திருவேங்கடமுடையான் திருப்பாணாழ்வார்

தொடக்கம்

பதின்மர் பாடும் பெருமாள் என்று திருஅரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம்.

திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே என்று நம் பெரியவர்கள் கூறி உள்ளார்கள்.).

இவற்றில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்து சில பாசுரங்களை முன்பு பார்த்து உள்ளோம்.  பொதுவாக முதலாழ்வார்களுக்கு வேங்கடமுடையானிடம் அதிக பற்று கொண்டு இருந்தார்கள் என்பதும் அவர்கள் அவனுக்கு நிறைய பாடல்கள் பாடினார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து திருவேங்கடமுடையானை முன்னிட்டு பொய்கையாழ்வார் இயற்றிய முதல் திருவந்தாதியில் இருந்து பத்து பாசுரங்களை முன்பு பார்த்தோம். அடுத்த ஆழ்வார், பூதத்தாழ்வார், அவரின் இரண்டாம் திருவந்தாதியில் இருந்து திருவேங்கடமுடையானை பற்றி பதினோரு பாசுரங்களில் சொல்வதை இங்கே சுருக்கமாக பார்த்தோம். அடுத்த ஆழ்வாரான பேய்ஆழ்வாரின் திருவேங்கடமுடையான் பாசுரங்களை (19) இங்கே காணலாம். அடுத்து, திருமழிசை ஆழ்வார் திருவேங்கடமுடையானை பற்றி பாடல்களை (16) பார்த்தோம். இங்கே திருப்பாணாழ்வார் பாடிய அமலனாதிபிரான் பிரபந்தத்தில் இருந்து இரண்டு பாடல்களைப் பார்க்கலாம். நன்றி.

திருப்பாணாழ்வார்

ஆழ்வார் அமலனாதிபிரான் என்னும் பிரபந்தம் பாடி உள்ளார், அதில் 10 பாசுரங்கள் உள்ளன, அவற்றில் இரண்டு பாசுரங்களில் திருவேங்கடமுடையானைப் பற்றி பாடி உள்ளார். இந்த ஆழ்வார் திருவேங்கடத்தான், திருவரங்கனே என்று பாடியுள்ளார். வேதாந்த தேசிகன் என்னும் ஆச்சாரியார் தன்னுடைய பிரபந்த சாரம் என்ற நூலில், “தென்னரங்கர் பால், உலோகசாரங்க மாமுனி, தோள் தனிலே வந்து, பல மறையின் பொருளால், பாண் பெருமாளே, நீ பாதாதி கேசமாதாய் பாடித்தந்த சொல் அமலனாதிபிரான்” என்று ஆழ்வாரின் பெருமையும், திருவடியில் இருந்து திருமுடி வரை எம்பெருமானின் அழகினை வர்ணிக்கும் ப்ரபந்தத்தின் பொருளையும் ஒருசேர சொல்லி உள்ளார். இதே ஆச்சாரியார், இந்த ப்ரபந்தத்திற்கு முனி வாகன போகம் என்ற ஒரு வியாக்யானமும் அருளி உள்ளார்.

அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் விண்ணவர் கோன், விரையார் பொழில் வேங்கடவன் நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதிள் அரங்கத்தம்மான் திருக் கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன வொக்கின்றதே. (1)

எம்பெருமான், பரமபதத்தில் இருந்து வடமதுராவிலே பிறந்து, திருவாய்ப்பாடிக்கு வந்தது போலே ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து திருமலையில் தங்கி திருவரங்கத்திற்கு வந்தாக இந்த ஆழ்வார் திருவரங்கனின் சரித்திரம் சொல்வதாக கூறுவதுண்டு. இந்த பாடலில், ஆழ்வார் பெரியபெருமாள் திருவடிகளின் அழகு தன் கண்களில் புகுந்து, தம்மைப் பரவசமாக்கியதை சொல்கிறார்.

 அமலன், விமலன், நிமலன், நின்மலன் என்ற நான்கு சப்தங்களுக்கும் பொருள் ஒன்றே, இருந்தாலும், அவற்றை விளக்கும் உரையாசிரியர்கள்,

  • அமலன் என்பது, தான் ஒரு தாழ்ந்த குலத்தில் பிறந்து அவன் சன்னதியை அடைவதால், ஒரு குற்றம் உண்டாகும் என்று எண்ணியவரின் குறையை போக்கியவன் என்பதாகும்
  • விமலன் என்பது, ஆழ்வாரது சிறுமையை நோக்காதே, அவரை பாகவதர்க்கு ஆட்படுத்தி ஒரு சீரிய பொருளாக ஆக்குகையாலே எம்பெருமானது திருமேனியில் பிறந்த ஒரு தேஜஸ்ஸை அவரே அனுபவிப்பதால், விமலன் என்கிறார். 
  • நிமலன் என்பது, அடியார்க்கு எளியனாயிருக்கும் தன்மையை வெளியிடுவது.  நிமலன் என்பது ப்ரஹ்மா, சிவன் போன்றவர்கள் அஞ்சி அணுகும்போது, குரும்பருத்த நம்பியிடம் தினமும் பேசும் படி தன்னை எளியவனாக்கி கொள்வதை இங்கே உரையாசிரியர்கள் உதாரணமாக காட்டுகிறார்கள்.
  • நின்மலன் என்றது, அடியார்களுடைய குற்றங்களைக் காண்பது, என்ற குற்றம் இல்லாதவன் என்பதாகும். அடியார் குற்றங்களைக் கண்டாலும் அவற்றை குணங்களாகக் கொள்ளுபவன் எம்பெருமான்.

மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள், சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான், அந்தி போல் நிறத்து ஆடையும் அதன் மேல் அயனைப் படைத்தது ஓர் எழில் உந்தி மேலது அன்றோ அடியேன் உள்ளத்தின் உயிரே. (3)

ஒரு கிளையில் இருந்து மற்றொரு கிளையில் பாயும், குரங்குகளானவை உள்ள திருமலையிலே, நித்யஸூரிகள் ஆராதிக்கும்படி நிற்பவன் திருவரங்கத்தில், திருவனந்தாழ்வானின் மேல் சயனிக்கும் திருவரங்கன். அவன் செவ்வானம் போல் பீதாம்பரம் அணிந்து உள்ளான். அதன் மேல் பகுதியில் பிரமனைப் படைத்த ஒப்பற்ற அழகையுடைய திருவரங்கனின் திருநாபிக்கமலத்திலும் அவனுடைய பீதாம்பரத்திலும் அல்லவோ தன்னுடைய சிந்தை குடிகொண்டது என்று ஆழ்வார் பாடுகிறார்.

அடியேன் உள்ளத்தின் உயிர், எழில் உந்தி மேல் அன்றோ ” என்று பாடியவர் மந்திபாய் என்று வானரங்களை சொன்னது , இங்கும் அங்கும் அலைபாய்கிற மனதை உடைய சபலர்களாகிய சம்சாரிகளை குறிப்பிடுவதற்காகவே என்று கொள்ளலாம். நம்முடைய அஞ்ஞானங்களை போக்கும் காலை நேர சூரிய உதயத்தைப்போலவும், தாபத்ரயத்தைப் போக்கும் மாலைநேர சூரிய அஸ்தமனதையும் குறித்து சந்தி என்ற ஒரே வார்த்தையால் ஆழ்வார் கூறி உள்ளார்.

வடவேங்கடமாலை நின்றான்’ என்றவுடன், உடலை வருத்தி ஏற வேண்டுமோ என்று திருமலையும் நம் போன்றவர்களுக்கு பரமபதம் போல் கடினமான ஒன்று என்று நினைத்து சிலர் குறைபட, உடனே, ‘அரங்கத்தரவினணையான்’ என்று சொல்லி எம்பெருமானின் எளிமையை ஆழ்வார் அருளி செய்தார்.

மீண்டும் இன்னொரு ஆழ்வார் பாடல்களில் சந்திக்கலாம், நன்றி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d