A Simple Devotee's Views
நிலமங்கைவல்லி தாயார் ஸமேத ஜகதீசப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
திவ்யதேசம் | திருநீரகம் | |||
மூலவர் | ஜெகதீஸ்வரர் | |||
உத்ஸவர் | ஜெகதீஸ்வரர் | |||
தாயார் | நிலமங்கைவல்லி | |||
திருக்கோலம் | நின்ற | |||
திசை | தெற்கு | |||
பாசுரங்கள் | 1 | |||
மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 1 | |||
தொலைபேசி | +91 94435 97107 / +91 98943 88279 |
தொண்டை நாட்டு திவ்யதேசங்கள் பற்றிய ஒரு முன்னுரை இங்கே காணலாம், நன்றி.
கோவில் பற்றி
திருநீரகம், திருகாரகம், திருஊரகம், திருகார்வானம் என்ற இந்த நான்கு திவ்யதேசங்களும் உலகளந்த பெருமாள் கோவில் எனப்படும் ஒரே கோவிலில் உள்ளன. இது போல் ஒரே கோவிலில் பல திவ்யதேசங்கள் எங்கும் இல்லை. ஒரே கோவிலில் உள்ள பல எம்பெருமான்களை ஆழ்வார் பாடியுள்ளார். உதாரணம், திருவல்லிக்கேணி. பார்த்தசாரதி, அழகியசிங்கர், இராமர், வரதராஜன், மற்றும் ரங்கநாதன் என்ற ஐந்து எம்பெருமான்களையும் திருமங்கையாழ்வார் பாடியுள்ளார்.
காரகம், நீரகம், ஊரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேச எம்பெருமான்களும் சேர்ந்து காஞ்சிபுரம், உலகளந்த பெருமாள் கோவிலில் எழுந்தருளி உள்ளனர். காரகம், நீரகம், கார்வானம் என்ற மூன்று திவ்யதேச பெருமான்களும் ஊரக திவ்யதேச எம்பெருமானான உலகளந்த பெருமாளின் பெருமை, திருகுணங்களுக்கு விளக்கமும் உருவமும் கொடுக்கிறார்கள்.
நீர்மை என்னும் எளிய திருக்குணத்தை திருநீரகப் பெருமாளிடம் காண்கிறோம். அதே எளிமை திருக்குணத்துடன் ஏழை அந்தணராக வாமனனாக அவதரித்து த்ரிவிக்ரமனாக உருவெடுத்த திருஊரகப் பெருமானிடம் சேவிக்கிறோம்.
நீரைக்கொடுக்கும் மேகத்தை போன்ற கருணையை, காரக பெருமானிடம் சேவிக்கின்றோம். மேகம், யாருக்கு, எப்பொழுது, எங்கே என்றல்லாம் கேட்காமல் மழை பொழிவதைப் போல், திருக்காரக எம்பெருமானான கருணாகர பெருமாள் கருணை மழையை எல்லோருக்கும் அளிக்கிறார். இதே போல் திருக்குணத்தை ஊரக எம்பெருமானான உலகளந்த பெருமாளிடம் நாம் பார்க்கிறோம். யார், எங்கே, சரணாகதி கேட்டாரா, இல்லையா என்றெல்லாம் பார்க்காமல் எல்லோருடைய தலைகளிலும் த்ரிவிக்ரமனாக தன்னுடைய திருவடியைக்கொண்டு தீண்டி எல்லோருக்கும் மோக்ஷம் அளித்ததை, அந்த எம்பெருமானின் தனிப்பெருமையாக நமது ஆச்சாரியார்கள போற்றி உள்ளனர்.
கதாபுநச்சங்க ரதாங்க கல்பக
த்வஜாரவிந்தாங்குச வஜ்ர லாஞ்சநம் |
த்ரிவிக்ரம த்வச்சரணாம்புஜத்வயம்
மதீய மூர்த்தாநமலங்கரிஷ்யதி
இதன் அர்த்தம் “த்ரிவிக்ரமா! மங்களகரமான ஸுதர்சன சக்கரம், கல்பக வ்ருக்ஷம், தாமரை போன்ற அடையாளங்களை உடைய உனது திருவடித்தாமரைகள் எப்போழுது என் தலையை அலங்கரிக்கப் போகிறது”.
கார்வானம் என்பது மேகம் இருக்கும் வானத்தைக் குறிப்பது. எங்கும் பரந்து விரிந்து உள்ள திருமால், விஸ்வம், விஷ்ணு போன்ற திருநாமங்கள் மூலம் வானத்தை தன்னுள்ளே கொண்டுள்ளார். த்ரிவிக்ரமன் இந்த மண்ணுலகத்தை ஒரு திருவடியாலும், வானத்தை இன்னொரு திருவடி மூலம் அளந்ததையும் ஊரக எம்பெருமானிடம் பார்த்து உள்ளோம்.
ஆக நீரகம், காரகம், கார்வானம், ஊரகம் என்ற இந்த நான்கு திவ்யதேசங்களும் சேர்ந்து இருப்பது நமக்கு எளிமை, கருணை, எங்கும், எல்லோருக்கும் என்று பாரபட்சம் இன்றி காக்கும் திருமாலின் திருக்குணங்களை நமக்கு தெரிவிக்கவே என்று கொள்ளலாம்.
திருநீரகம் என்ற இந்த திவ்யதேசம், எம்பெருமானின் நீர்மை எனப்படும் எளிமை குணத்தை எடுத்து காட்டுகிறது. நீர் என்று தண்ணீரை எடுத்துக் கொண்டாலும், மீனாக முதலில் அவதாரம் செய்தது, திருப்பாற்கடல் மேல் சயனிப்பது, பிரளய காலத்தில் ஆலிலையில் நீர் மேல் துயின்றது, எம்பெருமான் பிரசாதமாக தீர்த்தம் கொடுப்பது என்று அவனுடன் நீர் சம்பந்தப்பட்டுள்ளது.
ஒரு சிறிய இடம் இருந்தாலும் நீர் அதில் புகுந்து விடும். அது போல் நம் மனதில் சிறிதளவு பக்தி வந்தாலும், எம்பெருமான், அசுத்தங்களோடு கூடின நமது உடம்பில் / மனதில் குடி புகுந்து விடுவார் என்ற நீர்மை குணத்தைக் காட்டும் திருக்கோலம் தான் இந்த திருநீரகம் திவ்ய தேசம்.
இந்த நீரகம் அன்று எங்கு இருந்தது என்று அறிய முடியவில்லை. பல வலைப்பதிவுகளில் மூலவர் விக்கிரகம் இல்லை, உற்சவர் மூலவராகக் காட்சி அளிக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் பார்ப்பதற்கு, மூலவர் போலவே தோற்றமளிக்கிறது. திருநீரகம், திருகாரகம், திருகார்வானம் என்று மூன்று திவ்யதேசங்களும் வேறு வேறு இடங்களில் இருந்தனவா, பிறகு அவை இந்த திவ்யதேசத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டனவா என்று தெரியவில்லை.
திருஊரகத்தில் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் நீரகத்தான் சன்னதி அமைந்துள்ளது.
இந்த உலகளந்த பெருமாள் கோவிலின் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் நான்கு திருக்கரங்களுடன், சங்கு சக்கரத்துடன் காட்சி அளிப்பது ஒரு சிறப்பு. இதேபோல் சோளிங்கர் சின்ன மலையில் உள்ள ஆஞ்சநேயரும் நான்கு திருக்கரங்களுடன் தரிசனம் செய்கிறார்.
ஆழ்வார்
திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம். நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய், நிலாத்திங்கள் துண்டத் தாய், நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒன்துறை நீர் வெஃகாகவுள்ளாய், உள்ளுவார் உள்ளத்தாய் உலகமேத்தும், காரகத்தாய் கார்வானத் துள்ளாய் கள்வா என்று இந்த நான்கு திவ்யதேசங்களையும் ஒரே பாடலில் அமைத்து பாடியுள்ளார்.
Google Map
திருநீரகம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
திருநீரகம் பற்றி தினம் ஒரு திவ்யதேசம்