A Simple Devotee's Views
ஸ்ரீ அமிர்தவல்லி சமேத யோகநரஸிம்ஹ சுவாமி திருவடிகள் போற்றி போற்றி
திவ்யதேசம் | திருக்கடிகை, சோளிங்கர், சோளசிங்கபுரம், சோளங்கிபுரம், கடிகாசலம் | |||
பெரிய மலை | மூலவர் | யோக நரசிம்மர் (அக்காரக் கனி) | ||
உத்ஸவர் | இங்கே இல்லை (கீழ்க்கோவிலில் இருக்கிறார்) | |||
தாயார் | அம்ருதவல்லி (தனிக்கோவில் நாச்சியார்) | |||
திருக்கோலம் | வீற்றுஇருந்த திருக்கோலம் | |||
திசை | கிழக்கே திருமுகமண்டலம் | |||
சிறிய மலை | மூலவர் | யோக ஆஞ்சநேயர் (நான்கு திருக்கரங்களுடன், கையில் சங்கு சக்கரத்துடன் ) | ||
மற்ற சன்னதிகள் | ரங்கநாதன்,சக்ரவர்த்தி திருமகன் | |||
கீழேயுள்ள கோவில் | மூலவர் | இங்கே இல்லை (பெரியமலையில் உள்ளார்) | ||
உத்ஸவர் | பக்தவத்சலப்பெருமாள், தக்கான், பக்தோசித ஸ்வாமி – ஆதிகேசவப்பெருமாள் (பின்புறம் உள்ளார், சில சமயங்களில் தரிசனம் கிடைக்கும்) | |||
தாயார் | சுதாவல்லி நாச்சியார் , அம்ருதவல்லி | |||
மற்ற சன்னதிகள் | ஆண்டாள், ஆழ்வார், ஆச்சார்யர்கள், எறும்பியப்பா, தொட்டாச்சாரியார் | |||
பாசுரங்கள் | 4 | |||
மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 3 பேய்ஆழ்வார் 1 | |||
தொலைபேசி | 91- 44-2232 1221, +91-4172-260 255 |
கோவில் பற்றி
காஞ்சீபுரத்திற்கும், திருவேங்கடமலைக்கும் இடையிலுள்ள திருத்தலம். இந்த திருத்தலத்தில் கீழே உள்ள திருக்கோவிலில் உற்சவரும், பெரிய மலை மீது மூலவரும் அதனருகில் உள்ள சிறிய மலையில் சங்கு சக்கரங்களுடன் ஆஞ்சநேயரும் அமர்ந்துள்ளனர். நரசிம்மர் ஆஞ்சநேயர் இருவரும் யோகநிலையில் எழுந்தருளி இருப்பது சிறப்பு.
சுமார் ஒரு கடிகை (நாழிகை – 24 நிமிடம்) இங்கு தங்கியிருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்று ஐதீஹமிருப்பதால் இதற்கு திருக்கடிகை என்னும் பெயர்
வந்தது. கடிகை என்றால் நாழிகை, அசலம் என்றால் மலை, இரண்டும் சேர்ந்து கடிகாசலமானது.
சோளிங்கபுரத்தின் புராணப்பெயர் கடிகாசலம், இவ்விடத்தை ஆழ்வார்கள் திருக்கடிகை என்றும் ஆச்சாரியர்கள் சோளசிம்மபுரம் என்றும், சைவர்கள் சோழலிங்கபுரம் என்றும் அழைத்து, தற்போது சோளிங்கபுரம், சோளிங்கர் என்று அழைக்கப்படுகிறது.
இது ஒரு விசேஷமான பிரார்த்தனைத் தலம் ஆகும். பேய், பிசாசு, சூனியம் என்று சொல்லப்படும் அதீத நோய்கள், தீர இங்கே வந்து விரதம் கடைபிடித்து பிரதி தினமும் தக்கான் குளத்தில் நீராடி, மலைமீதேறி பெருமானையும் ஆஞ்சநேயரையும் வழிபட்டு வந்தால், எல்லா தீரும், மகிழ்ச்சியுடன் இருப்பர் என்று நம்பிக்கை.
அஹோபில மலைதான் எம்பெருமான் நரசிம்ம அவதாரம் எடுத்த இடம். மீண்டும் ஒரு முறை முனிவர்களுக்காக அந்த அவதாரத்தை இங்கே மேற்கொண்டதால், இது தனிச் சிறப்பாகும்.
பிரிவுகளும் சேர்க்கைகளும் இன்றி ஒரே கல்லில் இம்மலை அமைந்திருப்பதால் இதற்கு ஏகசிலா பர்வதம் என்ற பெயரும் உண்டு.
இங்குள்ள பெரியமலையில் யோக நரசிம்மர் எழுந்தருளி உள்ளார். சுமார் 750 அடி உயரமுள்ள 1305 படிகள், ஏழு மண்டபங்கள் உள்ள கடிகாசலம் என்ற பெரியமலை இது. இங்கு நரசிம்மர் சாளக்ராம மாலை அணிந்து, யோகநிலையில், கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார். இந்த ஆலயம் வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் இரண்டு திருச்சுற்றுகள் கொண்டுள்ளது.
இங்கு பக்தர்கள் படியேறி வந்து தம்மைச் சேவிப்பதை பெருமாளே விரும்புவதாக ஐதீஹம். (இங்கு விஞ்ச் ரயில் போட இரண்டு மூன்று முறை முயற்சிக்கப்பட்டு தோல்வி கண்டு விட்டது).
இங்கு கார்த்திகை மாதம் நரசிம்மர் கண் திறப்பதால் வெள்ளி, மற்றும் ஞாயிற்று கிழமைகளில் திருவிழா போல் விசேஷங்கள் நடைபெறும். எங்கும் மக்கள் அலை போல் இருக்கும். சித்திரை ப்ரம்மோத்ஸவம் மிக சிறப்பாக நடைபெறுகிறது. வைகாசி மாதம், நரசிம்ம ஜெயந்தி திருவிழாவாகவும், காஞ்சி கருட சேவை உற்சவமும் கொண்டாடப் படுகிறது. ஆடியில் திருவாடிப்பூரமும், ஆவணியில் பவித்ரோத்ஸத்வமும் புரட்டாசியில் நவராத்திரியும் மார்கழியில் வைகுந்த ஏகாதசியும், மாசியில் தொட்டாச்சார்யார் திருவிழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன.
பெரிய மலையில் உள்ள நரசிம்மரை தரிசித்துவிட்டுத் தான் சிறிய மலையில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயரை தரிசிக்க வேண்டும். சிறிய மலையில் இருந்து பார்த்தால் யோக ஆஞ்சேநேயரின் கண்கள் நேரடியாக யோக நரசிம்மரின் திருவடிகளை நோக்கி அமைந்துள்ளது. சிறிய மலை சுமார் 350 அடிஉயரம் உள்ளது, 400 படிகள் ஏறி சேவிக்க வேண்டும்.
ஆஞ்சநேயருக்கு சங்கு சக்கரம் கொடுத்தருள இராமன் இங்கு எழுந்து அருளினார். இராமனின் ஆராதனை பெருமாள் ரங்கநாதர் ஆவார். அதனால் அவரும் சின்னமலையில் காட்சி அளிக்கிறார். மிகவும் அழகான சிறிய வடிவில் உள்ள (பால) ரங்கநாதர் ஆகும். இவரை தரிசிக்கும் போது, திருசிறுபுலியூர் நினைவுக்கு வருவது ஆச்சர்யம் இல்லை.
உற்சவர் பக்தோசித பெருமாள், சுதாவல்லி, அமிர்தவல்லி எனும் தனது இருதேவியருடன், மலை அடிவாரத்திலிருந்து 2 கி.மீ- தொலைவில் தனிக்கோவில் கொண்டுள்ளார். அமிர்த தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் ஆகியவை பக்தோசித பெருமாள் கோவில் அருகில் உள்ளன. உசிதம் என்றால் விருப்பம் எனப்படும். பக்தர்கள் விருப்பப்படி அருளவல்லவராதலால் பக்தோசிதப்பெருமாள் எனவும் அழைக்கப்படுகிறார். அருளுவதில் தக்கவராக இருப்பதால் தக்கான் எனவும் அழைக்கப்படுகிறார்.
இங்குள்ள தீர்த்தத்தில் (குளத்தில்) நீராடி எம்பெருமானை வழிபட்டால், ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
ஸ்தல வரலாறு
சப்தரிஷிகளும், (அத்ரி, காஷ்யபர், வசிஷ்டர், ஜமதக்னி, கௌதமர், பரத்வாஜர், விஸ்வாமித்ரர்) வாமதேவர் என்ற முனிவரும் பிரஹ்லாதனுக்காக எம்பெருமான் எடுத்த நரசிம்ம அவதாரத்தைக் காண வேண்டும் என்ற ஆசையினால் இம்மலையில் வந்து தவம் செய்யத் தொடங்கினர். முன்னொரு காலத்தில் விசுவாமித்திரர் இம்மலையில் ஒரு கடிகை நேரத்தில் (ஒரு நாழிகை நேரத்தில்) நரசிம்மனைக் குறித்து துதித்து பிரம்மரிஷி என்ற பட்டம் பெற்றதால், தாங்களும் ஒரு நாழிகை நேரத்தில் நரசிம்ம மூர்த்தியை தரிசிக்கலாம் என்ற நம்பிக்கையில் இம்மலையைத் தெரிவு செய்து இங்கே வந்து தவம் இருந்தனர்.
இது இவ்வாறு இருக்க இராமவதாரம் முடிந்ததும் ஸ்ரீராமன் வைகுண்டத்திற்கு எழுந்தருளும் தருவாயில், கடிகாசலத்தில் என்னைக் குறித்து தவம் செய்யும் ஸப்த ரிஷிகட்கு, உண்டாகும், இன்னல்களைக் களைந்து அதன்பின் வைகுந்தம் வருவாயாக என்று ஆஞ்சநேயரிடம் கூற, அவரும் அவ்விதமே இந்த மலைக்கு வந்து சேர்ந்தார். காலன், கேயன் என்னும் இரு அரக்கர்கள் இம்மலையில் நாராயணன் குறித்து தவஞ்செய்யும் ரிஷிகளுக்கு பெருத்த இடையூறு விளைவிக்க அவர்களோடு போர் புரிந்த ஆஞ்சநேயர் ஸ்ரீராமனைத் துதித்து நிற்க, ஸ்ரீராமன் அனுமனுக்கு காட்சி தந்து சங்கு சக்கரங்களை வழங்க, அவற்றால் இரு அரக்கர்களின் தலையைக் கொய்து ரிஷிகளின் தவம் தடை இல்லாமல் தொடர அருள் புரிகிறார். இறுதியில் ரிஷிகளின் தவத்தை மெச்சிய நாராயணன் நரசிம்ம மூர்த்தியாக அவர்களுக்கு காட்சி கொடுத்து நின்றான்.
நரசிம்ம அவதாரத்தைக் கண்டு களித்த ஆஞ்சநேயரிடம் “நீ நமது முன்பு அமர்ந்து யோக ஆஞ்சநேயராக மக்களுக்கு தீராத பிணிகளை தீர்த்து, எம்மை வந்தடைவாயாக என்று அருளி மறைந்தார். இதனால் தான் யோக நிலையில் (சங்கு சக்கரத்துடன்) ஆஞ்சநேயருக்கும் தனிச்சன்னதி உள்ளது. கலியுகம் முடியும் வரை அனுமனும் வாழ்வதாக ஐதீஹம். எனவேதான் பக்தி ரசத்தோடு இராமாயணம் படிக்கும் இடம் தோறும் அனுமன் அருவமாகவோ உருவமாகவோ பிரத்யட்சம் ஆவதாய் ஐதீஹம். இந்த உலகத்திலேயே எங்கெல்லாம் ஸ்ரீராம நாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்கக் காட்சி தந்துகொண்டு இருக்கிறார் என்பதை கீழ் கண்ட ஸ்லோகத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம், பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம், மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்
ஒரு சமயம் துர்வாச முனிவர் இத்தலத்தை அடைந்து நரசிம்மனை வணங்கி அவரின் திருத்துழாய் மாலையைப் பெற்று அதைக் கழுத்திலும், தலையிலும் சூடி ஆனந்தக் கூத்தாடினார். அப்போது அங்கே நிரம்பியிருந்த சாதுக்கள் கூட்டத்தில் நின்ற நவக்கிரகங்களில் ஒருவனான புதன் துர்வாசரின் இச்செயலைக் கண்டு ஏளனத் தொனியில் சிரித்துக் கேலி செய்ய, துர்வாசரால் சபிக்கப்பட்ட புதன், இந்த கடிகாசலத்தில் பாண்டவ தீர்த்தத்தில் நீராடி அங்கு ஆடியும் பாடியும் வரும் முனிவர்களுக்குத் தொண்டு செய்து தன் சாபம் தீர்ந்து மீண்டும் உயர்நிலை பெற்றான் என்று புராணம் கூறுகிறது.
ஆழ்வார் ஆச்சாரியர்
முதலாழ்வார்களில் ஒருவரான பேயாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்த ஸ்தலம்.
‘வண்பூங்கடிகை இளங்குமரன்’ என்பது பேயாழ்வார் மங்களாசாசனம், மூன்றாம் திருவந்தாதி 61 பாசுரம்.
மிக்கானை மறையாய் விரிந்த விளக்காய் என்னுள் புக்கானை புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை தக்கானை கடிகை தடம் குன்றின் மிசையிருந்த அக்கார கனியை அடைந்துயிந்து போனேனே (பெரிய திருமொழி 8.9.4)
ஸ்ரீமந் நாதமுனிகளும், திருக்கச்சி நம்பிகளும், இராமானுஜரும் மணவாள மாமுனியும், மங்களாசாசனம் செய்துள்ளனர்.
தொட்டாச்சார்யார் என்னும் ஆச்சார்யர் இத்தலத்தில் பிறந்தவர். இவர் ஆண்டுதோறும் காஞ்சிக்குச் சென்று வரதராஜப் பெருமாளை தரிசிப்பதை விரதமாகக் கொண்டிருந்தார். ஓராண்டு உடல் நலிவால் காஞ்சி செல்ல இயலாது போகவே, தக்கான் குளக்கரையில் அமர்ந்து காஞ்சி வரதராஜப் பெருமாளின் கருட சேவையை மனதில் எண்ணித் துதித்து கண்ணீர் சிந்த , காஞ்சிப் பெருமாள் கருட வாகனத்தில் இவருக்குக் காட்சி தந்தார். இதன் நினைவாக இன்றும் காஞ்சியில் பிரம்மோத்ஸவத்தின் மூன்றாம் நாள் காலை கருட வாகனத்தில் எழுந்தருளும் போது கோபுர வாயிலில் தாமதித்து நின்று சோளிங்கபுரம் தொட்டையாச்சார்யாருக்கு சேவை சாதிப்பதாய் குடைகளால் வரதன் மறைக்கப்பட்டு, கற்பூர ஆர்த்தி நடந்து வருகிறது. இத்திருக்கடிகையில் கீழ்க்கோவிலில் தொட்டாச்சார்யருக்கும் தனிச்சன்னதி உள்ளது.
கீழ்க்கோவிலை அமைத்து உற்சவ ஸ்வாமியை பிரதிஷ்டை செய்ததும் இவரே. சிதம்பரம் கோவிலில் இருந்து மூலவரை கிருமிகண்டசோழன் கடலில் போட்டு சென்ற பிறகு அதனைத்தேடி கண்டுபிடிக்க செய்து, மீணடும் சிதம்பரம் கோவிலில் பிரதிஷடை செய்ததும் இவரே.
தொட்டையாசார்யார் பல அற்புதங்கள் செய்து காட்டித் தமது பக்தியை வெளிக்காட்டிய இடம். இவர் சென்றால், இவருக்கு முன்னால் சக்ரத்தாழ்வார் வழிகாட்டிய படி செல்வார் என்று சொல்வர்.
இவரைப் போன்று எறும்பியப்பா என்னும் ஞானியும் இங்குதான் வாழ்ந்தார்.
திருக்கடிகை மலை ஏறி வழிபட இயலாத அன்பர்கள் ஒரு நாழிகை நேரம் திருக்கடிகையை மனத்தில் நினைத்துச் சிந்தித்தாலே போதும். மோட்சம் சித்திக்கும் எனப் புகழ்ந்துரைக்கின்றார் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்.