A Simple Devotee's Views
பதின்மர் பாடும் பெருமாள் என்று திருஅரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம்.
திருஅரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே என்று நம் பெரியவர்கள் கூறி உள்ளார்கள்.
இவற்றில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்து சில பாசுரங்களை முன்பு பார்த்து உள்ளோம். பொதுவாக முதலாழ்வார்களுக்கு வேங்கடமுடையானிடம் அதிக பற்று கொண்டு இருந்தார்கள் என்பதும் அவர்கள் அவனுக்கு நிறைய பாடல்கள் பாடினார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து திருவேங்கடமுடையானை முன்னிட்டு
இனி இங்கு பெரியாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 7 பாசுரங்களைப் பார்ப்போம் நன்றி.
ஆழ்வார், பெரியாழ்வார் திருமொழி என்ற ஒரு பிரபந்தம் பாடியுள்ளார். அதில் முதல் பதிகமாக திருப்பல்லாண்டு என்ற சிறப்பு பதிகம் உள்ளது. பெரியாழ்வார் திருமொழியில் திருப்பல்லாண்டையும் சேர்த்து மொத்தம் 473 பாசுரங்கள் உள்ளன. அதில் ஏழு (7) பாசுரங்கள் திருவேங்கடமுடையான் மேல் உள்ளன, அவற்றை கீழே காண்போம்.
கண்ணன் வளர்ந்து வருகின்றான். திறந்தவெளியில், நிலவினை பார்த்து தன்னோடு விளையாட அழைக்கிறான், வேகமாய் சென்ற சந்திரனைப் பார்த்து, இவன் எம்பெருமான், இவனை அலட்சியம் செய்தால் தப்ப முடியாது என்று சந்திரனுக்கும் நமக்கும் யசோதை கூறுவதாக அமைந்துள்ள பதிகம். ஆச்சர்யப்படத்தகவனாய் திருவேங்கடமலையிலே நின்று வாழ்பவனான இந்த கண்ணபிரான் என்று ஆழ்வார் கூறுகிறார்.
`மாமதி! மகிழ்ந்தோடிவா’’ என்று அடுத்த பாசுரத்தில் அழைக்க இருக்கும் ஆழ்வார், சந்திரனை அழைத்த போதும், சந்திரன் ஓடி வராததால், ‘அழகில் தன்னோடொப்பார் ஒருவருமில்லை’ என்கிற கர்வத்தினால் இவன் வாராமல் செருக்குடன் உள்ளான் என்று எண்ணி யசோதை, அதனை அடக்க, ‘சந்திரனே ! நீ நாள்தோறும் தேய்வதும் வளர்வதுமாய் களங்கமுடன் இருக்கின்றாய்; நீ எப்போதும் பூர்ணமண்டலமாகவே இருந்து களங்கமும் நீங்கிச் செயற்கை அழகு செய்துகொண்டு விளங்கினாலும் என் குழந்தையான கண்ணபிரானின் முகத்திற்குச் சிறிதும் ஒப்பாக மாட்டாய். ஆகையாலே இவன் உன்னைக் கைகளை தூக்கி அழைப்பதைப் பெரிய பாக்யமாக கருதி, விரைந்து ஓடிவா; வராவிட்டால் இக்குழந்தைக்குக் கை வலிக்கும், அந்த அபசாரத்தை நீ அடைந்திடாதே என்று பாடுவதாக அமைந்துள்ளது.
2. என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன், முன்னைய வண்ணமே கொண்டு அளவாயென்ன, மன்னு நமுசியை வானில் சுழற்றிய, மின்னு முடியனே அச்சோ வச்சோ, வேங்கட வாணனே அச்சோ வச்சோ. 1.9.8
இந்த பதிகம், யசோதை கண்ணனை அணைத்துக்கொள்ள அழைக்கும் விதமாய் அமைந்த பாடல்கள் கொண்ட பகுதி. எம்பெருமான் பக்தர்களிடம் சபலன், அதிகம் அன்பு கொண்டவன், அவர்கள் நினைத்த மாத்திரம் நெருங்கி வருபவன். பெரியாழ்வார் அழைத்தால், உடனே வருபவன்; யசோதை அழைத்தால் வருபவன்; அதேபோல் தாயை கண்டவுடன் ஓடி வந்து அணைத்துக் கொள்பவன். அதையே யசோதையும் விரும்புவாள் என்று சொல்லும் பாசுரங்கள் அமைந்த பகுதி.
வாமனனாய் வந்து திருமால் மாவலியிடத்தில் தானம் பெற்றுத் திரிவிக்கிரமனாய் வளர்ந்து உலகங்களை அளக்க ஆரம்பிக்கும் போது, மஹாபலியின் பிள்ளையான நமுசி ஓடி வந்து, ‘யாசிக்கும் போதிருந்த உருவத்தை மாற்றி அளப்பது மாயச்செயல், வந்த வடிவத்துடனே அளக்க வேண்டும்’ என்று பிடிவாதமாய் நின்ற நமுச்சியை வானில் சுழற்றி அடித்த மின்னும் கிரீடத்தை உடையவனே, திருமலையில் வாழ்பவனே என்று ஆழ்வார் முடிக்கிறார். நமுசி, த்ரிவிக்ரமனோடு வெகு நேரம் வாதாடி எம்பெருமான் சொன்ன வாதங்களைக் கேளாமல் தான் பிடித்த எம்பெருமானின் திருவடியினை விடாமல் உறுதியாக பிடித்துக்கொண்டு இருக்க, எம்பெருமான் வளர்ந்த திருவடியினால் அவனை ஆகாசத்திலே கொண்டுபோய் சுழன்று விழும்படி செய்த வரலாறு இங்கே கூறப்படுகிறது.
3. தென்னிலங்கை மன்னன்சிரம்தோள் துணி செய்து, மின்னிலங்கு பூண் விபீடண நம்பிக்கு, என்னிலங்கு நாமத்தளவும் அரசென்ற, மின்னிலங்காரற்கு ஓர் கோல் கொண்டு வா வேங்கட வாணர்க்கு ஓர் கோல்கொண்டுவா. 2.6.9
இது இன்னொரு அழகான பதிகம், அன்னையின் அன்பினை காட்டும் விதமாக அமைந்துள்ள பதிகம். கண்ணன் தலை வாரி அமர்ந்துள்ளான், தாய் மணமிக்க மலர்களை கொண்டு வர உள்ளே சென்ற போது, கண்ணன் ஆயர்குல சிறுவர்கள் மாடு கன்று மேய்க்க சென்று கொண்டு இருந்ததைப் பார்த்து தானும் உடன் செல்ல ஆசை பட்டான். தாயாரிடம் மாடு மேய்க்கும் கோல் கொண்டு வர சொல்கிறான். தாய் அது காகம் தூக்கி சென்று விட்டது என்றும் இதோ கொண்டு வர சொல்கிறேன் சென்றும் கண்ணனை இங்கேயே தங்கவைக்க முயற்சிக்கும் பதிகம்.
அழகிய இலங்கைக்கு அரசனாகிய ராவணனுடைய தலைகளையும் தோள்களையும் வெட்டி வீழ்த்தி விபீஷணாழ்வானுக்கு அரசும் அருளும் அளித்து, மின்னல்போல் விளங்குகின்ற மாலை அணிந்துள்ளவனுக்கு ஒரு கோல் கொண்டு வா, திருமலையில் வாழ்கின்றவனுக்கு ஒரு கோல் கொண்டு வா என்று ஆழ்வார் பாடுகிறார். இதேயே உரையாசிரியர்கள், துஷ்டர்களைத் தொலைத்து, சிஷ்யர்களை வாழ்விக்குமாறு இவனுக்குக் கோல் கொண்டு வா என்றும் கொண்டு வராவிட்டால் உன்னையும் தண்டித்துப் பின்பு பசுக்களைக் காக்கப்போவன் என்பது தொனிக்கும்படி சுவையாக சொல்வார்கள்.
4. மச்சொடு மாளிகை யேறி மாதர்கள் தம்மிடம் புக்கு, கச்சொடு பட்டைக் கிழித்துக் காம்பு துகிலவை கீறி, நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள்திரு வேங்கடத்து எந்தாய், பச்சைத் தமனகத் தோடு பாதிரிப் பூச்சூட்ட வாராய். 2.7.3
பகவானுக்கு எட்டு வகை மலர்கள் சமர்ப்பிக்கலாம் என்றும், அவற்றை பக்தியுடன் சமர்ப்பித்தால், புகழுடன் வாழலாம் என்றும் சொல்லப்படுகிறது.
பெண்களிருக்கிற வீடுகளில் நடுநிலைகளிலும், மேல் பகுதிகளிலும் புகுந்து அவர்களின் கச்சு மற்றும் பட்டாடைகளையும் கிழித்து செய்யும் துஷ்ட செயல்களை செய்பவனே, உயர்ந்த திருமலையில் எழுந்தருளியிருக்கிற ஸ்வாமியே! பசுமை நிறமுள்ள மருக்கொழுந்தையும் பாதிரிப்பூவையும் சூட்டவாராய் என்று கூறுகிறார்.
5. போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய் போதரே னென்னாதே போதர் கண்டாய், ஏதேனும் சொல்லி அசலகத்தார் ஏதேனும் பேசநான் கேட்க மாட்டேன், கோது கலமுடைக் குட்டனேயா குன்றெடுத் தாய் குடமாடு கூத்தா, வேதப் பொருளே என்வேங்கடவா வித்தகனே, இங்கே போதராயே. 2.9.6
இந்த பதிகத்தில், கண்ணனின் விளையாட்டுகள் சுவையானவை, தனிப்பட்டவை. குழந்தை கண்ணனை யசோதை தூங்க செய்துவிட்டு தன்னுடைய வேலைகளை கவனிக்க சென்று விட்டாள். கண்ணன் சப்தமிடாமல் எழுந்து, பல வீடுகளுக்கு சென்று வெண்ணை, பால் தயிர் முதலியவற்றை களவு செய்து பாத்திரங்களை உருட்டி விட்டு, வீடு திரும்புவான். அந்தந்த வீட்டு பெண்கள் யசோதையிடம் வந்து முறையீடு செய்கிறார்கள். தாய் யசோதை, கண்ணனை அழைத்து, அவர்கள் கூறிய பழிச்சொற்களை ஏற்க முடியவில்லை என்று கண்டிக்கும் நோக்கத்துடன் கூப்பிடுகிறாள்.
ஆனால், குழந்தையை கூப்பிடும் போது, எல்லோருடைய கொண்டாட்டங்களையும் தன்மேல் உடையவனே, கோவர்த்தன கிரியை தூக்கியவனே, குடக்கூத்தாடு செய்பவனே, வேதங்களுக்கு பொருளாய் இருப்பவனே, என்னுடையவன் என்று சொல்லும்படி திருமலையில் இருப்பவனே, வியக்கத் தக்கவனே என்று பற்பல அடைமொழிகளுடன் அழைப்பது போல் அமைந்துள்ள பாசுரம்.
6. கடியார் பொழில் அணி வேங்கடவாகரும் போரேறே நீ யுகக்கும், குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே, கடிய வெங் கானிடைக் கன்றின்பின் போன சிறுக் குட்டச் செங் கமல அடியும் வெதும்பிஉன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான். 3.3.4
யசோதை கன்றுகளை மேய்க்க கண்ணனை அனுப்புகிறாள்; அனால் அவன் பிரிவினை தாங்கமுடியாமல் ஏங்கினாள்; மாலையில் கண்ணன் திரும்பி வந்ததும் அவனுடைய அலங்காரத்தை ரசிக்கிறாள், மற்றவர்களையும் அழைத்து காட்டுகிறாள்; கண்ணனின் பெருமைகளையும் அவனுடைய விளையாட்டுகளையும் எடுத்து சொல்லி, “கண்னா, நாளை முதல் கன்றின் பின் போகேல் ‘ என்று பாடுவதை சொல்லும் பதிகம்.
அழகிய மலர்கள் கொண்ட சோலைகளை உடைய திருவேங்கடத்தில் வாழ்பவனே, யுத்தம் செய்ய இருக்கின்ற காளையைப்போல் நிமிர்ந்து இருப்பவனே, கன்றுகளிடத்தில் ஆசை உள்ளவனே, எனக்கு ஸ்வாமியானவனே என்று யசோதை அழைப்பதைப்போல் ஆழ்வார் சிறு கண்ணனை முதலில் அழைக்கிறார். கண்ணன் கன்று மேய்க்குமிடமான காடுகளின் கொடுமையை நினத்துக் ‘குடையையும் செருப்பையும் எடுத்துக்கொள் என்று யசோதை மன்றாடி கேட்டபோதும், அவற்றை அவன் கொள்ளவில்லை. எல்லா இடங்களிலும் திரியும் கன்றுகளை இருந்த இடத்திலிருந்து கொண்டே புல்லாங்குழல் ஊதி, அழைத்துக் கொண்டு இருக்கலாம், என்று கண்ணனுக்கு குழலை கொடுக்க, அதையும் அவன் எடுத்து செல்லவில்லை. அவன் சென்ற இடமோ, மிகவும் கொடுமையான காடு. காலில் செருப்பில்லாமல் அவன் செங்கமலவடிகள் வெதும்பிப் போயின; மேலே குடை இல்லாததால், கண்கள் சிவந்தன; குழல் இல்லாததால், அங்கும் இங்கும் தேடி திரிந்து கன்றுகளை ஒன்று சேர்த்து உடம்பு இளைத்தது; இப்படியொரு கஷ்டம் வர வேண்டுமா என்று தாயான யசோதை கலங்குவதான பாடல்.
7. சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய் உலகு தன்னை வாழ நின்ற நம்பீ, தாமோதரா சதிரா என்னையும், என்னுடைமையையும் உன் சக்கரப் பொறி யொற்றிக் கொண்டு, நின்னருளே புரிந்திருந்தேன் இனி என் திருக்குறிப்பே. 5.3.4
எம்பெருமான் அவதாரங்களை எடுப்பது நல்லவர்களை காப்பதற்காகவே. அதர்மத்தை அழித்து தர்மத்தையும் நல்லவர்களையும் காப்பாற்றுகிறார். அவதார காலங்களில் உதவி பெறாதவர்களுக்கு உதவுவதற்காகவே அர்ச்சையில் இப்போதும் உள்ளார். திருமலையில் நிற்பதுவும் அதற்காகாவே என்று ஆழ்வார் இந்த பதிகத்தில் கூறி தன்னுடைய பெரியாழ்வார் திருமொழியை முடிக்கிறார். பெரியாழ்வார், திருவேங்கடமுடையானிடம் சரணாகதி வேண்டி அதையும் பெற்று விட்டதாக தெரிவிக்கின்றார். “திருப்பொலிந்த உன் சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய்” (5.4.7) என்ற போதும், அதே பாடலில் “என்னை உனக்கு உரித்தாகினையே” என்றும், “பறவை ஏறு பரம் புருடா, நீ என்னை கை கொண்ட பின் ” (5.4.1) என்ற போதும், சரணாகதி அடைந்ததைப் பற்றி மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார். இந்த 11 பாடலகளிலும், ஆழ்வார் தான் சரணாகதி அடைந்ததையும், அதற்காக பெருமாளுக்கு நன்றி தெரிவித்தும், அதன் மகிழ்வை கொண்டாடியும் மிக நிறைவாக சொல்லி முடிக்கிறார்.
தண் திருவேங்கடம் என்பது குளிர்ந்த திருமலை என்றும், ஸம்ஸார தாபங்களில் இருந்து விடுதலை கொடுக்கும் திருமலை என்றும் கொள்ளலாம். சென்னியோங்கு என்று சொன்னது, திருமுடி வானமளவும் உயர்ந்து இருப்பதை சொன்னது. ‘உலகுதன்னை’ என்பதை உருபுமயக்கமாகக் கொண்டு, உலகத்தவர்கள் வாழும்படி நின்ற நம்பீ; என்று உரைக்கலாம். தாமோதரா என்று சொன்னது, “கண்ணிநுண் சிறுந்தாம்பினாற் கட்டுண்ணப்பண்ணிய பெருமாயன்‘, அத்தாம்பின் தழும்பு திருவயிற்றில் தோன்றும் படி நின்றவன் என்று பொருள் கொள்ளலாம். சதிரா என்றது, நம்முடைய குறைகளை கண்ணெடுத்து பார்க்காதவன் என்று சொல்லலாம். என்னையும் என் உடைமையையும் என்று சொன்னது, உடலையும், ஆத்மாவையும் சொன்னதாகும். ஆத்மாவிற்கு சக்கரப்பொறி என்பது ஆத்மாவிற்கு அநன்யார்க்க சேஷத்துவத்தை உண்டாக்குவது., அதாவது, பரமாத்வுக்கே ஜீவாதாமா உரியது, மற்ற எவர்க்கும் அடிமை செய்யாது என்பதாகும். நின்னருளே புரிந்திருந்தேன்’ என்றது, அவனுடைய கருணையையே வழியாகவும் பலனாகவும் (ஸ்வயம்பிரயோஜனம்) விரும்பி நின்றதாகவும், வேறு எந்த உபாயாந்தரத்திலும் ருசி குலையப் பெற்றேன் என்றும் ஆழ்வார் சொல்வது போல் அமைந்துள்ளது.
இனி வேறு ஒரு ஆழ்வாரின் பாசுரங்களில் சந்திக்கலாம். நன்றி.