A Simple Devotee's Views
To Read this in English, please click here, thanks
திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடிஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.
முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் “கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான்” என்று சொல்லி நம்மை அரங்கனிடம் அழைத்து செல்கிறார்.
அப்படியும் மக்கள் எல்லோரும் ஆழ்வார் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் அவர்களை விட்டு, எம்பெருமான் தனக்கு செய்த மிக பெரிய உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார்.
இதுவரை, எம்பெருமான் தனக்கு கொடுத்த அனுபவத்தை சொல்வது (1-3), தன்னுடைய அனுபவத்தை கொண்டு உபதேசம் செய்வது (4-14), மற்றும் எம்பெருமான் தனக்கு செய்த நன்மைகளை நினைத்துக் கொள்ளுதல்(15-24) என்ற முதல் மூன்று உட்பிரிவுகளை பார்த்தோம்.
இனி, தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை, எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட நான்காவது பகுதி. இந்த பகுதியில் ஆழ்வார் நாத்திகம் பேசுவதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால், ஆழ்வார் ஒரு நிலையை கடந்து மற்றொரு உயர்ந்த நிலையை பற்றி நமக்கு சொல்கிறார் என்றே எடுத்துகொள்ள வேண்டும். உதாரணமாக, ஆழ்வார் கர்ம, ஞான பக்தி யோகங்கள் தன்னிடம் இல்லை என்றும், முக்கரணங்களால் தான் அர்ச்சித்தது இல்லை என்றும் சொல்வது எம்பெருமான் எல்லாம் தெரிந்தவர், எல்லாம் வல்லவர், எல்லாம் அவன் செயல், சர்வ சுதந்திரமாக செயல்படுபவர் என்றும் எல்லாவற்றையும் முழுவதுமாக மனதில் கொண்டு, தான் அவனின் அடிமை என்றும், தன்னால் ஒன்றும் தனியாக இயங்க முடியாது என்றும், தன் முயற்சியால் ஒன்றும் நடக்கக்கூடாது என்றும், அவனே தனக்கு எல்லாம் அருள வேண்டும் என்ற ஒரு உயர்ந்த நிலையை மனதில் கொண்டு இந்த பகுதியில் உள்ள 10 பாசுரங்களை பாடுகிறார் என்று கொள்ளவேண்டும். ,
இந்த பகுதியின் முதல் பாசுரத்தை, திருமாலையின் 25வது பாடலை (குளித்து மூன்று அனலை) சென்ற வலைப்பதிவினில், ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி கூட இல்லை, திருவரங்கன் அந்தத் தகுதி முதல் எல்லாவற்றையும் அருள வேண்டும் கேட்டு கொண்டதை பார்த்தோம். இனி அடுத்த பாசுரம்.
போதெல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புனைய மாட்டேன், தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக்குணம் செப்ப மாட்டேன், காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலே, ஏதிலேன் அரங்கற்கு எல்லே என் செய்வான் தோன்றினேனே. திருமாலை 26
ப்ராமண, க்ஷத்ரிய, வைஸ்யர்களுக்கான கர்ம, ஞான, பக்தி யோகங்கள் இல்லை என்றால், மற்றவர்கள் செய்யக்கூடிய அர்ச்சனை, துதி போன்றவற்றை செய்யலாமே என்று பெரியபெருமாள் கேட்க, அவைகளும் தன்னிடம் இல்லை என்று ஆழ்வார் சொல்வதாக அமைந்த பாசுரம். பூக்களைக்கொண்டு அவனை அலங்கரிப்பது, வாக்கினால் அவனுடைய ஸ்தோத்திரங்களைச் சொல்வது, மனதினால் அவனை நினைப்பது என்று இந்த பாடலில் சொல்வது மூன்றும், எம்பெருமான் கேட்ட அர்ச்சனை, துதி ஆகும்.
எல்லாக்காலங்களிலும் பூக்களை கொண்டு, அவனுடைய அழகிய திருவடிகளில் சமர்பிக்க சக்தி அற்று இருப்பதாகவும், குற்றமற்ற வார்த்தைகளைக்கொண்டு அவனின் நற்குணங்களை சொல்ல முடியாதவனாக இருப்பதாகவும், உண்மையான காதலினால் அவன் மீது வரும் அன்பை தன் நெஞ்சத்தில் சேர்க்கவில்லை என்றும் ஆழ்வார் சொல்லி, தன்னுடைய ஒரு அவயத்தாலும் (உறுப்பினாலும்) திருவரங்கனை அனுபவிக்கவில்லை என்பதால், தான் ஏன் பிறந்தேன் என்று கதறுகிறார்.
இங்கு பூதத்தாழ்வார் பாடிய “போதறிந்து வானரங்கள் பூஞ்சுனைபுக்கு, ஆங்கலர்ந்த, போதரிந்து கொண்டேத்தும் போது,உள்ளம் – போது, மணிவேங்கடவன் மலரடிக்கே செல்ல, அணிவேங்கடவன் பேர் ஆய்ந்து. (இரண்டாம் திருவந்தாதி 72) பாசுரத்தை நினைவில் கொள்ளலாம். திருமலையில் உள்ள குரங்குகள், திருவேங்கடமுடையானுக்கு அதிகாலையில். முக்கரணங்களாலும் சேவை செய்கின்றன என்றும் பூக்களை பறித்து சமர்பிக்கின்றன என்றும் ஆழ்வார் பாடுகிறார். பேர் ஆய்ந்து என்பது வாயினால் திருநாமங்களை சொல்வது. ஏத்தும் போது,உள்ளம் என்பது மனத்தினால் ஸ்தோத்திரம் செய்வதை சொல்வது. போது அரிந்து கொண்டு என்பது பூக்களை கைகளால் பறித்துக்கொண்டு வருவதை சொல்வது.
எல்லா காலத்திலும் சிவந்த பூக்களைக் கொண்டு பொன் போன்ற அவனுடைய திருவடிகளை அலங்கரிப்பதே சரியான ஒன்று, அப்படி செய்வதில் தனக்கு ஊற்றம் இல்லை என்றும் அதற்கான சக்தியும் இல்லை என்று ஆழ்வார் சொல்கிறார். அவனைத்தவிர மற்ற விஷயங்களில் சக்தியும் ஊக்கமும் உள்ளன என்று கூறுவதாக கொள்ளலாம். முன்பு சொன்னது போல் விஷ்ணுதர்மத்தில், எந்த நாக்கு விஷ்ணுவின் பெயரை சொல்கிறதோ அதுவே நாக்கு எந்த உடல் விஷ்ணுவைப் பணிகிறதோ அதுவே உடல், மற்றதெல்லாம் வீண் என்று சொன்னதை நினைவில் கொள்ளலாம்.
இந்த சொற்தொடரில், முதல் போது, என்பது காலத்தையும், இரண்டாவது போது என்பது பூக்களையும் குறிக்கின்றது.
எல்லா காலத்திலும் செய்ய முடியவில்லை, எப்போதாவது ஓரிரு முறை செய்ய முடியும் என்ற கருத்து இல்லை. எந்த காலத்திலும் (ஒரு முறை கூட) அர்ச்சிக்க முடியாதவனாக, சக்தி இல்லாவதவனாக உள்ளேன் என்றே ஆழ்வார் சொல்வதாக உரையாசிரியர் கூறுகிறார்.
ஹரி என்று இரண்டு எழுத்துகளை ஒரு முறை சொன்னாலே மோக்ஷம் செல்ல வேண்டிய அனைத்துக் காரியங்கள் செய்யப்பட்டன என்று விஷ்ணு தர்மத்தில் (70.84) சொல்லப்பட்டது. கோவிந்தா என்று ஒருமுறை நினைத்தால், நூற்றுக்கணக்கானப் பிறவிகளில் செய்த பாவக்கூட்டத்தை நெருப்பு பஞ்சுமூட்டையை எரிப்பது போல் எரித்து விடுகிறான். ஒரு தடவை சரணம் அடைந்தவன் பொருட்டும், அவனுக்கு அடியேன் ஆகிறேன் என்று சொல்பவன் பொருட்டும் அவர்களுக்கு முழுவதும் அபயமளிக்கிறேன் என்றும் அதுவே தன்னுடைய விரதம் எனறும் இராமபிரான்(இராமாயணம், யுத்த காண்டம், 18-33) சொன்னதை நினைவில் கொள்ளவேண்டும்.
இப்படி, ஒரு காலத்தில்/ஒரு முறை அவனிடம் ஈடுபாடு கொண்டாலே, பலன் கொடுக்கவல்ல பெருமை உடையவன் அவன். அப்படிப்பட்டவனை ஒரு காலத்திலும் அர்ச்சிக்க சக்தி இல்லாவதன் ஆகிவிட்டேன் என்று ஆழ்வார் சொல்கிறார்.
எம்பெருமானுக்கு பூக்களைக்கொண்டு செய்கின்ற சேவை, அவனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, ஏனென்றால் விஷ்ணு அலங்காரப்ரியன், சிவன் அபிஷேகப்ரியன். கைங்கர்யத்தில் தவறு நிகழ வாய்ப்பு மிக குறைவாக உள்ளது. அதனை செய்வது எளிதாகிறது. நம் சம்பிரதாயத்தில், இந்த கைங்கர்யத்தைப் பலர் செய்து உள்ளனர்.
பெரியாழ்வார், ஸ்ரீவில்லிபுத்தூரில் நந்தவனம் அமைத்து மலர்கள் பயிரிட்டு அவற்றை கொண்டு வடபத்ரசாயிக்கு தொண்டு செய்து வந்தார் என்பது வரலாறு. அதே நந்தவனத்தில் தான் ஆண்டாளையும் கண்டெடுத்து தன் மகளாக வளர்த்து வந்தார். பெரியாழ்வார் ‘ஆனிரை மேய்க்க‘ என்று யசோதை நிலையில் இருந்து எம்பெருமானுக்கு பலவிதமான மலர்களை சூட்டி அழகு பார்த்ததை, பெரியாழ்வார் திருமொழியில் (2.7) அனுபவித்து பாடி உள்ளார்.
ஆண்டாள், திருமாலுக்கு பூமாலையோடு பாமாலையும் சூட்டி, சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று ஆனாள். தூமலர் தூவித் தொழுது, நாவினால் பாடி, மனதினால் சிந்திக்க (திருப்பாவை 5) என்பதால், எம்பெருமானை முக்கரணங்களால் அர்ச்சிக்க வேண்டும் என்பதை எளிதாக எடுத்து சொன்னவர்.
தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருவரங்கத்தில் நந்தவனம் அமைத்து கைங்கரியம் செய்து வந்தார் என்பதும், திருமங்கையாழ்வார் கோவிலுக்கு திருமதில் கட்டும்போது இந்த நந்தவனத்தை விட்டு அதற்கு ஒரு தடையும் வராமல் காட்டினார் என்பதும் வரலாறு.
கண்ணன், கம்சனை அழிப்பதற்கு முன், மாலாக்காரன் என்ற அடியவன் கண்ணனுக்கு சிறந்த பூ மாலைகளை சூட்டி அழகு பார்த்து அனுப்பி வைத்தான் என்பது பாகவதத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம். ஸ்வாமி ராமானுஜரின் எண்ணத்திற்கு ஏற்ப திருமலையில் நந்தவனம் உருவாக்கி, அங்கே பூக்கும் பூக்களைக்கொண்டு ஏழுமலையானுக்கு பல ஆண்டுகள் புஷ்ப கைங்கர்யம் செய்தவர் அனந்தாழ்வான் என்னும் ஆச்சாரியர். அவர் உபயோகித்த கடப்பாரை இன்றும், திருமலையில் காட்சிக்கு உள்ளது.
நம்மாழ்வார் புஷ்பகைங்கர்யத்தைப் பற்றி பாடிய ‘மாலை நண்ணி தொழுது எழுமினோ‘ என்று பாடிய திருக்கண்ணபுர பாசுரங்களையும் (9.10) இங்கே நினைவில் கொள்ளலாம். காலை மாலை கமல மலர் இட்டு என்றும், கள் அவிழும் மலர் இட்டு என்றும், விண்டு வாடா மலர் இட்டு என்றும், தேனை (உடைய) வாடா மலர் இட்டு என்றும், பாடியதை நாமும் அனுபவிக்கலாம்.
இப்படி உடம்பினால் செய்யும் கைங்கர்யங்கள் செய்யாமல், மற்ற உலக விஷயங்களில் ஈடுபட்டாலும், குற்றமற்ற வாக்கினைக் கொண்டு எம்பெருமானின் திவ்ய குணங்களை சொல்வதே போதுமானது என்று பெரியபெருமாள் சொல்லியபோது, ஆழ்வார் தன்னுடய வார்த்தைகள் குற்றமற்றவைகளாக இருந்தபோதிலும், அவை அழகானவைகளாக இருந்தபோதிலும், எம்பெருமானுடைய திருக்குணங்களை பேச இயலாதவனாக இருக்கிறேன் என்று ஆழ்வார் கூறுகிறார். ஆழ்வார் விஷ்ணுதர்மத்தில் கூறியபடி எம்பெருமானை பற்றி பேச வேண்டிய நாக்கு, மற்ற விஷயங்களை பேசும் போது நறுக்கு தெரித்தாற்போல் உள்ளது என்றும் எம்பெருமான் விஷயத்தில் அதனால் இயலவில்லை என்றும் கூறுகிறார்.
உடம்பினாலும் வாக்கினாலும் சேவை செய்யமுடியாவிட்டாலும், நெஞ்சத்தைக்கொண்டு எம்பெருமானிடம் அன்பு செல்லுத்தலாமே, என்று பெரியபெருமாள் வினவியபோது, ஆழ்வார், இந்த விஷயத்தில், காதலால் வரும் அன்பு வரவில்லை என்று கூறுகிறார். விஷயங்கள் சேரும் போது, காமம் வருகிறது என்றும், காமத்தினால் கோபம் வருகிறது என்றும் பகவத் கீதை (2.62) சொன்னபடி, ஆழ்வார் தான் இதுவரை அனுபவித்த காதலும் உண்மையானது அல்ல என்றும், அவர்களின் பொருள்களை கவர்வதற்கே அப்படி செய்ததாகவும் சொல்கிறார்.
இங்கு உரையாசிரியர், ஆளவந்தாரின் ஸ்தோத்ர ரத்னத்தின் 62வது ஸ்லோகத்தை எடுத்து கொள்கிறார். அதில், தான்,
என்று சொல்லி, கரை காணா துன்பக்கடலைக் கடந்து, எப்படி அவனை அடைந்து அவனுக்கு அடிமை செய்வது என்று கூறுகிறார். அடுத்து, விஷ்ணு புராணத்தில் (3.7.30) இருந்து, எவன் ஒருவன் கெட்டபுத்தியுடன், தன் உயிர் நண்பனுக்கும், சொந்தங்களுக்கும், மனைவிக்கும், பிள்ளைகளுக்கும், தாய் தந்தையருக்கும், வேலைக்காரர்களுக்கும் கெடுதல் நினைத்து, அவர்களின் செல்வங்களை கவர நினைக்கிறானோ அவன் தன்னுடைய பக்தன் இல்லை என்று எம்பெருமான் சொல்வது மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
மனம், வாக்கு, உடல் என்ற இந்த முக்கரணங்களாலும் அவனிடம் ஈடுபாடு கொண்டு பயன் பெரும் பெரியவர்கள் போல் இல்லாமல் தன்னால், ஒரு கரணத்தால் கூட ஈடுபாடு கொள்ள முடியாதவானாக, ஓன்றும் இல்லாதவனாக, இருப்பதாக ஆழ்வார் கூறுகிறார்.
இங்கு மறுபடியும், ஆளவந்தாரின் ஸ்தோத்திர ரத்னத்தின் 16வது பாடலை எடுத்துக்கொண்டு எம்பெருமான் எப்படி தன்னுடைய முக்கரணங்களால் அடியவர்கள் இடத்தில உண்மையாக உள்ளான் என்பதற்கு மேற்கோள் காட்டுகிறார். இயற்கையாகவே எம்பெருமான் எல்லா கல்யாண குணங்களின் கடலாக இருப்பவன் என்பதை, கீழ்கண்டவாறு ஒரு பட்டியல் இடுகிறார்.
தொண்டரடிப்பொடி ஆழ்வார் இந்த பாசுரத்தில் சொல்வது, இப்படி கஷ்டப்பட்டு சாஸ்திரங்களை படித்து தெரிய வேண்டாதபடி, நேரடியாகவே சுலபமாக தெரிந்துகொள்ள சயன திருக்கோலத்தில், பள்ளி கொண்டுள்ள திருவரங்கன் இருக்கிறான் என்கிறார். இப்படிப்பட்ட பெரியபெருமாளுக்கு ஒரு கரணத்தினால் கூட அர்ச்சனம் ஏதும் செய்யாமல், ஒன்றும் இல்லாதவன் ஆகிவிட்டேன் என்று புலம்புகிறார்.
எம்பெருமான் தன்னை அவனிடம் சேர்க்காததற்கு தன்னுடைய எந்த ஒரு குற்றமும் காரணம் இல்லை என்றும், தான் செய்த பாவங்களே காரணம் என்றும் இந்த ஒரு ‘எல்லே‘ என்ற வார்த்தையினால் ஆழ்வார் கூறுகிறார். ஆழ்வார், தான் அருகில் இல்லாததாலோ, தான் தகாதவராய் இருப்பதாலோ, தான் எம்பெருமானிடம் உள்ளவற்றை குறைகளாகப் பார்ப்பதாலோ, எம்பெருமானை இழக்கவில்லை என்றும், தன்னுடைய பாவங்களால் தான் இழந்தோம் என்றும் சொல்கிறார். எம்பெருமான், குற்றத்தை பாராமல் அதையே குணமாக கொள்ளும் இனியவன் என்பதையே காரணமாகச் சொல்கிறார். மேலும், எம்பெருமான் மிக விரும்பும் கௌஸ்துபமணி போல் உள்ள இந்த ஆத்மா வீணானதே என்று வருந்துகிறார். பெரியதிருமொழி (3.7.6), “அரங்கத்து உறையும் இன் துணைவன் ” என்ற பாசுரம் மேற்கோளாக சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட இனிமையான துணைவனை விட்டு வெகுதூரம் போய்விட்டேன் என்று ஆழ்வார் சொல்கிறார். பால் மருந்தாகவும், அதுவே அனுபவிக்க கூடிய ஒரு பொருளுமாக இருப்பது போல் அழகுடன் கூடிய, மோக்ஷத்தை அளிக்கவல்ல எம்பெருமானை இழந்தோமே என்று கதறுகிறார்.
விஷ்ணுதத்வத்தில் சொன்னபடி, எம்பெருமான் தமக்கு அளித்த கை, உடல், மனம் போன்றவற்றை அவருக்குப் பயன் படுத்தாமல், வீணடித்த தாம் ஏன் தான் பிறந்தோமோ என்பதை, ஆழ்வார் தோன்றினோமோ என்று கூறுகிறார். தீய கோள்கள் வானில் வருவதை, தோன்றின என்று கூறுவது வழக்கம். அதுபோல், தான் பிறந்ததும், தீய கோள் போல், பிறருக்கு நன்மை செய்யாமல், தீயவை புரியவே என்று ஆழ்வார் தான் பிறந்ததும் தீங்கு விளைவிப்பதாகி விட்டதே என்று கூறி இந்த பாடலை முடிக்கிறார்.
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்