திருவேங்கடமுடையான் – நம்மாழ்வார் – திருவாய்மொழி


தொடக்கம்

பதின்மர் பாடும் பெருமாள் என்று திருஅரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம்.

திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே என்று நம் பெரியவர்கள் கூறி உள்ளார்கள்.).

பொதுவாக முதலாழ்வார்களுக்கு வேங்கடமுடையானிடம் அதிக பற்று கொண்டு இருந்தார்கள் என்பதும் அவர்கள் அவனுக்கு நிறைய பாடல்கள் பாடினார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து திருவேங்கடமுடையானை முன்னிட்டு

 • பொய்கையாழ்வார் இயற்றிய முதல் திருவந்தாதியில் இருந்து பத்து பாசுரங்களை முன்பு பார்த்தோம்.
 • அடுத்த ஆழ்வார், பூதத்தாழ்வார், அவரின் இரண்டாம் திருவந்தாதியில் இருந்து திருவேங்கடமுடையானை பற்றி பதினோரு பாசுரங்களில் சொல்வதை இங்கே  சுருக்கமாக பார்த்தோம்.
 • அடுத்த ஆழ்வாரான பேய்ஆழ்வாரின் திருவேங்கடமுடையான் பாசுரங்களை (19) இங்கே காணலாம்.
 • அடுத்து, திருமழிசை ஆழ்வார் திருவேங்கடமுடையானை பற்றி பாடல்களை (16) பார்த்தோம்.
 • திருப்பாணாழ்வார் பாடிய அமலனாதிபிரான் பிரபந்தத்தில் இருந்து இரண்டு பாடல்களை இங்கே பார்க்கலாம்.
 • அடுத்து குலசேகராழ்வாரின் பதினோரு பாடல்களை இங்கே கண்டோம்.
 • பெரியாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 7 பாசுரங்களை இங்கே பார்த்தோம்.
 • அடுத்து பெரியாழ்வாரின் புதல்வியாகிய ஆண்டாள் நாச்சியார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 16 பாசுரங்களை இங்கே கண்டோம்.

இனி ஆழ்வார்களின் தலைவராக கொண்டாப்படும் ஸ்வாமி நம்மாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய பாசுரங்கள் பற்றி காண்போம். நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்கள் இயற்றி உள்ளார். அவை திருவிருத்தம், திரு ஆசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி எனும் நான்கு தமிழ் மறைகள் ஆகும்.

ஸ்வாமி நம்மாழ்வார் மொத்தம் 37  திவ்யதேசங்களைப் பற்றி பாடியுள்ளார். அவைகளில் ஆழ்வாருக்கு திருவேங்கடமுடையானிடம் அதீத ஈடுபாடு. ஆழ்வார் முதலில் பாடிய திவ்யதேசம், திருவேங்கடமுடையானின் திருமலை ஆகும்.

இவற்றில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்து சில பாசுரங்களை முன்பு பார்த்து உள்ளோம். இங்கு திருவேங்கடவன் மேல் பாடிய அனைத்து பாசுரங்களையும் ஒவ்வொரு ப்ரபந்தமாக பாப்போம். திருவிருத்தத்தில் உள்ள 8 பாசுரங்களை முன்பு பார்த்தோம். இப்பொழுது திருவாய்மொழியில் உள்ள 40 பாசுரங்களை மூன்று பகுதிகளாக காண்போம்.

 • துவய மஹாமந்திரத்தின் முதல் பகுதி, (6.10) – 11 பாசுரங்கள்
 • துவய மஹாமந்திரத்தின் இறுதி பகுதி, (3.3) – 11 பாசுரங்கள்
 • திருவாய்மொழியில், திருவேங்கடவனை பற்றிய மற்ற பாசுரங்கள். (18)

இந்த பதிவில், மூன்றாவதாக குறிப்பிட்டுள்ள திருவாய்மொழியில், திருவேங்கடவனை பற்றிய மற்ற பாசுரங்கள் (18) பற்றிய ஒரு சிறு தொகுப்பினை காண்போம். நன்றி

திருவாய்மொழி

எண் பாசுரம் விளக்கம்
1கண்ணாவான் என்றும், மண்ணோர் விண்ணோர்க்கு,  தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே” (1.8.3) விண்ணுலகத்தில் உள்ளவர்களுக்கும், மண்ணுலகத்தில் உள்ளவர்களுக்கும் திருவேங்கடமுடையான் என்றும் கண் போல்  இருப்பான், என்றும் நித்யஸூரிகள் வந்து சேவை செய்யும் இடம் என்றும்  ஆழ்வார் கூறுகிறார். எம்பெருமானின் ஆர்ஜவ குணம் பேசப்படுகிறது. ஆர்ஜவம் என்றால் எண்ணுவது, உரைப்பது செய்வது என்ற மூன்றும் ஒருங்கே பொருந்தி அமைவது. சௌலப்யம் என்றால் ஸ்ரீவைகுந்ததை தன்னுடைய சபையாக கொண்டு இருந்தாலும், சம்சாரிகள் வாழும் இடத்தில் அவதாரம் செய்து அவர்கள் அளவில் தான் எளியவனாக வந்து நிற்பது. சௌசீல்யம் என்றால் இவர்கள் அளவிற்கு எளியவனாக வந்து தம்மை தாழ்த்திக்கொண்டதை பற்றி நினைக்காமல், அவர்களுடன் கலந்து பழகுவது மற்றும் அதனால் தனக்கு பயன் உள்ளதாக நினைப்பது ஆகும். இங்கு பக்தர், முக்தர் நித்யர் என்று எண்ணம் சொல் செயல் என்ற மூன்றும் ஒத்துப்போகாத எல்லோருடன் பழகும் போது, அவர்களை தன்னுடைய நிலைக்கு வரும்படி செய்யாமல், அவர்கள் நிலைக்கு தக்கவாறு, தன்னுடைய ஸ்வரூப, ரூப குணங்களை மாற்றி கொண்டு போகும் தன்மையை ஆர்ஜவம் என்கிறார். விண்ணோருக்கும் மண்ணில் வாழ்பவர்களுக்கும் பொதுவாக இருந்தாலும், நித்யஸூரிகள் பார்வையில் விண்ணோர் வெற்பனே என்கிறார். அவர்கள் திருவேங்கடவனை அதிகம் அனுபவிப்பதால், விண்ணோர் வெற்பு என்கிறார். திருமலையில் உள்ள விலங்குகள், தாவரங்கள், பறவைகள் என்று எல்லாவற்றையுமே நித்யஸூரிகளின் அம்சமாகவே நம் பெரியவர்கள் கருதுவர்.
2கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல், சுடர்க்கு ஒளி இராப்பகல் துஞ்சாயால் தண்வாடாய், அடல் கொள் படையாழி அம்மானைக் காண்பான் நீ, உடலம் நோயுற்றாயோ வூழிதோறூழியே. (2.1.4 )இந்த பாடலில் நேரடியாக திருவேங்கடம் என்று வரவில்லை; இருந்தாலும் நம் பெரியவர்கள், மலை என்பதை திருமலையாக அர்த்தம் கொண்டு இதனை திருவேங்கடமுடையானுக்கு என்று கொண்டு உள்ளனர். காற்றானது எங்கும் பரவிய தத்துவம், அது ஒரு நொடிப் பொழுதும் ஓரிடத்தில் நிலையாக இருக்காது; உடம்பிலே புழுதியை ஏற்றிக்கொண்டு வடிவு தெரியாதபடி எப்போதும் உலாவிக் கொண்டேயிருக்கும். அதுவும் தம்மைப்போலவே பகவத் விஷயத்தில் ஆசை வைத்து விருப்பம் நிறைவேறததால் இருந்தவிடத்தில் இருக்காமல் மடல் உருவாரைப் போலே சுரம் கொண்டு, குளிர்ந்த வாடையே!  நீயும் நான் பட்டது போல் பட்டாயோ என்கிறார். துழாய் என்றது துழாவி என்ற அர்த்தத்தில் வருகிறது. பகவத் விஷயத்தில் அகப்பட்டவர்கள், எம்பெருமானை, திருப்பாற்கடலில் சென்று தேடலாமா, திருமலையிற் சென்று நாடலாமா அல்லது பரமபதத்திற்கே போய்ப் பார்க்கலாமா என்று அங்கும் இங்கும் தேடுவது போல் தேடுவார்கள், காற்றையும் அப்படியே என்கிறார். கையும் திருவாழியுமான  ஸர்வேச்வரனை நீயும் காண ஆசைப்பட்டு இரவு பகல் கண்ணுறங்காதே அலைகிறாய் என்கிறார்.
3எந்தாய் தண் திரு வேங்கடத்துள் நின்றாய்! இலங்கை செற்றாய், மராமரம் பைந்தாள் ஏழு உருவ ஓரு வாளி கோத்த வில்லா! கொந்து ஆர் தண் தம் துழாயினாய் அமுதே ! உன்னை யென்னுள்ளே குழைத்த வெம் மைந்தா! வானேறே, இனி யெங்குப் போகின்றதே? (2.6.9) குளிர்ந்த திருவேங்கடத்தில் நின்று உள்ளவனே, என்னோடு ஒன்றாக கலந்தவனே இனி வேறு எங்கு போகப் போகிறாய்’ என்று ஆழ்வார் வினவுகிறார். முதலிலே அவனை அறியாது இருந்த தனக்கு, தன்னையும் தன்னுடைய சிறப்புகளையும் தெரியவித்து, அவனை பிரிந்தால் உயிர் தாங்கமுடியாத நிலையை விளைவித்த அவன், இனி தன்னை விட்டுப் பிரிந்து போவது தகுதியோ என்கிறார். அஹங்காரமே உருவான இராவணனை ஒழிந்தாற்போல் தன்னுடைய அஹங்கார மமகாரங்களை போக்கிய எம்பெருமான், வாலிவதத்திற்கு முன்னால் ஏழு மரங்களை ஒரு அம்பினால் துளை போட்டு சுக்ரீவனுக்கு விசுவாசத்தை உருவாக்கியதைப்போல் தனக்கும் மிகவும் கடினமான பலகாரியங்கள் செய்து விச்வாஸத்தை உண்டாக்கியவன் என்கிறார். திருத்தோள், திருமார்பு, திருமுடி மற்றும் திருத்தாள் மேலும் துழாய் மாலை அணிந்த எம்பெருமான், தன்னோடு ஒரு நீராகக் கலந்துவிட்டு, அகல்வது எப்படியோ என்று வினவுகிறார். இராமனுக்கு துளசி வளையம் உண்டோ என்று கேட்டுக்கொண்டு, அவதாரத்திற்கு ஏற்ப எந்த மலர் வளையம் இருந்தாலும் அது துளசி போன்றே ஆழ்வாருக்கு தோன்றுகிறது.
4போகின்ற காலங்கள் போய காலங்கள் போகு காலங்கள், தாய் தந்தையும் உயிர் ஆகின்றாய், உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ, பாகின்ற தொல் புகழ் மூவுலகுக்கும் நாதனே. பரமா, தண் வேங்கட மேகின்றாய் தண்டுழாய் விரை நாறு கண்ணியனே. (2.6.10)எம்பெருமான் தான் ஆழ்வாரை விட்டு போவது ஒரு புறம் இருக்கட்டும், ஆழ்வார் தன்னை விட்டு அகன்று விடுவாரோ என்று கவலை கொண்டவராக, அதற்கு ஆழ்வார் தான் எங்கும் போகப் போவதில்லை என்பதை முக்காலத்திலும் எல்லா வகையிலும் தனக்கு உபகாரம் செய்தருளின எம்பெருமானை விட்டு, இனி அகன்று போவதற்கு எந்த காரணமும் இருக்க முடியாது என்று உறுதியாகக் கூறி முடிக்கின்றார். இறந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் எம்பெருமான் செய்யும் நன்மையைத் தெரிந்துகொண்டு பேச முடியும், எதிர்காலத்தில் இனி அவன் செய்யப் போகிற நன்மையை இவர் எப்படி தெரிந்நு கொண்டார் என்று கேட்டுக்கொண்டு, எந்தக் காலத்திலும் எம்பெருமானைத் தவிர வேறு எவரும் ரக்ஷகனல்லன் என்கிற உண்மையைக் கொண்டு கூறுவதில் குறையொன்றும் இல்லை என்றும், இறந்தகாலமும் நிகழ் காலமும், ஒருகாலத்திலே எதிர்காலமாக இருந்தவைதானே; அதனாலும் சொல்லலாம் என்றும் கூடி முடிக்கிறார். இப்படி அனைவரைக் காட்டிலும் உயர்ந்தவனாக இருந்த போதும், தன்னை ஆட்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக அனைவரது களைப்பை போக்கும் திருமலையில் எழுந்தருளி உள்ளவனை விட்டு விடுவேனா என்று கூறுகிறார்.
5பற்பநாபன் உயர்வற உயரும் பெருந்திறலோன், எற்பரன் என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னை தந்த கற்பகம், என்னமுதம் கார் முகில் போலும் வேங்கட நல் வெற்பன், விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே. (2.7.11)மிகவும் எளியனாய், தன்னை அடிமை கொண்ட எம்பெருமான், என்னைத் தவிர வேறொன்றையும் அறியாதபடி ஆனான் என்கிறார். எல்லா உலகங்களுக்கும் உற்பத்திக்குக் காரணமான திருநாபிக் கமலத்தை உடையவனும், பேச ஆரம்பித்தால், அளவிட்டுப் பேசமுடியாதபடி செளர்யம் வீர்யம் முதலிய பல திருக்குணங்களை உடையவனும், இவ்வளவு மேன்மை இருக்க, தன்னிடத்தில் மிகவும் ஆசை உடையவனும், தனக்கே அவனை முழுவதுமாக கொடுத்தவனும், தனக்கு ஒரு கற்பகமரம் போல, யாசகனாகிய ஆழ்வாருக்கு அருளியதால் கற்பக மரத்தைக் காட்டிலும் சிறப்புப் பெற்றவனாய், தனக்குப் பரமபோக்யனாய், கொடுத்தோம் என்பதே நினைக்காமல் கொடுக்கும் மேகத்தின் கொடைத்தன்மை போல் கொடைத்தன்மையுடன் திருவேங்கட மலையில் வாழ்பவனாய், நித்யஸூரிகளுக்குத் தலைவனாயிருந்து இடையர்க்கும் இடைச்சிக்கும் கட்டவும், அடிக்கவும்படி, எளியவனாக அவதரித்து, அந்த செயலால் தன்னை ஆட்படுத்திக்கொண்டான் என்கிறார். கற்பக மரம் எல்லாவற்றையும் தரும், ஆனால், தன்னை தராது, எம்பெருமான் தன்னையும் தந்து அதைவிடவும் உயர்வாக நின்றவன் என்கிறார். பற்பநாபன், உயர்வின் உயர்ந்த எல்லை, தாமோதரன் எளிமையின் கீழ் எல்லை.
6தலைப்பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால், அலைப்பூண் உண்ணும் அவ் அல்லல் எல்லாம் அகல, கலைப்பல் ஞானத்தென் கண்ணனைக் கண்டு கொண்டு, நிலைப் பெற்று என் நெஞ்சம் பெற்றது நீடுயிரே. 3.2.10 இந்த பாசுரத்தில் திருவேங்கடம் என்ற சொல் எங்கும் வரவில்லை. ஆனால் நம் பெரியவர்கள், இந்த பாசுரமுமும் திருவேங்கடமுடையானுக்கு என்று சொல்வார்கள், ஏனென்றால், அடுத்த பதிகம், துவய மந்திரத்தின் இறுதிப் பகுதியாகிய “ஸ்ரீமதே நாராயணாய நமஹ ” என்பதின் அர்த்தத்தை சொல்லும் மிகவும் முக்கியமான பகுதியாகும். என் கண்ணனைக் கண்டு என்பதற்கான விளக்கத்தில், எம்பெருமான், அவதாரங்களுக்கு பிற்பட்டவர்கள் பலன் பெறும்படி, தான் கண்ணனாக வடக்குத் திருமலையில் நிற்கும் காட்சியை ஆழ்வாருக்கு காட்டியதாக சொல்வர். ஆழ்வாரின் 1.8.3 பாடலிலும், கண்ணனே திருவேங்கடத்தில், விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் உள்ளான் என்று கூறியதை, நினைவில் கொள்ளலாம். ஆழ்வார் இந்த உயிர் இவுலகை விட்டு நீங்கும் போது , எமகிங்கரர்கள் வந்து பாசக்கயிற்றை வீசும் போது, அப்போது உண்டாகும் துயரம் பொறுக்க முடியாதபடி இருக்கும் என்றும் அந்தத் துயரம் தனக்கு நேராதபடி எம்பெருமான் காட்சி தந்து அருளியதால் தன் மனம் எம்பெருமானிடத்தின் மேல் உள்ள அடிமைத்தனத்தில் நிலைபெற்றது என்பது இந்த பாடலின் ஒரு அர்த்தம்.

துவய மந்திரத்தின் இறுதிப் பகுதி 3.3.1 முதல் 3.3.11 வரை உள்ள 11 பாசுரங்கள் இந்த பதிவினில் கொடுக்கப்பட்டுள்ளது.

எண் பாடல் விளக்கம்
7வார்ப்புனல் அம் தண் அருவி வட திரு வேங்கடத்து எந்தை, பேர்ப் பல சொல்லிப் பிதற்றிப் பித்தர் என்றே பிறர் கூற, ஊர்ப்பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்க நின்றாடி, ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப் படுவாரே.(3.5.8)ஒழுகுகின்ற தண்ணீரையுடைய அழகிய குளிர்ந்த அருவிகள் நிறைந்த வடதிருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற எந்தையினுடைய பல திருப்பெயர்களைச் சொல்லிப் பிதற்றிப் பித்தர் என்று பிறர் கூறும்படி பல ஊர்களிலே புகுந்தும் புகாமலும் உலக மக்கள் சிரிக்கும்படியாக நின்று ஆடி அன்பு பெருகி நடனம் செய்கின்றவர்கள் தேவர்களாலே தொழப்படுவார்கள்,’ என்கிறார். ‘திருவேங்கடமுடையானுடைய நீர்மைக்கு ஈடுபடுவாரைக் கொண்டாடுகைக்கு நாம் யார், நித்தியசூரிகள் அன்றோ அவர்களைக் கொண்டாடுவார்கள்’ என்கிறார். மனிதர்கள் உள்ள இடத்தோடு யாருமே இல்லாத இடங்களுடன் எங்கும் சென்று இவனை அறியாத மக்கள் இவன் என்ன செய்கிறான் என்று சிரிக்க அதேயே தாளமாகக் கொண்டு ஆடி பாடும் அடியார்களை நித்யஸூரிகள் கொண்டாடுவார்கள் என்கிறார்.
8சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ, என் நாவில் இன் கவி யான் ஒருவருக்கும் கொடுக்கிலேன்,
தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து, என் ஆனை என்னப்பன் எம்பெருமான் உளனாகவே.
(3.9.1)
“நான் இந்த நலத்தைச் சொன்னால் உங்களுக்கு விரோதமாகவே இருக்கும்; ஆயினும் சொல்வேன், கேளுங்கள்: வண்டுகள் தென்னா தென்னா என்று ஒலிக்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற என் யானையும் என் அப்பனும் ஆக எம்பெருமான் இருக்க, என் நாவினின்றும் வருகின்ற இனிய கவிகளை யான் ஒருவர்க்கும் கொடேன்” என்கிறார். மனிதர்களைக் கவி பாட வேண்டாம் என்றும், அடையத் தக்கவனான பகவானைத் துதி செய்யுங்கள் என்று தான் கூறுவது மக்களின் கருத்துக்கு விரோதமாக இருக்கும், என்பது ஒரு விளக்கம். ‘காலையிலும் நடுப்பகலிலும் மாலையிலும் தேவா என்றும், கோவிந்தா என்றும் சொல்லுகின்றவர்கட்கு ஏதேனும் குறை உண்டோ, இருந்தால் சொல்லப்படட்டும் என்ற விஷ்ணுபுராண வார்த்தைகளைச்a சொல்லி எம்பெருமான் திருநாமங்களை சொன்னதனால் இடி விழும் என்று யாராவது கேட்டுஇருக்கிறீர்களா என்று ஸ்ரீ பிரஹலாதன் சொன்னதை இங்கு நினைவு கூறலாம்.  சேவிக்கத் தகாதாரைச் சேவித்தல் விலக்கத்தக்கது என்ற கருத்தில், தன் வாயால் இதனை சொன்னால் தனக்கு விரோதம் என்று சொல்கிறார். இவர் கவியை ஈசுவரன் கேட்டு மகிழ்ந்தவனாய் இனியனாக இருக்க ஆழ்வார் தன்னை இன்கவி என்று பாடிக் கொள்கிறார். அர்ச்சாவதாரத்திற்கு உரிய குணங்களான சௌலப்யம் முதலானவை ‘எப்பொழுதும் காட்சிக்கு இனியனாய் எப்பொழுதும் துதிக்கலாம்படி இருப்பவன்’ என்பது, ஆனை என்பதற்கு பொருள் கொள்ளலாம். திருவேங்கடத்து என் ஆனை என்பதற்கு வேதத்தைக் காட்டிலும் ஸ்ரீராமாயணத்துக்கு உண்டான ஏற்றம் போலே, ஸ்ரீ வால்மீகி பகவான் கவி பாடின விஷயத்தைக் காட்டிலும் தாம் கவி பாடின விஷயத்திற்கு எப்பொழுதும் துதிக்கலாம்படி இருப்பவன் என்பதால் ஏற்றம் என்று சொல்லுகிறார். இவர் கவி பாடிக் கட்டின யானை எம்பெருமான் ஆயிற்று என்கிறார். கவி பாடினவர்கட்குத் தன்னை ஒழிய வேறு ஒரு யானையைக் கொடுத்து விடுபவர் அவன் இல்லை. ஆதலால்,  ஆழ்வார் என் ஆனை என்கிறார். அவன் வந்து நிற்க நான் வேறு ஒருவரைக் கவி பாடுவேனோ என்பதனை என்னப்பன் என்பதன் மூலம் தெரிவிக்கிறார். வேதங்களை காட்டிலும், ராமாயணத்திற்கு ஏற்றம் ஏனெனில், வேதங்களை எம்பெருமான் நேரடியாக கேட்டதில்லை; லவகுசர் பாட , இராமாயணம் கேட்டு உள்ளார்; ஆனால் அங்கு அவருடன் தேவியர் இல்லை, ஆனால் நம்மாழ்வார் திவ்யப்ரபந்தம் பாடியபொழுது எம்பெருமான் தேவியருடன் சேர்ந்து கேட்க விருப்பம் தெரிவித்துள்ளார் (இன்பம் பயக்க, 7.10.1), அதனால் திவ்யப்ரபந்தம் இராமாயணத்தை விட உயர்ந்ததாக நம் பெரியவர் கூறுவர்.
9மாரி மாறாத தண் அம்மலை வேங்கடத் தண்ணலை, வாரி வாறாத பைம்பூம் பொழில் சூழ் குருகூர் நகர், காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப்பத்தால்,
வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே.(4.5.11)
இந்த பதிகம் கற்பாருடைய தீ வினைகளை எல்லாம் பெரிய பிராட்டியார் தீர்த்தருளக் கூடும் என்று பயன் உரைத்து முடிக்கிறார். மழை ஒருநாளும் மாறாதபடியாலே குளிர்ந்து அழகிய திருவேங்கடமலையிலே, தாழ்ந்தார்க்கு முகம் கொடுப்பதற்காக வந்து நிற்கிற சீலம் பொருந்திய எம்பெருமான் விஷயமாகப் பேசியது இந்த பதிகம். இந்த பதிகத்தில் வேறு எங்கும் திருவேங்கடமுடையான் பற்றி குறிப்பிடாமல் இங்கு இவ்வாறு சொல்வதற்கு காரணம், “நமக்கும் பூவின்மிசை நங்கைக்கு மின்பனை” (4.5.8) என்று பெரிய பிராட்டியார்க்கு முன்பே நித்ய ஸம்ஸாரிகளுக்கு முகங்கொடுக்கும் சீலத்தைச் சொல்லி இருக்கையாலே சீலத்துக்கு எல்லையான திருவேங்கடமுடையானைக் கவிபாடினது என்பர். “வேரிமாறாத பூமேலிருப்பாள் வினைதீர்க்கும்” என்பதால், பிராட்டிக்கும் எம்பெருமானுக்குப் போலவே பலனளிக்கும் திறன் உண்டு என்று சிலர் சொல்லுவார்கள். நம்மை எம்பெருமான் அங்கீகரிப்பதற்கு இடையூறாக இருக்கும் தீவினைகளைப் புருஷகார க்ருத்யத்தாலே பிராட்டி போக்குவாள் என்று இதனை சதுச் ச்லோகீ பாஷ்யத்திலே ஸ்ரீமந் நிகமாந்த தேசிகன் சொல்வார்.
10நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன
ஒன்றலா வுருவாய் அருவாய நின் மாயங்கள், நின்று நின்று நினைக்கின்றேன் உன்னை எங்ஙனம் நினைகிற்பன், பாவியேற்கு ஒன்று நன் குரையாய் உலகமுண்ட ஒண்சுடரே. 5.10.6
இந்த பாசுரத்தில் திருவேங்கடம் என்ற சொல் எங்கும் வரவில்லை. ஆனால் நம் பெரியவர்கள், இந்த பாசுரமுமும் திருவேங்கடமுடையானுக்கு என்று சொல்வார்கள், ஏனென்றால், பெரியவாச்சான்பிள்ளை மற்றும் நம்பிள்ளை வியாக்யானங்களில் நின்றாவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும் என்பதற்கு இராம, கிருஷ்ண அவதாரங்களில் இருந்து மேற்கோள் காட்டி, பின்னர், தொண்டைநாட்டு பாண்டியநாட்டு அர்ச்சாவதாரங்களில் மேற்கோள்காட்டி, திருவரங்கத்தில் எம்பெருமானிடத்திலும் மேற்கோள் காட்டி , இறுதியாக, ஆழ்வார் திருவுள்ளக் கருத்தாக நின்றது, திருவேங்கடம் என்றும், இருந்தது பரமபதம் என்றும், கிடந்தது திருப்பாற்கடல் என்றும் நிறைவு செய்கின்றனர்.
11கட்டெழில் சோலை நல் வேங்கடவாணனை, கட்டெழில் தென்குரு கூர்ச் சடகோபன் சொல்,
கட்டெழில் ஆயிரத்தி(ல்) இப்பத்தும் வல்லவர்,
கட்டெழில் வானவர் போகமுண் பாரே. 6.6.11
இந்த பதிகம் முழுவதுமே திருவேங்கடமுடையானுக்கு என்று சொல்பவர்கள் உண்டு. இருந்தாலும், நம் பெரியவர்களின் உரைகளிலும், பாடலிலும் திருவேங்கடம் என்ற சொல் அடியேன் பார்த்த வரையில் எங்கும் வரவில்லை. ஆகவே இந்த பாடலை மட்டும், வேங்கடவாணன் என்று இருப்பதால் இங்கு எடுத்து கொள்வோம். இந்த பதிகம் முழுவதும் திருவேங்கடவன் பற்றி எதுவும் சொல்லாமல் பலஸ்ருதி சொல்லும் இந்த பாட்டில் மட்டும் ஏன் திருவேங்கடம் என்று உரையாசிரியர் கேட்டுக்கொண்டு, முன்னே சொன்ன ‘சொன்னால் விரோதம் இது ‘ என்று 3.9.1ல் என் நாவின் இன் கவி வேறு யாருக்கும் இல்லை, திருவேங்கடவனுக்கே என்று சொன்னதால் ஆழ்வார் எங்கு வேண்டுமானுலும் அவரை அழைக்கலாம் என்று பதிலும் சொல்லியுள்ளார்கள். மிகவும் அழகாக விளங்குகிற சோலைகளை உடைய திருவேங்கடத்தில் நித்ய வாசம் செய்கின்ற எம்பெருமான் விஷயமாக ஆழ்வார் அருளி செய்த இந்த பத்து பாடல்களையும் ஓத வல்லவர்கள் நித்யஸூரிகள் அனுபவிக்கும் போகத்தை பெறுவார் என்று ஆழ்வார் சொல்கிறார்.
12விண் மீதிருப்பாய் மலை மேல் நிற்பாய். கடல் சேர்ப்பாய்! மண் மீது உழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்! எண் மீதியன்ற புறவண்டத்தாய் என தாவி, உண்மீதாடி உருக் காட்டாதே ஓயொளிப்பாயோ? 6.9.5 இந்த பாசுரத்தில் திருவேங்கடம் என்ற சொல் எங்கும் வரவில்லை. ஆனால் நம் பெரியவர்கள், இந்த பாசுரமுமும் திருவேங்கடமுடையானுக்கு என்று சொல்வார்கள், ஏனென்றால், வியாக்யானங்களில் மலை மேல் நிற்பாய் என்பதற்கு திருமலை அர்ச்சாவதாரத்திற்காக குறிப்பிடுவார்கள். நித்யஸூரிகளும், நித்ய சம்சாரிகளும் ஒரே துறையில் நீர் குடிப்பதுபோல், உண்ண செய்கின்ற வேங்கடத்தாடு கூத்தன் என்ற திருவேங்கடம் மலைமேல் நிற்பாய் என்பதற்கு ஆயிற்று. சதா சர்வ காலமும் தரிசனம் பெரும் பாக்கியம் பெற்ற நித்யஸூரிகளுக்காக காட்சி கொடுக்கும் பரமபதத்தை விண்மீது இருப்பாய் என்கிறார். கடல் சேர்ப்பாய் என்பது ப்ரம்ம ருத்ராதிபதிகளுக்கு காட்சி கொடுக்க திருப்பாற்கடலில் இருக்கும் நிலையை சொல்வது. மண்மீது உழல்வாய் என்றது இராம கிருஷ்ணா அவதாதாரங்களாக இந்த பூமியில் அவதரித்து நடையாக நடந்ததை சொல்வது. இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் என்றது அந்தர்யாமியாய் இருக்கும் நிலையை சொல்லி இந்த பாசுரத்தில் எம்பெருமானின் ஐந்து நிலைகளையும் ஆழ்வார் கூறுகிறார்.

துவய மந்திரத்தின் முதல் பகுதி 6.10.1 முதல் 6.10.11 வரை உள்ள 11 பாசுரங்கள் இந்த பதிவினில் கொடுக்கப்பட்டுள்ளது.

எண்பாடல்விளக்கம்
13நங்கள் வரிவளை ஆயாங்களோ ! நம்முடை ஏதலர் முன்பு நாணி, நுங்கட்கு யான் ஒன்று உரைக்கும் மாற்றம் நோக்குகின்றேன் எங்கும் காண மாட்டேன், சங்கம் சரிந்தன சாயி ழந்தேன் தடமுலை பொன்னிற மாய்த் தளர்ந்தேன், வெங்கண் பறவையின் பாக ன் என் கோன் வேங்கட வாணணை வேண்டிச் சென்றே. 8.2.1“அழகிய வளை அணிந்த நம்முடைய தோழிகளே! நம்மிடத்துப் பகை பாராட்டுகின்ற தாய்மாரின் முன்பு சொல்ல வெட்கப்பட்டு, உயிர்த் தோழிகளான உங்களுக்கு மட்டும் செவியில் படும்படி ஒரு வார்த்தை, சொல்கிறேன். ஆனாலும், என்னுடைய நிலைமையை நான் ஒரு விதத்திலும் சொல்லும் வழி அறியேன். வெம்மையான பார்வையை உடைய பெரிய திருவடியை  (கருடாழ்வானை) நடத்துபவனான, திருவேங்கடம் உடையானைக் காண ஆசைப்பட்டுப் புறப்பட நினைத்தது ஒன்றே காரணமாக என் கைவளைகள் தானே கழன்றன, அதாவது நான் இளைத்தேன், மேனி ஓளியை இழந்தேன், தடமுலைகள் வெளுத்துப்போய் உடலும் தளர்ந்தவள் ஆனேன்” என்பது பாடலின் பதவுரை.
கருடன், விரோதிகள் மேல் வெம்மையான பார்வையை செலுத்தி, அவர்களை முடித்து, எம்பெருமானை இங்கே கொண்டு வர வல்லவன் என்று சொல்லி, கருடனை நண்பன் என்பதுபோல் ஒரு பொருள்; எம்பெருமானை இங்கிருந்து அழைத்துக்கொண்டு செல்வதை காரணம் காட்டி, கருடனை வெவ்விய பார்வையை உடையவன் என்று நண்பன் அல்லன் என்பது போல் ஒரு பொருளும் கூறுவர்.
ஒரு காலத்தில், தலைவியும் தோழிகளும் வளைகள் அணிந்து, இன்ப துன்பங்களில் ஒன்றாக இருந்தார்கள்; ஆனால் தலைவி, இன்று தலைவனை பிரிந்து, துன்பமுடன் இருக்கிறார் என்பதை சொல்வதற்காக நங்கள் வரிவளை என்று சொன்னது. இராமன், பிராட்டியை பிரிந்த காலத்தில், இளையபெருமாள் தளர்ந்தது, இராமபிரான் தளர்ந்ததை விட அதிகமாக இருந்தாலும், பிராட்டியின் பிரிவு, தன்னுடைய காவற் சோர்வால் ஏற்பட்டது என்று அவன் நினைத்ததால், தன்னுடைய தளர்ச்சி இரட்டிப்பாக ஆனாலும், இளையபெருமாள், இராமபிரான் மேலும் வருந்துவாரே, என்று அதை காட்டிக் கொள்ளாமல் இருந்ததை போல், தலைவனைப் பிரிந்து தலைவி கவலையுற்று இளைத்து உடல் தளர்ந்தாலும், தோழி, தலைவி வருத்தப்படக்கூடாதே என்பதற்காக, தோழி வளைகள் அணிந்து தான் சாதாரணமாக இருப்பது போல் காட்சி அளித்ததாக ஒரு விளக்கம் கூறுவர்.
எங்கும் காண மாட்டேன், என்று சொன்னது இந்த உலகமே அழிந்தது போல் சொல்லப்பட்டது ஏன் என்றால், தலைவியை பிரிந்தால் நாயகன் தாங்க மாட்டான், அவன் இலன், நாயகன் இல்லாதபோது, இந்த உலகம் இல்லை. அதாவது, தலைவியின் வளைகள் நழுவி விழும் போது, தலைவனுடன் சேர்த்தி இல்லை என்றால், தலைவன் உளன் ஆக மாட்டான்; உலகே அழியும் என்பதாம்.
சாய் இழந்தேன், தடமுலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன், என்று சொன்னது, தலைவனுடன் சேர்த்தி இல்லாது போனால், அவன் வரவுக்கு தன்னிடம் இருந்த கைமுதலான மேனி ஒளியை இழந்தேன் என்று சொல்ல தொடங்கி, தடமுலை பொன்நிறமாக வெளுத்து போவது, நல்ல விளைநிலம், மணல்மேடாக போவது போல், அவன் திரும்பி வந்தாலும் தன்னிடம் ஒன்றும் கைமுதல் ஒன்றும் இல்லாதவள் ஆகிவிட்டேன் என்றும், அப்படியே அந்த மேனியொளி திரும்பிவந்தாலும், அதனை ஏற்றுக்கொள்ள, உடலில் வலிமை இல்லை என்பதை தளர்ந்தேன் என்பதாலும் சொல்லி உள்ளது ஆச்சர்ய பட வைக்கிறது.
பரமபதத்தில் இருப்பவனை காண ஆசைப்படவில்லை, நமக்கு காட்சி கொடுப்பதற்காக, வந்து நின்ற இடத்தே (திருவேங்கடத்தே), நம்மை வேண்டி வந்த வேங்கட வாணணை, நாம் வேண்டி சென்று, அவன் இங்கு வரவேண்டும் என்று எண்ணாமல், தான் அவன் இருக்கும் தேசத்திற்கு சென்று விட வேண்டும் என்று தலைவி ஆசைகொண்டதை சொல்கிறார்.
14 இடையில்லை யான் வளர்த்த கிளிகாள். பூவைகள் காள்.குயில் காள்! மயில்காள், உடைய நம் மாமையும் சங்கும் நெஞ்சும் ஒன்றும் ஒழிய வொட்டாது கொண்டான், அடையும் வைகுந்தமும் பாற்கடலும் அஞ்சன வெற்பும் அவை நணிய, கடையறப் பாசங்கள் விட்ட பின்னை அன்றி அவன் அவை காண் கொடானே. 8.2.8 இதில் நேரடியாக திருவேங்கடம் என்று வரவில்லை; இருந்தாலும், நம் ஆச்சார்யர்கள் அஞ்சன வெற்பும் என்பது திருவேங்கடமே என்று பொருள் கூறுவதால் இந்த பாடலும் திருவேங்கடவனுக்கே என்று கொள்ளப்படுகிறது.
“நான் வளர்த்து வந்த கிளிகளே, பூவைகளே, குயில்களே, மயில்களே, இனி உங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை, நம்முடைய நிறத்தையும், வளையையும், நெஞ்சத்தினையும், ஒன்று விடாமல், கொள்ளை கொண்டவன், இங்கிருந்து, சென்ற பரமபதம், திருப்பாற்கடல், திருவேங்கடம், ஆகிய திருத்தலங்கள், அண்மையில் தான் இருக்கின்றன, எளிமையானவையே, ஆனால் பாசங்கள் நீங்காவிட்டால், பற்றுகளை விடாவிடில், அவன் அவற்றை காண கண் கோடான் அல்லது, அங்கு சென்று அடைய விடமாட்டான்” என்பது பாடலின் பொழிப்புரை.
இந்த பதிகத்திற்கு இதுவே உயிர் பாட்டு என்று சொல்வர். பற்றுக்கள் சிறிதும் இல்லாமையை தெரிவிப்பதே இங்கு முக்கியக் கருத்து. இதற்கு முன்பாட்டில், தோழிகளுடன் சம்பந்தம் இல்லை என்று உறவு அறுத்தமை சொன்னார். இந்த பாட்டில், ஆழ்வார் வளர்த்த கிளிகள், பூவைகள், மயில்கள், குயில்கள் இவற்றுடன் சம்பந்தம் இல்லை என்று உறவு அறுத்தமை சொல்கிறார். தோழிகளை உறவு அறுத்த பின்னும் அவனை காண கிடைக்காததால், இவைகளை உறவு அறுத்து அவனை நோக்கி செல்கிறார். கிளிகள் முதலியவைகளை பன்மையில் சொல்லி, கூட்டம் கூட்டமாக உள்ள அவைகளிலும் தனக்கு ஆசை இல்லை என்கிறார்.
ஒன்றும் ஒழிய வொட்டாது கொண்டான், என்று சொன்னது, புறப்பொருட்களோடு அகப்பொருள்களையும் எடுத்துக்கொண்டு, நம்மிடம் ஒன்றும் இல்லாமல், கைக்கொண்டான் என்பதே ஆகும்.
அடையும் வைகுந்தமும் என்று சொன்னது, இப்படி கைக்கொண்ட பொருட்களை எல்லாம், எட்டாத தூரத்தில் உள்ள பரமபதத்திற்கு எடுத்து சென்று, அங்கே வெற்றியை கொண்டாடி கொண்டு இருக்கிறான் என்பதற்காக ஆகும்.
பாற்கடலும் அஞ்சன வெற்பும் என்று திருபாற்கடலையும், திருவேங்கடத்தையும் பரமபதத்துடன் சேர்த்து சொல்வது குறிப்பிடத்தக்கது.
அவை நணிய என்று சொன்னது, மேற்படி திருத்தலங்கள், அண்மையில் தான் இருக்கின்றன, எளிமையானவையே, என்று சொன்னாலும், அவன் அவனைத்தவிர வேறு எதில் பாசம் வைத்து இருந்தாலும், அவன் அந்த அனுபவத்தை காட்டி கொடுக்க மாட்டான் என்பதை தெரிவிக்கவே ஆகும்.
15இன்றிப்போக இருவினையுங்கெடுத்து
ஒன்றியாக்கைபுகாமை உய்யக் கொள்வான், நின்ற வேங்கடம் நீணிலத்துள்ளது, சென்று தேவர்கள் கைதொழுவார்களே (9.3.8)
பாவம் புண்ணியம் என்ற இரண்டு கர்மங்களையும் தொலைத்து, சரீரம் என்று ஒன்று இல்லாமல் உஜ்ஜீவனம் செய்கின்ற எம்பெருமான், அடியார்களை எதிர்பார்த்து நிற்கின்ற திருவேங்கடமலை, பரந்த இந்த உலகத்தில் உள்ளதேயாகும். அங்கு சென்று கைதொழுபவர்கள் மனிதர்கள் இல்லை, தேவர்களே என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
வைகுந்தம் காண்பதற்கு எண்ணம் கொண்ட ஆழ்வாரை நோக்கி எம்பெருமான், “ஆழ்வீர் !  சரீர ஸம்பந்தம் போன பின்பு அநுபவிக்கும் பரமபதத்தையா விரும்புகிறீர்;  இந்த சரீரத்தோடு அனுபவிக்கவல்ல திருவேங்கடம் இந்த உலகத்தில் உள்ளதே, அதை விட்டு வைகுந்தம் காண்பதற்கு ஆசைப்படுவதில் என்ன விசேஷம்?” என்று வினவ, அதற்கு ஆழ்வார், “திருவேங்கடமலை இந்நிலத்தேயுள்ளது தான், காலாழும், நெஞ்சழியும், கண்சுழலும் என்ற நிலையில் இருக்கிற நான் திருமலையில் சென்று அநுபவிக்க பாக்கியம் இல்லாதவன், தேவர்களே அன்றோ அங்கு சென்று தொழுவார்கள் ;  ஆகவே திருமலை, பரமபதம் இரண்டும் தனக்கு இல்லை” என்கிறார்.
இருவினையுங்கெடுத்து என்று சொன்னதால், பாவம், புண்ணியம் இரண்டையும் அனுபவித்த முடித்த பிறகே மோக்ஷ அனுபவம் என்பதால், அதை தர வல்ல அதிகாரியின் சிறப்பினை கூறுகிறார்.
சென்று தேவர்கள் கைதொழுவார்களே அங்குச் சென்று கை தொழுபவர்கள் மனிதர்களாக இருக்க முடியாதே;  தேவர்களாக அன்றோ இருக்க வேண்டும் என்று வரும்படி, சென்று கைதொழுவார் தேவர்கள் என்று வார்த்தைகளை மாற்றி பொருள் கொள்ளலாம்.
‘உய்யக் கொள்வான்’ என்று சொன்னது, உய்யக் கொள்கைக்காக என்றும் பொருள் கொள்ளலாம்.
16தலை மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின் இலை மேல் துயின்றான் இமையோர் வணங்க, மலை மேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை நிலை பேர்க்கலாகாமை நிச்சித்து இருந்தேனே (10.4.4)“அவன் திருவடிகளை என் தலை மேல் அணிந்து கொண்டேன்; ஆலிலையில் கண் வளர்ந்தவனும், நித்யஸூரிகள் வணங்கும்படி திருமலையில் எழுந்தருளி நின்று, தக்க தருணம் பார்த்து, என் நெஞ்சின் உள்ளே புகுந்து இருபவனான எம்பெருமான் தான் இந்த நிலையில் இருந்து மாறாமல் இருப்பதில் உறுதியாக இருக்கின்றான், தானும் அதில் உறுதியாக இருக்கின்றேன்” என்று ஆழ்வார் சொல்வதாக பாசுரம். இந்த பாசுரத்தில் நேரடியாக திருவேங்கடம் என்ற சொல் கிடையாது, நம் பெரியோர்கள், உரையாசிரியர்கள் இங்கே மலைமேல் தான் நின்று என்பதை திருவேங்கடம் என்று சொல்கிறார்கள்; இதனால் இன்றும், மலைக்கு செல்கிறேன் என்றால், அது திருவேங்கடத்தையே குறிக்கும்.
ஆலின் இலை மேல் துயின்றான் என்றது, தன்னை கொண்டு காரியம் செய்து கொள்ள நினைக்கும், சிலரை கண்டு கொள்ளாமல், எல்லோரும் ஆச்சர்யம் கொள்ளும்படி ஆலின் இலையின் மேல் இருந்ததை சொல்கிறார் போலும்.
வேண்டாம் என்பவர்களை காண்பதில்லை . நித்யஸூரிகளும் தானுமாக வந்து திருமலையிலே நின்றான்;
ஆழ்வாருடைய இதயத்தில் வந்து புகுந்தான்; இங்கு விலக்குவார் இல்லாமையாலே இங்கேயே நிலையாக இருந்தான். பெரியாழ்வார் திருமொழியில் சொன்னது போல் (5.4.9) “பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து” இவருடைய மனக்கடலிலே வாழ புகுந்தான். ‘
ஸ்ரீவசனபூக்ஷணம் என்ற நூலில், (171) “ அங்குத்தை வாஸம் ஸாதனம்; இங்குத்தை வாஸம் ஸாத்யம்” என்று சொன்னதற்கு மூலகாரணம் இந்த பாசுரம் என்று சொல்லப்படுகிறது.  அங்குத்தை என்று சொன்னது, திவ்யதேசங்களை, இங்குத்தை என்று சொன்னது, ஆழ்வாரின் திருவுள்ளத்தில் இருப்பதை சொல்வது. அதாவது எம்பெருமான், திவ்யதேசங்களில் வாசம் செய்வது, தக்க சமயத்தில், உபாயங்கள் செய்து, ஆழ்வார் போன்ற ஞானிகளின் உள்ளத்தில் புகுவதற்க்காகவே என்ற அர்த்தத்தில் மேற்படி வசனம் சொல்லப்பட்டது. இங்கே புகுந்தபின், அங்கே உள்ள ஆதரவு குறைந்து விடும் என்று சொல்வதற்கு, “கல்லும் கனைகடலும் …. புல்லென்று ஒழிந்தன” என்று பெரிய திருவந்தாதியில், (7.8) சொன்னதை நினைவில் கொள்ளலாம். இளங்கோயில் கைவிடேல் (இரண்டாம் திருவந்தாதி, 54) என்று இவன் பிரார்த்திக்க வேண்டி இருக்கும். ஆழ்வார் போன்ற ஞானிகளிடத்தில் வாசம் செய்வதே எம்பெருமானுக்கு பரம பிரயோஜனம் என்பதால், அவர்கள் கிடைத்து விட்டால், திவ்யதேசங்களுக்கு ஆதரவு குறைந்து விடுமோ எனில், இல்லை. ஏன் என்றால், அவை எம்பெருமான் உகந்து அருளின நிலங்கள், ஆழ்வார் போன்றவர்களின் பெரிய அபிமானம், அதிக உகப்பு கொண்ட ஸ்தலங்கள், அங்கே நித்யவாஸம் செய்ததால் தான் ஆழ்வார் போன்ற ஞானிகளின் உள்ளங்களில் புக முடிந்தது என்ற நன்றி உணர்ச்சியாலும், திவ்யதேசங்களுக்கு என்றும் எம்பெருமானிடம் ஆதரவு குறைவதில்லை என்று சொல்வார்கள். இவ்வளவு விருப்பத்தோடு வந்து சேர்ந்து, பேராப் பேறு பெற்றவனாக நினைத்துக்கொண்டு இருக்கும் எம்பெருமான், ஆழ்வாரின் திருவுள்ளத்தில் இருந்து நிலை பெயரமாட்டான் என்பது நிச்சயம். ஆழ்வாரின் நெஞ்சமும் அதற்கு ஒத்து இருப்பதால், அவரும் இதில் உறுதியாகவே இருக்கின்றார் என்று இதனை பாடலை நிறைவு செய்கிறார்.
17மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன், பேயார் முலையுண்ட வாயான் மாதவனே. (10.5.6)காயாம் பூப்போன்ற திருமேனி நிறத்தை உடையனாய் மாதவன் பூதனையின் முலையைச் சுவைத்துண்டு, அவளை முடித்தவனானன் திருவேங்கட மலையில் உள்ளான் என்பது இதன் பொழிப்புரை.
சென்ற பாட்டில்,(10.5.5), நாடீர் என்று சொன்னதற்கு எந்த இடம் என்பதை இந்த பாடலில் காண்பிக்கின்றார்.
எம்பெருமானுக்கு ரூபமில்லையென்றும், அவன் சாதாரண ஊன கண்களுக்குப் புலப்பட மாட்டான் என்றும் சாஸ்திரங்களில் சில இடங்களில் சொல்லி இருப்பதுண்டு; அதே போல், அவன் தன்னுடைய ஸங்கல்பத்தினால் பல திருஉருவங்களை உடையவன் என்றும் சொல்லி இருப்பது உண்டு.  இவற்றால், அவனுக்கு கர்மங்களால் உண்டான தேகம் இல்லாதவன் என்றும், திவ்ய மங்கள விக்ரஹங்களை உடையவன் என்றும், அவை, அவன் உகந்து அருளின திருமலை போன்ற திவ்யதேசங்களில் அடியார்களுக்கு காட்சி கொடுத்து கொண்டு இருக்கும் வடிவில் இருக்கிறான் என்றும் விளங்கும். ராம, கிருஷ்ண திருஅவதாரங்களில் விபவாவதாரங்களிலும் காட்டிக் கொடுத்து உள்ளான்; அத்திருமேனியை இப்போது காண இயலாது என்றாலும், திவ்யதேசத் திருமேனியை நன்கு கண்டு களிக்கலாமே என்று இந்த பாட்டில் சொல்கிறார்.
பேயார் முலையுண்ட வாயான், மாதவனான காயா மலர் வண்ணனே வேங்கடம் மேயான்; அவ்விடத்தே நாடீர், நாடோறும் வாடா மலர் கொண்டு, பாடீர் அவன் நாமம், வீடே பெறலாமே  என்று சென்ற பாசுரத்தையும் (10.5.5) சேர்த்து பொருள் கொண்டு அனுபவிக்கலாம்.
18திருமாலிருஞ்சோலை மலையே, திருப்பாற் கடலே, என் தலையே, திருமால் வைகுந்தமே, தண் திருவேங்கடமே எனதுடலே, அருமா மாயத் எனது உயிரே, மனமே வாக்கே கருமமே, ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே.(10.7.8)தெற்குத் திருமலையோடும் திருப்பாற்கடலோடும் ஒப்பு சொல்லக் கூடிய என் தலையையும், ஸ்ரீவைகுண்டத்தோடும் திருவேங்கட மலையோடு ஒப்பு சொல்லக்கூடிய என்னுடைய உடலையும், கடக்க அரிதான, ப்ரக்ருதியோடு கலந்து இருக்கின்ற என்னுடைய ஆத்மாவையும், மனதையும், வாக்கையும், கிரியைகளையும் எல்லாவற்றிக்கும் காரணமான சர்வேஸ்வரன், எம்பெருமான் ஒரு நொடியும், எந்த தேசத்திலும் பிரிய மாட்டான் என்பது பொழிப்புரை.
இந்த பதிகத்தின் சுருக்கத்தை இங்கே காணலாம். எம்பெருமான், அவருக்கு உகந்ததான திருமாலிருஞ்சோலை, திருப்பாற்கடல், வைகுந்தம் மற்றும் திருவேங்கடமலை போன்ற திவ்யதேசங்களில் அடையும் இன்பத்திற்கு ஒப்பாக தன்னுடன் சேரும் போதும் எம்பெருமான் பெறுவதாக ஆழ்வார் சொல்கிறார்.
ஆழ்வார் தனது தலையை, திருமாலிருஞ்சோலை மலைக்கும், வியூகத்திற்கும் (திருப்பாற்கடல் ), ஒப்பிடுகிறார். அதேபோல், திருவேங்கடத்தையும், வைகுந்ததையும் (பரமபதம்) தன்னுடைய உடலுக்கு ஒப்பிடுகிறார். இதனால், எம்பெருமானுக்கு, பர, வியூக, திருமலை மற்றும் திருமாலிருஞ்சோலை போன்ற தமக்கு உகந்த திவ்ய தேசங்களில் இருப்பதும், ஆழ்வாருடன் இருப்பதும், ஒன்று என்று ஆழ்வாரை சிறப்பாக சொல்வதும் உண்டு.
இந்த பாசுரத்தில், தன் தலையும், திருமாலிருஞ்சோலை மலையும், திருவேங்கடமும், வைகுந்தமும், திருப்பாற்கடலும் என்று ‘உம்’ என்ற விகுதி கொண்டு இணைத்துச் சொல்லாமல், தனித்தனியே சொல்வது, எல்லா இடங்களிலும் எம்பெருமான் ஒரே நேரத்தில் இருப்பதைச் சொல்வதாகும். இந்த கருத்தை நம்பிள்ளை கீழ்கண்டவாறு விளக்கி அருளுகிறார். ஸௌபாரி என்பவன் மான்தாதா என்ற ரிஷியின் ஐம்பது(50) பெண்களை மணம் புரிந்து, தனித்தனி ஐம்பது வடிவுகள் எடுத்து, அந்த தேவிமார்களுடனே தனித்தனியே ‘என் கணவன் என் ஒருத்தியை விட்டு வேறொருத்தி மேல் ஒரு நொடிப் பொழுதும் நினைக்கிறவன் அல்லன்’ என்றே நினைத்திருந்தாளாம். அப்படியே எம்பெருமானும் இப்பாட்டில் சொல்லப்படுகிற இடங்களில், ஒன்றில் இருக்கும் போது, மற்றொன்றில் இல்லை என்று நினைக்கும்படி, இருந்தமை என்று காட்டவே, உம் என்ற விகுதியை தவிர்த்து, ஆழ்வார் ஏகாரம் சொல்லி உள்ளார் என்று விளக்குவார்.
அதேபோல், எம்பெருமான், ஆழ்வாரின், மனம், வாக்கு மற்றும் செயல்களில் தனித்தனியேயும், ஒன்றாகவும், முழுவதுமாகவும் இருக்க விரும்புவதை ஆழ்வார் சொல்கிறார்.
இப்படி ஆழ்வார், எம்பெருமான் தன்னை விட்டு ஒரு நொடியும் பிரியாமல் இருப்பதை கண்டு தன்னுடைய ஜீவாத்மாவின் மேல், உடலின் மேல், சொல்லின் மேல், மற்றும் செயல்களின் மேல் எம்பெருமான் லயித்து கிடப்பதை ஆழ்வார் உணர்ந்து நெகிழ்கிறார்.

மீண்டும் மற்றொரு ஆழ்வார், மற்றொரு திவ்ய தேசம் பற்றிய செய்திகளுடன் சந்திக்கலாம். நன்றி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d bloggers like this: