067 Thirupirithi – திருப்பிருதி

பரிமளவல்லி நாச்சியார் ஸமேத பரமபுருஷன் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருப்பிருதி / ஜோஷிமட்
மூலவர் பரமபுருஷன்
உத்ஸவர் பரமபுருஷன்
தாயார் பரிமளவல்லி
திருக்கோலம்கிடந்த (புஜங்க சயனம்)
திசைகிழக்கு
பாசுரங்கள்10
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 10
தொலைபேசி

வடநாட்டு திவ்யதேசங்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பை இங்கே காணலாம் நன்றி.

Google Map

திருப்பிருதி பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருப்பிரிதி பற்றி தினம் ஒரு திவ்யதேசம் சொல்வது

கோவில் பற்றி

ரிஷிகேசத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ள ஜோஷிமட் என்ற இடந்தான் இன்று திருப்பிருதி என்று பொதுவான அபிப்பிராயம். ஹரித்துவாரில் இருந்து சுமார் 150 மைல் தொலைவில், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 6200 அடி உயரத்தில் ஜோஷிர்மட் என்ற இந்த இடத்தைத்தான் 108 திருப்பதிகளில் ஒன்றாக வழிபடுகிறார்கள். பக்தர்கள் மீது எம்பெருமானுக்கு இருக்கும் அன்பைக் குறிக்கும் பிரீதி என்ற சொல்லிலிருந்து இந்தத் திருத்தலம் திருப் ப்ரீதி என்று அழைக்கப்பட்டு பின்னர் திருப்பிருதி என்று பெயர் மாறியது என்று சொல்வார்கள்.

இமயமலைக்கு உள்ளே வடபுறத்தில் மலைகளும் குன்றுகளும் சூழ்ந்த எல்லையற்ற அழகுள்ள இடத்தில் அமைந்திருந்தது என்று சொல்பவர்களும் உண்டு. ஏனெனில் இத்தலம் எங்கிருந்தது என்று உறுதியாக சொல்ல முடியவில்லை. ஜோஷிமட்டில் தான் தற்போது கோவில்களும், மூர்த்திகளும் உள்ளனர். மேலும் பத்ரிநாத் எம்பெருமானும் இமயமலையின் மிதமிஞ்சிய குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக ஆண்டுக்கு 6 மாதங்கள் மட்டுமே பத்ரிநாத் கோவிலில் காட்சி அளித்து மீதி சுமார் ஆறு மாத காலம் இந்த ஜோஷிர்மட் கோவிலுக்குத்தான், எழுந்தருளி, ஒவ்வொரு வருடமும் தீபாவளி சமயத்தில் இருந்து காட்சி அளிக்கிறார்.

ஆதிசங்கரர் இங்கு (ஜோஷிர்மட்) தான் திவ்யஞானம் பெற்று சங்கரபாஷ்யம் அருளியதாக சொல்வார்கள். இந்தக் கோவிலில் உள்ள மரத்தடியில் அமர்ந்து தவம் செய்த பிறகுதான் ஆதிசங்கரர் பிரம்ம சூத்திரத்துக்கு பாஷ்யம் எழுதினர் என்றும், இங்கே ஒரு பீடத்தை நிறுவினார் என்றும் ஐதீகம். (ஆதிசங்கரர்  இந்தியாவின் நான்கு திசைகளிலும் நிறுவிய நான்கு பீடங்கள்: வடக்கே ஜோஷிர்மட், கிழக்கே பூரி, தெற்கே சிருங்கேரி, மேற்கே துவாரகை). இரண்டாயிரம்  ஆண்டுப்  பழமை  உடையதாகக்  கருதப்படும்  கல்பதரு ஒன்றையும் இங்கே காண முடியும்.

ஜோஷிர்மட், திருப்பிருதி இல்லை என்று நினைக்க சான்றோர் கூறும் வார்த்தைகள்;

1. திருமங்கையாழ்வார் வதரி, சாளக்கிராமம், நைமி சாரண்யம், சிங்கவேள் குன்றம் திருமலை என்று வடக்கு தொட்டு தெற்கு நோக்கி வரிசைக் கிரமமாக மங்களாசாசனம் செய்து கொண்டே வருகிறார். இதில் வதரி எனப்படும் பத்ரிகாச்ரமம் ஜோஷி மடத்திற்கு வடக்கே அமைந்துள்ளது. ஜோஷி மடமே திருப்பிருதியாக இருந்திருந்தால் ஆழ்வார் முதலில் பத்ரியை மங்களாசாசனம் செய்து விட்டு அதன்பிறகு ஜோஷி மடத்தை மங்களாசாசனம் செய்திருப்பர். ஆனால் ஆழ்வார் அப்படி இல்லாமல், முதலில் திருப்பிருதியை பாடிவிட்டு, பிறகு பத்ரியை பாடியுள்ளார். ஆழ்வார் முதலில் திருப்பிருதியை தமது திருமொழியில் 1.2 ல் மங்களாசாசனம் செய்து விட்டு பிறகு பத்ரியை 1.3 மற்றும் 1.4 பதிகங்களில் மங்களாசாசனம் செய்கிறார். எனவே ஜோஷி மடமே திருப்பிருதியாக இருந்தால் ஆழ்வார் பத்ரியை இரண்டாவதாக மங்களாசாசனம் செய்திருக்க மாட்டார்.

2. மேலும், பத்ரியை பாடும் போதும், கண்டமெனும் கடிநகர் பற்றி பாடும் போது கங்கைகரையை வெகுவாக குறிப்பிட்ட ஆழ்வார் ஜோஷிர்மட்டினை பாடும் போது கங்கைகரையை பத்து பாடல்களில் ஒன்றில் கூட குறிப்பிடவில்லை. ஆகையால், ஆழ்வார் குறிப்பிடும் திருப்பிருதி, பதிரியைவிட மேலும் உயரத்தில் கங்கையின் உற்பத்தி ஸ்தானத்தை விட மேலும் வடக்கே, இமய மலையில் இருந்திருக்க வேண்டும் என்பதும் ஒரு கருத்து,

3. திருப்பிருதியை பற்றி பாடிய ஆழ்வார் அங்குள்ள பயங்கர விலங்குகளையும் யானைகளை விழுங்கும் மலைபாம்புகளையும் குறிப்பிட்டு உள்ளார். ஆனால் பத்ரிநாத் பாசுரங்களில் அப்படி ஒன்றும் சொல்லாமல் பாரோர் புகழும் வதிரி என்றும், பயங்கர மிருகங்களைப் பற்றி சொல்லாததாலும், பத்ரிநாத்தில் இருந்து இருபது மைல் தெற்கே திருப்பிருதி இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

4. மேலும் ஆழ்வார் பாடல்களுக்கு விளக்கம் அளித்த பெரியவாச்சான்பிள்ளை தெற்கே உள்ள திவ்ய தேசங்களுக்கு எப்படி திருமலை ஒரு எல்லையாக உள்ளதோ அதேபோல் எல்லா திவ்யதேசங்களுக்கும் திருப்பிருதி எல்லையாக உள்ளது என்று சொன்னதால் இந்த திவ்யதேசம் எல்லா திவ்யதேசங்களுக்கும் வடக்கே இருக்க வேண்டும் என்றே கொள்ளவேண்டும்.

5. இங்கு இந்திர தீர்த்தம், கோவர்த்தன தீர்த்தம், மானஸரோவஸ் தீர்த்தம் என்று குறுப்பிடப்பட்டு உள்ளன. புராணங்களும் இதிகாசங்களும் மானஸரோவரம் என்னும் இந்த நதியை பாரதத்தின் வட எல்லையாக வர்ணிக்கின்றன. இந்நதி இன்றும் திபெத் நாட்டில் இதே பெயரில் வழங்கப்படுகிறது. இது 54 மைல் சுற்றளவும் 200 சதுர மைல் பரப்பளவும், 250 அடிக்கும் மேலான ஆழத்தையும் கொண்டது. கடல் மட்டத்திற்கு மேல் 15000 அடி உயரத்தில் உள்ளது. பிரம்மன் தனது ஸங்கல்பத்தாலே முதன் முதலில் பாரத தேசத்தின் வட எல்லையாக இந்த ஏரியை படைத்ததால் மானஸரஸ் என பெயர் உண்டானது. இதன்படி பார்த்தாலும், ஜோஷிர்மட், திருப்பிருதியாக இருப்பதற்கு வாய்ப்பு குறைவாகவே உள்ளது. திருமங்கை ஆழ்வாரும் மனசரோவஸ் தீர்த்தத்தை திருவுள்ளத்தில் கொண்டு, தடஞ்சுனைப் பிருதி (பெரியதிருமொழி 1.2.1) என்று இந்த திவ்யதேசத்தின் முதல் பாடலில் சொல்லி இருப்பார் போலும். அதுபோல் ஒரு ஏரி ஜோஷிர்மட்டில் இல்லை என்பது ஓர் தகவல்.

6. “பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவணப் பள்ளிகொள் பரமா என்று ,” ( பெரிய திருமொழி 1.2.6) என்று இந்த திருப்பிருதி எம்பெருமானின் திருநாமத்தையும் அவரின் கிடந்த சயனத்தையும் சொல்லி ஆயிரம் தலைகளை கொண்ட அனந்தாழ்வானையும் ஆழ்வார் குறிப்பிட்டு உள்ளார். ஆனால் இன்று ஜோஷிமட்டில் எம்பெருமான் இந்த திருக்கோலத்தில் இல்லை. ஆதிசங்கரரால் கட்டப்பட்ட நரசிங்க பெருமாள் ஆலயமும் நின்ற திருக்கோலத்தில் இருக்கும் நாராயணர் ஆலயமும் மட்டுமே உள்ளன.

ஆழ்வார்

திருமங்கையாழ்வார் முதன்முதலில் மங்களாசாசனம் செய்தது இந்த திருத்தலம் தான். இங்கிருந்துதான் இவர் தனது பற்பல திவ்யதேச மங்களாசாசனங்களை தொடங்கி தெற்கு நோக்கி வரும்போது வடநாட்டிலிருந்து வரும் வழியில் உள்ள ஸ்தலங்களில் மங்களாசாசனம் செய்து கொண்டே வந்து தென்னாடு வருகிறார்.

திருமங்கையாழ்வார் இத்தலத்திற்கு 10 பாசுரங்கள் வழங்கியுள்ளார்.

  1. வாலியை வதை செய்து அருளின எம்பெருமான் இனிதாக எழுந்தருளி இருக்கும் இடமான இமயமலையினுள் அமைந்துள்ள திருப்பிருதியைச் சென்று சேருமாறு முதல் பாடலில் தன் நெஞ்சை நோக்கிக் கூறுகின்றார். திருமங்கை ஆழ்வார் இந்த எம்பெருமானைப் பற்றிப் பாடும் முதல் பாசுரத்தில் ‘அன்று, ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம் பெற இருந்த நல் இமயத்துள்’ என்று பாடியிருக்கிறார், அதனால் இன்றும் எங்கும் எம்பெருமானுக்கு ஏலக்காய் மாலை அணிவிப்பது விசேஷமாக கருதப்படுகிறது.
  2. ஒன்றுக்கும் கலங்க மாட்டாத மாகடலே கலங்கும் படியாகவும், ஸம்ஸாரம் என்றால் என்னவென்றே அறியாத திருவனந்தாழ்வான் ஸேனைமுதலியார் முதலிய நித்ய ஸூரிகள் செய்யத் தக்க கைங்கரியங்களை வானர மற்றும் விலங்குகள் செய்யும் படியாகவும், நீரில் ஆழ்ந்து போகக்கூடிய மலைகள் மிதந்து அணையாய் நிற்கும் படியாகவும் செய்தருளிய விசித்திரசக்தி உடைய மஹாவீரன் (ஸ்ரீராமபிரான்) எழுந்தருளி உள்ள திருப்பிருதி, யானைகள் அஞ்சும் சிங்கங்கள் உலாவும் இமயமலையினுள் உள்ளது என்று இரண்டாவது பாசுரத்தில் சொல்கிறார்.
  3. ஶீதாபிராட்டிக்காக இலங்கையைப் பாழ் படுத்தினமையைச் மேல் பாசுரத்தில் சொன்ன ஆழ்வார் இந்த பாசுரத்தில், நப்பின்னைப் பிராட்டிக்காகச் செய்ததொரு செயலைச் சொல்லுகிறார். நீளாதேவியின் அம்சமாகப் பிறந்த நப்பின்னைப் பிராட்டியை மணம் செய்து கொள்ளுதற்காக, யாவர்க்கும் அடங்காத ஏழு எருதுகளையும் கண்ணபிரான் அடக்கி நப்பின்னையை மணம் செய்த வரலாறு சொல்லி, திருப்பிருதியில் உள்ள அழகிய பாறைகளின் மீது வேங்கை மலர்கள் விசேஷமாக உதிர்ந்து படுக்கை விரித்தால் போல் இருக்க, அதன்மீது யானையானது தன் பேடையோடு கிடந்து உறங்குவதற்குப் பாங்காக வண்டுகள் இன்னிசை பாடப் பெற்ற திருப்பிருதியைச் சென்று சேர் நெஞ்சமே என்கிறார். நப்பின்னைப் பிராட்டியோடே பரமரஶிகன் இருக்கும் இடம் ஆகையால் அங்குள்ள விலங்குகளும் ச்ருங்கார ரஸத்திலே நோக்காக இருப்பதை சொல்லியது ஒரு சிறப்பே.
  4. அடுத்த பாசுரம், நரஸிம்ஹ மூர்த்தியாக அவதரித்து இரணியன் மார்பைப் பிளந்த பெருமிடுக்குத் தோற்ற எழுந்தருளி இருக்குமிடம் என்கிறது. அங்குள்ள பன்றிகள் (வராஹங்கள்) குனிந்து, வளைந்த கொம்புகளாலே மாணிக்கப் பாறைகளைக் குத்திப் பெயர்க்க அதிலிருந்து வரும் மாணிக்கங்கள் மலையருவிகளோடு கூடி உருண்டு விழும். நரஸிம்ஹமூர்த்தி இரணியனுடைய மார்பைப் பிளந்து குடல் மாலையைத் தன் மேல் எடுத்துப் போட்டுக் கொண்ட பிறகு ரத்த வெள்ளமானது பிரவாகமாக ஓடியது போல் அவ்வருவிகள் பாய்கின்றன. அப்படிப் பட்ட திருப்பிருதியைச் சென்று சேர் நெஞ்சமே என்று பாடுகிறார்.
  5. அடுத்த பாசுரத்தில், விபவ அவதாரங்களுக்கு மூலமாக உள்ள திருப்பாற்கடல் நாதனைப் பற்றி சொல்கிறார். ஆபரணங்கள் பூண்டதனாலே ஒலி செய்து கொண்டிருக்கிற பரவாஸுதேவன் திருவடிகளை ஸேவிக்க வேணுமென்கிற ஆசையுடன் உள்ள நான்முகன் முதலான தேவர்கட்கு திருப்பாற்கடலிலே வந்து ஸேவை ஸாதிக்கிற ஷீராப்திநாதன், பிராட்டியும் தானுமாய் வந்து பொருந்தி வாழும் இடம் இமயமலையினுள் உள்ள திருப்பிருதி என்கிறார்.
  6. தேவர்களுக்காக ஸ்ரீவைகுண்டத்தைவிட்டுத் திருப்பாற்கடலிலே வந்து கண்வளர்ந்த எம்பெருமான் அக்கடலளவும் போக மாட்டாத மனிதர்களுக்கும் அநுகூலமாக இமயமலையிலே வந்து எழுந்தருளி இருக்கிறார். இங்கு குருக்கத்திக் கொடிகள் ஆகாசம் வரை ஒங்கிப் படர்ந்து மேகமண்டலத்தோடு போராடும் என்றும் அப்பொழுது பூக்கள் மலரும், அப்பூக்களிலே மதுவை பருக வண்டுகள் மேகத்துக்கும் கொடிக்கும் நுழைந்து இசை பாடும்; திருப்பிருதி முழுவதும் இந்த சப்தமே நிறைந்து இருக்கும். அந்த திருத்தலத்தை சென்று சேர் நெஞ்சே என்று பாடுகிறார். கொடிகளைத் தாயாராகவும், மேகக்கூட்டத்தை எம்பெருமானாகவும் சொல்லி, வண்டுகள் இசை பாடுவதாக சொல்லி, நம் போன்றவர்களை மன்னித்து காப்பாற்றுவதற்காக பிராட்டி, எம்பெருமானோடு மன்றாடுவதை ஒரு உள்ளுறை பொருளாக கூறுவதும் உண்டு.
  7. இமயமலையில் மேக மண்டலம் வரை நீண்டு வளர்ந்த வேங்கை மரங்களில் மிளகு கொடிகள் தழுவி நிற்கும். சிறு மலைகளிலே கொடிய வேங்கைப் புலிகள் திரியும். இப்படி எங்கும் வேங்கை மயமாகவே இருக்கின்ற இமயமலையில் தேவர்கள் வந்து செங்கழுநீர், செண்பகம், இருவாட்சி, பாதிரி, புன்னை, குருக்கத்தி, கருமுகை, தாமரை என்ற எட்டு வகை பூக்களையும் ஸமர்ப்பித்து ஆயிரம் ஆயிரம் திருநாமங்களைச் சொல்லி வணங்கும் இடமாகிய திருப்பிருதியைச் சென்று சேர் நெஞ்சே என்கிறார்.
  8. அடுத்த பாசுரத்தில், இமயமலையில் சோலைகள் அடர்த்தியாகவும் அதிகமாகவும் இருப்பதால், சூரியனின் கதிர்கள் நுழையாமல், பகற்போது என்பது இல்லாமல் இரவு காலமே அதிகம் இருந்து எங்கும் இருள் மூடிக்கிடக்கும். அப்படி இருள் மூடிக்கிடக்கிற மலையின் குகைகளில் பாம்புகள் உணவு கிடைக்காமல் பெரும் பசியோடு, சோலையின் பரிமளத்தோடே கூடின காற்றை உண்டு, பெருமூச்சு விட்டுக்கொண்டு கிடக்கும். அப்படிப்பட்ட இமயமலையில் தேவர்கள் வந்து ‘பரமபுருஷா!, முதலிய திருநாமங்களை சொன்னபடி, நான்முகக்கடவுளை முன்னிட்டு வணங்கும் திருப்பிருதியைச் சென்று சேர் நெஞ்சே என்று பாடுகிறார்.
  9. ஆயிரம் ஆயிரம் திருநாமங்களையும் சொல்லி அவற்றின் அர்த்தங்களையும் உணர்ந்தவர்களுக்கு எவ்விதமான துன்பமும் வந்து சேராதபடி ஆனந்தத்தை கொடுத்து அருள் செய்கின்ற பரம புருஷன் எழுந்தருளி உள்ளது இமயமலையின் உள்ளே. அங்குள்ள அசோகமலர்கள் மலரும் போது, அவை நெருப்போ என்று வண்டுகள் பிரமித்து, பிறகு ஆராய்ந்து அவை மலரே என்று முடிவு செய்து, அவைகளின் மேல் அமர்ந்து, சென்றுவிட்டபின், அடுத்த நாளும் அதே சந்தேகம் அந்த வண்டுக்கு எழும். அப்படிப்பட்ட வண்டுகளைக் கொண்ட திருப்பிருதியை சென்று சேர் நெஞ்சே என்று ஆழ்வார் கூறுகிறார். சர்வ ரக்ஷிகனான எம்பெருமானுக்கு என்ன நேர்ந்துவிடுமோ என்று எண்ணி, ஒரு சமயம், பல்லாண்டு பல்லாண்டென்று அவனுக்கு மங்களாஸாசனம் செய்பவரும், இன்னொரு சந்தர்ப்பத்தில், அந்த அச்சம் நீங்கி தங்களை ரக்ஷித்தருள வேணும்’ என்று பிரார்த்திப்பதை நினைவு படுத்தும் வண்டுகள் பற்றி இங்கு சொல்லப்படுவதாக ரசமாக கூறுவாரும் உண்டு.
  10. மிகப்பெரிய மேகக்கூட்டங்கள் அதிக நீர்திவலைகளை சுமந்துகொண்டு நகர முடியாமல், கர்ஜனை செய்து கொண்டு இருப்பதைக் கண்ட மிகப்பெரிய பாம்பானது ஒரு மலை ஊர்ந்து செல்கிறதோ என்றெண்ணி தன் இருப்பிடத்தை விட்டு நகர்ந்து செல்ல ஆரம்பிக்கும். இன்னொரு பாம்பானது, அவை யானைகளோ என்று எண்ணி, அவற்றை விழுங்க வரும். அவ்வளவு பெரிய பாம்புகளைக் கொண்ட திருப்பிருதியில் சயனித்துள்ள எம்பெருமானைச் சேவித்தவர்கட்கும் அந்தப்பெருமானைப் பற்றி பாடப்பட்ட இந்த பாடல்களை இசையோடு பாடவல்லார்க்கும் தீயவினைகள் சேராது என்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது இத்தலம்.

மீண்டும் இன்னொரு திவ்யதேசத்தை பற்றிய வலைப்பதிவில் சந்திக்கலாம், நன்றி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d bloggers like this: