திருமாலை-தவத்துளார் தம்மில் (31)

திருமாலை இது வரை

திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.

அனுபவம் Experience

பரமாத்மாவின் அனுபவங்களை முதல் மூன்று பாசுரங்களில், ஆழ்வார் ரசிக்கிறார்.

உபதேசங்கள் Preaching

அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராம பிரானையும் கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான் என்று சொல்லி நம்மை திருவரங்கனிடம் அழைத்து செல்கிறார்.

உதவிகள் Help

அப்படியும் மக்கள் எல்லோரும் ஆழ்வார் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் அவர்களை விட்டுவிட்டு, எம்பெருமான் தனக்கு செய்த மிக பெரிய உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார்.

எம்பெருமான், திருவரங்கனாக

  • 26 தத்துவங்களில் உயரிய தத்துவமான பரமாத்மாவில் உள்ள சந்தேகங்களை ஆழ்வாருக்கு தீர்த்து வைத்தான். (‘மெய்யெற்கே மெய்யனாகும்’)
  • ஆழ்வாரின் நெஞ்சில் வந்து புகுந்து அவனிடத்தில் அன்புவெள்ளம் பெருக வைத்தான். (“சூதனாய் கள்வனாய்“)
  • தனது கடினமான நெஞ்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து, ஒரு யோக்கியதையும் இல்லாத தனக்கு அவனது சேவையையும் அருளையும் கொடுத்தான் (விரும்பி நின்று)
  • பலகாலங்களாக சேவிக்காத இழப்பை சரி செய்து அவனை தரிசிக்க வைத்து கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக வைத்தான் (‘இனித்திரை திவலை மோத “)
  • நான்கு திசைகளை படைத்தது, அவற்றில் தன்னுடைய அங்கங்களை வைத்து, அவற்றைக் கொண்டு நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்தான். (குடதிசை முடியை வைத்து‘)
  • அவனின் திரு அவயவங்களின் அழகும், அவைகளால் வந்த தேஜஸும், அடியவர்களுக்காகவே என்று ஆழ்வாரை மகிழ செய்தான். (“பாயும் நீர் அரங்கம் தன்னுள்“)
  • அவனிடம் மஹாவிஸ்வாசம் இல்லாமல் போனதால் இத்தனை காலம் பகவதனுபவத்தை இழந்ததை எண்ணி ஆழ்வாரை கலங்க வைத்தான். (பணிவினால் மனம் அது ஒன்றி)
  • வேதங்களும், சான்றோர்களும் பேசிய பேச்சுக்களைக் கொண்டே நாம் அவனின் பெருமைகளை எளிதாக பேசமுடியும் என்றும், நாம் சிரமப்பட்டு புதிதாக ஒன்றும் கண்டுபிடித்து சொல்ல வேண்டியதில்லை என்றும் ஆழ்வாரை பாட வைத்தான். (பேசிற்றே பேசல் அல்லால்)
  • அவனின் சயனத் திருக்கோலத்தின் அழகினை திருவரங்கத்தில் காண்பித்து, அதனை மறந்து ஆழ்வாரை வாழமுடியாதபடிச் செய்தது. (கங்கையில் புனிதமாய)
  • சரணாகதிக்கு தேவையான தகுதி ஒன்றும் தனக்கு இல்லை என்று ஆழ்வாரை உணரச்செய்து அவரை, சரணாகதிக்கு தயார் செய்தான். (வெள்ளநீர் பரந்து பாயும்)

நைச்சானுசந்தானம் Naichyaanu Santhaanam  

நல்லது இல்லை

இதுவரை, எம்பெருமான் தனக்கு கொடுத்த அனுபவத்தை சொல்வது (1-3), தன்னுடைய அனுபவத்தை கொண்டு உபதேசம் செய்வது (4-14), மற்றும் எம்பெருமான் தனக்கு செய்த நன்மைகளை நினைத்துக் கொள்ளுதல்(15-24) என்ற முதல் மூன்று உட்பிரிவுகளை பார்த்த பின் தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை என்று ஒரு ஐந்து பாடல்களிலும், எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று அடுத்த ஐந்து பாடல்களிலும் ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற இந்த நான்காவது பகுதியை இப்போது அனுபவித்து வருகிறோம்.

அதில் உள்ள முதல் பாசுரத்தை, திருமாலையின் 25வது பாடலில்  (குளித்து மூன்று அனலை) ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி கூட இல்லை, திருவரங்கன் அந்தத் தகுதி முதல் எல்லாவற்றையும் அருள வேண்டும் எனக் கேட்டு கொண்டதை பார்த்தோம்.

சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட கர்ம, ஞான, பக்தி யோகங்கள் இல்லை என்றால், மற்றவர்கள் செய்யக்கூடிய அர்ச்சனை, துதி போன்றவற்றை செய்யலாமே என்று பெரியபெருமாள் கேட்பதாகவும், அவைகளும் தன்னிடம் இல்லை என்று ஆழ்வார் சொல்வதாகவும் அமைந்த போதெல்லாம் போது கொண்டு ( 26) பாசுரம்.

மனிதர்கள் செய்யக்கூடிய எந்த நற்செயல்களையும் ஆழ்வார் செய்யாவிட்டாலும், பரமபதத்தில், அனந்தாழ்வான், கருடன், விஷ்வக்சேனர் மூலம் ஏற்றுக்கொள்ளும் சேவைகளை, விலங்குகளைக் கொண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பி, எம்பெருமான் ராமனாக அவதரித்த காலத்தில், குரங்குகளும், அணில்களும் தங்கள் சக்திக்கு தகுந்தாற் போலும், நல்ல நெஞ்சத்தோடும் செய்தது போல், ஆழ்வாரும் ஏதாவது நல்ல நெஞ்சத்தோடு செய்யலாமே என்று பெரியபெருமாள் வினவுவது போலவும், அதுவும் இல்லை என்று ஆழ்வார் மறுப்பதுபோல் உள்ள  குரங்குகள் மலையை நூக்க (27) பாசுரம்.

உம்பரால் அறியலாகா (28) என்ற அடுத்த பாடலில், பிரம்மா போன்ற தேவர்களால் கூட, அறியமுடியாதபடி, பரமபதத்தில் உள்ள எம்பெருமான், முதலைமேல், கோபித்துக் கொண்டு வரும்படி செய்த, கஜேந்திரன் என்ற யானையின், எம்பெருமான் தன்னை காத்தருள வேண்டும் என்று கதறிய சிந்தனையும் ஆழ்வார் தனக்கு இல்லை என்றும், கஜேந்திரனுக்கு அருளியதைப் போல், தம் அடியவர்களைக் காக்கும் பொருட்டு அவன் இருக்கையில், அப்படிப்பட்ட எம்பெருமானுக்கு தொண்டு செய்யாமல், தான் எதற்காக பிறந்தேன் என்று ஆழ்வார் வருந்தியதும் கூறப்பட்டது.

குளித்து மூன்று அனலை (25) பாசுரத்தில் மனம், வாய் மற்றும் கை போன்றவைகளைக் கொண்டு சிந்தித்து, பாடி, மலர்களை தூவி, என்ற மூன்று விதமான செயல்களையும் சேர்ந்து செய்து இருக்கிறீர்களா என்று எம்பெருமான் கேட்டதாகவும், அடுத்த பாசுரமான,  போதெல்லாம் போது கொண்டு(26) பாடலில், வாயினால் பாடி என்பதை மட்டும் தனியாக கேட்டதாகவும், அடுத்த பாசுரமான குரங்குகள் மலையை நூக்க (27)  பாடலில்,  கை கால் போன்றவற்றைக்கொண்டு சேவை செய்து இருக்கிறீர்களா என்றும், உம்பரால் அறியலாக (28) பாடலில், மனதினால் சிந்தித்து  இருக்கிறீர்களா என்பதை தனித்தனியாக கேட்பதாகவும் கொள்ளலாம்.

அடுத்த பாசுரமான ஊரிலேன் காணியில்லை (29) பாசுரத்தில், எம்பெருமான் உகந்து அருளின திவ்யதேசங்களுடன் சம்பந்தங்கள் உள்ளவர்களை எம்பெருமான் ரக்ஷித்தே தீர்வான் என்று இருப்பதால், அது போல் ஏதாவது உண்டா என்று எம்பெருமான் கேட்பது போலவும் அதுவும் இல்லை என்று ஆழ்வார் மறுக்கிறார்.

கெட்டவை உண்டு

25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற இந்த நான்காவது பகுதியில், 25 முதல் 29 வரை, ஆழ்வார் தன்னிடம் எந்த நன்மையையும் இல்லை அல்லது எந்த நல்ல குணமும் இல்லை என்று சொல்லியதை பார்த்தோம், இனி வரும் ஐந்து பாடல்களில், தன்னிடம் எல்லாவிதமான தீமைகளும் உண்டு அல்லது எல்லா கெட்ட குணங்களும் உண்டு என்று சொல்வதை பார்க்கலாம்,

இந்த வகையில், தன்னிடத்தில் இல்லாத தீமை, உலகத்திலேயே இல்லை என்றும், எல்லா வித தீமைகளும் தன்னிடம் குடி கொண்டு இருக்கின்றன என்றும் மற்றவர்கள் ஏற்றம் பெறுவதை பொறுக்காத தீயகுணம் தன்னிடம் உள்ளது என்றும் சொல்லும் மனதிலோர் தூய்மையில்லை என்ற பாடலை சென்ற பதிவினில் கண்டோம். இனி அடுத்த பாசுரம், நன்றி.

பாசுரம் 31

தவத்துளார் தம்மில் அல்லேன் தனம் படைத்தாரில் அல்லேன், உவர்த்த நீர் போல உந்தன் உற்றவர்க்கு ஒன்றும் அல்லேன், துவர்த்த செவ்வாயினார்க்கே துவக்கறத் துரிசன் ஆனேன் அவத்தமே பிறவி தந்தாய் அரங்கமா நகரு ளானே (31)

“மோக்ஷத்தின் பொருட்டு சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட உபாயங்கள் ஒன்றும் தங்களிடம் இல்லை என்று கூறுகிறீர்கள்; அது இல்லாவிட்டாலும் ஸ்வர்க்கத்தை பெறுவதற்காகவோ, பிறரை ஏமாற்றி பணம் பறிக்கவோ, வேதத்தில் சொல்லப்பட்ட யாகங்கள் ஏதாவது செய்து இருந்தால், அவற்றில் உம்முடைய நினைப்பை மாற்றி, படிப்படியாக மோக்ஷம் கிடைக்கும்படி செய்கிறேன்” என்று எம்பெருமானின் திருவுள்ளமாக, ஆழ்வார், அவை ஒன்றும் இல்லை, தங்களை அடைவதற்காக தாங்கள் கொடுத்த இந்த பிறப்பை, உலக விஷயங்களில் மண்டி, அனைவரிடம் வெறுப்பையே காட்டி, அழிவதற்காகவே இந்த பிறவி தந்ததாக இருக்கின்றன தன்னுடைய நடத்தை என்று மறுமொழி கொடுப்பதுபோல் உள்ள பாசுரம். பிறர் பெருமை பொறாதவன் என்று முன் பாட்டில் சொன்ன ஆழ்வார் அவ்வளவோடு நில்லாமல், உலக விஷயங்களில் ஈடுபட்டு உறவினர்களுக்கும் ஆகாதவன் ஆகிவிட்டதாக சொல்கிறார்.

அரங்கமா நகருளானே, தவங்களை மேற்கொள்பவர்களின் கூட்டத்தில் அடியேன் இல்லை, ததியாராதனத்தின் பொருட்டு பொருள் சேர்ப்பவர்களின் கூட்டத்திலும் அடியேன் இல்லை, அடியேனுடைய சொந்த பந்தங்களுக்கு உப்புத் தண்ணீர் போல ஒரு பயனும் இல்லாதவன் ஆனேன்; சிவந்த அதரங்களை உடைய பெண்களுக்கும் சம்பந்தங்கள் அறுந்து போகும்படி, கள்வனாக ஆனேன்; இப்படிப்பட்ட எனக்கு இந்த பிறவியை வீணாகவே தந்து அருளினாய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

இங்கு வீணாகவே பிறவி தந்துவிட்டாய் என்று ஆழ்வார் எம்பெருமானை குறை கூறவில்லை, ஆனால் தன்னுடைய நைசானுசந்தானத்தை சொல்லி வருத்தத்தை தெரிவித்து எம்பெருமானை விட்டு விலக வேண்டுமோ என்ற அச்சத்தில் பாடுவதாக கொள்ளலாம். அடுத்த சில பாடல்களில், ஆழ்வார் தாம் எம்பெருமானை விட்டு விலக தன்னை தயார் செய்யும் தருணத்தில், எம்பெருமான் ஆழ்வாருக்கு நம்பிக்கை அளித்து தன்னுடன் வருவதற்கு ஏற்பாடு செய்வார் என்பதை பின்பு பார்க்கலாம்.

இதே போல் பின்னாளில் நம்முடைய ஆச்சார்யரான ராமானுஜர், அப்போது வைணவ குருவாக இருந்த ஆளவந்தாரின் அருள்பார்வை கிடைப்பதற்கு முன்னால் தன்னுடைய பிறவியை, ஒரு அவத்தமாக, மரம் போல் இருந்ததாக சொல்கிறார். இதை திருவாய்மொழியில், (7.9.3) ஆம் முதல்வன் இவனென்று தன் தேற்றி, என் நா முதல் வந்து புகுந்து நல் இன் கவி, தூ முதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன, என் வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ? என்று சொல்லி எம்பெருமானை என்றாவது மறப்பேனோ என்று நம்மாழ்வார் சொன்னது போல், ஆளவந்தாரை மறப்பேனோ என்று ராமானுஜர் சொல்கிறார்.

இனி சிறிது விளக்கத்துடன் இந்த பாடலை ரசிக்கலாம்.

தவத்துளார் தம்மில் அல்லேன்

தவம் என்பது சரீரத்தை வருத்தி செய்யும் காரியம் ஆகும். மோக்ஷத்திற்காக தவம் புரிபவர்கள் உண்டு, மற்ற உலக விஷயங்களுக்காக தவம் செய்பவர்களும் உண்டு. ஞானிகள் பிரம்மத்தை அல்லது பரமாத்மாவை வேத அத்யயனத்தினாலும், யாகங்களாலும், தானத்தினாலும், தவங்களாலும் அறிய விரும்புகிறார்கள் என்று ப்ருஹ தாரண்ய உபநிஷத் (6.4.22) சொல்வதில் இருந்து வேதாந்தங்கள், தவத்தை ஒரு மோக்ஷ சாதனமாக உரைத்தது. ‘தவத்தோர் தம்மில்’ என்று சொல்லாமல், தவத்துளார் தம்மில் என்று சொன்னதற்கு மேல் சொன்ன, வேதம், யாகம், தானம் மற்றும் தவங்கள் என்று எல்லாவற்றையும் சேர்த்து சொன்னதாக கொள்ளலாம். அதே போல், தவத்துளார் தம்மில் என்றுசொன்னதில், இன்ன பயனை குறித்து தவம் புரிவோர், மோக்ஷத்தை குறித்து தவம் புரிவோர், ஸ்வர்கத்தை குறித்து தவம் புரிவோர், தவத்தை தொடங்கி முடிக்காதவர், அதற்காக பிராயசித்தம் செய்ய வேண்டிய அரைகுறை தவம் செய்தவர்கள் என்று எவருடனும் சேராதவானாக இருந்தேன் என்று ஆழ்வார் தன்னைப்பற்றி கூறுகிறார்.

தனம் படைத்தாரில் அல்லேன்

தனம் நல்ல விஷயங்களில் செலவிடப்பட்டால் அத்தகைய பணம் படைத்திருப்பதையும் ஒரு மோக்ஷ சாதனமாக கொள்ளலாம். அது மேலே சொன்ன ப்ருஹதாரண்ய உபநிஷத்தில் (6.4.22) தனமும் ஒரு மோக்ஷ சாதனமாக சொல்லப்பட்டு உள்ளது. தனம், சாத்வீக தானம் ராஜச தானம் தாமச தானம் என்ற மூன்று வகையான தானங்கள் செய்ய பயன்படுகிறது.

கண்ணன் பகவத் கீதையில் (18.5) சொல்வது போல், யாகம், தானம், தவம் முதலிய கர்மங்கள் விடத்தக்கவை அல்ல, கடைபிடிக்க வேண்டியவைகள், ஏன் என்றால் அவை அவர்களை பரிசுத்த படுத்தும். கொடுத்தல் கடமையென்று கருதி, கைம்மாறு வேண்டாமல், தகுந்த இடத்தையும் காலத்தையும் பாத்திரத்தையும் நோக்கிச் செய்யப்படும் தானத்தையே சாத்வீக தானம் என்பர். ( கீதை 17.20). கைம்மாறு வேண்டியும், பயனைக் கருதியும், அமங்களமான பொருட்கள், கிலேசத்துடன் கொடுக்கப்படும் தானத்தை ராஜச தானம் என்பர் (17.21). தகாத இடத்தில், தகாத காலத்தில், ( தோஷமுள்ள தேச காலத்தில்), தகாதவர்களுக்குச் செய்யப்படுவதும், கவுரவமில்லாமல் அவமதிப்புடன், இகழ்ச்சியுடன் செய்யப்படுவதுமாகிய தானம் தாமச தானம் (17.22) என்பர்.

இப்படி, தவமும், சாத்வீக தானமும் செய்யா விட்டாலும், கொடையாளி எனும் பெயர் பெறுவதற்காக ராஜஸ, தாமச தானங்கள் செய்தவர்கள் கூட்டத்தில் உள்ளாரோ என்று பார்த்தால் அதுவும் இல்லை என்று ஆழ்வார் கூறுகிறார்.

தன் வீட்டுக்கு வந்த விருந்தாளியை விரட்டக்கூடாது என்பது விரதம். இதற்காக எந்த வழியிலும் அன்னத்தை சம்பாதிக்க வேண்டியது என்பதற்கு தைத்ரிய, ப்ருஹதாரண்ய உபநிஷத் (10.1)ல் சொன்னபடி நல்ல விஷயங்களில் செலவிடுவதாக இருந்தால், அல்லாத வழியிலும் சம்பாதிக்கலாம் என்பது இங்கே உள்ள மேற்கோள். திருமங்கையாழ்வார் முதலியோர் இந்த அர்த்தத்தை அனுஷ்டிக்கவும் செய்தார்கள். இப்படி, பகவத், பாகவத விஷயங்களில் செலவிடுவதற்கும் பணம் படைத்தவர் கூட்டத்தில் தான் சேரவில்லை என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் இங்கு கூறுகிறார்.

இதனையே தொண்டரடி பொடியாழ்வார் தான் இதற்கு முன் தீயவழிகளில் கூட பணம் சம்பாதித்து இருக்கலாம், அதில் ஒரு பகுதியாவது பாகவத தாதியாராதனத்திற்காக செலவிட்டு இருந்தால், தானும் திருமங்கையாழ்வாரை போல் வீடு பெற்று இருப்பேன் என்று விளக்கம் கொடுப்பதும் உண்டு.

உவர்த்த நீர் போல உந்தன் உற்றவர்க்கு ஒன்றும் அல்லேன்

இப்படி தவம், தனம் பெற்றவர்கள் என்ற கூட்டத்தில் இல்லை என்றால், உறவினர்களுக்காவது இனியவர்களாக இருந்தீரா என்று ஆழ்வாரிடம் கேட்பதாக நினைத்து, அதற்கும் மறுத்து பதில் சொல்லும் வரிகள் இவை. உப்பு தண்ணீரை முகத்தில் அடித்துக் கொண்டால் அது கண் விழிக்க முடியாதபடி கரிப்பது போல், தன்னை நேருக்கு நேர் பார்க்கமுடியாதபடி குற்றமே உருவானவனாக உறவினர்களிடத்தில் வாழ்ந்து வருவதாக ஆழ்வார் கூறுகிறார். உறவினன் என்றால் இனியதையோ நல்லவைகளையோ செய்பவனாக இருக்க வேண்டும் என்றும், தான் தீமைகளையே திட்டமிட்டு செய்து தனக்கும் சேர்த்து தீமைகளையே செய்ததால், ஒருவனுக்கும் உறவினனாக இருக்கும் தகுதியை பெறவில்லை என்கிறார். அதாவது உறவினர்களுக்கு உப்புநீர் போல் ஒன்றுமல்லாதவனாக ஆனேன் என்று கருத்து.

துவர்த்த செவ்வாயினார்க்கே துவக்கறத் துரிசன் ஆனேன்

உறவினர்களுக்கு ஆகாதவர் ஆயின், தம் நெஞ்சுக்கினிய பெண்களுக்கு வேண்டியவர்கள் ஆயிருப்பீரே என்றால் அதுவும் இல்லை என்று இந்த பதத்தால் சொல்கிறார். துவர்த்த செவ்வாயினார் என்றதால், உள்ளத்தில் இருக்கும் தீய குணங்களை மறைத்து, கோவைக்கனி போன்ற உதட்டு அழகை காட்டி மற்றவரை வசப்படுத்திக் கொள்வார்கள் என்கிறார். இவனும் அவர்கள் நெஞ்சில் உள்ள குற்றங்களை அறிய மாட்டான், தம்மிடம் உண்மையான அன்பு இல்லை என்பதையும் அறியாமல் அவர்களிடத்தில் சிக்கி கொள்வான். அதனால் பெற்றோர்களிடமும் மற்ற உறவினர்களிடமும் உள்ள உறவை அறுப்பார்கள் என்கிறார்.

துவக்கற என்று சொன்னதால், எல்லா உறவுகளையும் விட்டுவிட்டு, தான் பற்றிய எல்லா பெண்களோடும் உள்ள உறவுகளையும் அறுந்து போகும்படி என்பது ஒரு விளக்கம். அவர்களிடத்தில் தான் கள்ளத்தனத்தோடு நடந்து கொண்டதால் அவர்களாலும் நிராகரிக்கப் பட்டேன் என்று ஆழ்வார் சொல்கிறார். அவர்களுக்கும் தீங்கு செய்ததால், அவர்களும் பிரிந்தால் போதும் என்று நினைக்கும்படி தான் நடந்துகொண்டதாக ஆழ்வார் கூறுவதாகவும் கொள்ளலாம். துரிசன் என்றால் கள்ளன் என்று பொருள்.

செவ்வாயினார்க்கே என்பதில் உள்ள ஏகாரதிற்கு உரையாசிரியர் கூறும் விளக்கம் ரசிக்கத் தக்கது. ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் 19.4, தான் ராவணனுடைய தம்பி என்றும், அவனாலும் அவமதிக்கப்பட்டவன் என்றும், எல்லா ஜீவராசிகளும் சரணம் அடைய தகுந்த தங்களிடம் சரணம் அடைந்தேன் என்று விபீஷணன் கூறும் வார்த்தைகளில் விபீஷணன் தான் தாழ்வுக்கு எல்லை நிலமாக ஆகிவிட்டதை கூறியதைப் போல், ஆழ்வாரும், தண்மைக்கே எல்லை நிலமான பெண்களுக்கும் ஆகாதவனாகி, அவர்களாலும் துரத்தப் பட்டவன் தான் என்று கூறுவதும் உண்டு.

இங்கு, திருமங்கையாழ்வாரின் திருநறையூர் பதிகத்தின் பாடலை (பெரியதிருமொழி 6.4.1) நினைவு கொள்ளலாம். “கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால், பண்ணின் மொழியார் பைய நடமின் என்னாத முன், விண்ணும் மலையும் வேதமும் வேள்வியுமாயினான், நண்ணு நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே” என்று சொல்லி, கிளரொளி இளமை கெடுவதன் முன் திருநறையூர் சென்று எம்பெருமானை தொழுங்கள் என்று சொல்கிறார். பண்ணின் மொழியார் பைய நடமின் என்று திருமங்கை ஆழ்வார் சொல்வதும், துவர்த்த செவ்வாயினார்க்கே துவக்கறத் துரிசன் ஆனேன் என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொல்வதும் ஒன்றே.

அவத்தமே பிறவி தந்தாய்

இப்படி ஆனபின்பு தாங்கள் எனக்கு அளித்த இந்த பிறவி வீணானதே என்று சொல்கிறார். தம்முடைய கர்மங்களால் வந்த இந்த தாழ்வினை எம்பெருமான் தந்ததாக சொல்லலாமோ என்று கேட்டுக்கொண்டு, கர்மம் என்பது என்ன என்பதையும் தன்னுடைய ஸ்வரூபம் என்ன என்பதையும் அறிந்தவர் ஆகையால் இப்படி சொல்கிறார். இவருக்கு வரும் எல்லா கர்மங்களின் பலன்களையும் கருணை மிக்க எம்பெருமான் பொறுத்தேன் என்று சொன்னால் போகக்கூடியவை இந்த கர்மங்கள் என்கிறார். பகவத் கீதையில் கண்ணன் கூறியது (10.10) போல், என்னுடன் எப்போதும் கூடி இருக்க விரும்புபவர்களுக்கும், என்னை பஜனை செய்பவர்களுக்கும் என்னை அடைவதற்கான சாதனமான புத்தி யோகத்தை பேரன்புடன் கொடுக்கிறேன் என்கிறபடி, இந்த அடியவனுக்கு எம்பெருமான் நல்லறிவை கொடுத்து நல்வழி நடத்த வேண்டும் என்று அவர் நினைத்தால் அதை யாராலும் தடுக்க முடியாது. இதை எல்லாம் உணர்ந்தவர் ஆகையால் வீணான பிறவியை தந்து விட்டாயே என்று எம்பெருமானை பார்த்து ஆழ்வார் கூறுகிறார். குழந்தை கிணற்றில் விழுவதை தாய் பார்த்துக் கொண்டு இருந்தால், அவளே குழந்தையை கிணற்றில் தள்ளினாள் என்று சொல்லலாம் அன்றோ, அது போலவே ஆழ்வார் இங்கு சொல்கிறார்.

அரங்கமா நகருளானே

சாஸ்திரங்களிலாலே திருத்த முடியாதபடி கர்மங்கள் தூண்டிய வழியே சென்று மற்ற விஷயங்களில் ஆழ்ந்து விடுபவர்களை தன்னுடைய அழகையும் குணத்தையும் காட்டி திருத்துவதற்காக திருவரங்கத்தில் சயனித்து இருப்பது. அது தன் விஷயத்தில் பலிக்காமல் போய் விட்டதே என்று ஆழ்வார் கூறுவதாக கருத்து.

உள்ளுறைபொருள்

எம்பெருமானை அடைவதற்காக தான் ஒரு காரியமும் செய்யவில்லை: கையில் காசு உள்ளவனாக இருந்திருந்தால் ஆகிஞ்சந்யத்தில் குறை உடையவனாக ஆகி இருப்பேன் என்றும், தான் அப்படி இல்லை என்றும், ஆகிஞ்சநர்களில் தலைவனாக இருந்தேன் என்றும் கூறுகிறார். கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் என்ற பந்துகளுடன் சேர்ந்து இருந்தால், ‘தாய் தந்தையும் இவரே இனி ஆவாரே” என்னும் நிலை வாய்ந்த பிறகு ஆழ்வாரை கைப்பற்றுவோம் என்று எம்பெருமான் காத்து இருக்கலாம், ஆனால் அதுவும் இல்லை ; ஏன் என்றால், ஆழ்வார் உறவுகளும், தன்னை விட்டொழிந்தனர் என்கிறார். அதே போல் மகளிரும் தன்னைத் துரத்திவிட்டனர் என்று சொல்லி, இனி எம்பெருமானுடைய விஷயம் இடையூறின்றி தன் உள் புகுரலாம் என்று ஆழ்வார் சொல்கிறார். இப்படி தான் எம்பெருமான் விஷயத்திற்கு உசிதமாக இருந்தும் எம்பெருமான் தன்னை சேர்த்துக் கொள்ளா விட்டால், தன்னை வீணே படைத்தான் என்று சொல்லி பாடலை முடிக்கிறார்.

மீண்டும் அடுத்த ஆழ்வார் பாடலில் சந்திக்கலாம், நன்றி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d bloggers like this: