திருவேங்கடமுடையான் – திருமங்கையாழ்வார் 2 ( தாயே தந்தையே)

தொடக்கம்

பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம்.

திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே என்று நம் பெரியவர்கள் கூறி உள்ளார்கள்.).

பொதுவாக முதலாழ்வார்களுக்கு வேங்கடமுடையானிடம் அதிக பற்று கொண்டு இருந்தார்கள் என்பதும் அவர்கள் அவனுக்கு நிறைய பாடல்கள் பாடினார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து திருவேங்கடமுடையானை முன்னிட்டு

  • பொய்கையாழ்வார் இயற்றிய முதல் திருவந்தாதியில் இருந்து பத்து பாசுரங்களை முன்பு பார்த்தோம்.
  • அடுத்த ஆழ்வார், பூதத்தாழ்வார், அவரின் இரண்டாம் திருவந்தாதியில் இருந்து திருவேங்கடமுடையானை பற்றி பதினோரு பாசுரங்களில் சொல்வதை இங்கே  சுருக்கமாக பார்த்தோம்.
  • அடுத்த ஆழ்வாரான பேய்ஆழ்வாரின் திருவேங்கடமுடையான் பாசுரங்களை (19) இங்கே காணலாம்.
  • அடுத்து, திருமழிசை ஆழ்வார் திருவேங்கடமுடையானை பற்றி பாடல்களை (16) பார்த்தோம்.
  • திருப்பாணாழ்வார் பாடிய அமலனாதிபிரான் பிரபந்தத்தில் இருந்து இரண்டு பாடல்களை இங்கே பார்க்கலாம்.
  • அடுத்து குலசேகராழ்வாரின் பதினோரு பாடல்களை இங்கே கண்டோம்.
  • பெரியாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 7 பாசுரங்களை இங்கே பார்த்தோம்.
  • அடுத்து பெரியாழ்வாரின் புதல்வியாகிய ஆண்டாள் நாச்சியார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 16 பாசுரங்களை இங்கே கண்டோம்.

இனி ஆழ்வார்களின் தலைவராக கொண்டாப்படும் ஸ்வாமி நம்மாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய பாசுரங்கள் பற்றி காண்போம். நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்கள் இயற்றி உள்ளார். அவை திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி எனும் நான்கு தமிழ் மறைகள் ஆகும்.

ஸ்வாமி நம்மாழ்வார் மொத்தம் 37  திவ்யதேசங்களைப் பற்றி பாடியுள்ளார். அவைகளில் ஆழ்வாருக்கு திருவேங்கடமுடையானிடம் அதீத ஈடுபாடு. ஆழ்வார் முதலில் பாடிய திவ்யதேசம், திருவேங்கடமுடையானின் திருமலை ஆகும்.

இவற்றில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்து சில பாசுரங்களை முன்பு பார்த்து உள்ளோம். இங்கு திருவேங்கடவன் மேல் பாடிய அனைத்து பாசுரங்களையும் ஒவ்வொரு ப்ரபந்தமாக பார்ப்போம். திருவிருத்தத்தில் உள்ள 8 பாசுரங்களை முன்பு பார்த்தோம். இப்பொழுது திருவாய்மொழியில் உள்ள 40 பாசுரங்களை மூன்று பகுதிகளாக காண்போம்.

பெரியதிருவந்தாதியில் திருவேங்கடமுடையானை பற்றிய ஒரு (1) பாடலை இங்கே காணலாம்.

இனி திருமங்கையாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் அருளிச்செய்த 61 பாசுரங்களைப் பற்றி இங்கே சுருக்கமாக காணலாம். நன்றி

பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் ஆறு திவ்யப்ரபந்தங்களை அருளி உள்ளார். அவை,

  • பெரிய திருமொழி
  • திருவெழுகூற்றிருக்கை
  • சிறிய திருமடல்
  • பெரிய திருமடல்
  • திருகுறுந்தாண்டகம்
  • திருநெடுந்தாண்டகம்

ஆழ்வார் பெரிய திருமொழியில் பற்பல திவ்யதேச எம்பெருமான்களை பற்றி பாடுகிறார். முதலில் ஜோஷிர்மட், பத்ரிகாசிரமம் என்று தொடங்கி வடநாட்டு திவ்யதேசங்களில் தொடங்கி தெற்கு நோக்கி தன்னுடைய ஆடல்மா என்ற குதிரையில் பயணம் செய் து பற்பல திவ்யதேசங்களுக்கு சென்று அங்குள்ள எம்பெருமான்களை மங்களாசாசனம் செய்கிறார். அதில் திருவேங்கடம் பற்றி நான்கு பதிகங்கள் பாடி உள்ளார்.

அவற்றில் முதல் பதிகமான கொங்கு அலர்ந்த என்பதை இங்கே பார்த்தோம். இப்பொழுது அடுத்த பதிகமான தாயே தந்தையே என்ற பதிகத்தில் உள்ள பாசுரங்களை இங்கே காண்போம்.

பெரியதிருமொழி 1.9

சென்ற பதிகத்தில், ஒவ்வொரு பாசுரத்தில் “திருவேங்கடம் அடை நெஞ்சமே! திருவேங்கடம் அடை நெஞ்சமே!” என்று சொல்லித் திருமலையை அணுகுமாறு தம் திருவுள்ளத்திடம் சொல்கிறார். அந்த திருவுள்ளமும் அப்படியே செல்ல, “யானும் என் நெஞ்சமும் இசைந்து ஓழிந்தோம்” என்பது போலே ஆழ்வாரும் அவரின் நெஞ்சமும் கூடித் திருவேங்கடமுடையானை அநுபவிக்கத் திருமலையிலே வந்து புகுந்தனர். எல்லோருக்கும் ஸ்வாமியாய், எல்லோருக்கும் சொந்தமானவனாகவும் விளங்குகின்ற எம்பெருமான் இங்கே நித்யவாஸம் செய்து அருளுகிறபடியால் தமக்கும் எல்லாம் செய்வார் என்ற எதிர்பார்ப்புடன் ஆழ்வார் இங்கு வந்து சேர்ந்தார். அதனால் இதனை இந்த பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் வந்தடைந்தேன் என்று சொல்லி உள்ளார்.

இப்படி வந்த ஆழ்வாரை, எதிர்கொண்டு அழைத்தல், அணைத்தல், இனியதாக ஒரு வார்த்தை சொல்லுதல், நலம் விசாரித்தல் அல்லது ஒரு கைங்கரியம் செய்ய சொல்லுதல் என்று எதுவும் சொல்லாமல் திருமலையப்பன் இருந்தான். அதனால் ஆழ்வார் மிகவும் திருவுள்ளம் வருத்தப்பட்டு ‘ஸர்வஜ்ஞனாய் ஸர்வ சக்தனாய் நமக்கு வகுத்த நாதனாய் பிராட்டியை ஒரு நொடிப்பொழுதும் விட்டுப் பிரியாதவனாய் இருக்கும் எம்பெருமான் இப்போது நம்மை கண்டு கொள்ளாமல் இருப்பதற்குக் காரணம் தம்முடைய பாவங்களே இருக்கும் என்று நிச்சயித்து, அந்த எம்பெருமானின் திருவுள்ளத்திலே இரக்கம் பிறக்கும்படி இந்த பதிகத்தில் பாசுரங்கள் பாடுகிறார்.

சொந்தங்கள் இல்லாதவர்களை சொந்தமாக நினைத்தும், அனுபவிக்க வேண்டாத விஷயங்களை அனுபவித்துக் கொண்டும், மற்ற ஜீவாத்மாக்களுக்கு அளவு இல்லாமல் துயர் கொடுத்துக் கொண்டும் , இன்னமும் பலவகைப் பாவங்களைச் செய்தும் காலம் கழித்து வந்ததாக ஆழ்வார் சொல்கிறார். இருந்தாலும், இப்போது எம்பெருமானை விட்டு பிரிய முடியாதபடி அன்பு பிறந்ததனால் அநுதாபத்துடனே தான் திருமலை வந்து சேர்ந்ததாக ஆழ்வார் சொல்கிறார்.

இனி தன்னுடைய முன்னைத் தீவினைகளைப் பார்த்துக் கைவிடாமல், தன் குற்றங்களை பொறுத்துக் கொண்டு தன்னை ஏற்றுக் கொண்டு அருள் புரிய வேண்டும் என்று பெரிய பிராட்டியாரைப் புருஷகாரமாகக் கொண்டு எம்பெருமானின் திருவடிகளிலே விழுந்து சரணம் புகுகிறார். எம்பெருமானோ ஸர்வரக்ஷகன்; தானோ அனாதை. தன் குற்றங்களைப் பொறுத்துக் கொள்ள பிராட்டியும் எம்பெருமானின் திரு மார்பில், ‘அகலகில்லேன் இறையும் என்று ” இருக்கிறார். ஆகவே தன் அபராதங்களைப் பொறுத்தருளி ஒன்பதாம் பாட்டிலே “மாயனே எங்கள் மாதவனே!” என்று பிராட்டி ஸம்பந்தம் பற்றி நேரிடையாக சொல்லி, புருஷகாரம் முன்னாகச் சரணம் புகுகிறார்.

முதல் பாடல் (1.9.1)

தாயே தந்தையென்றும், தாரமே கிளை மக்களென்றும், நோயே பட்டொழிந்தேன் உன்னைக் காண்பதோர் ஆசையினால், வேய் ஏய் பூம்பொழில் சூழ் விரையார் திருவேங்கடவா! நாயேன் வந்தடைந்தேன் நல்கி ஆள் என்னைக் கொண்டருளே.

எம்பெருமானையே ஸகலவித சொந்தங்களுமாகக் கொள்ள வேண்டியிருக்க அது செய்யாமல், தாயாக இல்லாதவரை, தாயே என்றும் தந்தையாக இல்லாதவரை தந்தையே என்றும் மனைவியாக இல்லாதவரை தாரமே என்றும் சுற்றங்களே இல்லாதவரை கிளையே என்றும் நண்பர்கள் இல்லாவர்களை மக்களே என்றும், பெற்ற பிள்ளைகளிடமும், நண்பர்களிடமும் ஆசை வைத்து மிகவும் கஷ்டங்கள் பட்டேன் என்றும், அவர்களுக்கு தன்னை காப்பாற்ற சக்தி இருந்தால்தானே அவர்களால் தான் வாழமுடியும், ஆனால் உண்மையில் அவர்களை வீணே நம்பி தான் கெட்டேன் என்றும், பிறர்க்கும் எம்பெருமானுக்கும் என்று வாழ்ந்து விட்டதாக சொல்கிறார்.

என்றென்றும் எல்லோருக்கும் சொந்தமான எம்பெருமானை மட்டும், பற்றி இருந்தால் ஒரு குறையும் இருந்திருக்காதே என்றும், தற்பொழுது நல்ல புத்தி உண்டானதால் பரமபோக்யமான திருமலையிலே வந்து எம்பெருமானின் திருவடிகளிலே விழுந்ததாகவும், தன்னுடைய முன் காலத்தைய தீவினைகளை எம்பெருமான் திருவுள்ளத்தில் கொள்ளாமல், ஆழ்வார் ஒரு சரணாகதன் என்று மட்டும் எடுத்துக் கொண்டு பர​ம கிருபையுடன் அடிமை கொண்டருள வேண்டும் என்று ஆழ்வார் பிரார்த்திக்கிறார்.

காப்பாற்றுவார்கள் என்று நம்பி இருந்த உலக சொந்தங்கள் கைவிட்டதனால், எல்லோருக்கும் எப்பொழுதும் சொந்தமாக உள்ள எம்பெருமானை காணமுடியாதோ என்று எண்ணும் அளவிற்கு அவனிடத்தில் ஆசையை பிறப்பித்தன என்பதை, உன்னைக் காண்பதோர் ஆசையினால்” என்பதன் மூலம் தெரிவிக்கின்றார்.

நாயேன் என்று ஆழ்வார் சொன்னதற்கு நாய் போலே நீசன் என்று பொருள் கொண்டாலும், பெரியவாச்சான் பிள்ளை சொல்லும் உள்ளுறை பொருள் ரசமானது. ராஜபுத்ரர்கள் நாய்களையே மேல் விழுந்து விரும்புவது போலே ராஜாதிராஜனான எம்பெருமானும் தன்னை, தன் மேல் விழுந்து விரும்ப வேண்டும் என்கிறார்.

மூங்கில்கள் நெருங்கி யிருக்கப் பெற்றதும் பூஞ்சோலைகள் நிறைந்திருக்கப் பெற்றதும் மிகுந்த மணம் உடையதுமான திருமலை என்கிறார். சர்வ கந்தம் என்னும்படியான ஒரு பொருள் உள்ளே இருக்கின்றது என்பதை தெரிவிக்கும்படி பூம்பொழில் சூழ் விரையார் என்று கூறுகிறார். அந்த மணம் வழி காட்டவே திருமலை வந்தேன் என்று ஆழ்வார் கூறுகிறார்.

இரண்டாம் பாடல் (1.9.2)

மானேய் கண் மடவார் மயக்கில் பட்டு மாநிலத்து, நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன், தேனேய் பூம்பொழில்சூழ் திருவேங்கட மாமலை, என் ஆனாய் வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.

முதல் பாடலில் சொந்த பந்தங்களை உற்ற உறவினராக நினைத்திருந்த குற்றத்தைப் பொறுத்தருள வேண்டும் என்று சொல்லி சரணம் புகுந்தார். இந்த பாட்டில், போக்யம் இல்லாத கெட்ட விஷயங்களை போக்யம் என்று எண்ணிக்கொண்டு இருந்த குற்றங்களைப் பொறுத்தருள வேண்டும் என்று சொல்லி சரண் புகுகிறார்.

நெஞ்சு நஞ்சாக இருந்த போதும், வெளி நோக்கினை வெகு அழகாகச் செய்து, ஆண் பிள்ளைகளை கவர்கின்ற பெண்களின் கண் வலையிலே அகப்பட்டு, அந்த மாதர்களை போற்றி கொண்டாடுவதே முக்கியம் என்று கொண்டு, அதற்காக எத்தனை பாவங்கள் செய்யலாமோ அத்தனை பாவங்களையும் செய்ததாக ஆழ்வார் சொல்கிறார்.

‘உள்ள நரகங்கள் போதாது என்று இன்னமும் பல நரகங்களை படைக்க வேண்டும் ’ என்று அளவிற்கு, எண்ணிறந்த பாவங்களைச் செய்தாகவும், ‘போக்யமல்லாத விஷயங்களிலே ஆச்சர்யப்பட்டு அவற்றில் ஈடுபட்டு பயனில்லாத செயல்களை செய்து தீமைகளை விளைவித்துக் கொண்டோமே !’ என்று அநுதாபம் தோன்றியதனால், பரமபோக்யமான விஷயத்திலே ஈடுபட்டு நன்மை பெறுவோமென்று நல்ல ஞானம் உண்டாகி, போக்யதைக்கு எல்லை நிலமாகவுள்ள திருமலையிலே எழுந்தருளியிருக்கும் எம்பெருமானிடம் வந்து சரணம் புகுந்ததாக ஆழ்வார் கூறுகிறார்.

பழைய குற்றங்களைக் காணாது அடியேனை அடிமை கொண்டருள வேண்டும் என்பது ஆழ்வாரின் பிரார்த்தனை. “ஈச்வரனுக்கு ஜகந்நிர்வாஹம் நடக்க வேண்டுமானால் வேறே சில நரகங்கள் ஸ்ருஷ்டிக்க வேணும்” என்பது பெரியவாச்சான்பிள்ளை அருளியது.

என் ஆனாய் என்பதை, ஆனையை போன்றவனே என்றும் கொள்ளலாம். திருநெடுந்தாண்டகத்தில் ஆழ்வார் தென்னானாய் வடவானாய் குடபாலானாய் குணபாலமதயானாய்”  என்று அருளியுள்ளார்.

நம்மாழ்வாரும், திருவாய்மொழியில்  “என்னானை என்னப்பன் எம்பெருமான்” என்றார். எம்பெருமான் ஆனை என்பவன் என்பதற்கு சில காரணங்கள்;

  • யானையை எத்தனை தடவை பார்த்தாலும் பார்க்கும் போதெல்லாம் அபூர்வ வஸ்து போலவே இருந்து பரம ஆனந்தத்தைத் தருவது போல எம்பெருமானும் ”அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதமே” என்னும்படி இருக்கிறான்.
  • ஆனையின் மேல் ஏறவேண்டியவன் ஆனையின் காலைப் பற்றியே ஏற வேண்டும், அது போலவே, எம்பெருமானிடம் சேர வேண்டியவர்களும் அவனது திருவடிகளையே பற்றி ஏறவேண்டும்
  • ஆனையானது தன்னைக் கட்ட, தானே கயிறு கொடுக்கும்; “எட்டினோடு இரண்டு எனுங் கயிற்றினால்” (திருச்சந்த விருத்தம்.) என்றபடி பக்தியாகிற கயிற்றை எம்பெருமானே தந்தருள்வன்.
  • யானையை நீராட்டினாலும் அடுத்த நொடியே அழுக்கோடே சேரும்; எம்பெருமான் சுத்த ஸத்வமயனாய்ப் பரம பவித்திரனாக இருக்கும்போதும், வாத்சல்யம் என்ற குணத்தினால் ‘”பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா வொழுக்கும் அழுக்குடம்பும் ‘ உடைய நம் போன்றவர்களோடு சேர திருவுள்ளம் கொண்டு இருப்பவன்.
  • யானையைப் பிடிக்க பெண் யானையைக் கொண்டே பிடிக்கவேண்டும்; அதேபோல், பிராட்டியின் புருஷகாரத்துடனேயே எம்பெருமானை அடையமுடியும்.
  • பாகனுடைய அநுமதியின்றித் வருபவர்களை யானை தள்ளி விடும். எம்பெருமானும் “வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து” என்றபடி பாகவதர்களை முன்னிட்டுப் தன்னிடம் வருபவர்களை தவிர மற்றவர்களை அங்கீகரிக்க மாட்டான்.
  • யானையின் மொழி யானைப்பாகனுக்கே தெரியும்; எம்பெருமானுடைய பாஷை திருக்கச்சி நம்பி போன்றவர்களுக்கே தெரியும்; நம்பிகள் காஞ்சி பேரருளாளனோடே பேசுகின்றவர்
  • யானையினுடைய நிற்றல் இருத்தல் கிடத்தல் திரிதல் முதலிய தொழில்கள் பாகன் சொல்லும்படி கேட்கும். எம்பெருமானும் . “கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்க வேண்டா – உன்றன் பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்” என்றும், “கிடந்தவா றெழுந்திருந்து பேசு” என்றும் சொல்கின்ற திருமழிசைப்பிரான் போன்றவற்றுக்கு கட்டுப்படுபவன்
  • யானைக்குக் கை நீளம்; எம்பெருமானும் ‘”அலம்புரிந்த நெடுந்தடக் கை” என்று சொல்லப் படுபவன்.
  • யானை உண்ணும் போது இறைக்கும் அரிசி பல கோடி எறும்புகளுக்கு உணவாகும். எம்பெருமான் அமுது செய்த பிரசாதத்தாலே பலகோடி பக்தர்கள் உஜ்ஜீவிக்கிறார்கள்.
  • யானை இறந்த பின்பும் உதவும்; எம்பெருமானும் தீர்த்தம் ஸாதித்துத் தன்னுடைச் சோதிக்கு எழுந்தருளின பின்பும் இதிஹாஸ புராணங்கள் அருளிச் செயல்கள் மூலமாகத் தனது சரிதைகளை நம் போன்றவர்களுக்கு உணர்த்தி உதவுகிறார்.
  • யானைக்கு ஒரு கையே; எம்பெருமானுக்கும் கொடுக்கும் கையே தவிர கொள்ளும் கை இல்லை.
  • பாகனுக்கு யானை ஸம்பாதித்துக் கொடுக்கும், எம்பெருமானும் அர்ச்சக பரிசாரகர்களுக்கு  சம்பாதித்து கொடுப்பார்.
மூன்றாம் பாடல் (1.9.3)

கொன்றேன் பல்லுயிரைக் குறிக்கோள் ஓன்று இலாமையினால், என்றேனும் இரந்தார்க்கு இனிதாக உரைத்தது அறியேன், குன்றேய் மேக மதிர் குளிர் மாமலை வேங்கடவா!, அன்றே வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டு அருளே.

மலை போன்ற மேகங்கள் கூடி இருக்கும் குளிர்ந்ததாய்ச் சிறந்த திருவேங்கடமலையின் மேல் எழுந்தருளி இருக்கும் எம்பெருமானே, விவேகம் சிறிதும் இல்லாமல், யாசித்தவர்களுக்கு இனிமையாக ஒரு நாளும் பதில் சொல்லி அறியேன். பல பிராணிகளை கொன்று முடித்தேன். அன்றே உன்னை வந்து பற்றினேன். அடியேனை ஆட் கொண்டு அருள் என்று ஆழ்வார் வேண்டுகிறார் என்பது இந்த பாடலின் பதவுரை.

உயிர்களை கொன்றதால் உண்டான பாவங்களை / குற்றங்களை பொறுத்தருள வேண்டும் என்று இந்த பாடலில் வேண்டுகிறார். குறிக்கோள் ஒன்று இல்லாமையால் பல உயிர்களை கொன்றேன் என்கிறார். செயல்களை பாராதே, ஸ்வரூபத்தை பார்த்து ஏற்றுக்கொள் என்று வேண்டுகிறார்.

குறிக்கோள் ஒன்று என்று சொன்னதை, குறிக்கோள் ஒன்றும் என்று எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார் உரை ஆசிரியர். குறிக்கோள் என்பது நம்பிக்கை / ஞானம். உடல் வேறு ஆன்மா வேறு என்றும், தெய்வம், சாஸ்திரம் உண்டு என்றும், பாவம் புண்ணியம் உண்டு என்றும், இதனை செய்தால் பாவம், இதனை செய்தால் புண்ணியம் என்றும் பாவ பலன்களை அனுபவிக்க நரகத்திற்கு செல்ல வேண்டும் என்றும், இவை ஒன்றிலும் நம்பிக்கை / ஞானம் இல்லாதவனாக ஆழ்வார் தன்னை குறிப்பிட்டு, குறிக்கோள் ஒன்றும் இல்லாவன் என்கிறார்.

இந்த பாவியிடம் யாசித்தேனே என்று அவர்களை வாழ்நாள் உள்ளவரை நெஞ்சு புண்பட்டு இருக்கும் வார்த்தைகளை சொல்லிவிட்டேன் என்று ஆழ்வார் கூறுகிறார்.

“இன்று வந்தடைந்தேன்” என்று சொல்லாமல், “அன்றே வந்தடைந்தேன்”  என்று ஆழ்வார் சொல்வதற்கு பெரியாவாச்சான்பிள்ளை சொல்லும் உரை சுவாரஸ்யமானது. அன்றே அனுதாபம் பிறந்ததால், பிராயச்சித்தம் பண்ணியதால் இன்றைய வருகை என்று இல்லாமல், கொன்ற கை கழுவாதே, கொன்றதால் உண்டான இரத்தம் படிந்த கைகளை (உதிரம் ) கழுவாமல் வந்து சரண் புகுந்ததாக கூறுகிறார்.

நான்காம் பாடல் (1.9.4)

குலந்தான் எத்தனையும் பிறந்தே இறந்தே எய்த்தொழிந்தேன், நலந் தான் என்றும் இலேன் நல்லதோர் அறம் செய்துமிலேன், நிலம் தோய் நீள் முகில் சேர் நெறியார்த் திருவேங்கடவா, அலந் தேன் வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.

பூமியிலே படிந்த பெரிய மேகங்கள் நடமாடின வழிகள்  தெரிகிற திருமலையில் எழுந்து அருளி உள்ளவனே, எல்லா குலங்களிலும் பிறந்து, இறந்து இளைத்துப் போனவனும் ஒரு வித நன்மை இல்லாதவனும், ஒரு தர்மம் செய்யாதவனும், பல துயரங்களை அனுபவித்தவனான் அடியேன், உன்னை வந்து அடைந்தேன், ஆட் கொள்வாயாக என்கிறார் ஆழ்வார்.

“இனி நமக்கு ஒரு பாபமும் செய்ய சக்தியில்லை; இளைத்துத் திருவடிகளிலே வந்து விழுந்து விட்டேன்: பழைய குற்றங்களைப் பாராமல் அடியேனை அடிமை கொண்டருள வேண்டும் என்கிறார் ஆழ்வார்.

மேகங்கள் கழுத்தளவும் நீரைப்பருகி, அந்த நீரின் கனத்தாலே வேகமாக போக முடியாமல், நகர்ந்து நகர்ந்து மழையை துளித் துளியாக பெய்து கொண்டு ஸஞ்சரித்த அடையாளம் வழிகளிலே தெரிகின்றது என்பதை ஆழ்வார் “நிலந்தோய் நீள்முகில்சேர் நெறியார்” என்கிறார்.

ஐந்தாம் பாடல் (1.9.5)

எப்பாவம் பலவும் இவையே செய்து இளைத்தொழிந்தேன், துப்பா! நின்னடியே தொடர்ந்தேத்தவும் கிற்கின்றிலேன், செப்பார்த் திண் வரை சூழ் திருவேங்கடமாமலை, என் அப்பா! வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டு அருளே.

அரணாக திண்ணிய மலைகளாலே சூழப்பட்ட திருமலையிலே எழுந்தருளி இருக்கின்ற என் அப்பனே, சர்வ சக்தனே, பலவகைப்பட்ட பாவங்களையே செய்து, துக்கம் கொண்டவனாக உனது திருவடிகளை ஏற்றுக்கொண்டு துதிக்கவும் சக்தியற்றவனான நான் வந்து அடைந்தேன், என்னை ஆட்கொண்டு அருள் செய் என்று ஆழ்வார் வேண்டுவது இந்த பாடலின் பொழிப்புரை.

அதிபாதகம், உபபாதகம், மஹாபாதகம் என்னும் பாவங்கள் எப்படிப்பட்டவை ஆயினும், அவைகளை செய்யும் போது சிறிதும் சலியாமல் செய்து விட்டேன். பிறகு அப்பாவங்களுக்கு நேரக்கூடிய பலன்களைக் கேள்விப்பட்டு என்ன செய்தோம் என்று வருத்தத்தால் குன்றிப் போனேன்.  கைசலியாமல் பாவங்களைச் செய்ததினால் இளைப்பு உண்டானதால், நாலெழுத்துச் சொல்லி உன்னைத் துதிக்கவும் முடியாத சக்தி அற்றவனாக ஆனேன். ஆயினும் உன்னடிக்கீழ் வந்து புகுந்தேன், ஆகையால் அடியேனை அடிமை கொண்டருள வேணும்.

ஆறாம் பாடல் (1.9.6)

மண்ணாய் நீர் எரி கால் மஞ்சு உலாவும் ஆகாசமும் ஆம், புண்ணார் ஆக்கை தன்னுள் புலம்பித் தளர்ந்து எய்ந்து ஓழிந்தேன், விண்ணார் நீள் சிகர விரையார்த் திருவேங்கடவா, அண்ணா! வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.

இனி ஒரு சரீரத்தையும் எடுக்க சக்தி இல்லாததால் அடுத்த ஜென்மத்திற்கு பயந்து உன் திருவடிவாரத்திலே வந்து விழுந்தேன், அடிமை கொண்டருள வேண்டும் என்று ஆழ்வார் பிரார்த்திக்கும் பாடல்.

ஆகாயம் அளவிற்கு உயர்ந்திருக்கிற கொடுமுடிகளை உடைய பரிமளம் மிக்க திருமலையிலே எழுந்தருளி இருக்கின்ற ஸ்வாமியே, பூமி, ஜலம், அக்நி, வாயு, மேகங்கள் உலாவுகின்ற ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களினால் ஆன புண்கள் நிறைந்த சரீரத்தில் அகப்பட்டுக் கொண்டு கதறி அழுது உடல் மெலிந்து மிகவும் கஷ்டப்பட்டவனான அடியேன், உன்னை அடைந்தேன்; என்னை ஆட்கொண்டு அருள வேண்டும் என்பது இந்த பாடலின் பதவுரை.

ஏழாம் பாடல் (1.9.7)

தெரியென் பாலகனாய்ப் பலதீமைகள் செய்துமிட்டேன், பெரியேனாயின பின் பிறர்க்கே உழைத்தே ஏழையானேன், கரி சேர்ப் பூம்பொழில் சூழ் கன மாமலை வேங்கடவா!, அரிய!. வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டு அருளே.

யானைகள் மிகுந்ததும், அழகிய சோலைகளாலே சூழப்பட்டும் உள்ள வலுவான திருமலையில் வாழ்பவனே, ஹரியே, சிறியவனாக இருந்தபோது, அறிவில்லாதவனாய் பல பாவங்களை செய்து தீர்த்தேன். வளர்ந்த பின், பிறர்க்கே உழைத்து கெட்டு போனேன். இப்போது உன்னிடம் வந்து சேர்ந்தேன், அடியேனை ஆட்கொண்டு அருள் செய்ய வேண்டும் என்கிறார்.

இளம் பருவத்தில் நல்ல விஷயங்களைக் கற்கும்படி சொல்லி இருப்பதற்கு மாறாக தான் இளம் பருவத்தில், விவேகம் இல்லாதவனாக பல தப்புக்காரியங்களைச் செய்து விட்டேன் என்றும், போன காலம் எல்லாம் பழுதே போனாலும், இனியாகிலும் எம்பெருமான் விஷயத்திலே தொண்டு செய்யலாம் என்று அவன் திருவடி கீழே வந்து சேர்ந்ததாகவும் சொல்லி தன்னை ஆட்கொண்டு அருள வேண்டும் என்று ஆழ்வார் வேண்டுகிறார்.

இளம் பருவத்தில் நல்ல விஷயங்களை கற்ற / தெரிந்த கொண்ட ப்ரஹலாதாழ்வான், லட்சுமணன் என்ற இளைய பெருமாள், துருவன், சுவாமி நம்மாழ்வார் போன்றவர்களை நினைவில் கொண்டதால், தான் மாறாக இருந்ததாக சொல்கிறார்.

ஹரி என்ற வடசொல் அரி என்றாயிற்று. தன்னுடைய பாவங்களை யெல்லாம் எரிப்பதற்கு சாமர்த்தியம் உடையவனே என்றும், சிங்கம் போல் ஒருவராலும் அடக்க முடியாதவனே என்றும் ஹரி என்ற சொல்லுக்கு பொருள் உரைக்கலாம்.

எட்டாம் பாடல் (1.9.8)

நோற்றேன் பல் பிறவி உன்னைக் காண்பதோர் ஆசையினால், ஏற்றேன் இப் பிறப்பே இடர் உற்றனன் எம் பெருமான்!, கோல் தேன் பாய்ந்தொழுகும் குளிர்சோலை சூழ் வேங்கடவா!, ஆற்றேன் வந்தடைந்தேன் அடியேனையாட் கொண்டருளே.

பலபிறவிகள் உண்டாகும்படி கருமங்களைச் செய்ததாகவும், இப்படி பல பிறவிகளும் பிறந்து கொண்டே வரும் போது, இந்த பிறவியில் எதோ ஒரு விசேஷத்தாலே எம்பெருமானைக் காண வேண்டும் என்ற ஆசை பிறந்தது என்றும், அதனால், இதற்கு முன்னே தாம் இருந்த நிலை மிகவும் பொல்லாதது என்று நெஞ்சில் பட்டு, இதுவரையில் நடந்தவற்றையும் இனி நடக்கப் போகின்றவைகளையும் நினைத்து பொறுக்க முடியாமல், எம்பெருமானின் திருவடிகளை வந்து சேர்ந்தேன் என்றும் தன்னை ஆட்கொண்டு அருள வேண்டும் என்றும் பிரார்திக்கிறார்.

பல்பிறவி நோற்றேன் என்பது, பல பிறவிகள் பிறக்கும்படி கருமங்கள் செய்தேன் என்று ஆழ்வார் கூறுவதாக கொள்ளலாம்.

பிறர்க்கே உழைத்து ஏழையானேன் என்று முன் பாட்டில் சொன்ன ஆழ்வார், இப்பிறப்பே இடர் உற்றனன் என்று சொல்லி, தான் இருந்த நிலை மிகவும் பொல்லாதது என்று அறிந்த பின் அவனை காண வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது என்கிறார்.

மாறி மாறி வரும் பிறவிகளை இனி சகிக்க மாட்டேன் என்பதை ஆற்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

உன்னைக் காண்பதோர் ஆசையினால் பல்பிறவி நோற்றேன், இப்பிறப்பே ஏற்றேன்” என்று வார்த்தைகளை மாற்றி அமைத்துக்கொண்டு, “உன்னை ஸேவிக்க வேண்டும் என்று பலபல பிறவிகளில் நோன்பு நோற்றேன்; இதுவரையில் உன்னுடைய ஸேவை கிடைக்கவில்லை; இப்பிறவியில் பாக்கியம் வாய்த்தது; முன்னே இருந்த காலமெல்லாம் வீணாய்ப் போயிற்றே என்று இடர் உற்றேன்” என்றும் ஒரு விளக்கம் கூறுவார்கள்; ஆனால் அதனை நம் முன்னோர்கள் அவ்வளவு சிறப்பாக கொள்வதில்லை.

ஒன்பதாம் பாசுரம் (1.9.9)

பற்றேல் ஒன்றிலேன் பாவமே செய்து பாவியானேன், மற்று ஓன்று அறியேன் மாயனே!  எங்கள் மாதவனே!, கல் தேன்பாய்ந்தொழுகும் கமலச் சுனை வேங்கடவா!, அற்றேன் வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.

ஆச்சரியமான குணங்களை உடையவனே, எங்களுக்குப் புருஷகாரமான பிராட்டிக்கு வல்லபனே! மலை மூட்டுகளில் இருந்து தேன் பெருகி வெள்ளமாக நிற்பதும் உள்ள தாமரைச் சுனைகளை கொண்ட திருமலையிலே வாழ்பவனே! எந்தவிதமான ஆதாரமும் இல்லாதவனாக பாவங்களை செய்து ஒரு பாவியாய் ஒரு உபாயமும் அறியாதவனாக உனக்கே அற்று தீர்த்தவனாக வந்து அடைந்தேன், அடியேனை ஆட்கொண்டு அருள் செய் என்கிறார்.

இப்பாட்டில் மாதவனே! என்று சொல்வதால், பிராட்டியை முன்னிட்டு சரணம் புகுந்தமை விளங்கும்.

பற்றேலொன்றுமிலேன் என்பதற்கு கொடுத்துள்ள விளக்கம் ரசிக்க வைக்கிறது. உன்னுடைய ஸம்பந்தத்தை அறுத்துக் கொண்டு வெகுதூரம் ஓடிப்போன எனக்கு ஓரிடத்திலும் ஒருவகையான ஆதாரமுமில்லை. ஆத்மாவுக்கு ஞானமும் ஆனந்தமும் தேவையாய் இருக்கும் போது, அடியேன் பாபமே தேவையோ என்று பாவங்களையே செய்து பாவியானேன். உன்னைப் பெறுவதற்கான உபாய விஷயத்தில் எள்ளளவும் ஞானமில்லை; நீயோ இப்படிப்பட்ட குறைவாளரையும் ரக்ஷிக்கவல்ல ஆச்சர்ய சக்தி உள்ளவனாக நின்றாய்; உனது குளிர்ந்த திருவுள்ளத்திலே என்னைப் போன்றவர்களுடைய அபராதங்களினாலே ஒருகால் சீற்றம் பிறந்தாலும் அவற்றை பொறுப்பித்து ரக்ஷிப்பிக்கவல்ல பெரிய பிராட்டியாரும், ”அகலகில்லேனிறையுமென்று“‘ உன் திருமார்விலே உறைகின்றாள்; இப்படியிருக்க நான் வந்து சரணம் புகுந்தபின் இனி நான் இழப்பதுண்டோ? “பற்றிலார் பற்ற நின்றானே!” என்றபடி ஆதாரமற்றவர்களுக்கு ஆதாரமாய் நிற்கக் கூடிய நீயே அடியேனை ஆட்கொண்டருள வேணுமென்று பிரார்த்திக்கிறார்.

பாவமே செய்து பாவியானேன் என்று பாவத்தை இரண்டு முறை குறிப்பிட வேண்டுமோ என்று கேட்டுக்கொண்டு, புண்ணியம் செய்து பாவத்தை சம்பாதிப்பவர்கள் உண்டு என்றும், பாவம் செய்து புண்ணியத்தை சம்பாதிப்பவர்கள் உண்டு என்று சொல்லி, ஆழ்வார் பாவம் செய்து பாவத்தையே பெற்றார் என்று உரை ஆசிரியர் கூறுவார். தசரதன் கொடுத்த வார்த்தையை மீறக்கூடாது என்ற புண்ணியத்தை செய்தாலும், தசரதன், எம்பெருமான் இராமனை இழந்தான் என்ற பாவத்திற்கு ஆளானான். “சேட்பால் பழம்பகைவன் சிசுபாலன்”  என்று பாவங்களையே செய்த சிசுபாலன் இறுதியில் புண்ணியத்தை அடைந்தான். ஆக, ஆழ்வார் சொல்வதாவது, தசரதனைப் போலே புண்யத்தைச் செய்து பாவியானவன் அல்லேன், சிசுபாலனைப் போலே பாவத்தைச் செய்து புண்யாத்மாவாக ஆனவனும் அல்லேன்; செய்ததும் பாவம்; ஆனதும் பாவியாக என்கிறார்.

பத்தாம் பாடல் (1.9.10)

கண்ணாய் ஏழுலகுக்கு உயிராய வெம் கார் வண்ணனை, விண்ணோர்த் தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை, திண்ணார் மாடங்கள் சூழ் திருமங்கையர்க் கோன் கலியன், பண்ணார்ப் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே

கண்ணாவானென்றும் மண்ணோர் விண்ணோர்க்குத், தண்ணார் வேங்கடவிண்ணோர் வெற்பனே” என்ற நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரத்தில் கூறிய படி ஏழுலகத்தவர்க்கும் கண் போன்றவனும் உயிர் போன்றவனுமான திருவேங்கடமுடையானைக் குறித்துத் திருமங்கை மன்னன் அருளிச் செய்த இப்பத்துப் பாசுரங்களையும் ஓத வல்லவர்களுக்குப் பாவங்களெல்லாம் பறந்தோடும் என்று கூறி, இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லி ஆழ்வார் இந்த பதிகத்தை முடிக்கின்றார்.

இந்த பாடலில் திண்ணார் மாடம் என்பதற்கு ஒரு விளக்கம் சொல்லப்படுகிறது. காடு சென்ற இராமன், எப்படி பரத்தாழ்வான் வருகை கண்டு நாடு திரும்புவான் என்று மக்கள் களித்து இருந்தார்களோ, அப்படியே ஆழ்வார் வருகை கண்டு திருவேங்கடத்தான் மகிழ்ச்சியுடன் எழுந்தருளுவான் என்று திருமங்கையில் உள்ளோர் களித்தனர் என்று கூறுவர்.

பாவமே செய்து பாவியானேன் என்று ஆழ்வார் சொன்னதை, எம்பெருமானும் பொறுத்த பின், எப்படி விபீஷணன் சரணாகதி செய்ய வந்த போது, விபீஷணனுக்கு மட்டும் இன்றி அவன் கூட வந்த நால்வருக்கும் சக்கரவர்த்தி திருமகன், அடைக்கலம் கொடுத்தாரோ, அதே போல் ஆழ்வார் பாடல்களை நாம் கற்றால் நம்மையும் எம்பெருமான் பொறுப்பார் என்று கொள்ள வேண்டும்.

சென்ற பாடலில் பாவியானேன் என்று சொன்ன ஆழ்வார், இந்த பாடலில், அவர் சம்பந்தம் கொண்டு பாவங்கள் போகும் என்று சொல்வதாக சுருக்கமாக கொள்ளலாம்.

மீண்டும் அடுத்த பதிகத்தில் சந்திப்போம் நன்றி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email

Discover more from Vaishnavism

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading