A Simple Devotee's Views
பதின்மர் பாடும் பெருமாள் என்று திரு அரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திரு அரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம்.
திரு அரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே என்று நம் பெரியவர்கள் கூறி உள்ளார்கள்.).
இவற்றில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்து சில பாசுரங்களை முன்பு பார்த்து உள்ளோம். பொதுவாக முதலாழ்வார்களுக்கு வேங்கடமுடையானிடம் அதிக பற்று கொண்டு இருந்தார்கள் என்பதும் அவர்கள் அவனுக்கு நிறைய பாடல்கள் பாடினார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து திருவேங்கடமுடையானை முன்னிட்டு பொய்கையாழ்வார் இயற்றிய முதல் திருவந்தாதியில் இருந்து பத்து பாசுரங்களை முன்பு பார்த்தோம். இப்பொழுது அடுத்த ஆழ்வார், பூதத்தாழ்வார், அவரின் இரண்டாம் திருவந்தாதியில் இருந்து திருவேங்கடமுடையானை பற்றி சொல்வதை இங்கே சுருக்கமாக காண்போம். நன்றி.
இராமன் சென்றது இலங்கை, (தொல் புகழோன் வந்து) நின்றது திருவேங்கடம் ;
கொன்றது இராமன் அல்ல, அவன் சீற்றம்; பக்தர் – குணமும் குறையும் கொண்டவர்கள்; முக்தர் – இப்போது குணம் மட்டும் கொண்டவர்கள், முன்பு குறையும் இருந்தவர்கள்; நித்யர் – குறை என்றும் இல்லாதவர்கள்; எப்போதும் குணம்; ஆனால் அதனை வேண்டி பெற்றவர்கள்; பரமாத்மா – எப்போதும், குணம் மட்டும் சர்வ சாதாரணமாகவே எப்போதும் குணம் உள்ளவர் (தொல் புகழ்); இராணவனை கொன்ற பிறகு விண்ணவர் வாய் ஓங்கியது ; வேங்கடவன் இராமன்.
2. வந்தித்து அவனை வழி நின்ற ஐம்பூதம் ஐந்தும் அகத்து அடக்கி ஆர்வமாய், உந்திப் படி அமரர் வேலையான் பண்டு அமரர்க்கு ஈந்த, படி அமரர் வாழும் பதி. (26)
திருவேங்கடமுடையான் என்று நேரடியாக ஆழ்வார் சொல்லவில்லை, இருந்தாலும் இதற்கு முந்தய பாசுரம் வேங்கடமே என்று சொன்னதாலும் இதில் பதி என்று சொன்னதாலும் நம் பெரியோர்கள் இந்த பாசுரத்தையும் திருப்பதிக்கே என்று சொல்வார்கள். தேவர்கள் நான் முன்னே, நீ பின்னே என்று தள்ளிக்கொண்டு திருப்பாற்கடலில், எம்பெருமானை வணங்குவது போல், இந்த உலகத்தில் ஸ்ரீவைஷ்ணவர்கள் மற்றும் அந்தணர்களும் வணங்கும் இடமான திருவேங்கடத்தை, நித்யஸூரிகளுக்கும் தந்தான் என்பது கருத்து.
3. பதி அமைந்து நாடிப் பருத்து எழுந்த சிந்தை, மதி உரிஞ்சி வான்முகடு நோக்கி – கதி மிகுத்து அங்கு கோல்தேடி ஆடும் கொழுந்து அது போன்றதே, மால்தேடி யோடும் மனம். (27)
இந்த பாசுரத்திலும் ஆழ்வார் நேரடியாக திருவேங்கடம் என்று சொல்லவில்லை என்றாலும், இதற்கு முந்தய பாசுரம் போல், இதில் பதி என்று சொன்னதால் நம் பெரியோர்கள் இந்த பாசுரத்தையும் திருப்பதிக்கே என்று சொல்வார்கள். ஆழ்வாரது மனமானது திருவேங்கட மலையிலே சென்று சேர்ந்து தன் ஆவல் தோற்றும்படி இருக்கும் திருமாலைத் தேடி, அவன் எங்கேயெங்கேயென்று தன் நினைவு மேலும் சிந்திக்க, மிகவும் வளர்ந்து, மேலே மேலே சென்று திருநாட்டுத் தலைவனைத் தேடி, பரமபதத்தில் வந்து நின்றது; ஆழ்வார், இது, அழகிய கொம்பைத் தேடிக்கொண்டு பரந்து செல்கின்ற கொடியைப் போன்றுள்ளது என்கிறார்.
4. மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான், மற்றும், நினைப்பரிய நீள் அரங்கத் துள்ளான், – எனைப்பலரும் தேவாதி தேவன் எனப்படுவான், முன்னொரு நாள் மாவாய் பிளந்த மகன். (28)
அந்தர்யாமி, அர்ச்சாவதாரம், வியூக நாராயணன், பரமபதம் மற்றும் விபவாவதாரம் என்ற ஐந்து நிலைகளையும் இந்த பாசுரத்தில் ஆழ்வார் கூறுகின்றார். மனத்துள்ளான் என்று முதலில் குறிப்பிட்டு இருந்தாலும், அர்த்த சுவாரஸ்யம் கொண்டு அதனை கடைசியில் எடுத்துக்கொள்ள வேண்டும். திருவேங்கடம், திருப்பாற்கடல், திருவரங்கம், மற்றும் பரமபத நாதன் என்று எல்லோரும் ஆழ்வாரின் மனத்திற்குள் வந்து குடிகொண்டான் என்று கூறுகிறார். மாவாய் பிளந்த மகன் என்பது கண்ணன், கேசி என்ற குதிரைமுகம் கொண்ட அரக்கனை கொன்ற வரலாறு.
5. துணிந்தது சிந்தை துழாய் அலங்கல், அங்கம் அணிந்தவன் பேர் உள்ளத்துப் பல் கால், – பணிந்ததுவும் வேய்பிறங்கு சாரல் விறல் வேங்கடவனையே, வாய்திறங்கள் சொல்லும் வகை. (33)
வேதம் சொல்வது, முதலில் சிந்தை, அதன் பிறகு சொற்கள், இறுதியாக உடல். அதாவது முதலில் சிந்தனையில் வருவது, பின் வார்த்தையாக வருவது, இறுதியில் செயலாக உடம்பு செய்வது. இங்கே ஆழ்வார் சிந்தை, உடல் வார்த்தை என்று வரிசை மாற்றி சொல்வது, அவரது அங்கங்கள் நான் முந்தி, நீ முந்தி என்று திருவேங்கடவனுக்கு சேவை செய்வதற்காக வந்ததால் ஆகும். விறல் வேங்கடவனையே என்று சொல்வதால், அவனை மட்டுமே என்று கொள்ளவேண்டும். துணிந்தது சிந்தை வேங்கடவனையே என்றும், அங்கம் பணிந்தது வேங்கடவனையே என்றும், வாய் திறங்கள் சொல்லும் வேங்கடவனையே என்றும் கொள்ளவேண்டும்.
6. உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று, தளர்தல் அதன் அறுக்கும் சாரார், அளவரிய வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும், பாதத்தான் பாதம் பயின்று. (45)
ஐஸ்வர்யம், கைவல்யம் என்ற இரண்டும் எம்பெருமானிடம் வேண்டக்கூடாது என்றும் அவனிடம் அவனையே கேட்க வேண்டும் என்பதை விளக்கும் பாசுரம். திருவேங்கடமுடையானை வணங்குபவர்கள், செல்வம் உள்ளது என்று பெருமை கொள்ளமாட்டார்கள் என்றும், நேற்று இருந்த செல்வம் இன்று இல்லை என்ற நிலை அடைந்தாலும், தளர்ச்சி அடைய மாட்டார்கள் என்றும் ஆழ்வார் கூறுகிறார். இதையே, உளது என்று இறுமாவார் உண்டு என்று பிரித்து பார்த்தால், பகவத் விஷயம் கிடைத்து என்று இறுமாப்பு கொள்வர் என்றும், அந்த பகவத் விஷயம் கிடைக்கவில்லை என்றால், தளர்தல் அடைவார்கள் என்பதை இல்லை என்று தளர்தல் என்ற சொற்தொடர் மூலமும் கொள்ளலாம்.
7. பயின்றது அரங்கம் திருக்கோட்டி, பன்னாள் பயின்றதுவும் வேங்கடமே பன்னாள், – பயின்றது அணி திகழும் சோலை அணி நீர் மலையே மணிதிகழும் வண் தடக்கை மால். (46)
பக்தர்கள் திருந்துவதற்காக எம்பெருமான் மகிழ்ந்து பல காலங்களாக இருக்கும் இடங்கள் பற்பல திவ்யதேசங்கள் உள்ளன. திருவரங்கம், திருக்கோட்டியூர், திருவேங்கடம், திருமாலிருஞ்சோலை மற்றும் தீருநீர்மலை என்பது சில உதாரணங்கள். அணி திகழும் சோலை என்பது திருமாலிருஞ்சோலை குறிக்கும் என்றோ, அணி திகழும் சோலை அணி நீர் மலையே என்று திருநீர்மலைக்கு சிறப்பாக என்றோ கொள்ளலாம்.
8. நெறியார் குழற்கற்றை முன்னின்று பின்தாழ்ந்து, அறியாது இளங்கிரியென் றெண்ணி, – பிறியாது, பூங்கொடிகள் வைகும் பொருபுனல் குன்றென்றும், வேங்கடமே யாம்விரும்பும் வெற்பு. (53)
திருமலைக்கு செல்பவர்கள், வழியிலேயே குலசேகராழ்வார் “‘வெறியார்தண்சோலைத் திருவேங்கடமலைமேல், நெறியாய் கிடக்கும் நிலையுடையேனாவேனே” சொன்னது போல், மலை ஏறும் வழியில் எம்பெருமானை சிந்தித்து இருக்கும்போது அவர்களின் நீண்ட முடியினை மனித கேசம் என்று எண்ணாது கொடிகள் அவற்றை பற்றி வளர்கின்றன என்று ஆழ்வார் திருவேங்கட மலையை நேசிக்கிறார்.
9. வெற்பு என்று இருஞ்சோலை வேங்கடம் என்று இவ்விரண்டும், நிற்பென்று நீ மதிக்கும் நீர்மைபோல், – நிற்பென்று உளங்கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன், வெள்ளத்து இளம் கோயில் கைவிடேல் என்று. (54)
இளம் கோயில் என்பது திருபாற்கடலைக் குறிக்கும். அங்கிருந்துதான் எம்பெருமான் விபவ மற்றும் அர்ச்சாவதாரங்களை எடுக்கிறான். பெருங்கோவில் என்பது திருநீர்மலை, திருவேங்கடம் போன்ற திவ்யதேசங்களில் வாழும் பக்தர்களின் உள்ளங்கள் ஆகும். ஆழ்வாரின் உள்ளம் கிடைத்தவுடன், எம்பெருமானுக்கு திருப்பாற்கடலை (இளம் கோயில்) விட்டு விடலாம் என்று ஒரு எண்ணம் வந்தது என்று ஆழ்வார் சொல்லி, அதை கைவிட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுகிறார்.
10. போதறிந்து வானரங்கள் பூஞ்சுனைபுக்கு, ஆங்கலர்ந்த, போதரிந்து கொண்டேத்தும் போது,உள்ளம் – போது, மணிவேங்கடவன் மலரடிக்கே செல்ல, அணிவேங்கடவன் பேர் ஆய்ந்து. (72)
திருமலையில் வானரங்கள், திருவேங்கடமுடையானுக்கு அதிகாலையில் பூக்களை பறித்து சமர்பிக்கின்றன என்று பாடுகிறார். முக்கரணங்களாலும் சேவை செய்கின்றன என்றும் ஆழ்வார் சொல்கிறார். பேர் ஆய்ந்து என்பது வாயினால் திருநாமங்களை சொல்வது. ஏத்தும் போது,உள்ளம் என்பது மனத்தினால் ஸ்தோத்திரம் செய்வதை சொல்வது. போது அரிந்து கொண்டு என்பது பூக்களை கைகளால் பறித்துக்கொண்டு வருவதை சொல்வது.
11. பெருகு மதவேழம் மாப்பிடிக்கி முன்னின்று, இருகணி இளமூங்கில் வாங்கி, – அருகிருந்த, தேன்கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர், வான்கலந்த வண்ணன் வரை. (75)
எம்பெருமான் ‘நீர் நல்ல பெருந்தமிழர் என்பதை நாடுநகரமும் நன்கு அறிய ஒரு கவி சொல்லும், பார்ப்போம்‘ என்று கேட்க அதற்காக அப்போது அருளி செய்த பாடல். மதம்பிடித்து திரிந்துகொண்டிருந்த ஒரு யானையானது பெண் யானையை கண்டு, அதனை அப்பாற் செல்லவிடாமல், மூங்கில் குருத்தைப் பிடுங்கித் தேனிலே தோய்த்து அந்த பெண் யானையின் வாயில் பிழிந்து ஒரு இனிய உணவு அதற்கு கொடுத்து அதனை திருப்தி செய்ததாம். இப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு இடமான திருமலையானது எம்பெருமான் உவந்து எழுந்தருளி இருக்குமிடம் என்கிறார். எம்பெருமான் பிராட்டியை உவப்பிக்கும்படி இருப்பதை கூறுதல் இந்த பாடலின் உள்ளுறை பொருள்
மீண்டும் இன்னொரு ஆழ்வார் திருவேங்கடமுடையான் பற்றி பாடிய பாசுரங்களில் சந்திப்போம், நன்றி.