A Simple Devotee's Views
மரகதவல்லித் தாயார் ஸமேத விஜயராகவப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
திவ்யதேசம் | திருப்புட்குழி / க்ருத்ர புஷ்கரணி சேஷத்தரம் | |||
மூலவர் | விஜயராகவப்பெருமாள், ஸமர புங்கவன், போரேற்று நாயனார் | |||
உத்ஸவர் | விஜயராகவன் | |||
தாயார் | மரகதவல்லித் தாயார் | |||
திருக்கோலம் | வீற்றுஇருந்த திருக்கோலம் | |||
திசை | கிழக்கு | |||
பாசுரங்கள் | 2 | |||
மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 2 | |||
தொலைபேசி | +91 44 2724 6501 |
தொண்டை நாட்டு திவ்யதேசங்களைப் பற்றிய ஒரு சிறு முன்னுரையை இங்கே காணலாம். நன்றி
கோவில் பற்றி
திருப்புட்குழி என்னும் இந்த திருத்தலம் காஞ்சிக்கு மேற்கே சுமார் 10 கீ.மீ. தூரத்தில் உள்ள பாலு செட்டி சத்திரம் என்ற ஊரிலிருந்து தெற்கே சுமார் 400 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து வேலூர் சாலையில் பாலுச்செட்டிசத்திரம் உள்ளது.
ஜடாயுவாகிய பறவைக்கு மோக்ஷம் அளித்து ஈமக்கிரியை செய்த நிகழ்வை குறிக்கும் தேசம் ஆனதால் இது புள்ளுக்கு குழி எடுத்த இடம், திருப்புட்குழி என்று ஆனது. புள் என்றால் பறவை என்று பொருள்.
இந்த திருத்தல எம்பெருமானுக்கு விஜயராகவன் என்று திருநாமம்; ராகவம் என்பது இராமனையே குறிக்கும். விஜயராகவப் பெருமாள். நான்கு திருக்கரங்களுடன் கிழக்குநோக்கி வீற்றிருந்த திருக்கோலத்துடன் காட்சி அளிக்கிறார். ஸ்ரீராமன் ஜடாயுவை மடியில் கிடத்திக்கொண்டு இருக்கும் நிலையில் அமர்ந்த திருக்கோலத்துடன் காட்சி அளிக்கும் திருத்தலம்.
ஈமக்கிரியை செய்யும் போது மனைவி உடன் இருக்கவேண்டும் என்பது மரபு. அப்பொழுது இராமாயணத்தின்படி சீதை இராமருடன் இல்லை. இருந்தாலும், இந்த திருத்தலத்தில், ஸ்ரீதேவி, பூமிபிராட்டி என்று இரண்டு தாயார்களும் உள்ளனர்.
சீதாதேவி அக்னியின் தாக்கத்தை தாங்க முடியாததால் தன்னுடைய திருமுகத்தை சற்று தள்ளியும், எம்பெருமானுக்கு இடது புறத்திலும் மாறி அமர்ந்து உள்ளார். எப்போதும் இடது புறம் இருக்கும் பூமிபிராட்டி, இங்கு எம்பெருமானுக்கு வலது புறத்தில் அமர்ந்து உள்ளார். அதேபோல், தனிக்கோவில் நாச்சியார் மரகதவல்லி தாயார் சன்னதியும் எம்பெருமானுக்கு இடது புறத்திலும், ஆண்டாள் சந்நிதி வலது புறத்திலும் இருக்கும்.
ஸ்ரீதேவி தாயார் இங்கும் திருவிடவெந்தை என்ற திவ்ய தேசங்களில் மட்டுமே எம்பெருமானுக்கு இடப்பக்கத்தே இருப்பது.
தனிக் கோவில் நாச்சியார் மரகதவல்லி தாயார். வறுத்த பயிறு முளைக்க வைக்கும் தாயார் என்பது ஒரு நம்பிக்கை. பிள்ளைப்பேறு வேண்டுபவர் இங்குள்ள புஷ்கரணியில் சாயங்காலம் மடியில் பச்சைபயிற்றை கட்டிக்கொண்டு நீராடி, அதை திருமடப்பள்ளியில் கொடுத்து வறுத்து எடுத்தபின், மீண்டும் தன்னுடைய இடுப்பில் கட்டிக்கொண்டு இரவு தூங்கி எழுந்தால், மறுநாள் காலை, அந்த வறுத்த பயிறு முளை விட்டு இருக்கும் என்றும் இந்த மரகதவல்லி தாயாரின் கருணையினால் பிள்ளைப்பேறு உண்டாகும் என்றும், நம்பிக்கை. இதனால் இந்தத் தாயாருக்கு வறுத்த பயறு, முளைவிக்கும் மரகதவல்லித் தாயார் என்றும் பெயர்.
இங்கு கோவிலுக்கு எதிர்ப்புறத்தில் குளத்திற்கு அருகே ஜடாயுவுக்கு சன்னதியுள்ளது. இங்கு எம்பெருமான் வெளியே புறப்பாடு காணும் போது எல்லாம், ஜடாயுவுக்கும் சகல மரியாதைகளும் நடைபெறும்.
ஜடாயுவிற்கு இறுதிச்சடங்குகள் செய்த திருத்தலம் என்பதால் அதற்கு மரியாதை கொடுக்கும் வண்ணம், கொடிமரமும் பலிபீடமும் கோவிலுக்கு வெளியே அமைந்து உள்ளன.
க்ருத்ர புஷ்கரணி என்பது இங்குள்ள திருக்குளம். க்ருத்ர என்றால் பறவைகளின் ராஜாவான ஜடாயுவைக் குறிக்கும். இந்த புஷ்கரணியில் நீராடி மரகத்தவல்லி தாயாரையும், எம்பெருமானையும் சேவித்தால் எல்லா நோய்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.
இராமானுஜர் படித்த மண்டபம் இன்றும் உள்ளது. இராமானுஜர் கல்வி கற்றதை விளக்கும் சிற்பமும் இக்கோவிலில் உள்ளது. கூரத்தாழ்வார், மணவாள மாமுனிகள் இவர்களுக்கும் சன்னதி உண்டு.
இங்கு எம்பெருமான் புறப்பாடு காணும் குதிரை வாகனம் அதிசயமானதாகும். மரத்தினால் செய்யப்பட்ட குதிரை உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புக்களைக் கொண்டது. இதனை உருவாக்கிய கலைஞன் இது போல் இனி வேறு யாருக்கும் செய்வதில்லை என்று உறுதியோடு இருந்து இறந்தான். இவனது உறுதிக்கும் பக்திக்கும் பாராட்டுத் தெரிவித்து பெருமாள் 8ஆம் நாள் உற்சவத்தன்று அவனது வீதிக்கு எழுந்தருளுகிறார்.
இக்கோவிலைப் ‘போரேற்றுப் பெருமாள் கோவில்’ என்றும் ‘சித்தன்னவேலி திருப்புட்குழி நாயனார் கோவில்’ என்றும் சொல்லும், பாண்டிய, விஜயநகர பேரரசு காலத்திய கல்வெட்டுகள் உள்ளன.
இராமனே இங்கு ஜடாயுவிற்கு ஈமக்கிரியை செய்து இருப்பதால், அமாவாசை, மஹாளயம் போன்ற சமயங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது பல மடங்கு பலன் கொடுக்கும் என்று நம்புகிறார்கள்.
எம்பெருமான், மோக்ஷம் அழிப்பார்; தாயார் பிள்ளைப் பேறு அளிப்பார்; புஷ்கரணி நோய்கொடிகளை நீக்கும்.
ஸ்தல வரலாறு
ஜடாயுவாகிய பறவைக்கு இராமபிரான் ஈமக்கிரியை செய்து மோக்ஷம் அளித்த திருத்தலம்.
இத்தலத்திற்கு கூறப்படும் அதே வரலாறு அப்படியே புள்ளம்பூதங்குடி ஸ்தலத்திற்கும் கூறப்படுகிறது. அங்கே சொன்னது போல், இது தொண்டை நாட்டில் நடந்ததா, சோழ நாட்டில் நடந்ததா அல்லது மராட்டிய அல்லது கர்நாடக மாநிலங்களில் நடந்ததா என்று விவாதிப்பதை விட, பல இடங்களில், பலருக்கு எம்பெருமான் காட்சி இவ்வாறாக அளித்திருக்க கூடும் என்று மனதில் கொண்டு எல்லாவற்றையும் அனுபவிக்கலாம்.
இராமாயணத்தில், சீதையை இராவணன் சிறையெடுத்துச் சென்றபோது அவனை எதிர்த்து போரிட்ட ஜடாயு இராவணனால் வெட்டப்பட்டு இவ்விடத்தில் வீழ்ந்தார். பின்னர் சீதையைத் தேடி அவ்வழி வந்த இராமனிடம் இராவணன் பற்றிய விவரங்களைத் தெரிவித்துவிட்டு ஜடாயு உயிர் நீத்தார். ராமன், தன் திருத்தகப்பனாரான தசரதனுக்கு செய்யாத அந்திமச் சடங்குகளை ஜடாயுவிற்கு தனது திருக்கரங்களால் செய்து, ஜடாயுவிற்கு மோட்சமும் அளித்து தன்னுடைய பெரிய தகப்பனார் என்று மரியாதையும் செய்தார்.
ஜடாயுவுக்கு மோட்சமளித்த ராமன் இங்கு அவரது அம்பினால் ஜடாயு தீர்த்தத்தை உண்டாக்கினார் என்று சொல்லப்படுகிறது.
ஆழ்வார் ஆச்சாரியார்
இங்கு எழுந்தருளியுள்ள விஜயராகவப் பெருமாளுக்கு வடமொழியில் ஸமர புங்கவன், என்று பெயர். இதை புட்குழி எம் போர் எற்றை என்று ஆழ்வார் தமிழில் உரைத்தார்.
இவ்வூரில் வாழ்ந்த யாதவப் பிரகாசர் என்பவரிடமே இராமானுஜர் முதலில் வேத பாடங்களைப் பயின்றார். இராமானுஜரோடு எம்பார் என்ற ஆச்சார்யாரும் இங்கு தான் வேதபாடங்கள் கற்றார்.
நம்பிள்ளை என்ற ஆச்சாரியாரின் சீடரான பின்பழகிய பெருமாள் ஜீயர் அவதரித்த தலம் ஆகும்.
கம்ப ராமாயணத்தில் ஜடாயு
Mr, Swaminathan, one of the experts in both Valmiki and Kamba Ramayanam, has written about Kamba Ramayanam and we are happy to host his daily posts on Kamba Ramayanam. Kamban has written about Jatayu in two subsections, namely, சடாயு காண் படலம், ஜடாயு உயிர் நீத்த படலம் consisting of about 265 poems. He has taken some selective poems from Kamba Ramayanam on Jatayu and we are happy to share the same for you.
அடியேன் தாசன் அருமை!🙏🏽🙏🏽
கூடவே ஸ்வாமி தேசிகன் ஆசார்யனது காலத்தில் ஊர் மக்களுக்கு வந்த தொற்றுநோயை குணப்படுத்த இத்திருத்தலத்தில் தான் சக்கரத்தாழ்வான் மீதான ஷோடஶாயுத ஸ்தோத்ரம் மற்றும் ஶ்ரீ ஸுதர்ஶனாஷ்டகம் என்ற ஸ்தோத்ரத்தையும் அருளிச்செய்தார் எனவும் தெரிகிறது.🙏🏽🙏🏽
அடியேன். நன்றி. இந்த வரலாறு அடியேன் கேள்விபட்டு உள்ளேன். இதில் பதிவு செய்ய மறந்து விட்டேன் என்று கூறி மீண்டும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மகிழ்ச்சி.