திருவேங்கடமுடையான் – திருமங்கைஆழ்வார் 1 (கொங்கு அலர்ந்த)

தொடக்கம்

பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம்.

திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே என்று நம் பெரியவர்கள் கூறி உள்ளார்கள்.).

பொதுவாக முதலாழ்வார்களுக்கு வேங்கடமுடையானிடம் அதிக பற்று கொண்டு இருந்தார்கள் என்பதும் அவர்கள் அவனுக்கு நிறைய பாடல்கள் பாடினார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து திருவேங்கடமுடையானை முன்னிட்டு

 • பொய்கையாழ்வார் இயற்றிய முதல் திருவந்தாதியில் இருந்து பத்து பாசுரங்களை முன்பு பார்த்தோம்.
 • அடுத்த ஆழ்வார், பூதத்தாழ்வார், அவரின் இரண்டாம் திருவந்தாதியில் இருந்து திருவேங்கடமுடையானை பற்றி பதினோரு பாசுரங்களில் சொல்வதை இங்கே  சுருக்கமாக பார்த்தோம்.
 • அடுத்த ஆழ்வாரான பேயாழ்வாரின் திருவேங்கடமுடையான் பாசுரங்களை (19) இங்கே காணலாம்.
 • அடுத்து, திருமழிசை ஆழ்வார் திருவேங்கடமுடையானை பற்றி பாடல்களை (16) பார்த்தோம்.
 • திருப்பாணாழ்வார் பாடிய அமலனாதிபிரான் பிரபந்தத்தில் இருந்து இரண்டு பாடல்களை இங்கே பார்க்கலாம்.
 • அடுத்து குலசேகராழ்வாரின் பதினோரு பாடல்களை இங்கே கண்டோம்.
 • பெரியாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 7 பாசுரங்களை இங்கே பார்த்தோம்.
 • அடுத்து பெரியாழ்வாரின் புதல்வியாகிய ஆண்டாள் நாச்சியார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 16 பாசுரங்களை இங்கே கண்டோம்.

இனி ஆழ்வார்களின் தலைவராக கொண்டாப்படும் ஸ்வாமி நம்மாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய பாசுரங்கள் பற்றி காண்போம். நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்கள் இயற்றி உள்ளார். அவை திருவிருத்தம், திரு ஆசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி எனும் நான்கு தமிழ் மறைகள் ஆகும்.

ஸ்வாமி நம்மாழ்வார் மொத்தம் 37  திவ்யதேசங்களைப் பற்றி பாடியுள்ளார். அவைகளில் ஆழ்வாருக்கு திருவேங்கடமுடையானிடம் அதீத ஈடுபாடு. ஆழ்வார் முதலில் பாடிய திவ்யதேசம், திருவேங்கடமுடையானின் திருமலை ஆகும்.

இவற்றில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்து சில பாசுரங்களை முன்பு பார்த்து உள்ளோம். இங்கு திருவேங்கடவன் மேல் பாடிய அனைத்து பாசுரங்களையும் ஒவ்வொரு ப்ரபந்தமாக பார்ப்போம். திருவிருத்தத்தில் உள்ள 8 பாசுரங்களை முன்பு பார்த்தோம். இப்பொழுது திருவாய்மொழியில் உள்ள 40 பாசுரங்களை மூன்று பகுதிகளாக காண்போம்.

பெரியதிருவந்தாதியில் திருவேங்கடமுடையானை பற்றிய ஒரு (1) பாடலை இங்கே காணலாம்.

இனி திருமங்கையாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் அருளிச்செய்த 61 பாசுரங்களைப் பற்றி இங்கே சுருக்கமாக காணலாம். நன்றி

பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் ஆறு திவ்யப்ரபந்தங்களை அருளி உள்ளார். அவை,

 • பெரிய திருமொழி
 • திருஎழுகூற்றிருக்கை
 • சிறிய திருமடல்
 • பெரிய திருமடல்
 • திருகுறுந்தாண்டகம்
 • திருநெடுந்தாண்டகம்

ஆழ்வார் பெரிய திருமொழியில் பற்பல திவ்யதேச எம்பெருமான்களை பற்றி பாடுகிறார். முதலில் ஜோஷிர்மட், பத்ரிகாசிரமம் என்று தொடங்கி வடநாட்டு திவ்யதேசங்களில் தொடங்கி தெற்கு நோக்கி தன்னுடைய ஆடல்மா என்ற குதிரையில் பயணம் செய் து பற்பல திவ்யதேசங்களுக்கு சென்று அங்குள்ள எம்பெருமான்களை மங்களாசாசனம் செய்கிறார். அதில் திருவேங்கடம் பற்றி நான்கு பதிகங்கள் பாடி உள்ளார். அவற்றை பற்றி சிறிது கீழே காண்போம்.

முதல் பத்து – எட்டாம் பதிகம்

பெரிய திருமொழியில் ஏழாம் பதிகத்தில், “நின்ற செந்தீ மொண்டு சூறை நீள் விசும்பூடு இரிய” என்றும், “தேய்த்த தீயால் விண் சிவக்கும்” என்றும் “கனைத்த தீயும் கல்லும் அல்லா வில்லுடை வேடருமாய்” என்றும் “சென்று காண்டற்கு அரிய கோயில்’ என்றும் சிங்கவேள் குன்றத்தின் (அஹோபிலம்) நிலத்தின் கடுமையைப் பற்றி பேசின திருமங்கை ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் “ஆழ்வீர்! ‘ சிங்கவேள் குன்றத்திலே ஏன் துவளுகிறீர்? “தெழிகுரலருவித் திருவேங்கடம்” “சிந்து பூ மகிழுந் திருவேங்கடம்” “தெண்ணிறைச்சுனை நீர்த்திருவேங்கடம்”, “மொய்த்த சோலை மொய் பூந்தடந் தாழ்வரே ” என்று நெஞ்சு குளிரப் பேசும்படியான திருவேங்கடமா மலையிலே நாம் அனைவர்க்கும் எளிதாக ஸேவை ஸாதிக்கிறோம், அங்கே வந்து தொழுது ஆனந்தம் அடைவீர்’ என்றருளிச் செய்ய, அங்கே போய் எம்பெருமானையும் திருவேங்கடத்தையும் அநுபவிக்கத் தொடங்குகிறார். இந்த பதிகமும், இதற்கு அடுத்த மூன்று பதிகங்களில், ஆக நாற்பது பாசுரங்கள் தமிழ் மொழி நடமாடும் இடத்திற்கு எல்லையாய் இருக்கின்ற திருவேங்கட மலை பற்றி ஆழ்வார் கூறும் அருள் மொழிகள் ஆகும்.

முதல் பாடல் (1.8.1)

கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த, கோவலன் எம் பிரான், சங்கு தங்கு தடங் கடல் துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்,  பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம் இடம், பொங்கு நீர் செங் கயல் திளைக்கும் சுனைத் திரு வேங்கடம் அடை நெஞ்சமே!

பரிமளம் வீசுகின்ற பூக்கள் நிறைந்த குருந்த மரத்தை முறித்து அழித்த கோபால கிருஷ்ணனாய், சங்குகள் தங்கியிருக்கிற பெரிய கடலிலே திருக்கண் வளர்கின்ற புண்டரீகாக்ஷனாய், செருக்குடன் கிளர்ந்து வந்த பகாஸூரன் வாயைக் கிழித்தெறிந்த புராண புருஷனான ஸ்ரீமந் நாராயணனது இருப்பிடமாகிய நீர்வளமுடையதாய், சிவந்த மீன்கள் களித்து வாழப்பெற்ற சுனைகளை கொண்ட திருவேங்கடத்தை அடை நெஞ்சமே! என்கிறார். 

புள்ளினை வாய்பிளந்த வரலாறு என்பது கொக்கின் வடிவம் எடுத்துக் கொண்டு வந்த அசுரனை கண்ணபிரான் அழித்தது; விபவாவதாரத்தில் பகாஸூரன், கொக்காசுரன் போன்ற விரோதிகளை ஒழித்தது போலவே அர்ச்சாவதாரத்திலும் விரோதிகளை ஒழிக்க வல்லன் என்று காட்டுகிறார். சங்கு தங்கு என்று திருப்பாற்கடலை குறிப்பிட்ட ஆழ்வார், சாதாரண சங்குளை சொல்லி இருக்கலாம், அல்லது சங்கநிதி பத்மநிதி என்ற பலதரப்பட்ட நிதிகளையும் சொல்லி இருக்கலாம். திருப்பாற்கடல் நாதனே கண்ணபிரானாக வந்து அவதரித்தான், அவனே திருவேங்கட முடையானாகவும் வந்து ஸேவை ஸாதிக்கிறான் என்கிறார். புராணர் என்பதால், இன்று நேற்று அல்ல நெடுநாள் தொட்டு அசுரர்களை அழிக்கிறான் என்கிறார்.

இரண்டாம் பாடல் (1.8.2)

பள்ளியாவது பாற்கடல் அரங்கம் இரங்க வன் பேய்முலை, பிள்ளையாய் உயிருண்ட எந்தை பிரான் அவன் பெருகுமிடம், வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்றே எண்ணி, நாள் தொறும் தெள்ளியார் வணங்கும் மலை திருவேங்கடம் அடை நெஞ்சமே.

பூதனை என்பவள் கதறும்படியாக, சிறிய குழந்தையாக இருக்கும்போதே, அவளுடைய முலையை உறிஞ்சி உயிருடன் அமுத செய்த கண்ணன் பள்ளிகொள்ளும் இடம், திருப்பாற்கடலும் திருவரங்கமும் ஆகும். அந்த எம்பெருமான் வளருகின்ற இடமாகவும், தெளிந்த ஞானிகள், கிருதயுகத்தில் வெளுத்த நிறத்தனாயும், த்ரேதா யுகத்தில் சிவந்த பொன்னின் நிறம் போன்ற செம்மை உடையவனாயும், (துவாபரயுகத்தில் பாசியின் பசுமை நிறத்தனாயும்) கலியுகத்தில் கறுத்த நிறத்தனாயும் இருப்பவன் என்று தியானித்துக் கொண்டு, ஒவ்வொரு நாளும் வணங்கும் திருமலையை, அடை என்று தன்னுடைய நெஞ்சிடம் கூறுகிறார்.

குழந்தை பருவத்தில் உட்காரவும் இல்லாமல், நிற்கவும் இல்லாமல் இருந்த நிலையில் பூதனையை முடித்ததால், அப்படி இல்லாமல் சயனத்தில் இருந்த திருபாற்கடலையும் திருவரங்கத்தையும் ஆழ்வார் இங்கு குறிப்பிட்டுள்ளார். தொட்டில் பிள்ளை பூதனை உயிர் உண்ட பின்பு வளர்ந்த இடம் திருமலை என்கிறார். தெள்ளியார் என்றது வேறொரு பலன்களை விரும்பாத ஸ்வரூபத் தெளிவுடைய  சிந்தை உடையவர்கள் என்பது.

மூன்றாம் பாடல் (1.8.3)

நின்ற மாமருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான், என்றும் வானவர் கைதொழும் இணைத் தாமரையடி எம்பிரான், கன்றி மாரி பொழிந்திடக் கடி ஆனிரைக்கு இடர் நீக்குவான், சென்று குன்றமெடுத்தவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே.

மருதமரங்கள் இற்று முறிந்து விழும்படி நடை கற்றவனும், அப்போது தன்மேல் சிறிதும் தோஷம் தட்டாதபடி தான் குறை ஒன்றும் இல்லாமல், திருவாழியாகிய சக்கரத்தாழ்வாரை கையில் உடையவனும், எப்போதும் நித்யஸூரிகள் வந்து தொழுகின்ற திருவடித் தாமரைகளை உடையவனும், இந்திரன் பசிக் கோபங்கொண்டு மழை பெய்வித்த காலத்திலே ஆநிரைகளின் துன்பத்தை ஒரு நொடிப்பொழுதிலே போக்குவதற்காக கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்தி நின்றவனுமான எம்பெருமானுடைய திருவேங்கடமலையை அடைந்திடு நெஞ்சமே என்கிறார்.

மருத மரங்கள் முறிந்து வீழ்ந்தது என்றது, நளகூபரன், மணிக்ரீவன் என்னும் குபேரனின் புத்திரர்கள் இருவரும் மருத மரங்களாக சாபம் பெற்று இருந்த போது, கம்சனால் ஏவப்பட்ட இரண்டு அசுரர்கள் இந்த மரங்களில் ஆவேசித்ததும், கண்ணன் உரலினோடு கட்டப்பட்டு மருத மரங்களுக்கு இடையில் சென்று அவற்றை முறிய செய்து, குபேர புத்திரர்களுக்கு சாப விமோசனம் கொடுத்த சரித்திரமாகும்.

ஆநிரை காத்தது என்றது கண்ணன் கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்து மழையைத் தடுத்து எல்லா உயிர்களையு ம் காத்த சரித்திரம் ஆகும்.

நான்காம் பாடல் (1.8.4)

பார்த்தற்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர், கோத்து அங்கு ஆயர் தம் பாடியில் குரவை பிணைந்த எங்கோவலன், ஏத்துவார் தம் மனத்துள்ளான் இடவெந்தை மேவிய எம்பிரான், தீர்த்த நீர்த்தடஞ் சோலை சூழ் திருவேங்கடம் அடை நெஞ்சமே.

பாண்டவர்களுக்காக மஹாபாரத யுத்தம் நடத்தி வெற்றி பெற்றவனும், இப்படி அடியவர்களுக்காக காரியம் செய்வதனால் திருமேனி மிக விளங்கப் பெற்றவனும், திருவாய்ப்பாடியில் இடைச்சிகளோடு ராஸக்ரீடை என்கிற குரவைக்கூத்து ஆடினவனும், தன்னைத் துதிப்பவர்களின் நெஞ்சை விட்டுப் பிரியாதவனும், இடவெந்தை என்கிற திவ்யதேசத்திலே இனிதாக எழுந்தருளி இருப்பவனுமான எம்பெருமானுடைய, பலபல புண்ய தீர்த்தங்களாலும் பெரிய பூஞ்சோலைகளாலும் சூழப்பட்டதான திருவேங்கட மலையைச் சென்று சேர் மனமே என்கிறார்.

பாரதம் கை செய்திட்டு என்று சொன்னது, பாரத யுத்தத்திலே அணிவகுத்தல் முதலிய உபகாரங்களைச் செய்த கண்ணன் என்கிறார்.   குரவை கூத்து என்பது ஒவ்வொரு ஆய்ச்சியின் பக்கத்திலும் ஒவ்வொரு கண்ணபிரானாகப் பல உருவங்கள் எடுத்துக் கை கோத்து ஆடும் கூத்து.

அடியவர்களுக்காக காரியம் செய்தது என்பது, தர்மனுக்கு பட்டாபிஷேகம் செய்தது, திரௌபதி குழல் முடிக்க வகை செய்தது, குரவைக் கூத்திலே தன்னையும் ஒருவனாக இணைத்தது போன்றவை.

ஐந்தாம் பாடல் (1.8.5)

வண் கையான அவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய், மண் கையால் இரந்தான் மராமரம் ஏழு எய்த வலத்தினான், எண் கையான் இமயத்துள்ளான் இருஞ்சோலை மேவிய எம்பிரான், திண் கைம்மா துயர் தீர்த்தவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே.

வேண்டியவர்களுக்கு வேண்டியதை தானம் செய்கிற அஸுர சக்ரவர்த்தியான மஹாபலியினுடைய யாக பூமியிலே வாமன திருஅவதாரத்தில் பிரமசாரியாய்ச் சென்று கை நீட்டி மூவடி மண் தா என்று இரந்தவனும், ஸுக்ரீவனுக்கு நம்பிக்கை உண்டாக்குவதற்காக ஏழு ஸால மரங்களைத் துளை படுத்தின மஹா பலமுடையவனும், அடியவர்களை காப்பாற்றுவதற்கு என்று திவ்யாயுதங்களை அணிந்தவனான, பல திருக் கைகளையுடையவனும், கச்சிமா நகரிலுள்ள அஷ்டபுஜகரம் என்கிற திவ்ய தேசத்திலே எட்டு திருக்கரங்களுடன் காட்சி அளிப்பவனும், இமயமலையில் திருப்பிரிதி என்னும் திருப்பதியிலே எழுந்தருளியிருப்பவனும், திருமாலிருஞ்சோலையிலே வந்து நிற்பவனும், முதலை வாயிலே அகப்பட்டுத் துடித்த ஸ்ரீ கஜேந்த்ராழ்வானுடைய துன்பத்தைத் தொலைத்தவனுமான எம்பெருமானுடைய திருவேங்கட மலையைச் சென்று சேர் மனமே என்கிறார்.

இராமன் விடுத்த பாணம் ஏழு மரங்களை மட்டுமல்லாமல், ஏழுலகங்களையும் துளைத்துச் சென்று திரும்பி வந்து இராமனின் அம்புறாத்துணியை அடைந்தது என்பது சரித்திரம்.

ஆறாம் பாடல் (1.8.6)

எண் திசைகளும் ஏழுலகமும் வாங்கிப் பொன் வயிற்றில் பெய்து, பண்டு ஓர் ஆலிலைப் பள்ளி கொண்டவன், பால் மதிக்கு இடர்த் தீர்த்தவன், ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன், ஒள் எயிற்றொடு, திண் திறல் அரி ஆயவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே

உலகங்களெல்லாம் பிரளய காலத்தில் தனது திருவயிற்றிலே வைத்து காப்பாற்றி ஒரு ஆலம் தளிரிலே பள்ளி கொண்டவனும், சந்திரனுக்கு நேர்ந்த க்ஷயரோகத்தைப் போக்கி அருளினவனும், “அழகியான் தானே அரியுருவன் தானே” என்கிறபடியே அழகிய கோரப்பற்களுடனே மஹாபலசாலியான நரசிங்கமாய்த் திருஅவதாரம் எடுத்து, தன் வலிவோடு ஒத்த வலிவுடையனான ஹிரண்யனுடைய மார்விலே நகங்களை ஊன்றி அவ்வுடலைப் பிளந்தவனுமான எம்பெருமானுடைய திருவேங்கடத்தைச் சென்று சேர் மனமே என்கிறார்.

இங்கு எட்டு திசைகள் என்று சொன்னது, அந்த அந்த இடங்களில் உள்ள எல்லா பொருள்களையும் சொன்னதாக கொள்ள வேண்டும்.

ஏழாம் பாடல் (1.8.7)

பாரும் நீர் எரி காற்றினொடு, ஆகாசமும் இவையாயினான், பேரும் ஆயிரம் பேச நின்ற பிறப்பிலி பெருகுமிடம், காரும் வார்ப் பனி நீள் விசும்பிடைச் சோரு மாமுகில் தோய்தர, சேரும் வார்ப் பொழில் சூழ் எழில் திருவேங்கடம் அடை நெஞ்சமே.

நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்கிற பஞ்சபூத ஸ்வரூபியானவனும் ஆயிரம் நாமங்களால் வணங்கப்படுபவனும், பிறத்தல் இல்லாதவனும் கருமங்களுக்கு வசப்படாதவனுமானமான எம்பெருமான், தன்னுடைய பெருமை எல்லாம் தோற்ற எழுந்தருளி இருக்குமிடம் திருவேங்கடம்; அது ஆகாயத்தில் நின்றும் மழை பெய்யவும் பனி பெய்யவும் பெற்றது; மேகங்கள் வந்து தங்கும் விதமாக, மேக மண்டலம் வரையில் உயர்ந்த, சோலைகளாலே சூழப்பட்டது. அதனைச் சென்று சேர் நெஞ்சே என்கிறார்.

எட்டாம் பாடல் (1.8.8)

அம்பரம் அனல் கால் நிலம் சலமாகி நின்ற அமரர்க்கோன், வம்புலாம் மலர் மேல் மலி மட மங்கை தன் கொழுநன் அவன், கொம்பின் அன்ன இடை மடக் குற மாதர் நீள் இதணம் தொறும், செம்புனம் அவை காவல் கொள் திருவேங்கடம் அடை நெஞ்சமே.

பூமி, நீர், தீ, காற்று, ஆகாயம் என்கிற பஞ்சபூத ஸ்வரூபியானவனும், நித்ய ஸூரிகளுக்குத் தலைவனும், அலர்மேல் மங்கைக்குத் துணைவனுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்கப்பெற்ற திருமலையைச் சென்று சேர்மனமே என்கிறார்.  

குறத்திகள் மலைகளிலே வாழ்பவர்கள்; விலங்குகளும் பறவைகளும் மேயாதபடி நிலங்களை உயரமான பரண்களை அமைத்துக்கொண்டு அவற்றிலே இருந்து கொண்டு பாதுகாத்தல் அவர்களுது தொழிலாகும். அதனை புனங்காத்தல் என்பர். அப்படிப்பட்ட தேசம் திருவேங்கடம் என்கிறார்.

ஒன்பதாம் பாடல் (1.8.9)

பேசுமின் திருநாமம் எட்டெழுத்தும் சொல்லி நின்று, பின்னரும், பேசுவார்த் தமை உய்ய வாங்கிப் பிறப்பறுக்கும் பிரானிடம், வாச மாமலர் நாறுவார் பொழில் சூழ் தரும் உலகுக்கெல்லாம், தேசமாய்த் திகழும் மலை திருவேங்கடமடைநெஞ்சமே.

மேலே உள்ள பாசுரங்களில் ஆழ்வார் தன்னுடைய நெஞ்சத்திடம் சொல்வதாக அமைந்தன. இந்த பாசுரத்தில் முதல் இரண்டு அடிகளில், பேசுமின் திருநாமம் எட்டெழுத்தும் என்று கொண்டு, மற்றவரை முன்னிலை கொண்டு சொன்னதால், இது ஆழ்வார் உபதேசம் செய்வதாகவும் கடைசி இரண்டு வரிகள் வழக்கம் போல் தன்னுடைய மனதிற்கு சொல்வதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

திருநாம மெட்டெழுத்தும் சொல்லிநின்று, பின்னரும் பேசுவார் தம்மை உய்ய வாங்கிப் பிறப்பறுக்கும் பிரானிடம் பேசுமின்” என்று எடுத்துக்கொண்டு, திருவஷ்டாக்ஷரத்தை ஒரு முறை சொல்லிவிட்டது என்று திருப்தி பெற்று ஓய்ந்து விடாமல் மேன்மேலும் அத்திருமந்திரத்தையே பேசிக் கொண்டிருப்பவர்களை உஜ்ஜீவிக்கச் செய்து, அவர்களுக்கு ஸம்ஸார ஸம்பந்தத்தைப் போக்கித் திருநாட்டிலே நித்ய கைங்கர்ய ஸாம்ராஜ்யம் அளிக்கும் எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் இடத்தை, நீங்கள் எல்லோரும் சொல்லுங்கள்; திருவிருத்தம் 6.10 பாடலில் நம்மாழ்வார் கூறியபடி, ”திருவேங்கடமென்று கற்கின்ற வாசகமே” ‘திருவேங்கடம் திருவேங்கடம் ‘ என்று சொல்லுங்கள் என்கிறார். பேசுமின் என்ற வார்த்தையை திருநாமம் எட்டெழுத்தும் பேசுமின் என்றும், பிரானிடம் பேசுமின்” என்று இரண்டு இடங்களிலும் கொண்டு அர்த்தம் கொள்வதும் ரசிக்கத்தக்கது.

பேசும் இன் என்று பிரித்து திருநாமம் இனியதாக உள்ளது, என்று சொன்னாலும் தகும். பரமபோக்யமான(இனிமையான), திருவஷ்டாக்ஷரத்தைச் சொல்லி, பின்னரும் பேசுபவர்களை உஜ்ஜீவிப்பிக்கவல்ல எம்பெருமானுக்கு இருப்பிடமானதும், மணம்மிக்க சிறந்த புஷ்பங்கள் உடைய பரந்த சோலைகளால் சூழப்பட்டதும், உலகுக்கெல்லாம் திலகமாக விளங்குவதுமான திருவேங்கட மலையைச் சென்று சேர்மனமே என்று அர்த்தம் கொள்ளலாம்.  

பெரியவாச்சான் உரையில், பெற்ற தாயின் பெயரை சொல்வதற்கு எந்த ஒரு அதிகாரமும் தேவை இல்லையோ அதே போல் இடர் வந்த காலத்தில் எம்பெருமானின் எட்டுஎழுத்து திருமந்திரத்தை சொல்வது என்று குறிப்பிட்டு உள்ளார். இது வாத பிரதிவாதங்களுக்கு உட்பட்டு இருந்தாலும் நோக்கத்தக்கவையே என்பதற்காக குறிப்பிட்டுள்ளோம்.

பத்தாம் பாடல் (1.8.10)

செங்கயல் திளைக்கும் சுனைத் திருவேங்கடத்து உறை செல்வனை, மங்கையர்த் தலைவன் கலிகன்றி வண்டமிழ்ச் செஞ்சொல் மாலைகள், சங்கையின்றித் தரித்துரைக்க வல்லார்கள் தஞ்சமதாகவே, வங்க மா கடல் வையம் காவலராகி வானுலகாள்வரே

இத்திருமொழி (பதிகம்) கற்றார்க்குப் பலன் என்ன என்பதை ஆழ்வார் சொல்லும் பலஸ்ருதி பாசுரம். இளமை பருவத்திற்குத் தகுதியாகச் சிவந்த நிறத்தையுடைய மீன்களானவை, ஒன்றோடொன்று களித்து விளையாடப் பெற்ற சுனைகளையுடைய திருவேங்கட மலையிலே நித்யவாஸம் செய்து அருள்கின்ற எம்பெருமானைக் குறித்துத் திருமங்கைமன்னன் அழகிய தமிழிலே சிறந்த வார்த்தைகளால் அருளிச் செய்த இச்சொல் மாலையைத் தரித்துச் சொல்ல வல்லவர்கள் இந்த உலகத்தில் உள்ள வரைக்கும் ராஜாதி ராஜர்களாய் விளங்கி, பின்னர் நித்திய விபூதிக்கும் நிர்வாஹகராகப் பெறுவர்கள் என்று சொல்லி முடிக்கிறார்.

 சங்கையின்றித் தரித்துரைக்கவல்லார்கள் என்று சொன்னது, இந்த தமிழ் பாசுரத்திற்கு இந்த வல்லமை உண்டோ என்று சந்தேகம் கொள்ளாமல் முழு விசுவாசத்துடன் ஓத வல்லவர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்.

மீண்டும் அடுத்த பகுதியில் ஆழ்வாரின் அடுத்த பதிகத்தை பற்றி சொல்லும் போது சந்திக்கலாம், நன்றி

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d