045 திருத்தண்கா / Thiruthanga

மரகதவல்லித்தாயார் ஸமேத தீபப்ரகாசப் பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருத்தண்கா தூப்புல்
மூலவர்தீபப்பிரகாசர் விளக்கொளிப்பெருமாள் திவ்யபிரகாசர்
உத்ஸவர் தீபப்பிரகாசர்
தாயார்மரகதவல்லி
திருக்கோலம்நின்ற திருக்கோலம்
திசைமேற்கு
பாசுரங்கள்2
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 2
தொலைபேசி+91 98944 43108

தொண்டை நாட்டு திவ்யதேசங்களின் ஒரு முன்னுரையை இங்கே காணலாம். நன்றி.

கோவில் பற்றி

தண் என்றால் குளிர்ச்சி, கா என்றால் இடம் அல்லது சோலை என்று பொருள். பிரம்மன் யாகசாலை அமைக்க குளிர்ச்சி பொருந்திய இந்த இடத்தை தேர்வு செய்ததால்,
இது திருத்தண்கா என்று ஆயிற்று. பாண்டிய நாட்டுத் திவ்யதேசங்களில் திருத்தங்கல் என்று வேறு ஒரு திவ்ய தேசம் இருப்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

இந்த திருத்தலம் தூப்புல் என்றும் அழைக்கப்படுகிறது. தூப்புல் என்றால் தூய்மையான புல் நிறைந்த இடம், அதாவது தர்ப்பை புல் நிறைந்த இடம்.

இங்கு விளக்கொளிபெருமாள் சன்னதியுடன், லட்சுமி ஹயக்ரீவர், ஆண்டாள், ஆழ்வார்கள், கருடன், வேதாந்த தேசிகன் என்று தனித்தனி சன்னதிகளில் இருந்து அருள் புரிகிறார்கள்.

இங்குள்ள ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவருக்கு சித்திரை மாதம் ரேவதி நட்சத்திரத்தில் அவதார உற்சவம் நடக்கிறது. இவர் ஸ்ரீஸ்வாமி தேசிகன் தனது வாழ்நாளெல்லாம் வைத்து வழிபட்ட திருவாராதனப் பெருமாள்.

வைகாசி விசாக கருட சேவை உத்சவத்தின் போது, தேவப்பெருமாள், இந்த திருத்தலம் வந்து தேசிகனுக்கு சேவை சாதிப்பதைக் காண கண் கோடி வேண்டும். அதேபோல், வருடத்திற்கு ஐந்து முறை, தேவப்பெருமாள் (காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்) தேசிகன் சன்னதிக்கு எழுந்து அருளி தேசிகனுக்கு மரியாதை செய்வதும் சிறப்பாகும். அவையாவன :

  1. சாலைக்கிணறு உற்சவத்தின் போது தேவப்பெருமாளோடு ராமானுஜரும் எழுந்தருள்வர்
  2. வைகாசி விசாகம் கருட சேவையின் போது தேவப்பெருமாள் சுமார் 30 நிமிடங்களுக்கு போல் இருந்து சேவை சாதிப்பார்.
  3. சித்ரா பௌர்ணமி நாள் அன்று அதிகாலை நேரத்தில்
  4. புரட்டாசி பிரம்மோத்ஸவத்தின் போது நாச்சியார் கோலம்
  5. தை மாதம் சிரவணம் அன்று வனபோஜனம் உற்சவத்தின் போது

ஆவணி மாதத்தில், விளக்கொளிபெருமாள், தேசிகன் சன்னதிக்கு எழுந்தருளி காட்சி கொடுப்பதும் சிறப்பாகும்.

இந்த சன்னதியில் தேசிகன் ஞான முத்திரையோடு எழுந்தருளியுள்ளார். இங்குள்ள ஸ்வாமி தேசிகனின்
திருமேனியை அவரது குமாரர் நயினவராதாச்சாரியார் தான் பிரதிஷ்டை செய்தார்.

இங்குள்ள வேதாந்த தேசிகரின் சன்னதியில் உட்புறச் சுவர்களில் ஸ்வாமி தேசிகனின் வாழ்க்கை வரலாற்றை
அழகிய சித்திரங்களாக எழுதி உள்ளனர். இது திருவரங்கத்தில், இராமானுஜர் சந்நிதி சுவர்களில் ராமானுஜர் வாழ்க்கை வரலாறு சித்திரங்களாக தீட்டப் பட்டதை போல் உள்ளது.

ஸ்தல வரலாறு

பிரம்மனின் யாகத்தை சரஸ்வதி தடுக்கும் முயற்சியில் இந்த உலகத்தையே இருட்டில் மூழ்கடிக்க எண்ணி சூரிய, சந்திரர்களின் ஒளியை இழக்கச் செய்தாள். பிரம்மன், திருமாலை உதவி வேண்டி துதிக்க, அப்பொழுதே, சித்திரை மாதம் சுவாதி நட்சத்திரத்தில் ஒளி மயமாய்த் தோன்றி சூரிய சந்திரர்களின் ஒளியை மறைத்த தடையை நீக்கி உலகத்திற்கே வெளிச்சத்தைக் கொடுத்தார். பிரம்மனும் யாகத்தை தொடர்ந்தான். சரஸ்வதி தேவி, மீண்டும் யாகத்திற்கு தடை செய்ய, கொடிய அக்னி ரூபத்தில் மாயநலன் என்ற அசுரனை அனுப்ப, தீபப்பிரகாசர் அவனையும் தனது கையில் தீபம் போல் ஏந்தி யாகசாலைக்கு மேலும் வெளிச்சம் அளித்தார்.

ஆழ்வார் ஆச்சாரியார்

திருமங்கையாழ்வாரால் இரண்டு பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசம். விளக்கொளியையும், பிராட்டியின் திருநாமமான மரகதவல்லி என்பதையும் இந்த திவ்யதேசத்தின் திருநாமமான திருத்தண்கா என்பதையும் திருநெடுந்தாண்டகம் (14) “விளக்கொளியை மரகதத்தைத் திருத்தண் காவில்” என்று ஒரே வரியில் சொல்லி இருப்பது விஷேசம்.

வைணவ சம்பிரதாயத்தில் ஸ்வாமி இராமானுஜ தரிசனம் என்பதைப் போதித்த வடகலை ஆச்சார்யார்ய ஸ்வாமி தேசிகன் இங்குதான் அவதரித்தார். இவரது பெற்றோர் திருவேங்கடவனை பிள்ளை வரம் வேண்டியதால் அவரின் கோவில் திருமணியின் அம்சமாகவே தேசிகன் அவதரித்தார். 1268 ஆண்டு அவதரித்த இந்த மகாபுருஷர், 1369 வரை வாழ்ந்து கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி, தமிழ் மற்றும் சம்ஸ்க்ருதம் மொழிகளில் ஆழ்ந்த புலமையுடன் பல நூல்களை இயற்றி பெருமையுடன் போற்றப்படுகிறார். அடைக்கலப்பத்து என்ற பாமாலையை, காஞ்சி தேவப்பெருமாள் மீது இயற்றியுள்ளார்.

Google Map

திருவிளக்கொளி பெருமாள் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருத்தண்கா பற்றி தினம் ஒரு திவ்யதேசம்

Thanks to friends from whatsapp group for all the images.

Thanks to friends from whatsapp group.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d bloggers like this: