A Simple Devotee's Views
பெரியாழ்வார், ஸ்ரீஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகிய 5 ஆழ்வார்களால் 50 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம் தான் இந்த வடமதுரை என்ற திவ்யதேசம்.
கிருஷ்ண ஜென்ம பூமியாகிய மதுரா, மற்றும் கிருஷ்ணன் ஆடியும் பாடியும் ஆடுமாடுகளை மேய்த்தும் கன்றுகள் பின்திரிந்தும் மகிழ்ந்து இருந்த பிருந்தாவனம், இவைகளையும், கோபியர் மற்றும் தன் நண்பர்களையும், காக்க குன்றைக் குடையாக ஏந்திய கோவர்த்தன கிரி என்னும் கோவர்த்தனம் இம்மூன்றும் சேர்த்தே இந்த திவ்யதேசமாக கொள்வர்.
பெரியாழ்வாரும், ஆண்டாளும் பிருந்தாவனத்திற்கும் கோவர்த்தனத்திற்கும் தனித் தனி பதிகங்களால் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
கோவர்த்தனத்தையும், பிருந்தாவனத்தையும் தந்தையும் மகளுமாய் (பெரியாழ்வாரும் ஆண்டாளும்) பாடல்கள் பாடி, அந்தப் பகுதி முழுவதையுமே திவ்யதேசமாக்கி விட்டார்கள். ஆண்டாள் இந்த திவ்யதேசத்தை பாடிய பாடல்களைப் பற்றி இங்கே கண்டோம். திரு வடமதுரா திவ்யதேசத்தை கொண்டாடும் பெரியாழ்வாரின் பாசுரங்களை இங்கே காணலாம்.
பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி
1 | ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார், நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பார், பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று, ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே. 1.1.2 | கோகுலத்தில், எல்லோரும் தங்கள் தலைவரான நந்தகோபர்க்குப் பிள்ளை பிறந்ததாகக் கேள்விப்பட்டு அளவற்ற ஆனந்தம் அடைந்து, தாம் என்ன செய்வது என்று தெரியாமல், ஓடினார்கள்; சேற்றிலே வழுக்கி விழுந்தார்கள்; உரக்க கோஷம் செய்தார்கள்; குழந்தை எங்கே என்று தேடினார்கள்; பாடினார்கள்; சிலர் பறையடிக்க சிலர் அதற்கு ஏற்றபடி கூத்தாடினார்கள்; ஆக பஞ்சலக்ஷம் குடியில் இருந்த எல்லோரும் கோலாகலமாக இருந்தார்கள். ஸ்ரீகிருஷ்ணரின் அவதாரத்தால் திருவாய்ப்பாடியில் சந்தோசம் அடையாதவர் ஒருவரும் இல்லை; ஆய்ப்பாடியே ஓடுவாரும் ஆடுவாருமாக ஆயிற்று என்பர். |
2 | உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார், நறுநெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார், செறிமென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும் அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே.1.1.4 | கண்ணன் பிறந்த சந்தோஷம் அடங்காமல், நெய்யும் பாலும் தயிரும் இருக்கிற உறிகளை அறுத்துக் கொண்டு, முற்றத்திலே கொட்டி உருட்டி விட்டு ஆடினார்கள்; நெய் பால் தயிர் முதலியவற்றை அதிக அளவில் தானம் செய்தார்கள்; தலைமுடி அவிழ்ந்ததும் தெரியாமல் கூத்தாடினார்கள்; கோகுலத்து இடையர்கள் எல்லாரும் பெருமையினால் இன்னதுதான் செய்வதென்று தெரியாமல் சந்தோஷத்துடன் ஆடினார்கள்; நன்றாக தூவுவார் என்று சொன்னதை, நன்று ஆக தூவுவார் என்று கொண்டு, பிறந்த பிள்ளைக்கு நன்மை உண்டாகும்படி என்றும் பொருள் கொள்ளலாம். |
3 | வான் இளவரசு வைகுந்தக் குட்டன் வாசுதேவன் மதுரை மன்னன் நந்தகோன் இளவரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழல் கொடு ஊதின போது வான் இளம் படியர் வந்து வந்து தீண்டி மனமுருகி மலர்க் கண்கள் பனிப்ப தேனளவு செறி கூந்தல் அவிழச் சென்னி வேர்ப்பச் செவி சேர்த்து நின்றனரே.3.6.3 | கண்ணபிரானது குழலிசையைக் கேட்ட மேல் உலகத்து பெண்கள் தங்கள் இருப்பிடத்திலே இருக்கமாட்டாமல், கண்ணன் இருக்குமிடத்தில் கூட்டம் கூட்டமாக ஓடி வந்து அக்குழலோசையை நன்றாக கேட்டு அனுபவித்த பிறகு அவர்களது மனம் உருகி, கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் பெருகி பனித்தன; கூந்தல் அவிழ்ந்தது; நெற்றி வேர்த்தது; இப்படி பல மாறுதல்களுடன் அந்த இசையைக் கேட்டு மயங்கி கிடந்தனர். பரமபதத்தில் எம்பெருமான் நித்யஸூரிகளின் தலைவராக, அவர்களையும் நிர்வகிப்பவனாக இருப்பதை வானிளவரசு என்கிறார். “திருவனந்தாழ்வான் மடியிலும், ஸேநாபதியாழ்வான் பிரம்பின் கீழிலும், பெரிய திருவடி சிறகின் கீழிலுமாயிற்று இத்தத்துவம் வளர்வது” என்று பராசர பட்டர் என்னும் ஆச்சாரியார் அருளி செய்வார். அந்த நித்ய ஸூரிகள் இவன் மேலுள்ள பரிவினால் குழந்தையை கொண்டாடி, இவனுக்கு மங்களாசாஸனம் செய்வதை வைகுந்தக் குட்டன் என்கிறார். பரமபதத்தில் ஸ்வதந்திரர் ஒருவரும் இல்லாததால் அங்கு அவன் இளவரசராக இருப்பது அவரின் தன்மைக்கு தகும். ஆனால் இந்த உலகத்தில் உள்ளவர்கள் ஸ்வதந்திரராக இருப்பதால், அவர்களுக்கும் மன்னனாக இருப்பதை நாம், உணர மதுரை மன்னன் என்றார். இடைச்சேரியிலுள்ள பஞ்சலக்ஷம் குடிக்கும் அரசர் நந்தகோபன் என்பதால் இவனை நந்தர்கோன் இளவரசு என்கிறார். சென்னி என்ற சொல் தலையைக் குறிப்பதாயினும், இங்கு நெற்றியைக் குறிக்கிறது. |
4 | வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி இடமுடை வதரி இடவகை உடைய எம் புருடோத்தமன் இருக்கை, தடவரை அதிரத் தரணி விண்டி அடியத் தலைப் பற்றிக் கரை மரம் சாடி கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்ட மென்னும் கடி நகரே. 4.7.9 | தென் திசை மதுரையில் இருந்து வேறுபட்டு இருக்கும் வடக்கு திசையில் உள்ள மதுரா, நித்ய வாசஸ்தலமான ஸ்ரீவைகுந்தம், புண்ணிய க்ஷேத்திரங்களில் பிரதானமாக கருதப்படும் முக்திநாத், நர நாராயணனர்களாய் தோன்றி திருமந்திரத்தை உபதேசித்து உகப்புடன் எழுந்து அருளி இருக்கும் பத்ரிநாத், பதினாறாயிரவர் தேவிமாராய் சேவை செய்ய மணவாளராய் வீற்று இருந்த துவாரகா, அயோத்தி நகருக்கு அதிபதி எனும் பெயர் பெற்ற அயோத்தியா, இவற்றை எல்லாம் தன்னுடைய வாசஸ்தலமாக கொண்ட எம்பெருமான் புருஷோத்தமன் இருக்கும் இடம் கண்டமெனும்கடிநகர் என்கிறார். பகிரதன் தவபலத்தாலே வருகின்ற வேகம், உயர்ந்த நிலத்தில் இருந்து பல மலைகளை கடந்து வருகின்ற வேகம், வானத்தில் இருந்து குதிக்கின்ற நீரின் வேகத்தால் பூமி விண்டு இடிந்து விழுங்கின்ற தன்மை, கரைகளில் உள்ள மரங்களை மோதி முறித்து அடித்து செல்கின்ற வேகம், ஒன்றாலும் கலங்காத கடலும் கலங்கும் தன்மை என்று கங்கையின் பெருமைகளையும் குறிப்பிடுகிறார். |
5 | அட்டுக் குவிசோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய்யளறும் அடங்கப் பொட்டத்துற்று மாரிப்பகை புணர்த்த பொருமா கடல்வண்ணன் பொறுத்த மலை வட்டத் தடங்கண் மடமான் கன்றினை வலைவாய்ப் பற்றிக் கொண்டு குற மகளிர் கொட்டைத் தலைப்பால் கொடுத்து வளர்க்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே. 3.5.1 | குறப்பெண்கள், பெரிய கண்களை உடைய, மான்குட்டியை வலையிலே பிடித்து, அதனைத் தங்களுடையதாக கொண்டு, அதற்கு பஞ்சுச் சுருளின் நுனியாலே பாலை எடுத்து ஊட்டி வளர்க்கும் இடம் ‘கோவர்த்தனம்’. மலையாக குவிக்கப்பட்ட சமைத்த சாதமும், ஓடையாகிற தயிர் திரளும், சேறு போல் கிடக்கின்ற நெய்யும் ஆகிய இவற்றை முழுதும் ஒரே கபளமாக, விரைவில் அமுது செய்து விட்டு, இதனால் இந்திரனுக்குக் கோபம் மூட்டி, பெரு மழையை பகையாக்கி, அலையெறிகிற பெரிய கடலினது நிறம் போன்றவனான கண்ணன் தனது திருக்கைவிரலால் தூக்கின மலையே கோவர்தனத்தில் வெற்றியை உடைய குடை ஆகும். வண்டி வண்டியாக வந்து திரண்டு கிடந்த சோற்றின் மிகுதியைக் கொண்டு ‘சோற்றுப் பகுப்பதம்’ எனப்பட்டது. மலையில் ஓடைகளும் சேறுகளும் இன்றியமையாதன ஆகையால், இங்குத் தயிர்த்திரளை ஓடையாகவும் நெய்ப்பெருக்கைச் சேறாகவும் உருவகப் படுத்தினார். பாலும், பழமும் காய்கறிகளும் அடக்கம். இந்திரன் பசிக்கோபத்தினால் ( கல்வ்ருக்ஷங்கள் – கல் மேகம் – ஆலம் கட்டி மழை) மேகங்களை ஏவி ஏழு நாட்கள் விடாமல் மழை பெய்வித்ததனால், மழையாகிற பகைக்குக் கண்ணன் காரணம் ஆனதால், ‘மாரிப்பகைபுணர்த்த’ என்கிறார். |
6 | வழு வொன்று மிலாச் செய்கை வானவர் கோன் வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்டு மழை வந்து எழுநாள் பெய்து மாத்தடுப்ப மதுசூதன் எடுத்து மறித்த மலை இழவு தரியாத தோரீற்றுப் பிடி இளஞ்சீயம் தொடர்ந்து முடு குதலும் குழவி இடைக் காலிட்டு எதிர்ந்து பொரும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே. 3.5.2 | ஒரு குறையுமற்ற செய்கைகளை செய்து இந்திர பதவியை அடைந்த தேவேந்திரனுடைய அதிகாரத்துக்கு கட்டுப்பட்டு, அவனுடைய கோபத்தினால் ஏவப்பட்ட மேகங்களானவை, குமுறிக் கொண்டு வந்து ஏழு நாட்களாக இடைவிடாமல் மழை பெய்து பசுக்களையும் மனிதர்களையும் துன்பப்படுத்த, கண்ணபிரான் எல்லாவற்றையும் காப்பதற்காக, அடியோடு எடுத்து தலைகீழாகப் பிடித்து அருளின மலையானது ‘கோவர்த்தனம்’ ஆகும். தன்குட்டியின் வருத்தத்தைப் பொறுக்கமுடியாத, அதனை பெற்ற பெண் யானையானது, தன் குட்டியை, தன்னுடைய நான்கு கால்களின் நடுவில் அடக்கிக்கொண்டு, அந்தச் சிங்கக்குட்டியோடு எதிர்த்து போரிட்ட இடம் கோவர்த்தனம் என்ற குடையே என்கிறார். |
7 | அம்மைத் தடங்கண் மடம் ஆய்ச்சியரும் ஆன ஆயரும் ஆநிரையும் அலறி எம்மைச் சரண் என்று கொள் என்று இரப்ப இலங்கு ஆழி கை எந்தை எடுத்த மலை தம்மைச் சரண் என்ற தம் பாவையரைப் புன மேய்கின்ற மானினம் காண்மினென்று கொம்மைப் புயக் குன்றர்சிலை குனிக்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே. 3.5.3 | அழகிய மை அணிந்த விசாலமான கண்களையும், மடப்பம் என்ற குணத்தையும் கொண்ட இடைச்சிகளும், ஆயர்களும், பசுக்கூட்டங்களும் மழையின் கடுமையால் கதறி, ‘எம்பிரானே! நீயே எங்களுக்கு ரக்ஷகனாக இருக்க வேண்டும் ’ என்று வேண்ட, பிரகாசமான ஆழியை கையில் ஏந்திய எங்களுக்கு ஸ்வாமியான கண்ணன், கையில் எடுத்த மலை, பெரிய புஜங்களை உடைய குறவர்கள், தங்களை சரண் என்று சேர்ந்த பெண்களின் கண்களை கண்டு, இவை மான் பேடைகள் என்று ஆச்ரயித்து தங்களின் வில்லினை வளைத்து நிற்கும் கோவர்தனம் என்ற குன்று ஆகும். இந்த பாடலில் ஆழ்வார் ஆழி என்று சொல்லியது, எம்பெருமான், இந்திரனை அழிக்க வேண்டும் என்று நினைத்து இருந்தால், தன்னுடைய திருக்கரத்தில் இருக்கும் சுதர்சன சக்கரத்தை உபயோகித்து இருக்கலாம், ஆனால் எம்பெருமானின் கருணையால் அவனை அழிக்க நினைக்கவில்லை என்பதை எடுத்து உரைக்க என்று உரையாசிரியர் கூறுகிறார். குறப்பெண்களின் கண்களை மானுக்கு ஒப்பிட்டு, அவை தங்களின் தோட்டங்களை அழிக்க வந்தனவோ என்று எண்ணி, வில்லினை கையில் எடுக்கிறார்கள் என்று சொன்னது மரபு கவிதை. |
8 | கடுவாய்ச் சின வெங்கண் களிற்றினுக்குக் கவளம் எடுத்துக் கொடுப்பானவன் போல் அடி வாயுறக்கை இட்டு எழப் பறித்திட்டு அமரர் பெருமான் கொண்டு நின்ற மலை கடல்வாய்ச் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கிக் கதுவாய்ப் படநீர் முகந்தேறி எங்கும் குடவாய்ப் பட நின் று மழை பொழியும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே. 3.5.4 | பயங்கரமான வாயையும் மிக்க சீற்றத்தையும் கூர்மையான கண்களையுமுடைய ஒரு யானைக்கு சோற்றுக் கவளத்தை எடுத்து கொடுக்கின்ற யானைப்பாகனைப் போல, தேவர்களுக்குத் தலைவனான கண்ணன், தன்னுடைய ஒரு திருக்கரத்தால் மலையின் அடிபாகத்தையும், மற்றொரு திருக்கரத்தினால் மலையின் மேல்பக்கத்தையும் பிடித்து தாங்கி நின்ற மலை கோவர்தனம் என்ற மலையாகும் . முதலில், மேகத்தை யானையாகவும் மலையைக் கவளமாகவும், அம் மலையை எடுத்து பிடிக்கின்ற கண்ணனைக் கவளமெடுத்துக் கொடுக்கும் பாகனாகவும் உருவகப் படுத்தினார். மீண்டும் மேகத்துக்கு யானையை உவமையாகக் கூறியுள்ளார். கடுவாய், சினம், வெங்கண் என்ற மூன்று அடைமொழிகளை மேகத்துக்கும் பொருந்தும். மேகங்கள் திருவாய்ப்பாடி முழுவதும் மழையைப் பொழிந்து வருத்த, அதனை குறைப்பதற்காக தூக்கின குடை கோவர்தனம் என்ற குடையே என்கிறார். |
9 | வானத்தில் உள்ளீர் வலியீர் உள்ளீரேல் அறையோ வந்து வாங்கும் என்பவன் போல் ஏனத் துருவாகிய ஈசன் எந்தை இடவன் எழ வாங்கி எடுத்த மலை கானக் களியானை தன் கொம்பிழந்து கதுவாய் மதம் சோரத் தன் கை யெடுத்து கூனல் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே. 3.5.5 | வராஹரூபம் கொண்டருளின ஸ்வாமியாயும் எனக்குத் தந்தையாயுமுள்ள கண்ணன், “மேலுலகத்திலிருப்பவர்களே! நீங்கள், என்னோடு சமமாக வல்லமை உள்ளவர்களாய் இருப்பீர்களாகில் இங்கே வந்து, இந்த மலையை தாங்கிக்கொண்டு நில்லுங்கள்” என்று சொல்கிறவன் போல், ஒரு மண்கட்டி போல் எடுத்து, நிற்கின்ற மலையாவது, காட்டில் செருக்குடன் திரிகின்ற யானையானது, ஓரிடத்தில் குத்துண்டு முறிந்த தன் தந்தத்தை இழந்ததனால் அக்கொம்பு முறிந்து புண்பட்ட வாயிலே மதநீரானது ஒழுக தனது துதிக்கையை உயரத்தூக்கி, வானில் தோன்றும் பிறையை தான் இழந்த கொம்பாக நினைத்து பிடிக்க விரும்பி மேல்நோக்கி பார்த்து கொண்டு இருக்கும் மலையே, கோவர்தனம் என்ற குடையே. கண்ணன், விடாது, வருந்தாது , தூக்கிக்கொண்டு இருக்கும் ஆற்றலை இங்கே ஆழ்வார் சொல்கிறார். மேலுலகத்தில் உள்ளவர்களிடம் உண்மையிலேயே வலிமை உள்ளவர்கள் ஆனால், இந்த மலையை சிறிது நேரம் தூக்குங்கள் என்று கூப்பிடுகிறார். பாதாள உலகம் சென்று பூமாதேவியை விடுவித்து திருஎயிற்றிலே தாங்கி நின்ற எம்பெருமானுக்கு இந்த மலையை தூக்குவது ஒரு அரிதான காரியமா என்று ஆழ்வார் கேட்கிறார். |
10 | செப்பாடுடைய திருமால் அவன் தன் செந்தாமரைக் கை விரல் ஐந்தினையும் கப்பு ஆக மடுத்து மணி நெடுந்தோள் காம்பாகக் கொடுத்துக் கவித்த மலை எப்பாடும் பரந்து இழி தெள்ளருவி இலங்கு மணி முத்து வடம் பிறழ குப்பாயமென நின்று காட்சி தரும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே. 3.5.6 | செவ்வைக் குணத்தை உடைய கண்ணன் தன்னுடைய செந்தாமரை மலர் போன்ற திருக்கரத்தில் உள்ள ஐந்து விரல்களையும் மலைக்கு கிளைக் கொம்புகளாக அமைத்து அழகிய நீண்ட திருத்தோளினை மலைக்கு தாங்கு காம்பாகக் கொடுத்து தலைகீழாகக் கவித்த மலையாவது, எல்லாப் பக்கங்களிலும் பரவி தெளிந்த சுனை நீர் அருவிகள் அழகிய முத்துக்களாலான சட்டை என்று காணப்பெற்ற கோவர்தனம் என்ற குடையே. செவ்வை குணம் என்பது, இந்திரனுக்கு கொடுக்க வேண்டிய சோற்றைத் தான் அமுது செய்து, அதனால் மழை பெய்ய வைத்து, அதனால் துன்பமுற்ற மக்களை ஈரமற்ற நெஞ்சத்துடன் இல்லாமல் தானே முன்னே இருந்து காப்பாற்றியது. இந்த குணம் பிராட்டியோடே சேர்த்தியால் வந்தது என்பர், அதனால், ஆழ்வார் திருமால் என்றார். |
11 | படங்கள் பலவும் உடைப் பாம்பு அரையன் படர் பூமியைத் தாங்கிக் கிடப்பவன் போல் தடங்கை விரல் ஐந்தும் மலர வைத்துத் தாமோதரன் தாங்கு தடவரை தான் அடங்கச் சென்று இலங்கையை ஈடு அழித்த அனுமன் புகழ் பாடித் தம் குட்டன்களை குடங்கைக் கொண்டு மந்திகள் கண் வளர்த்தும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே. 3.5.7 | பல படங்களையுடைய ஆதிசேஷன், தங்கள் பரந்த பூமியை தன்னுடைய தலையினால் தாங்கிக் கொண்டிருப்பது போல கண்ணன், பெரிய திருக்கரத்திலுள்ள ஐந்து விரல்களாலும் விரித்து தாங்கிக்கொண்டு இருக்கின்ற மலை, பெண் குரங்குகள் இலங்கையில், தங்களுடைய குலத்தில் தங்களுக்கு முன் அவதரித்த அனுமன், இலங்கையை துவம்சம் செய்த கீர்த்தியை பாடிக்கொண்டு, தங்களுடைய குட்டிகளை தங்கள் கைகளில் படுக்க வைத்துக் கொண்டு, கண் வளர்ந்த மலை கோவர்தனம் என்ற குடையே. |
12 | சலமா முகில் பல் கணப் போர்க் களத்துச் சரமாரி பொழிந்து எங்கும் பூசலிட்டு நலிவானுறக் கேடகம் கோப்பவன் போல் நாராயணன் முன் முகம் காத்த மலை, இலை வேய் குரம்பைத் தவ மா முனிவர் இருந்தார் நடுவே சென்று அணார் சொறிய கொலைவாய்ச் சின வேங்கைகள் நின்று உறங்கும் கோவர்த்தனம் கொற்றக் குடையே. 3.5.8 | நீர் கொண்ட கார்மேகங்கள் பல, யுத்த பூமியில் அம்புமழை பெய்தாற்போல் இடைச்சேரி முழுவதும், இடித்து முழங்கி யுத்தம் செய்து அங்குள்ள மக்களையும், ஆநிரைகளையும் வருத்தி, எங்களிடம் இருந்து தப்ப முடியமா என்று கேட்பது போல் இருந்தபோது, கண்ணன், அந்த அம்புமழை போன்ற மேகங்களை எதிர்கொண்டு கேடயம் போல் ஏந்திக்கொண்டு எல்லாவற்றையும் காப்பாற்றிய மலை, பர்ணசாலைகளில், வசிக்கின்ற முனிவர்களுக்கும், தவம் செய்பவர்களுக்கும் எதிரே, புலிகளைக் கண்டு அவர்கள் தங்களுடைய கழுத்தை சொரியும் நேரம், அவர்களை கொல்லக் கூடிய வாயையும் சினத்தையும் உடைய புலிகள் அந்த சுகத்திலேயே நின்றுகொண்டே உறங்கும் என்ற தன்மை கொண்ட கோவர்தனம் என்ற குடையே. |
13 | வன் பேய் முலை உண்டதோர் வாய் உடையன் வன்தூண் என நின்றதோர் வன் பரத்தை தன் பேரிட்டுக்கொண்டு தரணி தன்னில் தாமோதரன் தாங்கு தட வரைதான் முன்பே வழிகாட்ட முசுக் கணங்கள் முதுகில் பெய்து தம் முடைக் குட்டன்களை கொம்பேற்றி இருந்து குதி பயிற்றும் கோவர்த்தனமென்னும் கொற்றக் குடையே. 3.5.9 | கொடிய பூதனையின் விஷம் தடவின முலையை உண்ட வாயை கொண்ட கண்ணன், தன்னுடைய திருநாமத்தை ஒரு மலைக்கு கொடுத்து, பாரத்தைத் தாங்கிக் கொண்டு நின்ற ஒரு வலிமையான தூணைப்போல நின்று, இந்த உலகத்தில் உள்ளவர்கள் பார்க்கும்படி, தான் தாங்கி கொண்டு மலையானது, முசு என்ற குரங்குகள் தங்கள் குட்டிகளுக்கு மரம் விட்டு தாவுவதை கற்றுக்கொடுக்க அவைகளை தங்கள் முதுகில் காட்டிக்கொண்டு ஒரு மரக்கொம்பில் இருந்து மற்றொரு கொம்பிற்கு குதிப்பதை பழகுவிக்க செய்யும் கோவர்தனம் என்ற குடையே. கண்ணன், குன்றத்தை ஏந்தும் இந்த அற்புத செய்கையைப் பிரமன் இந்திரன் முதலிய தேவர்களுக்கு காட்டாது, தன்னுடைய பரம கிருபையினால் மனிதர்க்குக் காட்டி அருளியதை, தரணிதன்னில் என்று ஆழ்வார் கூறுகிறார். |
14 | கொடியேறு செந்தாமரைக்கை விரல்கள் கோலமும் அழிந்தில வாடிற்று வடிவு ஏறு திருவுகிர் நொந்துமில மணிவண்ணன் மலையும் ஓர் சம்பிரதம் முடி எறிய மா முகிற் பல் கணங்கள் முன்னெற்றி நரைத்தன போ குடியேறி இருந்து மழை பொழியும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே. 3.5.10 | அழகிய செந்தாமரை போன்ற திருக்கரங்களையும் திரு விரல்களையும் கொண்ட கண்ணன் ஏழு நாட்கள் இந்த குன்றினை ஏந்திய போதும், அழகு சிறிதும் குறையாமல், கொஞ்சமும் வாட்டமும் முடியாமல், திருநகங்களும் சிறிதும் நோவு எடுக்காமல், சிறிதும் மாற்றம் இல்லாமல் இருந்த நீலமணி போன்ற நிற கண்ணன், எடுத்த மலையும் அவன் நின்ற நிலையும் ஒரு மாயா ஜால வித்தையை போல் உள்ளது. அந்த மலை, முகட்டில் சேர்ந்த பல மேகங்கள் மழையை பெய்வித்து செழிப்பாக செய்ததனால் அந்த மலையின் முன்புறம் நரைத்திருந்ததைப்போல் பலர் குடியேறி வாழும் கோவர்தனம் என்ற குடையே. |
15 | அரவில் பள்ளி கொண்டு அரவம் துரந்திட்டு அரவப் பகையூர்தி அவனுடைய குரவில் கொடி முல்லைகள் நின்றுறங்கும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடை மேல் திருவிற் பொலி மா மறை வாணர் புத்தூர்த் திகழ் பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும் பரவு மன நன்கு உடைப் பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே. 3.5.11 | இந்த திருமொழி / பதிகம் கற்றவர்க்கு பலன் சொல்லி முடிக்கிறார். ஆதிசேஷன் மேல் பள்ளிகொண்டு, காளியன் என்ற பாம்பை துரத்தி விட்டு, பாம்பின் பகைவனான கருடனின் மேல் அமர்ந்து செல்லும் பரமாத்மா இந்த கண்ணன் என்று மொழிகிறார். ஸ்ரீ வைஷ்ணவர்கள் நிறைந்து விளங்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் வேதங்களை நன்கு அறிந்த பெரியாழ்வார் சொன்ன இந்த பத்து பாடல்களை விருப்பத்துடனும், பரவசமாய் பேசும் நல்ல மனதை உடைய பக்திமான்கள், தங்களுடைய ஞான, பிரேமா குணமான பகவத் அனுபவ கைங்கர்யங்களில் ஆழ்ந்து, அடியார்கள் கூட்டங்களுடன் சேர்ந்து இருக்கும்படியான சர்வ உத்தமமான ஸ்ரீவைகுந்ததை அடையப்பெறுவர் என்று முடிக்கிறார். |
16 | ஆனாயர் கூடி அமைத்த விழவை அமரர்தம் கோனார்க் கொழியக் கோவர்த்தனத்துச் செய்தான் மலை வானாட்டில் நின்று மாமலர்க் கற்பகத் தொத்திழி தேனாறு பாயும் தென்திரு மாலிருஞ் சோலையே. 4.2.4 | சொர்க்க லோகத்தில் உள்ள பெரிய பூக்களையுடைய கற்பக மரத்தில் இருந்த பூங்கொத்தில் இருந்து பெருகும் தேன் ஆறாய் பாய்ந்து ஓடுகின்ற அழகை உடைய திருமாலரின்சோலை, இடையர்கள் ஒன்று சேர்ந்து, இந்திரனுக்கு படைப்பதற்கு இருந்த உணவை தேவேந்திரனுக்கு சேராமல், கோவர்தன மலைக்கு அருளிய கண்ணனின் மலையாகும். |
17 | நான் ஏதும் உன் மாயம் ஒன்று அறியேன் நமன் தமர் பற்றி நலிந்திட்டு இந்த ஊனே புகேயென்று மோதும் போது அங்கேதும் நான் உன்னை நினைக்க மாட்டேன் வானேய் வானவர் தங்கள் ஈசா மதுரைப் பிறந்த மாமாயனே என் ஆனாய் நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.4.10.8 | பரமபதத்தில் நித்யஸூரிகளுக்கும் முக்தாத்மாக்களுக்கும் தலைவனாக இருப்பவனே, திருவடமதுரையில் திருஅவதாரம் செய்தவனே, மிக ஆச்சரியமான சக்திகளை உடையவனே, பாகனுக்கு வசப்பட்டுள்ள யானையைப் போல் எனக்கு வசப்பட்டு உள்ளவனே, அடியேன் உன் மாயைகளில் எதுவும் அறிய மாட்டேன், திருவரங்கத்தில் ஆதிசேஷன் மேல் பள்ளிகொண்டு இருப்பவனே, யமகிங்கர்கள் என்னை பிடித்து, இந்த சரீரத்தோடு கொடுக்க வேண்டிய துன்பங்களை அளித்தபின், ‘இந்த யாத்நாசரீரத்தினுள்ளே செல்” என்று சொல்லி துன்புறுத்தும் போது உன்னை நினைக்க மாட்டேன், நீதான் என்னை காக்க வேண்டும் என்பது இந்த பாட்டின் பொழிப்புரை. நரகத்தில் மிகவும் தீவிரமான வேதனைகளை அநுபவிப்பதற்காக யமகிங்கரர்களினால் இந்த ஆத்மாவிற்கு பூட்டப்படும் சரீரத்திற்கு ‘யாத்நா சரீரம்” என்று பெயர். |
மீண்டும் இன்னொரு ஆழ்வார், இன்னொரு திவ்யதேசம், என்ற ஒரு கருத்தோடு உங்களை சந்திக்கிறேன். நன்றி.
Extremely well written, simple and straight to Understand the வட மதுரை Article.
Nandri and Namaskarams
Yours Swaminathan
Thanks Swami for your kind words and encouragement. Regards