உடம்பு பெருக்காமல் கவரிமான்கள் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்திருக்கிற திருமலையைக் கோயிலாகக் கொண்டவனும், விசாலாமான பரமபதத்திலேயுள்ள நித்யஸூரிகளுக்குத் தலைவனுமான எம்பெருமானுக்கு இன்று அடிமைத்தொழில் பூண்டாயே என்று ஆழ்வார் உகக்கிறார் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

ஏழாம் பாடல் (2.1.7)

தருக்கினால் சமண் செய்து சோறு தண் தயிரினால் திரளை, மிடற்றிடை நெருக்குவார் அலக்கணது கண்டென் நெஞ்சமென்பாய், மருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டதனோடும், வானிடை அருக்கன் மேவிநிற் பாற்கடி மைத்தொழில் பூண்டாயே

தருக்கினால் என்று சொன்னது தர்க்கத்தினால் என்று கொண்டு வெறும் கேவலம் வாதங்களாலே மட்டும் தங்கள் மதத்தை ஸ்தாபிக்க செய்வார்கள் என்றும் சாஸ்த்ரங்களுடன் கூடிய அல்லது ப்ரமாணங்களுடன் கூடிய வாதங்ககளை கொண்டே மதங்களை ஸ்தாபிக்க வேண்டியது உசிதமானது என்றும் இந்த பாடலில் ஆழ்வார் கூறுகிறார்.

சமணமதத்தில் ஒரு விரதமுண்டு; அதாவது, பெருஞ்சோறுண்ணுதல் என்ற அந்த விரதத்தின் போது, தயிறும் சோறுமாகத் திரட்டி, கண் பிதுங்கும்படி கழுத்துவரை சோறிட்டு கொள்வார்களாம். அந்த கஷ்டத்தைக் கண்டு அந்த மதத்தை வெறுத்துத் திருவேங்கடமுடை யானுக்குத் தொண்டு பூண்டு மகிழப் பெற்றாயே நெஞ்சமே, என்று ஆழ்வார் உகக்கிறார். இதே ஆழ்வார் பெரிய திருமொழி ஏழாம் பத்து ஒன்பதாவது பதிகம் இரண்டாம் பாடலில் (7.9.2) “தெருவில் திரி சிறு நோன்பியர் செஞ்சோற்றோடு கஞ்சி மருவிப் பிரிந்தவர் வாய்மொழி மதியாது வந்தடைவீர்” என்று சொல்வதை இங்கே நினைவில் கொள்ளலாம்.

வானிடை அருக்கன் மேவி நிற்பாற்கு என்பது வைதிகர்கள் வணங்கும்படியாக ஸூர்ய மண்டலத்திலே எழுந்தருளி இருப்பவனே என்றுசொல்வர். அதேபோல், சூரியனுக்கு அந்தராத்மாவாக இருக்கும் எம்பெருமானுக்கு அடிமை பூண்டாய் என்றும் சொல்வதுண்டு. .  “த்யேயஸ் ஸதா ஸவித்ருமண்டல மத்யவர்த்தீ நாராயண:” என்பதை இங்கே நினைவில் கொள்ளலாம்.

எட்டாம் பாடல் (2.1.8)

சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பது சிலர்ப் பேசக் கேட்டிருந்தே, என் நெஞ்சம் என்பாய் எனக்கு ஒன்று சொல்லாதே, வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி வேங்கட மலை கோயில் மேவிய, ஆயர் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே.

இந்த பாடல் துவங்கி மூன்று பாடல்களில், (2.1.8, 2.1.9 மற்றும் 2.1.10), எம்பெருமானின் அருள் என்ற பாக்யம் பெற்றவர்களின் உயர்வை ஆழ்வார் சொல்கிறார். அது மட்டுமின்றி நல்ல புத்தி இல்லாதவர்களின் நிலைகளையும் ஆழ்வார் குறிப்பிடுகிறார்.

பகவத் விஷயத்தில் சேரமால் இருக்கின்ற ஜீவாத்மாக்களை போல் உண்டு உடுத்து திரியாமல், அதற்கு (தன்னுடைய நெஞ்சத்திற்கு) காரணமான தன்னிடம் சேராமல், தன்னிடம் ஒரு வார்த்தை கூட கூறாமல், திடீரென்று திருவேங்கடமுடையான் விஷயத்தில் அடிமை தொழில் பூண்டு, அவன் திருவடிகளை சேர்ந்ததே என்று தன நெஞ்சத்தைப் பற்றி சொல்கிறார்.

“சேயன், அணியன், சிறியன், பெரியன்” என்கிற வார்த்தைகள் பகவத் விஷயத்தில் ஈடுபடாத ஸம்ஸாரிகள் சொல்லும் வார்த்தைகள் ஆகும். சிலர், பரமபதத்தில் இருக்கும் பரவாஸூதேவன் எட்டாத தூரத்தில் உள்ளான் என்று காரணம் சொல்லி, அவனைப் பற்ற மாட்டார்கள்; சிலர், அர்ச்சாவதாரங்கள் சமீபத்தில் இருப்பதால் அலட்சியம் தோன்ற பேசுவார்கள்; நமக்காக திருஅவதாரம் எடுத்த, ராமன், கிருஷ்ணன் போன்ற விபவாவதாரங்களின் ஸௌலப்ய குணத்தில் ஈடுபடாமல் சிறுமைகளைச் சொல்லி ஏசுவர்; திருப்பாற்கடலில் இருக்கும் வியூக வாஸூதேவனையும், அந்தர்யாமியான எம்பெருமானையும் பற்றச் சொன்னால் தங்கள் நெஞ்சங்களுக்கு எட்டாதவர்கள் என்று சொல்லி அந்த உயர்ந்த உருவை எப்படி பற்றுவது என்று சொல்வர்; இப்படி அவனுடைய குணங்களெல்லாம் இகழ்வாருடைய கூட்டங்களில் சேராமல், திருவேங்கமுடையான் விஷயத்தில் அடிமைத் தொழில்பூண்டு நின்றாயே என்று தன்னுடைய நெஞ்சினை உகந்து பேசுகின்றார்.

கரண தயா உன்னையுடைய என்னோடு என்று சொல்வதைபோன்றே இங்கு எனக்கு ஒன்று சொல்லாதே, என்று கூறுவது. பிரிதி சென்றுஅடை நெஞ்சே, என்றும், வதரி வணங்குவதும் என்றும், சாளக்ராமம் அடை நெஞ்சே என்று பலகாலும் சொன்னதற்கு தக்கவாறு நெஞ்சம் செல்கிறது என்று ஆழ்வாருக்கு உகப்பு.

மதயானைகளின் தலைகளிலும் மூங்கில்களினும் முத்துக்கள் உண்டாகின்றன என்று கவிகள் சொல்வார்கள்; அப்படியே ஆழ்வாரும், “வேய்கள் நின்று வெண்முத்தமே சொரி வேங்கடம்” என்கிறார். முன்பு “வெண் தரளங்கள் வேய்விண்டுதிர் வேங்கடமாமலை” என்றார். மூங்கில்களானவை வெளுத்த முத்துக்களைச் சொரிய, அவற்றின் ஒளியானது வழிகாட்ட, திருமலை அப்பனின் திருவடிகளில் வந்து சேர்ந்தது என்று ரசமாக சொல்வார்கள்.

ஆயர் நாயக்கர்க்கு என்று சொன்னதன் மூலம் ஆயிரம் ஆயிரம் ஆயர் குலத் தலைவனான என்று கூறுகிறார்.

இப்படி வேங்கடம், கண்ணன் இரண்டையும் குறிப்பிட்டதால் திருவேங்கடத்தில் நின்ற விபவத்தில் ஈடுபட்ட மனதை சொல்வதாக கருத்து.

ஒன்பதாம் பாடல் (2.1.9)

கூடி ஆடி உரைத்ததே உரைத்தாய் என் நெஞ்சம் என்பாய் துணிந்து கேள், பாடி ஆடிப் பலரும் பணிந்தேத்திக் காண்கிலா, ஆடு தாமரையோனும் ஈசனும் அமர் கோனும் நின்றேத்தும், வேங்கடத்து ஆடு கூத்தனுக்கு இன்று அடிமைத்தொழில் பூண்டாயே.

குற்றங்களை சொல்லி அவற்றில் இருந்து விடு பெற எம்பெருமானை நாடியவர்களையும் அதிகாரத்தை தேடி எம்பெருமானை நாடுபவர்களையும் மற்ற பலன்களை விரும்பி எம்பெருமானை நாடியவர்களையும் குறிப்பிட்டு நெஞ்சமே நீ அவர்களை போல் இல்லை, எம்பெருமானை தொழுவதேயே பிரயோஜனமாக கொண்டு தொழுகிறாய் என்று உகக்கிறார்.

கூடியாடி உரைத்ததே உரைத்தாய்” என்று கூறியது தமது நெஞ்சின் பலகால துன்பத்தை கூறியது. அதாவது உலக விஷயங்களில் மட்டும் மண்டிக்கிடந்த ஜீவாத்மாக்களோடு உரையாடி, அதனையே அதுவும் பேசி காலம் கழித்ததாகவும் சொல்லி, தன் நெஞ்சிடம் அது நேற்றுவரை எப்படி பொழுது போக்கியது, இன்று எப்படி இப்படி இருக்கிறது என்று ஆச்சர்யம் தோன்ற சொல்கிறார்.

நெஞ்சிடம் அது பெற்ற பாக்கியத்தின் உயர்வினை தான் சொல்வதாக தொடங்குகிறார். அன்புடன் நன்றாக கேட்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார். பக்தி இல்லாமல், பாடியும் ஆடியும் பலரும் பணிந்து அவனை துதித்தும் காணமுடியாதவனும், பிரமன் சிவன் இந்திரன் முதலான தெய்வங்கள் தங்கள் அதிகாரங்களை பெறுவதற்கு இங்கு (திருமலையில்) வந்து துதிக்கும் பெருமை பெற்றவனுமான திருவேங்கடமுடையான் இடத்தில் அவருடைய நெஞ்சம் அடிமைத் தொழில் பூண்டதாக பெருமை படுகிறார். நெஞ்சத்திடம் அது இந்த இரண்டு கோஷ்டியிலும் இல்லை என்பதற்கும் பெருமை படுகிறார்.

காண்கிலா” என்றும், “காண்கிலார்” என்றும் இரண்டு வித பாடங்கள் உண்டு. காண்கிலா என்று சொல்லும்பபோது, திருவேங்கடமுடையானுக்கு உள்ள சிறப்பாக எடுத்துக் கொள்ளப்படும். காணக்கிலார் என்று சொல்லும்போது, பிரம்மனுக்கும் ஈசனுக்கும்  அமரர் கோனுக்கும் சிறப்பாகக் குறிப்பிட்டு சொல்லப்படும். தங்களைப் பணிந்தவர்களும் கூடத் தங்களைக் காண முடியாத ஏற்றமுடைய பிரமன் முதலியோர் வந்து துதிக்கும் பெருமை பெற்ற திருவேங்கமுடையான் என்ற அர்த்தத்தில் வரும்.

ஆடு’ என்று வெற்றிக்குப் பெயர்; வெற்றியையுடைய பிரமன், உலகங்களைப் படைக்க வல்லவனாகையாகிற ஸாமர்த்தியம் வாய்ந்த பிரமன் என்று சொல்ல ஆடு தாமரையோன் என்று ஆழ்வார் கூறுகிறார். ஆடு என்பது பெருமையாய் என்ற பொருளிலும் வரும், பெருமையை உடைய தாமரையோன் என்றும் பொருள் கொள்ளலாம். ஆடுகை என்பது நடையாடுகை என்ற அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளும் போது, அதில் ஆர்வம் கொண்டவன் (வர்த்திக்கிறான்) என சொல்வார்கள். மேலும் ஆடுகை என்பது உண்டாகை என்ற அர்த்தமும் உள்ளதால், எம்பெருமானின் திருநாபிக் கமலத்தில் உதித்தவன் என்று பொருள் கொள்ளப்படும்.

திருநெடுந்தாண்டகம் (16) பாசுரத்தில் “மன்றமரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும், வடதிருவேங்கடம் மேய மைந்தா என்றும்,” என்று சொன்னது போல், இங்கும் வேங்கடத்து ஆடு கூத்தனுக்கு என்று சொல்கிறார்.

பத்தாம் பாடல் (2.1.10)

மின்னு மாமுகில் மேவு தண் திருவேங்கடமலை கோயில் மேவிய, அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை, கன்னி மாமதிள் மங்கையர்க் கலி கன்றி இன் தமிழால் உரைத்த, இம்மன்னு பாடல் வல்லார்க்கு இடமாகும் வானுலகே.

மின்னலுடன் கூடிய காளமேகங்கள் வந்து சேர்கிற திருமலையை உறைவிடமாக வாழ்பவனும், ஹம்ச ரூபத்துடன் அவதரித்தவனும், நித்யஸூரிகளுக்கு தலைவனுமான எம்பெருமான் விஷயமாக, பெரிய மதில்களை உடைய திருமங்கை நாட்டில் உள்ளவர்களுக்கு தலைவனான இனிய தமிழால் உரைத்த வேதம் போன்ற இப்பாடல்களை பாட வல்லவர்களுக்கு பரமபதம் வாசஸ்தலமாகும் என்று ஆழ்வார் உரைக்கிறார்.

கன்னி மாமதிள், எந்திரத்தில் உள்ள கன்னி, என்பது என்றும் அழியாத என்ற பொருளில் வரும்.

மின்னு மாமுகில் என்று சொன்னது எம்பெருமானும், பிராட்டியும் கூடி வாழ்கின்ற வாழ்ச்சியை சொல்வதாகும். மின்னல் பிராட்டியையும் முகில் என்ற மேகங்கள் எம்பெருமானும் ஆகும். தன் வடிவில் இருக்கும் இருட்டிற்கு விளக்கு பிடித்துக்கொண்டு திரியும் மேகங்களை போல் தன்னை அறிவதற்கு சாதனமாக வேதங்களை கொடுத்த எம்பெருமான் என்பதை உரைப்பதற்காக ஆழ்வார் கூறும் உபமானம். அப்படிப்பட்ட வேதங்களை ப்ரம்மாதிகள் தொலைத்த போது, மீட்டு கொடுப்பதற்காக அன்னப்பட்சி வடிவத்தில் அவதரித்த எம்பெருமானை அன்னமாய் நிகழ்ந்த பெருமானை என்று அடுத்து சொல்கிறார். பின்னர் அவர்கள் எம்பெருமானை துதிப்பதற்கு சுலபனாக இருக்கிற சர்வேஸ்வரன், திருமலையில் கோவில் கொண்டு உள்ளான் என்று கொள்ளலாம்.

இனி, திருமங்கை ஆழ்வார் திருவேங்கடமுடையானை பாடிய மற்ற பாசுரங்களை அடுத்த பதிவினில் பார்க்கலாம், நன்றி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email

Discover more from Vaishnavism

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading