A Simple Devotee's Views
பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம்.
திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே என்று நம் பெரியவர்கள் கூறி உள்ளார்கள்.).
இவற்றில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்து சில பாசுரங்களை முன்பு பார்த்து உள்ளோம். பொதுவாக முதலாழ்வார்களுக்கு வேங்கடமுடையானிடம் அதிக பற்று கொண்டு இருந்தார்கள் என்பதும் அவர்கள் அவனுக்கு நிறைய பாடல்கள் பாடினார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து திருவேங்கடமுடையானை முன்னிட்டு பொய்கையாழ்வார் இயற்றிய முதல் திருவந்தாதியில் இருந்து பத்து பாசுரங்களை முன்பு பார்த்தோம். அடுத்த ஆழ்வார், பூதத்தாழ்வார், அவரின் இரண்டாம் திருவந்தாதியில் இருந்து திருவேங்கடமுடையானை பற்றி பதினோரு பாசுரங்களில் சொல்வதை இங்கே சுருக்கமாக பார்த்தோம்.
இங்கே சுருக்கமாக அடுத்த ஆழ்வாரான பேய்ஆழ்வாரின் திருவேங்கடமுடையான் பாசுரங்களை (19) இங்கே காண்போம். நன்றி.
1. மாற்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு, நூற்பால் மனம் வைக்க நொய் விதாம்,- நாற்பால வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும், பாதத்தான் பாதம் பணிந்து. (14)
நான்கு வேதங்களால் சொல்லப்பட்டவனும், விண்ணோர்கள் வந்து பணிந்து அவர்களின் கிரீடத்தில் உள்ள துகள்கள் பதியும் திருப்பாதங்களை உடையவனுமுமான திருவேங்கடமுடையானின் திருவடிகளை பற்றுவது, நம் ஐம்புலன்களை அடக்கி வைப்பதால் எளிதாகும் என்று சொல்லும் பாடல். மங்கையர் தோள் கைவிட்டு, அதாவது நம் புலன்களை முழுவதுமாக அடக்கிய பிறகு, நூற்பால் மனம் வைக்க , அதாவது வேதத்தினிடம் நாம் மனம் வைக்க முடியும் என்று சொல்வது கூரத்தாழ்வார் போன்ற ஒரு சிலருக்கே சாத்தியம் என்றும், பலருக்கு மங்கையர் தோள் பற்றி மனம் நினைக்காத போது, பகவத் விஷயத்தைப்பற்றி சிந்தித்து, சிறுது சிறிதாக அதனை அதிகப்படுத்தி, பின்னர் மங்கையர் தோளை முழுவதுமாக கைவிட்டு விடலாம் என்று சொன்ன முதலியாண்டான் போன்ற சில ஆச்சார்யார்களும் உண்டு என்று சுவாரசியமாக சொல்வதுண்டு.
2. சிறந்த என் சிந்தையும் செங்கண் அரவும், நிறைந்த சீர் நீள்கச்சி யுள்ளும், – உறைந்ததுவும், வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப் பாடியுமே, தாம் கடவார் தண்டுழாயார். (26)
குளிர்ந்த திருத்துழாய் மாலை அணிந்த எம்பெருமான் உகந்து இருக்கும் இடங்களாக சிலவற்றை இங்கே சொல்கிறார். ஆழ்வாரின் மனதினுள், அனந்தாழ்வான் (பாம்புப்படுக்கை), காஞ்சிபுரத்தில் உள்ள திவ்யதேசங்கள், திருமலை, திருவெக்கா, திருவேளுக்கை மற்றும் திருவாய்ப்பாடி. இவற்றுள், தன் மனதை எம்பெருமான் மிகவும் விரும்பி உறையும் இடமாக சொல்கிறார். அதற்கு சிறந்த என்ற அடைமொழி காரணம். இன்னொரு விளக்கத்தின்படி, ஆழ்வார் சிந்தைக்குள் வருவதற்காக எம்பெருமான் இப்படி பற்பல திவ்யதேசங்களில், காத்துகொண்டு இருந்தான் என்று சொல்வதுண்டு.
3. சேர்ந்த திருமால் கடல், குடந்தை, வேங்கடம், நேர்ந்த என் சிந்தை நிறை விசும்பு, வாய்ந்த மறை பாடகம் அனந்தன் வண்டுழாய்க் கண்ணி, இறைபாடி ஆய இவை. (30)
ஆழ்வார், அழகிய திருத்துழாய் மாலை அணிந்த திருமால் நித்யவாஸம் செய்கின்ற ராஜதானிகளாக (ஸ்தலங்களாக) திருப்பாற்கடல், திருக்குடந்தை, திருவேங்கடம், ஆழ்வாரின் சிந்தை, பரமபதம், வேதங்கள், திருபாடகம், ஆதிசேஷன் ஆகியவற்றை சொல்கிறார். நிறை விசும்பு என்று சொன்னது, மற்றவைகள் போல் குறைவில்லாத வைகுந்தம் என்பதற்காகும். இந்த திவ்யதேசங்களில் ப்ரத்யக்ஷமாக (நேரடியாக) தெரிவதுபோல், ஆழ்வாருக்கு வேதங்களின் ஒலிகளிலும் எம்பெருமான் தெரிகிறார். இருந்தாலும், வாய்ந்த என்ற ஒரு சிறப்பு சேர்த்து மறை என்ற வேதத்தை சொல்கிறார்.
எம்பெருமான் வேதம், அனுமானம் மற்றும் பிரத்யக்ஷம் என்ற மூன்றின் மூலமாகவும் அறியப்படுகிறார். அனுமானம் மற்றும் பிரத்யக்ஷத்திற்கு உள்ள குறை வேதத்திற்கு கிடையாது ஆகையால் வேதத்திற்கு சிறப்பு சேர்க்கப்பட்டது. அகல்விளக்கில் ஒரே ஓரு தீபம் போல் பிரத்யக்ஷமாய் தெரிவது தொடர்ச்சியாக ஒளிவிடுகிற பல தீபங்கள் என்று நிரூபிக்க முடிவதால், பிரத்யக்ஷம் தவறாகிவிடுகிறது. (நேரம் செல்லச் செல்ல, திரி முழுவதும் எரிந்து விடுவதாலோ, விளக்கில் எண்ணெய் குறைவதாலோ விளக்கில் தெரிவது பல தீபங்கள் என்று நிரூபணம் ஆகிறது). அதே போல், ஆகாயம் மேலே உள்ளது, தாமரை நீரில் உள்ள மலர் என்பதால், ஆகாய தாமரை என்பது ஆகாயத்தில் நீரில் உள்ள தாமரை போன்ற மலர் என்று அர்த்தம் கொள்வது பொருத்தமான வாதம் ஆக இருந்தாலும், அது போல் ஒன்று நிஜத்தில் கிடையாது என்பதால், அனுமானங்களால் உருவான ஒன்று பிரத்யக்ஷத்தில் இல்லாமல் போகக்கூடிய குற்றம் உள்ளது. இந்த குற்றங்கள் எதுவும் இல்லாது வேதம் ஆகும்.
4. பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனிவிசும்பும், நூற் கடலும் நுண்ணுல தாமரைமேல், பாற்பட்டிருந்தார் மனமும் இடமாகக் கொண்டான், குருந்தொசித்த கோபா லகன். (32)
எம்பெருமானின் இருப்பிடங்களாக, திருப்பாற்கடல், திருவேங்கடம், திருவனந்தாழ்வான், ஸ்ரீவைகுண்டம், வேதவேதாதங்கள், யோகிகளின் உள்ளக் கமலம் ஆகியவற்றை ஆழ்வார் சொல்கிறார். பனிவிசும்பு என்பதால், ஸம்ஸாரத்தில் பட்ட தாபங்களை எல்லாம் ஆற்றிக் குளிரப்பண்ணும் பரமபதம் என்று கூறுகிறார். நூற்கடல் என்பதால், கடல் போன்று இருக்கிற ஸ்ருதி, ஸ்ம்ருதி, இதிஹாஸம், புராணம் முதலிய சாஸ்த்ரங்களை குறிப்பிடுகிறார். நுண்ணுல தாமரைமேல், பாற்பட்டிருந்தார் மனம் என்பதால், கவிழ்த்து வைக்கப்பட்டு இருக்கும் தாமரை மலர் போல் உள்ள ஞானிகளின் ஹிருதய கமலம் என்று சொல்கிறார்.
இங்கு எம்பெருமானின் ஐந்து நிலைகளும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. பாற்கடல் என்பதால், இரண்டாவது நிலையான திருப்பாற்கடலும், பனிவிசும்பு என்பதால் முதல் நிலையான பரமபதமும், வேங்கடம் என்பதால் அர்ச்சை என்ற நான்காவது நிலையும், குருந்தொசித்த கோபாலகன் என்பதால் மூன்றாவது நிலையான விபவமும் நுண்ணுல தாமரைமேல், பாற்பட்டிருந்தார் மனமும் என்பதால் ஐந்தாவது நிலையான அந்தர்யாமியும் சொல்லப்பட்டு உள்ளன.
எம்பெருமானின் ஐந்து நிலைகளை நம் பூர்வாச்சார்யர்கள் ஐந்து விதமான நீர் நிலைக்களுக்கு ஒப்பிடுவர். அவை,
இந்த நிலைகளை ‘பரம் என்பது ஆவரண ஜலம் போன்றது; வியூஹம் என்பது சமுத்திர ஜலம் போன்றது; விபவம் என்பது காட்டாற்று வெள்ளம் போன்றது; அந்தர்யாமி என்பது ஊற்று நீர் போன்றது; அர்ச்சை என்பது கிணற்று நீர் போன்றது’ என்றும் சொல்வதுண்டு.
5. இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய், மறையாய் மறைப்பொருளாய் வானாய் – பிறைவாய்ந்த, வெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான், உள்ளத்தின் உள்ளே உளன். (39)
பூமிக்கு அந்தர்யாமியாய் எட்டு திசைகளிலும் இருக்கும் எல்லா பொருட்ளிலும் வியாபித்து இருப்பவனாகவும், தனக்குள் வைத்து இருப்பவனும், வேதங்களாகவும் வேதங்களுக்கு பொருளாகவும், இந்த உலகத்தை நிர்வகிப்பவனும், சந்திர மண்டலம் அளவு உயர்ந்தும், மிக்க தண்ணீர் உள்ள அருவிகள் போடும் சப்தத்துடன் கூடிய நீரையுடையதுமான திருவேங்கடமலையில் வாழ்பவனான எம்பெருமான் தன்னுடைய நெஞ்சினுள்ளே இருக்கின்றான் என்று ஆழ்வார் கூறுகிறார்.
6. உளன் கண்டாய் நன்னெஞ்சே. உத்தமன் என்றும் உளன் கண்டாய், உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய், விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கு அருவி வேங்கடத்தான், மண்ணெடுங்கத் தான் அளந்த மன். (40)
ஆழ்வார், தன் நெஞ்சத்திற்கு சொல்வது :
7. புரிந்து மதவேழம் மாப்பிடியோடு ஊடித், திரிந்து சினத்தால் பொருது, விரிந்தசீர் வெண்கோட்டு, முத்து உதிர்க்கும் வேங்கடமே, மேலொரு நாள், மண்கோட்டுக் கொண்டான் மலை. (45)
யானை தன் பேடையுடன் ஊடல் கொண்டதால், அதனை விட்டு, இங்கும் அங்கும் திரிந்து தன் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக, தனது தந்தத்தை திருமலையில் உள்ள பாறைகளிலே முட்டி குத்துவதானால் அந்த உயர்ந்த ஜாதி யானைகளின் தந்தங்களில் இருந்து வெண்முத்துக்கள் உதிர்கின்றன. இத்தகைய திருமலை, முன்பு வராக அவதாரம் செய்த எம்பெருமானுடைய இருப்பிடம் என்கிறார். திருமலையிலுள்ள பளிங்குப் பாறைகளிலே யானை தன் நிழலைக்கண்டு, தன் எதிரே இன்னொரு யானையா என்று கோபம் கொண்டு அதனோடு போர் செய்வதாகவும் கொள்ளலாம்.
8. தெளிந்த சிலாதலத்தின் மேலிருந்த மந்தி, அளிந்த கடுவனையே நோக்கி, – விளங்கிய வெண் மதியம் தா என்னும் வேங்கடமே, மேலொருநாள், மண்மதியில் கொண்டு உகந்தான் வாழ்வு. (58)
திருமலையின் சிகரம் சந்திர மண்டலத்தையும் தாண்டி நீண்டு உள்ளது என்றும், அத்தகைய சிகரத்தில் மேல் இருந்த பெண் குரங்கு தன்னுடைய முகத்தினழகைப் பார்த்துக் கொள்வதற்குக் கண்ணாடி கொண்டுவந்து தா‘ என்று ஆண் குரங்கிடம், ‘குறையில்லாத பூர்ண சந்திரனைப் பறித்துத் தா‘ என்று கேட்கிறது. அத்தகைய திருமலை, கேட்பவர் கேட்டபடியே தானம் செய்வது என்று விரதம் பூண்ட மாவலி சக்ரவர்த்தியிடம் யாசகம் கொண்டே காரியம் ஸாதிக்க வேண்டும் என்று புத்தி சாதுரியம் கொண்ட எம்பெருமான் உறையும் இடம் என்று ஆழ்வார் கூறுகிறார். ஆழ்வார் மனஓட்டத்தில், எம்பெருமானிடம், பிராட்டியார், சந்திரன்போல் இருக்கும் ஜீவாத்மாக்களாகிய நம்மை உயர்த்திவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதாக எழுதப்பட்டுள்ள பாசுரம் இது. சந்திரனை விட உயரத்தில் இருக்கும் தாயார் அதில் உள்ள குறைகளை பொருட் படுத்தாமல், அதனை உயர்த்த சிபாரிசு செய்கிறார். இந்த பாடலில், பிராட்டி நமக்காக சிபாரிசு செய்வதும், எம்பெருமான் பிராட்டியிடமும் ஜீவாத்மாக்களிடமும் காட்டும் பரிவும் தெரிகின்றன.
9. பண்டெல்லாம் வேங்கடம், பாற்கடல், வைகுந்தம், கொண்டு அங்கு உறைவார்க்குக் கோவில் போல், வண்டு வளம் கிளறும் நீள் சோலை, வண் பூங்கடிகை, இளம் குமரன் தன் விண்ணகர் (61)
ஸ்ரீவைகுந்ததை(பரமபதம்) உறைவிடமாக கொண்டு நித்யவாஸம் செய்யும் எம்பெருமானுக்கு, திருப்பாற்கடல், திருமலை, வண்டுகளின் கூட்டம் நிறைந்து உள்ள இனிமையான கடிகை என்னும் சோளிங்கர், என்றும் இளமையுடன் இருக்கும் அவன் தன்னது என்று விரும்பும் திருவிண்ணகர் என்ற ஒப்பிலியப்பன் கோவில் ஆகியவை ஆழ்வாரின் நெஞ்சத்திற்கு வருவதற்கு முன்பு கோவில்களாக இருந்தன. இப்போது ஆழ்வார் நெஞ்சமே அவனுக்கு கோவில். தன்னுடைய நெஞ்சத்தில் புகுவதற்காக, ஸ்ரீவைகுந்ததில் இருந்து புறப்பட்டு, திருப்பாற்கடல், திருமலை போன்ற திவ்யதேசங்களில் எழுந்தருளி காத்து இருந்தான் என்பது ஆழ்வார் வாக்கு.
10. விண்ணகரம், வெஃகா விரிதிரைநீர் வேங்கடம், மாநகரம் மாமாட வேளுக்கை மண்ணகத்த தென் குடந்தை, தேனார் திருவரங்கம், தென்கோட்டி தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு (62)
திருவிண்ணகரம், திருவெஃகா, விரிந்து அலைகளை கொண்ட நீர்வளம் உள்ள திருவேங்கடம், பெரிய மாடங்களை உடையதான வேளுக்கை, பூமியில் நடுநாயகமாக திருக்குடந்தை, தேன் வெள்ளம் பெருகுகின்ற சோலைகளை உடைய திருவரங்கம், தெற்கே உள்ள திருக்கோட்டியூர், என்ற இந்த திவ்யதேசங்களில், ஒரு காலத்தில், மாவலி சக்ரவர்த்தியிடம் யாசகம் செய்து, அவனிடம் இருந்து நீர் பெற்று தன்னுடைய உடமைகளான இந்த உலகத்தை எல்லாம் வசப்படுத்திய நீர்மை/எளிமை என்னும் உயரிய கல்யாண குணத்தை காட்டி உறைகிறான். ஒரு காலத்தில், விபவத்தில், யாசகம் செய்ததைப் போல், இந்த ஆத்மாக்களை பெறுவதற்கு எளிமை/ நீர்மை (சௌலப்யம், சௌசீல்யம்) போன்ற குணங்களை எப்பொழுதும் வெளிப்படுத்திக் கொண்டு உறைகின்ற திவ்யதேசங்கள் இவை, என்று ஆழ்வார் சொல்கிறார்.
11. தாழ்சடையும் நீண்முடியும் ஒண் மழுவும் சக்கரமும், சூழ் அரவும், பொன் நாணும் தோன்றுமால், சூழும் திரண்ட அருவி பாயும், திருமலைமேல் எந்தைக்கு, இரண்டு உரு ஒன்றுமாய் இசைந்து. (63)
கீழே இறக்கி கட்டின ஜடையும், நீண்ட திருமுடியும், அழகிய மழு என்ற ஆயுதமும், சுதர்சனாழ்வான் என்னும் சக்கரமும் சுற்றிலும் அணிந்துள்ள நாகாபரணமும் தங்கத்தினாலான அரைநாணுமாய் கொண்டு, ஒன்றுக்கு ஒன்று சேராததை சேர்த்து சங்கர நாராயணன் என்ற இரண்டு வடிவும், நாற்புறமும் திரள் திரளாக அருவிகள் பெருகி உள்ள திருமலை மேல் உள்ள எம்பெருமானுக்கு ஒரு வடிவமாய் பொருந்தி இருப்பது ஆச்சர்யம்.
நரம் கலந்த சிங்கம் போல், அரன் கலந்த அரி உருவாய் தோன்றிய சங்கர நாராயண அவதாரம் சாஸ்திரங்களில் பேசப்படுகிறது. அதில் பிரதானமாக உள்ள வலது பக்கத்தில் ஹரி உள்ளார். சங்கு என்று சொல்லாமல், சக்கரம் என்று சொல்லி இடது பக்கம் அரனுக்கு என்று ஆழ்வார் கூறுகிறார். எம்பெருமானுக்கு எப்போதும் வலது திருக்கரத்தில் சுதர்சன் சக்கரம் உள்ளது. முன் பாசுரத்தில், த்ரிவிக்ர அவதாரத்தின் சிறப்பு குணமான சௌலப்யத்தை த்ரிவிக்ரமனின் விக்ரகம் இல்லாத பல திவ்யதேசங்களை குறிப்பிட்டது போல், இந்த பாடலிலும், திருவேங்கடமுடையானுக்கு சங்கர நாராயண அவதாரத்தின் போது காட்டிய சௌசீல்யம் உள்ளது என்றே பொருள் படும். திருவேங்கடமுடையானிடம், நீண்முடியும், சக்கரமும், பொன்னாணும் உள்ளனவே தவிர, தாழ்சடையும், ஒண்மழுவும், சூழரவும் இல்லை. ஆழ்வார் இந்த பாடலில் அரியும் அரனும் ஒன்று என்ற அபத்த கொள்கையை ஆதரிக்கவில்லை என்பதை இவருடைய 97 பாசுரத்தின்படி நிலை நிறுத்துகிறார்.
12. பார்த்த கடுவன் சுனைநீர் நிழற்கண்டு, பேர்த்தோர் கடுவன் என பேர்ந்து கார்த்த களங்கனிக்கு கை நீட்டும், வேங்கடமே, மேனி விளங்கனிக்கு கன் எறிந்தான் வெற்பு. (68)
ஆழ்வார் திருமலையில் விலங்கு, மரம், கனி என்று எதைப்பார்த்தாலும் எம்பெருமானின் திருவிளையாடல்கள் தான் நினைவிற்கு வருகிறது என்கிறார். சுனைநீரில் தன் உருவதைப் பார்த்து வேறு ஒரு குரங்கு என்று பயந்து, மரக்கிளையை விட்டு, மெதுவாக நகரும் போது, அந்த நிழல் குரங்கிற்கு அருகில் இருக்கும் களங்கனியை பறித்துத் தா என்று சபல புத்தியுடன் கேட்கும் செயலைப் பார்த்து, ஆழ்வார் முன்னொரு காலத்தில், ஒரு கன்றினைப் பிடித்து விளாமரத்தின் மேல் தூக்கி ஏறிந்து கன்றாகிய வத்ஸாசுரனையும், விளாமரமாகிய கபீத்தாசுரனையும் ஒன்றும் அறியாதாவனைப்போல் ஒரே நேரத்தில் முடித்த சரித்திரத்தை இங்கு நினைவு கூறுகிறார்.
13. வெற்பென்று வேங்கடம் பாடும், வியன் துழாய்க் கற்பென்று சூடும் கருங்குழல்மேல், மற்பொன்ற நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான், பூண்ட நாவெல்லாம் புகும். (69)
இந்த பாசுரத்திற்கு இரண்டு வித விளக்கங்கள் உள்ளன. ஒன்று ஆழ்வார் தன்னிலை மறந்து, தாய் பாசுரம்போல் விளக்கம், மற்றொன்று ஆழ்வார் நமக்கு உபதேசிப்பது போல் விளக்கம். இந்த பிரபந்தத்தில் வேறு எங்கும் ஆழ்வார் தன்னிலை மறந்து பாடியது இல்லை என்கிறபடியால், ஆழ்வார் உபதேசம் என்ற இன்னொரு விளக்கமும் சொல்லப் படுகிறது. பிற்பட்ட ஆழ்வார்கள் தாய் பாசுரமாகவும், மகள் பாசுரமாகவும், தோழி பாசுரமாகவும் பாட, இது ஒரு முன்னோடி என்று தெளிவாக சொல்லும்படியான பாசுரம்.
தாய், தன் மகள் மலை என்றால் வேங்கடம் என்றும், திருத்துழாய் மாலையை தலையில் சூடிக்கொண்டு, அதுவே தன் தகுதிக்கு உகந்தது என்றும், மல்லர்களை வீழ்த்திய திரண்ட தோள்களை உடைய எம்பெருமான் சயனித்து இருக்கும் திருப்பாற்கடலில் நீராடுவேன் என்றும் ஒவ்வொரு நாளும் சொல்கிறாள் என்பது தாயார் பாசுரமாக கொண்ட விளக்கம்.
உலகத்தீரே, பயன்கொடுக்காமல் இருக்கும் மற்ற மலைகளைப் பாடாமல், பெரும்பலன்களை கொடுக்கும் திருமலையை பாடுங்கள், என்றும், ஏதோ ஒரு பூவை சூடாமல், அவன் உனக்கும் திருத்துழாயை சூடுங்கள் என்றும், ஏதோ ஒரு நீர்நிலையில் நீராடாமல், திருப்பாற்கடல் போன்ற எம்பெருமான் சம்பந்தம் உள்ள நீர்நிலைகளில் நீராடுங்கள் என்றும், சொல்வது ஆழ்வார் உபதேசிப்பது போல் உள்ள விளக்கம்.
14. புகுமதத்தால் வாய் பூசி கீழ் தாழ்ந்து, அருவி உகுமதத்தால் கால் கழுவி கையால், மிகு மதத்தேன் விண்ட மலர்கொண்டு, விறல் வேங்கடவனையே கண்டு வணங்கும் களிறு (70)
திருமலையில் உள்ள யானையானது, தன்னிடம் பெருகி வரும், மத்தகத்தில் இருந்தும் வாயில் இருந்தும் வழிகின்ற நீரினால், வாய் கொப்பளித்து, ஆசமனம் செய்து, மேல் இருந்து கீழ் வரை வருகின்ற மத நீரினால் கால் கழுவி, சுத்தம் செய்து, தேன் மிகுந்த பூக்களைக் கொண்டு மிகவும் மிடுக்குடன், விளங்கும் திருவேங்கடவனை வணங்குகின்றன. அவனை வணங்க யோக்கியதை வேண்டாமா என்று கேட்பவர்களுக்கு, அவை வேண்டாம் என்றும், அறிவற்ற யானை போன்ற விலங்குகளுக்கு தன்மேல் அன்பையும் பக்தியையும் அறிவையும் தூண்டுகிற சக்தி மிக்க மஹாபலத்துடன் இருக்கும் வேங்கடவன் அவைகளையும் ஏற்று கொள்கிறான் என்று ஆழ்வார் சொல்கிறார்.
15. களிறு முகில் குத்தக் கையெடுத்து ஓடி, ஒளிறு மருப்பொசி கையாளி, பிளிறி விழ, கொன்று நின்று அதிரும் வேங்கடமே மேல் நாள், குழக்கன்று கொண்டு எறிந்தான் குன்று. (71)
யானையானது மேகத்தைப் பார்த்து இன்னொரு யானை என்று கோபம் கொண்டு தன்னுடைய தந்ததால் குத்த, ஒரு யாளி அந்த யானையின் ஒளிவிடுகின்ற கொம்பினை உடைக்க அந்த யானை வாய்விட்டு அலறி விழும் திருவேங்கடம், ஒரு காலத்தில் வத்ஸாசுரன் என்ற அசுரன் கன்றுக்குட்டியாக இருந்தபோது அதனை தூக்கி எறிந்து கபீத்தாசுரன் என்ற அசுரனையும் கொன்ற கண்ணனுடைய திருமலை ஆகும். எம்பெருமானின் இயல்பான குணங்களில் ஒன்றான விரோதி நிரஸனத்தை இந்த திருமலையில் வாழும் விலங்குகளும் கொண்டு இருக்கின்றன என்று ஆழ்வார் சொல்கிறார்.
16. குன்று ஓன்றினாய குறமகளிர் கோல்வளைக்கை *
சென்றுவிளையாடும்தீங்கழைபோய் * – வென்று
விளங்குமதிகோள்விடுக்கும் வேங்கடமே * மேலை
இளங்குமரர்கோமானிடம். (72)
திருமலையை விட்டு கீழே இறங்குவது தங்கள் குடிக்கே இழுக்கு என்று நினைக்கும் குறத்திகள், திருவேங்கடத்தையே பதி என்று வாழ்பவர்கள். அவர்களின் கைகள் வளைகளை கொண்டதாகவும், பசுமையானதாகவும், நீளமாகவும் உள்ளதால், அவை மூங்கில்களை தள்ளி அவற்றின் மேல் உள்ள பூரண சந்திரனை பிடிக்க வந்த ராகுவை விரட்டி கிரகணத்தை விலக்கிய திருமலை என்று ஆழ்வார் பாடுகிறார். இன்னொரு பொருள், மேல் சொன்னாற்போல் உள்ள கைகளை உடைய குறத்திகள், செறிந்து உயர்ந்து வளர்ந்து இருக்கும் மூங்கில்களை பிரித்து விட்டதால், சந்திரனின் ஒளி கிரணங்கள் திருமலையில் விழ, சந்திரன் தன்னுடைய துன்பம் நீங்கியதை சொல்லி, திருமலையின் நில வளத்தை சொல்வதாகவும் கொள்ளலாம். மூன்றாவது பொருள், மேலே சொன்னாற்போல் உள்ள கைகளை உடைய குறத்திகள் தங்களுடைய கைகளினால் நன்றாக வளர்ந்து உள்ள மூங்கில்களை விலக்கி, தங்களுடைய வளைகளின் ஒளியால், சந்திரனிடத்தில் உள்ள மறுவாகிய குறைகளை நீக்கிய பெருமை உடைய திருமலை என்றும் கொள்ளலாம். இவை யாவும்,, அப்பிள்ளை என்ற ஆச்சாரியாரின் உரை.
இனி பெரியவாச்சான்பிள்ளையின் பொருள். இப்படிப்பட்ட கைகளைக்கொண்ட குறத்திகள், விளையாடும் கழக்கோடிகள் (கழற்கொடிகளை உயர எறிந்து விளையாடும் ஆட்டம்) சந்திரனை பிடிக்க வரும் ராகுவை அடித்து அவனை வென்று சந்திரனை கிரகண துன்பத்தில் இருந்து மீட்ட திருமலை என்று சொல்லி திருமலையின் உயர்வையும் அங்குள்ள குறத்திகளின் வலிமையையும் ஆழ்வார் சொல்கிறார் என்கிறார். இவ்வளவு உயரமான இடத்தில இருப்பது யார் என்று கேட்டுக்கொண்டு, எல்லாவற்றிக்கும் மேலாக இருக்கும் பரமபதத்தில் எப்போதும் எம்பெருமானையே அனுபவித்து இளஞர்களாக என்றும் இருக்கும் நித்யஸூரிகளுக்கு தலைவனான இளங்குமரன் வாழுமிடம் இதுவென்றோ என்று திருமலையை கொண்டாடுகிறார்.
17. இடம்வலமேழ்பூண்ட இரவித்தேரோட்டி *
வடமுகவேங்கடத்துமன்னும் * – குடம்நயந்த
கூத்தனாய்நின்றான் குரைகழலேகூறுவதே *
நாத்தன்னாலுள்ளநலம். (73)
இடப்புறமும் வலப்புறமும் ஏழு குதிரைகளை பூண்ட சூரியனுடைய தேரை அவனது அந்தர்யாமியாக இருந்து நடத்துகிறவனும், வடதிசையில் உள்ள வேங்கடத்தில் நித்யவாஸம் செய்பவனும், ஆசையோடு குடக்கூத்து ஆடினவன கண்ணபிரானாக அவதரித்தவனுமான எம்பெருமானுடைய ஆபரண ஒலி பொருந்திய திருவடிகளைத் துதிப்பதே நாவினால் கொள்ளகூடிய பயன் என்று ஆழ்வார் சொல்கிறார். சூரியனின் ஏழு குதிரைகள், ஏழு சந்தஸ்கள்; அவை, காயத்திரி, ப்ருஹதி உஷ்ணிக், ஜெகதீ, த்ரிஷ்டுப், அனுஷ்டுப், பங்க்தி. ஆய் மேரு மலையின் வடக்கும் தெற்கும் சஞ்சரிப்பதை, இடம் வலம் என்று கூறுகிறார்.
18. சார்ந்தகடுதேய்ப்பத் தடாவியகோட்டுச்சிவாய் *
ஊர்ந்தியங்கும்வெண்மதியினொண்முயலை * – சேர்ந்து
சினவேங்கைபார்க்கும் திருமலையே * ஆயன்
புனவேங்கைநாறும்பொருப்பு. (75)
திருமலையின் சிகரம் சந்திரமண்டலத்தளவும் ஓங்கியிருக்கின்றது; ஆகாசத்திலே பயணிக்கின்ற சந்திரன் திருமலையில் உள்ள சிகரங்களின் உச்சியில் பட்டு செல்லும்போது அங்கும் இங்கும் தேய்கிறது. அப்போது சந்திரனில் உள்ள மருவை, முயல் எனக்கருதி, திருமலையில் திரிகின்ற வேங்கைப்புலி, அதனைத் தனக்கு உணவாக பிடிக்க எண்ணி, பிடிக்கவும் முடியாமல், விட்டுப் போகவும் மனம் இல்லாமல் கோபத்துடன் உற்றுப் பார்த்தபடி நிற்கின்றது. இப்படிப்பட்ட திருமலை, வேங்கைமலர்களின் வாசம் வீசப் பெற்றதாய், கண்ணபிரான் எழுந்து அருளி இருக்கும் இடம் என்று ஆழ்வார் முடிக்கிறார்.
19. முடிந்தபொழுதில் குறவாணர் * ஏனம்
படிந்துழுசால் பைந்தினைகள்வித்த * – தடிந்தெழுந்த
வேய்ங்கழைபோய் விண்திறக்கும்வேங்கடமே * மேலொருநாள்
தீங்குழல்வாய்வைத்தான்சிலம்பு. (89)
மரணமடையும் நிலையில் உள்ள வயதானவர்களாக குறவர்கள் தலைவர்கள், வேட்டைக்கு செல்ல முடியாததால், காட்டுப்பன்றிகள், தங்கள் செருக்காலே மூங்கில்களை வேர்பறிந்து விழும்படி, ஊன்றி உழுத விளைநிலங்களிலே புதிய தினை விதைகளை விதைக்க, வெட்டிப்போட்ட பின்பும், நிலவளத்தினால் ஓங்கி வளர்ந்த மூங்கில்களானவை, மேலும் வளர்ந்து ஆகாயத்தை தொடும் திருவேங்கடம். முன்பு ஒரு நாள், இனிய புல்லாங்குழலை திருப் பவளத்தில் ஊதிய கண்ணனுடைய திருமலை.
இந்த பாசுரம், திருவேங்கடவனுக்கு என்று சொல்லப்பட்ட பாசுரம் அன்று. மேலே சொன்னதற்கு ஒரு சிறு விளக்கம் மட்டுமே, நன்றி.
அலர்எடுத்த உந்தியான்* ஆங்குஎழிலஆய,* மலர்எடுத்த மாமேனி மாயன்,* – அலர்எடுத்த வண்ணத்தான் மாமலரான்* வார்சடையான்* என்று இவர்கட்கு எண்ணத்தான் ஆமோ இமை?
தாமரைப்பூ உடைய நாபியை கொண்டவனும், காயம் பூவின் நிறத்தினபோல் கரிய திருமேனியை உடையவனும், மாயன் என்ற பெயருடன் ஆச்சர்யமானவன எம்பெருமானை, வேதங்களால் சிறப்பித்து கூறப்பெற்ற, காஞ்சி மலர் நிறம் கொண்ட இந்திரன், தாமரைப்பூவில் பிறந்த பிரம்மன், தாழ்ந்த சடையை உடைய சிவன் போன்ற தேவர்கள் அவர்களாக முயன்று சற்றேனும் (கண் இமைக்கும் நேரம்) நெஞ்சால் சிந்திக்க / அறிய முடியமோ என்கிறார். எம்பெருமானின் அருளாலே அவனை பெற முடியுமே தவிர, தமது முயற்சியால் இந்த பிரம்மாதி தேவர்கள் கூட அவனை அறிய முடியாது என்கிறார்.