திருவேங்கடமுடையான் திருமங்கை ஆழ்வார் 3 (கண்ணார் கடல்சூழ்)

தொடக்கம்

பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம்.

திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே என்று நம் பெரியவர்கள் கூறி உள்ளார்கள்.).

பொதுவாக முதலாழ்வார்களுக்கு வேங்கடமுடையானிடம் அதிக பற்று கொண்டு இருந்தார்கள் என்பதும் அவர்கள் அவனுக்கு நிறைய பாடல்கள் பாடினார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து திருவேங்கடமுடையானை முன்னிட்டு

 • பொய்கையாழ்வார் இயற்றிய முதல் திருவந்தாதியில் இருந்து பத்து பாசுரங்களை முன்பு பார்த்தோம்.
 • அடுத்த ஆழ்வார், பூதத்தாழ்வார், அவரின் இரண்டாம் திருவந்தாதியில் இருந்து திருவேங்கடமுடையானை பற்றி பதினோரு பாசுரங்களில் சொல்வதை இங்கே  சுருக்கமாக பார்த்தோம்.
 • அடுத்த ஆழ்வாரான பேய்ஆழ்வாரின் திருவேங்கடமுடையான் பாசுரங்களை (19) இங்கே காணலாம்.
 • அடுத்து, திருமழிசை ஆழ்வார் திருவேங்கடமுடையானை பற்றி பாடல்களை (16) பார்த்தோம்.
 • திருப்பாணாழ்வார் பாடிய அமலனாதிபிரான் பிரபந்தத்தில் இருந்து இரண்டு பாடல்களை இங்கே பார்க்கலாம்.
 • அடுத்து குலசேகராழ்வாரின் பதினோரு பாடல்களை இங்கே கண்டோம்.
 • பெரியாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 7 பாசுரங்களை இங்கே பார்த்தோம்.
 • அடுத்து பெரியாழ்வாரின் புதல்வியாகிய ஆண்டாள் நாச்சியார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 16 பாசுரங்களை இங்கே கண்டோம்.

இனி ஆழ்வார்களின் தலைவராக கொண்டாப்படும் ஸ்வாமி நம்மாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய பாசுரங்கள் பற்றி காண்போம். நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்கள் இயற்றி உள்ளார். அவை திருவிருத்தம், திரு ஆசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி எனும் நான்கு தமிழ் மறைகள் ஆகும்.

ஸ்வாமி நம்மாழ்வார் மொத்தம் 37  திவ்யதேசங்களைப் பற்றி பாடியுள்ளார். அவைகளில் ஆழ்வாருக்கு திருவேங்கடமுடையானிடம் அதீத ஈடுபாடு. ஆழ்வார் முதலில் பாடிய திவ்யதேசம், திருவேங்கடமுடையானின் திருமலை ஆகும்.

இவற்றில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்து சில பாசுரங்களை முன்பு பார்த்து உள்ளோம். இங்கு திருவேங்கடவன் மேல் பாடிய அனைத்து பாசுரங்களையும் ஒவ்வொரு ப்ரபந்தமாக பார்ப்போம். திருவிருத்தத்தில் உள்ள 8 பாசுரங்களை முன்பு பார்த்தோம். இப்பொழுது திருவாய்மொழியில் உள்ள 40 பாசுரங்களை மூன்று பகுதிகளாக காண்போம்.

பெரியதிருவந்தாதியில் திருவேங்கடமுடையானை பற்றிய ஒரு (1) பாடலை இங்கே காணலாம்.

இனி திருமங்கையாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் அருளிச்செய்த 61 பாசுரங்களைப் பற்றி இங்கே சுருக்கமாக காணலாம். நன்றி

பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் ஆறு திவ்யப்ரபந்தங்களை அருளி உள்ளார். அவை,

 • பெரிய திருமொழி
 • திருவெழுகூற்றிருக்கை
 • சிறிய திருமடல்
 • பெரிய திருமடல்
 • திருகுறுந்தாண்டகம்
 • திருநெடுந்தாண்டகம்

ஆழ்வார் பெரிய திருமொழியில் பற்பல திவ்யதேச எம்பெருமான்களை பற்றி பாடுகிறார். முதலில் ஜோஷிர்மட், பத்ரிகாசிரமம் என்று தொடங்கி வடநாட்டு திவ்யதேசங்களில் தொடங்கி தெற்கு நோக்கி தன்னுடைய ஆடல்மா என்ற குதிரையில் பயணம் செய் து பற்பல திவ்யதேசங்களுக்கு சென்று அங்குள்ள எம்பெருமான்களை மங்களாசாசனம் செய்கிறார். அதில் திருவேங்கடம் பற்றி நான்கு பதிகங்கள் பாடி உள்ளார்.

அவற்றில் முதல் பதிகமான கொங்கு அலர்ந்த என்பதை இங்கே பார்த்தோம். இப்பொழுது அடுத்த பதிகமான தாயே தந்தையே என்ற பதிகத்தில் உள்ள பாசுரங்களை இங்கே கண்டோம்.

அடுத்த பதிகமான கண்ணார் கடல் சூழ் என்ற பதிகத்தின் பாசுரங்கள் பற்றி இங்கு காண்போம்.

பெரியதிருமொழி 1.10

சென்ற பதிகத்தில், இஷ்ட பிராப்த்தியை பிரார்த்தித்தார்; இந்த பதிகத்தில் அநிஷ்ட நிவ்ருத்தியை பிரார்த்திக்கிறார். எம்பெருமானை அடைவதற்கு தன்னிடம் உள்ள விரோதிகளை போக்கி தரவேணும், அவனால் மட்டுமே அது முடியம் என்று ஆழ்வார் தீர்மானத்துடன் இருக்க, ஆழ்வாரின் எல்லா பிரார்த்தனைகளையும் நிறைவேற்றவே இங்கே திருமலையில் எழுந்தருளி இருப்பதாக எம்பெருமான் திருவுள்ளமாக, எம்பெருமான் ஆழ்வாரின் மனதில் புகுந்து அவருக்கு பரபக்தி முதலியவைகளை பிறப்பித்ததாக இந்த பதிகம் சொல்கிறது.

பாஷ்யகாரர் சரணம் அனுஷ்டித்த போது, ஸ்தூல, சூஷ்ம ரூபமான (கண்களுக்கு புலப்படாத) ப்ருகிருதியை அழித்து தர வேண்டும் என்றும், அஹங்கார மமகாரங்களை கழித்து தர வேண்டும் என்றும், விரோதியை போக்கி தர வேண்டும் என்றும் பரபக்தி முதலியவற்றை பிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதை இங்கு நினைவில் கொள்ளலாம்.

முதல் பாடல் (1.10.1)

கண்ணார்க் கடல் சூழ் இலங்கைக்கு இறைவன் தன், திண்ணாகம் பிளக்கச் சரம் செல உய்த்தாய், விண்ணோர்த் தொழும் வேங்கடமாமலை மேய, அண்ணா ! அடியேன் இடரைக் களையாயே.

மிகப் பெரிய கடலையே அகழாக கொண்ட இலங்கைக்குத் தலைவனான இராவணனுடைய சரீரம், தேவதைகளின் வரங்களால் வலுத்த அந்த சரீரம், இரு பிளவாகப் பிளக்கும்படி அவன் மீது அம்புகளை எய்தவனே, என்று ஸ்ரீராம பிரானை அழைத்து, திருவேங்கடமுடையானும் இவனும் ஒருவனே என்று சொல்கிறார். இராவணனாலே தங்களுடைய உடைமைகளை இழந்த தேவர்கள் எல்லோரும் மகிழ்ந்து வந்து தொழும்படியான திருவேங்கட மலையிலே எழுந்தருளி இருக்கின்ற எம்பெருமானே, இந்த இருள் தருமா ஞாலத்தில் இருப்பதாவது பெரும் துக்கம் என்று உணர்ந்த தன்னுடைய இந்த இடரைப் போக்கி அருள வேண்டும் என்கிறார். இங்கிருப்பது இடர் என்று தன் நெஞ்சுக்கு பட்ட பின் தன்னுடைய கைங்கர்ய விரோதியை போக்கி அருள வேண்டுகிறார்.

இரண்டாம் பாடல் (1.10.2)

இலங்கைப்பதிக்கு அன்று இறையாய, அரக்கர் குலம் கெட்டவர் மாளக் கொடிப் புள் திரித்தாய்!, விலங்கல் குடுமித் திருவேங்கடம் மேய, அலங்கல் துளப முடியாய்! அருளாயே!

முற்காலத்தில் இலங்கைக்கு அரசர்களாயிருந்த மாலி, இராவணன் முதலிய ராக்ஷஸர்கள் கும்பலோடே சிதறியோடி முடியும்படியாக தனக்கு கொடியான பெரிய திருவடி கொடியை பறக்கவிட்டவனே, மேலே ஸஞ்சரீக்கிற சந்திர ஸூர்யர்கள் விலகி போக வேண்டும் என்ற அளவிற்கு உயர்ந்த சிகரங்களை உடைய திருமலையிலே மேவி இருக்கின்ற எம்பெருமானே, அடியவர்களின் ரக்ஷணத்திற்கு என்று திருத்துழாய் மாலை அணிந்தவனே, அடியேன் மீது க்ருபை பண்ணி அருள வேண்டும். சென்ற பாடலிலும் இந்த பாடலிலும் எம்பெருமான் விரோதிகளை அழிக்கும் குணத்தை சொல்லி, இந்த பாடலில் தனக்கு அம்பு எய்து கொல்லும் விரோதிகள் என்று இல்லை, அருள் ஒன்றே போதும் என்று வேண்டுகிறார்.

புற்றானது என்றைக்கும் கெட்ட பாம்புகள் உறையுமிடமாக இருப்பது போல இலங்கையானது, இராவணனுக்கு முன்பும் குடியிருந்த மாலி முதலானவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வந்ததால், அவர்களையும் எம்பெருமான் முடித்ததை சொல்கிறார்.

உத்தர ஸ்ரீராமாயணத்தில் ஏழாவது ஸர்க்கத்தில் மாலி முதலிய அரக்கர்களை முடித்த வரலாறு விரிவாகக் கூறப்பட்டுள்ளது. மாலியானவன் முதலில் பெரிய திருவடியை கதையாலே அடித்துத் துரத்தி விட்டான் என்றும், பிறகு பெருமாள் அளவற்ற சீற்றங் கொண்டு அந்த பெரிய திருவடியின் மேல் ஏறிக்கொண்டு போர்க்களத்திலே எழுந்தருளித் திருவாழியைப் பிரயோகித்து வெற்றி பெற்றான் என்கிறார். ‘இலங்கைப் பதிக்கென்று இறையாய ” என்றும் பொருந்தும்.

குலம் மாள” என்னாமல் என்று சொல்லாமல், ” குலம் கெட்டு மாள ” என்று சொன்னதால், பல அரக்கர்கள் மூலைக்கொருவராகச் சிதறி ஓடினார்கள் என்பதும், பலர் மாண்டு ஒழிந்தனர் என்பதும் பாதாளத்திற்கு சென்று ஒளிந்தார்களும் பட்டுபோகும்படி பெரிய திருவடியின் கொடியை சுழற்றிக்கொண்டு திரிந்தார் என்பதும் விளங்கும்.  விலங்கல்  குடுமி  என்று சொன்னது, ”சேணுயர் வேங்கடம்” என்று நான்முகன் திருவந்தாதி (5.2) பாசுரத்தில் சொன்னது போல், திருமலையின் உயரத்தை சொல்வது, வானத்தின் மீது ஸஞ்சரிக்கின்ற ஸுர்ய சந்திரர்கள் தன்னுடைய பாதையை விட்டு விலகிப் போக வேண்டும் என்று அளவுக்கு உயரங்கள் கொண்ட சிகரத்தையுடைய திருமலை என்கிறார். விலங்கல் என்று மலைக்கும் அர்த்தம் உண்டு என்பதால், சிகரத்தையுடைய, திருவேங்கடமலையிலே என்றும் சொல்லலாம், ஆனால் அது சிறப்பாக இருக்காது என்று உரையாசிரியர் கூறுகிறார்.

மூன்றாம் பாடல் 1.10.3

நீரார்க் கடலும் நிலனும் முழுதுண்டு, ஏராலமிளந்தளிர்மேல் துயிலெந்தாய்!, சீரார் திருவேங்கடமாமலை மேய, ஆராவமுதே!அடியேற்கருளாயே!

சென்ற பாடலில் ஒரு கடலுக்கு உட்பட்ட இலங்கையில் விரோதிகளை ஒழித்த அளவினை போலவோ, இந்த பூமியையும் கடல்களையும் காப்பாற்றும் அளவு என்று இந்த பாடலில் சொல்கிறார்.

மற்றவர்களை ரக்ஷிக்க தனக்கு சக்தி இருந்தாலும், ஆழ்வாரை ரக்ஷித்தல் தனக்கு எளிது இல்லை என்றும், அரிது என்றும் எம்பெருமான் திருவுள்ளமாக, பிரளய காலத்திலே கடல் சூழ்ந்த உலகங்களை எல்லாம், தன் திருவயிற்றிலே வைத்து இளையதொரு ஆலந்தளிரின் மேலே கண் வளர்ந்தருளின சாமர்த்தியம் கொண்ட எம்பெருமானுக்கு அரிதான காரியமும் உண்டோ என்றும், எல்லாம் எளிதே என்பவர் போல வடபத்ரசாயி சரித்திரத்தை ஆழ்வார் எடுத்து சொல்கிறார். அந்த சக்தி விசேஷம் எல்லாம் தோன்ற திருமலையிலே ஸேவை ஸாதிக்கின்ற ஆராவமுதமே! இதுவே போக்கியம் என்று இருக்கிற ஆழ்வாருக்கு இதனை அனுபவிக்க அருள் புரிய வேண்டும் என்று வேண்டுகிறார்.

சீரார் திருவேங்கடமாமலை என்று சொன்னது, பரமபதம் போல் ஐஸ்வர்யத்தில் மிகுதியாக உள்ள திருமலை என்பதை சொல்வதற்காக என்று கொள்ளலாம். ஆராவமுதே என்று சொன்னது, இந்த அமுதம் சொர்க்கத்தில் இல்லை என்பது போல் இங்கே தான் உள்ளது என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம்.

நான்காம் பாடல் (1.10.4)

உண்டாய் உறிமேல் நறு நெய் அமுதாக, கொண்டாய் குறளாய் நிலம் ஈரடியாலே, விண் தோய் சிகரத் திருவேங்கடம் மேய, அண்டா! அடியேனுக்கு அருள்புரியாயே!

திருமலையில் எழுந்தருளி இருக்கின்ற இருப்பில் எம்பெருமானின் மேன்மை (பரத்வம்) எளிமை (ஸௌலப்யம்) என்ற இரண்டும் ஒருங்கே விளங்குகின்றன. இரண்டுக்கும் ப்ரகாசகமான இரண்டு சரித்திரங்கள் / எம்பெருமானின் திருவிளையாடல்களை பாடலின் முதல் இரண்டு அடிகளில் சொல்கிறார். திருவாய்ப்பாடியில் ஆய்ச்சிகள் உறிகளின் மேலே சேமித்து வைத்த நெய் முதலியவற்றை அமுது செய்தாய் என்பதால் ஸௌலப்ய குணத்தையும், சிறு குறுகிய வடிவம் கொண்டு மாவலியிடத்துச் சென்று, நீரேற்றுப் பெற்று ஈரடியாலே உலகத்தை அளந்தாய் என்று சொன்னதால், பரத்வத்தையும் ஆழ்வார் சொல்கிறார்.

உண்டாய் உறிமேல் நறு நெய் அமுதாக என்று சொன்னதால், அடியவர்கள் செய்த பண்டங்கள் இல்லாமல் இருக்க மாட்டேன் என்பது போல் சொல்லப்பட்டது.

விண்தோய் சிகரத் திருவேங்கடம்” என்று சொன்னதால், பரமபதம் அளவும் ஓங்கிய சிகரங்களை கொண்ட திருமலையில் உறையும் திருவேங்கடத்தானே என்கிறார்.

 திருவேங்கடமலை இந்த பூமியில் உள்ளதால் நம் போன்ற மனிதர்கள் சென்று ஸேவிப்பதற்கு சுலபமாக இருப்பது போலே, “விண்தோய் சிகரத் திருவேங்கடம்” ஆனதால் நித்யஸூரிகள் வந்து ஸேவிப்பதற்கும் எளிதாக இருக்கும். இதுவே “வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு” என்று திருமழிசைப்பிரானும் “மந்திபாய் வடவேங்கடமாமலை, வானவர்கள் சந்தி செய்ய நின்றான்” என்று திருப்பாணாழ்வாரும் அருளிச்செய்தது.

நித்யஸூரிகள் பரத்வத்திலே ஸர்வகாலமும் பழகினவர்களாகையாலே ஸௌலப்யத்தைக் காண விரும்பி வருவர்கள்; மனிசர்கள் பரத்வத்தைக்காண விரும்பிச் செல்லுவர்கள்; இரண்டு குணங்களும் அங்கே குறையற்றவை என்று இப்பாசுரத்தினால் காட்டினார்.

 ‘அண்டன்‘ என்று இடையனுக்கும் தேவனுக்கும் பெயர். அதனால், ”திருவேங்கடம் மேய அண்டா“ என்ற சொல்வதும் இங்கே வெண்ணை உண்ட வாயனுக்கும், மண்ணை கொண்ட காலனுக்கும் பொருத்தமாக இருக்கும் என்று உரையாசிரியர் கூறுகிறார். ”உறி மேல் நறுநெய் அமுதாக உண்ட அண்டா” என்று யோசித்து, இடையனே! என்றும், “குறளாய் ஈரடியாலே நிலம் கொண்ட அண்டா” என்று யோசித்து, ‘தேவனே! பரம புருஷனே!’ என்றும் சொல்லி இரண்டு யோசனைகளாலும் பரத்வ ஸௌலப்யங்கள் விளங்கும் வண்ணம் ஆழ்வார் இந்த பாட்டில் சொல்லி உள்ளார்.

யசோதை பிராட்டியும், இந்திரனும் பெற்ற பேற்றின் அளவுக்கும் அதிகமாக தனக்கு கைங்கர்யத்தை தந்து அருள வேண்டும் என்பது உள்ளுறை பொருள். அருளாயே என்று சொல்லாமல் அருள் புரியாயே என்று சொல்வதால் ஆழ்வாருடைய அடிமை செய்வதில் உள்ள ஆர்வம் வெளிப்படுகிறது என்று கொள்ளலாம்.

ஐந்தாம் பாடல் (1.10.5)

தூணாய் அதன் ஊடு அரியாய் வந்து தோன்றி, பேணா அவுணன் உடலம் பிளந்திட்டாய், சேணார் திருவேங்கட மாமலை மேய, கோள் நாகம் அணையாய! குறிக்கொள் எனை நீயே!

முன் பாசுரத்தில், வாமனனாக அற்புதமாக வேஷம் கொண்டதை நினைவில் கொண்டு அதற்கு முன் திரு அவதாரம் செய்த நரசிம்மத்தை இந்த பாடலில் எடுத்து கொள்கிறார். இதனால் உபகாரம் செய்ய அவன் உருவம் கொண்டதை சொல்லி அதே போல் திருமலையில் வந்து நின்று தன்னுடைய உள்ளத்தில் புகுந்ததை சொல்கிறார்.

பக்தர்களின் விரோதிகளிடத்தில் கோபமும், பக்தர்களிடத்தில் அன்பும் விளங்கத் திருமலையிலே ஸேவை ஸாதிக்கின்றதை சொல்கிறார். தூணினுள்ளே நரசிங்கமாய்த் தோன்றி இரணியனுடலைப் பிளந்தெறிந்து சிறுவனான ப்ரஹ்லாதாழ்வானுக்கு அருள் செய்ததை போல் அடியேனுக்கும் அருள் செய்ய வேண்டும் என்கிறார்.

தூணூடு அரியாய் வந்து தோன்றி” என்று சொல்லாமல், ‘தூணாய் அதன் ஊடு” என்று சொன்னதால், ‘முன்பே நரஸிம்ஹத்தை உள்ளே வைத்து கட்டின தூண் இது’ என்று சொல்ல முடியாதபடி வெறும் தூணுக்குள்ளே திருஅவதாரம் செய்த என்று பொருள். “அளந்திட்ட தூணை அவன் தட்ட அங்கே வளர்ந்திட்டு வாளுயிர் சிங்க உருவாய்” என்று பாடிய பெரியாழ்வார் திருமொழி (1.7.9) பாசுரத்தை நினைவில் கொள்ளலாம். பேணா அவுணன் என்றதால், எம்பெருமானை மதிக்காத இரணியன் என்றும், பாகவதவனான ப்ரஹ்லாதனை மதிக்காத இரணியன் என்றும் உரைக்கலாம்.

சேண்  என்று சொல்வது, அகலம், ஆகாயம், மேன்மை, உயர்வு, தூரம், நீளம் என்று சிலவற்றை குறிக்கும். கோள்நாகணையாய் என்பதில் எந்திரத்தில் கோள் என்பது மிடுக்கினை குறிக்கும், அதே போல், திருவனந்தாழ்வானுக்கு மிடுக்காக இருப்பது ‘சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம், நின்றால் மரவடியாம்” என்றபடி பலவகை சேவைகளை செய்வதற்கு தக்கவாறு உரிய வடிவங்களை எடுத்து தன்னை மாற்றிக் கொள்ளும் சக்தி.

குறிக்கொள் என்று சொன்னதால், ஓர் அடியவனும் உள்ளான் என்று திருவுள்ளத்தில் வைத்திரு என்று சொல்லி, திருவனந்தாழ்வானைப் போலே தன்னையும் எம்பெருமானின் சேவகத்துக்கு ஆளாக்கிக் கொள்ள வேண்டும் என்பது உள்ளுறை பொருள்.

ஆறாம் பாடல் (1.10.6)

மன்னா இம்மனிசப் பிறவியை நீக்கி, தன்னாகித் தன் இன் அருள் செய்யும் தலைவன், மின்னார் முகில் சேர் திருவேங்கடம் மேய, என்னானை யென்னப்பன் என் நெஞ்சில் உளானே !

இந்த பதிகத்தின் முதல் ஐந்து பாட்டும் ஆழ்வாரின் பிரார்த்தனையாய்ச் சென்றது; இனி வரும் பாடல்கள் பிரார்த்தனை ஒருவாறு நிறைவேறியதாகச் சொல்வதாகச் செல்லுகிறது. ”அடியேனிடரைக்களை யாயே” என்றும் “அடியேற்கருளாயே” என்றும் “அடியேனுக்கருள் புரியாயே” என்றும் “குறிக்கொள் எனை நீயே ” என்றும் பிரார்த்தித்த ஆழ்வாரை நோக்கித் திருவேங்கடமுடையான், அடியார்களைத் தேடித் திரிகிற தான் இப்படி பிரார்த்திக்கிற ஆழ்வாரின் பிரார்த்தனைகளை நிறைவேற்றாமல் இருப்பேனா என்று சொல்லி ஆழ்வார் திருவுள்ளத்திலே வந்து புகுந்தான்; அதனை அறிந்த ஆழ்வார் இனிதாக அனுபவிக்கிறார். எம்பெருமான் தமது நெஞ்சிலே வந்து புகுந்ததால் தாம் ஸம்ஸாரத்தில் நின்றும் விலகி விட்டதாகவே நினைத்துப் பேசுகிறார்.

தன்னாகி என்பதற்கு தனதாக்கி கொள்ளுதல் என்றும், மின்னார் முகில் சேர் என்று சொன்னது, ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காளமேகம் என்பதில் உள்ள ஒப்பீடுகளை போன்றது என்றும் மனதில் கொள்ள வேண்டும். மேகமும் மின்னலும் சேர்ந்து இருப்பது, அவனும் பிராட்டியும் சேர்ந்து இருப்பதை சொன்னது.

மன்னா என்பது மனிதப் பிறவிக்கு அடைமொழி. ”மின்னின் நிலையில் மன் உயிர் ஆக்கைகள்” ( திருவாய்மொழி 1.2.2) என்றபடி மின்னலைக் காட்டிலும் ஸ்திரமற்ற இந்த மானிடப் பிறவியில் இருந்து தன்னை நீக்கி அருள் செய்யும் எம்பெருமான் தன் நெஞ்சிலே வந்து புகுந்து நிற்கிறான் என்கிறார்.

என்னப்பன் என்று சொன்னதன் மூலம், தனக்கு உபகாரம் செய்பவன் என்று சொல்லி, ‘”என் நெஞ்சில் உளானே” என்று தனக்கு செய்த உபகாரத்தையும் சொல்கிறார். உளானே என்று ஏகாரத்துடன் சொன்னதற்கு காரணம், நெஞ்சில் வந்து புகுந்து, போக மாட்டேன் என்று இருக்கிறார் என்று உரையாசிரியர் கூறுகிறார்.

ஏழாம் பாடல் (1.10.7)

மானேய் மட நோக்கி திறத்து எதிர் வந்த, ஆனேழ் விடைசெற்ற அணி வரைத் தோளா, தேனே. திருவேங்கடமாமலை மேய, கோனே. என் மனம் குடி கொண்டிருந்தாயே

சென்ற பாட்டில், நெஞ்சில் புகுந்து போகமாட்டேன் என்று சொன்னவர், இந்த பாடலில், நப்பின்னை பிராட்டியுடன் வந்து தன் நெஞ்சில் குடி கொண்டார் என்கிறார்.

அண்ணா அடியேன் இடரைக் களையாயே” என்று முதல் பாட்டிலே தாம் பிரார்த்தித்தபடியே தம்முடைய இடர்களைக் களைந்து அருளினது, முன்பு நப்பின்னைப் பிராட்டியுடன் சேர்வதற்கு விரோதிகளாயிருந்த ஏழு ரிஷபங்களை அடக்கினது போலே இருப்பதால் அதனை இங்கே சொல்லுகிறார். மானினுடைய விழிகளை போன்ற நோக்கை உடையவளான நப்பின்னைப் பிராட்டியை மணந்து கொள்வதற்காக அவளுடைய தந்தையின் கட்டளைப்படி ஏழு ரிஷபங்களையும் கொன்று ஒழித்த எம்பெருமானே !அன்று அவளுக்கு எவ்வளவு போக்யமாக இருந்ததோ, தனக்கும் அவ்வளவு போக்யமாக இருப்பவனே! திருவேங்கடமுடையானே! அந்த நப்பின்னைப் பிராட்டியையும் கூட்டிக் கொண்டு என் மனத்தே வந்து குடி கொண்டிருக்கின்றாயே! இப்படியும் ஒரு திருவருள் உண்டோ என்று கூறுகிறார். அவள் கண்ணாலே காண, இவன் தோளாலே தழுவினான் என்றும், இவன், அவளுடைய கண்ணழகிற்கு தோற்று அவளை தழுவ, அவள் இவனுடைய தோள் மிடுக்கிற்கு தோற்றாள் என்றும், ஆழ்வாரின் திருவுள்ளம்.

“‘எதிர் வந்த ஆனேழ் விடைகளை மானேய்மட நோக்கி திறத்துச் செற்ற அணிவரைதோளா! என்று அழைக்கிறார். நப்பின்னை பிராட்டிக்காக இளகும் தோள்கள் ரிஷபங்களுக்கு இளகாமல் இருந்த திண்ணிய தோள்கள் என்கிறார்.

தேனே என்றது, நப்பின்னை பிராட்டிக்காக எம்பெருமான் ஏழு ரிஷபங்களை ஒழித்த சரித்திரத்தை சொன்ன ஆழ்வாரின் நெஞ்சுக்கு இனிதாக இருப்பதை சொல்வது.

என் மனம் குடி கொண்டு இருந்தாயே என்பதற்கு நப்பின்னை பிராட்டியுடன், பெரியாழ்வார் தன்னுடைய பெரியாழ்வார் திருமொழி (5.2.10) ல் கூறியது போல், “அரவத் தமளியி னோடும் அழகிய பாற்கட லோடும், அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து“, இனி ஒரு காலும் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என்று தோன்றும் படி சொன்னதாயிற்று.

எட்டாம் பாடல் (1.10.8)

சேயன் அணியன் என சிந்தையுள் நின்ற மாயன் மணி வாளொளி வெண் தரளங்கள், வேய் விண்டுதிர் வேங்கடமாமலை மேய, ஆயனடி யல்லது மற்றறையேனே.

இப்படி என் நெஞ்சிலே நப்பின்னைப் பிராட்டியுடன் வந்து புகுந்த பின்பு இவன் திருவடிகளிலே கைங்கரியம் பண்ணுவதைத்தவிர வேறொன்றும் நானறியேன் என்பதை ஆயனடி அல்லது மற்றை அறியேனே” என்கிறார்.

எம்பெருமான் சிலர்க்குச் (பக்தி இல்லாதவர்களுக்கு) சேயன், சிலர்க்கு ( தன்னுடைய அடியவர்களுக்கு)அணியன்; சேயன் என்றால் தூரத்தில் இருப்பவன் என்றும், அணியன் என்றால் அருகே இருப்பவன் என்றும் கொள்ளலாம். தன்னை விரும்பாதவர்களுக்கு (உகவாதார்க்கு) அவன் எட்டாதவன்; தன்னை விரும்பியவர்களுக்கு (உகந்தார்க்கு) அவன் கையாளாயிருப்பவன். இவன் துரியோதனர்களிடத்திலும் பாண்டவர்களிடத்திலும் பழகியதில் இருந்து இதனைக் காணலாம். சிறிது பக்தியுடையார்க்கும் அவன் அணியன் என்பதை தன் விஷயத்தில் காணலாம் என்பது ஆழ்வார் வாக்கு என்பதை என்  சிந்தையுள்  நின்ற மாயன் என்பதால் அறிந்து கொள்ளலாம். தன்னுடைய இதயத்தில் வந்து நித்ய வாஸம் பண்ணுகிற ஆச்சரிய சீலன் அணியன் என்று சொல்லவும் வேண்டுமோ என்கிறார்.

ஆழ்வார் அவனிருக்கும் தேசத்திற்கு செல்ல உத்தேசித்து, அதற்கான விரோதிகளை எம்பெருமான் நீக்க வேண்டும் என்பது அவரின் பிரார்த்தனையாய் இருக்க, ஆழ்வாரின் உள்ளத்தில் உடனே வரவேண்டும் என்பது எம்பெருமான் திருள்ளமாக இருக்க அவசரமாய் ஆழ்வார் உள்ளத்திலே புகுந்து நின்றதை, என்  சிந்தையுள்  நின்ற மாயன் என்று ஆழ்வார் கூறி உள்ளார்.

மணி வாள் ஒளி வெண் தரளங்கள் வேய் விண்டு உதிர் என்பது திருவேங்கட மலையை சொல்கிறது. யானைகளிடத்திலும் மூங்கில்களிலும் முத்துக்களும் மணிகளும் உண்டாவதாக நூல்கள் கூறும். மூங்கில்கள் விண்டு விரிந்து, ஒளி பொருந்திய மணிகளையும், ஒளியும் வெண்ணிறமும் பொருந்திய முத்துக்களையும் உதிர்க்கும் இடமான திருமலையிலே எழுந்தருளியிருக்கிற ஸர்வ சுலபனுடைய திருவடிகளைத் தவிர வேறொன்றும் அறியேன் என்று ஆழ்வார் கூறுகிறார்.

வாள் ஒளி வெண் என்றது திருவேங்கடத்திற்கு விசேஷமாக சொல்லப்பட்டது. வெண்மை, நீர்மை உடையவன் என்பதை குறிக்கும்.

ஒன்பதாம் பாடல் (1.10.9)

வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய், நந்தாத கொழுஞ்சுடரே எங்கள் நம்பீ, சிந்தாமணியே திருவேங்கடம் மேய எந்தாய்!, இனி யான் உன்னை என்றும் விடேனே.

ஆயன் திருவடி அன்றி மற்று எதுவும் இல்லை என்று ஆழ்வார் சொன்னதை கேட்டு எம்பெருமான் வேறு சிலவற்றை திருவுள்ளமாக, அவற்றை இந்த பாடலில் ஆழ்வார் அருளி செய்கிறார்.

வந்தாயென்மனம் என்று சொன்னதன் மூலம், தாம் பெற்ற பேற்றை வாயாரச் சொல்லி மகிழ்கிறார். “வந்து என் மனம் புகுந்து மன்னி நின்றாய்” என்று ஒரு வாக்கியமாகவே சொல்லாமல், தம்முடைய ஆனந்தம் நன்கு விளங்குமாறு ”வந்தாய், என் மனம் புகுந்தாய், மன்னி நின்றாய் ” என்று தனித்தனி வாக்கியங்களாக நீட்டி உரைக்கின்றார்.

பரமபதம், திருப்பாற்கடல் முதலான அஸாதாரண திருத்தலங்களை விட்டு, ஆழ்வார் எம்பெருமானிடம், அப்படி ஒரு வேண்டுதல் வைக்காத போதும், ஆழ்வார் இருந்த இடம் தேடி வந்து, ஆழ்வாரின் மனதினுள் வந்தாய் என்கிறார். வந்த இடத்திலும், ஞான அனுஷ்டானங்களில் சிறந்த யோகிகளின் மனத்தைத் தேடி சென்று போகாமல் ஆழ்வாரின் மனத்தைத் தேடிப் பிடித்து வந்து புகுந்தாய் என்பதை என் மனம் புகுந்தாய் என்கிறார். ‘இனிய இடங்களிலே எம்பெருமான் சுகமாக இருப்பதைவிட்டு இவருடைய அழுக்கு நெஞ்சிலே சிறைப் பட்டுக் இருப்பதேன்’ என்று வெறுத்து ஆழ்வாரின் நெஞ்சைவிட்டு நீங்காமல், ‘இதனில் சிறந்த இடம் வே றொன்று நமக்கில்லை’ என்று அதனையே ஒரு பெரும் பேறாக எடுத்துக் கொண்டு, ஆழ்வார் எம்பெருமான் வர வேண்டாம் என்று சொல்லாத ஒரு காரணத்தினாலேயே, ஆழ்வாரின் நெஞ்சிலே நிரந்தரமாக இருந்து விட்டாய் என்பதை மன்னிநின்றாய் என்கிறார். இனி புகுதல் அரியதாக இருக்கும் என்பதால் அங்கேயே நிரந்தரமாக இருந்தான் என்று உரையாசிரியர் கூறுகிறார்.

நந்தாத கொழும் சுடரே என்றது, ஒரு காலமும் அணையாத அல்லது கெடாத நெடும் சுடரே என்று அர்த்தம். எம்பெருமான் தன் நெஞ்சில் வந்து புகுந்ததனாலே அவனுடைய தேஜஸ்ஸுக்கு ஒரு சிறிதளவும் குறையில்லை, முன்னைவிட ஒளி அதிகமாகவே உள்ளது என்பதை நந்தாத கொழுஞ்சுடரே! என கூறுகிறார்.

திருமலையில் வந்து நின்று எம்பெருமானின் ஸ்வாமித்துவத்தை காட் டி தன்னை வேறு எங்கும் செல்ல முடியாதவனாக ( அநன்யார்கன் ) ஆக்கி விட்டார் என்று ஆழ்வார் சொல்கிறார்.

இனி யான் உன்னை என்றும் விடேன் என்பதற்கு கொடுத்துள்ள விளக்கம் மிகவும் சுவாரசியம் ஆக உள்ளது. எம்பெருமான் ஆழ்வாரின் இதயத்தை தனக்கு என்று நினைப்பது கண்டு, ஆழ்வார், ‘ நீ எனக்கு என்று திருமலையில் வந்து நிற்கிற நிலையை பார்த்தபின், அடியேன் உனக்காக ஆகும்படி பற்றின பற்றை விடுவேனோ’ என்ற வகையில் சொல்கிறார். இதனால் ஆழ்வார் தனக்கு பரபக்தி பிறந்தது என்கிறபடி பாடுகிறார். பரபக்தி என்பது அரை நொடி பொழுது ( அரை க்ஷணம்) அவனை நினையாவிட்டால் உயிர் போவது என்ற நிலையை அடைவது.

பத்தாம் பாடல் (1.10.10)

வில்லார் மலி வேங்கடமாமலைமேய, மல்லார்த் திரள்தோள் மணிவண்ணன் அம்மானை, கல்லார்த் திரள் தோள் கலியன் சொன்ன மாலை, வல்லார் அவர் வானவர் ஆகுவர்த் தாமே.

திருவேங்கடமுடையானைத் திருமங்கையாழ்வார் கவி பாடின இப்பாசுரங்களை ஓத வல்லவர்கள் நித்யஸுரிகளைப் போலே நித்ய கைங்கரியம் பண்ணிக்கொண்டு வாழப் பெறுவர்கள் என்று இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லி முடிக்கிறார்.

ஆழ்வார் திருமலையில் எம்பெருமானை மங்களாசாசனம் செய்து பாடுவார் ஆகையால், அவரை போலவே மற்றவர் பலரும் எம்பெருமானை மங்களாசாசனம் செய்ய வருவார்கள். அவர்கள் எப்பொழுதும் வில் மற்றும் அம்புகளுடன் கூடி இருக்கும் வேடர்கள் என்று கூறுகிறார்.

நித்யஸூரிகள் எப்பொழுதும் ஆபத்துகளை எதிர்பார்த்து பரமபதத்தில் பணிபுரிவது போல், ஸ்ரீகுஹப்பெருமாள் எப்படி இரவு பொழுது முழுவதும் விழித்திருந்து இராமபிரானை உற்று நோக்கி வந்தானோ, அது போன்று திருமலையில், வேடர்கள் இந்நிலத்திலே எந்த வேளையிலே யாரால் என்ன தீங்கு எம்பெருமானுக்கு நேர்ந்துவிடுமோ’ என்று பயந்து எப்போதும் ஏறிட்ட வில்லும் கையுமாய் இருப்பர் என்று திருமலையில் நிறைந்து இருக்கும் வேடர்களை ஆழ்வார் மகிழ்ந்து விரிவாக புகழ்ந்து சொல்கிறார்.

பெரியாழ்வார், “மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா” என்று எம்பெருமானுடைய அளவற்ற சக்தி விசேஷத்தை அறிந்து சொன்னபோதும் பயம் கொண்டு சந்தேகம் மிகுதியாலே “பல்லாண்டு பல்லாண்டு” என்று சொன்னார் போல், இவரும் “மல்லார் திரடோள் மணிவண்ணன்” என்று அறிந்து வைத்தும் சந்தேகத்தினால் மங்களாசாஸநத்திலே, ஆழ்வார்கள் மிகவும் பாதுகாவலர்களாக இருப்பர் என்பது இந்த பாட்டில் தெரிகிறது.

இந்த பாட்டில் ஆழ்வார் பல்லாண்டு பாடுவதாக இல்லையே என்று நினைக்க வேண்டாம். ” மங்களாசாஸநம் செய்பவர்கள் திருமலையிலே உள்ளார்” என்று சொல்லுவதும் பல்லாண்டு பாடுவதை போலவே என்று உரையாசிரியர் கூறுகிறார்.

இனி அடுத்த பதிகத்தை பற்றி விளக்கத்தில் சந்திக்கலாம், நன்றி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d