A Simple Devotee's Views
பத்மாமணி தாயார் ஸமேத கருணாகரப் பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
திவ்யதேசம் | திருக்காரகம் | |||
மூலவர் | கருணாகரப்பெருமாள் | |||
உத்ஸவர் | ||||
தாயார் | பத்மாமணி நாச்சியார் / ரமாமணிநாச்சியார் | |||
திருக்கோலம் | நின்ற திருகோலம் | |||
திசை | தெற்கு | |||
பாசுரங்கள் | 1 | |||
மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 1 | |||
தொலைபேசி | +91 94435 97107, +91 98943 88279 |
தொண்டை நாட்டு திருப்பதிகள் பற்றிய ஒரு சிறு முன்னுரைக்கு இங்கே செல்லவும், நன்றி
கோவில் பற்றி
காரகத்தாய் என்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த “காரகம்” என்னும் திவ்யதேசம் காஞ்சி நகரத்திற்குள்ளே ஊரகம் திவ்யதேசத்திற்குள்ளே இருக்கிறது.
காரகம், நீரகம், ஊரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேச எம்பெருமான்களும் சேர்ந்து காஞ்சிபுரம், உலகளந்த பெருமாள் கோவிலில் எழுந்தருளி உள்ளனர். காரகம், நீரகம், கார்வானம் என்ற மூன்று திவ்யதேச பெருமான்களும் ஊரக திவ்யதேச எம்பெருமானான உலகளந்த பெருமாளின் பெருமை, திருகுணங்களுக்கு விளக்கமும் உருவமும் கொடுக்கிறார்கள்.
நீர்மை என்னும் எளிய திருக்குணத்தை திருநீரகப் பெருமாளிடம் காண்கிறோம். அதே எளிமை திருக்குணத்துடன் ஏழை அந்தணராக வாமனனாக அவதரித்து த்ரிவிக்ரமனாக உருவெடுத்த திருஊரகப் பெருமானிடம் சேவிக்கிறோம்.
நீரைக்கொடுக்கும் மேகத்தை போன்ற கருணையை, காரக பெருமானிடம் சேவிக்கின்றோம். மேகம், யாருக்கு, எப்பொழுது, எங்கே என்றல்லாம் கேட்காமல் மழை பொழிவதைப் போல், திருக்காரக எம்பெருமானான கருணாகர பெருமாள் கருணை மழையை எல்லோருக்கும் அளிக்கிறார். இதே போல் திருக்குணத்தை ஊரக எம்பெருமானான உலகளந்த பெருமாளிடம் நாம் பார்க்கிறோம். யார், எங்கே, சரணாகதி கேட்டாரா, இல்லையா என்றெல்லாம் பார்க்காமல் எல்லோருடைய தலைகளிலும் த்ரிவிக்ரமனாக தன்னுடைய திருவடியைக்கொண்டு தீண்டி எல்லோருக்கும் மோக்ஷம் அளித்ததை, அந்த எம்பெருமானின் தனிப்பெருமையாக நமது ஆச்சாரியார்கள போற்றி உள்ளனர்.
கதாபுநச்சங்க ரதாங்க கல்பக
த்வஜாரவிந்தாங்குச வஜ்ர லாஞ்சநம் |
த்ரிவிக்ரம த்வச்சரணாம்புஜத்வயம்
மதீய மூர்த்தாநமலங்கரிஷ்யதி
இதன் அர்த்தம் “த்ரிவிக்ரமா! மங்களகரமான ஸுதர்சன சக்கரம், கல்பக வ்ருக்ஷம், தாமரை போன்ற அடையாளங்களை உடைய உனது திருவடித்தாமரைகள் எப்போழுது என் தலையை அலங்கரிக்கப் போகிறது”.
கார்வானம் என்பது மேகம் இருக்கும் வானத்தைக் குறிப்பது. எங்கும் பரந்து விரிந்து உள்ள திருமால், விஸ்வம், விஷ்ணு போன்ற திருநாமங்கள் மூலம் வானத்தை தன்னுள்ளே கொண்டுள்ளார். த்ரிவிக்ரமன் இந்த மண்ணுலகத்தை ஒரு திருவடியாலும், வானத்தை இன்னொரு திருவடி மூலம் அளந்ததையும் ஊரக எம்பெருமானிடம் பார்த்து உள்ளோம்.
ஆக நீரகம், காரகம், கார்வானம், ஊரகம் என்ற இந்த நான்கு திவ்யதேசங்களும் சேர்ந்து இருப்பது நமக்கு எளிமை, கருணை, எங்கும், எல்லோருக்கும் என்று பாரபட்சம் இன்றி காக்கும் திருமாலின் திருக்குணங்களை நமக்கு தெரிவிக்கவே என்று கொள்ளலாம்.
கல்விக்கும். அறிவாற்றலுக்கும் இப்பெருமாள் வரப்பிரசாதி. கார்ஹ மஹரிஷி என்னும் முனிவர் இப்பெருமானைக் குறித்துத் தவமிருந்து அளவிறந்த ஞானம் பெற்றுள்ளார்.
ஸ்தல வரலாறு
கார்ஹ மஹரிஷி என்னும் முனிவர் இப்பெருமானைக் குறித்துத் தவமிருந்து அளவிறந்த ஞானம் பெற்று உய்ந்தார். அவரின் பொருட்டே இந்த திவ்ய தேசம் கார்ஹ அகம் என்று ஆகி பின்னர் காரகம் என்று மருவி இருக்கலாம் என்பர்.
ஆழ்வார்கள்
உலகமேத்தும் காரகத்தாய் என்ற திருமங்கை ஆழ்வாரின் திருநெடுந்தாண்டகம் பாசுரத்தினால்
மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசம் ஆகும்.
Google Map
திருக்காரகம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
திருக்காரகம் பற்றி தினம் ஒரு திவ்யதேசம் சொல்வது