A Simple Devotee's Views
அஞ்சிலைவல்லி நாச்சியார் ஸமேத ஆதிவராக பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
திவ்யதேசம் | திருக்கள்வனூர் | |||
மூலவர் | ஆதிவராகப்பெருமாள் | |||
உத்ஸவர் | ||||
தாயார் | அஞ்சிலைவல்லி நாச்சியார் | |||
திருக்கோலம் | நின்ற திருக்கோலம் | |||
திசை | மேற்கு | |||
பாசுரங்கள் | 1 | |||
மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 1 | |||
தொலைபேசி | +91 44 3723 1988 ; +91 93643 19545 |
தொண்டை நாட்டு திருப்பதிகள் பற்றி ஒரு முன்னுரையை இங்கே காணலாம், நன்றி
கோவில் பற்றி
இந்த திருத்தலம், காஞ்சி காமாட்சி கோவிலுக்குள்
உள்ளது. காமாட்சியம்மன் கர்ப்பக் கிரஹத்திற்கு முன் மேற்கு நோக்கிய திருக்கோலத்தில் நான்கு திருத்தோள்களுடன் எழுந்தருளியிருக்கிறார்.
மூலவர் நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். தாயார் அமர்ந்து வணங்கும் நிலையில் காட்சி அளிக்கிறார். காமாட்சியம்மன் திருக்குளத்தின் வடகிழக்கு மூலையில் நின்றான், இருந்தான், கிடந்தான் என்று மூன்று திருக்கோலங்களை மூன்று அடுக்குகளில் எம்பெருமான்கள் எழுந்து அருளி உள்ளனர்.
தனியாக சன்னதி, உற்சவர் மூர்த்தி போன்றவை இல்லாததனால் உற்சவங்களும், விழாக்களும் இல்லை. நித்தியபடி பூஜையும் காமாட்சியம்மன் கோவில் அர்ச்சகர்களாலேயே செய்யப்படுகிறது.
ஸ்தல வரலாறு
ஸ்தல வரலாறு என்பது செவி வழி செய்திகளாகவே உள்ளன. காமாட்சி அம்மன் கோவில் வரலாற்றில் சில தகவல் கிடைக்கலாம்.
பார்வதி தேவி சிவனின் கட்டளைக்கு இணங்கி இங்கு வாமனனை குறித்து தவம் செய்து காமாட்சி என்று பெயர் பெற்றதாக சொல்கிறார்கள். ஆனால் இங்குள்ள எம்பெருமான் ஆதி வராக மூர்த்தி. ஆனால் அந்த காலங்களில் பல இடங்களில், வராக மூர்த்திதான் முதலில் வணங்கப்பட்டார், உதாரணம், திருமலை.
பார்வதி, எம்பெருமானின் அருளைப்பெற்று காமாட்சி என்று ஆனதால், இங்குள்ள காமாட்சி அம்மன் உள்ள காயத்ரி மண்டபம் எம்பெருமானின் சன்னதியை விட சற்று தாழ்ந்த இடத்தில உள்ளதாகவும் அது பார்வதி தேவி தன்னுடைய அண்ணனுக்கு தரும் மரியாதை என்று தானே ஏற்படுத்திக் கொண்டதாகவும் சொல்லப் படுகிறது.
இவ்விடத்தில் ஒரு சமயம் லட்சுமி தேவியும் பார்வதியும் பேசிக்கொண்டு இருந்ததை, மஹாவிஷ்ணு மறைந்திருந்து கேட்டதாகவும், அதை அறிந்த காமாட்சி எம்பெருமானைக் கள்வன் என்று அழைத்ததால்
இந்த எம்பெருமானுக்கு கள்வன் என்று திருநாமம் ஏற்பட்டது என்று கூறுவார்கள்.
இவ்விடத்து எம்பெருமான் தனது நின்ற, வீற்று இருந்த, கிடந்த என்னும் மூன்று திருக்கோலங்களை பார்வதிக்கு காட்டி அருளியதாகவும் அவரின் வேண்டுகோளின்படி எம்பெருமான் இங்கேயே உறைவதாகவும் கூறுவார்கள்.
தசரதன், இராம அவதாரத்திற்கு முன் இங்குள்ள எம்பெருமானை வணங்கியதாகவும், பின் திருப்புல்லாணியில் புத்திரகாமேஷ்டி யாகம் செய்து அவனை மகனாகப் பெற்றதாகவும், அவனை மகனாகப் பெற, அவனிடமே வேண்ட செய்த எம்பெருமான் என்ற பெருமையை பெற்றதாகவும் சொல்கிறார்கள்.
ஆழ்வார்
கள்வா என்னும் ஒரு சொல்லே இத்தலத்திற்கும் இந்த எம்பெருமானுக்கும் திருமங்கைஆழ்வார் இட்ட மங்களாசாசனம் ஆகும். கள்வன் என்ற அர்த்தத்துடன் கூடிய திருநாமங்களைக் கொண்டு பாண்டி நாட்டு ஸ்ரீ வைகுண்டம் திவ்யதேசத்தில் கள்ளப்பிரானும் திருமாலிருஞ்சோலையில் கள்ளழகரும் உண்டு.
ஓர் சொல்லாலோ, சொற்தொடராலோ, ஆழ்வார்களால் திவ்யதேசங்கள் ஆனா வேறு சில திருத்தலங்களை கீழே காணலாம். திருமங்கையாழ்வார், கோழியும் கூடலும் கோயில் கொண்ட என்பதில் கோழியும் என்ற ஒரு சொல்லால் உறையூர் திருத்தலத்தையும், கரம்பனூர் உத்தமனை என்பதில் கரம்பனூர் என்ற ஒரு சொல்லால், திருக்கரம்பனூர் திவ்யதேசத்தையும், உலகமேத்தும் கண்டியூர் என்பதில் கண்டியூர் திருத்தலத்தையும் மங்களாசாசனம் செய்துள்ளார். திருமழிசையாழ்வார், ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் என்ற சொற்தொடரால், கபிஸ்தலம் திவ்யதேசத்தை மங்களாசாசனம் செய்துள்ளார். இவைகளைத் தவிர பேரன்பில் என்ற ஒரு வார்த்தையால், அன்பில் திவ்யதேசத்தை திருமழிசையாழ்வாரும், திருநீரகம், திரு நிலாத்திங்கள்துண்டம், திருக்காரகம், திருக்கார்வானம் என்ற திவ்யதேசங்களை திருமங்கையாழ்வாரும், ஒரு சொற்தொடரால் பாடி உள்ளனர் என்று பார்த்து உள்ளோம்.
Google Map
திருக்கள்வனூர் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
திருக்கள்வனூர் பற்றி தினம் ஒரு திவ்யதேசம்