திருமாலை-மனதிலோர் தூய்மை இல்லை

திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.

முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார்,  அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான் என்று சொல்லி நம்மை அரங்கனிடம் அழைத்து செல்கிறார்.

அப்படியும் மக்கள் எல்லோரும் ஆழ்வார் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் அவர்களை விட்டு, எம்பெருமான் தனக்கு செய்த மிக பெரிய உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார்.

  • 26 தத்துவங்களில் உயரிய தத்துவமான பரமாத்மாவில் உள்ள சந்தேகங்களை திருவரங்கன் ஆழ்வாருக்கு தீர்த்து வைத்தான். (‘மெய்யெற்கே மெய்யனாகும்’)
  • ஆழ்வாரின் நெஞ்சில் வந்து புகுந்து அவனிடத்தில் அன்புவெள்ளம் பெருக வைத்தான். (“சூதனாய் கள்வனாய்“)
  • தனது கடினமான நெஞ்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து, ஒரு யோக்கியதையும் இல்லாத தனக்கு அவனது சேவையையும் அருளையும் கொடுத்தான் (விரும்பி நின்று)
  • பலகாலங்களாக சேவிக்காத இழப்பை சரி செய்து அவனை தரிசிக்க வைத்து கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக வைத்தான் (‘இனித்திரை திவலை மோத “)
  • நான்கு திசைகளை படைத்தது, அவற்றில் தன்னுடைய அங்கங்களை வைத்து, அவற்றைக் கொண்டு நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்தான். (குடதிசை முடியை வைத்து‘)
  • திருவரங்கனின் திரு அவயவங்களின் அழகும், அவைகளால் வந்த தேஜஸும், அடியவர்களுக்காகவே என்று ஆழ்வாரை மகிழ செய்தான். (“பாயும் நீர் அரங்கம் தன்னுள்“)
  • திருவரங்கனிடம் மஹாவிஸ்வாசம் இல்லாமல் போனதால் இத்தனை காலம் பகவதனுபவத்தை இழந்ததை சொல்லி ஆழ்வாரை கலங்க வைத்தான். (பணிவினால் மனம் அது ஒன்றி)
  • வேதங்களும், சான்றோர்களும் பேசிய பேச்சுக்களைக் கொண்டே நாம் திருவரங்கனின் பெருமைகளை எளிதாக பேசமுடியும் என்றும், நாம் சிரமப்பட்டு புதிதாக ஒன்றும் கண்டுபிடித்து சொல்ல வேண்டியதில்லை என்றும் ஆழ்வாரை பாட வைத்தான். (பேசிற்றே பேசல் அல்லால்)
  • சயனத் திருக்கோலத்தின் அழகினை திருவரங்கத்தில் காண்பித்து அதனை மறந்து ஆழ்வாரை வாழமுடியாதபடிச் செய்தது. (கங்கையில் புனிதமாய)
  • சரணாகதிக்கு தேவையான தகுதி ஒன்றும் தனக்கு இல்லை என்று ஆழ்வாரை உணரச்செய்து அவரை, சரணாகதிக்கு எம்பெருமான் தயார் செய்தான். (வெள்ளநீர் பரந்து பாயும்)

இதுவரை, எம்பெருமான் தனக்கு கொடுத்த அனுபவத்தை சொல்வது (1-3), தன்னுடைய அனுபவத்தை கொண்டு உபதேசம் செய்வது (4-14), மற்றும் எம்பெருமான் தனக்கு செய்த நன்மைகளை நினைத்துக் கொள்ளுதல்(15-24) என்ற முதல் மூன்று உட்பிரிவுகளை பார்த்த பின் தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை என்று ஒரு ஐந்து பாடல்களிலும், எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று அடுத்த ஐந்து பாடல்களிலும் ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற இந்த நான்காவது பகுதியை இப்போது அனுபவித்து வருகிறோம்.

அதில் உள்ள முதல் பாசுரத்தை, திருமாலையின் 25வது பாடலில்  (குளித்து மூன்று அனலை) ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி கூட இல்லை, திருவரங்கன் அந்தத் தகுதி முதல் எல்லாவற்றையும் அருள வேண்டும் எனக் கேட்டு கொண்டதை பார்த்தோம்.

சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட கர்ம, ஞான, பக்தி யோகங்கள் இல்லை என்றால், மற்றவர்கள் செய்யக்கூடிய அர்ச்சனை, துதி போன்றவற்றை செய்யலாமே என்று பெரியபெருமாள் கேட்க, அவைகளும் தன்னிடம் இல்லை என்று ஆழ்வார் சொல்வதாக அமைந்த போதெல்லாம் போது கொண்டு ( 26) பாசுரம்.

மனிதர்கள் செய்யக்கூடிய எந்த நற்செயல்களையும் ஆழ்வார் செய்யாவிட்டாலும், பரமபதத்தில், அனந்தாழ்வான், கருடன், விஷ்வக்சேனர் மூலம் ஏற்றுக்கொள்ளும் சேவைகளை, விலங்குகளைக் கொண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பி, எம்பெருமான் ராமனாக அவதரித்த காலத்தில், குரங்குகளும், அணில்களும் தங்கள் சக்திக்கு தகுந்தாற் போலும், நல்ல நெஞ்சத்தோடும் செய்தது போல், ஆழ்வாரும் ஏதாவது செய்யலாமே என்று பெரியபெருமாள் வினவ, அதுவும் இல்லை என்று ஆழ்வார் மறுப்பது போல் அமைந்துள்ள உள்ள  குரங்குகள் மலையை நூக்க (27) பாசுரம்.

உம்பரால் அறியலாகா (28) என்ற அடுத்த பாடலில், பிரம்மா போன்ற தேவர்களால் கூட, அறியமுடியாதபடி, பரமபதத்தில் உள்ள எம்பெருமான், முதலைமேல், கோபித்துக் கொண்டு வரும்படி செய்த, கஜேந்திரன் என்ற யானையின், எம்பெருமான் தன்னை காத்தருள வேண்டும் என்று கதறிய சிந்தனையும் ஆழ்வார் தனக்கு இல்லை என்றும், கஜேந்திரனுக்கு அருளியதைப் போல், தம் அடியவர்களைக் காக்கும் பொருட்டு அவன் இருக்கையில், அப்படிப்பட்ட எம்பெருமானுக்கு தொண்டு செய்யாமல், தான் எதற்காக பிறந்தேன் என்று ஆழ்வார் வருந்தியதும் கூறப்பட்டது.

குளித்து மூன்று அனலை (25) பாசுரத்தில் மனம், வாய் மற்றும் கை போன்றவைகளைக் கொண்டு சிந்தித்து, பாடி, மலர்களை தூவி, என்ற மூன்று விதமான செயல்களையும் சேர்ந்து செய்து இருக்கிறீர்களா என்று எம்பெருமான் கேட்டதாகவும், அடுத்த பாசுரமான,  போதெல்லாம் போது கொண்டு(26) பாடலில், வாயினால் பாடி என்பதை மட்டும் தனியாக கேட்டதாகவும், அடுத்த பாசுரமான குரங்குகள் மலையை நூக்க (27)  பாடலில்,  கை கால் போன்றவற்றைக்கொண்டு சேவை செய்து இருக்கிறீர்களா என்றும், உம்பரால் அறியலாக (28) பாடலில், மனதினால் சிந்தித்து  இருக்கிறீர்களா என்பதை தனித்தனியாக கேட்பதாகவும் கொள்ளலாம்.

அடுத்த பாசுரமான ஊரிலேன் காணியில்லை (29) பாசுரத்தில், எம்பெருமான் உகந்து அருளின திவ்யதேசங்களுடன் சம்பந்தங்கள் உள்ளவர்களை எம்பெருமான் ரக்ஷித்தே தீர்வான் என்று இருப்பதால், அது போல் ஏதாவது உண்டா என்று எம்பெருமான் வினவ, அதுவும் இல்லை என்று ஆழ்வார் மறுக்கிறார்.

25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற இந்த நான்காவது பகுதியில், 25 முதல் 29 வரை, ஆழ்வார் தன்னிடம் எந்த நன்மையையும் இல்லை அல்லது எந்த நல்ல குணமும் இல்லை என்று சொல்லியதை பார்த்தோம், இனி வரும் ஐந்து பாடல்களில், தன்னிடம் எல்லாவிதமான தீமைகளும் உண்டு அல்லது எல்லா கெட்ட குணங்களும் உண்டு என்று சொல்வதை பார்க்கலாம்,

இந்த வகையில், தன்னிடம், மற்றவர்கள் ஏற்றம் பெறுவதை பொறுக்காத தீயகுணம் உள்ளதாக சொல்லும், அடுத்த பாடலை இங்கே காண்போம், நன்றி.

பாசுரம் 30

மனத்திலோர் தூய்மை யில்லை வாயிலோர் இன்சொல் இல்லை, சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன் வாளா, புனத்துழாய் மாலை யானே பொன்னி சூழ் திருவரங்கா, எனக்கு இனி கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே. (30)

எம்பெருமான் ஆழ்வாரிடம், மேலே சொன்ன ஐந்து பாடல்களில் எந்தவிதமான நல்ல குணங்களும் இல்லை என்று சொன்னதை ஏற்றுக்கொண்டு, ஒருவிதமான நன்மையையும் இல்லாதை போல், ஒருவித தீமைகளும் இல்லாது இருந்தால் அது போதும், அதைக் கொண்டே ஆழ்வார் விரும்பும் வீடு போன்ற பேறு கொடுப்போம் என்று சொல்ல, அதற்கு ஆழ்வார், ஆளவந்தார் என்ற ஆச்சாரியார் பின்னொரு காலத்தில் சொன்னது போல், தன்னிடத்தில் இல்லாத தீமை, உலகத்திலேயே இல்லை, எல்லாவித தீமைகளும் தன்னிடம் குடி கொண்டு இருக்கின்றன என்கிறார்.  

நம்மாழ்வார், திருவாய்மொழியில் (3.3.4) நிறையொன்றும் இல்லேன், என்று சொன்னதை, தொண்டரடிபொடியாழ்வார், 25வது பாடல் முதல் 29வது பாடல் வரை, தன்னுடைய நன்மை இல்லாமையை சொல்கிறார். அதே பாடலில் நீசனேன் என்று சொன்னதை, தொண்டரடிபொடியாழ்வார், 30வது பாடல் முதல், 34வது பாடல் வரை தாழ்வுகள் அனைத்திற்கும் கொள்கலமாய், இருப்பதாக விவரிக்கிறார்.

திருத்துழாயை மாலையாக அணிந்துள்ளவனே, காவிரியாலே சூழப்பட்ட ஸ்ரீரங்கத்தில் இருந்து அருளுபவனே, அடியேனை அடிமையாகக் கொண்ட ஸ்வாமியானவனே, என் மனதில் தெளிவு கொஞ்சமும் இல்லை, ஒரு நற்சொல்லும் வாயில் இருந்து வருவதில்லை, கோபத்தினால் பகைமையுடன் பார்த்து, மிக கொடுமையான வார்த்தைகளை சொல்பவன், இப்படி துர்குணங்கள் கொண்ட எனக்கு என்ன கதி, எம்பெருமான் தான் அருள வேண்டும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை. இனி சிறிது விளக்கத்துடன் கீழே காண்போம்.

மனத்திலோர் தூய்மை யில்லை

காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்சர்யம் என்ற பல துர்குணங்களில் ஏதாவது ஒன்றில் கொஞ்சம் குறைத்தாலாவது கொஞ்சம் சுத்தி ஏற்படும் என்று ஆழ்வார் சொல்கிறார். மனதை சுத்தமாக வைத்திருப்பதை பேற்றுக்கு உதவியாக உள்ளதை ஆழ்வார் சொல்கிறார். பரமாத்மா, கண்களாலும் வாக்காலும், அறியப்பட முடியாதவன் என்றும், விவேகம் முதலியவற்றால் சுத்தி அடைந்த மனத்தினால் மட்டுமே அறியப் படுகிறான் (மனஸா து விசுத்தேந) என்ற வாக்கியதாலும், “எவர்கள் ஞான ஸ்வரூபமான ஆத்மாவை அறிந்தவர்களாயும், விவேகம் முதலியவற்றால் சுத்தி அடைந்த மனதை உடையவர்களையும் உள்ளனரோ, அவர்கள், உலகம் எல்லாவற்றையும் ஞானமயமானது என்றும் அது எம்பெருமானின் உடலாகவும் உள்ளதை அறிந்து கொள்கிறார்கள்” என்ற விஷ்ணு புராண (1-4-41) ஸ்லோகத்தாலும், மனத்தூய்மை, பரமாத்மா ஞானமாகிற பேறுக்கு உபாயமாக சொல்கிறார்கள். அந்த தூய்மை தன்னிடம் இல்லை என்று ஆழ்வார் சொல்கிறார். அந்த தூய்மை இல்லாதால், மனதுக்கு தோஷங்களான, காமம், குரோதம், லோபம்(பேராசை), பயம், துவேஷம், மோகம், மதம், மாத்சர்யம் என்பவை எதாவது ஒருவிதத்தில் எப்போதும் குடிகொண்டு உள்ளன என்றும் அதனால், ஒரு போதும் மனம் தூய்மை ஆக இருப்பதிலை என்று ஆழ்வார் சொல்வது தெரிய வரும்.

வாயிலோர் இன்சொல் இல்லை

மனது முழுமையாக கெட்டுப் போயிருந்தாலும், வாயினால் சில நல்ல அல்லது பிரியமான சொற்களை சொல்வதுண்டா என்று எம்பெருமான் வினவ, தான், அப்படியும் இல்லை, மறந்தும் ஒரு நல்ல வார்த்தை வாயினில் இருந்து வருவதில்லை, என்று ஆழ்வார் தன்னை பற்றி கூறுகிறார். இன்சொல் இல்லை என்றது, தான் யாரையும் குளிர விசாரித்தது கிடையாது, தன்னை விசாரித்தவரையும் இனிய மறுமொழி கூறி குளிர்வித்தது கிடையாது என்கிறார். பெரிய திருமொழியில், திருமங்கையாழ்வார் சொல்லிய “நெடுஞ் சொலால் மறுத்த நீசனேன், ” என்ற 1.6.5 நைமிசாரண்ய பாடலை இங்கு நினைவு கூறலாம்.

மேற்சொன்ன இரண்டு தொடர்களாலும், தனக்கு நிறைவு ஒன்றும் இல்லை என்று, இதற்கு முன் சொன்ன ஐந்து பாடல்களில் சொன்ன கருத்தை சுருக்கமாக சொல்கிறார்.

சினத்தினால் செற்றம் நோக்கித்

மனத்தூய்மையும் இன்சொல்லும் இல்லாவிட்டாலும், இவரிடம் இருந்து ஒதுங்கி பிழைக்கலாம் என்று தப்பி செல்ல முயல்பவர்களையும் தப்ப முடியாதபடி, இவர் வலியச் சென்று அவர்களுக்கு தீமை செய்ய முயல்வதாக ஆழ்வார் சொல்கிறார். முதலில் நெஞ்சில் உள்ள கோபத்தையெல்லாம் காட்டி விரோத பாவத்துடன் அவர்களை எரிப்பது போல், அதாவது, எதிரியானவன் சுருண்டு விழும்படி பார்ப்பேன் என்கிறார். சினம் என்றாலும் செற்றம் என்றாலும் கோபம் என்ற ஒரே அர்த்தத்தையே தருவதால், ஆழ்வார் மிகவும் கோபமுடன் பார்ப்பதாக எடுத்துக் கொள்ளலாம். ஒருவன் நல்ல ஆடையை உடுத்திக்கொண்டு, நல்லவனாக இருந்தால், அவனுடைய அந்த மேன்மையைப் பொறுக்க மாட்டாமல், காரணம் ஒன்றும் இல்லாமல், தான் அவர்களை பழித்துக் கூறும் சொற்களுக்கும் ஒரு அளவே இல்லை.

தீவிளி விளிவன் வாளா

ஆழ்வார் சொல்வதாவது, அவரை பார்த்தால் இப்படி கோபப் பார்வையுடன் எப்போதும் இருப்பாரா என்றால் இல்லை; வாய் திறந்து பேச தொடங்கினால் கேட்பவர்களுக்கு நெருப்பை வாரி கொட்டி, பூண்டோடு அழியும்படி இருக்கும் வார்த்தைகள் என்கிறார். இப்படி சொல்கிற வார்த்தைகளால் ஏதாவது பயன் உண்டா என்றால் இல்லை; இப்படி பார்ப்பதும், சொல்வதுமே பயனாக கருதி செய்வதாக ஆழ்வார் சொல்கிறார். இதன் கருத்து, சத்வ குணம் மிக்க நல்லவர்கள், பிறர் பயன் பெறுவதையே தங்கள் பயனாக எண்ணிக் கொள்வது போல், பிறர் துன்பப்படுவதையே தனக்கு பயனாக நினைத்து இருப்பதாக ஆழ்வார் சொல்வதாக பொருள்.

புனத்துழாய் மாலை யானே

“நீர் இவ்வளவு தீமை உடையவரானால் தன்னை நிர்பந்திப்பதில் எந்த பயனும் இல்லை ” என்று எம்பெருமான் திருவுள்ளமாக, அதற்கு ஆழ்வார், “அடியவர்களின் தாழ்வுகளை பார்த்து, அகல முடியாதபடி, அவர்கள் நம்மிடம் வேண்டுவதை ஒன்றையே அவர்களிடம் எதிர்பார்த்து, அவர்களை பாதுகாப்போம்” என்று பாதுகாப்பதிலேயே குறிக்கோளாக உறுதியாக கொண்டு, அதற்கேற்ப, திருத்துழாய் மாலை அணிந்து இருப்பவர் அன்றோ தேவரீர், நீர் ஸ்வாமியாக இருப்பதையும் இனிமையாக இருப்பதையும் கண்டபின், உம்மை விட்டு அகலமுடியுமோ ?’ என்று விடையளிக்கிறார். புனம் என்பது துளசி விளையும் செழிப்பான நிலத்தை குறிக்கிறது. இங்கு எம்பெருமானின் திருமார்பில் அதேபோல் இருக்கும் திருத்துழாய் மாலையை உடையவனே என்று சொல்கிறார்.

பொன்னி சூழ் திருவரங்கா

பாதுகாப்பவனாக இருந்தாலும், அருகில் இல்லாமல் இருந்தால், பயன் இல்லை; ஆனால் எம்பெருமான், தனக்கு மிக அருகில் திருவுள்ளம் கொண்டு இருப்பதாக சொல்கிறார். எந்த அளவு தாழ்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களையும் ஆட்கொள்வதுபோல் ஆச்சரியமாக திருவரங்கத்தில் எழுந்து அருளி உள்ள எம்பெருமானே என்கிறார். தங்களை போன்றவர்கள் கரும பலனை அனுபவிப்பதற்கு எம்பெருமான் ஏன் தனிமாலை அணிந்து கொண்டு இருப்பானேன் என்று வினவுவது போல் உள்ளது.  

பொன்னிசூழ் என்று சொன்னது, திருத்துழாய் மாலைக்கு மாலை சூடினாற்போல் திருக்காவேரியால் சூழப்பட்டு இருப்பது என்கிறார்.

எனக்கு இனி கதி என் சொல்லாய்

எனக்கு என்று சொன்னது, இது வரை சொல்லப்பட்ட அத்தனை தாழ்வுகள் நிறைந்திருக்கும் தன்னை சொல்லிக்கொள்கிறார். இனி என்று சொல்வது, தன்னுடைய தாழ்வுகளை சொல்லிக்கொண்டு, தன்னை பாதுகாத்துக் கொள்ள முயலாமல், தன்னை பாதுகாத்துக்கொள்ளும் பொறுப்பை எம்பெருமானிடம் ஒப்படைத்த பின்பு என்று கொள்ளவேண்டும். கதி என் சொல்லாய் என்று சொல்வது, உய்ய வழி சொல்லவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். உஜ்ஜிவிக்க முடியாதபடி தீமைகளை எல்லாம் சம்பாதித்துக் கொண்டு, தான் உஜ்ஜிவிக்க தேவரீர் வழி சொல்ல வேண்டும் என்று வழக்காடுவது போல் உள்ளது. ஆனால் ஆழ்வார் வழக்காடவில்லை.

என்னை ஆளுடைய கோவே

எம்பெருமான் வகுத்த (பொருத்தமான) ஸ்வாமியாக இருப்பதால், ஆழ்வார் வழக்காடவில்லை. “நீர் உஜ்ஜிவிக்க வழி கேட்டவுடன் தான் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் என்ன ” என்று எம்பெருமான் திருவுள்ளமாக, அதற்கு ஆழ்வார் “தான் அடிமையாய் இருப்பதும், எம்பெருமான் ஸ்வாமியாக இருப்பதும் எப்போதும் நிலையாக இருக்கும் ஒன்று அன்றோ, ஆகையால் தன்னை காப்பதற்கு அவனை தவிர வேறு யார் தகுதி பெற்றவர் இருக்கிறார், தன்னுடைய ஆத்மா தாழ்வுற்று போனால் அதனால் வரும் குறையும் எம்பெருமானையே சேருமே ” என்று கவலை தோன்ற ஆழ்வார் இந்த பாடலை முடிக்கிறார்.

மீண்டும் அடுத்த பாடலில் சந்திக்கலாம், நன்றி.

2 Comments on “திருமாலை-மனதிலோர் தூய்மை இல்லை

  1. அழகிய விளக்கம். நன்றி. வணக்கம். அடியேன்.

    • ஐயா மிக்க நன்றி. இது போன்ற உங்கள் கருத்துக்கள் எங்களுக்கு உற்சாகம் அள்ளித்து இன்னும் சரியாக செய்ய உத்வேகம் அள்ளிக்கிறது. நன்றிகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d