A Simple Devotee's Views
To read this weblog in English, please click here, thanks
திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடிஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.
முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் “கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான்” என்று சொல்லி நம்மை அரங்கனிடம் அழைத்து செல்கிறார்.
அப்படியும் மக்கள் எல்லோரும் ஆழ்வார் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் அவர்களை விட்டு, எம்பெருமான் தனக்கு செய்த மிக பெரிய உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார்.
இதுவரை, எம்பெருமான் தனக்கு கொடுத்த அனுபவத்தை சொல்வது (1-3), தன்னுடைய அனுபவத்தை கொண்டு உபதேசம் செய்வது (4-14), மற்றும் எம்பெருமான் தனக்கு செய்த நன்மைகளை நினைத்துக் கொள்ளுதல்(15-24) என்ற முதல் மூன்று உட்பிரிவுகளை பார்த்த பின் தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை என்று ஒரு ஐந்து பாடல்களிலும், எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று அடுத்த ஐந்து பாடல்களிலும் ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற இந்த நான்காவது பகுதியை இப்போது அனுபவித்து வருகிறோம்.
அதில் உள்ள முதல் பாசுரத்தை, திருமாலையின் 25வது பாடலில் (குளித்து மூன்று அனலை) ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி கூட இல்லை, திருவரங்கன் அந்தத் தகுதி முதல் எல்லாவற்றையும் அருள வேண்டும் எனக் கேட்டு கொண்டதை பார்த்தோம்.
சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட கர்ம, ஞான, பக்தி யோகங்கள் இல்லை என்றால், மற்றவர்கள் செய்யக்கூடிய அர்ச்சனை, துதி போன்றவற்றை செய்யலாமே என்று பெரியபெருமாள் கேட்க, அவைகளும் தன்னிடம் இல்லை என்று ஆழ்வார் சொல்வதாக அமைந்த பாசுரம் போதெல்லாம் போது கொண்டு ( 26).
மனிதர்கள் செய்யக்கூடிய எந்த நற்செயல்களையும் ஆழ்வார் செய்யாவிட்டாலும், பரமபதத்தில், அனந்தாழ்வான், கருடன், விஷ்வக்சேனர் மூலம் ஏற்றுக்கொள்ளும் சேவைகளை, விலங்குகளைக்கொண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பி, எம்பெருமான் ராமனாக அவதரித்த காலத்தில், குரங்குகளும், அணில்களும் தங்கள் சக்திக்கு தகுந்தாற் போலும், நல்ல நெஞ்சத்தோடும் செய்தது போல், ஆழ்வாரும் ஏதாவது செய்யலாமே என்று பெரியபெருமாள் வினவ, அதுவும் இல்லை என்று ஆழ்வார் மறுப்பது போல் அமைந்துள்ள உள்ள பாசுரம் குரங்குகள் மலையை நூக்க (27).
உம்பரால் அறியலாகா (28) என்ற அடுத்த பாடலில், பிரம்மா போன்ற தேவர்களால் கூட, அறியமுடியாதபடி, பரமபதத்தில் உள்ள எம்பெருமான், முதலைமேல், கோபித்துக் கொண்டு கஜேந்திரன் என்ற யானை எம்பெருமானை நினைத்து, காத்தருள வேண்டும் என்று கதறிய சிந்தனையும் ஆழ்வார் தனக்கு இல்லை என்றும், கஜேந்திரனுக்கு அருளியதைப் போல், தம் அடியவர்களைக் காக்கும் பொருட்டு அவன் இருக்கையில், அப்படிப்பட்ட எம்பெருமானுக்கு தொண்டு செய்யாமல், தான் எதற்காக பிறந்தேன் என்று ஆழ்வார் வருந்தியது.
குளித்து மூன்று அனலை (25) பாசுரத்தில் மனம், வாய் மற்றும் கை போன்றவைகளைக் கொண்டு சிந்தித்து, பாடி, மலர்களை தூவி, என்ற மூன்று விதமான செயல்களையும் சேர்ந்து செய்து இருக்கிறீர்களா என்று எம்பெருமான் கேட்டதாகவும், அடுத்த பாசுரமான, போதெல்லாம் போது கொண்டு(26) பாடலில், வாயினால் பாடி என்பதை மட்டும் தனியாக கேட்டதாகவும், அடுத்த பாசுரமான குரங்குகள் மலையை நூக்க (27) பாடலில், கை கால் போன்றவற்றைக்கொண்டு சேவை செய்து இருக்கிறீர்களா என்றும், உம்பரால் அறியலாக (28) பாடலில், மனதினால் சிந்தித்து இருக்கிறீர்களா என்பதை தனியாக கேட்பதாகவும் கொள்ளலாம்.
இனி அடுத்த பாசுரம்,
ஊரிலேன் காணி யில்லை உறவு மற்றொருவர் இல்லை, பாரில் நின் பாத மூலம் பற்று இலேன் பரம மூர்த்தி, காரொளி வண்ணனே (என்) கண்ணனே கதறுகின்றேன், ஆர் உளர் களை கண் அம்மா அரங்கமா நகரு ளானே. (29)
ஆனைக்கு துன்பம் வந்தபோது, அது தனக்கு உதவுவதற்காக எம்பெருமானைப் பற்றி நினைத்த நினைப்பு ஆழ்வாருக்கு இல்லையாகில், எம்பெருமான் உகந்து அருளின திவ்யதேசங்களுடன் சம்பந்தங்களாவது உண்டா என்று எம்பெருமான் வினவ, அதுவும் இல்லை என்று ஆழ்வார் மறுக்கும் பாசுரம். சாளக்ராமம், அயோத்தி, திருவரங்கம் போன்ற திவ்யதேசங்களில் பிறப்பு, திருப்பல்லாண்டு பாடுதல் போன்ற கைங்கர்யம் செய்யும் காணியாட்சி இருந்தால், எம்பெருமான் அவர்களை ரக்ஷித்தே தீர்வான் என்று இருப்பதால், அது போல் உண்டா என்று எம்பெருமான் கேட்க, அவை இல்லை என்று ஆழ்வார் இந்த பாடலில் மறுக்கிறார்.
எம்பெருமான் நித்யவாஸம் செய்யும் திருத்தலங்களில் பிறக்கவோ, வாசம் செய்யவோ இல்லை; அவைகளில் கைங்கர்யம் செய்யும் பாக்கியமும் தனக்கு இல்லை; அந்த திவ்யதேசங்களில் உறவுக்காரர்கள் இல்லை; வேறு எவரையும் தெரியாது; இந்த பூமியில், புகல் அற்றவர்களுக்கு தஞ்சமான எம்பெருமானின் திருவடிகளையும் சரணாகதியாக பற்றவில்லை; எல்லோருக்கும் தலைவனானவனே, கார்மேகம் போன்ற நிறம் உடையவனே, எனது கண்ணனே, உன்னை கதறி கூப்பிடுகிறேன், உன்னைத் தவிர வேறு யார் என்னுடைய குறையை தீர்க்க உள்ளார் என்பது பாடலின் பதவுரை ஆகும்.
இனி கொஞ்சம் விளக்கமாக பார்க்கலாம்.
இங்கு ஊர் என்று குறிப்பிடுவது, சாதாரண ஊர் இல்லை; சாளக்ராமம், அயோத்தி, திருவரங்கம் போன்ற எம்பெருமான் நித்யவாஸம் செய்யும் திவ்யதேசங்கள் ஆகும். இதற்கு பின் வரும் வார்த்தைகளில் ஆழ்வார் சொல்லும் காரணமே இது சாதாரணமான ஊர் இல்லை என்பதை தெரிவிக்கும். ஆழ்வார் தான் பிறந்த மற்றும் வசிக்கும் ஊர் மோக்ஷ உபாயம் தருவதாக இல்லை என்று சொல்கிறார். எல்லா ஊர்களும் மோக்ஷம் தரும் என்றால் எல்லா மக்களும் மோக்ஷம் அடைவார்கள். அதற்கு எந்த விதமான ஆதாரங்களும் (பிரமாணங்கள்) இல்லை.
ஆனால் திவ்யதேசங்களுக்கு அந்த சிறப்பு உள்ளது என்பது, வால்மீகி இராமாயணத்தில் ஆரண்ய காண்டத்தில், (1.20) இராமபிரானிடத்தில் “நாங்கள் உங்கள் பிரதேசத்தில் வசிப்பவர்கள் என்பதால் உங்களால் பாதுகாக்கப்படுவதற்கு நாங்கள் தகுதியானவர்கள். நீங்கள் நகரத்தில் வாழ்ந்தாலும் சரி, காட்டில் வாழ்ந்தாலும் சரி, நீங்கள் மக்களுக்கு எஜமானன், எங்கள் அரசன்” என்று தண்டகாரண்ய முனிவர்கள் சொல்வது. உத்திர காண்டத்தில், (109.22) அயோத்தியில், ஒரு உயிரும் காணப்படவில்லை, எல்லா உயிர்களும் இராமனை பின் தொடர்ந்தனர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளதும் இது போலவே; கருட புராணம், 11 ஸ்லோகத்தில், இந்த தேசம், மிக புனிதமானதாகவும், மனிதர்களை நற்கதிக்கு அழைத்து சொல்வதாகவும் அவர்களுடைய எல்லா இஷ்டங்களையும் நிறைவேற்றி தருவதாகவும் உள்ளது என்று கூறுவதும் எம்பெருமான் நித்யவாஸம் செய்யும் திவ்யதேசங்கள் மோக்ஷ உபாயம் என்று நிரூபிக்கின்றன.
மேலும் நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாடலான கற்பார் ராமபிரானை அல்லால் என்ற பதிகத்தில், முதல் (7.5.1) பாசுரத்தில், “புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே, நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும், நற்பாலுக்கு உய்த்தனன்” என்று சொல்லி அயோத்தியில் வாழும் அத்தனை ஜீவராசிகளையும் வைகுந்தத்திற்கு அழைத்து சென்றதாக சொல்கிறது. அதே போல், குலசேகராழ்வார் தனது பெருமாள் திருமொழியில், (10.10) “அன்று சராசரங்களை வைகுந்தத் தேற்றி” என்று ராமபிரான் அயோத்தியில் உள்ள அனைத்தையும் வைகுந்தத்திற்கு அழைத்து சென்றதை பாடி உள்ளார். ஆக, திவ்யதேச வாசம் மோக்ஷம் கொடுக்கும் என்பது திண்ணம். ஆகையால் இங்கு ஊர் என்று சொன்னது திவ்யதேசமே.
திவ்யதேசங்களில் பிறக்கவில்லை என்றாலும் அங்கு பல்லாண்டு பாடுதல், நந்தவனம் கட்டி, திருமாலை தொடுத்து எம்பெருமானுக்கு சமர்ப்பித்தல் போன்ற கைங்கர்யங்கள் செய்வதற்காக உரிமை நிலமாக, காணியாட்சி நிலங்கள் பெற்றதுண்டோ; தானமாகவோ அல்லது சொந்தமாக வாங்கியோ சில சிறு நிலங்கள் திவ்ய தேசங்களில் உள்ளனவோ; அதன் பொருட்டு திவ்யதேசம் சென்று எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்தது உண்டோ என்று திவ்யதேச சம்பந்தம் பற்றி எம்பெருமான் வினவ அதற்கும் தன்னை உய்விக்க வழி இல்லை என்ற கருத்தில், காணி இல்லை என்று ஆழ்வார் மறுக்கிறார்.
ஊரும் இல்லை, காணியும் இல்லை என்றால், உறவு மனிதர்களாவது ஒரு திவ்யதேசத்தில் இருக்கிறார்களா அல்லது திவ்யதேசத்தில் உள்ளவர்களுடன் மந்திரம் சொல்லி கொடுத்தல் அல்லது கேட்டு கொள்ளுதல் அல்லது பெண் கொடுத்தல், பெண் கொள்ளுதல் மூலம் உண்டான தொடர்போ இருந்தால், அது கொண்டு எம்பெருமான் ஆழ்வாரை ரக்ஷிக்கலாம் என்று சொல்ல, ஆழ்வார் அவைகளும் இல்லை என்கிறார். உறவு இல்லை என்பதால், நெருங்கிய உறவினர்கள் இல்லை என்றும், மற்றொருவர் இல்லை என்பதால், தூரத்து உறவினர்களோ, நண்பர்களோ, பார்த்து பேசிய நபர்களோ திவ்யதேசங்களில் தமக்கு இல்லை என்று ஆழ்வார் சொல்கிறார்.
அப்படியானால் எங்கு வசிக்கிறீர்கள் என்று எம்பெருமான் கேட்க, எல்லையற்ற துன்பங்கள் கொடுக்கும், ஒருவர் உண்ணும் உணவை எழுவர் பறித்துக் கொள்ளும் கொடுமையுடன், ஒருவர் உடையை எழுவர் கவர்ந்துகொள்ளும் இந்த பூமியில் வசிக்கிறேன் என்று ஆழ்வார் சொல்கிறார். மூன்றாம் திருவந்தாதியில்(51), பரமபதத்தை பேய்ஆழ்வார், கலங்கா பெருநகர் என்று வர்ணிக்கிறார். காமம், க்ரோதம் போன்ற கலக்கங்கள் இல்லாத பெரு நகரம் என்றும் அங்கு கவலையே இல்லாமல் இருக்கலாம் என்றும் அவர் பரமபதத்தைப் பற்றிச் சொல்கிறார். ஆக பரமபதத்தை தவிர அத்தனை இடங்களும், மனிதர்களை கலங்கும்படி செய்யும் ஊர் ஆகும் என்பது ஆழ்வார் சொல்லும் கருத்து.
வேறு கதி அற்றவர்களுக்கும் துணையாய் இருக்கும் எம்பெருமானின் திருவடிகளுக்கும் தனக்கும் எவ்வகையிலும் தொடர்பு இல்லை என்கிறார். இங்கே உரையாசிரியர் ராமாயணத்தில் சுந்தர காண்டத்தில் (38-33) இருந்து காகாசுரன் சரித்திரம் சொல்லப் படுகிறது. காகாசுரன் தந்தையாலும், தாயாலும், மஹரிஷிகளாலும் தேவர்களாலும் கைவிடப்பட்ட போது, மூன்று உலகங்களையும் சுற்றி திரிந்து பிறகு ராமபிரானையே சரண் அடைந்தான். அபச்சாரம் செய்து பிரம்மாஸ்திரத்திற்கு இலக்கான காகாசுரனுக்கும் சரணாகதி அளித்த எம்பெருமானின் திருவடிகளுக்கு ஆகாதவன் ஆகிவிட்டதாக ஆழ்வார் சொல்கிறார். இப்படி எல்லா வழிகளிலும் நன்மை இல்லாத வகையில் ஆழ்வார் இருப்பதால், எம்பெருமானின் திருவுள்ளமும் அவரை பெறும் பேற்றை ஆழ்வார் இழந்து விட்டதாக நினைக்க அதற்கு பதில் கூறும் வகையில் அடுத்த பதம் உள்ளது.
ஆழ்வார் தன்னை ரக்ஷித்துக் கொள்ள தன்னிடம் ஒரு உபாயமும் இல்லை என்று சொல்லி, ஆனால் எம்பெருமானிடம் ஏராளமாக உபாயங்கள் இருக்கிறன என்றும் கூறுகிறார். பரம என்றால், அனைவரிலும் உயர்ந்தவராக உள்ளவர் என்று பொருள். மூர்த்தி என்றால் விக்ரஹம். அனைவர்க்கும் ஸ்வாமியாக (தலைவராக) எம்பெருமானே உள்ளார் என்று கூறி, அவனுக்கு அடியவனான ஆழ்வாரை ரக்ஷித்தால் தானே, அவன் அனைவரையும் காக்கும் பரமமூர்த்தி என்று அறியப்படுவார் என்றும், மேலும், அடியவர்களை ஏற்றுக் கொள்ளா விட்டால், அவனுடைய தலைமை மாண்புக்கு ஒரு குறை வந்து விடுமோ என்ற கேள்வியையும் எம்பெருமான் முன் ஆழ்வார் வைப்பதாக உரை ஆசிரியர் சொல்கிறார். அதற்கு எம்பெருமான் அடியவர்களும் தாங்கள் எம்பெருமானுக்கு சேவை செய்ய வேண்டியவர்கள் என்பதை உணர வேண்டாமா என்று பதில் உரைக்க, ஆழ்வார், அடியவர்கள் தாங்கள் எம்பெருமானுக்கு அடிமை என்பதை மறந்து இருந்த காலத்திலும், பிரளய காலத்தில் ஒரு பொருளாக இவர்களை தன்னுள் அடக்கி வைத்து இருந்ததையும் யாராலும் மாற்ற முடியாது என்றதாலும், எம்பெருமான், இவர்களிடம் தான் அறிந்த உறவு முறை காரணமாக இவர்களை திருத்தி இவர்களுடன் உள்ள உறவு முறையை உணர வைப்பான் என்ற கருத்தை முன் வைக்கின்றார்.
எம்பெருமான் ஆழ்வாரின் வார்த்தைகளை கேட்டு, அவரிடமே அவர் சித்தி பெற என்ன வழி என்று எம்பெருமான் திருவுள்ளமாக, அதற்கு ஆழ்வார் எம்பெருமானின் அழகே வழி என்கிறார். திருமாலை 16ம் பாசுரத்தில், ‘ஆதரம் பெருக வைத்த அழகன்‘ சொன்னபடி முதலில் ஒரு அடியவனுக்கு ஆர்வத்தை உண்டாக்கி, ஆர்வம் பிறந்த பின் அவனை அடைய வழியாகவும் இருப்பது அவன் அழகு என்கிறார். அந்த வடிவழகு அவனிடம் இருக்கும் போது தான் கைங்கர்யசித்தி பெற குறையில்லை என்கிறார்.
அப்படிப்பட்ட அழகு எட்டா கனியாக பரமபதத்தில் இருக்காமல், ஆழ்வார் போன்ற அடியவர்களுக்காக பல அவதாரங்கள் எடுத்து, தன்னுடைய எளிமை, நீர்மை போன்ற நற்குணங்களை காட்டிக்கொண்டு இருக்கும் பரம மூர்த்தி என்று ஆழ்வார் கூறுகிறார். காரொளி வண்ணன் ஆகையால், அடியவர்களுக்கு ஆர்வம் தொடங்குவது முதலாக, உபாயம் வரை எல்லாமாக இருக்கும் எளிய கண்ணன் என்கிறார். மேலும், ஆழ்வார் எம்பெருமானை தங்களுடைய ஸ்வரூபத்திற்கு தகுந்தவராகவும் உள்ளார் என்று கூறி, எளிமை நீர்மை போன்ற கல்யாண குணங்களுடன், வடிவழகும் சேர்ந்து இருப்பதால் ஆழ்வாரின் கைங்கர்ய சித்திக்கு ஒரு குறையும் இல்லை என்கிறார். என் கண்ணனே என்றும் ஒரு பாடம் உண்டு. இரண்டிற்கும் அர்த்தத்தில் பெரிய வேறுபாடு இல்லை.
எம்பெருமானுடைய இந்த பெருமைகளை எண்ணி பக்தி முதலிய மற்ற சாதனங்களை பின்பற்றியவர்கள் அவர்களுக்கு பலன் கிடைக்க தாமதம் ஆகும் போது எப்படி கதறி எம்பெருமானை கூப்பிடுவார்களோ அது போல் தானும் கதறி கூப்பிடுவதாக ஆழ்வார் கூறுகிறார்.
ஆழ்வார், தாம் இப்படி கதறி கூப்பிடும்போது, எம்பெருமான் ரக்ஷிக்காமல் காலம் தாழ்த்துவது, வேறு யாராவது ஆழ்வாரை ரக்ஷிப்பார் என்று எம்பெருமான் நினைப்பதாலா, ஒன்றும் இல்லாத ஆழ்வார் தான் தன்னை ரக்ஷித்துக்கொள்ள முடியுமா, தன்னிடம் ஒன்றும் இல்லை என்பதை தன்னைவிட அறிந்தவர் யாரும் இல்லாதபோது, அவர்கள் தாம் வந்து ஆழ்வாரை காப்பாற்ற முடியாமா என்று பலவாறாக ஆழ்வார் கேட்பது ஆர் உளர் களைகண் என்பதில் விளக்கப்படுகிறது.
எம்பெருமானின் உடமைப்பொருள் அழிந்தால் அது அவருக்குத் தானே நஷ்டம் என்று ஆழ்வார் கலங்கி,அம்மா என்கிறார்.
உடையவனாக எம்பெருமான் தனக்கு அருகில் இல்லாமல் இருந்தாலாவது தான் கதறி அழாமல் இருக்கலாம், ஆனால் அவன் அருகிலேயே, இந்த பூவுலகத்தில் எம்பெருமானை பெற வேண்டும் என்ற ஆசையோடு யாராவது வருவார்களா என்று திருவரங்கத்தில் (கோவிலில்) காத்துகொண்டு இருக்கும் போது, தான் எப்படி கதறி அழாமல் இருக்க முடியும் என்று ஆழ்வார் வினவுகிறார்.
இனி, அடுத்த பாசுரத்தில் சந்திக்கலாம். நன்றி.