A Simple Devotee's Views
கோமளவல்லித் தாயார் ஸமேத யதோத்தகாரி பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
திவ்யதேசம் | திருவெஃகா | |||
மூலவர் | யதோக்தகாரி சொன்னவண்ணம் செய்த பெருமாள் , வேகாஸேது | |||
உத்ஸவர் | யதோக்தகாரி | |||
தாயார் | கோமளவல்லி நாச்சியார் | |||
திருக்கோலம் | கிடந்த (புஜங்க சயனம்) | |||
திசை | மேற்கு | |||
பாசுரங்கள் | 15 | |||
மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 6 பேய்ஆழ்வார் 4 திருமழிசையாழ்வார் 3 பொய்கையாழ்வார் 1 நம்மாழ்வார் 1 | |||
தொலைபேசி | +91 44 3720 9752 |
தொண்டை நாட்டு திருப்பதிகளைப் பற்றி ஒரு சிறு முன்னுரையை இங்கே காணலாம், நன்றி.
கோவில் பற்றி
இந்த திருத்தலம், காஞ்சி வரதராஜப் பெருமாள் சன்னதிக்கு மேற்கே, அட்டபுயகரப் பெருமாளின் சந்நிதிக்கு எதிரில் அமைந்துள்ளது.
பொதுவாக எல்லா சயன திருக்கோலங்களிலும் எம்பெருமான் இடமிருந்து வலமாக அமைந்திருக்கும், ஆனால் இங்கு எம்பெருமான், வலமிருந்து இடமாக மேற்கே திருமுகமண்டலம் வைத்து, திருவடியை வடக்கிலும், திருமுடியை தெற்கிலும் கொண்டு காட்சி அளிக்கிறார். இதேபோல் மலையாள திவ்யதேசமான திருவட்டாறு (87) என்ற திருத்தலத்தில், சயனித்துள்ளார்.
திருமழிசையாழ்வாருடன் எம்பெருமான் புறப்பட்ட நிகழ்ச்சி இங்கு ஆண்டு தோறும் ஆழ்வார் அவதார தினமான தை மாதம் மகம் நட்சத்திரத்தன்று உற்சவம் நடைபெறுகிறது. அப்போது எம்பெருமானும் ஆழ்வாரும் வேகவதி ஆற்றங்கரை வரை சென்று மீள்வர்.
இந்த திருத்தலத்தின் தீர்த்தம், பொய்கை புஷ்கரணி. இங்கே தான் முதல் ஆழ்வாரான பொய்கை ஆழ்வார் புரட்டாசி மாதம், சரவண (திருவோண) நட்சத்திரத்தில் ஒரு பொற்றாமரையில் அவதரித்தார்.
ஸ்தல வரலாறு
சரஸ்வதி பலமுறை பிரம்மன் செய்து வரும் யாகத்தை தடுக்க முயற்சித்தும், அவை பலன் கொடுக்காமல் போனதால், பெரும் நதியாக மாறி, வெள்ளத்தோடு பெருக்கெடுத்து வந்து யாகத் தீயை அணைக்க முயற்சி செய்தாள். வேகமாக வந்ததால் இந்த நதிக்கு வேகவதி என்று பெயர் உண்டாயிற்று.
இதனை உணர்ந்த பிரம்மன், எம்பெருமானிடம் வேண்ட, வேகவதி நதியின் குறுக்கே எம்பெருமான் அணையாகப் படுத்துக் கொண்டார். எம்பெருமான் படுத்திருந்த திருக்கோலத்தைக் கண்ட சரஸ்வதி முன்னேறிச் செல்லாமல், பின் வாங்கினாள். இதனால் வேகாஸேது என்று பெயர் பெற்றாள். தமிழில் வேகவணை என்று ஆனது. நாளடைவில் வேகனை என்று திரிந்து பிறகு
வெஃகணையானது. அதுவும் பின்னால் வெஃகா என்றாயிற்று.
திருமழிசையாழ்வார் இத்திவ்ய தேசத்தில் சில காலம் தங்கி இருந்தார். அவருக்கு கணிகண்ணன் என்னும் சீடன் ஒருவன் இருந்தான். கணிகண்ணனும் திருவேக்காவில் சேவை செய்து வந்தனர். ஒரு வயதான மூதாட்டி ஆழ்வார்க்கு சிறந்த சேவை செய்து வந்தார். கணிகண்ணனும் தன் ஆசார்யார்க்கு சேவை செய்ததை பாராட்டி அந்த மூதாட்டியின் முதுகை தடவிக் கொடுத்ததால் அவரும் இளமை அடைந்தார். அதை தெரிந்து கொண்ட காஞ்சியை ஆண்டு வந்த பல்லவராயன் கணிகண்ணனை அணுகி தனக்கும் இளமையை வேண்டினார். கணிகண்ணன் மறுத்து ஆழ்வாரின் பெருமைகளை சொன்னார். அதற்கு அரசர் திருமழிசை ஆழ்வார் தன்னை பாடவேண்டும் என்று கேட்க அதற்கு தன் ஆச்சர்யார் பரம் பொருளான கடவுளைத் தவிர வேறு யாரையும் பாட மாட்டார் என்று சொன்னார். இதைக் கேட்டு, கோபமுற்ற அரசன், கணிகண்ணனை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார்.
இதைக் கேள்வியுற்ற ஆழ்வார், தானும் நாட்டை விட்டு செல்வதாக முடிவுசெய்து, அந்த ஊர் யதோத்தகாரி பெருமானிடம், கணிகண்ணன் இந்த ஊரை விட்டு போகின்றான், நானும் இந்த ஊரை விட்டு போகின்றேன், “நீயுமுன்றன் பைந்நாகப்பாய்சுருட்டி” கொண்டு வா, என்று சொல்ல, பெருமாளும் புறப்பட்டார். அப்படி அவர்கள் ஒரு இரவு தங்கிய இடம் ஓர் இரவு இருக்கை, அது மழுவி இன்று ஓரிக்கை என்ற இடம் ஆயிற்று.
பெருமாள் ஊரை விட்டு கிளம்பியதால் அந்த ஊர் மக்களும் ஊரை விட்டு கிளம்ப, மன்னன் தன் தவறை உணர்ந்து ஆழ்வாரை வேண்ட அவரும் மன்னனை மன்னித்து ஊருக்கு திரும்பினார். அப்போது கணிகண்ணன் மற்றும் பெருமாளையும் அவசரமாக அழைத்துக்கொண்டு சென்றார். ஆழ்வார் சொன்னபடி பெருமாள் செய்தமையால், பெருமானுக்கு “சொன்ன வண்ணம் செய்த பெருமான்” என்ற பெயர். ஆழ்வார் தம்மிடம் அவன் காட்டிய க்ருபையை “வெக்கணைக் கிடந்ததென்ன நீர்மையே!” என்று கொண்டாடினார். பெருமாள் அவசரமாக வந்து சயனித்த போது இடம் வலமாக மாறி சயனித்கொண்டு இருப்பார்.
பேய்ஆழ்வார் மூன்றாம் திருவந்தாதியில், “இசைந்த அரவமும் வெற்பும் கடலும், பசைந்த அங்கு அமுது படுப்ப, அசைந்து, கடைந்த வருத்தமோ கச்சி வெஃகாவில், கிடந்து இருந்து நின்றதுவும் அங்கு“, *64) என்று பாடிய பாடல், திருமழிசையாழ்வார் திருகுடந்தையில், ‘நடந்த கால்கள் நொந்தவோ?’ என்ற பாடலுக்கு ஒரு முன்னோடியாக இருந்தது என்றே சொல்லலாம்.
திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி 2-6-5 ல் சொல்லிய கச்சிக் கிடந்தவன் என்ற இச்சொல்லுக்கு வியாக்யானச் சக்ரவர்த்தி பெரியவாச்சான் பிள்ளை அடியவர்களுக்காக திருவெஃகாவிலே படுக்கை மாறி கைம்மாறிக் கிடந்தவனை என்று இந்தத் திருத்தலத்தின் எம்பெருமானையே சொல்லி உள்ளார்.
மணவாள மாமுனிகள் இங்கு தங்கி எம்பெருமானுக்கு கைங்கர்யங்கள் செய்து உள்ளார். பிள்ளை லோகாச்சார்யர் என்ற ஆச்சார்யாரும் இங்கு இருந்து சேவை செய்து உள்ளார். இவருக்கு இங்கு தனிச் சன்னதி
உள்ளது.
Google Map
சொன்ன வண்ணம் செய்த பெருமாள் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
திருவெஃகா பற்றி தினம் ஒரு திவ்யதேசம் சொல்வது
திருவெஃகா பற்றி நம் முந்தைய பதிப்பில்