திருவேங்கடமுடையான் குலசேகரஆழ்வார்

தொடக்கம்

பதின்மர் பாடும் பெருமாள் என்று திருஅரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம்.

திருஅரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே என்று நம் பெரியவர்கள் கூறி உள்ளார்கள்.).

இவற்றில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்து சில பாசுரங்களை முன்பு பார்த்து உள்ளோம்.  பொதுவாக முதலாழ்வார்களுக்கு வேங்கடமுடையானிடம் அதிக பற்று கொண்டு இருந்தார்கள் என்பதும் அவர்கள் அவனுக்கு நிறைய பாடல்கள் பாடினார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து திருவேங்கடமுடையானை முன்னிட்டு

  • பொய்கையாழ்வார் இயற்றிய முதல் திருவந்தாதியில் இருந்து பத்து பாசுரங்களை முன்பு பார்த்தோம்.
  • அடுத்த ஆழ்வார், பூதத்தாழ்வார், அவரின் இரண்டாம் திருவந்தாதியில் இருந்து திருவேங்கடமுடையானை பற்றி பதினோரு பாசுரங்களில் சொல்வதை இங்கே சுருக்கமாக பார்த்தோம்.
  • அடுத்த ஆழ்வாரான பேய்ஆழ்வாரின் திருவேங்கடமுடையான் பாசுரங்களை (19) இங்கே காணலாம்.
  • அடுத்து, திருமழிசை ஆழ்வார் திருவேங்கடமுடையானை பற்றி பாடல்களை (16) பார்த்தோம்.
  • திருப்பாணாழ்வார் பாடிய அமலனாதிபிரான் பிரபந்தத்தில் இருந்து இரண்டு பாடல்களை சென்ற பதிவில் பார்த்தோம்.
  • இப்பொழுது குலசேகராழ்வாரின் பதினோரு பாடல்கள். நன்றி.

குலசேகர ஆழ்வார்

ஆழ்வார் பெருமாள் திருமொழி என்னும் பிரபந்தம் பாடி உள்ளார், அதில் 105 பாசுரங்கள் உள்ளன, அவற்றால் பதினோரு பாசுரங்கள் கொண்ட நான்காவது பதிகம் திருவேங்கடமுடையான் மேல் பாடியுள்ளார். எம்பெருமானிடம் சரண் அடைந்ததும், இந்த பதிகத்தில் அவருக்கு சேவை செய்யவும், கைங்கர்யம் பிரார்த்திக்கவும்  திருவேங்கடம் தான் இடம் என்றும், மனிதப் பிறவியாகவோ அல்லது வேறு ஏதேனும்  ஒன்றாகவோ, திருவேங்கடத்திலேயே எப்போதும் இருக்க ஆழ்வார் ஏங்குகிறார். அதனை சுருக்கமாக இங்கும் பார்த்தோம். சற்று விரிவாக கீழே காண்போம்.

பெருமாள் திருமொழி

1. ஊனேறு செல்வத் துடற்பிறவி யான்வேண்டேன், ஆனேறேழ் வென்றானடிமைத் திறமல்லால், கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து, கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே 4.1

ஆழ்வார், திருவேங்கடத்தில் வாழ்வு கிடைக்குமானால், மனிதப்பிறவிதான் என்று இல்லாமல், ஸ்வாமி புஷ்கரணியில், ஒரு நாரையாக பிறந்து, பகவானுக்கு சேவை செய்வது மகிழ்ச்சியே என்று தொடங்குகிறார். கருடன், அனுமன், திருவனந்தாழ்வான், லட்சுமணன் முதலானவர்கள் போலப் பலபடிகளாலும் சேவை செய்ய வேண்டும் என்று குலசேகர ஆழ்வார் வேண்டுகிறார். ஸ்வாமி புஷ்கரணி என்பது பெருமாளுக்கு பிரியமான நீர்நிலை என்றும், வராஹ புராணம் போன்றவைகளில் குறிப்பிடப்பட்டது என்றும், திருமலை கோவிலுக்கு மிகவும் அருகிலேயே உள்ள திவ்யதீர்த்தம் என்பதும் நினைவில் கொள்ள வேண்டும்.

2. ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ, வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன், தேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில். மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே 4.2

நாரைகளுக்கு சிறகுகள் இருப்பதால், அவை திருவேங்கடத்தை விட்டு பறந்து செல்லக்கூடும். ஆதலால், திருவேங்கடத்தில் பிறப்பு, வாழ்ச்சி, மற்றும் இறப்புகளைக் கொண்ட மீனாய்ப் பிறந்து திருவேங்கடத்திலே, இருக்க, ஆழ்வார் அடுத்த பாசுரத்தில் (2) வேண்டுகிறார். இந்திரன் முதலிய தேவாதி தேவர்களின் பதவிகளோ, அல்லது இந்த உலகத்தை ஆளும் அரசாட்சியோ ஆகிய இரண்டும் சேர்ந்து ஒன்றாக கிடைத்தாலும் வேண்டாம் என்று ஆழ்வார் என்று விலக்கி வைக்கிறார். அழியாத இளமையை கொண்ட ரம்பை முதலிய தேவலோக மாதுக்களும் வேண்டாம் என்கிறார். இவை மோக்ஷத்தை மேன்மையை பார்க்குங்கால், சிற்றின்பமே என்று ஒதுக்குகிறார்.

3. பின்னிட்ட சடையானும் பிரமனு மிந்திரனும், துன்னிட்டு புகலரிய வைகுந்த நீள்வாசல், மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும், பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவே னாவேனே 4.3

மீனாய்ப் பிறக்கப் பிரார்த்தித்த ஆழ்வார்,  மீன் நீரிலே இருக்க வேண்டியது, அதனால் கோவிலுக்கு சென்று பகவானுக்கு சேவை செய்ய முடியாது என்றும், அதேபோல் நீர் வற்றிவிட்டாலும் திருமலையில் வாழ்வது முடியாது என்றும் உணர்ந்து, பெருமாள் வாய்நீர் உமிழும் பாத்திரத்தை  (பொற்காளாஞ்சி)  ஏந்திச் செல்லும் சாதாரணமான தொண்டனாக வேண்டும் என்று மூன்றாம் பாசுரத்தில் விரும்புகிறார். எம்பெருமானுக்கு தான் பொற்காளாஞ்சியை ஏந்திக் கொண்டு அந்தரங்க கைங்கரியம் செய்ய வேண்டுமானால் மனுஷ்ய ஜன்மமே என்றாலும், அதுவே வேண்டும் என்கிறார்.   பிரமன் சிவன் இந்திரன் முதலிய தலைமைத் தேவர்கள், அங்கு வந்து திருவேங்கடமுடையானைச் சேவித்தலில் உள்ள விருப்பத்தால், மிகுதியாகக் கூடியுள்ள அடியார்களின் பெருங்கூட்டத்தின் நடுவில் சிக்கி உள்ளே புக முடியாமல் தடுமாறப் பெற்ற அத்திருமலையில், ஆழ்வார், எம்பெருமானுக்கு அந்தரங்க கைங்கர்யம் செய்பவர் ஆகையால், எல்லோரும் வழிவிட, தங்கு தடையின்றி, உள்ளே புகுந்து, கர்ப்பகிரகத்தில், நின்று எம்பெருமானுக்கு சேவை செய்யும் பேற்றை பெற வேண்டுகிறார். திருவேங்கடமுடையானை சேவிக்க, மிக அதிகமாக கூடியுள்ள அடியார்களின் பெருங்கூட்டத்தின் நடுவில் சிக்கி, மற்றவர்கள் உள்ளே புக முடியாமல் தடுமாறுவதை அன்றே ஆழ்வார் கவனித்து இருக்க வேண்டும்.

4. ஒண்பவள வேலை யுலவுதண் பாற்கடலுள், கண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு, பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து, செண்பகமாய் நிற்கும் திருவுடையே னாவேனே 4.4

விலங்கு என்ற பிறப்பு வேண்டும் என்பதிலை, திருவேங்கடமலையில் வாழும் வாய்ப்பு இருக்கும்படியாக அங்கு நிற்கும் ஒரு தாவரமாகவாயினும் தான் ஆக வேண்டுமென்று வேண்டுகிறார். நம் சம்பிரதாயத்தில், ஸ்ரீரங்கம், திருமலை, காஞ்சிபுரம் மற்றும் மேல்கோட்டை, என்ற திவ்யதேசங்களுக்கு, முறையே, போக மண்டபம், புஷ்பமண்டபம்,  தியாக மண்டபம், ஞான மண்டபம் என்று கூறுவார்கள். திருவேங்கடம் என்பது புஷ்ப மண்டபமாகும். தோள் மாலை (தோமாலை) சேவை என்பது திருப்பதியில் இன்றும், என்றும் பிரசித்தம். திருமலையில் புஷ்பத்தொண்டு புரிவது மிகவும் சிறப்பு. செண்பக மலர் பெருமாளுக்கு மிகவும் உகந்தது. புஷ்பமண்டபமாகிய திருமலையிலே எம்பெருமானுக்குப் புஷ்பகைங்கரியம் செய்வது விசேஷமாதலால் அக்கைங்கரியத்துக்கு உதவும் செண்பக மரமாக நிற்கும் பேறு வேண்டுகிறார். கீழ்ப்பாட்டில் விரும்பின கைங்கரியம் கிடைத்து இருந்தால், ஒரு வேளை வட்டிலைக் களவு செய்ய ஆசை தோன்றி, அதனால் சிறையிருக்க நேரிடும் என நினைத்து சண்பகமரமாய்ப் பிறக்க வேணுமென்று  வேண்டுகிறார் என்றும் ஒரு விளக்கம் உண்டு.

5. கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து, இன்பமரும் செல்வமு மிவ்வரசும் யான்வேண்டேன், எம்பெருமான் ஈசன் எழில் வேங் கடமலைமேல், தம்பமாய் நிற்கும் தவமுடையே னாவேனே 4.5

கண்ணபிரானின் தேவியான, சத்யபாமாவின் விருப்பத்திற்கு ஏற்ப, கண்ணபிரான், ஸ்வர்க்கலோகத்தில் இந்திரனது நந்தவனத்திலிருந்த பாரிஜாத மலர் செடியினை, சத்யபாமாவின் மாளிகையிலே கொண்டு நட்டதைப்போல், யாரேனுமொருவர் செண்பக மரத்தின் மேல் ஆசை கொண்டு, அதையும்  பெயர்த்துக் கொண்டு போனால் திருமலையில் இருக்க முடியாது எனக் கருதி பூ, காய், பழம், நிழல் என்று ஒன்றுக்கும் உதவாத ஒரு ஸ்தம்பமாய் திருமலையில் பிறக்க ஆழ்வார், இந்த பாசுரத்தில் வேண்டுகிறார்.

6. மின்னனைய நுண்ணிடையாரும் உருப்பசியும் மேனகையும், அன்னவர்தம் பாடலொடு ஆடல் இவை ஆதரியேன், தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள். அன்னனைய பொற்குவடா ம் அருந்தவத்தன் ஆவேனே 4.6

ஸ்தம்பமாய் இருந்தால், அதை அரசாங்கத்தார் வெட்டியோ, தீ வைத்து கொளுத்தியோ அழித்துவிடுவார்கள் என்று எண்ணி, ஆழ்வார், திருமலையில் ஓர் பொன்மயமான சிகரமாக வேண்டும் என்று தனது அடுத்த பாசுரத்தில் கேட்டுக் கொள்ளுகிறார். தேவலோக மங்கையர், ஊர்வசி, மேனகை போன்றவர்களின் ஆட்டத்திலும், பாடல்களிலும் தேவலோக போகத்திலும் தமக்கு  எள்ளளவும் ஆசை இல்லாமையை முதலில் சொல்லிவிட்டு, பிறகு, திருமலையில் ஒரு பாகமாகக் கடவேன் என்கிறார்.

7. வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம், கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன், தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடமலைமேல், கானாறாய்ப் பாயும் கருத்துடையே னாவேனே 4.7

தான் ஒரு சிகரமாக இருக்கும்போது, புதிய கோவில்கள் கட்டுவதற்காக அந்த சிகரத்தை உடைத்து அதன் கற்களை யாரேனும் எடுத்துச்செல்வர்,   ஆகையால் ஆழ்வார், தான் திருமலையில் ஒருவராலும் பெயர்த்துக்கொண்டு போகக் முடியாததான ஒரு காட்டாறாக பிறக்க, அடுத்த பாசுரத்தில் வேண்டுகிறார்.

8. பிறையேறு சடையானும் பிரமனும் இந்திரனும், முறையாய பெருவேள்விக் குறைமுடிப்பான் மறையானான், வெறியார்தண் சோலைத் திருவேங் கடமலைமேல், நெறியாய்க் கிடக்கும் நிலையுடையே னாவேனே 4.8

காட்டாற்றில் எந்நேரமும் தண்ணீர் இருக்கும் என்று  சொல்ல முடியாது, சில சமயம் ஆறு வற்றி விடும், அதனால் தான் திருமலையில் வசிக்க முடியாமல் போய்விடும்,  அப்போது திருமலையில் வாழ்வு இல்லாமல் போய்விடும் என நினைத்தார்.  ஆகையால், பக்தர்கள் செல்லும் வழியில், அவர்களின் பாத துகள்கள்  படும்படி, தான் திருவேங்கட மலையில் ஒரு படியாக வேண்டும் என்று தனது அடுத்த பாசுரத்தில் வேண்டுகிறார். இங்கு குறை முடிப்பான் என்று சொன்னது, குறையைத் தீர்ப்பவன், வேண்டுகோளைப் பூர்த்தி செய்பவன் என இரண்டும் சேர்ந்து பொருள் தரும்.

9. செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே, நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல், அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும், படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே 4.9

பக்தர்கள் செல்லும் வழியில் ஒரு படியாக இருந்தால், எல்லா பக்தர்களும் அந்த வழியே தான் செல்வார்கள் என்று சொல்ல முடியாது, ஆகையால் தான் எல்லா பக்தர்களுக்கும் சேவை செய்ய முடியாது.  எங்கேயோ ஒரு படியாக இருப்பதைக் காட்டிலும் அது பெருமாளின் வாசல் படியாக இருந்தால், அதற்கு பெருமாளின் தரிசனம் எப்போதும் கிடைக்கக்கூடும், எல்லா பக்தர்களின் பாதத்துளிகளும் படும்,  ஆதலால், தான் அங்கு ஒரு வாசற்படியாக வேண்டும் என்று அடுத்த பாசுரத்தில் தனது விஷேச விருப்பத்தை  தெரிவிக்கின்றார். வல்வினைகள் என்ற, எத்தனையோ பிறவிகளாக தீர்க்க இயலாத பாவங்களை தன்னுடைய கருணையினால் தீர்க்கும் திருவேங்கடமுடையான். அவன் கோவில் வாசலில் படியாய் கிடந்தது, அவன் பவள வாயினை பார்த்துக்கொண்டே இருப்பேன் என்று குலசேகர ஆழ்வார் சொல்கிறார்.

எம்பெருமானுக்கு சேவை செய்யும்போது, ஒரு  ஜீவாத்மா தன்னுடைய சரீரம், மற்றும் கை, கால்  போன்ற அவயங்கள் அனைத்தும் பரமாத்மாவின் அனுபவத்திற்கே என்று விட்டு விட வேண்டும்.  அதுபோல் தன்னைப் பற்றிய சுய அறிவோ, பகவானுக்கு சேவை செய்கிறோம் என்ற அகந்தையோ  இல்லாது இருக்க வேண்டும் எனபதை ஆழ்வார், இந்த ஒன்பதாம் பாசுரத்தில், தான் ஒரு உயிரற்ற படியாய், இருக்க வேண்டும் என்று சொல்லி,  நமக்கு  மிக அழகாக புரிய வைக்கிறார்.

இப்பாசுரத்தை அடியொற்றியே விஷ்ணுவாலயங்களில்,  பெருமாள் சந்நிதியின் வாசற்படி “குலசேகரப்படி” என்று, ஆழ்வார் பெயரையிட்டு வழங்கப்படுகிறது.

10. உம்பர் உலகாண்டொரு குடைக்கீழ் உருப்பசி தன், அம்பொற் கலையல்குல் பெற்றாலும் ஆதரியேன், செம்பவள வாயான் திருவேங் கடமென்னும் எம்பெருமான் பொன்மலைமே ல் ஏதேனும் ஆவேனே 4.10

திருப்பதி சன்னதியில் கருங்கற்படிகளை, ஒரு நாள், தங்கப்படிக்கட்டுகளாக மாற்றலாம், அதனால் தான் திருமலைவிட்டு செல்லநேரிடும், சுவாமியின் திருமுக மண்டல சேவையை இழப்போம் என்று கருதி, தாமாக ஒரு பிறவியும் வேண்டிக்கொள்ள விழையாதவராய், “எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே” என்கிறார். படியாய்க் கிடப்பதும் பாங்கல்ல என்று அறுதியிட்டார்.  பின்னை எந்தப் பிறவியைப் பிரார்த்திக்கலாம் என்று யோசித்தார்.  கீழ் நிகழ்ந்த மாதிரி ஒவ்வொரு பிறப்பிலும் ஒவ்வொரு சிக்கல் தோன்றிக் கொண்டேயிருந்தது.  கடைசியாக ஒரு பிறவியையும் தாமாக வேண்டிக் கொள்ள விரும்பாதவராய் “ எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே” என்கிறார்.

11. மன்னியதண் சாரல் வடவேங்கடத்தான் தன், பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சி, கொன்னவிலும் கூர்வேல் குலசே கரஞ்சொன்ன, பன்னியநூல் தமிழ்வல்லார் பாங்காய பத்தர்களே 4.11

இது இந்த பதிகத்தின் பல ஸ்துதி சுலோகம் ஆகும். பகைவர்களை கொல்லுதலை பயின்ற கூர்மையான வேலாயுதத்தை உடைய குலசேகர ஆழ்வார் நிலை பெற்ற குளிர்ச்சியுள்ள சாரல்களையுடைய வடவேங்கட மலையில் எழுந்தருளியிருக்கிற எம்பெருமானது சொல்லும் இந்த பத்து பாசுரங்களையும், பொன்போ ல் சிறந்த சிவந்த திருவடிகளை சேவிப்பதற்கு விருப்பமுடன் வணங்கி அருளிச்செய்த இந்த பத்து பாசுரங்களை படிப்பவர்கள் அப்பெருமான் திருவுள்ளத்துக்கு இனிய பக்தர்களாவர் என்று கூறி முடிக்கிறார்.

ஆழ்வாரின் இந்த மனஓட்டத்தை ஒரு அட்டவணையாக கீழே கொடுத்துள்ளேன்.

4.1 ஊனேறு செல்வத்து திருவேங்கட மலையில் வாழ்வு கிடைக்குமானால், மனித பிறவி என்று கூட வேண்டாம். சுவாமி புஷ்கரணியில், அன்னம் போன்ற நீர் வாழ் பறவைகளாக பிறக்க வேண்டும்
4.2 ஆனாத செல்வத்து பறவைகளுக்கு சிறகுகள் இருப்பதால், அவை திருவேங்கடத்தை விட்டு பறந்து செல்லக்கூடும். திருவேங்கடத்தில் பிறந்து வாழ்ந்து மடியும் மீனாய்ப் பிறந்து திருவேங்கடத்திலே, இருக்க, வேண்டுகிறார்.
4.3 பின்னிட்ட சடையானும் நீர்நிலைகள் வற்றி விட்டால் என்ன செய்வது.? அங்கு இருந்து எப்படி எம்பெருமானுக்கு தொண்டு செய்வது, கோவிலுக்கு போவது என்று எண்ணி, எம்பெருமான் வாய் நீர் உமிழும் பொற் காளாஞ்சியை ஏந்திக் கொண்டு செல்லும் சாதாரண தொண்டு செய்பவனாக வேண்டும் என்கிறார்.
4.4 ஒண்பவள வேலை ஒரு வேளை தனது மனம் மாறி, அந்த பொன் வட்டிலை திருடி விட்டாலோ, சிறை செல்ல நேரிடும். ஆகையால், திருமலையில் செண்பக மரமாய் இருந்து எம்பெருமானுக்கு உகந்த, புஷ்ப தொண்டினை அவருக்கு உகந்த செண்பக மலர் கொண்டு தொண்டு செய்வேன் என்கிறார்.
4.5 கம்ப மத யானை ஒரு வேளை, திருமலைக்கு வரும் பயணிகள், செண்பக மரத்தின் மேல் ஆசை கொண்டு அதனை தங்கள் வீட்டிற்கு கொண்டு சென்றால், திருவேங்கட வாழ்வு போகும். ஆகையால் இலை, தழை , காய், கனி, நிழல் என்று ஒன்றுக்கும் உதவாத, (ஸ்)தம்பமாய் திருமலையில் பிறக்க வேண்டுகிறார்.
4.6 மின்னனைய நுண் இடையார்தம்பமாக இருந்தால் அரசாங்கத்தார், மலையில் உள்ள செடிகளை களைத்தெறியக் கூடும், அல்லது தீயில் பட்டு எரிந்து விட கூடும்.“ ஆகையால் திருமலையில் உள்ள பொன் மயமான சிகரம் ஆவதற்கு வேண்டுகிறார்.
4.7 வானாளும் மாமதி மலை சிகரமாக இருந்தால், புதுக்கோவில் கட்டுபவர்கள் மலையில் இருந்து பெரிய கற்களை எடுத்துக் கொண்டு போய் விடுவர். அதனால் திருமலை வாழ்வு போய்விடும் என்று எண்ணி, திருமலையில் காட்டு ஆறாக பிறக்க வேண்டும் என்கிறார்.
4.8 பிறை ஏறு சடையானும் ஆறு எப்போதும் ஓடிக் கொண்டு இருக்காது, சில சமயம் வற்றிப்போய் விடலாம், அதனால் திருமலையில் வாழ்வு முடிந்து விடும் என்று எண்ணி, பக்தர்கள் செல்லும் வழியில், அவர்களின் பாத துகள்கள்  படும்படி, திருவேங்கட மலையில் ஒரு படியாக வேண்டும் என்கிறார்.
4.9 செடியாய வல்வினைகள் திருவேங்கட மலையில் ஒரு படியாக இருந்தால், எல்லா அடியார்களும் அந்த வழியே போவார்கள் என்று சொல்ல முடியாது, அதனால் “படியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே” என்று எம்பெருமானின் வாசல் படியாக இருந்தால் எம்பெருமானின் தரிசனம் எப்போதும் கிடைக்கக் கூடும்” என்று வேண்டுகிறார்
4.10 உம்பர் உலகாண்டால் ஸந்நிதிக்குள் கருங்கல் படிகளை தங்கத்தால் மாற்ற வேண்டும் என்று யாராவது முயற்சி செய்தால், வாசல்படி மாறி விடும் அதனால் எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவனே ” என்று தாமாக எதையும் வேண்டிக் கொள்ள விரும்பாதவராய் பதிகத்தை முடிக்கிறார்.

இத்துடன், குலசேகர ஆழ்வார் திருவேங்கடமுடையானைப் பற்றி சொன்ன பாடல்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பு நிறைவடைகிறது. மீண்டும் மற்றொரு ஆழ்வாரின் பாசுரங்களில் சந்திப்போம் நன்றி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d