070 திருசாளக்ராமம்-Mukthinath

ஸ்ரீ ஸ்ரீதேவி நாச்சியார் ஸமேத ஸ்ரீ மூர்த்தி திருவடிகளே போற்றி போற்றி !!

திவ்யதேசம் திருசாளக்ராமம் முக்திநாத் முக்தி நாராயண க்ஷேத்திரம்
மூலவர் ஸ்ரீ மூர்த்தி
உத்ஸவர்
தாயார் ஸ்ரீ தேவி நாச்சியார்
திருக்கோலம் நின்ற திருக்கோலம்
திசை வடக்கே திருமுகமண்டலம்
பாசுரங்கள்12
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 10
பெரியாழ்வார் 2
தொலைபேசி

வடநாட்டு திவ்யதேசங்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பை இங்கே காணலாம். நேபாளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முக்திநாத் க்ஷேத்திரம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். அதிக உயரம் மற்றும் வானிலை காரணமாக, இங்கு செல்வது மிகவும் கடினமாகும். கடும் குளிர் மற்றும் மேக மூட்டத்தால் முக்திநாத் பயணம் கடுமையானது.  எனவே இந்த திவ்ய தேசத்தை வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டும் என்று பலர் விரும்புகிறார்கள்.

Google Map

திருசாளக்ராமம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திவ்யதேசம் பற்றி

முக்திநாத் (Muktinath), நேபாள நாட்டின், முஸ்தாங் மாவட்டம் அமைந்த இமயமலையில், முக்திநாத் பள்ளத்தாக்கில், 3,710 மீட்டர் உயரத்தில் அமைந்த புனித தலமாகும். கடும் குளிர் மற்றும் மேக மூட்டத்தால் முக்திநாத் பயணம் கடுமையானது. எனவே முதலில் காட்மாண்டு அல்லது சீதாமரி சென்று அங்கு இருந்து, பொக்காராவை அடைந்து, அங்கிருந்து வான் வழியாக விமானம், ஹெலிகாப்டர் அல்லது தரை வழியாக ஜாம்சம் அடைந்து, பின்னர் ஜீப் மூலம் முக்திநாத் சென்று அதன் பிறகு சுமார் அரை மைல் தூரம் மலையில் ஏறி முக்திநாதரை  தரிசிக்கலாம். பொக்காராவில் இருந்து விமானத்தில் 20 நிமிடம் அல்லது தரைவழியாக செல்ல 9 முதல் 10 மணி நேரம் வரையில் ஆகும். சுமார் 160 கிலோமீட்டர் தூரம் மலை பிரதேசத்தில், கடினமான சாலைகளில் பயணிக்க வேண்டும். ஜாம்சம் என்ற இடத்தில இருந்து முக்திநாத் சுமார் 1 மணி நேர பயணம்.

காத்மாண்டு போகரா 201 கிலோமீட்டர் சாலை அல்லது வான்வழிசாலை பயணம் 6 மணி நேரம், வான்வழி 30 நிமிடம்
சீதாமரி ( பீகார் இந்தியா)போகரா 358 கிலோமீட்டர் சாலை சுமார் 8 மணி நேரம்
போகரா ஜோம்சம் 160 கிலோமீட்டர் சாலை அல்லது வான்வழி (வானிலையை பொறுத்து) வான்வழி 20 நிமிடம், சாலை 8 முதல் 10 மணி நேரம் வரை
ஜோம்சம் முக்திநாத் 25 கிலோமீட்டர் சாலை 1 மணி நேரம்
முக்திநாத் முக்திநாத் கோவில் 2 கிலோமீட்டர் சாலை நடை பயணம் 30 நிமிடம்

இந்த திருத்தலம், நேபாளத்தில் ஓடும் கண்டகி நதி பகுதியில் உள்ளது. அதாவது கண்டகி நதி முழுவதுமே சாளக்கிராமப் பகுதியாகும். கண்டகி ஆறு, 8000 மீட்டருக்கும் அதிக உயரத்தில் உள்ள அன்னபூர்ணா, தவுளகிரி மலை சிகரங்களிலில் இருந்து உற்பத்தி ஆகிறது. நேபாளத்தின் தலைநகரான காட்மண்டு நகரிலிருந்து சுமார் 375 கிலோமீட்டர் தூரத்தில் கண்டகி நதிக்கரையில் முக்திநாத் எனப்படும் இந்த திவ்யதேசம் அமைந்து உள்ளது. இங்கிருந்து 15 மைல் தூரத்தில் முக்தி நாராயண க்ஷேத்திரம் என்று ஒரு இடம் உள்ளது. இந்த முக்தி நாராயண க்ஷேத்திரத்தை சாளக்கிராமம் என்று சொல்வாரும் உண்டு. இமயத்தின் அடிவாரத்தில் ஹரிபர்வதம் என்ற மலை உள்ளது. இங்கு சக்ரதீர்த்தம் என்னும் பகுதியில் கண்டகி நதி உற்பத்தி ஆகின்றது. இந்தப் பகுதி தான் சாளக்கிராமம் என்று அழைக்க படுகிறது. நேபாளத்தின் தலைநகரான காட்மண்டுவில் இருந்து சுமார் 65 மைல் தூரத்தில் தாமோதர குண்டம் என்னும் ஓர் இடம் உள்ளது. அதுவும் சாளக்கிராமம் என்ற ஓர் கருத்துண்டு. இதுவும் கண்டகி நதிக் கரையில் தான் அமைந்துள்ளது.

இரண்டு சிறு திருக்குளங்கள் சந்நிதி முன்னால் உள்ளன. கருவறையில் சாளக்ராம சுயம்பு திருமேனியாக முக்திதரும் ஸ்ரீ முக்திநாராயணன் எழுந்தருளி தரிசனம் தருகிறார். சங்கு சக்கரம், கதை என்ற ஆயுதங்களுடன் எம்பெருமானும், ராமானுஜர், கருடன் மற்றும் ஸ்ரீதேவி பூதேவியருடன் தரிசனம் தருகிறார். பல ரிஷிகளும், முனிவர்களும், ஆராதித்த எம்பெருமானும், பிறவிகள் பற்பல எடுத்தாலும் தரிசனம் கிடைப்பதற்கு அறிய எம்பெருமானான நாராயணன், தம்மைத் தரிசிப்பவர்களுக்கு முக்தி அளிப்பதால், அவருக்கு ‘முக்திநாராயணன்’ என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கோயில் கருவறைக்குள் சென்று, ஸ்ரீசாளக்ராம நாராயணனை மிக அருகில் தரிசித்து, நாமே வஸ்திரம், பூ மாலை போன்றவற்றை அணிவித்து பூஜை செய்யலாம். கோயிலுக்கு வெளியே சந்நிதியைச் சுற்றி 108 திவ்யதேசங்களின் தீர்த்தத்துக்குச் சமமான 108 கோமுக தீர்த்தங்கள் (108 பசுமாட்டின் தலை கொண்ட சிலை) கொட்டிக்கொண்டே இருக்கின்றன. இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டியது, 108 திவ்யதேசங்களில், 106 திவ்யதேசங்கள் தான் இந்த பூவுலகில் உள்ளன, இருந்தாலும், திருப்பாற்கடல் மற்றும் பரமபத திவ்யதேச தீர்த்தங்களும் இங்கு கோமுக தீர்த்தத்தில் உள்ளன என்பது ஆகும். இந்த கோமுக தீர்த்தங்களிலும் நீராடலாம்.

108 வைணவ திவ்ய தேசங்களில், பரமபதம், திருப்பாற்கடல் நீங்கலாக, பாரதத்திற்கு வெளியில் இருப்பது இந்த ஒரு திவ்யதேசம் தான்.

ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்களில் ஒன்று. திருவரங்கம், நாங்குநேரி, ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிநாத், முக்திநாத் ஆகிய எட்டுத் திருத்தலங்களும்  ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்களாகும். (இவற்றில், புஷ்கரம், ஸ்ரீமுஷ்ணம் இரண்டும் 108 திவ்யதேசங்களில் கிடையாது).

சாளக்ராமங்கள்

இந்த ஹரி க்ஷேத்திரத்தில் விஷ்ணுவின் சகல அம்சங்களோடு பொருந்திய சாளக்கிராம மூர்த்திகள் புண்ணியகாலங்களில் தோன்றுவதாக கூறப்படுகிறது. இந்த திருத்தலத்தில் உள்ள மூர்த்தியும் சாளக்கிராம வடிவத்தினர்தான். சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும் ஒரு வகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கற்களாகும். இவைகளில் எம்பெருமான் மிகவும் உகந்து தானாகவே இங்கு வந்து வசிக்கிறான் என்று புராணங்கள் கூறுகின்றன. இவைகள் பல வடிவங்களிலும், பல வண்ணங்களிலும் கிடைக்கின்றன. தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ர கீடம் என்ற பூச்சியின் வடிவம் கொண்டு சாளக்கிராமத்தைக் குடைந்து பலவிதமான சுருள் ரேகையுடன் பலவித ரூபங்களில் தனது அவதாரங்களை, பல மூர்த்திகளை, பல வடிவங்களில் ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. விஷ்ணுவின் பற்பல நாமங்களிலும், அவதார மூர்த்திகளாகவும் 68 வகை சாளக்ராமங்கள் உள்ளன என்று சொல்வர்.

இந்த சாளக்ராமங்கள் நாம் சேவிப்பதற்கு உகந்தவை ஆதலால், விஷ்ணு கோவில்களிலும், வீடுகளிலும் இவை வணங்கப்படுகின்றன. இவைகளில் ஸ்ரீமந் நாராயணன் இருப்பதாக ஐதீஹம். இந்நிகழ்ச்சி (சாளக்கிராம உற்பத்தி) தொடர்ந்து தினமும் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் ஐதீஹம். சில சாளக்ராமங்கள் தங்க அல்லது வெள்ளி ரேகைகளுடன் கிடைக்கும்; அவை மிக உயர்ந்த பலன்களை அளிக்கவல்லது.

சாளக்ராமங்கள் பல நிறங்களில் கிடைக்கின்றன. அவைகளை,

  • வெண்மை நிற சாளக்கிராம வாசுதேவ க்ஷேத்திரம்
  • கருமை நிற சாளக்கிராமம் விஷ்ணு க்ஷேத்திரம்
  • பச்சை நிற சாளக்கிராமம் ஸ்ரீநாராயண க்ஷேத்திரம்
  • மஞ்சள் சற்று மஞ்சள்-சிகப்பு நிற சாளக்கிராமம் ஸ்ரீநரசிம்ம க்ஷேத்திரம்
  • மஞ்சள் நிற சாளக்கிராமம் வாமன க்ஷேத்திரம்
  • கருநீல நிறசாளக்கிராமம் ஸ்ரீகிருஷ்ண க்ஷேத்திரம்

இன்றும் சில திவ்யதேச பெருமான்கள் சாளக்ராமங்களால் உருவானவர் என்று சொல்லப்படுகிறது. திருவரங்கம், திருவனந்தபுரம் திவ்யதேச பெருமான்கள் பல்லாயிர கணக்கான சாளக்ராமங்களால் உருவானவை என்றும் முக்திநாத் என்ற இந்த திவ்யதேச எம்பெருமான் ஒரே சாளக்ராமத்தால் உருவானவன் என்றும் சொல்லப்படுகிறது.

விற்பனை செய்யும்  சாளக்கிராமம் வாங்குவதற்கு, சாளக்கிராமத்தின் தனித்தன்மையை அறிந்தவர்களிடம் அதன் வர்ணம், அதில் அமைந்துள்ள ரேகைகள், ஆகியவற்றை ஆராய்ந்து அவர்களது ஆலோசனையின் பேரில் வாங்குதல் சிறப்பு. சாளக்ராமம் குளம்படி உள்ளதாகவும், கருமை நிறத்துடனும், குளிர்ச்சி உள்ளதாகவும் வாங்க வேண்டும். பூஜை செய்யப்பட்ட சாளக்கிராமங்களை சாஸ்திர ஞானம் பெற்றவர்களிடம் இருந்து வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதும் நியதி. பொதுவாக ஆண்கள் மட்டுமே சாளக்ராமத்தை தொட்டு பூஜை செய்ய வேண்டும் என்று நம் நூல்கள் உபதேசிக்கின்றன. அதே போல், இனிமேல் நம்மால் சரிவர பூஜை செய்ய இயலாது என்ற நிலை வரும் போது, அவைகளை பூஜை செய்ய முடிந்த மற்றவர்களுக்கோ, சரியாக பூஜை செய்து வரும் கோவில்களுக்கோ கொடுப்பது நலம் என்று மாத்வாச்சார்யாரும் இன்னும் சில ஆச்சார்யர்களும் செய்ததாக சரித்திரம் சொல்கிறது.

சாளக்கிராமங்கள் அறிவியல் நோக்கில் அம்மோனைட் (AMMONITES) என்ற வகையைச் சார்ந்த கற்படிவம் ஆகும்.

சாளக்ராம பூஜா பலன்கள்

இதே போல், இந்த சாளக்ராமங்கள் நிறத்திற்கு ஏற்ப பூஜைகளும், பலன்களும் வேறுபடும் என்றும் சொல்வார்கள்; நீலநிறம், செல்வத்தையும், சுகத்தையும் கொடுப்பதாகவும், பச்சை பலம், தைரியம் கொடுப்பதாகவும், வெண்மை, ஞானம், பக்தி, மோட்சம் கொடுப்பதாகவும், கருப்பு, புகழ், பெருமை கொடுப்பதாகவும் சொல்கிறார்கள்.

சாளக்கிராமத்தில் தெய்வீக சக்தி இருப்பதாகவும், சாளக்ராமங்கள், துண்டிக்கப் பட்டிருந்தாலும் அல்லது விரிந்து போனதாய் இருந்தாலும் உடைந்திருந்தாலும் எரிந்து இருந்தாலும், தோஷம் இல்லை என்றும், அவற்றில் சக்கர ரேகைகள் இருந்தால் அது மிகவும் சிறப்பம்சமாகும் என்றும் சொல்வார்கள்.

சாளக்ராமங்கள் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு / ஆராதித்து, புனிதமான பொக்கிஷமாக குடும்பங்களில் பாதுகாக்கப்படுகிறது. பெண்ணுக்கு திருமணம் செய்து கொடுக்கும்போது, இதுவும் ஒரு அரிய சீதனமாக தருவதும் உண்டு.

சாளக்ராமங்களை பூஜை செய்யும் போது புருஷ சூக்தம் கொண்டு பூஜிப்பார்கள்; வீட்டில் சாளக்ராமம் இருந்தாலே புனிதமானது. சாளக்ராமம் உள்ள வீடு வைகுந்தத்திற்கு சமம் என்று பத்மபுராணம் கூறுகிறது. சாளக்ராம தத்துவ முக்தாவளி, சாளக்ராம திருமஞ்சன தீர்த்தம், கங்கை நதி தீர்த்தத்தை விட புனிதமானது என்று கூறுகிறது.

சாளக்ராம துவாரங்களில் எல்லா பித்ருக்களும் வசிக்கிறார்கள் என்றும், சாளக்ராம பூஜையினால் அவர்கள் மனம் உகக்கிறார்கள் என்றும், அதனால் ஒருவருக்குள்ள பித்ருக்கள் சாபமும், தோஷமும் நீங்கும் என்றும் சொல்லப்படுகிறது. அதே போல், ஸ்ரார்த்த காலங்களில் அவை பிதுர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்க வல்லது.

தினமும் திருமஞ்சனம் (அபிஷேகம்) மற்றும் பூஜை செய்து, சாளக்ராமத்திற்கு நிவேதனம் கொடுத்து வந்தால், அதுவே மோக்ஷம் என்ற வைகுண்ட வாசம் கொடுக்க வல்லது. மரண காலத்தில் சுய நினைவோடு சாளக்ராமத்தை மனத்தால் நினைத்தால், எல்லா பாவங்களில் இருந்தும் விடுபடுகிறார் என்றும் சொல்வர். ஸ்ரீதேவி பாகவதமும் ஸ்ரீ நரசிம்ம புராணமும் சாளக்ராம வழிபாட்டினை புகழ்கின்றன; சாளக்ராமங்களை, துவாரகா சிலாவுடன் சேர்த்து வணங்குவது சிறப்பு என்கிறது. துவாரகா சிலா என்பது, துவாரகையில், கோமதிநதி கடலில் கலக்கும் இடத்தில கிடைக்கும் சாளக்ராமத்திற்கு நிகரான புண்ணிய கற்களாகும்.

எந்த இல்லத்தில் சாளக்ராமங்கள் உள்ளதோ, அங்கு, பேய், பூதங்கள் நடமாடாது, அது ஒரு தபோவனம். தினமும் சாளக்ராமத்தை பூஜிப்பவர்களுக்கு மறுஜென்மம் கிடையாது. சாளக்ராம தீர்த்தம் பிரம்மஹத்தி தோஷம் உட்பட, எல்லா பாவங்களில் இருந்தும் போக்க வல்லது. சாளக்ராம பூஜை செய்பவனின் இல்லத்தை சுற்றி அனைத்து புண்ணிய தீர்த்தங்களும் நிற்கும். அந்த இல்லம் காசியை விட உயர்ந்தது, அந்த இல்லத்தில் செய்யும் தானம் காசியில் செய்யும் தானத்தை விட 100 மடங்கு உயர்ந்தது. தினசரி சாளக்ராம ஆராதனையானது, பற்பல உயர்ந்த யாகங்கள் செய்த பலனையும், கோ தானங்களையும் செய்த புண்ணியம் கிடைக்கும். எம பயம் வராது, இருந்தால் விலகிவிடும்.

சாளக்ராம பூஜை செய்பவன், விஷ்ணுவாகவே ஆகிவிடுகிறான், விஷ்ணு லோகத்தில் நிரந்தரமாக வாழ்வான். 12 சாளக்ராமங்கள் ஒரு இல்லத்தில் இருந்தால், அது ஒரு திவ்ய தேசமாக கருதப்படும். 12 சாளக்ராமங்களை ஆராதனை செய்பவனுக்கு கிடைக்கும் பலன் ஆனது, 12 கோடி சிவலிங்கங்களை 12 கல்ப காலம் பூஜை செய்த பலனுக்கு நிகர் ஆகும். சாளக்ராமத்திற்கு நிகரானது, இவ்வுலகத்திலும் பாதாளத்திலும் ஸ்வர்கத்திலும் எதுவும் இல்லை. விக்கிரக பூஜையை விட, சாளக்ராம பூஜையே உயர்ந்தது என்றும், பரிபூரணமான பலன்களை கொடுக்க வல்லது என்றும் சொல்லப்படுகிறது.

முன்காலங்களில், சாட்சி சொல்லும் போது, ‘ சாளக்ராமம் சாட்சியாக‘ என்று சாளக்கிராமத்தை கையில் வைத்து கொண்டு சாட்சி சொல்வது வழக்கம். சாளக்ராம சந்நிதியில் ஒரு புழு இறந்தால் கூட அது மோக்ஷத்தை அடையும்.

ஸ்தல வரலாறு

வடநாட்டில் உள்ள முக்கிய நதிகள் எல்லாம் விஷ்ணு சம்மந்தம் பெற்றிருப்பதைக் கண்ட கண்டகி நதியானவள் மஹாவிஷ்ணுவைக் குறித்து கடுந்தவம் செய்து மஹாவிஷ்ணு தன்னிலும் அவதாரம் செய்ய வேண்டுமென தவமிருக்க அதை ஏற்று எம்பெருமான் இந்த நதியில் நித்ய அவதாரம் செய்கிறார் என்று தினம் தினம் சாளக்கிராம ரூபத்தில் அவதரித்து கண்டக நதிக்கு சிறப்பளிக்கிறார்.

ப்ரம்மனது வியர்வையில் தோன்றியவள், கண்டகி. அவள் கடுந்தவம் புரிந்ததை கண்ட தேவர்கள் அவளுக்கு வரம் அளிக்க வந்தபோது, அவள் அவர்களை அவளுக்கு பிள்ளைகளாகும்படி வேண்டினாள்; அது முடியாது என்றதனால், அவள் அவர்களை புழுக்களாக மாறும்படி சாபம் இட்டாள். கோபம் அடைந்த தேவர்கள், அவளை ஒரு ஜடமாக சபித்தனர். இதனால், பிரம்மன், ருத்ரன், இந்திரன் ஆகியோர் விஷ்ணுவை அணுகினார்கள். விஷ்ணு இரண்டு சாபங்களையும் நீக்க முடியாது என்றும், தான் சாளக்ராம க்ஷேத்திரத்தில் சக்ரதீர்த்தத்தில் வாசம் செய்வதாகவும், அங்கு தேவர்கள் வஜ்ரகீடம் என்ற புழுக்களாக தோன்றி, அங்குள்ள கூழாங்கற்களை ஆகாரமாகக் கொண்டு வாழ வேண்டியது என்றும் கண்டகி நதி வடிவமாக அந்த கற்களில் பாய்ந்து வருவாள் என்றும் சொன்னார். இதனால் கண்டகியின் ஆசையும் நிறைவேறும், தேவர்களும் அப்படியே, தேவா அம்சமும் விஷ்ணு அம்சமும் பொருந்திய சாளக்ராமங்கள் ஆவார்கள் என்றும், எம்பெருமான் திருவுள்ளபடி அவைகளை வழிபட்டவர்களும் எம்பெருமானுடன் நித்யவாஸம் செய்யும் வைகுண்ட பிராப்தி அடைவார்கள் என்றும் கூறி மறைந்தார்.

கஜேந்திர மோக்ஷம் நடந்த இடமாகவும் இதனை சொல்வர். பிரம்மன் முதலானவர்கள் எம்பெருமானை அணுகியபோது, அப்போது அவர், முதலை ஒன்றும், யானை ஒன்றும் இங்கு மோக்ஷம் அடைய போகின்றன என்றும், அவை இறந்தபின், அந்த உடல்களில் தேவர்கள் வஜ்ரகீடம் என்ற பூச்சிகளாக வாழவேண்டும் என்றும் அறிவித்தார். கஜேந்திர மோக்ஷ சரித்திரத்தின்போது, எம்பெருமான் முதலையின் வாயினை சக்கரம் கொண்டு அறுத்து மோக்ஷம் அடைவித்ததினால், அந்த நதியில் உள்ள எல்லா கற்களும் விஷணுவின் சக்ர சின்னம் கிடைக்கப்பெற்று துவாரகாசிலா என்ற பெயரும் பெற்றது. இந்த பிரதேசம் ஹரி க்ஷேத்திரம் என்றும் இங்குள்ள சாள மரங்கள் தான் பல ஆண்டுகளுக்கு பிறகு கற்களாக மாறி, சாளக்ராமங்கள் ஆயின என்று சொல்வர்.

கண்டகி நதியில் ஸ்நானம் செய்து முக்திநாதனை பக்தியுடன் வழிபடுபவர்கள், இந்த பூமியில் சுகமாக வாழ்ந்து பின்னர் வைகுந்தத்தில் தன்னுடன் இருப்பதாக விஷ்ணு கூறுகிறார்.

ஆழ்வார்கள்

பெரியாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் மொத்தம் 12 பாசுரங்களில்
மங்களாசாசனம் செய்துள்ளனர். பெரியாழ்வார் சாளக்கிராமமுடைய நம்பியை
கண்ணனாக தலைக் கட்டுகிறார். திருமங்கையாழ்வார் ராமனாக காண்கிறார். ஸ்ரீ இராமானுஜர் இங்கு எழுந்தருளியுள்ளார்.

பாசுரம் விளக்கம்
பாலைக் கறந்து அடுப்பேற வைத்துப் பல்வளையாள் என் மகள் இருப்ப மேலை அகத்தே நெருப்பு வேண்டிச் சென்று இறைப் பொழுது அங்கே பேசி நின்றேன், சாளக்கிராம உடைய நம்பி சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான், ஆலைக் கரும்பின் மொழி அனைய அசோதை நங்காய் உன் மகனைக் கூவாய். (பெரியாழ்வார் திருமொழி, 2.9.5)கண்ணபிரான் தன் தாய் வியக்கும்படி சில செய்கைகளைச் செய்து அவற்றால் அவளை மகிழ்வித்து, மீண்டும் முன்பு போல் பிறர் வீடுகளில் புகுந்து, பால் வெண்ணை முதலியவற்றை எடுத்து குறும்புகள் செய்ய, மேற்கு பக்கத்தில் இருந்த வீட்டில் இருந்த ஒரு ஆயர் குலத்து பெண், யசோதை அருகிலே வந்து, தன் வீட்டில் கண்ணன் செய்த குறும்புகளைச் சொல்லி முறை இடுகின்றாள்; இங்கு ஆழ்வார் கண்ணனை குறிப்பிடும் போது, சாளக்ராமத்தில் நித்யவாஸம் செய்பவன் என்கிறார். இங்கு ஆழ்வார் சொல்லும் கண்ணனின் குறும்பு, ஆயர் குலத்துப் பெண் வீட்டில், அவள் பாத்திரத்தில் பாலை எடுத்து, அடுப்பின் மேல் வைத்து, பக்கத்து வீட்டிற்கு சென்று நெருப்பு வாங்கி வருவதற்குள், கண்ணன் பாலை குடித்து, பாத்திரத்தை உருட்டி விட்டு சென்று விட்டான் என்பதாம்.
வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி இடமுடை வதரி இடவகை உடைய எம் புருடோத்தமன் இருக்கை தட வரை அதிரத் தரணி விண்டு இடியத் தலைப் பற்றிக் கரை மரம் சாடி கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்டமென் னும் கடி நகரே. (பெரியாழ்வார் திருமொழி 4.7.9)தென் திசை மதுரையில் இருந்து வேறுபட்டு இருக்கும் வடக்கு திசையில் உள்ள மதுரா, நித்ய வாசஸ்தலமான ஸ்ரீவைகுந்தம், புண்ணிய க்ஷேத்திரங்களில் பிரதானமாக கருதப்படும் முக்திநாத், நர நாராயணர்களாய் தோன்றி திருமந்திரத்தை உபதேசித்து உகப்புடன் எழுந்து அருளி இருக்கும் பத்ரிநாத், பதினாறாயிரவர் தேவிமாராய் சேவை செய்ய மணவாளராய் வீற்று இருந்த துவாரகா, அயோத்தி நகருக்கு அதிபதி எனும் பெயர் பெற்ற அயோத்தியா, இவற்றையெல்லாம் தன்னுடைய வாசஸ்தலமாக கொண்ட எம்பெருமான் புருஷோத்தமன் இருக்கும் இடம் கண்டமெனும்கடினகர் என்கிறார்.
திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி 1.5ஸ்ரீஸாளக்ராமம் என்னும் திவ்யதேசத்திலே தான் எழுந்தருளியதை, எம்பெருமான் ஆழ்வாரது ஞானக் கண்ணுக்குத் தோற்றுவிக்க, ஆழ்வாரும், இத்திருமொழியில், தமது திருவுள்ளத்தை அழைத்து ‘நெஞ்சே! சாளக்கிராமத்தைச் சென்று சேருவோம், வா’ என்கிறார்.
கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்துபோய், சிலையும் கணையும் துணையாகச்  சென்றான் வென்றிச் செறுக்களத்து, மலை கொண்டலை நீரணைகட்டி மதிள் நீரிலங்கை வாளரக்கர் தலைவன், தலை பத்தறுத்து உகந்தான் சாளக்கிராமமடைநெஞ்சே. (1)தன்னுடைய அடியவர்களின் விரோதிகளை அழிப்பதற்காக, எம்பெருமான், பலபல மிருகங்கள் நிறைந்து கிடந்த கொடிய காட்டைக் கடந்து, மலைகளைக்கொண்டு கடலிலே பாலம் கட்டி, கடலைக் கடந்து, இலங்கை வந்து, யுத்த பூமியில், வில்லையும் அம்புகளையும் துணையாகக் கொண்டு இராவணனது தலைகள் பத்தையும் அறுத்து உகந்த இராமபிரானுடைய ஸ்ரீஸாளக்ராமம் என்னும் திவ்யதேசத்தை அடைந்திடு என்று தன்னுடைய நெஞ்சிற்கு சொல்கிறார்.
கடம் சூழ்க் கரியும் பரிமாவும் ஒலி மாந்தேரும் காலாளும், உடன் சூழ்ந்தெழுந்த கடி இலங்கை பொடிய வடிவாய்ச்சரம் துரந்தான், இடம் சூழ்ந்தெங்கும், இரு விசும்பில்  இமையோர் வணங்க மணம் கமழும், தடம் சூழ்ந்தெங்கும் அழகாய சாளக்கிராமமடை நெஞ்சே. (2)விசாலமான மேலுலகத்தில் உள்ள தேவர்கள் பூமியெங்கும் வந்து பரவி ஆச்சர்யத்தக்க புஷ்ப வாஸனைகள் வீசுகின்ற நீர்நிலைகளால் சூழப்பட்டு எல்லாப் பக்கங்களிலும் அழகை உடைய சாளக்கிராமம் அடை நெஞ்சே என்று இங்கும் ஆழ்வார் தன் நெஞ்சினை அழைக்கிறார். அந்த சாளக்ராமம், மத ஜலம் வழிகின்ற, மலைகள் வடிவெடுத்து நடந்தது போல் உள்ள யானை கூட்டங்களும், குதிரை கூட்டங்களும், மிகுந்த சப்தத்தை உண்டாக்கும் பெரிய தேர்களும் காலாட்களும் ஆகிய இவைகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து பெரிய கிளர்ச்சியோடு தோன்றின இலங்கை, சுடுகாடு ஆகும்படி கூர்மையான அம்புகளை உபயோகித்த சக்ரவர்த்தி திருமகன் எழுந்தருளி இருக்கும் இடம் ஆகும்.
உலவுதிரையும் குலவரையும் ஊழி முதலா எண் திக்கும் * நிலவும் சுடரும் இருளுமாய் நின்றான், வென்றி விறல் ஆழி வலவன் * வானோர் தம் பெருமான், மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும் சலவன் * சலம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம் அடைநெஞ்சே! (3)உலாவுகின்ற அலைகளையுடைய கடலும், மலைகளும், காலம் முதலாக எல்லா பொருட்களும், எட்டுத்திசைகளும், சந்திரனும் ஸூர்யனும், இருட்டும் ஆகிய இப்பொருள்கள் எல்லாவற்றிலும் அந்தர்யாமியாக இருப்பவனும், வெற்றியையும், மிடுக்கையும் திருவாழியை வலத் திருக்கையிலே உடையவனும், தேவாதி தேவனும் தன்னுடைய அடியவர்களை எதிர்க்கும் ராக்ஷஸர்கள் விஷயத்தில் எப்போதும் நன்மை செய்யாதவனுமாகிய எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் இடம், நீர் நிலங்களால் சூழப்பட்டு அழகு பொருந்தி சாளக்கிராமம் ஆகும் அதை அடை நெஞ்சே! என்று ஆழ்வார் சொல்கிறார். “ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம” என்று வேதம் சொல்வது போல், எம்பெருமான் ஜகத்ஸ்வரூபி என்பதை சொல்லும் பாடல். பகவத் பாகவத விஷயம் என்றால் பொறுக்கமாட்டாத ராக்ஷசர்களுக்கு எப்போதும் தீங்கு செய்பவன் என்றும் ஆழ்வார் சொல்கிறார்.
ஊரான் குடந்தை உத்தமன் ஒரு கால் இரு கால் சிலை வளைய, தேரா அரக்கர்த் தேர் வெள்ளம் செற்றான்  வற்றா வரு புனல் சூழ் பேரான், பேர் ஆயிரம் உடையான்  பிறங்கு சிறை வண்டு அறைகின்ற தாரான், தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே. (4) திருஊரகம் என்ற திவ்யதேசத்தை இருப்பிடமாகவுடையவனும், திருக்குடைந்தையிலே எழுந்தருளியிருக்கிற புருஷோத்தமனும், ஸ்ரீராமாவதாரத்தில், வில்லினுடைய இரண்டு நுனிகளையும் வளைத்து, ‘பரமபுருஷனான பெருமானோடு நாமோ எதிரிடுவது’ என்று விவேகம் இல்லாமல் அறிவு கெட்டு போரிட்ட அரக்கர்களையும் அவர்களது சேனை படைகளையும் வெற்றி கொண்டவனும், ஒருநாளும் வற்றாமல் மேன்மேலும் பெருகி வருகின்ற காவிரிநீர் சூழ்ந்த திருப்பேர்நகரில் கண் வளர்ந்தது அருள்பவனும், ஆயிரம் ஆயிரம் நாமங்களை யுடையவனும், நெருங்கி இருக்கிற சிறகுகளை உடைய வண்டுகள் ஆரவாரிக்கின்ற திருத்துழாய் மாலையை உடையவனுமான எம்பெருமான், தாரா என்னும் நீர்ப்பறவைகள் நிறைந்திருக்கிற வயல்களாலே சூழப்பட்ட ஸ்ரீஸாளக்ராமத்தில் எழுந்தருளி இருக்கின்றார், அதனை அடை நெஞ்சே என்று ஆழ்வார் சொல்கிறார்.
அடுத்து ஆர்த்து எழுந்தாள் பிலவாய் விட்டு அலற அவள் மூக்கு அயில் வாளால் விடுத்தான், விளங்கு சுடர் ஆழி விண்ணோர்ப் பெருமான் நண்ணார் முன் கடுத்து ஆர்த்து எழுந்த பெரு மழையைக் கல் ஒன்று ஏந்தி இன நிரைக் காத் தடுத்தான் தடம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே. (5)
மேல் விழுந்து வந்து ஆரவாரம் செய்தவளான சூர்ப்பணகையின் பிலம் போன்ற பெரிய வாயைத் திறந்து கொண்டு கதறும்படியாக, அவளுடைய மூக்கை, இளையவனைக் கொண்டு, கூர்மையான வாளாலே அறுத்தவனும், பிரகாசிக்கின்ற ஒளியையுடைய சக்கரத்தாழ்வானை திருக்கரங்களில் ஏந்தியவனும், நித்ய ஸூரிகளுக்குத் தலைவனும், வேகத்துடன் ஆரவாரம் செய்து வந்த  கன மழையை, எதிரிகளான இந்திரன் முதலானவர்களின் கண்ணெதிரில் பசுக்கூட்டங்களை காப்பதற்காக, கோவர்த்தனம் என்கிற ஒரு மலையை ஏந்தித் தடுத்தவனுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற தடாகங்களால் சூழப்பெற்று அழகாயிருக்கிற ஸாளக்ராமத்தை அடை நெஞ்சே என்று ஆழ்வார் பாடுகிறார்.
தாயாய் வந்த பேய் உயிரும் தயிரும் விழுதும் உடன் உண்ட வாயான் தூய வரி உருவிற் குறளாய்ச் சென்று  மாவலியை ஏயான் இரப்ப மூவடி மண் இன்றே தா என்று உலகேழும்  தாயான் காயா மலர் வண்ணன் சாளக்கிராமம் அடை நெஞ்சே. (6)தாய் போல் வந்த பூதனையின் உயிரையும், தயிரையும் வெண்ணெயையும் ஒன்று போலவே அமுது செய்தவனும், யாசிப்பதற்குத் தகாதவனான எம்பெருமான், பரிசுத்தமும் மிக அழகிய வடிவத்தை உடைய வாமனனாக வந்து மாவலி சக்ரவர்த்தியிடம் இப்பொழுதே தனக்கு மூன்று அடிநிலம் வேண்டும் என்று யாசித்து, அவன் நீர் வார்த்து கொடுத்தவுடன், எல்லா உலகங்களையும் தாவி அளந்தவனும், காயாம் பூப் போன்ற நிறம் உடையனுமான எம்பெருமான் எழுந்தரு ளியிருக்கிற ஸாளக்கிராமத்தை சென்று அடை நெஞ்சே என்று தன்னுடைய நெஞ்சத்திற்கு உபதேசிக்கிறார்.
ஏனோர் அஞ்ச வெம் சமத்துள், அரியாய்ப் பரிய இரணியனை, ஊன் ஆர் அகலம் பிளவெடுத்த ஒருவன் தானே இரு சுடராய், வானாய்த் தீயாய் மாருதமாய், மலையாய், அலை நீர் உலகனைத்தும் தானாய்  தானும் ஆனான் சாளக்கிராமம் அடை நெஞ்சே. (7) எதிரிகளான அசுரர்கள் பயப்படும்படியாக, நரசிங்கமூர்த்தியாகி, மிக பெருத்த உடலையுடைய ஹிரண்யனை கடுமையான சண்டையில், சதை, எலும்பு, நிறைந்த மார்பு கிழியும்படி செய்த ஒருவனும், இப்படி செய்தவன் தானே, சந்திர, சூரியர்களாய், நெருப்பாய், வானாய், காற்றாய், மலைகளாய் அலையாய் எல்லா உலகங்களுமாய் இருப்பவனும், ஆச்சர்யமான திவ்ய மங்கள விக்கிரகத்தை உடையவனுமான எம்பெருமான் எழுந்தருளி உள்ள சாளக்கிராமத்தை அடை நெஞ்சே என்று ஆழ்வார் உரைக்கிறார்.
வெந்தார் என்பும் சுடுநீறும் மெய்யில் பூசிக் கையகத்து ஓர் சந்தார் தலை கொண்டு உலகேழும் திரியும் பெரியோன் தான் சென்று, என் எந்தாய்! சாபம் தீர் என இலங்க அமுதநீர்த் திருமார்பில் தந்தான், சந்தார்ப் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடைநெஞ்சே! (8)செத்து வெந்துபோன ப்ரேதங்களின் எலும்புகளையும் சுட்ட சாம்பலையும் உடம்பில் பூசிக்கொண்டு, ஓட்டைகள் நிறைந்த ஒரு மண்டையோட்டைக் கையிலே எடுத்துக்கொண்டு எல்லாவுலகங்களிலும் திரிந்தவனான பரமசிவன் எம்பெருமான் அருகே வந்து, தன்னுடைய ப்ரஹ்மஹத்தி சாபத்தை தீர்த்து கொடுக்குமாறு வேண்டியபோது, தனது திருமார்பில் இருக்கின்ற அம்ருத ஜலத்தை  அளித்தவனான எம்பெருமான், வாசம் செய்யும் சந்தனமரங்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த ஸாளக்ராமத்தை சென்று அடை என்று தன் நெஞ்சுக்கு சொல்கிறார்.
தொண்டு ஆம் இனமும் இமையோரும் துணை நூல் மார்பின் அந்தணரும், அண்டா எமக்கே அருளாய் என்று அணயும் கோயில் அருகு எல்லாம், வண்டார்ப் பொழிலின் பழனத்து  வயலின் அனயலே கயல் பாய, தண்டாமரைகள் முகமலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே. (9)தொண்டு செய்பவர்களான பாகவதர்களும், நித்யஸூரிகளும், பூணுலுடன் கூடின மார்பை உடைய பிராமணர்களும் ‘தேவனே, எங்களுக்கே அருள் புரிய வேணும்’ என்று சொல்லிக்கொண்டு வந்து சேர்ந்து நிற்கிற கோவிலிலும், சுற்றுப்பிரதேசங்களெங்கும் வண்டுகள் நிறைந்திருக்கப்பெற்ற சோலைகளிலுண்டான நீர்நிலங்களில் கழனிகளிடத்துள்ள கயல் மீன்கள் வந்து துள்ள, அதனால் குளிர்ந்த தாமரை மொக்குகள் முகம் மிளிரும் ஸாளக்ராமத்தை நெஞ்சே!,  அடை என்று ஆழ்வார் சொல்லும் பாடல்.
தாரா ஆரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத் தடிகளை, காரார்ப் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஓலி செய் தமிழ் மாலை, ஆரார் உலகத்து அறிவுடையார் அமரர் நல் நாடு அரசு ஆள, பேர் ஆயிரம் ஓதுமின்கள் அன்றி இவையே பிதற்றுமினே. (10)இவ்வுலகத்திலே விவேகம் உள்ளவர்கள் எல்லோரும், நித்யஸூரிகளுடைய கைங்கர்யம் செய்யும் ஸ்ரீவைகுண்டத்தை அரசாளும் ஸ்ரீ வைகுண்ட நாதனுடைய ஆயிரந் திரு நாமங்களையும் ஓதுங்கள்: அல்லது, மேகங்கள் படிந்துள்ள தோட்டங்களையுடைய திருமங்கை நாட்டுக்குத் தலைவரான திருமங்கையாழ்வார் ஸாரஸ பறவைகள் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட ஸ்ரீஸாளக்ராமத்திலே எழுந்தருளி இருக்கும் எம்பெருமான் விஷயமாக அருளி செய்த தமிழ் மாலையாகிய இப்பாசுரங்களையே வாயில் வந்த படி சொல்லுங்கள். எம்பெருமானுடைய ஸஹஸ்ரநாமங்களை ஸங்கீர்த்தனம் பண்ணுவதும் இந்தத் திருமொழியைக் கற்பதும் சம பலன் தரும் என்கிறார். இப்பாசுரங்களை வாயில்வந்தபடி தப்புந்தவறுமாகச் சொன்னாலும் பலன் தரும் என்று ஆழ்வார் கூறி இந்த பதிகத்தை முடிக்கிறார்.

காட்மண்ட் , பொக்ரா, மற்றும் முக்திநாத் சென்ற போது எடுத்த சில புகைப்படங்கள்


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d bloggers like this: