திருவேங்கடமுடையான் நம்மாழ்வார் – பெரிய திருவந்தாதி

தொடக்கம்

பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம்.

திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே என்று நம் பெரியவர்கள் கூறி உள்ளார்கள்.).

பொதுவாக முதலாழ்வார்களுக்கு வேங்கடமுடையானிடம் அதிக பற்று கொண்டு இருந்தார்கள் என்பதும் அவர்கள் அவனுக்கு நிறைய பாடல்கள் பாடினார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து திருவேங்கடமுடையானை முன்னிட்டு

 • பொய்கையாழ்வார் இயற்றிய முதல் திருவந்தாதியில் இருந்து பத்து பாசுரங்களை முன்பு பார்த்தோம்.
 • அடுத்த ஆழ்வார், பூதத்தாழ்வார், அவரின் இரண்டாம் திருவந்தாதியில் இருந்து திருவேங்கடமுடையானை பற்றி பதினோரு பாசுரங்களில் சொல்வதை இங்கே  சுருக்கமாக பார்த்தோம்.
 • அடுத்த ஆழ்வாரான பேய்ஆழ்வாரின் திருவேங்கடமுடையான் பாசுரங்களை (19) இங்கே காணலாம்.
 • அடுத்து, திருமழிசை ஆழ்வார் திருவேங்கடமுடையானை பற்றி பாடல்களை (16) பார்த்தோம்.
 • திருப்பாணாழ்வார் பாடிய அமலனாதிபிரான் பிரபந்தத்தில் இருந்து இரண்டு பாடல்களை இங்கே பார்க்கலாம்.
 • அடுத்து குலசேகராழ்வாரின் பதினோரு பாடல்களை இங்கே கண்டோம்.
 • பெரியாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 7 பாசுரங்களை இங்கே பார்த்தோம்.
 • அடுத்து பெரியாழ்வாரின் புதல்வியாகிய ஆண்டாள் நாச்சியார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 16 பாசுரங்களை இங்கே கண்டோம்.

இனி ஆழ்வார்களின் தலைவராக கொண்டாப்படும் ஸ்வாமி நம்மாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய பாசுரங்கள் பற்றி காண்போம். நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்கள் இயற்றி உள்ளார். அவை திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி எனும் நான்கு தமிழ் மறைகள் ஆகும்.

நம்மாழ்வார் மொத்தம் 37  திவ்யதேசங்களைப் பற்றி பாடியுள்ளார். அவைகளில் ஆழ்வாருக்கு திருவேங்கடமுடையானிடம் அதீத ஈடுபாடு. ஆழ்வார் முதலில் பாடிய திவ்யதேசம், திருவேங்கடமுடையானின் திருமலை ஆகும்.

இவற்றில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்து சில பாசுரங்களை முன்பு பார்த்து உள்ளோம். இங்கு திருவேங்கடவன் மேல் பாடிய அனைத்து பாசுரங்களையும் ஒவ்வொரு ப்ரபந்தமாக பாப்போம். திருவிருத்தத்தில் உள்ள 8 பாசுரங்களை முன்பு பார்த்தோம். இப்பொழுது திருவாய்மொழியில் உள்ள 40 பாசுரங்களை மூன்று பகுதிகளாக காண்போம்.

 • த்வய மஹாமந்திரத்தின் முதல் பகுதி, (6.10) – 11 பாசுரங்கள்
 • த்வய மஹாமந்திரத்தின் இறுதி பகுதி, (3.3) – 11 பாசுரங்கள்
 • திருவாய்மொழியில், திருவேங்கடவனை பற்றிய மற்ற பாசுரங்கள். (18)

இனி பெரியாதிருவந்தாதியில் திருவேங்கடமுடையானை பற்றிய ஒரு (1) பாடலை இங்கே காண்போம். நன்றி

பெரிய திருவந்தாதி

கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும், புல் என்று ஓழிந்தன கொல் ஏ பாவம், வெல்ல நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான், அடியேனது உள்ளத்து அகம். (68)

எம்பெருமான் திவ்ய மங்கள விக்ரஹத்தோடு தமது நெஞ்சிலே புகுந்து ஸ்திரமாக இருக்கும் நிலையை இந்த பாடலில் ஆழ்வார் சொல்கிறார். இந்த பாசுரத்தில் முதல் வார்த்தையான கல் என்பது திருமலையை குறிக்கும் என்பதால், இந்த பாசுரம் திருவேங்கடமுடையனுக்கு என்று நம் பெரியவர்கள் கூறுவர்.

வெல்ல நெடியான் என்றது நாமாக எவ்வளவு முயற்சி செய்தாலும் நமக்கு எட்டாது இருப்பவன் என்று சொல்கிறார். அவன் தானே, தன் அருளாலே தடை செய்வார் இல்லாமையாலே வந்து புகுந்தான் என்கிறார். வெல்ல நெடியான் என்பதற்கு வெல்வதற்கு முடியாதவன் என்றோ ஒருவராலும் ஜயிக்க முடியாதவன் என்றோ பொருள் கூறுதல் இங்கே சிறப்பாக இருக்காது.

வந்து புகுந்ததாகத் தோன்றுவது மட்டும் இல்லாமல், மெய்யே (உடம்போடும்) வந்து புகுந்தான் என்பதை தெரிவிப்பதற்காக நிறங்கரியான் என்று திருமேனியையும் கண்டறிந்து பேசுகிறார். பிராட்டியானவள் எம்பெருமானுடைய திருமார்பிலே வந்து சேர்ந்து “அகலகில்லேன் இறையும், அகலகில்லேன் இறையும்” என்று தானே எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பது போலே, எம்பெருமானும் ஆழ்வாருடைய திருவுள்ளத்திலே வந்து சேர்ந்து “அகலகில்லேன் இறையும், அகலகில்லேன் இறையும்” என்று தானே சொல்லிக் கொண்டு, எம்பெருமானும் ஆழ்வாருடைய திருவுள்ளத்திலே வந்து சேர்ந்து “நான் இதனைவிட்டு நீங்கேன், நான் இதனைவிட்டு நீங்கேன்” என்று உருகிச் சொல்லிக் கொண்டு கிடக்கிறான் என்பது தோன்ற, “உள்புகுந்து நீங்கான்” என்று பாடுகிற அழகு மிகவும் ரசிக்கத் தக்கது.

எம்பெருமானுக்கு, பரமபதத்திலும் திருப்பாற்கடலிலும், திருவேங்கடமலை முதலான உகந்து அருளினை இடங்களில் இருப்பதை காட்டிலும் மெய்யடியாருடைய இதய கமலத்திலே வாழ்வதே சிறந்தது என்றும், சமயம் பார்த்து அன்பருடைய நெஞ்சிலே வந்து சேர்வதற்காகவே மற்ற இடங்களில் எம்பெருமான் தங்குகின்றான் என்றும், அதனால், பரமபதம் முதலியவற்றில் வாஸம் உபாயமாகவும் பக்தருடைய இதயத்தில் வாஸமே அவனுடைய இலக்காக இருக்கும் என்றும், இது நடந்து விட்டால் பரமபதம் முதலியவற்றில் வாஸம் செய்வதில் அவனுடைய ஈர்ப்பு குறைந்து விடும் என்றும் ஸ்ரீவசன பூஷத்தில் பிள்ளையுலகாசிரியர் பரம ரஸமாக அருளிச் செய்ததெல்லாம் இப்பாசுரத்தின் முன்னடிகளை மூலமாகக் கொண்டே என்று உணர வேண்டும்.

கல்லும் கனைகடலும் வைகுந்தவனாடும் புல்லென்றொழிந்தன கொல் ஏபாவம்!” என்ற இப்பாசுரத்தின் உருக்கத்தை, என்ன சொல்வது, இப்படிப்பட்ட ஈரச்சொற்கள் பாவியாகிற நம்முடைய வாயிலும் நுழைந்து புறப்படப் பெறுவதே! ஆழ்வாருடைய அநுபவம் எங்கே? நாம் எங்கே? அவர்களுடைய அருளிச் செயலுக்கும் நமது நாவுக்கும் எவ்வளவோ தூரமுண்டு. ஆயினும், ஏதோ பாக்ய விசேஷத்தாலே நமது வாயிலும் இத்தகைய பாசுரங்கள் பொருள் தெரிந்தோ தெரியாமலோ சிறிது நேரம் நுழைந்து புறப்படும்படியாக வாய்ப்பது இந்த உலகத்தில் பெற்றதொரு கனத்த பேறாம். ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவரும் இரவில் பள்ளிக்கொள்ளும்போது இப்பாசுரத்தைப் பலகால் அநுஸந்திக்க வேண்டும் என்பது பெரியோர்களின் உபதேசம்.

கல்லும் என்பது சாதாரணமாக மலையைச் சொல்வது, அது இங்கே சிறப்பாக திருவேங்கடமலையைச் சொல்கிறது. கனைகடல் என்பது சப்தம் செய்யும் என்ற அர்த்தத்தில், எம்பெருமான் எப்போதும் தன்னிடத்து உறைகின்றான் என்கிற மகிழ்ச்சியினால் ஆரவாரம் செய்கின்ற கடல் என்கிறது. “புல் என்று ஒழிந்தன கொல்” என்பதற்கு அற்பத்தனமடைந்து என்ற பொருளில், எனது நெஞ்சின் முன்னே அவை எல்லாம் அற்பமாய்விட்டன போலும் என்று வருகிறது. அவ்விடங்களில் போக்குவரத்து அடியோடு நின்றதால், அவை புல் மூடிப் போயினவோ என்று சிலர் சொல்வதும் உண்டு. சிறந்த ஸ்தலங்கள் என்று கொண்டாடப்படுகிற அவ்விடங்களுக்கு இப்படிப்பட்ட அவஸ்தையா வந்துவிட்டது, ஐயோ பாவம்!! என்று சொல்வது போல் “ ஏ பாவம்” என்று சொல்லப்பட்டது.

பெரியாழ்வார் திருமொழியின் முடிவிலுள்ள “பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டு“தடவரைவாய் மிளிர்ந்து மின்னும்” என்ற இரண்டு பாசுரங்களின் கருத்தும் இப்பாசுரத்தின் இரண்டாம் அடியின் கருத்துடன் நினைவு கொள்ளலாம்.

மீண்டும் இன்னொரு பாசுரம், இன்னொரு ஆழ்வார் என்று சந்திக்கலாம், நன்றி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d