A Simple Devotee's Views
கிருஷ்ண ஜென்ம பூமியாகிய மதுரா, கிருஷ்ணன் ஆடியும் பாடியும் ஆடுமாடுகளை மேய்த்தும் கன்றுகள் பின்திரிந்தும் மகிழ்ந்து இருந்த பிருந்தாவனம், இவைகளையும், கோபியர் மற்றும் தன் நண்பர்களையும், காக்க குன்றைக் குடையாக ஏந்திய கோவர்த்தன கிரி என்னும் கோவர்த்தனம் இம்மூன்றும் சேர்த்தே இந்த திவ்யதேசமாக கொள்வர்.
பெரியாழ்வார், ஸ்ரீஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகிய 5 ஆழ்வார்களால் 50 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம் தான் இந்த வடமதுரை என்ற திவ்யதேசம்.
பெரியாழ்வாரும், ஆண்டாளும் பிருந்தாவனத்திற்கும் கோவர்த்தனத்திற்கும் தனித் தனி பதிகங்களால் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
கோவர்த்தனத்தையும், பிருந்தாவனத்தையும் தந்தையும் மகளுமாய் (பெரியாழ்வாரும் ஆண்டாளும்) பாடல்கள் பாடி, தனியாக ஒரு கோவில் என்றில்லாமல் அந்தப் பகுதி முழுவதையுமே திவ்யதேசமாக்கி கொண்டாடி விட்டார்கள். இந்த பதிப்பினில் திருவடமதுரா திவ்யதேசத்தை கொண்டாடும் ஆண்டாள் பாசுரங்களை நாம் சிறிது காணலாம்.
ஆண்டாள் திருப்பாவை
1 | மாயனை மன்னு வடமதுரை மைந்தனை, தூய பெருநீர் யமுனைத் துறைவனை, ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை, தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை, தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித் தொழுது, வாயினால் பாடி மனதினால் சிந்திக்க, போய பிழையும் புகுதருவான் நின்றனவும், தீயினுள் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய் – திருப்பாவை 5 | தனது திருஅவதாரத்தினால் தன் தாயாருக்கு மேன்மை அளித்த, யமுனை நதிக்கரையில் உள்ள வடமதுரையில் பிறந்த ஆச்சர்யமானவனை, தூய உள்ளதோடு வந்து, தூய மலர்களை தூவித் தொழுது வாயினால் பாடி மனதினால் சிந்தித்தால், நாம் செய்த தவறுகளால் நமக்கு ஏற்பட்ட பாவங்களும், நம்மிடம் வந்து சேர வேண்டும் என்று காத்திருக்கும் பாவங்களும் தீயிலிட்ட தூசு போலாகிவிடும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை. |
ஆண்டாள் – நாச்சியார் திருமொழி
1 | மாட மாளிகை சூழ் மதுரைப் பதி, நாடி நந்தெருவின் நடுவே வந்திட்டு ஓடை மாமத யானை யுதைத்தவன் கூடுமாகில் நீ கூடிடு கூடலே 4.5 | குவலயா பீடமென்னும் யானையை முடித்த கண்ணன், மாட மாளிகைகளாலே சூழப்பட்ட (திருவட)மதுரை மாநகரிலே நம் வீட்டைத்தேடி, நம் தெருவிற்கே வந்து நம்மை கட்டுவானாகில் கூடிடு கூடலே என்று ஆண்டாள் பாடுகிறார். ஓடை என்று யானையின் நெற்றிப்பட்டத்துக்குப் பெயர். கண்ணன் திருவாய்ப்பாடியில் இருந்து வருவதாகவும், ஆண்டாள் திருவடமதுரையில் இருப்பதாகவும் விளக்கம் செய்வார்கள். திருவடமதுரை செழிப்புடன் இருப்பதையும் நோக்கலாம். |
2 | அற்றவன் மருதம் முறிய நடை கற்றவன் கஞ்சனை வஞ்சனையினால் செற்றவன் திகழும் மதுரைப்பதி கொற்றவன் வாரில் கூடிடு கூடலே 4.6 | முன்னமே, “ஆண்டாளுக்கானவன் இவன்” என்று அற்றுத் தீர்த்தவன் என்றும், மருத மரங்கள் முறிந்து விழும்படி, தவழ் நடை கற்றவன் என்றும், கம்சனை வஞ்சனையில் கொன்று தீர்த்தவன் என்றும் விளங்குகின்ற மதுரை நகரத்தின் மன்னனான கண்ணன் வருவானாகில் கூடலே கூடிடு என்பது இந்த பாடலின் பொழிப்புரை. கண்ணன் உக்ரஸேந மஹாராஜனை விடுவித்து வடமதுரையிற் பட்டாபிஷேகம் செய்து வைத்தாலும், திகழும் மதுரைப்பதிங் கொற்றவன் உக்ரஸேநனே ஆனாலும், கண்ணனே மன்னன் என்பது ஆண்டாளுடைய வாதம் ஆகும். |
3 | கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்தி சதிர் இள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள, மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு எங்கும் அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான் 6.5 | பருவத்தாலும் வடிவழகாலும் தங்களையே எல்லோரும் நோக்கிக் கொண்டிருக்கும்படி மிக்க அழகு வாய்ந்த மாதர்கள் தீபங்களையும் பூர்ண கும்பங்களையும் ஏந்திக்கொண்டு எதிர்கொண்டு வர, மதுரா ராஜ்யத்திற்கு அரசனான கண்ணன், பாதுகை சாத்திக்கொண்டு பூமி அதிரும்படி நடநது வருவதை கனவில் கண்டேன் என்று ஆண்டாள் கூறுகிறார். அதிர புகுந்த என்ற இடத்திற்கு ஒரு ஐதீகம் அருளி செய்வர். மஹாபலியின் யாக பூமியில் ஸ்ரீவாமனன் நடந்த போது பூமி நெளிந்தது என்று ஒரு நூலில் இருக்க அதற்கு என்னபொருள் என்று சொல்லும் போது, பட்டர் என்னும் ஆச்சார்யர் அருளிச்செய்வதாவது, ‘ யாசகம் செய்ய வந்த பதற்றத்தாலே பூமியில் திருவடிகளை பதித்ததால் பூமி நெளிந்தது என்றும், பூமிக்காக, இப்படி பதறியவன், பெரியாழ்வார் திருமகளை பெற எங்கனே பதறாமல் இருப்பான் என்பார். |
4 | தடவரையின் மீதே சரற்கால சந்திரன் இடை உவாவில் வந்து எழுந்தாலே போல் நீயும் வடமதுரையார் மன்னன் வாசுதேவன் கையில் குடியேறி வீற்றிருந்தாய் கோலப் பெருஞ் சங்கே 7.3 | சரத்காலத்தில் முழுமையாக நிரம்பின பூரணசந்திரன், உதயகிரியின் மேல் வந்து தோற்றினால் போல், ஸ்ரீ பாஞ்ஜசந்நியமே ! நீயும் கண்ணனது, திருக்கரத்தின் மேலே அழகாக வீற்றிருந்து தோன்றுகின்றாய், உனது பெருமையே பெருமை என்று ஆண்டாள் கொண்டாடுகிறாள். வாசுதேவன் என்றது, வஸுதேவருடைய புத்திரன் என்றும், எங்கும் நிறைந்த கடவுள் என்றும் பொருள்படும். |
5 | மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பதோர் அன்பு தன்னை உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி மற்பொருந்தாமற் களமடைந்த மதுரைப் புறத்து என்னை உய்த்திடுமின் 12.1 | எம்பெருமானை இப்பொழுதே பெற்று விட வேண்டும் என்று வருந்தி இருக்கின்ற ஆண்டாளை நோக்கித் தோழியரும் தாயும் ‘அம்மா! இது நம்மால் முடிவதில்லை, பேறு, அவன் தான் கொடுக்க வேண்டும் என்பதே ஸித்தாந்தமான பின்பு நீ இப்படி பதறுவதில் பயன் ஒன்றும் இல்லையே, பேறு பெறுபவர் என்று ஆனபின்பும் அதற்காக காத்து இருப்பதே முறை, அசோக வனத்தில், சீதா பிராட்டி சொன்னதும் செய்தவைகளும் உனக்குத் தெரியாததா, அவளைப் போலே நீயும் பொறுத்து இருக்க வேண்டும், நீ இப்படி பதற கூடாது’ என்று சொல்லும் போது , ஆண்டாள் ‘எனக்கு இப்போது நிகழ்கிற துன்பங்களை சிறிதும் அறியாத நீங்கள், எம்பெருமான் விஷயத்தில் எனக்கு இருக்கின்ற ஆசை, மிகவும் அதிகமாக உள்ளதால், நீங்கள் எனக்குச் சொல்லுகிற வார்த்தைகள் வீண், உங்கள் பேச்சு என் காதுகளில் புகாது. புகுந்தாலும் அவற்றுக்கு மறுமொழி கொடுக்கும் நிலையிலும் நான் இல்லை. ஆகையாலே நீங்கள் எனக்கு சமாதானம் சொல்வதை விட்டுவிட்டு, “ஒருத்தி மகனாப் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்து, முஷ்டிக சாணுரர் என்ற மல்லர்களோடு போர் புரிந்து, வெற்றி பெற்ற கண்ணன் எழுந்து அருளி இருக்கின்ற மதுரா நகர் புறம் என்னை சேர்த்து விடுங்கள்” என்கிறாள். இதுவே இந்த பாடலின் கருத்து. ‘இப்படி வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசலாமா’ என்று தாய் வினவ, அதற்கு ஆண்டாள், “அந்த கண்ணனே, பெற்ற தாயை விட்டு ஒரே இரவில் மற்றொரு இடத்தில வளர்ந்தவன் தானே”, தானும் அதேபோலே என்பது போல் உள்ளது. ஆண்டாள், தான் கண்ணனை அணைக்க வேண்டும் என்று காத்து கொண்டு இருக்கையில் , அவன் முஷ்டிக சாணுர்களுடன் உடம்போடு உடம்பு கட்டி மல் யுத்தம் செய்வதற்கு முன், தான் இடையில் சென்று கண்ணனை அணைக்கும்படி, தன்னை மதுராவிற்கு அழைத்து செல்லுங்கள் என்று சொல்வதாக உரை ஆசிரியர் சொல்வது சுவாரஸ்யமான ஒன்று. |
6 | கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப் பெற்றான் காடு வாழ் சாதியுமாகப் பெற்றான் பற்றி உரலிடை ஆப்பும் உண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக்கொலோ, கற்றன பேசி வசை உணாதே காலிகளுய்ய மழை தடுத்து கொற்றக் குடையாக ஏந்தி நின்ற கோவர்த்தனத்து என்னை உய்த்திடுமின் 12.8 | மற்றும் சில பெண்கள் ஆண்டாளை நோக்கி, ‘ நீ இராமபிரானை ஆசைப்பட்டாலும் குற்றமில்லை, மாடு மேய்க்கப் பிறந்த கண்ணனைப் போய் நீ ஆசைப்படுகிறாய், அவனோ ஊரில் தங்குபவன், இவனோ மாடுகன்றுகளை மேய்ப்பதற்காக அவற்றின் பின்னே திரியும் சிறுவன்; பசுக்களுக்கு நீரும் புல்லும் உள்ள இடத்தே தங்குவான்; வெண்ணையையும் நெய்யையும் களவாடிவிட்டு உரலிலே கட்டுப்பட்டு திண்டாடுமவன், அப்படிப்பட்டவனை பெறுவதற்காகவோ நீ இப்படி துடிப்பது” என்று ஏளனமாகச் சொல்ல, அவர்களைநோக்கிச் ஆண்டாள், “அவன் கன்றுகளை மேய்த்ததும் காடுவாழ் சாதியாக வாழ்ந்ததும், உரலிடை ஆப்புண்டதும் குணமாகத் தோன்ற வேண்டியது, உங்களுக்கு இவையெல்லாம் குற்றமாகத் தோன்றுவதற்கு காரணம் உங்களுடைய பாவமேயாம், உரலோடு இணைந்திருந்தது அவன் எளிமையே, இனி நீங்கள் இப்படிப்பட்ட தீய வார்த்தைகளை என் காதில் சொல்லுவீர்களாகில், நான் வாயில் வந்தபடி உங்களை நிந்தித்துவிடுவேன். அப்படி நிந்தனைகளுக்கு நீங்கள் ஆளாகாமல், அன்றொருகால் இந்திரன் ஏழுநாள் விடாமழை பெய்வித்தபோது அந்த மழையைத் தடுத்து அனைவரையும் காத்த கோவர்த்தன மலையின் அருகே என்னைக் கொண்டு விடுங்கள் என்கிறாள் |
7 | பட்டி மேய்ந்தோர் காரேறு பல தேவற்கோர் கீழ்க்கன்றாய் இட்டீர் இட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி விட்டுக் கொண்டு விளையாட விருந்தா வனத்தே கண்டோமே 14.1 | சிறையில் இருப்பவர் போல், பரமபதத்தில் திருவனந்தாழ்வான் மடியிலும், ஸேனை முதலியார் பிரம்பின் கீழிலும், பெரியதிருவடி சிறகின் கீழிலும், ஒடுங்கி இருக்கின்ற எம்பெருமான் இந்த பூவுலகில் தடை செய்வார் யாரும் இல்லாதபடி, எல்லா சுதந்திரத்துடன் திரிந்து விளையாடி நீங்கள் கண்டதுண்டோ என்று கேட்டுக்கொண்டு, தனக்கு மிகவும் பிடித்தமான பசுக்களைப் புல்லும் தண்ணீரும் உள்ள இடங்களிலே அழைத்து சென்று, மிக்க சந்தோஷத்துடன், விளையாடும் பிருந்தாவனத்தில் காணலாம் என்று பதில் கொடுக்கும் விதமான அமைந்துள்ள பாசுரம். பெண்களிடத்தில் நிச்சலும் தீமைகள் செய்து திரியும் கண்ணன், பலராமனிடத்தில் பவ்யமாக இருக்க காரணம், கண்ணனுக்கு பிடித்த விஷயங்களிலே அவனுக்கு துணையாக அவன் நினைத்தபடி இருப்பதால் என்று உரையாசிரியர் கூறுவர் |
8 | அனுங்க என்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்து உண்ணும் குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே கணங்களோடு மின் மேகம் கலந்தாற் போல வனமாலை மினுங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே 14.2 | என்னைப் பிரிந்து, அதனால் நான் மிகவும் தளர்ச்சியடையும்படி, திருவாய்ப்பாடி முழுதையும் கொள்ளை கொண்டு திரிபவனை, “வெண்ணெயளைந்த குணுங்கு” நாற்றம் கமழும் கண்ணனைக் கண்டதுண்டோ என்று கேட்டு, மின்னலும் மேகமும் சேர்ந்ததது போல், எம்பெருமானின் திருமேனிக்கு ஏற்ற வனமாலை அசைய “தன்னோராயிரம் பிள்ளைகளோடு” விளையாடும் விருந்தாவனத்தே கண்டோம் என்று பதில் கூறும்விதம் அமைந்த பாசுரம். |
9 | மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக் கண்டீரே மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகென்னும் மேலாப் பின்கீழ் வருவானை விருந்தா வனத்தே கண்டோமே 14.3 | பெண்களிடத்தில் உள்ள மோகமே ஒரு வடிவுகொண்டது போல் இருப்பவனும், ஸகல குணங்களாலும் பரிபூர்ணனும், எல்லோரும் ஆசைப்படத் தகுந்தவனும், பொருந்தாத பொய்களைக் கூசாது கூறுபவனுமான கண்ணன் இங்கே எழுந்தருளக் கண்ட துண்டோ என்று கேட்டதற்கு, மேலே வெய்யில் படாதபடி பெரிய திருவடி தன் சிறகை விரித்து நிழல் செய்ய, அதன் கீழ் விருந்தாவனத்திலே எம்பெருமான் எழுந்தருளக் கண்டோம் என்று விடையளிப்பர் . |
10 | கார்த் தண் கமலக் கண் என்னும் நெடுங் கயிறு படுத்தி என்னை ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே போர்த்த முத்தின் குப்பாயப் புகர் மால் யானைக் கன்றே போல் வேர்த்து நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோமே 14.4 | மேகத்திலே அழகிய இரண்டு தாமரைப்பூக்கள் பூத்தனவோ என்றபடி திருக்கண்களாகிற வலையிலே என்னை அகப்படுத்தித் தான் போகும் இடம் எங்கும் என்னையும் (அதாவது, என் நெஞ்சையும்) இழுத்துக்கொண்டு போகும் எம்பெருமானை கண்டீர்களா என்ற கேள்விக்கு, முத்துச் சட்டை போட்டு கொண்டாற்போல் வேர்வை அரும்பிய உடலுடன் விளையாடுவதை விருந்தாவனத்திலே கண்டோம் என்று விடை அளிப்பது போல் உள்ள பாசுரம். கண்ணன் யானைக்குட்டிபோலவும், அவன் உடலில் துளிர்த்து இருக்கும் வேர்வை அரும்புகள் முத்துச்சட்டை அணிந்திருப்பது போலவும் சொல்லி இருப்பது அழகு. |
11 | மாதவன் என் மணியினை வலையில் பிழைத்த பன்றி போல் ஏதும் ஒன்றும் கொளத்தாரா ஈசன் தன்னைக் கண்டீரே பீதக வாடை உடை தாழப் பெரும் கார்மேகக் கன்றே போல் வீதியார வருவானை விருந்தா வனத்தே கண்டோமே 14.5 | திருமகள் கேள்வனாய், எனக்கு நீலமணி போலே அனுபவம் கொடுப்பவனாய் , வலையிலே அகப்பட்டிருந்து தப்பின பன்றி போல் ஒருவர் கைக்கும் பிடி கொடுக்காதவனான பாய்ந்தோடும் எம்பெருமானை கண்டதுண்டோ என்ற கேள்விக்கு பீதாம்பரத்தைத் தொங்கத் தொங்க அணிந்து கொண்டு காளமேகக் குட்டி போல் திருவீதி நிறைய எழுந்தருளும்போது விருந்தாவனத்திலே கண்டோம் என்று விடை அளிப்பது போல் அமைந்துள்ள பாசுரம். |
12 | தருமம் அறியாக் குறும்பனைத் தன் கைச் சார்ங்கம் அதுவே போல் புருவ வட்டம் அழகிய பொருத்தம் இலியைக் கண்டீரே உருவு கரிதாய் முகம் செய்தாய் உதயப் பருப்பதத்தின் மேல் விரியும் கதிரே போல் வானை விருந்தா வனத்தே கண்டோமே 14.6 | தயை என்கிற தர்மத்தை சிறிதும் அறியாதவன் போல் குறும்பு செய்வதையே தொழிலாகக் கொண்டவனாய், தன் கையிலுள்ள சார்ங்க வில் போன்று வட்டமாய் அழகிய திருப்புருவங்களை உடையவனாய், உகதந்தாரோடே பொருந்தி வாழப் பெறாதவனான எம்பெருமானைக் கண்டது உண்டோ என்ற கேள்விக்கு பார்த்தவர்களின் கண்களெல்லாம் குளிரும்படி கருமை உடலுடன், செந்தாமரை போன்ற சிவந்த திருமுக மண்டலத்தை உடையவனாய், உதய பர்வதத்தின் மேலே ஆதித்யன் உதிப்பது போல் விளங்கும் கண்ணனை விருந்தாவனத்திலே கண்டோம் என்று பதில் சொல்வதைப்போல அமைந்துள்ள பாசுரம். தர்மம் என்ற வடசொல்லுக்கு, பிறர் பக்கல் இரக்கமே, பரம தர்மமாகச் சொல்லப்படுவதால், அப்படிப்பட்ட இரக்கமில்லாதவன் என்று சொல்கிறார். பர்வதம் என்பது பருப்பதம் என்று சொல்லப்பட்டது. |
13 | பொருத்தமுடைய நம்பியைப் புறம் போலுள்ளும் கரியானை கருத்தைப் பிழைத்து நின்ற அக் கருமா முகிலைக் கண்டீரே அருத்தித் தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம் போல் விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தா வனத்தே கண்டோமே 14.7 | பொருத்தமுடைய ஸ்வாமியாய் உடம்பு போலே உள்ளமும் கறுத்து நின்றவனாய், சேர்ந்து இருக்கும் காலத்திலே “பெண்ணே, உன்னை நான் விட்டுப் பிரியேன், பிரிந்தால் தரியேன்“ என்று அவன் சொல்ல அதை உண்மைதான் என்று நம்பியிருக்கிற நம்பிக்கையைப் போக்கடித்தவன் அல்லது, இப்படிச் சொல்லுகிறவன் ஒருகாலும் நம்மைவிட்டுப் பிரியமாட்டான் என்று கொண்ட கருத்துக்கு மாறாக, பிரிந்திருப்பவனாக, கறுத்த பெரிய மேகம் போன்ற கண்ணனை கண்டீர்களாக என்ற கேள்விக்கு எல்லோராலும் விரும்பப் படுகின்ற நட்சத்திர கூட்டங்கள் நிறைந்த ஆகாயம் போல், பெரும்கூட்டமாக விருந்தாவனத்தில் கண்டோம் என்று பதில் சொல்வதுபோல் அமைந்துள்ள பாசுரம். |
14 | வெளிய சங்கு ஒன்று உடையானைப் பீதக வாடை உடையானை அளி நன்கு உடைய திருமாலை ஆழியானைக் கண்டீரே களி வண்டு எங்கும் கலந்தாற் போல் கழம் பூங்குழல்கள் தடந்தோள் மேல் மிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே 14.8 | வெளுத்த ஸ்ரீ பாஞ்ச சந்நியம் என்ற சங்கினை திருக்கரத்தில் உடையவனும், பீதாம்பரத்தை உடையாகக் கொண்டவனும், பிராட்டியோடு கொண்ட சேர்த்தியினால் கருணையுடையனும் திருஆழியானை திருக்கரங்களில் கொண்டவனும் ஆன எம்பெருமானை கண்டதுண்டோ என்ற கேள்விக்கு, மது உண்டு களித்த வண்டுகள் எல்லா பக்கங்களிலும் பரந்து பரிமளிக்கின்ற அழகான திருக்குழல்களானவை திருத்தோள்களிலே விளங்க நின்று விளையாடும் கண்ணனை விருந்தாவனத்தில் கண்டோம், என்று விடை சொல்வது போல் அமைந்துள்ள பாசுரம். |
15 | நாட்டைப் படை என்று அயன் முதலாத் தந்த நளிர் மா மலர் உந்தி வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் தன்னைக் கண்டீரே, காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய வேட்டை யாடி வருவானை விருந்தா வனத்தே கண்டோமே 14.9 | உலகங்களில் உள்ள ஜீவராசிகளை படை(பிறப்பித்தல்) என்று ப்ரம்மா முதலியவர்களை படைத்து, அந்த நான்முகனுக்கு இருப்பிடமாக தன்னுடைய திருநாபிக்கமலத்தை தந்து, விளையாடுகின்ற எம்பெருமானை கண்டீரோ என்ற கேள்விக்கு, தேனுகாஸுர னையும் குவலயாபீடம் என்ற யானையையும், மற்றும் கம்சன் ஏவின எல்லாவற்றையும் காட்டிற்கு சென்று வேட்டை ஆடி, உடனே மடியும் படியாக செய்த கண்ணனை விருந்தாவனத்தில் கண்டோம், என்று விடை சொல்வது போல் அமைந்துள்ள பாசுரம். தேனுகாஸுரன், குவலயாபீடம், மற்றும் கம்சன் ஏவின எல்லாம் பற்பல சமயங்களில் அழித்து இருந்தாலும் , ஆண்டாளைப் பார்வையில் எல்லாம் ஒரே நேரத்தில் நிகழ்ந்தாற்போல், உடன் மடிய என்று சொல்வதாகவும் கொள்ளலாம். |
16 | பருந் தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னை பாரின் மேல் விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல் மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள் பெருந்தாளுடைய பிரானடிக் கீழ்ப் பிரியாது என்றும் இருப்பாரே 14.10 | பருத்த கால்களையுடைய கஜேந்திராழ்வானுக்கு அருள் செய்த எம்பெருமானை, இந்த உலகில், பிருந்தாவனத்தில் சேவித்தமை பற்றி பெரியாழ்வார் திருமகளான ஆண்டாள் அருளிச்செய்த இந்த பாடல்களை பிறவி பிணிக்கு மருந்தாக தங்கள் மனதில் அனுசந்தித்து கொண்டு வருபவர்கள் பெருமை மிகுந்த திருவடிகளையுடைய எம்பெருமானுடைய திருவடிகளின் கீழே எந்நாளும் அனுபவித்து வருவார்கள் என்று இந்த பதிகத்தை முடிக்கிறார். |
17 | உள்ளே உருகி நைவேனை உளளோ இலளோ என்னாத கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் கோவர்த்தனனைக் கண்டக்கால் கொள்ளும் பயனொன்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டவன் மார்வில் எறிந்து என் அழலை தீர்வேனே 13.8 | என்னுள்ளே உருகி நைந்து போகின்ற என்னை, இருக்கிறேனோ இல்லையோ என்று எல்லாம் கேட்காமல், என்னிடத்தில் உள்ள எல்லாவற்றையும் கொள்ளை கொண்டவன்னான, பெண்களிடத்தில் குறும்பு செய்யும் கோவர்தனனை, ஒருக்கால் நான் காணும் போது, ஒரு பயனுமில்லாத என் மார்பகங்களை வேர் முதலாக பிடுங்கி அவன் மார்பில் எறிந்து என் ஆயாசத்தை, களைப்பினை, தாபத்தை, துக்கத்தை போக்கிக்கொள்வேன் என்கிறார். இங்கு, கிழங்கோடு என்று ஆத்மாவை சொல்கிறார். பகவத் அனுபவத்திற்கு பயனில்லாத ஆத்மா மற்றும் உடம்பினை வெறுக்கும் பக்தர்களை உவமையாக உரை ஆசிரியர் கூறுகிறார். அதேபோல் கோவர்தனனை என்ற இடத்தில் ” பெண்களை வெறும் தரையாக்கும், பசுக்களை ஒன்று நூறுஆயிரம் ஆக்கும் ” என்ற ஸ்ரீஸுக்தியை குறிப்பிட்டதும் ரசிக்கதக்கது . |
மீண்டும் இன்னொரு ஆழ்வார், இன்னொரு திவ்யதேசம், என்ற ஒரு கருத்தோடு உங்களை சந்திக்கிறேன். நன்றி.