A Simple Devotee's Views
பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம்.
திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே என்று நம் பெரியவர்கள் கூறி உள்ளார்கள்.
இவற்றில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்து சில பாசுரங்களை முன்பு பார்த்து உள்ளோம். பொதுவாக முதலாழ்வார்களுக்கு வேங்கடமுடையானிடம் அதிக பற்று கொண்டு இருந்தார்கள் என்பதும் அவர்கள் அவனுக்கு நிறைய பாடல்கள் பாடினார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து திருவேங்கடமுடையானை முன்னிட்டு
இனி பெரியாழ்வாரின் புதல்வியாகிய ஆண்டாள் நாச்சியார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 16 பாசுரங்களை இங்கே காண்போம்.
ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்று இரண்டு பாசுரங்கள் பாடி உள்ளார். திருப்பாவை 30 பாசுரங்களும், நாச்சியார் திருமொழி 143 பாசுரங்களும் சேர்ந்து மொத்தம் 173 பாசுரங்கள் உள்ளன. அவற்றில் பதினாறு (16) பாசுரங்கள் திருவேங்கடமுடையான் மேல் உள்ளன, அவற்றை கீழே காண்போம்.
1. தையொரு திங்களும் தரைவிளக்கித், தண் மண்டலமிட்டு மாசி முன்னாள், ஐய நுண் மணற்கொண்டு தெருவணிந்து, அழகினுக்கு அலங்கரித்த அனங்க தேவா, உய்யவும் ஆங்கொலோ என்று சொல்லி, உன்னையும் உம்பியையும் தொழுதேன், வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக்கை, வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே. (1.1)
கண்ணபிரானோடு சேர்வதை எண்ணி, திருப்பாவையில் பாவை நோன்பு நோற்ற ஆண்டாள், அவன் வந்து சேராததால், இனி நாம் சும்மா இருக்கலாகாது என்று பிரிந்தாரைச் சேர்ப்பிக்க வல்லவன் மன்மதன் என்று அறிந்து அவனது காலில் விழுந்தாவது கண்ணபிரானோடு கூடப்பெறுவோம்’ எனக்கருதி, அந்த மன்மதனைத் தன் காரியம் செய்யும்படி ஆராதிக்க நினைத்து, அவன் வரவேண்டிய இடங்களையும் தெருக்களையும் அழகிய சிறு மணல்களால் அலங்கரித்து அழகுபெற வைத்து பூஜைக்காக மேடையிட்டு அவனையும் அவன் தம்பியையும் வணங்குவதாகக் கூறும் பாசுரம், இது.
“உய்யவுமாங்கொலோ!” என்று ஐயப்படுவதற்குக் காரணம், ஸ்வரூப நாசத்தை விளைவிக்கவல்ல தேவதையாகிற மன்மதனை பற்றியதால், இப்பற்று உஜ்ஜீவனம் செய்ய உதவுமா அல்லது கீழே தள்ளி விடுமோ என்று ஆண்டாள் நெஞ்சு தவிக்கும்படி சொல்கிறார். மன்மதனுக்குப் பல பெயர்கள் இருக்க, அவற்றைவிட்டு ‘அனங்க தேவா!’ என்றழைத்தமையால், ‘நீ உன் உடம்பை இழந்தும் பிரிந்தாரை சேர்த்து வைப்பவன்’ என்ற கருத்துத் தோன்றும்படி அமைந்துள்ளது. ஆண்டாள் திருப்பாவையில் கண்ணபிரானைப் பற்றும் போது, நம்பிமூத்தபிரான் (பலராமன்) முன்னதாக பற்றியதால், அதே நினைவோடு இங்கும் மன்மதனை உடன் பிறந்தானோடு கூட தொழுவதை, “உன்னையும், உம்பியையும் தொழுதேன்” என்று ஆண்டாள் கூறுகிறார். கண்ணபிரானுக்கும் ருக்மணிபிராட்டியும் மன்மதன் அம்சமாக பிறந்தவர் ப்ரத்யும்னன்; கண்ணபிரானுக்கும் ஜாம்பவதி தேவிக்கும் பிறந்தவன் சாம்பன் என்று பாகவதம் கூறுகிறது. இவர்களையே “காமன் தம்பி சாமன்” என்று பெரியவாச்சான் பிள்ளை இந்த பாடலுக்கான உரையில் கூறி உள்ளார். ஸ்ரீ வைகுண்டத்தில் நித்யஸூரிகளுக்கு காட்சிக் கொடுத்துத் தன் செருக்குத் தோற்ற வீற்றிருக்கும் எம்பெருமான், ‘ஸம்ஸாரிகளும் இப்பேற்றைப் பெற்று வாழவேணும்’ என்று அந்த பரமபதத்தில் இருந்து கிளம்பி அடியார்களின் விரோதிகளை அழிக்கும் இயல்பினனாகவும், சக்கரத்தாழ்வானை கையில் பிடித்து திருமலையில் இருப்பவனுமான எம்பெருமானோடு தன்னை சேர்த்து வைக்க சொல்கிறார்.
2. மத்த நன் நறுமலர் முருக்கமலர், கொண்டு முப்போதும் உன்னடி வணங்கி, தத்துவம் இலியென்று நெஞ்சு எரிந்து, வாசகத்(தை) அழித்து உன்னை வைதிடாமே, கொத்தலர் பூங்கணை தொடுத்துக் கொண்டு, கோவிந்தன் என்பதோர் பேரேழுதி, வித்தகன் வேங்கட வாணனென்னும், விளக்கினில் புக என்னை விதிக்கிற்றியே (1.3)
நல்ல மணமிக்க ஊமத்த மலர்களையும் முருக்க மலர்களையும் கொண்டு மூன்று காலங்களிலும் உன் அடிகளை வணங்கி, ‘இவன் பொய்யான தெய்வம்,’ என்று சொல்லி மனம் கொதித்து அவனை நிந்திக்க வேண்டாதபடி கொத்துக் கொத்தாக புஷ்பங்களாகிற அம்புகளை வில்லில் தொடுத்துக் கொண்டு கோவிந்த நாமத்தை நெஞ்சில் ஏற்றிக் கொண்டு அற்புதனான திருவேங்கடமுடையான் என்கிற விளக்கிலே தன்னை சேர்க்க வேண்டும் என்று ஆண்டாள் சொல்கிறார்.
மன்மதன் ரஜோ குணம் உடையவனாதலால், ஊமத்தை மலர்களும் முருக்க மலர்களும் அவனுக்கு இடத்தக்கவை என்று அவற்றை பாடி உள்ளார். தான் மன்மதன் அடி பணிவதற்குப் பலனாக தன்னுடைய எண்ணத்தை அவன் நிறைவேற்றாவிட்டால், தனது நெஞ்சானது மிகவும் கொதிப்படைந்து, ‘மன்மதன் உண்மையான பலன் தரும் தெய்வம் இல்லை, பொய்த்தெய்வம்’ என்று நாடெங்கும் அறியும் வண்ணம் அவன் சிறப்பை அழிக்க நேரிடும் என்று சொல்லும் பாடல்.
கோவிந்தனென்பதோர் பேரேழுதி என்று இந்த பாட்டிலும், “கடல்வண்ண னென்பதோர் பேரேழுதி” என்று இதற்கு முந்தைய (2) பாட்டிலும் சொன்னது குறிப்பிடத்தக்கது.
3. காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர், வாட்டமின்றி மகிழ்ந்து உறை வாமனன், ஓட்டரா வந்து என் கைப்பற்றி தன்னோடும், கூட்டு மாகில்நீ கூடிடு கூடலே (4.2)
மனக்கவலை கொண்டவர் குறி பார்ப்பது ஒரு பழக்கம். பலசோழிகளை தரையில் உள்ள ஒரு வட்டத்தில் எறிந்து, பின்பு ஒற்றை எண்ணுள்ள சோழிகள் வட்டத்தினுள் இருந்தனவா, இரட்டைபடை எண்ணுடன் இருந்தனவா என்று பார்த்து அதன்படி தான் எண்ணிய காரியம் நடக்குமா என்று மனதை திடம் செய்து கொள்வார்கள். அப்படிப்பட்ட அனுபவத்தை ஆண்டாள் இந்த பதிகத்தில் பாடுகிறார்.
காட்டிலுள்ள திருவேங்கடமலையில், நகரமாகிய திருக்கண்ண புரத்திலும் மனக் குறை இல்லாமல், திருவுள்ளம் உகந்து, நித்யவாஸம் செய்தருளுகிற வாமன அவதாரம் செய்த எம்பெருமான் ஓடிவந்து தன்னுடைய கையைப் பிடித்து அனைத்துக் கொள்வானா என்று கூற குறி பார்க்கிறார். இதையே சுவையாக, நம் உரையாசிரியர்கள், எம்பெருமான் தன்னோட சேர வேண்டும் என்று திருவேங்கடமலை, திருக்கண்ணபுரம் முதலிய திருப்பதிகளிலே வந்து நிற்பதாகவும், ஆண்டாளுக்கு அதில் விருப்பம் இருக்குமோ இல்லையோ என்று தயங்கி, நிற்கின்றான் என்றும், அப்பெருமான் தன்னுடைய மனதில் உள்ளதை நன்கு அறிந்து, விரைவில் ஓடிவந்து தன்னை அணைத்துக் கொள்ளுமாறு விதி வாய்க்க வேணும் என்று நினைப்பதாக சொல்வர்.
காட்டில் வேங்கடம் என்று கூறியது தண்டகாரண்யத்தில் ரிஷிகளோடே கூடியிருந்ததற்கு ஒப்பாகவோ, விருந்தாவனத்திற்கு ஒப்பாகவோ கொண்டும், கண்ணபுர நகர் வாசம், அயோத்தியில் அனைவருடன் கூடி இருந்த நகர வாசத்திற்கு ஒப்பாகவோ ஆயர்பாடிக்கு ஒப்பாகவோ கொள்ளலாம் என்பது உரையாசிரியர் கூற்று. நகர வாசம், வன வாசம் இரண்டையும் இனிதாக ஏற்ற விபவங்களைப்போல் அர்ச்சாவதாரங்களும் என்று சொல்கிறார். வாட்டமின்றி மகிழ்ந்துஉறை என்றது, இருட்டறையில் விளக்குப் போலே அவனுடைய கல்யாண குணங்களெல்லாம் நன்கு விளங்குமாறு இங்கு வரப்பெற்றோமே என்ற அளவற்ற மகிழ்ச்சியோடே எழுந்தருளியதை சொல்வது.
எம்பெருமானை அடிபணிந்து வேண்டி எதையும் பெற வேண்டியவர்கள் அடியவர்கள், ஆகவே அடியார்கள் அவன் இருக்கும் இடம் செல்ல வேண்டும். ஆனால் எம்பெருமான், அர்ச்சாவதாரத்தில் அடியவர்கள் இருக்கும் இடம் தேடி வந்து அருள்கிறான். அது ஏன் என்று கேட்டு கொண்டு, தன்னுடைய உடைமையை பெறுவதற்காக வாமனனாக அவதரித்து இங்கு வந்ததும் நம்முடைய சம்பிரதாயத்தில், எம்பெருமானுக்கு அடியவர்களின் லாபமே நோக்கு என்பதும், அடியவர்களுக்கு எம்பெருமானின் லாபம் நோக்கு அல்ல என்பதும் தெளிவாகும். பாடலில் வாமனன் என்று ஆண்டாள் குறிப்பிட்டதும் நோக்கத்தக்கது. “வாமனன் ஒட்டராவந்து” என்று சொல்லும்போது, பெரியவாச்சான்பிள்ளை, ஓரடி மண்ணுக்கு பதறி ஓடி வந்த வாமனன், இவளை பெறுவதற்கு காற்றை விட வேகமாக வருவான் என்று சொல்வது சுவாரஸ்யம். எம்பெருமானுடைய திருக்கரங்களின் ஸ்ப்ரிசத்தால் அவள் துவண்டு விழுந்துவிடுவதால், அவளை அவனே இழுத்து அணைத்துக்கொள்ள வேண்டும் என்கிறாள்.
4. வெள்ளை விளிசங்கு இடங்கையிற் கொண்ட விமலன் எனக்கு உரு க் காட்டான், உள்ளம் புகுந்தென்னை நைவித்து நாளும் உயிர்பெய்து கூத்தாட்டுக் காணும், கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக் களித்திசை பாடுங் குயிலே, மெள்ள விருந்து மிழற்றி மிழற்றாதென் வேங்கடவன் வரக் கூவாய் (5.2)
சோலையில் வாழும் குயிலிடம், தானும் இங்கேயே இருப்பதால் தன்னுடைய துயர் குயிலுக்கு தெரிந்து இருக்கும், நல்ல குரல் படைத்து என்ன பலன், குயில் ஒரு பாட்டு பாடி, கண்ணனனை அழைத்து வா என்று சொல்லும் பதிகம்.
செண்பகப் பூவிலே ஆனந்தம் அடைந்து, இசை பாடும் குயிலிடம், ஸ்ரீ பாஞ்சசன்யத்தை இடக்கையிலே ஏந்திக் கொண்டிருக்கிற பரமபுருஷன் தனது திவ்யமங்கள விக்ரஹத்தை தனக்கு சேவை சாதிக்காமல் இருக்கிறான் என்பதாகவும், தன்னுடைய உள்ளத்தில் புகுந்து தத்தளிக்க செய்கிறான் எனவும், தனக்காக திருவேங்கடமலையிலே வந்து நிற்கிற எம்பெருமான் இங்கே வரும்படியாக கூப்பிட வேண்டும் என்கிறாள். சீதா பிராட்டியைக் கைப்பிடிப்பதற்காக மிதிலையின் புறச்சோலையிலே வந்து தங்கி இருந்தார் போல், திருமலையிலே வந்து நின்ற எம்பெருமானை இங்கே நாலடி வரும்படியாக குயில் கூவ வேணும் என்று வேண்டுகிறாள். கரிய திருமேனிக்கு அருகில் நன்றாக விளங்கும்படி வெண்மை நிறத்தை உடைய பாஞ்சஜன்யம், ‘என்னைப் போலே நீங்களும் கைங்கர்யம் பண்ண வாருங்கள்’ என்று அழைப்பது போல் எம்பெருமானின் இடது திருக்கையிலே ஏந்தி இருப்பது கூறப்பட்டது.
விமலன் என்றது, திவ்யாயுதங்களை ஏந்தி இருப்பது அடியார்களை காப்பதற்காகவே என்ற சுத்தமான இதயத்துடன் இருப்பவன் என்பதைக் காட்டுகிறது. எனக்கு உருக்காட்டான் என்றது மீன்களுக்கு நீர் கொடுப்பது போல், நித்யஸூரிகளுக்கு தரிசனம் தந்து சம்சாரிகளுக்கு தரிசனம் தாராமால் இருக்கிறார் என்பது போல் உள்ளது. உள்ளம் புகுந்தென்னை நைவித்து நாளும் உயிர்பெய்து கூத்தாட்டுக் காணும் என்று சொன்னதற்கு உரையாசிரியர், நாளும் உயிர் பெய்து குற்றவாளிகளை அடிக்கும்போது உயிர்போகும் தருணத்தில் சேவகர்கள் அவனுக்குத் தண்ணீர் வார்த்துத் தேறுதலை உண்டாக்கிக் கொஞ்சம் தெளிவித்து, பழையபடியே அடிப்பார்கள், அதுபோல முடியப்போகிற உயிரை மறுபடியும் உண்டாக்கி வருத்துகிறான் என்கிறார்.
இனிவரும் பத்து பாசுரங்களும் தொடர்ச்சியாக திருவேங்கடமுடையான் மேல் பாடியவை. பிரிவாற்றாமையால் மேகம் கிளி நாரை இவற்றை தூது விடுவதை நாம் இலக்கியங்களில் காணலாம். இது தலைவனிடம் இருந்து தலைவிக்கோ, தலைவியிடம் இருந்து தலைவனுக்கோ சொல்லும் தூதாக அமையும். பிரிவாற்றாமையால் வாடும் ஆண்டாள் இந்த பத்து பாசுரங்களில், நீல நிறமான பகவானின் மேல் உள்ள ஆசையால், நீல நிறமான மேகங்களைத் தூது விடுகிறார். மேகங்களே, உங்களுடன் எம்பெருமானும் சேர்ந்து வருகிறானா, அவனுடன் தான் சேரா விட்டால், தான் உயிர் பிழைக்க முடியாது என்றும், அவனிடம் இதை சொல்லி, அவன் தன்னை ஏற்கும்படி செய்ய வேணுமாய் கேட்டு கொள்கிறார்.
5. விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள், தெண்ணீர்பாய் வேங்கடத்தென் திருமாலும் போந்தானே, கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளிசோரச் சோர்வேனை, பெண்ணீர்மை யீடழிக்கும் இதுதமக்கோர் பெருமையே? (8.1)
ஆகாசம் முழுவதிலும் நீல நிறமான மேற்கட்டு கட்டினாற்போல் நின்ற மேகங்களே, தெளிந்த தீர்த்தங்கள் பாயுமிடமான திருவேங்கட மலையில் எழுந்தருளி இருக்கும், திருமாலாகிய எம்பெருமானும் உங்களுடன் எழுந்தருளி உள்ளானா? மேகங்கள் மறுமொழி கொடுக்காததால், அவன் அங்கு வரவில்லை என்று நினைத்து வருந்தி, தன்னுடைய பெண்மையை உருவழிகின்ற இந்த காரியம் அவருக்கு பெருமையோ என்று வினவுகிறார். திருவேங்கடமுடையானும் தானுமாக ஒரு படுக்கையில் இருந்த போது ஆகாசத்தில் காளமேகங்களின் பரப்பானது மேற்கட்டி கட்டினாற்போலத் தோற்றம் அளித்தது என்பதை விண்ணீலமேலாப்பு விரிந்தாற்போல் மேகங்காள்! என்கிறாள். என்திருமாலும் என்றதனால் திருவேங்கடவன் முன்பு வந்த போது பிராட்டியும் வந்ததை சொல்வது. திருவேங்கடமுடையானைப் பெரியாழ்வார் திருமகள் ஆசைப்பட்டுப் பெறாமல் போனால் என்றால் அவனுடைய பெருமை என்னவாகும் என்றபடி இந்த பாடலை முடித்துள்ளார்.
6. மாமுத்த நிதிசொரியும் மாமுகில்காள் வேங்கடத்துச் சாமத்தின் நிறங்கொண்ட தாடாளன் வார்த்தையென்னே காமத்தீ யுள்புகுந்து கதுவப்பட்டு இடைக்கங்குல் ஏமத்தோர் தென்றலுக்கிங் கிலக்காய் நா னிருப்பேனே (8.2)
சிறந்த முத்துக்களையும் பொன்களையும் கொண்டு பொழிகிற காள மேகங்களே! திருமலையில் எழுந்தருளி இருக்கின்ற நீலநிறம் உடையவனான எம்பெருமானுடைய செய்தி ஏதாவது உள்ளதா, என்று கேட்க பதில் வராததால், மேலும் தன்னுடைய துயரத்தைச் சொல்ல தொடங்குகிறாள். எம்பெருமான் மேலான காமத்தீயானது, தன் உடலின் வெளிபாகங்களை சுட்டு பொசுக்கி, தனக்கு உணவு கிடைக்காததால், உள்ளே புகுந்து மேலும் தகிக்கிறது. தென்றல் காற்று வீசி, இந்த துயரத்தை அதிகரிக்க செய்கிறது என்கிறாள். வார்த்தை என்ன என்று சொன்னது, அவர் தான் இங்கு வரவில்லை, ஒரு வார்த்தையாவது சொல்லி இருக்கலாமே என்று சொல்வது போல் அமைந்துள்ளதது.
7. ஒளிவண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவையெல்லாம், எளிமையால் இட்டு என்னை ஈடழியப் போயினவால், குளிரருவி வேங்கடத்தென் கோவிந்தன் குணம் பாடி, அளியத்த மேகங்காள் ஆவி காத்திருப்பேனே (8.3)
மேகங்களே! அருள் புரிக, தன்னுடைய உடலின் ஒளியும், நிறமும், வளைகளும் நெஞ்சும், உறக்கமும் இவை எல்லாம், தன்னுடைய எளிமையால், தன்னை கைவிட்டுவிட்டு, தன்னுடைய சீர் குலையும்படி நீங்கி பொய் விட்டன. குளிர்ந்த அருவிகளையுடைய திருமலையில் எழுந்து அருளி இருக்கிற எனது கண்ணபிரானுடைய திருக்கல்யாண குணங்களை வாயாரப் பாடிக்கொண்டு தன்னுடைய உயிரை காத்துக்கொள்ள முடியுமா என்று வினவுவது போல் உள்ள பாசுரம்.
எம்பெருமானைப் பிரிந்து விட்ட துக்கத்தினால் உடல் ஒளி இழந்து, நிறமிழந்து, வளை கழன்று, நெஞ்சு தளர்ந்து, உறக்கம் இழந்து, தான் சீர்குலைந்து தடுமாறி இருப்பதை முதல் இரண்டு வரிகளில் சொல்கிறார். எம்பெருமானுடன் சேர்ந்து இருக்கும் காலங்களில் உடல் பிரகாசமாக இருப்பதும், அவரை பிரிந்தால் ஒளி குறைவதும், உண்மையான அன்பர்களின் இலக்கணமாகும். மேனி மெலியும் போது, வளை கழலும், நெஞ்சு உருகுலையும். எளிமையால் என்றதால், எளிமையாய் இருப்போரை எல்லோரும் கைவிட்டு விடுவது உலக நியதி அன்றோ. ஆபத்தை அடைந்தவர்களை விட்டு விலகுவது நீசர்களின் செயல் ஆனதால், இங்கு எளிமையால் என்று சொன்னது நீசத்தனத்தினால் வேண்டும் கொள்ளலாம். நாயகனைப் பிரிந்து தளர்ந்திருக்கும் காலத்தில் மேகங்கள் வந்து முகங்காட்டின படியாலே அந்த உபகாரத்தைக் கொண்டாடி “அளியத்த மேகங்காள்“ என்கிறாள். பிராணநாதன் அவனான பின்பு உயிர்களைக் காப்பது அவன் கடமை ஆகும், அது தன் பணியாக மாறுமோ ? என்பதை ஆவி காத்திருப்பேனே என்பதால் தெரிவிக்கின்றார்.
8. மின் ஆகத்து எழுகின்ற மேகங்காள் வேங்கடத்துத் தன் ஆகத் திருமங்கை தங்கியசீர் மார்வற்கு என் ஆகத்து இளங்கொங்கை விரும்பித்தாம் நாடோறும் பொன் ஆகம் புல்குதற்கு என் புரிவுடைமை செப்புமினே (8.4)
தன்னுள்ளே மின்னல் தோன்றப் பெற்ற மேகங்களே, எம்பெருமான் தன்னை விரும்பி அவருடைய மார்போடு இடைவிடாது கட்டி தழுவ வேண்டும் அல்லது அங்கேயே எம்பெருமான் கிடக்க வேணுமென்று என்று தினமும், திருமலையில் தன்னுடைய மார்பில் பிராட்டியுடன் எழுந்தருளி உள்ள எம்பெருமானிடம் சொல்லுங்கள் என்று ஆண்டாள் கூறும் பாடல். எம்பெருமானுடைய கரிய திருமேனியில் மின்னற்கொடி போன்று விளங்கும் பிராட்டியை, நினைவுறுத்தும் வகையில் மின்னி எழுகின்ற மேகங்களே என்றும் கொள்ளலாம். ஆகம் என்று உடம்புக்கும் மார்புக்கும் அர்த்தம். முதலடியில் ஆகத்து என்றது உடம்பிலே என்ற அர்த்தத்தில் வந்து உள்ளது. பெரியவாச்சான்பிள்ளை, மேகங்காள்! என்று சொன்ன இடத்தில, “நடுவே ஜடாயு பறவை வந்து தோற்றினாற் போலே இருந்த தீ! அவனைப் பிரிந்து நோவு படுகிற ஸமயத்திலே மேகங்களாய் வந்து தோற்றின படி.“ என்று கூறுவார். பொன் ஆகம் என்று சொன்னது விரும்பத்தக்க திருமார்பு என்றும் புரிவுடைமை என்பது அன்புடமை, ஆசையுடைமை என்றும் கொள்ள வேண்டும்.
9. வான் கொண்டு கிளர்ந்தெழுந்த மாமுகில்காள் வேங்கடத்துத் தேன் கொண்ட மலர்ச் சிதறத் திரண்டேறிப் பொழிவீர்காள், ஊன் கொண்ட வள்ளுகிரால் இரணியனை உடலிடந்தான், தான்கொண்ட சரிவளைகள் தருமாகில் சாற்றுமினே. (8.5)
திருமலையிலே தேன் நிறைந்துள்ள புஷ்பங்கள் சிதறும்படி திரள் திரளாக ஆகாயத்தில் இருந்து மழையைப் பொழிகின்றதாயும், ஆகாயத்தை விழுங்கி விடுபவைகளாகவும் உள்ள மேகங்களே, வலியள்ளவையாயும் கூர்மையுடையவையான நகங்களாலே, ஹிரண்யகசிபுவின் உடலைப் பிளந்து எறிந்த எம்பெருமான் நரசிம்மமூர்த்தி, என்னிடத்துக் கொள்ளை கொண்டு போன கைவளைகளை திருப்பிக் கொடுப்பதாக இருந்தால், எனது அவஸ்த்தையை அவர்க்குத் தெரிவியுங்கள் என்று ஆண்டாள் கூறுவதாக அமைந்துள்ள பாசுரம்.
தேன் நிறைந்த நல்ல புஷ்பங்கள் சிதறி விழும்படி அவற்றுக்குக் கெடுதியை விளைத்துக் கொண்டு மேகங்கள் மழைபொழிவதனால் என்ன பயன்? பிறர்க்குத் தீங்கை விளைப்பதோ மேகங்களின் வேலை, துன்பப்பட்டாரை, இன்பமடைய வைக்கவேண்டும் என்பது உட்கருத்து. எம்பெருமானிடம் இருந்து பிரிந்திருக்கும் காலங்களில் தனக்கு துன்பம் அளிக்கும் மலர்களை அழிப்பதில், தனக்கு ஒரு வகையில் இன்பமாக இருந்தாலும், அது போதாது, தன்னை எம்பெருமானுடன் சேர்த்து அவர்களை மகிழ்விக்கவும் இந்த பூக்கள் வழி செய்ய வேண்டும் என்பதும் ஒரு கருத்து. இது அநிஷ்ட நிவர்த்தியுடன் இஷ்ட பிராப்தியையும் சேர்த்து வேண்டுவது போல் அமைந்துள்ளது.
எம்பெருமான் இவளை விட்டுப் பிரிந்ததனால் இவள் மேனி மெலிந்து வளைகள் கழன்று போவதற்கு அல்லது அவளை விட்டு நீங்குவதற்கு அவனே காரணம் ஆகின்றதால் தான்கொண்ட சரிவளைகள் என்று ஆண்டாள் எம்பெருமான் தன்னுடைய வளைகளை கொண்டதாக கூறுகிறார். சரிவளைகள் தருமாகில் என்றது, மீண்டும் ஆவலுடன் சேர்ந்து வளைகள் அவளிடமே தங்கும்படி செய்த்தவதாகும்.
10. சலங் கொண்டு கிளர்ந்தெழுந்த தண்முகில்காள் மாவலியை, நிலங்கொண்டான் வேங்கடத்தே நிரந்தேறிப் பொழிவீர்காள், உலங்குண்ட விளங்கனிபோல் உள்மெலியப் புகுந்துஎன்னை, நலங்கொண்ட நாரணற்கென் நடலைநோய் செப்புமினே. (8.6)
கடல் நீரை முகந்து கொண்டு மேலே வருகின்ற குளிர்ந்த மேகங்களே என்றும், மஹாபலி சக்ரவர்த்தியிடம் இருந்து பூமியை திரும்பி பெற்றுக்கொண்ட எம்பெருமான், எழுந்தருளி இருக்கின்ற திருவேங்கட மலையின் மேலே உள்ள மேகங்களே என்றும், ஆண்டாள் மேகங்களை கூப்பிட்டு, கொசுக்கள் கடித்த விளாம்பழத்தை போல் தன்னுடைய மேனி மெலிந்து இருப்பதற்கு காரணமாக தன்னுள்ளே புகுந்த நாராயணன், தன்னுடைய நிறைவுகள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு கொடுத்த தன்னுடைய கஷ்டங்களை அவனிடம் சொல்லவேண்டும் என்று ஆண்டாள் மேகங்களை கேட்கும் பாடல்.
மேகங்களே, உங்களுடைய வடிவழகும், குளிர்ச்சியும் நன்றாகத்தான் உள்ளது, எனினும், நீங்கள் பொழியும் இடத்தில் தான் குறை உள்ளது என்றும், திருவேங்கடத்தில் மழை பெய்கிறீர்கள் என்றும், தங்களுடைய சுய பலன்களுக்காக அந்த எம்பெருமானை அசுரனாகிய மாபலியிடம் இருந்து நிலத்தை மீட்டு வரவேண்டிய தேவர்களைப்போல், ஆண்டாள் உங்களை அசுரர்களிடம் சென்று வர சொல்லவில்லை, எம்பெருமானிடம் தான் சொல்லி வாருங்கள என்று சொல்லி உள்ளேன் என்றும் அதை செய்வதில் உங்களுக்கு என்ன குறை என்று ஆண்டாள் கேட்பதாக கூட கொள்ளலாம்.
11. சங்க மா கடல் கடைந்தான் தண்முகில்காள் வேங்கடத்துச் செங்கண்மால் சேவடிக்கீழ் அடிவீழ்ச்சி விண்ணப்பம், கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்து ஒருநாள் தங்குமேல் என்னாவி தங்குமென் றுரையீரே (8.7)
சங்குகள் நிறைந்த திருப்பாற்கடலை கடைந்த எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் திருமலையில், திரியும் குளிர்ந்த மேகங்களுக்கு ஆண்டாளின் விண்ணப்பம் யாதெனில், அந்த எம்பெருமானின் திருவடிக்கீழ் ஒரு நாளேனும் சேர்ந்து இருந்தால் தான் தன் உயிர் நிற்கும் என்று அந்த எம்பெருமானிடம் சொல்லவேண்டும் என்கிறார்.
தன்னை சிரமப்படுத்திக்கொண்டு, பிறர் காரியங்களை கருத்துடன் செய்யும் எம்பெருமான் வாழும் திருப்பதி திருத்தலத்தில் வாழ்பவர்கள், அவனுடைய குணத்தை அனுசரிக்க வேண்டியது அவசியம் என்று ஆண்டாள் சொல்லி, அந்த மேகங்களை ஒரு காரியம் செய்ய சொல்லி வேண்டுகிறாள். குங்கும பூவை குழைத்து தன்னுடைய கொங்கைமேல் பூசி வைத்து அவன் தன்னுடன் சேர்வான் என்ற எண்ணத்துடன் அவனுக்காக காத்திருப்பதாக எம்பெருமானிடம் சொல்ல சொல்லி வேண்டுகிறாள்.
12. கார்காலத்து எழுகின்ற கார்முகில்காள் வேங்கடத்துப், போர்காலத் தெழுந்தருளிப் பொருதவனார் பேர்சொல்லி நீர்காலத் தெருக்கிலம் பழவிலைபோல் வீழ்வேனை வார்காலத் தொரு நாள் தம் வாசகம் தந் தருளாரே! (8.8)
மழை காலத்திலே தவறாமல் வந்து சேருகிறேன் என்று சொல்லிப்போன எம்பெருமான் வரவில்லை என்றாலும், அவனுடைய உருவத்தை ஒத்து இருக்கும் மேகங்களாகிய நீங்களாவது வந்தீர்களே என்று மகிழ்ச்சியுடன், நாம் திருநாம ஸங்கீர்த்தனம் பண்ணிக் கொண்டாவது ஒருவாறு வாழ்ந்துகொண்டு இருக்கலாம் என்று, அடியார் களுக்காக காரியம் செய்வதையே தொழிலாகக் கொண்டு எதிரிகளை அழிப்பதில் உற்சாகம் கொண்ட சக்ரவர்த்தி திருமகனுடைய திருநாமங்களை ஸங்கீர்த்தனம் செய்ய ஆரம்பித்தாயும், அதுவே காரணமாக உடனே மனம் தளர்வு அடைந்ததாகவும் ஆண்டாள் கூறுகிறார். மழைகாலத்தில் எருக்கம் பழுப்புகள் அற்று விழுவதுபோல் தளர்ந்து விழும்படியான நிலைமையில் நின்ற ஆண்டாள், இந்த நிலையிலும், எம்பருமான் தனக்கு அருள் செய்ய நினை க்கவில்லை என்றும், தன் வாழ்நாளெல்லாம் இப்படி துக்க மயமாகவேயோ கழியப் போகிறதோ என்று கவலை அடைந்தாள். ஒரு நாளாகிலும் சொல் சொல்லி அனுப்ப மாட்டாரோ? என்கிறாள்.
13. மதயானை போலெழுந்த மாமுகில்காள் வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தையென்னே கதியென்றும் தானாவான் கருதாது ஓர் பெண்கொடியை வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே (8.9)
ஆண்டாள், இந்த பாசுரத்தில், மேகங்களை இரண்டு விதமாக கொண்டாடுகின்றாள்; திருவேங்கடமுடையானை இடைவிடாது ஸேவித்துக் கொண்டு இருப்பதால், அவை மதம் பிடித்த யானைகளை போல் செருக்குடன் இருப்பதாக சொல்கிறார். திவ்ய தேசத்தில் எப்பொழுதும் வசிக்கின்றவர்கள் அதுவே பெரிய பாக்கியம் என்று இரண்டாவது வகையாக கொண்டாடுகிறார். திருவானந்தாழ்வானிடம் இருந்து எல்லாவித கைங்கர்யங்களையும் பெற்றுக்கொள்ளும் எம்பெருமான், அதே போல் தன்னிடத்தில் இருந்தும் பெற்றுக்கொள்வான் என்று இருந்ததாகவும், அவன் அப்படி செய்ய வில்லை என்றும் கூறுகிறார். பாம்பணையில் பள்ளி கொண்ட பெருமான் அதனை விட்டுத், திருமதுரையிலே வந்து அவதரித்த கண்ணபிரான், தேர்த்தட்டில் நின்று சொன்ன வார்த்தைகளை உண்மை என்று (சரமஸலோகத்தை) நம்பி இருந்ததாகவும், பாம்பிற்கு இரண்டு நாக்குகள் இருப்பதுபோல், அவனும் இரண்டு நாக்கு கொண்டான் என்றும் பாம்பில் படுத்து, பாம்பின் தன்மையே அவனும் பெற்றான் என்றும் சொல்கிறார். அதாவது பொய்யனாய் விட்டான் என்று கூறுகிறார். பலபேர்களுக்கு மெய்யானாக இருக்கும் எம்பெருமான், ஆண்டாளுக்கு மட்டும் பொய்யனாக இருந்தால் அவனுக்கு ஒன்றும் குறை இல்லை என்று மேகங்கள் சொல்வதாக நினைத்துக்கொண்டு, எல்லோருக்கும் ரக்ஷகன் என்ற பெரும் பெயரை விட்டு, ஒரு சிலபேரை மட்டும் விசேஷித்து ரக்ஷித்தால் அவன் பின் இந்த உலகத்தார் என்ன சொல்வாரோ என்று கேட்கிறார். இப்படி ஆண்டாளை ரக்ஷிக்காதது மட்டும் இன்றி, ஒரு பெண் கொடியினை வதை செய்தால் அது அவனுக்கு அவப்பெயர் உண்டாக்கும் என்றும் சொல்கிறார். பெண்கொடியை வதை செய்தானா என்றால், பெண்கொடியை தரையில் படர விடுதல் கொலைக்கு சமம் என்றும், கோல் கொம்பில் சுற்றி விட்டு வளர விட வேண்டும் என்று சொல்வதுண்டு. பெண் நீர்மை ஈடு அழிக்கு மிது என்று 8.1 ல் சொல்வதைப்போல இங்கும் சொல்கிறார்.
14. நாகத்தின் அணையானை நன்னுதலாள் நயந்துரைசெய், மேகத்தை வேங்கடக்கோன் விடுதூதில் விண்ணப்பம் போகத்தில் வழுவாத புதுவையர்கோன் கோதை தமிழ் ஆகத்து வைத்துரைப்பார் அவரடியா ராகுவரே (8.10)
மேல் சொன்ன பத்து பாசுரங்களை சொல்வதால் உண்டாகும் நன்மைகளை சொல்லும் பலஸ்ருதி பாடல் ஆகும். வேண்டின படியெல்லாம் பகவத் அனுபவத்தைப் பெற்று மகிழ்ந்தவரான பெரியாழ்வார்க்குத் திருமகளாகப் பிறந்ததுவே பெரிய நன்மையாக கொண்டு, தான் எம்பெருமானிடம் விருப்பம் கொண்டவள் ஆனாள் என்றும், திருவனந்தாழ்வானைப் படுக்கையாக கொண்ட திருவேங்கடமுடையானிடம் ஆசைப்பட்டு, மேகத்தை தூது விடுவதாக அமைந்த விண்ணப்பம் ஆகிய இந்த பத்து பாசுரங்களை இதயத்தில் வைத்துக்கொண்டு உரைப்பவர்கள் எம்பெருமானுக்கு தினமும் கைங்கரியம் பண்ணப் பெறும் அடியவர்கள் ஆவார்கள் என்றும் சொல்லி முடிக்கிறார்.
15. பாடும் குயில்காள் ஈதென்ன பாடல் நல் வேங்கட நாடர் நமக்கொரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின், ஆடும் கருளக் கொடியுடையார் வந்தருள் செய்து கூடுவராயிடில் கூவிநும் பாட்டுகள் கேட்டுமே (10.5)
முன்பு மேகங்களை தூது விட்ட ஆண்டாள், இந்த பதிகத்தில், காந்தள் மலர்கள், கொடிகள், முல்லைக்கொடி, குயில்கள் மயில்கள், கடல் என்று மனதில் பட்ட எல்லாவற்றிடமும் புலம்புகிறார். இந்த பாட்டில், குயில்களிடம், ஏன் இப்படி கூச்சல் போடுகிறீர்கள், திருவேங்கடமுடையான் வந்து தனக்கு நல்வாழ்வு அளிக்குமாறு பாடக்கூடாதா என்று கேட்கிறார்.
இரண்டு பக்கமும் நெருப்பு பற்றி எரியும் போது, நடுவில் சந்தனம் பூசுவாரைப்போல் குயில்களின் பாட்டு இருக்கிறது என்றும், சேர்ந்து இருக்கும் போது பாட வேண்டிய பாடல்களை பிரிந்து இருக்கும் போது பாடுகிறீர்களே என்று வருந்தி, எம்பெருமான் இங்கே எழுந்தருளி வந்து, தன்னை வாழ்விக்கும் காலம் வருமாகில், அப்போது இங்கே வந்து ஆசை தீர பாடுங்கள் என்றும் கூறுகிறார். தற்பொழுது தன்னுடைய எல்லா இந்திரியங்களும் அவனால் அபகரிக்க பட்டு குயில்களை பார்க்கவும் முடியவில்லை, அவற்றின் பாட்டினை கேட்கவும் முடியவில்லை என்று சொல்வது போல் உள்ளது. திருவேங்கடவன் வருவது எப்படி குயில்களுக்கு தெரியும் என்று கேட்டுக்கொண்டு, கருடபகவான் பெரிய சிறகுகளை விரித்து உற்சாகமாக கூத்தாடிக்கொண்டு வருவதில் இருந்து புரிந்து கொள்ளலாம் என்றும், அப்படி இல்லை என்றால், தானே சொல்லி அனுப்புவதாகவும் கூறி உள்ளார்.
16. மழையே மழையே மண் புறம் பூசியுள்ளாய் நின்ற மெழுகு ஊற்றினாற் போல் ஊற்று நல் வேங்கடத்துள் நின்ற, அழகப் பிரானார் தம்மை யென் நெஞ்சத் தகப்படத் தழுவ நின்று என்னைத் ததர்த்திக் கொண்டூற்றவும் வல்லையே (10.8)
எட்டாம் பதிகத்தில் மேகங்களை தூது விட்ட ஆண்டாள், மீண்டும் மேகங்களை அழைக்கிறார். மேகங்கள் எவ்வளவு தூரம் சென்றாலும் அவற்றின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்பதால் மழையே, மழையே என்று இரண்டு முறை அழைத்தது, வெண்கல பாத்திரம் செய்பவர்கள், மண் பூசி, உள்ளே மெழுகு வைத்து அதனை உருக்குவார்களைப் போல் என்பதை, மண் புறம் பூசியுள்ளாய் நின்ற மெழுகு ஊற்றினாற் போல் என்று குறிப்பிட்டுள்ளார். மேலே உள்ள மண்ணை இணைத்து, உள்ளிருக்கும் மெழுகைத் தள்ளி விடுவதுபோல, அந்த திருவேங்கடமுடையானும் உடம்பின் மேலே அணைந்து உள்ளிருக்கும் ஆத்மா உருகி போகும்படி செய்ய வல்லவன் என்பதை, வேங்கடத்துள் நின்ற அழகப்பிரானார் என்பதால் தெரியப்படுத்துகிறார். தன்னை இந்த பாடு படுத்துவதற்கு அவனுடைய அழகே காரணம் என்பதை, ஊற்றும் அழகப்பிரானார் என்று சேர்த்து ரசிக்கலாம். நெஞ்சத்தில் இருப்பது போல் இருந்தாலும், தான் அணைக்க விரும்பும்போது, அணைக்க முடியாமல் அவன் விலகி விடுவதை மாற்றி அவனை அணைக்கும்படி செய்ய வல்ல மழையே என்கிறார். பிரிந்தபோது மழை எப்படி துன்பம் கொடுக்கிறதோ அதுவே, சேரும் காலத்தில் இன்பம் கொடுக்கவல்லது என்பதை இங்கே சொல்வதுபோல் அமைந்துள்ளது.
திருமலை நம்பிகள் இந்த பாட்டினையும் இதற்கு முன் பாட்டினையும் அநுஸந்திக்கும் போது, கண்ணீர் பெருக உருகி வெகு நேரம் இருப்பாராம்; அதனால் நம் பூர்வாசார்யர்கள் இவற்றை மிகவும் ஆதரிப்பார்கள்.
மீண்டும் இன்னொரு ஆழ்வார் பாடல்களில் சந்திக்கலாம், நன்றி.