A Simple Devotee's Views
பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம்.
திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே என்று நம் பெரியவர்கள் கூறி உள்ளார்கள். ).
இவற்றில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்து சில பாசுரங்களை முன்பு பார்த்து உள்ளோம். அதனை தொடர்ந்து திருவேங்கடமுடையானை முன்னிட்டு உள்ள மற்றைய பாசுரங்களையும் கொஞ்சம் பார்க்கலாமே என்ற ஆசையில் இந்த வலைப்பதிவுகள். முதலில் முதல் ஆழ்வார்கள், பொதுவாக முதலாழ்வார்களுக்கு வேங்கடமுடையானிடம் அதிக பற்று கொண்டு இருந்தார்கள் என்பதும் அவர்கள் அவனுக்கு நிறைய பாடல்கள் பாடினார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதில் பொய்கையாழ்வார் இயற்றிய முதல் திருவந்தாதியில் இருந்து பத்து பாசுரங்கள்.
ஆழ்வார்கள், எம்பெருமானை விட எம்பெருமானோடு ஸம்பந்தம் பெற்ற பொருள்களையும் உகந்தவைகளாகக் கொண்டு, திருவேங்கடமுடையான் வரையில் கூட போகாமல், அவனுடைய ஸம்பந்தம் பெற்றதான திருமலையோடே நின்று அநுபவிக்கிறார்.
கர்ம ஞான பக்தி பிரபத்தி என்ற வழிகளை பற்றி மோக்ஷம் அல்லது எம்பெருமானை அடையலாம். பெருமாளிடம் பெருமாளை மட்டுமே வேண்டுவது (சரணாகதி மூலம் அவனை அடைவது) – அவரை அவர் மூலமே அடைவது, அவரிடம் அவரை தவிர வேறு எதுவும் வேண்டாதது என்பதை விளக்கும் பாசுரம். திருமலை எல்லாருடைய வினைகளையும் போக்கிப் பலன்களை அளிக்க வல்லது. எழுவார் என்றால் ஐஸ்வர்யார்த்திகளையும் விடை கொள்வார் என்றால் கைவல்யார்த்திகளையும் வழுவாவகை நினைந்து வைகல் தொழுவார் பாகவன்லபார்த்திகளையும் சொல்லி அனைவருக்கும் அருள்பொழியும் இடம் என்கிறார். வானோர் மனச்சுடரைத் தூண்டும் மலை என்று சொன்னது, பரமபதத்திலே பரத்வகுணத்தை அநுபவித்துக்கொண்டிருக்கிற நித்யஸூரிகளை , திருமலை வந்து ஸெளலப்ய ஸெளசீல்யாதி குணங்களை அநுபவிக்குமாறு உள்ள மலை என்று சொல்லி நித்யஸூரிகளுக்கும் அருளும் மலை என்று முடிக்கிறார்.
2. வகையறு நுண்கேள்வி வாய்வார் கள், நாளும் புகைவிளக்கும் பூம்புனலும் ஏந்தி, – திசைதிசையின் வேதியர்கள் சென்றிறைஞ்சும் வேங்கடமே, வெண்சங்கம் ஊதியவாய் மால் உகந்த ஊர் (37)
அடியார்கள் திருவேங்கடமுடையானை தரிசிக்க எல்லா திசைகளில் இருந்தும் வருவார்கள். வெண்சங்கம் ஊதியது பாரதப்போரில், அந்த கண்ணன் உகந்த ஊர். திருவேங்கடத்தான் கண்ணனே என்றும் எம்பெருமானே உகந்து எழுந்தருளிய திருத்தலம் திருவேங்கடம் என்றும் சொல்கிறார்.
3. ஊரும் வரி அரவம் ஒண்குறவர் மால்யானை, பேர எறிந்த பெருமணியை, – காருடைய மின்னென்று புற்றடையும் வேங்கடமே, மேல சுரர் என்னென்ற மால திடம். (38)
குலசேகராழ்வாரைப் போன்ற மஹான்களே திருமலையில் பாம்பாகவும் குறவராகவும் யானையாகவும் புற்றாகவும் பிறந்திருப்பர்கள் ஆகையாலே அப்பொருள்களையும் எம்பெருமானைப் போலவே கொண்டு பொய்கையாழ்வார் தம்முடைய பக்தியை சொல்கிறார். யானையே மேகம் என்றும், அதன் மேல் உள்ள ரத்னமணிகளே மின்னல் என்றும் எண்ணி திருமலையில் உள்ள பாம்புகள் வரப்போகின்ற இடிக்கு அஞ்சி, குகைகளில் ஓடி ஒளியும் என்கிறார்.
4. இடந்தது பூமி எடுத்தது குன்றம், கடந்தது கஞ்சனைமுன் அஞ்ச, – கிடந்ததுவும் நீரோத மாகடலே நின்றதுவும் வேங்கடமே, பேரோத வண்ணர் பெரிது. (39)
ஓயாமல் பிறர் காரியமே போக்காயிருக்கின்ற எம்பெருமானுடைய நீர்மை / எளிமை வருணிக்க முடியாதது. இதற்காக அவன் எடுத்த பல அவதாரங்களை இங்கு ஆழ்வார் குறிப்பிடுகிறார். மஹாப்ரளயத்தில் பூமியை இடர்ந்து எடுத்த வராகன், இந்திரனுடைய கோபத்தால் பொழிந்த மழையில் இருந்து ஆயர்பாடி மக்களை காப்பதற்கு கோவர்த்தன மலையை எடுத்த வரலாறு, கம்சனை கொன்று ஒழித்தது, என்று சொல்லி இந்த அவதாரங்களுக்கு மூலமான அவன் திருப்பாற்கடலில் கண் வளர்ந்தருளவதையும் சொல்லி முடிக்கிறார்.
5. பெருவில் பகழிக் குறவர்கைச் செந்தீ வெருவிப் புனம்துறந்த வேழம், – இருவிசும்பில் மீன்வீழக் கண்டஞ்சும் வேங்கடமே, மேல் அசுரர் கோன்வீழ கண்டுகந்தான் குன்று. (40)
யானைகள், விண்ணில் இருந்து விழும் விண்மீன்களை தவறாக குறவர் எறிந்த தீப்பந்தம் என்று எண்ணி பயந்து இருக்கும் இடம் என்றும், எம்பெருமானுக்கு மங்களாசாசனம் செய்யும் பெரியோர் இருக்கும் இடம் என்று ஆழ்வார் சொல்கிறார். நரசிம்ம அவதாரம் திருவேங்கடம். பாகவத விரோதியான இரணியனைத் தொலைத்துப் பரம பாகவதனான ப்ரஹ்லாதனைக் காத்தருளின, அடியவர்களின்பால் ஒரு தலை பக்ஷமாக இருப்பவன் என்ற மஹா குணத்தை இன்றும் வெளியிட்டுக் கொண்டு ஸேவை ஸாதிக்குமிடம் திருமலை என்கிறார்.
6. உணர்வார் ஆர் உன்பெருமை? யூழிதோ றூழி, உணர்வார் ஆர் உன் உருவந் தன்னை?, உணர்வாரார் விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால்வேதப் பண்ணகத்தாய் நீகிடந்த பால்? (68)
பரவாசுதேவன், விபவம் எடுத்து இந்த மண்ணில் அவதாரம் எடுத்தவன், அர்ச்சைக்கு வேங்கடம், திருப்பாற்கடல் என்று நான்கு நிலைகளை சொன்ன ஆழ்வார் அந்தர்யாமியை சொல்லவில்லை. அது பரவாசுதேவனுடன் சேர்ந்து உள்ளதாக கொள்ள வேண்டும். திருமாலை அறிவதே அறிவு என்று கீழ்ப்பாட்டில் அருளிச்செய்த ஆழ்வார், அறிவுக்கு எல்லை நிலம் எம்பெருமானே என்றும் இருந்தாலும், அவன் தன்மை அறிவார் இல்லை என்று சொல்கிறார். அவனே கூட அவன் தன்மை அறிய மாட்டார் என்பது “தனக்கும் தன் தன்மையறிவரியான்” என்பதின் மூலம் தெரியும்.
7. வழிநின்று நின்னைத் தொழுவார், வழுவா மொழிநின்ற மூர்த்தியரே யாவர், பழுதொன்றும் வாராத வண்ணமே விண்கொடுக்கும், மண்ணளந்த சீரான் திருவேங்கடம் (76)
த்ரிவிக்ரம அவதாரமே திருவேங்கடம். பக்திமார்க்கத்திலே நிலைத்து நின்று அவனை பின்பற்றுபவர்கள், உபநிஷத்துக்களில் சொல்லப் பட்டிருக்கிறபடி தங்களையும் தங்கள் குணநலன்களையும் உடையவர்களாகவே இருப்பார்கள் ; உலகளந்த மஹாநுபாவன் எழுந்தருளியிருக்கிற திருமலையே ஒரு குறையும் இல்லாதபடி மோக்ஷம் அளிப்பதை காண்பதாக ஆழ்வார் கூறுகிறார். எம்பெருமானோடு ஸம்பந்தமுடைய திருமலையே தன்னைப் பற்றினவர்க்கு நற்கதியைத் தரும் வல்லமை உடையதாயிருக்கையில், எம்பெருமானைத் தொழுமவர்கள் நற்கதி பெறுவார் என்று நாம் தனியாக சொல்ல வேணுமோ? என்கிறார். அதாவது, மண்ணளந்த சீரானுடைய திருவேங்கடமே பழுதொன்றும் வராதவண்ணம் விண் கொடுக்குமதாயிருக்க, நின்னை வழி நின்று தொழுமவர்கள் வழுவா மொழி நின்ற மூர்த்தியராவர் என்பது விசேஷித்துச் சொல்ல வேண்டிய விஷயமோ என்று உரையாசிரியர் தெரிவிக்கிறார்.
எம்பார் இப்பாசுரத்தை நாள்தோறும் காலையில் அநுஸந்திப்பது வழக்கமாம். “எம்பார் விடிவோறே அநுஸந்திக்கும் பாட்டு” என்பது பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் குறிப்பிட்டுள்ளார்.
8. வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும், அஃகாத பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும், – நான்கிடத்தும் நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே, என்றால் கெடுமாம் இடர். (77)
ஆழ்வாருக்கு இடைக்கழியில் எம்பெருமான் தன்னை காட்டிக்கொடுத்த இடம் அதனால் திருக்கோவலூர் மட்டும் அடைமொழிகளுடன் சொல்லப்பட்டது. மற்ற திவ்ய தேசங்களுக்குஅடைமொழி இல்லை. விண்ணகர், என்று சொல்லப்பட்டது ஒப்பிலியப்பன் உள்ள திருவிண்ணகரம் இல்லை, ஏனென்றால் அங்கு எம்பெருமான் நின்ற நிலை. பரமேச்சுர விண்ணகரம் அல்லது நந்திபுர விண்ணகரம் அல்லது பரமபதம் என்ற திவ்யதேசங்களில் ஒன்றை இருந்தானுக்கு என்று சொல்லப்பட்டதாக கொள்ள வேண்டும்.
திருமலையும், வைகுந்தமாநகரும், திருவெஃகாவும், பூ மாறாத நீர் நிலைகளையுடைய சிறந்த திருக்கோவலூரும் என்ற இந்த நான்கு திவ்யதேசங்களையும் நிற்பதும் வீற்றிருப்பதும் பள்ளிகொண்டிருப்பதும் நடப்பதுமாக இருக்கிறார் என்று அநுஸந்தித்தால் நமது இடரெல்லாம் நீங்கிவிடும் என்பது கருத்து. நாம் நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் செய்த பாபங்களெல்லாம் போகும் என்பதை குறிக்கும் வண்ணம் எம்பெருமானின் நின்ற, இருந்த, கிடந்த மற்றும் நடந்த நிலை கூறியதாக கொள்ளலாம்.
9. படையாரும் வாட்கண்ணார் பாரசிநாள், பைம்பூந்தொடையலோடு ஏந்திய தூபம், இடையிடையின் மீன்மாய மாசூணும் வேங்கடமே, மேலொருநாள் மான்மாய எய்தான் வரை. (82)
கூரான கண்(அறிவு, ஞானம்) – இடை – உறுதியான வைராக்கியம்- மார்பு (பக்தி); எல்லா ஜீவாத்மாக்களும் பெண்களே! இராமன் திருவேங்கடத்தில் உள்ளான் முன்னொரு காலத்திலே ஸ்ரீராமாவதாரத்திலே மாரிசன் என்ற மாயமான் இறந்துபோகும்படி அம்பு விட்ட ஸ்ரீ ராமபிரான், வாசம் செய்யும் மலை திருமலை. பாரசிநாள் என்பது துவாதசி நாளை குறிக்கும். திருவாராதனத்திற்கு உபகாரணமாய் இருக்கும் தூபத்தின் வாசம் திருமலை எங்கும் இருக்கும் என்பதும் இந்த பாடலின் மூலம் சொல்லப்பட்டது.
10. உளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தமன் என்றும் உளன்கண்டாய், உள்ளூவார் உள்ளத்து உளன்கண்டாய், வெள்ளத்தி னுள்ளானும் வேங்கடத்து மேயானும், உள்ளத்தின் உள்ளான் என்றோர். (99)
அந்தர்யாமி, திருப்பாற்கடல் திருவேங்கடம் முதலிய இடங்கள் எம்பெருமானுக்கு வசிக்கும் இடங்களாயினும், அவ்விடங்களில் எம்பெருமான் இருப்பதானது, சமயம் பார்த்து ஞானிகளின் மனத்திலே புகுவதற்காகவே ஆகும். ஸ்ரீவசன பூஷணத்தில்— அங்குத்தை வாஸம் சாதனம் ; இங்குத்தை வாஸம் ஸாத்யம்; இது (அடியவர்கள் உள்ளத்தில் புகுந்தால்) நடந்தால், அவற்றில் (மற்ற திவ்யதேசங்களில்) ஆதரம் மட்டமாயிருக்கும் என்று சொல்கிறார். புருஷோத்தமனான எம்பெருமான் எக்காலத்திலும் அடியவர்கள் உள்ளத்தில் இருக்கிறான். திருப்பாற்கடலில் இருப்பவனும், திருமலையில் இருப்பவனும், உகந்தருளின நிலங்கள் எல்லாவற்றிலும் இருப்பது அடியவர்களின் உள்ளத்தில் புகுவதற்காகவே என்றதை தன் மனதிற்கு சொல்கிறார்.
அடுத்து பூதத்தாழ்வார், இரண்டாம் திருவந்தாதியில் இருந்து, அடுத்த பதிவில். நன்றி.