திருவேங்கடமுடையான் திருமழிசையாழ்வார்

தொடக்கம்

பதின்மர் பாடும் பெருமாள் என்று திருஅரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம்.

திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே என்று நம் பெரியவர்கள் கூறி உள்ளார்கள்.

இவற்றில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்து சில பாசுரங்களை முன்பு பார்த்து உள்ளோம்.  பொதுவாக முதலாழ்வார்களுக்கு வேங்கடமுடையானிடம் அதிக பற்று கொண்டு இருந்தார்கள் என்பதும் அவர்கள் அவனுக்கு நிறைய பாடல்கள் பாடினார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து திருவேங்கடமுடையானை முன்னிட்டு பொய்கையாழ்வார் இயற்றிய முதல் திருவந்தாதியில் இருந்து பத்து பாசுரங்களை முன்பு பார்த்தோம். அடுத்த ஆழ்வார், பூதத்தாழ்வார், அவரின் இரண்டாம் திருவந்தாதியில் இருந்து திருவேங்கடமுடையானை பற்றி பதினோரு பாசுரங்களில் சொல்வதை இங்கே சுருக்கமாக பார்த்தோம். அடுத்த ஆழ்வாரான பேய்ஆழ்வாரின் திருவேங்கடமுடையான் பாசுரங்களை (19) இங்கே காணலாம். இந்த பதிவில் திருமழிசை ஆழ்வார் திருவேங்கடமுடையானை பற்றி பாடல்களை (16) காணலாம். நன்றி.

திருமழிசையாழ்வார்

ஆழ்வார் இரண்டு பிரபந்தங்கள் பாடி உள்ளார், ஒன்று திருச்சந்தவிருத்தம், மற்றொன்று நான்முகன் திருவந்தாதி. ஆழ்வார் இரண்டு குடும்பங்களை சேர்ந்தவர், பகவான் கிருஷ்ணனை போல், ஓரிடத்தில் பிறந்து இன்னொரு இடத்தில வளர்ந்தவர். ஆழ்வார் சொல் கேட்டு, இரண்டு எம்பெருமான்கள் அவர் விருப்பப்படி நடந்துள்ளார்கள். ஒருவர் திருவெஃகாவில் எழுந்தருளியிருக்கும் யதோத்காரி என்னும் சொன்ன வண்ணம் செய்த பெருமாள், மற்றொருவர், திருக்குடந்தையில் எழுந்தருளி இருக்கும் ஆராவமுதன். மேலும் ஆழ்வார் பற்றி சில செய்திகளை இந்த பதிவுகளில் காணலாம். அவருக்கு மிகவும் உகந்த எம்பெருமானின் இரண்டு வடிவங்கள், ஒன்று சயன திருக்கோலம், மற்றது அந்தர்யாமி நிலை. திருமழிசையாழ்வாரின் பாடல்களில், இனிய இசைவடிவில் அழகிய சந்தங்கள், எண்களின் ஆளுமை ஆகிய இரண்டு சிறப்பு அம்சங்ககளும் மிகத்தெளிவாக புலப்படும்.

இங்கே ஆழ்வாரின் இரண்டு ப்ரபந்தங்களில் இருந்து திருவேங்கடமுடையானைப்பற்றி பாடிய பாசுரங்களை (16) சற்று சுருக்கமாகப் பார்க்கலாம். திருச்சந்த விருத்தம் என்ற பிரபந்தத்தில் உள்ள 120 பாசுரங்களில் இருந்து 4 பாசுரங்களும், நான்முகன் திருவந்தாதியில் உள்ள 96 பாசுரங்களில் இருந்து 12 பாடல்களையும் திருவேங்கடவன் மேல் பாடி உள்ளார். முதலில் திருச்சந்த விருத்தம்.

திருச்சந்தவிருத்தம்

  1. குன்றில் நின்று, வானிருந்து, நீள்கடல் கிடந்து, மண் ஒன்று சென்றது, ஒன்றை உண்டது, ஒன்று இடந்து, பன்றியாய் நன்று சென்ற நாள் அவற்றுள் நல்லுயிர் படைத்தவர்க்கு, அன்று தேவு அமைத்து அளித்த ஆதிதேவன் இல்லையே. (48)

திருமலையில் நின்றும், பரமபதத்தில் இருந்தும், நீண்ட திருப்பாற்கடலில் கண்வளர்ந்தருளி, ஒப்பற்ற பூமியை த்ரிவிக்ரமனாய் அளந்தும், ஒப்பற்ற அந்த பூமியை வயிற்றில் வைத்தும், ஒப்பற்ற அந்த பூமியை வராஹமாய் குத்தி எடுத்தும், நன்றாக போய்க்கொண்டு இருந்த, வராக அவதார காலத்தில், நன்மையுடைய மனுஷர்களை படைத்தும், அந்த மனுஷர்களுக்கு ரஜோ, தமஸ் குணங்கள், ஓங்கிய போது, தேவ ஜாதியை படைத்தும், அவற்றை எல்லாம் காப்பாற்ற காரணமாக இருந்த, ஆதிதேவன் அன்றோ நீர் என்று சொல்லும் பாடல். பரமபதத்தில் மிகவும் மேன்மையுடன் இருந்து, தாழ்ந்தவர்களுக்கு முகம் கொடுப்பதற்கு திருமலையில் நின்றவனே என்கிறார். நானே ஈஸ்வரன் என்று கர்வத்துடன் இருக்கும் பிரம்மன், சிவன் போன்றவர்களுக்கு ஆபத்து நேரும் போது அவர்களை காப்பாற்றுவதற்காக திருப்பாற் கடலில் சயனித்துள்ளவனே என்கிறார். த்ரிவிக்ரமனாக பூமியை அளந்ததும், பிரளய காலத்தில் பூமியை உண்டு காத்ததும், வராஹனாய் இடர்ந்ததும், மனிதர்களை படைத்தும், அவர்களுக்கு ரஜோ, தமஸ் குணங்கள் அதிகரித்தபோது சிவன், பிரம்மன் போன்ற தெய்வங்களை படைத்தும் யாரும் எதுவும் கேட்காதபோதும் அவரவர் நிலைக்கு தகுந்தவாறு நன்மை செய்கின்றவன் என்கிறார். அப்படிப்பட்ட நன்மைகளையே செய்யும் எம்பெருமானுக்கே அடிமைப்பட்ட ஆழ்வாருக்கு, அவர் அடிபணிய வேண்டிய திவ்யதேசத்தை / சரியான இடத்தை சொல்வது எம்பெருமானின் பொறுப்பு என்று ஆழ்வார் அவனிடமே விட்டுவிட்டார்.

2. செழுங் கொழும் பெரும் பனி பொழிந்திட உயர்ந்த வேய், விழுந்து உலர்ந்து எழுந்து விண் புடைக்கும் வேங்கடத்துள் நின்று, எழுந்திருந்து தேன் பொருந்து பூம்பொழில் தழைக் கொழும் செழும் தடங் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே. (60)

மிகப்பெரிய பனி மழை பெய்ய உயர்ந்துள்ள மூங்கில்கள், அந்த பனியின் கனத்தால் தரையில் சாய்ந்து, பிறகு சூரியன் வந்த பிறகு, உலர்ந்து எழுந்து, ஆகாயத்தை முட்டும் அளவுக்கு உயர்ந்த திருவேங்கடமலையில் நின்றுகொண்டு வண்டுகளானவை உயரக்கிளம்பி, மீண்டும் கீழ்வந்து வாழ, தழைத்து பருத்து, பூத்து நிற்கும் தோட்டங்களை உடையதாய் செழிப்பான குளங்களை உடைய திருக்குடந்தையில் கண்வளர்ந்துஅருளிய அன்பன் அன்றோ நீ என்று எம்பெருமானை குறித்து பாடுகிறார். செழும், கொழும், உயர்ந்த வேய் என்று பல சிறப்புகளால் பனி, மூங்கில், திருவேங்கடம் இவற்றை உயர்த்தி சொல்லி இருந்தாலும், இதன் உட்கருத்து, திருவேங்கடமுடையானின் விஷேச கடாக்க்ஷத்தால் தலை எடுப்பதும், அது இல்லாத போது தரையில் வீழ்வதும் இந்த திவ்யதேசத்தில் உள்ள எல்லா பொருள்களுக்கும் ஸ்வபாவம் என்பது ஆகும். அதேபோல் திருக்குடந்தை திவ்யதேசத்தில் வசிக்கும் பகுத்தறிவில்லாத ஜந்துக்களும் தாங்கள் விரும்பியதை கிடைக்கப்பெற்று வாழ்கின்றன என்றும், மூன்று வகையான தாபங்களால் துன்பம் அடைபவர்கள், அவற்றால் அடையும் களைப்பினை போக்கும் இடமாகவும் திருக்குடந்தை இருக்கிறது என்று சொல்கிறார்.

3. நிற்பதும் ஓர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும், நற் பெரும் திரைக் கடலுள் நானிலாத முன்னெலாம், அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன், நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே. 65

இந்த பாசுரத்தில் நேரடியாக திருவேங்கடம் என்ற சொல் இல்லை. அதனால் சில நூல்களில் இதை திருவேங்கடமுடையான் பாசுரம் என்று சேர்ப்பது இல்லை. ஆனால், இதன் விளக்க உரையில், பெரியவாச்சான்பிள்ளை, இதில் குறிப்பிட்ட வெற்பு என்பது திருவேங்கடமே என்று சொல்லி உள்ளதால், இந்த பாசுரமும் திருவேங்கடத்திற்கே என்று சொல்வது ஏற்புடையதே.

ஒப்பற்ற திருமலையில், நின்று அருள்கிறதும், ஆகாசமாகிற பரமபதத்தில் இருந்து அருள்கின்றதும், நன்றாக பெருத்த அலைகளை உடைய திருப்பாற்கடலில் சயனித்து அருள்கின்றதும், ஆழ்வார் தாம் முறைகளை அறியாத முற்காலத்தில் என்கிறார். ஞான விஷயங்களில் ஆச்சரியமானவனாகவும், திருவநந்தாழ்வானின் மேல் சயனித்து இருப்பவனும், இந்த உலகத்திற்கும் அதிலுள்ள எல்லாவற்றிக்கும் காரணமானவனும் , (ஜகத்காரணபூதன்) , ஸ்ரீமன் நாராயணனனும் ஆகிய எம்பெருமான், நிற்பது, இருப்பது, கிடப்பது என்று எல்லாம் தன் நெஞ்சினில் தான் என்று முடிக்கிறார்.

தான் எம்பெருமானுக்கு அநுகூலன் ஆனபின் மேல்சொன்ன இடங்களில் அவன் நெஞ்சு செல்லாமல் தன்னுடைய நெஞ்சுனுள் இருக்கிறான் என்று கொள்ளலாம். அற்புதன், அனந்த சயனன், ஆதிபூதன், மஹாலக்ஷ்மிக்கு நாதனாக இருப்பவன் என்ற பெருமைகளை உடையவன் இப்பொழுது தன் நெஞ்சினில் உள்ளான் என்றோ, ஆழ்வாரின் நெஞ்சினில் எம்பெருமான் வந்து சேர்ந்த பிறகு இந்த பெருமைகள் பிரகாசித்தன என்றோ கொள்ளலாம்.

4. கடைந்த பாற் கடல் கிடந்து கால நேமியைக் கடிந்து, உடைந்த வாலி தம் தனக்கு உதவ வந்து இராமனாய், மிடைந்த ஏழ் மரங்களும் மடங்க வெய்து வேங்கடம் அடைந்த மால பாதமே யடைந்து நாளு முய்ம்மினோ (81)

அமிர்தத்திற்காக கடையப்பட்ட திருப்பாற்கடலில் சயனகோலத்தில் பள்ளிகொண்டருளி காலநேமி என்ற அசுரனை வென்று, வாலியின் தம்பியான சுக்ரீவனுக்கு உதவ, சக்ரவர்த்தி திருமகனாக அவதரித்து நெருங்கி நிற்கும் ஏழு மரங்களையும் பாணத்தாலே துளைத்து திருவேங்கடத்தில் எழுந்தருளி இருக்கும் அன்பனுடைய திருவடிகளை வேறு எந்த பயன்களையும் எதிர்பார்க்காமல் அடைந்து, நிரந்தரமாக உஜ்ஜிவியுங்கள் என்று ஆழ்வார் சொல்கிறார். உடைந்த வாலி தம் தனக்கு என்பதை உடைந்த வாலி தம்பி தனக்கு என்று தம்பி என்பது கடைகுறைப்பின் மூலம் எடுத்து கொள்ளலாம் அல்லது வாலி தனக்கே என்றும் கொள்ளலாம், தேவர்களுக்கு உதவியதை முதல் அடியிலும், வாலி / சுக்ரீவனுக்கு உதவியதை இரண்டாவது அடியும் சொல்லி உள்ளார். ஆனால் அந்த இரண்டுமே இப்பொழுதுள்ள நமக்கு பயன் கிடையாது என்பதால், திருமலையில் எல்லோருக்கும் முகம் கொடுத்து தன் எளிமையுடன் காட்சி கொடுத்துக்கொண்டு இருக்கும் எம்பெருமானை அடையுங்கள் என்கிறார். பாதமே அடைந்து என்று ஏகாரத்துடன் சொல்லி இருப்பது, வேறு பயன் கருதி வருபவர்களுக்கும் அருளினாலும், அவனையே பயனாக கருதி அவனை அணுகினால், அதுவே உஜ்ஜிவிக்கும் வழி என்பது புரியும்.

நான்முகன் திருவந்தாதி

5. குறிப்பு எனக்குக் கோட்டியூர் மேயானை ஏத்த, குறிப்பு எனக்கு நன்மை பயக்க, – வெறுப்பனோ, வேங்கடத்து மேயானை மெய் வினை நோய் எய்தாமல், தான் கடத்தும் தன்மையான் தாள். (34)

திருக்கோட்டியூரில் பொருந்தி வாழும் எம்பெருமானை துதிப்பதே தன்னுடைய கருத்தாக ஆழ்வார் சொல்கிறார். தனக்கு நன்மை பயக்க வேண்டும் என்பதுவும் தன்னுடைய கருத்தாக அடுத்த வரியில் சொல்கிறார். அப்படி இருக்க திருவேங்கடத்தானை ஒதுக்கி தள்ளுவேனோ என்று சொல்கிறார். சரீரம் காரணமாக வரும் கர்மாக்களும் நோய்களும் அணுகாமல் தானே காப்பற்றுவனாக இருந்து அகற்றிவிடும் தன்மை உடைய எம்பெருமானின் திருவடிகளை வெறுத்து மறப்பேனோ என்று ஆழ்வார் இந்த பாசுரத்தை முடிக்கிறார். தான் கிடைக்க பெறாததனால் பரமபதத்தில் பொருந்தாமல், திருக்கோட்டியூரிலும் திருவேங்கடத்திலும் பொருந்தி இருக்கிறார் என்கிறார் ஆழ்வார்.

6. அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண, இழைப்பன் திருக்கூடல் கூட, – மழைப் பேரருவி மணி வரன்றி வந்து இழிய, யானை வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு. (39)

திருவேங்கடத்தானை கண்ணால் காண வாய்விட்டு கூவி அழைத்ததாக ஆழ்வார் முதலடியில் கூறுகிறார். இது தனம் தான்யம் ஐஸ்வரியம் மோக்ஷம் என்ற எதற்காவும் அல்ல, எம்பெருமானை சேவிக்க வேண்டும் அதற்காக மட்டுமே என்கிறார் ஆழ்வார். திருக்கூடல் அழைப்பு என்பது தன்னுடைய காரியம் கைகூடுமா என்று தெரிந்துகொள்ள ஒரு விதமான சகுனம் பார்ப்பது என்று நாச்சியார்மொழி நாலாம் திருமொழியில் சொல்லி இருப்பது இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

மழைக்காலத்தில் பெரிய அருவிகளானவை அங்கும் இங்கும் கிடக்கின்ற இரத்தினங்களை திரட்டிக்கொண்டு வர விழ, அந்த இரத்தினங்களின் ஒளியினை தீ ஜுவாலைகளாக கருதி, மயங்கி நிற்கவும், அந்த ஜீவாலைகளை மின்னல் என்று பயந்து பாம்புகள் புற்றுக்குள்ளே சென்று மறையும் படியான திருமலையை சென்று கூடிடவேண்டும் என்று கூடலிழைகின்றேன் என்று ஆழ்வார் முடிக்கிறார். இதையே பெரிய திருமொழியில் திருமங்கையாழ்வார் 1.3.10ல் குறிப்பிட்டது போல், அருவியால் அடித்து வரும் இரத்தினங்களின் ஒளியை தீஜ்வாலைகள் என்று யானை பயந்து, மலைப்பாம்பின் திறந்த வாயினை குகையாக நினைத்து அதனுள் புகும் திருமலை என்றும் கொள்ளலாம். திருமங்கை ஆழ்வார் பாசுரம், ஜோஷிர்மட் என்னும் திருப்பிருதி திவ்யதேசத்திற்கு ஆகும்.

7. வெற்பென்று வேங்கடம் பாடினேன், வீடாக்கி நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன், – கற்கின்ற நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார், கால்வலையில் பட்டிருந்தேன் காண். (40)

பல மலைகளை சொல்லும் போது திருமலை என்றும் சொன்னேன், இந்த ஒரு சொல்லாலே மோக்ஷம் நிச்சயம் என்று ஆயிற்று, இப்படி சொன்ன ஒரு சின்ன சொல்லுக்குக்காக மிகப் பெரிய பேறு கிடைத்த பாக்கியத்தை எண்ணி ஆராய்கின்றேன், ஓதப்படுகின்ற வேதங்களாகிற சாஸ்திரங்களில் வலைகளில் அகப்பட்டு லட்சுமிநாதன் இருப்பது போல், நிலைபெயராமல் நிற்கின்ற லட்சுமி நாதனான எம்பெருமானின் திருவடிகளாகிய வலையில் அகப்பட்டு நிலையாக இருந்தேன் என்கிறார் ஆழ்வார். செய்த காரியமோ மிகச்சிறியது, ஆனால் கிடைத்த பலனோ மிகப்பெரியது. ஆராய்ந்த போது ஆழ்வார்க்கு, பிராட்டியின், எம்பெருமானின் கிருபையே காரணம் என்று தெரிந்தது, அவர்கள் நான் முந்தி, நான் முந்தி என்று போட்டி போட்டுக்கொண்டு காப்பாற்ற காத்து நிற்கிறார்கள்; நெஞ்சே நீயும் அவர்களை அனுபவி, நான் அவர்களிடத்தில் ஈடுபட்டு நிற்கிறேன் என்றார். மூன்றாமடியில் சாஸ்த்ரங்களை எம்பெருமானுக்கு வலையாகவும், ஈற்றடியில் அவ்வெம்பெருமான் திருவடிகளைத் தமக்கு வலையாகவும் அருளிச்செய்தார், எம்பெருமானை சாஸ்த்ரங்களில் நின்றும் எப்படி பிரிக்கமுடியாதோ அப்படியே தன்னை அப்பெருமான் திருவடிகளில் நின்றும் பிரிக்க முடியாது என்று சாமர்த்தியமாக கூறுகிறார்.

8. காணல் உறுகின்றேன் கல் அருவி முத்து உதிர, ஓண விழவில் ஒலி அதிர – பேணி வரு வேங்கடவா என்னுள்ளம் புகுந்தாய், திருவேங்கடம் அதனைச் சென்று. 41

ஒலிக்கின்ற அருவிகள் மூலமாகவும், முத்துக்கள் உதிரப்பெற்றதாய் திருவோண திருநாளில், மங்களாசாசங்களால் அதிரப்பெற்றதாய் பக்தர்கள் விரும்பி வந்து சேர பெற்றதாய், உள்ள திருவேங்கடத்தை இருப்பிடமாக பெற்றவனே, நீ அங்கிருந்து கிளம்பி என் நெஞ்சில் புகுந்து விட்டாய், இருந்தாலும், தான் அந்த திருமலையை சென்று சேவிக்க விரும்புகிறேன் என்று ஆழ்வார் கூறுகிறார். திருமலையில் இருந்து எம்பெருமான், ஆழ்வார் திருவுள்ளத்திற்கு எழுந்துஅருளியபோதும், திருமலை எம்பெருமான் முன்பு இருந்த இடம் என்பதால் அதன் சிறப்புகளை கூறுகிறார். அருவிகளில் முத்துக்களும் ரத்தினங்களும் சிதறி கிடக்கின்றன. மங்களாசாசன ஒலி, அதிக பக்தர் கூட்டத்தைச் சொல்கிறது. தன்னுடைய நெஞ்சத்தை விட திருமலை சிறப்பானது, ஏனெனில், நெஞ்சம் பாவங்களின் உற்பத்தி ஸ்தானம், திருவேங்கடம், பாவங்களை எரிப்பது, இரத்தம் அருவி போல் பெருகி வரும் அழுக்கு படிந்த கல்நெஞ்சம்; திருமலையோ கல்லும் உருகி உதிர்ந்து கண்ணீர் முத்துக்களை பொழியும் இடம். பல்லாண்டு பாடுவோர் அணுகமுடியாது தன்னுடைய நெஞ்சம் என்றும், பல்லாண்டு பாடுவோர் ஒலி பெருகும் இடம் திருமலை என்று ஆழ்வார் சொல்கிறார். வாத்சல்ய குணம் ஒன்று மட்டும் நிறைந்த இடம் நெஞ்சம், ஆனால், பரத்வ, சௌலப்ய, சௌசீல்ய என்று சகல கல்யாண குணங்களையும் காட்டும் திருமலை. எம்பெருமானுக்கு லாபம் என்பதால் அவருக்கு பிரியமான இடம் ஆழ்வாரின் திருவுள்ளம், ஆழ்வார் தன்னை அயோக்கியன் என்று சொல்லிக்கொள்வதால், திருமலையில் சேவிக்க ஆசைப்படுகிறார்.

9. சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை, நின்று வினைகெடுக்கும் நீர்மையால், என்றும் கடிக்கமல நான்முகனும் கண் மூன்றத் தானும், அடிக்கமலம் இட்டேத்து மங்கு. 42

மிகவும் உயரமான சிகரத்தை உடைய திருமலையை சென்று வணங்குங்கள் என்று நம் போன்ற அன்பர்களுக்கு ஆழ்வார் உபதேசிக்கின்றார். அந்த திருமலையானது, தன்னுடைய சுபாவத்தினால், நம் பாவங்களை போக்குவதில் உறுதியாக இருக்கும். அங்கு, பரிமளம் மிக்க தாமரையில் பிறந்த பிரமனும், முக்கண்ணனான பரமசிவனும் எக்காலத்திலும் எம்பெருமானது திருவடிகளில், தாமரை புஷ்பங்களை சமர்ப்பித்து துதித்துக்கொண்டு இருப்பார்கள் என்று ஆழ்வார் சொல்கிறார். திருவேங்கடம் என்ற பெயரே பாவங்களை எரிக்கும் இடம் எனபதை மனதில் கொள்ளலாம். மலையேறி எம்பெருமானை சேவிக்க வேண்டும் என்பது இல்லை, திருமலையை வணங்கினாலே அதுவே போதும் என்கிறார். பாவங்களை போக்கும் என்றது அநிஷ்ட நிவர்த்தியை சொல்லியது. சிவனும் பிரமனும் துதித்துக்கொண்டு இருப்பது பதவிகளை பெறுவதற்கு என்று சொல்லி இஷ்டப்ராப்தியையும் கொடுக்க வல்லது என்று சொல்லி முடிக்கிறார்.

10. மங்குல் தோய் சென்னி வடவேங்கடத்தானை கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான், – திங்கள் சடையேற வைத்தானும் தாமரை மேலானும் குடையேறத் தாம் குவித்துக் கொண்டு. 43

மேகக்கூட்டங்களை தொடும் அளவுக்கு உயர்ந்து இருக்கும் சிகரங்களை உடைய திருவேங்கடமலையில் எழுந்தருளி இருக்கும் பெருமானுக்கு திருவந்தி காப்பு இடுவதற்காக / திருவாராதனம் செய்வதற்கு சந்திரனை சடையில் ஏற வைத்துக்கொண்டுள்ள பரமசிவனும், தாமரைப்பூவில் பிறந்த பிரமனும் திருமுத்து கூடை முதலான உபகரணங்களை சேகரித்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் காலை மாலை நேரங்களில் திருமலைக்கு வருவார்கள் என்று ஆழ்வார் கூறுகிறார்.

11. கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய், தண்ட அரக்கன் தலைதளால்- பண்டெண்ணி, போம் குமரன் நிற்கும் பொழில் வேங்கடமலைக்கே, போம் குமரருள்ளீர் புரிந்து. 44

கிழத்தன்மை இல்லாதவர்களே, முன்பு ஒருகால், பிரமன் மடியில் எடுத்து வைக்கும் சிறு குழந்தையாய் இருந்து கொண்டு, தண்டிக்க தகுந்தவனான இராவணனுடைய பத்து தலைகளையும் திருவடியால் கீறி எண்ணிக் காட்டி, வந்து இருப்பவன் உண்மையை சொல்லாமல் வரம் வாங்க வந்து இருப்பதை தெரிவித்த எம்பெருமான் நிற்கும் சோலைகள் சூழுந்த திருமலைக்கு ஆசையுடன் செல்லுங்கள் என்று ஆழ்வார் சொல்கிறார். அறிவுடையாரும், பின்னால் நடைபெற உள்ள அனர்த்தங்களை அறிந்துகொள்ளாமல் கலங்கி அனர்த்தங்களை விளைவிக்க கூடிய சூழலிலும் எம்பெருமான் காப்பாறும் குணத்தை உள்ள எம்பெருமானை திருமலையில் சேவியுங்கள் என்கிறார்.

இந்த எம்பெருமான் குழந்தையாய் இருந்து பிரமனை காப்பாற்ற முயற்சி செய்யும் வரலாறு முதல் திருவந்தாதி(45), மூன்றாம் திருவந்தாதி (77) சொல்லப்பட்டு உள்ளது. இந்த வரலாறு இதிகாச புராணங்களில் இருப்பதாக தெரியவில்லை. ஆழ்வார்கள் மயர்வற மதிநலத்தாலே கையாண்டு இருப்பார்கள் என்று நம் பூர்வாச்சார்யர்கள் சொல்வர்.

திருமலை ஏறி செல்வது கடினமாக இருப்பதால் இளமையிலேயே செல்லுங்கள் என்று ஆழ்வார் சொல்கிறார்.

12. புரிந்து மலரிட்டுப் புண்டரிகப் பாதம், பரிந்து படுகாடு நிற்ப – தெரிந்து எங்கும் தான் ஓங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு. 45

திருவடித் தாமரைகளில் அன்பு பூண்டு, புஷ்பங்களை பணிவுடன் தூவி மங்களாசாசனம் செய்து வெட்டி வீழ்த்தின மரங்கள் போல் வீழ்ந்து, வணங்கி நிற்கும்படியாக எல்லா இடங்களிலும் பரந்து விளங்கி குணங்களால் பெருமை பெற்று எழுந்து அருளி இருக்கும் எம்பெருமானுடைய குளிர்ந்த அருவிகள் உடையதான திருவேங்கடமே, நித்யஸூரிகளுக்கும் இவ்வுலகத்தவர்க்கும் நிதியாக இருக்கும்.

சென்று வணங்குமினோ சேண்உயர் வேங்கடத்தை என்றும், பொழில் வேங்கடமலைக்கு போம் என்று பக்தர்களுக்கு உரிய இடமாக சொன்ன திருமலையை, நித்யஸூரிகளுக்கும் வைப்புநிதி போல் பொருத்தமான இடம் என்று இந்த பாடலில் சொல்கிறார்.

13. வைப்பன் மணி விளக்கா மாமதியை, மாலுக்கு என்று எப்பொழுதும் கைநீட்டும் யானையை, – எப்பாடும் வேடுவளைக் கக்குறவர் வில்லெடுக்கும் வேங்கடமே, நாடு வளைத்தாடுமேல் நன்று. 46

சிறந்த சந்திரனை திருவேங்கடமுடையானுக்கு மங்களதீபமாக அவருக்கு முன்னால் வைக்க கடவேன் என்று எண்ணி, அந்த சந்திரனைப் பிடிப்பதற்காக எப்பொழுதும் உயர தூக்கின துதிக்கை தூக்கியபடி இருக்க, அப்படி உள்ள ஓரு யானையை வெளிப்புறங்களில் உள்ள வேடர்கள் சூழ்ந்துகொள்ள திருமலையில் உள்ள குறவர்கள் அந்த வேடர்களை எதிர்க்க வில் எடுக்கும் இடமான திருவேங்கட மலையை நாட்டில் உள்ள அனைவரும் ப்ரதிக்ஷணம் செய்து மகிழ்ச்சியுடன் நடனமாடி மகிழ்ந்தால் நல்லது என்று ஆழ்வார் சொல்கிறார். விலங்குகளும் அவனுக்கு அடிமை செய்ய ஆசைப் படும் திருமலையை நாட்டில் உள்ளவர் அடைந்து பிரதிஷணம் செய்து கொண்டாடினால் நல்லது என்று சொல்லும் பாடல். ‘ எப்பாடும் வேடுவர்கள் என்று விசேஷித்து சொன்னது, ரஜஸ் தமஸ் குணங்களால் பீடிக்கப்பட்டு, பகவத் சன்னதி இல்லாத தேசத்தில் உள்ள வேடுவர்கள் என்றாயிற்று. ஒரு அடைமொழியும் இல்லாமல் குறவர்களை குறிப்பிட்டது வேடுவர் போல் குரூர தொழிலை செய்பவர்கள் ஆனாலும், திருமலையில் உள்ளவர்கள் ஆனதால், சத்வ குணங்களுடன், தங்களுடைய குரூரத்தை பாகவத விரோதிகளிடம் காட்டுகிறார்கள் என்பதாயிற்று.

14. நன்மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும், பொன்னும் மணியும் முத்தமும் பூமரமும், பன்மணி நீரோடு பொருதுருளும் கானமும் வானரமும் வேடு முடை வேங்கடம். 47

யாளிகளும், வலிமை தங்கிய சிங்கங்களும் பொன்களும் மாணிக்கங்களும் முத்துக்களும் பூத்த மரங்களும் பலவகையான ரத்தினங்கள் அருவிகளோடு உருண்டு விழும் காடுகளும் குரங்குகளும் வேட ஜாதிகளையும் உடைய திருமலையானது நல்ல நீல ரத்தினம் போன்ற வடிவுடையவனான சர்வேஸ்வரன் வாசஸ்தலம் ஆகும். சென்ற பாசுரத்தில் யானை ஒன்றின் பெருமையை பேசினார், இங்கு இன்னும் அறிவு குறைந்த பற்பல பொருள்கள் திருமலையில் நித்யஸூரிகள் போல பகவானுக்கு செய்யும் கைங்கர்ய ருசியை பற்றி ஆழ்வார் பேசுகிறார். பராசர பட்டர் என்னும் ஆசார்யன் நித்யஸூரிகளே, எம்பெருமானின் சௌலப்யத்தை அனுபவிக்க பொன், மணி முதலியவைகளாக வடிவெடுத்து உள்ளனர் என்று ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவத்தில் சொல்லி உள்ளத்தையும் இங்கே நினைவில் கொள்ளலாம்.

15. வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால், வேங்கடமே மெய்வினை நோய் தீர்ப்பதுவும், வேங்கடமே, தானவரை வீழத் தன் னாழிப் படைதொட்டு வானவரைக் காப்பான் மலை. 48

நித்யசூரிகள் உண்மையான பக்தியுடன், தொழுவதும், திருமலையே; ஸம்ஸாரிகளின் அழியாத பாவங்களையும், உடம்பைப் பற்றின நோய்களையும் போக்கடிக்க வல்லதும் திருமலையே; அசுரர்கள் மாளும் படி தன் சக்ராயுதத்தை பிடித்து தேவர்களை காத்தருளும் எம்பெருமானுடைய திருமலை திருவேங்கடம் ஆகும். நித்யஸூரிகளோடு சேர்ந்து இருக்கும் திருமலையில் உள்ள எம்பெருமானே எல்லோருக்கும் வழி ஆகும் என்கிறார். ஜீவன் தான் செய்த புண்ணிய, பாவங்களை அனுபவித்தே தீர்க்கவேண்டும் என்பதும், நூறு கோடி கல்பங்கள் ஆனாலும் கர்மம் அனுபவிக்காமல் கழியாது என்பதற்கும் ஏற்ப பாவங்களை போக்குவது திருமலையே.

16. வீற்றிருந்து விண்ணாள வேண்டுவார், வேங்கடத்தான் பால்திருந்த வைத்தாரே பன்மலர்கள், மேல்திருந்த வாழ்வார் வருமதிபார்த்து அன்பினராய், மற்றவர்க்கே தாழா யிருப்பார் தமர். 90

பெருமை விளங்க இவ்வுலகில் இருந்து பரமபதத்தை ஆட்சி செய்ய விரும்பி இருப்பவர்கள் , திருவேங்கடமுடையான் பக்கலில் பலவகைப்பட்ட மலர்களை நன்றாக சமர்பித்தவர்களே ஆவர்; பரமபத்திலும் பகவத் கைங்கர்யம் செய்ய பெறுவர் என்று சொல்கிறார். எம்பெருமானுடைய திருவுள்ளத்தில் ஓடுகின்ற கருத்தை அறிந்து பக்தி உடையவர்களாய் அந்த எம்பெருமானுக்கே அடிமைப்பட்டு இருப்பவர்களாலே அபிமானிக்க பட்டவர்கள் முன்னடிகளில் சொல்லப்பட்டவர்களை காட்டிலும் சிறந்து வாழ்வார்கள். பாகவதர்களால் அங்கீகரிக்கபட்டவர்களே எல்லோரிலும் மேம்பட்டவர் என்று ஆழ்வார் கூறுகிறார். அப்படி பாகவதர்களால் ‘நம்முடையான்’ என்று அபிமானப்பட்டவர்கள், பகவத் ப்ராப்தியிலும் உயர்ந்ததான பாகவத கைங்கர்யத்தை பெற்று பேரானந்தத்துடன் வாழ்வார்கள் என்று சொல்கிறார்.

இத்துடன், திருமழிசையாழ்வார் திருவேங்கடத் தானைப்பற்றி சொன்ன பாடல்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பு நிறைவடைகிறது. மீண்டும் மற்றொரு ஆழ்வாரின் பாசுரங்களில் சந்திப்போம் நன்றி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d