A Simple Devotee's Views
புண்டரீகவல்லி ஸமேத புருஷோத்தமன் திருவடிகளே போற்றி போற்றி !!
திவ்யதேசம் | திருகண்டமென்னும் கடி நகர் / தேவப்ரயாகை / சுதர்சன க்ஷேத்திரம்’ | |||
மூலவர் | நீலமேகப்பெருமாள் / புருஷோத்தமன் / ரகுநாத்ஜி | |||
உத்ஸவர் | ||||
தாயார் | புண்டரீகவல்லி தாயார் / சீதாப்பிராட்டியார் / விமலா | |||
திருக்கோலம் | நின்ற திருக்கோலம் | |||
திசை | கிழக்கு | |||
பாசுரங்கள் | 11 | |||
மங்களாசாசனம் | பெரியாழ்வார் 11 | |||
தொலைபேசி |
வடநாட்டு திவ்யதேசங்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பை இங்கே காணலாம் நன்றி.
Google Map
திருக்கண்டமென்னும் கடிநகர் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
கோவில் பற்றி
கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 அடி உயரத்தில் தேவப்ரயாகை அமைந்திருக்கிறது. ஹரித்துவாரில் இருந்து பத்ரிநாத் செல்லும் வழியில், ரிஷிகேஷில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவிலும் பத்ரிநாத்தில் இருந்து சுமார் 290 கிமீ தொலைவிலும் உள்ளது. இந்த வழியில் ஐந்து புண்ணிய சங்கமங்கள் இருக்கின்றன. அலகநந்தா நதியுடன் பாகீரதி சங்கமமாகும் தேவப்ரயாகை ( ரிஷிகேஷில் இருந்து 70 கிமீ ) ; அலகாநந்தாவுடன் மந்தாகினி சங்கமிக்கும் ருத்ரப்ரயாகை (140 கிமீ) ; அலகநந்தாவுடன் பிண்டர்நதி சேரும் கர்ணப்ரயாகை (170 கிமீ); அலகநந்தாவுடன் நந்தாகினி சேரும் நந்தப்ரயாகை (190 கிமீ) ; அலகநந்தாவுடன் கருடகங்கா என்ற தௌலி நதி சேரும் விஷ்ணுப்ரயாகை (260 கிமீ) என ஐந்து ப்ரயாகைகள் ( பஞ்ச ப்ரயாகை) பத்ரிநாத்திற்கு முன்பு உள்ளன. தேவப்பிரயாகை அலஹாபாத்தின் திரிவேணி சங்கமம் போன்று வழிபடப்படும் வரும் ஒரு புண்ணிய சங்கமம் ஆகும். அமைதியாக நகர்ந்து பச்சை நிறத்துடன் வரும் பாகீரதியும், ஆக்ரோஷமாக சீறிப் பாய்ந்து இளம் சிவப்பு நிறத்துடன் வரும் அலகநந்தாவும் சங்கமிக்கும் காட்சி நம்மைப் பரவசப்படுத்துகிறது. சங்கமத்துக்குப் பிறகு ‘கங்கை’ எனப் பெயர் மாறுகிறது.
ப்ரயாகை என்றால் சங்கமிப்பது; இங்கு பாகீரதியும் அலகநந்தாவும் சங்கமிப்பதாலும், இங்கு பிரம்மா, விஷணுவே தேவன் என்று அவருக்காக சிறந்த யாகத்தை செய்ததாலும், இந்த இடத்தை இந்திரனே பாதுகாப்பதாலும், இது தேவப்ரயாகை என்று பெயர் பெற்றது.
ப்ர என்றால் சிறந்த யாகம் அல்லது வேள்வி என்று பொருள். மிகச் சிறந்த யாகத்தை பிரம்மன் இங்கு துவங்கியதால் இவ்விடத்திற்கு ப்ரயாகை என்னும் பெயராயிற்று. ஸ்ரீமந் நாராயணனையே தேவனாக கருதி இவ்விடத்தில் யாகம் செய்யப்பட்டதால் தேவப்ரயாகை என்றாயிற்று என்று கூறுவார்கள். பிரம்மன், பரத்வாஜர், தசரதன் ஆகியோருடன் ஸ்ரீராமபிரானும் இங்கு தவம் செய்ததாக வரலாறு. ராவணனைக் கொன்ற பாவம் நீங்குவதற்காக ஸ்ரீராமன் இங்கே தவம் செய்ததாக ஐதீகம். தேவலோகத்திற்குச் சமானமான சக்தி இவ்விடத்தில் பரவியிருப்பதால் தேவப்ரயாகை என்றும் சொல்வர்.
கண்டம் என்றால் ஒரு பகுதி என்றும் கடி என்றால் மணம் கமழும் என்றும் அர்த்தம். மணம் கமழும் பகுதி என்று ஆழ்வாரால் பாடப்பட்ட பகுதி, கண்டம் எனும் கடி நகர் ஆகும்.
கடி என்றால் ஒரு நொடி பொழுது என்றும் இந்த திவ்யதேசத்தில் ஒரு நொடி பொழுது இருந்தால் எல்லா ஜென்மங்களிலும் செய்த பாவங்களை போக்கி விடும் என்று ஓர் அர்த்தம் சொல்வார்கள்; 108 திவ்யதேசங்களில் இப்படி சொல்லப்பட்ட திவ்யதேசங்கள் மூன்று, அவை, கண்டமெனும் கடி நகர், திருக்கடிகை, திருக்கடித்தானம் (மலையாள திவ்யதேசம்) ஆகும்.
இங்குள்ள ஆலயத்தில் எழுந்தருளியிருப்பவர் ஸ்ரீராமன். இவரை ரகுநாத்ஜீ என்று அழைக்கிறார்கள். சுமார் 72 அடி உயரத்துடனும், உச்சியில் கூம்புவடிவத்துடனும் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. ஸ்ரீராமன் திருவடி பதித்த பாறை ஒன்றும் இங்கிருக்கிறது. ஸ்ரீராமன் இந்த இடத்தில் தசரதருக்கு பிண்டதானம் கொடுத்தாராம். ஸ்ரீரகுநாதரின் ஆலயத்துக்கு அருகில் பத்ரிநாதர், கால பைரவர், ஹனுமான் மகாதேவர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. சஞ்சீவ பர்வதம் தாங்கிய ஹனுமனும் காட்சி அளிக்கிறார். இந்த கோவிலில் உத்சவர் உண்டு. ஆண்டுக்கு பத்து நாட்கள் உற்சவம் காண்கிறார்.
ஆதி சங்கரர் நிறுவிய கோவில் ரகுநாத்ஜி மந்திர் என்று கூறப்படும். ஸ்வாமி ராமானுஜரும் மங்களாசாசனம் செய்த க்ஷேத்திரம் ஆகும்.
இங்கு அடியேனுக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தைச் சொல்ல ஆசைப்படுகிறேன். இந்த சங்கமத்தில் அடியேன் தர்ப்பணம் செய்ய உதவிய குருஜிக்கு / ஆச்சர்யனுக்கு, தர்ப்பணம் செய்துவைத்த பின் ஒரு சிறு காணிக்கையை சமர்பித்தேன். அவர் அதில் ஒரு பாதியை எடுத்துக்கொண்டு, மீதியை 300 படிகள் மேல உள்ள மெயின் ரோட்டில் உள்ள கிராம அலுவலத்தில் கட்டி விட்டு செல்லுங்கள் என்று சொன்னார். நாங்கள் சென்றது நவம்பர் மாதம் (2014), பனி குளிர் மழை இருந்த நிலைமை. அப்படி செய்த அந்த குருஜியை பார்த்து எங்களுக்கு ஆச்சர்யம். இன்னும் ஒரு வாரத்தில் அந்த பக்கம் வரும் பக்தர்கள் சுத்தமாக நின்று விடுவார்கள், ஆறுமாதம் சென்ற பிறகு, கோடை காலத்தில் தான் ஏப்ரல், மே முதல் மறுபடியும் பயணிகள் வருவார்கள். கீழே அடியேன் கொடுத்துள்ள படங்களை பார்த்தாலும் எங்களைத் தவிர வேறு யாரும் அந்த சமயத்தில் அங்கு இல்லை என்பது தெரியும். இருந்தாலும் அந்த குருஜியின் நேர்மை எங்களை ஆச்சர்யப்பட வைத்தது. அதைவிட ஆச்சர்யம் , அவர் சொன்ன காரணம். ‘இன்னும் ஆறு மாதத்திற்கு பயணிகள் வரமாட்டார்கள், என்னை போன்று இங்கு இருக்கும் குருமார்களை இந்த கிராம மன்றம் தான் வரும் ஆறு மாத்திற்கு காப்பாற்ற வேண்டும். அதனால் அவர்களிடம் கொடுப்பது தான் முறை’ என்றார். எங்கள் கண்கள் கலங்கியது உண்மை. அவருக்கு நன்றி சொல்லி, இன்னும் கொஞ்சம் பணத்தையும் எடுத்து அதையும் அவர் முன்பே இரண்டாக பிரித்து அவருக்கு ஒரு பங்கும், அந்த அலுவலத்தில் இன்னொரு பங்கும் செலுத்துவிட்டு வந்தோம். தேவப்பிரயாகை ஏன் இன்னும் புண்ணியபூமியாக இருக்கிறது என்று உணர்ந்து கொண்டு எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.
ஸ்தலபுராணம்
தேவேந்திரன் ப்ரயாகையைப் பாதுகாக்கிறான் என்றும், இங்குள்ள ஆலமரம் தான்
ப்ரளய காலத்தில் அழியாமல் இருக்கும் என்றும், அதன் இலையில் தான் எம்பெருமான் குழந்தையாக பள்ளிகொள்வார் என்றும் மத்ஸய புராணம் கூறுகிறது.
பாண்டவர்கள், அவர்கள் சகோதரர்களைக் கொன்ற பாவத்தைப் போக்க ப்ரயாகையில்
நீராட வேண்டும், ப்ரயாகை சகல பாவத்தையும் போக்கிவிடும் என்று மார்க்கண்டேயர் கூற, பாண்டவர்கள் அவ்விதமே செய்தனர் என்பது வரலாறு. அப்படி சொல்லப்பட்ட சங்கமம், இந்த தேவபிரயாகையா அல்லது கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் அலகாபாத் அருகில் உள்ள திருவேணிசங்கமமா என்ற ஒரு கருத்தும் உள்ளது.
பிரம்மா, இவ்விடத்தில் செய்த யாகத்திற்குப் பின்பே தனது படைக்கும் தொழில் சக்தியை அதிகரித்துக் கொண்டாராம். பரத்வாஜர் இங்கு யாகம் செய்தே, சப்தரிஷிகளுள் ஒருவராக ஆனார்.
ஸ்தலவரலாறு மற்றும் ஆழ்வாருக்கு கிடைத்த அனுபவம் பற்றி மேலும் ஆழ்வார் பாடல்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ஆழ்வார்
பெரியாழ்வாரால் 11 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம் இது. இந்த பதிகத்திற்கு முன்பு ஆழ்வார், எம்பெருமான் உகந்து அருளிய திருக்கோட்டியூர் திருமாலிரும்சோலை முதலிய திவ்ய தேசங்களையும், அவற்றில் எழுந்தருளி இருக்கின்ற எம்பெருமான்களின் நிலையை அனுபவத்தாற்போல், வடநாட்டு திவ்யதேசமான கண்டமெனும் கடிநகர் திவ்யதேசத்தையும் திவ்யதேச எம்பெருமானையும் அனுபவிக்கும் பதிகம். தோஷங்கள் கூடிய இந்த சம்சாரத்தில் இருந்து நம்மை திருத்துவதற்காக எம்பெருமான் த்ரிவிக்ரம அவதாரத்தின் போது, தன் திருவடிகளை தீண்டிய ஏற்றத்தாலே, சகல லோக பாவனத்துடன் எல்லாக் காலங்களிலும் பிரவாகமாக ஓடிக்கொண்டு இருக்கும் கங்கைநதியின் கரையில் எழுந்தருளி இருக்கும் புருஷோத்மனையும், இந்த திவ்யதேசத்தின் வைபவத்தையும் பெருமையாக பேசி இந்த பத்து பாசுரங்களில் அனுபவிக்கிறார். இந்த பாடல்களை எங்கே இருந்து கொண்டு படித்தாலும், இந்த திவ்யதேசத்திற்கு வந்து கங்கையில் நீராடி, எம்பெருமானின் திருவடிகளில் சேவை செய்த பலனுக்கு ஈடாகும் என்று ஆழ்வார் சொல்கிறார்.
ஒவ்வொரு பாடலிலும் எம்பெருமானின் பெருமையும், கங்கையின் பெருமையும் சேர்த்து சேர்த்து சொல்லியிருக்கிறார்.
பாடல் | எம்பெருமானைப் பற்றி ஆழ்வார் சொல்வது | கங்கையைப்பற்றி ஆழ்வார் சொல்வது |
1 | தங்கையாகிய சூர்பனகைக்கு மூக்கையும் தமயனாகிய இராவணனுக்கு தலையையும் அறுத்த நம் சக்கரவர்த்தி திருமகன், அயோத்தியில் எழுந்தருளி, எல்லா இடங்களிலும் தன்னுடைய கீர்த்தி விளங்கும்படி பத்தாயிரம் ஆண்டுகள் அரசாண்ட நம் புருஷோத்தமனுக்கு அமைவிடம் இந்த திருத்தலம். சர்வலோகத்திற்கும் தாயாகவும் தந்தையாகவும் இருக்கும் பிராட்டியையும் எம்பெருமானையும் முறையில் விரும்பாமல், முறைகேட விரும்புவர்களுக்கு கிடைக்கும் பலன் இது என்று ஆழ்வார் கூறுகிறார். பிராட்டியை தள்ளி, (உபேக்ஷித்து) எம்பெருமானை விரும்பிய சூர்பனகைக்கு மூக்கு போனது; எம்பெருமானை தள்ளி, பிராட்டியை விபரீதமாக அபகரித்த இராவணனுக்கு உயிரே போனது. “எம் தாசரதி போய் எங்கும் தன் புகழா இருந்து அரசாண்ட எம் புருடோத்தமன்” என்று சொன்னது, மனிதனாக திருஅவதாரம் செய்தபோதும், பரத்வத்தை சொல்வதற்காக என்று கொள்ளலாம். எம்பெருமானை விட, அவன் இருக்கின்ற திவ்யதேசத்தை ஆழ்வார் கொண்டாடுகிறார். | “கங்கை கங்கை என்ற வாசகத்தாலே கடு வினை களைந்திடுகிற்கும் கங்கை” என்று சொல்லி, எங்கே ஸ்னானம் செய்யும் போது கங்கை என்று சொல்லி கொண்டால் கூட பாவங்களை போக்கும் சிறப்பு மிக்க கங்கை என்று ஆழ்வார் சொல்கிறார். |
2 | த்ரிவிக்ரம அவதாரத்தின் போது எம்பெருமான் வளர்ந்த வேகத்தைப் பார்த்த சந்திர சூரியன் அஞ்சியபடியேயும், நீல நிறத்தில் ஒரு திருவடியால் பூமி முதலான கீழ் உலகங்கள் எல்லாவற்றையும், இன்னொரு திருவடியால் மேலுலகங்கள் அனைத்தையும் அளந்து தானே எல்லா உலகங்களுக்கும் சேஷி என்றபடியேயும் காட்டிய புருஷோத்தமன் இருக்கும் இடம் இந்த திவ்யதேசம் என்கிறார். | எம்பெருமானின் திருவடிகளில் திருத்துழாயும் அவன் திருவடிகளை விளக்கின தீர்த்தத்தை தலையில் தரித்துக்கொண்டு சிவபெருமானின் சிரஸில் இருந்த கொன்றை மலர்களும் கலந்து வானில் இருந்து பூமிக்கு வரும் கங்கை நதியின் கரையில் உள்ள கண்டமெனும்கடி நகர் என்கிறார். |
3 | த்ரிவிக்ரம அவதாரத்தின் போது எம்பெருமான், பாஞ்சசன்யமாகிய சங்கினை தன்னுடைய திருவதரங்களில் வைத்து ஒலி எழுப்பி, தீயை பொழிகின்ற சக்கரத்தை இன்னோரு திருக்கரத்தில் ஏந்தியபடி நமுசி முதலிய அசுரர்களின் தலைகளை உருட்டி ஏறிந்தவனாகவும் நம்போன்ற பக்தர்களை காப்பவனாகவும் இருக்கின்ற நம் புருஷோத்தமன் உறையும் இடம் இந்த திவ்யதேசம் என்கிறார். | எம்பெருமானின் திருவடிகளை சுத்தம் செய்யும் பிரம்மனின் கைகளிலும், பிறகு சிவபெருமானின் சிரசிலும் பட்ட நீரானது வரும் வழியில் ஒளி தரும் இரத்தினங்களை சிதறியபடி ஓடும் கங்கையின் கரையில் உள்ள கடிநகர் என்கிறார். |
4 | இந்திரன் போன்ற தேவர்கள் செருக்குடன் அரசாளும் படியாக, அவர்களுக்கும் தனக்கும் எதிராகவரும் சேனைகளை யமலோகம் செல்லும்படி நாந்தகம் என்ற வாளை ஏந்திக்கொண்டு உள்ள எம் புருஷோத்தமன் உறையும் இடம் என்கிறார். | ஹிமவானிடத்தில் தொடங்கி, கடலளவும் இரண்டு கரைகளில் புரண்டு ஓடும் நீரில் ஸ்னானம் முதலியவை செய்து தங்களுடைய பாவங்களை போக்கிக்கொள்கிற மனிதர்களுக்கு உதவும் கங்கை என்று அதன் புகழ் பாடுகிறார். |
5 | கலப்பையையும் உலக்கையையும் ஸ்ரீ சார்ங்கம் என்ற வில்லினையும் அழகிய ஒளிபொருந்திய திருவாழியையும் ஸ்ரீ பாஞ்சசன்யத்தையும் கோடாரியையும், ஸ்ரீ நந்தக வாளையும் தன்னுடைய பக்தர்களின் விரோதிகளை அழிக்கும் ஆயுதங்களாக தானே ஏந்தி கொண்டு அதில் பெருமையும் படும் எம் புருஷோத்தமன் உறையும் இடம் என்கிறார். | அநேக ஜென்மங்களில் கூடி திரண்ட பாவங்களை எல்லாம் ஒரு நொடி பொழுதில் தன்னுடைய ஜலத்தினாலே கழுவி விடும் பெருமை உடைய கங்கை என்கிறார். |
6 | இந்திரனின் ஏவல்படி, சமுத்திரம் அளவு தண்ணீரை ஏந்திக்கொண்டு மேகங்கள், திருவாய்ப்பாடியில் வந்து, கேட்டவர்கள் குடல் குழம்பும்படி இடித்து சப்தம் செய்து, சலசலவென்று குடத்தில் இருந்து கொட்டுவது போல் தொடர்ந்து ஏழு நாட்கள் பெருமழையாக பெய்து கொண்டு இருக்க, மேகங்களின் பகைமையையும் திருவாய்ப்பாடியில் உள்ளவர்களின் எளிமையும் கண்டு, அவர்கள் மேல் ஒரு மழைத்துளி, ஒரு கல், ஒரு இடி இவை எதுவும் விழாமல், ஒரு குன்றினை குடையாகப் பிடித்து தான் அவதரித்த தேசமான மதுராவில், கம்சனை கொன்று, தாய் தந்தையரை விடுவித்து, அங்குள்ளோரையும் நன்றாக வாழ வழி செய்த எம்பெருமான், புருஷோத்தமன் என்ற திருநாமத்துடன் கண்டமெனும்கடி நகரில் வாசம் செய்கிறான் என்கிறார். | பல யாகங்களை செய்த மேன்மையான முனிவர்கள் அலை அடித்துக்கொண்டு இருக்கும் கங்கையில் ஸ்னானம் செய்யும் போது, யாகம் நடக்கும் இடத்தில் இருக்கும் கலப்பை போன்ற உபகரணங்களை ஆற்றில் தள்ளிக்கொண்டு போகும் கங்கை என்று கூறுகிறார். |
7 | கம்சனின் வில்விழவிற்கு என்று சென்று அந்த ஆயுதசாலையில் கம்சனுக்கு பிடித்த வில்லினை உடைத்து, வேழத்தை முறுக்கி அதன் குவலயாபீடத்தை உடைத்து துவம்சம் செய்து, சாணுரமுஷ்டிகரான மல்லர்களின் உடல் நொறுங்கி விழும்படி செய்து பிறகு கம்சனை கீழேபிடித்து தள்ளி தன் திருவடிகளால் உதைத்து கொன்று விட்ட புருஷோத்தமனுக்கு உகந்த தேசம் இந்த கண்டமெனும்கடி நகர் என்கிறார். | ஐராவதத்தின் மத ஜலமும், சொர்க்கத்தில், என்றும் இளமை குறையாத தேவ மகளிர் அணிந்த சாந்தும், கற்பகமலரும் எல்லாம் சேர்ந்து ஓடி வருகின்ற கங்கை என்று இந்த பாசுரதத்தில் சொல்கிறார். |
8 | கடல் சூழ்ந்து திண்மையான மதிளை உடைய துவராகையின் இராஜாவான எம்பெருமான், தன்னையே தங்களுக்கு துணையாகவும், பலமாகவும், காதலாகவும் பற்றிக்கொண்டு உள்ள தன்னுடைய மைத்துனர்களான பாண்டவர்களுக்கு ஒரு தலை பட்சமாக இருந்து, அவர்களிடம் இருந்து சூழ்ச்சி செய்து, சூதில் பறித்துக்கொண்ட இராஜ்யத்தில் பத்து ஊர், ஒரே ஒரு ஊர் என்று எல்லாம் கேட்டு, அவை மறுக்கப்பட்ட பிறகு, துரியோதனன் முதலான கௌரவர்களுக்கு தோல்வியைக்கொடுத்து, ராஜ்ஜியத்தை பாண்டவர்களுக்கு கொடுத்து அருளும், கண்ணபிரான், கண்டமெனும் கடி நகரில் புருஷோத்மனாக சேவை சாதிக்கிறான் என்கிறார். தன்னை பற்றிக்கொள்பவர்களுக்கு சகல பாவங்களையும் போகச்செய்து விடுகிறான் என்பது கருத்து. | பசுக்கள் கட்ட உள்ள ஸ்தம்பங்கள் இடைவிடாமல் இருக்கும் கங்கைக்கரை, வேள்வி அல்லது யாக புகை இரண்டு கரைகளிலும் மணம் கமழ்கின்ற கங்கைக்கரை என்று அடைமொழி கொடுத்து அங்கே இருக்கும் இந்த திவ்யதேசம் என்று பெருமையுடன் கூறுகிறார். |
9 | தென் திசை மதுரையில் இருந்து வேறுபட்டு இருக்கும் வடக்கு திசையில் உள்ள மதுரா, நித்ய வாசஸ்தலமான ஸ்ரீவைகுந்தம், புண்ணிய க்ஷேத்திரங்களில் பிரதானமாக கருதப்படும் முக்திநாத், நர நாராயணனர்களாய் தோன்றி திருமந்திரத்தை உபதேசித்து உகப்புடன் எழுந்து அருளி இருக்கும் பத்ரிநாத், பதினாறாயிரவர் தேவிமாராய் சேவை செய்ய மணவாளராய் வீற்று இருந்த துவாரகா, அயோத்தி நகருக்கு அதிபதி எனும் பெயர் பெற்ற அயோத்தியா, இவற்றையெல்லாம் தன்னுடைய வாசஸ்தலமாக கொண்ட எம்பெருமான் புருஷோத்தமன் இருக்கும் இடம் கண்டமெனும்கடினகர் என்கிறார். | பகிரதன் தவபலத்தாலே வருகின்ற வேகம், உயர்ந்த நிலத்தில் இருந்து பல மலைகளை கடந்து வருகின்ற வேகம், வானத்தில் இருந்து குதிக்கின்ற நீரின் வேகத்தால் பூமி விண்டு இடிந்து விழுங்கின்ற தன்மை, கரைகளில் உள்ள மரங்களை மோதி முறித்து அடித்து செல்கின்ற வேகம், ஒன்றாலும் கலங்காத கடலும் கலங்கும் தன்மை என்று கங்கையின் பெருமைகளைக் குறிப்பிடுகிறார். |
10 | விஷ்ணு, லக்ஷ்மி நித்ய வாசம் செய்யும் பரம் என்னும் ஸ்ரீவைகுந்ததை அடைவதே தமக்கு உபாயம், அதுவே ஜீவாத்மாவின் கடன் என்று எண்ணி முக்தியை ஏற்றுக் கொண்டு இருப்பவர்களிடம் இரக்கமுடைய எமது புருடோத்தமன், நின்று, அமர்ந்த, கிடந்த, என்று மூன்று நிலைகளில், கங்கைக் கரைமேல் அமைந்துள்ள கண்டமென்னும் கடிநகரில் எழுந்து அருளி உள்ளான் என்பது ஒரு பத்தாவது பாடலுக்கான ஒரு சிறிய விளக்கம். *** | அழகான நல்ல நறுமணம் கமழும் பொழில் சூழ்ந்த கங்கைக்கரை |
*** | இந்த பாசுரத்திற்கு நம் உரையாசிரியர் கொடுக்கும் விளக்கம் இன்னும் ஆழ்ந்த பொருள்களை உள்ளடக்கி உள்ளது. அதனை புரிந்துகொள்ள அடியேன் முயற்சி செய்து உள்ளேன்; ஆனால் அவை இன்னும் முற்றுப்பெறவில்லை, இன்னும் முயற்சி தேவையாக உள்ளது என்பதே நிதர்சனம். மூன்றெழுத்து அதனை மூன்றெழுத்து அதனால் மூன்றெழுத்தாக்கி மூன்றெழுத்தை, ஏற்று கொண்டிருப்பார்க்கு இரக்கம் நன்குடைய எம்புருடோத்தமன் இருக்கை மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்று உருவானான், கான்தடம் பொழில்சூழ் கங்கையின் கரைமேல் கண்டமென் னும்கடி நகரே. ருக், யஜுர், சாம என்ற மூன்று வேதங்களில் இருந்து பூ, பூவ, ஸுவ என்ற மூன்று உலகங்களை தோற்றுவித்து, எம்பெருமான் தன்னுடைய சங்கல்பத்தினால், அவற்றில் இருந்து அகாரம், உகாரம், மகாரம் என்ற மூன்று எழுத்துக்களை தோற்றுவித்து, அவற்றை சேர்த்து ஓம் என்று ஒரு அக்ஷரமாக்கி, அதனை நிருக்திகிரமத்தினால் (நிருக்தம்- வேத அங்கங்கள் ஆறனுள் ஒன்று) மூன்று பதமாக்கி அதற்கு மூன்று அர்த்த விசேஷங்களை அடக்கியது இங்கு சொல்லப்பட்டது. அவையாவன, அகாரம் ஜீவாத்மாக்குள் இருக்கும் பகவத் சேஷத்துவத்தை சொல்வதும், உகாரம் அந்த சேஷத்துவம் ஸ்ரீமன் நாராயணனனிடம் மட்டும் என்றும் மற்று எவரிடத்தும் இல்லை என்றும் சொல்வதும், மகாரம் ஞாலத்தை குறிப்பிட்டு, அநந்யார்ஹ சேஷத்வத்துவத்திற்கு ஆதாரமான ஆத்மா, தேகம் இவற்றை காட்டிலும் வேறுபட்டவன் என்று சொல்வதும் ஆகும். இம்மூன்றெழுத்தையுமே தமக்குத் தஞ்சமாக நினைத்து இருப்பவருக்கு பரமகிருபையைச் செய்து அருள்பவனும், அந்தப்ரணவத்தை நம மற்றும் நாராயண பதங்களோடு கூட்டி மூன்று பதமாக வளர்த்து, (திருவஷ்டாக்ஷரமாக்கி) அம்மூன்று பதங்களிலும் ஆத்மாவினுடைய அநந்யார்ஹ சேஷத்துவம், அநந்ய சரணத்வம், அநந்யபோக்யத்வமாகிற மூன்றினையும் ஈஸ்வரனாகிறபடியால் ஜீவாத்மாக்களுக்கு தோன்றுவித்து, அவற்றின் பிரதி சம்பந்தியாகிற சேஷித்தவம், சரண்யத்வம், ப்ராப்யத்வம் என்கிற மூன்றினையும் தன்னிடம் கொண்டு எம்பெருமான் எழுந்து அருளி இருக்கும் இடம் கண்டமென்னுங் கடிநகர் ஆகும். | |
11 | இந்த பாசுரம், இந்த பதிகத்தில் உள்ள பாடல்களை படிப்பவர்களுக்கு கிடைக்கும் பலன்களை சொல்லும் பலச்ருதி பாசுரம் ஆகும். கங்கை கரையில் உள்ளதும் எல்லாவித ஏற்றங்களும் உடையதுமான இந்த கண்டமெனும்கடினகரில் எழுந்தருளி இருக்கும் எம் புருஷோத்தமன் திருவடிகளில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு நிர்வாககரான பெரியாழ்வார் விரும்பி ஆசைப்பட்டு நிலைநின்ற பிரேமத்தால் செய்த தமிழ் மாலையான இவற்றை எப்பொழுதும் விடாமல் சொல்லிக்கொண்டு இருக்கிறவர்களுக்கு எங்கிருந்தாலும் கங்கையில் ஸ்னானம் செய்து திருகண்டமெனும்கடி நகரில் எழுந்தருளி உள்ள புருஷோத்தமனின் திருவடிகளின் கீழே நிரந்தர சேவை செய்கிறதாகிய பலன் என்று சொல்லி முடிக்கிறார் | ஜலத்தின் பிரவாகத்தால் உண்டான கொழிப்பும் சப்தமும் கங்கை கரையில் உள்ளன என்றும் சர்வேஸ்வரனுடைய திருவடிகளில் பிறப்பால் வந்த ஏற்றத்தை உடைய கங்கை என்றும் கூறுகிறார். |
மீண்டும் இன்னொரு திவ்யதேச யாத்திரையில் சந்திக்கலாம். நன்றி.