A Simple Devotee's Views
To read this weblog in English, please click here, thanks
திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடிஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.
முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் “கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான்” என்று சொல்லி நம்மை அரங்கனிடம் அழைத்து செல்கிறார்.
அப்படியும் மக்கள் எல்லோரும் ஆழ்வார் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் அவர்களை விட்டு, எம்பெருமான் தனக்கு செய்த மிக பெரிய உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார்.
இதுவரை, எம்பெருமான் தனக்கு கொடுத்த அனுபவத்தை சொல்வது (1-3), தன்னுடைய அனுபவத்தை கொண்டு உபதேசம் செய்வது (4-14), மற்றும் எம்பெருமான் தனக்கு செய்த நன்மைகளை நினைத்துக் கொள்ளுதல்(15-24) என்ற முதல் மூன்று உட்பிரிவுகளை பார்த்த பின் தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை, எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற இந்த நான்காவது பகுதியை இப்போது அனுபவித்து வருகிறோம்.
அதில் உள்ள முதல் பாசுரத்தை, திருமாலையின் 25வது பாடலில் (குளித்து மூன்று அனலை) ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி கூட இல்லை, திருவரங்கன் அந்தத் தகுதி முதல் எல்லாவற்றையும் அருள வேண்டும் கேட்டு கொண்டதை பார்த்தோம்.
சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட கர்ம, ஞான, பக்தி யோகங்கள் இல்லை என்றால், மற்றவர்கள் செய்யக்கூடிய அர்ச்சனை, துதி போன்றவற்றை செய்யலாமே என்று பெரியபெருமாள் கேட்க, அவைகளும் தன்னிடம் இல்லை என்று ஆழ்வார் சொல்வதாக அமைந்த பாசுரம் போதெல்லாம் போது கொண்டு ( 26).
மனிதர்கள் செய்யக்கூடிய எந்த நற்செயல்களையும் ஆழ்வார் செய்யாவிட்டாலும், பரமபதத்தில், அனந்தாழ்வான், கருடன், விஷ்வக்சேனர் மூலம் ஏற்றுக்கொள்ளும் சேவைகளை, விலங்குகளைக்கொண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பி, எம்பெருமான் ராமனாக அவதரித்த காலத்தில், குரங்குகளும், அணில்களும் தங்கள் சக்திக்கு தகுந்தாற் போலும், நல்ல நெஞ்சத்தோடும் செய்தது போல், ஆழ்வாரும் ஏதாவது செய்யலாமே என்று பெரியபெருமாள் வினவ, அதுவும் இல்லை என்று ஆழ்வார் மறுப்பது போல் அமைந்துள்ள உள்ள பாசுரம் குரங்குகள் மலையை நூக்க (27).
குளித்து மூன்று அனலை (25) பாசுரத்தில் மனம், வாய் மற்றும் கை போன்றவைகளைக் கொண்டு சிந்தித்து, பாடி, மலர்களை தூவி, என்ற மூன்று விதமான செயல்களையும் சேர்ந்து செய்து இருக்கிறீர்களா என்று எம்பெருமான் கேட்டதாகவும், அடுத்த பாசுரமான, போதெல்லாம் போது கொண்டு(26) பாடலில், வாயினால் பாடி என்பதை மட்டும் தனியாக கேட்டதாகவும், அடுத்த பாசுரமான குரங்குகள் மலையை நூக்க (27) பாடலில், கை கால் போன்றவற்றைக்கொண்டு சேவை செய்து இருக்கிறீர்களா என்றும், இப்பொழுது பார்க்கப்போகும் பாசுரமான உம்பரால் அறியலாக (28) பாடலில், மனதினால் சிந்தித்து இருக்கிறீர்களா என்பதை தனியாக கேட்பதாகவும் கொள்ளலாம்.
உம்பரால் அறியலாகா ஒளியுளார் ஆனைக்காகி, செம்புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி வந்தார், நம் பரமாயது உண்டே நாய்களோம் சிறுமை ஓரா, எம்பிராற்கு ஆட் செய்யாதே என் செய்வான் தோன்றினேனே. திருமாலை 28
பிரம்மா போன்ற தேவர்களால் கூட, இப்படிப்பட்டது என்று அளவிட்டு அறியமுடியாதபடி, தேஜோமயமான பரமபதத்தில் உள்ள எம்பெருமான், கஜேந்திரன் என்ற யானைக்காக, சிவந்த மாமிசத்தைச் சாப்பிட்டு வாழும்படியான முதலைமேல், கோபித்துக்கொண்டு வந்து அருளினான். இப்படி தம் அடியவர்களைக் காக்கும் பொருட்டு அவன் இருக்கையில், நம்மை காப்பாற்றிக்கொள்ள நமக்கு என்ன பாரம் ? நாய் போல் இருக்கும் நம்மிடத்தில் உள்ள குறைகளை கருத்தில் கொள்ளாமல், இருக்கும் நம்பெருமானுக்கு தொண்டு செய்யாமல், எதற்காக தான் பிறந்தேன் என்று ஆழ்வார் வருந்தும் பாடல்.
குரங்குகள், அணில்கள் சிறு கைங்கர்யங்கள் செய்த போது, அவைகளிடம் இருந்த நல்ல எண்ணம் கூட தங்களிடம் இல்லையாகில், கஜேந்திர ஆழ்வான் என்ற யானை பொய்கையில் இறங்கிய போது, அதன் காலை, முதலை பிடித்துக்கொண்டதால், தளர்வுற்று, எம்பெருமானை தன்னை காப்பாற்றுபவனாக நினைத்தது போல் தாங்கள் நினைத்தது உண்டா என்று எம்பெருமான் கேட்டதற்கு சென்ற பாசுரங்களில் சொல்லியது போல், இங்கும் அது தன்னிடம் இல்லை என்று ஆழ்வார் சொல்கிறார்.
திருமாலையில் ஒரு சில பாசுரங்களில் திருவரங்கன் திருநாமம் நேரடியாக வருவது இல்லை, அது போல் அமைந்த ஒரு பாசுரம் இது.
ஆழ்வார், கஜேந்திர மோக்ஷம் என்ற இந்த நிகழ்வை கீழ்கண்டவாறு பிரித்துப் பார்த்து எம்பெருமானின் பெருமையை விளக்குகிறார்.
இந்த கஜேந்திர மோக்ஷத்தைப் பற்றி மற்ற ஆழ்வார்கள் பாடல்கள் சிலவற்றை இங்கே காணலாம்.
இப்போது உம்பரால் அறியலாக என்ற திருமாலை பாசுர விளக்கத்தை கீழே காண்போம்.
உம்பர் என்று சொன்னது சத்தியலோகம் முதலிய மேல் உலகங்களில் வாழும் பிரம்மன் போன்ற தேவர்களை குறிக்கும்.
அறியலாகா என்பது மிகுந்த ஞானம் பெற்ற பிரம்மன் சிவன் போன்றவர்களும் அறிய முடியாதது என்று சொல்கிறது. பகவத் கீதை (16.14), ‘நானே ஈஸ்வரன், நானே எல்லா போகத்தையும் அடைபவன், இயற்கையாகவே சித்தனாக இருப்பவன், இயற்கையிலேயே பலவான் ஆகவும், சுகத்தை அனுபவிப்பவனாகவும் இருப்பவன் நானே” என்று சொல்கிறபடி, தானே ஈஸ்வரன் என்ற நினைப்பிலுள்ள பிரம்மன், சிவன் போன்றவர்களும் அடைய முடியாததாக மட்டும் இல்லாமல், அறிய முடியாததாகவும் உள்ளது பரமபதம் என்று உரையாசிரியர் சொல்கிறார். அதற்கு அவர்கள் தங்களுக்கு அதிகமான ஞானம் இருந்தாலும், தங்களால் செய்ய முடியாது எதுவும் இல்லை என்ற ஆணவத்துடன் இருக்கிறார்கள் என்பதும், ஆணவத்துடன் உள்ளவர்களுக்கு பரமபதம் இடம் இல்லை என்பதுமே காரணம் என்றும் உரையாசிரியர் சொல்கிறார்.
அடுத்து விஷ்ணு புராணம் 1.9.55ல் பிரம்மா, தேவர்களாலும், முனிவர்களாலும், சங்கரனாலும், தன்னாலும் யாதொன்றை அறிய முடியாத இருக்குமோ அதுவே பரமேஸ்வரனான விஷ்ணுவின் பரமபதம் என்று சொல்வது எடுத்துக் காட்டப்படுகிறது.
ஒளியுளார் என்று சொன்னதில் உள்ள ஒளி என்பது பரமபதத்தையும் ஒளியுளார் என்பது அங்கு நித்யவாஸம் செய்யும் எம்பெருமானை குறிக்கும். சந்தோபநிஷத் (3.13.7)ல், பரமபதத்தில், எம்பெருமானால் படைக்கப்பட்டவை மற்றும் அவரின் படைப்புகளால் படைக்கப்பட்டவை என்ற எல்லாவற்றிக்கும் மேலாக உள்ளதும், தனக்கு மேற்பட்டது ஒன்று இல்லாததுமான இடத்தில் இருந்து ஒளிவிடும் பரஞ்சோதி என்றது, ஒளி என்ற சொல்லுக்கு மேற்கோளாக சொல்லப்படுகிறது.
மஹாபாரதத்தில் ஆரண்ய/வன பர்வத்தில், (136.18.23), மஹாத்மாவான அந்த விஷ்ணுவின் இடம், சூர்யன், அக்னி இவைகளில் ஒளியை விட மிக அதிகமானதும், அந்த ஒளியின் தேஜஸால், தேவர்களும், அசுரர்களும் கூட அதைக் காண முடியாததாக உள்ளது என்றும், அங்கு போனால் மறுபடி இந்த உலகிற்கு திரும்புவதில்லை என்றும் சொல்கிறது.
ஒளியுளார் , என்றது மூன்றாம் திருவந்தாதியில் (51) சொன்ன கலங்காப் பெருநகரம் என்று சொல்லப்பட்ட பரமபதத்தில், நித்யஸூரிகளை அனுபவித்துக்கொண்டு இருப்பவன், சம்சாரத்தில், துன்புற்று இருக்கின்ற ஒரு அடியானை காப்பாற்றுவதற்காக வந்தார்.
இப்படி எல்லை இல்லாத மேன்மை உடையவர், அரைகுலைய, தலைகுலைய (அவசரமாக) காரியம் செய்ய வந்தது, பிராட்டி, திருவடி, திருவனந்தாழ்வான், போன்ற உயர்ந்தவர்களுக்காகவோ என்று பார்த்தால், அது இல்லை என்றும், ஒரு விலங்கிற்காக இப்பாட்டு பட்டார் என்கிறார். உதவின எம்பெருமானின் உயர்வையும், துன்புற்ற யானையின் தாழ்வையும் ஒப்பிட்டால், மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்யாசம் தெரியும் என்பது கருத்து.
ஒரு அடியானை காப்பாற்ற வேண்டும் என்றால், எம்பெருமான் தன்னுடைய மேன்மையையோ, அடியானின் தாழ்ச்சியையோ பார்ப்பது இல்லை. அவர்களுடைய ஆபத்தையும், அவர்களுக்கு தன்னிடம் உள்ள ஒழிக்க முடியாத சம்பந்தத்தையும் மட்டுமே பார்க்கிறான் என்பது இந்த கஜேந்திர வரலாற்றில் இருந்து தெரிய வரும்.
அடியவரின் தாழ்ச்சியைப் பார்க்காவிட்டாலும், அவன் எதிரியையாவது யார் என்று பார்த்தால், அது தன்னை விட தாழ்வான மீன்களை உணவாக கொண்டு ‘வீற்று இருந்து ஏழு உலகும் தனிக் கோல் செல்ல ‘ (திருவாய்மொழி 4.5.1) என்கிறபடி, எல்லா உலகங்களையும் ஆழ்கின்ற எம்பெருமானை போல தனக்கு நிறைவு வந்துவிட்டதாக நினைக்கும் ஒரு நீர்ப்புழுவை எதிர்த்து அல்லவோ வந்தார் என்கிறார். விஷ்ணுபுராணம் (1.9.35)ல் பிரம்மன் சொல்வதாவது, தேவர்களுக்கு துன்பம் வந்தபோது, மேலானவர்களுக்கும் கீழானவர்களுக்கும் என்று எல்லோருக்கும் ஈஸ்வரனாகவும், அசுரர்களுக்கு சத்ருவாகவும் இருக்கும் எம்பெருமான் விஷ்ணுவை சரண் அடையுங்கள் என்பதாகும். பிரம்மன் தனக்கும் மற்ற தேவர்களுக்கும் அசுரர்களாலும் அரக்கர்களாலும் துன்பம் வரும் போது, அந்த துன்பங்களைப் போக்க வேறு புகல் இடம் இல்லாமல், எம்பெருமானை சரண் அடைந்தபோது, அவர், ஹிரண்யகசிபு, இராவணன் போன்ற வலிமை மிகுந்த அரக்கர்களோடு போரிட்டு அவர்களை அழியச்செய்தான் என்றால் அதில் ஆச்சர்யம் இல்லை. ஒரு ஆனை கூப்பிட்டதால், ஒரு முதலைமேல் கோபம் கொண்டு மிகத் தாழ்மையான அதனை ஒரு எதிரியாக கருதிக்கொண்டு அவசரமாக ஓடி வந்தது ஆச்சரியமே என்று உரை ஆசிரியர் சொல்கிறார்.
எம்பெருமான் எப்போதும் சாந்தமானவர். இதை தன் விஷயமாக இருந்தால் எம்பெருமான் சாந்தம் உடையவராக இருப்பர் என்று இராமாயணம், அயோத்தியா காண்டம், 1-10ல் சொல்லப் படுகிறது. ராமாயணம், ஆரண்ய காண்டம், (34-24)ல், இராமன், அரக்கர்களைக் கொல்வதற்காக கடும் கோபத்தை வரவழைத்துக் கொண்டார் என்றும், . அப்படி கோபம் கொண்டவர், பிரளயத்தில் வரும் கோபாக்னியைப் போல் காணவொண்ணாதவராக இருந்தார் என்றும் சொல்கிறது. தன் இயல்பான சாந்தியை மாற்றிக்கொண்டு, தன்னிடம் இல்லாத கோபத்தை வரவழைத்துக் கொள்ளவேண்டும். பிறகு, இராமாயணம் யுத்த காண்டத்தில், (59-136)ல் இராவணனால் காயப்படுத்தப்பட்ட வானரர்களில் சிறந்தவரான ஹநுமானை பார்த்தபோது, இராமன் கோபத்திற்கு வசப்பட்டான் என்று கூறுகிறது. அதாவது அடியார்களிடத்தில் யாராவது அபசாரத்தைக் கண்டால், எம்பெருமான் கோபத்திற்கு வசப்பட்டு விடுவான் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அப்படி கோபத்திற்கு வசப்படும் போது, எதிரி எவ்வளவு தாழ்ந்தவன் என்பதை பார்க்க முடியாது என்பது உண்மை என்பதால் இதில் ஆச்சர்யம் இல்லை என்று உரையாசிரியர் தெரிவிக்கிறார்.
கொடியவாய் விலங்கின் உயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஒன்று உண்டு என்று திருமங்கையாழ்வார் தன் பெரிய திருமொழியில் (5.8.3) சொன்ன இந்த பெருங்குணத்தை தங்களுக்கு தஞ்சமாக கொண்டார்கள்.
இருந்த இடத்தில இருந்து சங்கல்பத்தால் எதிரியை அழிக்கக்கூடிய சக்தியை பெற்ற எம்பெருமான் அவசரம் அவசரமாக மடுக்கரைக்கு ஓடி வந்தது, ஆச்சர்யமே என்று ஆழ்வார் சொல்கிறார். உலகத்தை அழிப்பதாக இருந்தால், இருந்த இடத்தில இருந்து சங்கல்பித்து அழிக்கலாம், ஆனால் அடியவர் ஒருவரின் துயரை துடைக்க, தான் நேரடியாக வந்து தன் கையாலேயே அழிக்காத போது, அவன் சீற்றம் / கோபம் தணியாது என்பது கருத்து. அன்றைக்கு யானைக்கு ஓடி வந்து உதவியது தனக்கே உதவியது போல் ஆழ்வாருக்கு இருந்தது. முதலையின் வாயில் தானே அகப்பட்டது போல், திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழி 5.8.3ல் கொடியவாய் விலங்கு, என்று சொன்னதும் இன்னொரு மேற்கோள் ஆகும். திருமங்கை ஆழ்வாருக்கு வலிக்காவிட்டால், அவர் கொடிய வாய் விலங்கு என்று பாடி இருக்க மாட்டார். அதே போல் தான் தொண்டரடிபொடி ஆழ்வாரும் எம்பெருமான் யானைக்கு உதவியது தனக்கே உதவியது போல் பாடி உள்ளார். அதாவது அடியார்களில் ஒருவருக்கு உதவியது தமக்கு உதவியது போல் என்று எண்ணிக் கொள்ளாவிட்டால் அது வைஷ்ணவம் ஆகாது என்பது இதில் இருந்து வரும் கருத்து. எம்பெருமான் ஆற்றங்கரைக்கு வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை, இருந்தாலும் அவன் வந்தான். அதேபோல், அவனிடம் சரண் அடைந்தவர்க்கு துயரம் என்றால் நிச்சயம் வருவான்.
மேலே சொன்னவை, எம்பெருமானுக்கு அடியார்களிடத்தில் எப்பொழுதும் அதீத பிரியமும், கருணையும் இருப்பதும் அவன் அவர்களுக்காக ஒரு தலை பட்சமாகவும் நடப்பான் என்பதும் புரியும். அப்படி நம்மை காப்பாற்ற அவன் இருக்கும்போது நாம் ஏன் நம்மை காத்துக்கொள்ள வேண்டும் என்று ஆழ்வார் கேட்பதாக இந்த தலைப்பில் உள்ள வார்த்தைகள் அமைந்துள்ளன. மேலும் உரையாசிரியர், எம்பெருமானின் சிறப்பை கீழ்கண்டவாறு எடுத்து சொல்கிறார்.
இருந்தால் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவன் அப்படி இல்லை என்றும் கூறுவது தான் இந்த ‘நம் பரமாயது உண்டே“.
ஆழ்வார் நம்முடைய தாழ்வான நிலையை பார்க்கையில், கஜேந்திரன் என்ற அந்த யானை மிக உயர்ந்த இடத்தில, அதாவது, சனகர் போன்ற ரிஷிகள் ஸ்தானத்தில் வைக்கும்படி அல்லவோ இருக்கிறது என்கிறார். திறந்து கிடைக்கும் வீட்டில் நுழைந்தாலும் விரட்டி அடிக்கும் நாயின் நிலையில் நாம் இருக்கிறோம் என்கிறார். நாயின் உரிமையாளன் தொட்டாலும் உடனே குளித்து தன்னை சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் அளவில், நாம், நாயை போன்ற தாழ்வை உடைய நீசர்கள் என்பது கருத்து.
நாம் எவ்வளவு தாழ்வான நிலையில் இருந்தாலும் நம்முடைய தாழ்ச்சியை பார்க்க கண் இல்லாதவன் என்று எம்பெருமானை ஆழ்வார் கூறுகிறார். விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் அவிஞ்ஞாதா சஹஸ்ராம்ஸு என்ற இரண்டு திருநாமங்கள் வருகின்றன. அவைகளுக்கு அர்த்தம் சொல்லும் போது, அடியார்களின் குற்றங்களை காண முடியாத அவிஞ்ஞாதாவாக இருக்கிறான் என்றும் குணங்களை ஆயிரம் மடங்காக்கி எடுத்து கொள்ளும் சஹஸ்ராம்ஸுவாக இருக்கிறான் என்றும் சொல்வார்கள். இதையே சற்று மாற்றி அடியார்களின் குற்றங்களை காண முடியாத அவிஞ்ஞாதாவாக இருக்கிறான் என்றும் அந்த குற்றங்களையே குணங்களாக மாற்றி, அதையும் ஆயிரம் மடங்காக்கி எடுத்து கொள்ளும் சஹஸ்ராம்ஸுவாக இருக்கிறான் என்றும் சொல்வதுண்டு. எல்லாம் அறிந்தவன் என்று அறியப்படும் எம்பெருமானை எதற்காக தோஷங்களை அறியாதவன் என்று ஆழ்வார் சொல்கிறார் என்று கேட்டு கொண்டு, முண்டகோபநிஷத் (1-1-10) சொல்வதை முதலில் சொல்லி உரையாசிரியர் கீழ்கண்ட விளக்கம் தருகிறார். எந்த பரம புருஷன் எல்லா பொருள்களுடைய ஸ்வரூபத்தையும், குணத்தையும் (ஸ்வாபம்) அறிகிறானோ, எவனுடைய சங்கல்பம் ஞானமயமாக இருக்கிறாதோ என்று சொல்வதன் மூலம், பரம்பொருள் எல்லாவற்றையும் அறிகிறான் என்பதே முண்டகோபநிஷத் 1.1.10ல் சொல்லப்பட்டது. எம்பெருமான் அடியவர்களின் தோஷங்களை கண்டு கொண்டு, அவற்றை பொறுத்து உதவி செய்வபனாக தன்னை நினையாமல், தோஷங்களை காண கண்ணிட்டு அவற்றை பாராமலோ, அவற்றை நன்மைகளாக / குணமாகக் கொண்டோ அருள் பாலிக்கிறான் என்று பொருள்.
எம்பிராற்கு என்பதை தனியாக எடுத்துக் கொண்டு விளக்கத்தை காண்போம். இப்படி நம் குற்றத்தை கண்டுகொள்ளாமல், ஆபத்தையே காரணமாகக் கொண்டு நம்மை காப்பது என்று நமக்காக வகுத்த எம்பெருமான் என்பதை எம்பிராற்கு என்று சொல்கிறார். எம் என்பது தன் ஸ்வரூபத்திற்கு தகுந்த ஸ்வாமியாக இருப்பதையும், பிராற்கு என்பது உதவி செய்பவன் என்றும் கொள்ளலாம்.
இப்படிப்பட்ட எம்பெருமானுக்கு தொண்டு செய்வது அல்லவோ தகுந்தது. நம்முடைய காரியத்தை எம்பெருமான் தன்னுடைய பொறுப்பாக ஏற்றுக்கொண்ட பின்னர், நாம் நம்முடைய சரீரம், உடம்பின் உறுப்புகள் (இந்திரியங்கள்) நமக்கு என்று விதிக்கப்பட்ட பகவத் கைங்கர்யத்திற்கு உட்படுத்துவது அல்லவோ தகுந்த செயல். அப்படி செய்யாமல், இருக்கிறேனே என்று ஆழ்வார் வருந்துகிறார்.
இங்கு, ஆழ்வார், பயனற்ற பிறப்பை உடையவன் ஆனேன் என்று சொல்கிறார். பிறவி எடுத்த பயன் எம்பெருமானுக்கு தொண்டு செய்வதே, ஆனால், தான் அதை செய்யாமல், தன்னுடைய பிறப்பு வீணானதே என்று சொல்கிறார். இதற்கு மேற்கோளாக, “லக்ஷ்மணன் வனவாசத்திற்கே பிறந்தவன் என்றும், இராமனுக்கு சேவை செய்யவே பிறந்தவன்” என்றும், லட்சுமணனுக்கு சுமித்ராதேவி சொன்ன வார்த்தைகள் (இராமாயணம் அயோத்திய காண்டம் 40.5) சொல்லப்படுகின்றன. அதே போல் (இராமாயணம் அயோத்திய காண்டம் 31.25) லக்ஷ்மணன் இராமனிடம் “தேவரீர் உறங்கும் போதும், விழித்திருக்கும் போதும் தங்களுக்கு எல்லாவிதமான தொண்டுகளும் செய்வேன்” என்று சொன்னவற்றை ஆழ்வார் நினைவு படுத்தி, அப்படி லக்ஷ்மணனைப்போல் எம்பெருமானுக்கு சேவை செய்ய ஆசை கொண்டு இருந்தால் பிறந்தேன் என்று சொல்லலாம். தம்முடைய பிறப்பு உயிர் இல்லாத, அறிவு இல்லாத ஜடபொருட்கள் போல் ஆனதால், தோன்றினேன் என்று ஆழ்வார் கூறுகிறார். முன் பாடலில் சொன்ன மாதிரி, தீய கோள்கள் வானில் வருவதை, தோன்றின என்று கூறுவது வழக்கம், அதுபோல், தான் பிறந்ததும், தீய கோள் போல், எம்பெருமானுக்கு சேவை செய்யாமல் வீணாகிவிட்டதே என்று கூறி இந்த பாடலை முடிக்கிறார்.
இனி, அடுத்த பாசுரத்தில் மீண்டும் சந்திக்கலாம், நன்றி.