A Simple Devotee's Views
Please click here to view the English Version, thanks
திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடிஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.
பரமாத்மாவின் அனுபவங்களை முதல் மூன்று பாசுரங்களில், ஆழ்வார் ரசிக்கிறார். \
அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராம பிரானையும் “கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான்” என்று சொல்லி நம்மை திருவரங்கனிடம் அழைத்து செல்கிறார்.
அப்படியும் மக்கள் எல்லோரும் ஆழ்வார் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் அவர்களை விட்டுவிட்டு, எம்பெருமான் தனக்கு செய்த மிக பெரிய உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார்.
எம்பெருமான், திருவரங்கனாக
இதுவரை, எம்பெருமான் தனக்கு கொடுத்த அனுபவத்தை சொல்வது (1-3), தன்னுடைய அனுபவத்தை கொண்டு உபதேசம் செய்வது (4-14), மற்றும் எம்பெருமான் தனக்கு செய்த நன்மைகளை நினைத்துக் கொள்ளுதல்(15-24) என்ற முதல் மூன்று உட்பிரிவுகளை பார்த்த பின் தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை என்று ஒரு ஐந்து பாடல்களிலும், எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று அடுத்த ஐந்து பாடல்களிலும் ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற இந்த நான்காவது பகுதியை இப்போது அனுபவித்து வருகிறோம்.
அதில் உள்ள முதல் பாசுரத்தை, திருமாலையின் 25வது பாடலில் (குளித்து மூன்று அனலை) ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி கூட இல்லை, திருவரங்கன் அந்தத் தகுதி முதல் எல்லாவற்றையும் அருள வேண்டும் எனக் கேட்டு கொண்டதை பார்த்தோம்.
சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட கர்ம, ஞான, பக்தி யோகங்கள் இல்லை என்றால், மற்றவர்கள் செய்யக்கூடிய அர்ச்சனை, துதி போன்றவற்றை செய்யலாமே என்று பெரியபெருமாள் கேட்பதாகவும், அவைகளும் தன்னிடம் இல்லை என்று ஆழ்வார் சொல்வதாகவும் அமைந்த போதெல்லாம் போது கொண்டு ( 26) பாசுரம்.
மனிதர்கள் செய்யக்கூடிய எந்த நற்செயல்களையும் ஆழ்வார் செய்யாவிட்டாலும், பரமபதத்தில், அனந்தாழ்வான், கருடன், விஷ்வக்சேனர் மூலம் ஏற்றுக்கொள்ளும் சேவைகளை, விலங்குகளைக் கொண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பி, எம்பெருமான் ராமனாக அவதரித்த காலத்தில், குரங்குகளும், அணில்களும் தங்கள் சக்திக்கு தகுந்தாற் போலும், நல்ல நெஞ்சத்தோடும் செய்தது போல், ஆழ்வாரும் ஏதாவது நல்ல நெஞ்சத்தோடு செய்யலாமே என்று பெரியபெருமாள் வினவுவது போலவும், அதுவும் இல்லை என்று ஆழ்வார் மறுப்பதுபோல் உள்ள குரங்குகள் மலையை நூக்க (27) பாசுரம்.
உம்பரால் அறியலாகா (28) என்ற அடுத்த பாடலில், பிரம்மா போன்ற தேவர்களால் கூட, அறியமுடியாதபடி, பரமபதத்தில் உள்ள எம்பெருமான், முதலைமேல், கோபித்துக் கொண்டு வரும்படி செய்த, கஜேந்திரன் என்ற யானையின், எம்பெருமான் தன்னை காத்தருள வேண்டும் என்று கதறிய சிந்தனையும் ஆழ்வார் தனக்கு இல்லை என்றும், கஜேந்திரனுக்கு அருளியதைப் போல், தம் அடியவர்களைக் காக்கும் பொருட்டு அவன் இருக்கையில், அப்படிப்பட்ட எம்பெருமானுக்கு தொண்டு செய்யாமல், தான் எதற்காக பிறந்தேன் என்று ஆழ்வார் வருந்தியதும் கூறப்பட்டது.
குளித்து மூன்று அனலை (25) பாசுரத்தில் மனம், வாய் மற்றும் கை போன்றவைகளைக் கொண்டு சிந்தித்து, பாடி, மலர்களை தூவி, என்ற மூன்று விதமான செயல்களையும் சேர்ந்து செய்து இருக்கிறீர்களா என்று எம்பெருமான் கேட்டதாகவும், அடுத்த பாசுரமான, போதெல்லாம் போது கொண்டு(26) பாடலில், வாயினால் பாடி என்பதை மட்டும் தனியாக கேட்டதாகவும், அடுத்த பாசுரமான குரங்குகள் மலையை நூக்க (27) பாடலில், கை கால் போன்றவற்றைக்கொண்டு சேவை செய்து இருக்கிறீர்களா என்றும், உம்பரால் அறியலாகா (28) பாடலில், மனதினால் சிந்தித்து இருக்கிறீர்களா என்பதை தனித்தனியாக கேட்பதாகவும் கொள்ளலாம்.
அடுத்த பாசுரமான ஊரிலேன் காணியில்லை (29) பாசுரத்தில், எம்பெருமான் உகந்து அருளின திவ்யதேசங்களுடன் சம்பந்தங்கள் உள்ளவர்களை எம்பெருமான் ரக்ஷித்தே தீர்வான் என்று இருப்பதால், அது போல் ஏதாவது உண்டா என்று எம்பெருமான் கேட்பது போலவும் அதுவும் இல்லை என்று ஆழ்வார் மறுக்கிறார்.
25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற இந்த நான்காவது பகுதியில், 25 முதல் 29 வரை, ஆழ்வார் தன்னிடம் எந்த நன்மையையும் இல்லை அல்லது எந்த நல்ல குணமும் இல்லை என்று சொல்லியதை பார்த்தோம், இனி வரும் ஐந்து பாடல்களில், தன்னிடம் எல்லாவிதமான தீமைகளும் உண்டு அல்லது எல்லா கெட்ட குணங்களும் உண்டு என்று சொல்வதை பார்க்கலாம்,
இந்த வகையில், தன்னிடத்தில் இல்லாத தீமை, உலகத்திலேயே இல்லை என்றும், எல்லா வித தீமைகளும் தன்னிடம் குடி கொண்டு இருக்கின்றன என்றும் மற்றவர்கள் ஏற்றம் பெறுவதை பொறுக்காத தீயகுணம் தன்னிடம் உள்ளது என்றும் சொல்லும் மனத்திலோர் தூய்மையில்லை என்ற (30) பாடலை கண்டோம்.
தான், தவங்களை மேற்கொள்பவர்களின் கூட்டத்தில் இல்லை, அடியவர்களுக்கு ததியாராதனம் செய்வதற்காக பொருள் சேர்ப்பவர்களின் கூட்டத்திலும் இல்லை, சொந்த பந்தங்களுக்கு உப்புத் தண்ணீர் போல ஒரு பயனும் இல்லாதவனாகவும், கூடி இருந்த பெண்களுக்கும் சம்பந்தங்கள் அற்று போகும்படி, கள்வனாகவும் ஆனதாக ஆழ்வார் சொல்கிறார். அதனால் இந்த பிறவி வீணானதாக வருந்துவது தவத்துளார் தம்மில் அல்லேன் என்ற 31வது பாடலில் சொல்லப்பட்டது.
இனி அடுத்த பாசுரம், நன்றி.
ஆர்த்து வண்டு அலம்பும் சோலை அணி திருவரங்கந் தன்னுள் கார்த் திரள் அனய மேனிக் கண்ணனே உன்னைக் காணும் மார்க்கம் ஒன்றும் அறிய மாட்டா மனிசரில் துரிசனாய மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்க னேனே
வண்டுகள் சப்தம் செய்துகொண்டு, அலைந்து கொண்டு இருக்கும், சோலைகளாலே ஆபரணம் போன்று, அழகு கொண்டு உள்ள திருவரங்கத்தில், கோவிலிலே கண்வளர்ந்து இருக்கும், கார்மேகத்தை ஒத்திருக்கும், திருமேனியை உடைய கண்ணனே, உன்னை அடைவதற்கு ஒரு வழியும் அறியாதவனாய், மனிதரில் கள்வனாய், பிடித்தவற்றை விட முடியாத மூடனாக, என்னிடம் இல்லாத யோக்கியதை மனதில் கொள்ளாமல் இங்கு வந்து நின்றேன், என்னே என் மூடத்தனம் என்று ஆழ்வார் தன்னை பற்றி கூறிக்கொள்ளும் பாசுரம்.
“‘எம்மிடம் ஈடுபடாத சம்சாரிகளுக்கும் வேண்டாதவர் ஆகிவிட்ட ஆழ்வார் எப்படி தன்னிடம் வந்தார்” என்று திருவுள்ளமாக, ஆழ்வார், ”தோன்றியபடி எல்லாம் காரியம் செய்யும் மூடனான, தாம் செய்யும் காரியத்திற்கு ஒரு காரணத்தை ஆராய முடியுமா என்றும், ஒரு மூர்க்கத்தனத்துடனே வந்தேன்” என்று ஒரு சுவாரஸ்யமான முன்னுரையை இந்த பாடலுக்கு உரையாசிரியர் வைக்கிறார்.
இனி சற்று விளக்கமாக .
திருவரங்கம் சோலைகளில் மதுவினை குடிக்க வந்த வண்டுகள், மதுவை பருகுவதற்கு பேரார்வத்துடன் வந்ததனால், ஒரு அளவு தெரியாமல், கழுத்து வரையில் குடித்து, அதனால் ஒரு இடத்தில இருக்க முடியாமல் அங்கும் இங்கும் அலைந்து சப்தம் செய்து கொண்டு உள்ளன.
இதனை பரமபதத்தில் உள்ள முக்தர்கள் எம்பெருமானை தரிசித்த ஆனந்தத்தில் சாம கானம் இசைத்து பாடுவதற்கு ஒப்பிடுவதால் திருவரங்கத்தில் இனிமை சொல்லப்பட்டது. ஆழ்வார் பரமபதம் வேண்டி இந்த பாசுரம் பாடுகிறார், ஆனால் வண்டுகள் மதுவினை குடித்ததால் உண்டான ஆனந்தத்தை வெளிப்படுத்துகின்றன.
ராமாயணம் சுந்தர காண்ட த்தில் (61.14) ல் கூறியபடி, சீதாதேவியை கண்ட ஆனந்தத்தில் வானரங்கள் சுக்ரீவனின் மதுவனத்தை அழித்து, அட்டகாசம் செய்து, கும்மாளம் செய்ததை போல் இந்த வண்டுகளும் அனுபவிக்கின்றன என்கிறார்.
இதே போல், பெரியாழ்வார் கிருஷ்ணன் பிறந்ததற்கு கோகுலத்தில் அனைவரும் தங்கள் தலைவரான நந்தகோபர்க்குப் பிள்ளை பிறந்ததாகக் கேள்விப்பட்டு அளவற்ற ஆனந்தம் அடைந்து தாம் செய்வது என்ன என்று தெரியாமல், சிலர் ஓடினார்கள், சிலர் சேற்றிலே வழுக்கி விழுந்தார்கள், சிலர் உரக்க குரல் கொடுத்து கொண்டு இருந்தார்கள், சிலர் குழந்தையைத் தேடினார்கள், சிலர் பாடினார்கள், சிலர் பறையடிக்க சிலர் அதுக்குத் தகுந்தாற்போல் கூத்தாடினார்கள்; இப்படி கோகுலத்தில் உள்ள அனைவரும் கோலாகலமாக இருந்தார்கள். கிருஷ்ணன் பிறந்ததால் திருவாய்ப்பாடியில் மாற்றம் அடையாதவர் யாரும் இல்லை என்பதை பெரியாழ்வார் கீழ் கொடுத்துள்ள பாடலில் சொல்வது போல் திருவரங்கத்து வண்டுகளும் அனுபவிக்கின்றன என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொல்கிறார்.
ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார், நாடுவார், நம்பிரான் எங்குற்றான் என்பார் பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று ஆடு வார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே. (பெரியாழ்வார் திருமொழி, 1.2.2)
மதுவினை குடிக்க வந்த வண்டுகள், மதுவின் மிகுதியாலே பிரளயத்தில் அகப்பட்டுக் கொண்டு அலைந்த மார்க்கண்டேய மகரிஷி போலவும் ஆற்று வெள்ளத்தில் அகப்பட்ட சோலைகள் போலவும் உள்ளன என்பது கருத்து.
மனைவிக்கு ஆபரணம் போல் திருவரங்கம் உள்ளது என்கிறார். இராமாயணம் சுந்தர காண்டத்தில் (16.26) கூறியதுபோல், ஒரு பெண்ணிற்கு அவளுடைய கணவனே மிகச் சிறந்த ஆபரணம் ஆகும், எல்லா ஆபரணங்களால் பூஜிக்க தகுந்தவரான இந்த சீதா பிராட்டி, நாதனை விட்டு பிரிந்த காரணத்தால் பிரகாசிக்கவில்லை என்பது இந்த ஸ்லோகத்தின் அர்த்தம். எம்பெருமான், திருவரங்கத்திற்கு வந்து பள்ளிகொள்ளாத போது இந்த உலகம் தாலி கட்டிகொள்ளாத பெண் போல் உள்ளது என்பது உரை ஆசிரியரின் வார்த்தைகள்.
சோலை அணி திருவரங்கம் என்று சென்ற பதத்துடன் கூடி, சோலைகளை ஆபரணமாக கொண்ட பெரியகோவில் என்றும் பொருள் கொள்ளலாம்.
அணி திருவரங்கம் என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொன்னது போல், பெரியாழ்வாரின் புதல்வியாகிய ஆண்டாளும், அணி புதுவை பட்டர் பிரான் கோதை சொன்ன என்று ஸ்ரீவில்லிபுத்தூர் பற்றி பாடியுள்ளார். பெரியாழ்வாரும் தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் எம்பெருமானுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்தவர்களே.
திருவரங்கத்து எம்பெருமானின் சயன சேவை, இந்த சோலைகளில் உள்ள தேன் வெள்ளத்தை கண்டு கடல் என்று மயங்கி மேகங்கள், மதுவினை கழுத்து வரையில் பருகி, அதனால் வெளிச்செல்ல முடியாமல், திருவரங்கத்து விமானத்திற்குள் புகுந்து சாய்ந்து கிடக்கின்றவோ என்று சொல்லும்படி இருக்கிறது. வடிவத்தில் கருமை நிறுத்தினாலும், குளிர்ச்சியாலும், கைமாறு கருதாமல் பிறருக்கு உதவும் தன்மையாலும் தனக்கென்று ஒன்று வைத்துக்கொள்ளாமல் எல்லாவற்றையும் பிறருக்கு வழங்குகையாலும் மேகத்தை ஓரளவிற்கு எம்பெருமானின் வடிவுக்கு உபமானமாக சொல்லும்படி உள்ளது என்று உரையாசிரியர் விவரிக்கிறார்.
நம்மாழ்வாரும் திருவாய்மொழி (8.5.8) ல், ‘ தொக்க மேகப் பல்குழாங்கள் காணும் தோறும் தொலைவன் நான்” என்று மேகங்களை கண்டவுடன் எம்பெருமான் நினைவுக்கு வருவதை அருளி செய்ததை இங்கே நினைவில் கொள்ளலாம்.
மேகத்தை காட்டிலும் எம்பெருமான் உயர்ந்தவர் என்று சொல்கிறது. பெரியபெருமாள் மேகத்தை போல் வெகு தூரத்தில் இருந்து கொண்டு நீரை கொடுத்து உதவுவது என்று இல்லாமல், மிக தாழ்ந்தவர்களோடு ஒன்றாகப் பிறந்து, அருகில் இருந்து தன்னையே கொடுத்து உதவி செய்பவர் கண்ணன். பெரியபெருமாளை காணும்போது, ”யசோதை சேமித்து வைத்த வெண்ணை யை திருடி உண்டு பட்டி மேயும் காரேறு போலே திரிந்து வளர்ந்த மதிப்பெல்லாம் தோன்றும்” என்று நம் ஆச்சார்யர்கள் கூறுவார்கள். ஆகையால் பெரியபெருமாளை கண்ணனாகவே கொள்ளவேண்டும். திருப்பாணாழ்வாரும் தன்னுடைய அமலனாதிபிரானில், (10) ” கொண்டல் வண்ணனை கோவலனாய் வெண்ணை உண்ட வாயன்…. அணியரங்கன் ” என்று கூறுவதையும் இங்கே நினைவில் கொள்ளலாம்.
எம்பெருமானை பெறுவதற்கு, அவன் கீதையில் உபதேசம் செய்த மார்க்கங்களான, கர்மயோகம், அதனால் விளையும் ஞான யோகம், இந்த இரண்டினாலும் உண்டாகும் பக்தியோகம் ஆகியவற்றையும், அவதார ரகசிய ஞானம், புருஷோத்தம வித்தை முதலியவைகளையும், மற்றும் கீதை அல்லாமல் மற்ற சாஸ்திரங்களில் மோக்ஷ சாதனங்கள் என்று சொல்லப்பட்டு இருக்கும் திருநாம சங்கீர்த்தனம், புண்ணிய க்ஷேத்திர வாசம் என்று ஜீவாத்மாவின் ருசிக்கு தகுந்தபடி சொல்லியிருக்கும் எண்ணற்ற மோக்ஷ உபாயங்களில் ஒன்றைக்கூட பயிற்சி செய்யாததோடு, அறியவும் இல்லை என்று ஆழ்வார் சொல்கிறார்.
ஆழ்வார், பகுத்தறிவு இல்லாத விலங்குகளாக பிறந்தோ, மோக்ஷ உபாய சாதனங்களைப் பற்றி அறியாமல் போனோம், பகுத்தறிவு உள்ள மனிதராய் பிறந்து அன்றோ அவைகளை பற்றி அறியாமல் இழந்தோம் என்று வருந்துகிறார்.
தன்னோடு மற்றவர்களை ஒப்பிட்டால் அவர்கள் நித்யஸூரிகள் போல் உயர்ந்தவர்கள் என்று சொல்லும்படி அவர்களும் தன்னை கள்வன் என்று கைவிடும்படி உள்ளவர் என்று ஆழ்வார் சொல்கிறார். விலங்காக பிறந்திருந்தால் தகுதி இல்லை என்று ஒதுங்கி விடலாம் என்றும் மனிதனாக பிறந்திருந்தும் அதனால் கிடைக்க கூடிய பலனை இழக்கும் பாவியானேன் என்று வருந்துகிறார்.
மனிதனாக பிறந்து, ஊமையாகவோ செவிடாகவோ இல்லாமல் இருந்தும் இந்த சம்சாரத்தில் இருந்து விலகாதவன் ப்ரஹ்மஹத்தி தோஷத்தை உடையவனே ஆவான் என்பது இங்கு சொல்லப்படும் ஒரு மேற்கோள். இதனால் மனிதரோடும் விலங்குகளோடும் சேராத வஞ்சகனான பிறவி ஆகிவிட்டேன் என்கிறார்.
இப்படி இருக்க ஏன் என்னிடம் வந்து நின்றீர் என்பது எம்பெருமான் திருவுள்ளமாக, தன் தாழ்வை அறியாத அறிவிலி ஆனதால் வந்து நின்றேன் என்றும், எம்பெருமானின் மேன்மையை அறிந்து இருந்தாலும் எம்பெருமானை அணுகுவது முறையன்று என்று ஒதுங்கி இருந்திருக்கலாம், அறிவிலி ஆனதால் வந்து நின்றேன் என்கிறார். இங்கு நம்மாழ்வாரின் திருவாய்மொழி வளவேழுலகின் முதலாய் வானோர் இறை அருவினையேன் (1.5.1) மேற்கோள் சொல்லப்படுகிறது. நம்மாழ்வார் “வளவேழுலகின் முதலாய வானோரிறை” என்பதனால் சாமானியரால் எடுத்துரைக்க தகாத பெருமையுடைய எம்பெருமான் என்றும், “அருவினையேன்” என்றதனால் பகவத் விஷயத்தில் சிறிதும் சொல்ல தகுதி இல்லாமல் இருக்கின்ற தமது தாழ்வினையும் சொல்கிறார். ஊரில் உள்ளவர்கள் குடிப்பதற்காக உள்ள ஊற்றினில் விஷத்தை கலப்பார் போலே நல்லவர்கள் அனுபவிக்க வேண்டிய பகவத் விஷயத்தை அணுகினேன் என்கிறார்.
கண்ணன் என்றதால் அவனுக்கு ஆகாதவர் யாரும் இல்லை என்றதால், அதையே பற்றாகக் கொண்டு தான் அணுகியதால், அதனால் ஏற்படும் தீமைகளை அறியாமல் அணுகினேன் என்கிறார். தான் மூர்க்கனாக இருந்தாலும் பெரியபெருமான் கண்ணனாக காட்சி அளிப்பதால் வந்து நின்றேன் என்று உரைக்கிறார்.
மூர்க்கனேன் என்று இரண்டு முறை கூறியதால், இந்த அறிவின்மை உலகில் வேறு எங்கும் காண முடியாது என்கிறார். தாம் அணுகியதால் பெரிய பெருமாளுக்கு உண்டாகும் தீங்கை பற்றி ஒரு முறையும், தன்னுடைய தாழ்வை பற்றி ஒரு முறையும் கூறியதாகவும் வைத்துக் கொள்ளலாம்.
இனி அடுத்த பாசுரத்தில் சந்திக்கலாம், நன்றி