044 திருஅஷ்டபுஜகரம் Thiruashtapujakaram

அலர்மேல்மங்கை தாயார் ஸமேத ஆதிகேசவப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி.

திவ்யதேசம்திருஅஷ்டபுஜகரம்
மூலவர்ஆதிகேசவ பெருமாள் , கஜேந்திர வரதர், சக்ரதரர்
உத்ஸவர்அஷ்டபுஜகரத்தான்
தாயார்அலர்மேல்மங்கை பத்மாஸினி
திருக்கோலம்நின்ற திருக்கோலம்
திசைமேற்கு
பாசுரங்கள்12
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 10
தொலைபேசி+91 44-2722 5242

தொண்டை நாட்டு திவ்யதேசங்களின் முன்னுரையை இங்கே பார்க்கவும், நன்றி.

கோவில் பற்றி

திருஅஷ்டபுயகரம் காஞ்சி வரதராஜப் பெருமாள் சன்னதியிலிருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் உள்ளது. 108 திவ்யதேசங்களில், வேறு எந்த திவ்யதேசத்திலும் இல்லாதபடி இங்கு எம்பெருமான் 8 திருக்கரங்களுடன் திவ்ய ஆயுதங்கள் தாங்கி, சேவை சாதிக்கிறார்.

வலப்புறம் உள்ள 4 திருக்கரங்களில் சுதர்சன சக்கரம்,
வாள், தாமரை மலர், அம்பு ஆகியவற்றையும் இடப்புறம் உள்ள நான்கு கரங்களில் சங்கு, சார்ங்கம் என்னும் வில், கேடயம், தண்டாயுதம் போன்றவற்றைப் பெற்றுத் திகழ்கிறார்.

தொண்டை மண்டல திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே பரமபத வாசல் உள்ளது. அதுவும் எம்பெருமான் நோக்கும் திசையான மேற்கு பக்கமே உள்ளது.

இங்கு  வராகப் பெருமாள் சன்னதி, சக்கரவர்த்தி திருமகன் சன்னதி, தனிக்கோவில் நாச்சியார் சன்னதி, ஆண்டாள் சன்னதி ஆகியன உள்ளன.

ஸ்தல வரலாறு

தான் இல்லாமல் பிரம்மன் செய்யும் யாகத்தைத் தடுத்து நிறுத்த சரஸ்வதி தேவி பயங்கர ரூபத்துடனான காளியைப் படைத்து, அவளுடன் கொடிய
அரக்கர்களையும் அனுப்பினாள். எம்பெருமான் எட்டு திருக்கரங்களுடன் தோன்றி காளியுடன் வந்த அரக்கர்களை அழித்து, காளியையும் அடக்கினார். அதனால் அஷ்ட புயக்கரத்தோன் என்று பெயர் பெற்றார். வலப்புறம் நான்கு கைகள் இடப்புறம் நான்கு கைகள் என 8 திருக்கரங்களுடன் நிற்கிறார். ஒரு திருக்கரத்தில் மட்டும் தாமரைப்பூ கொண்டு உள்ளார், மற்ற எல்லா திருக்கரங்களில் திவ்ய ஆயுதங்களை தங்கி உள்ளார்.

அஷ்டாக்ஷர எம்பெருமான், அஷ்டபுஜகரத்தனாய் சேவை சாதிப்பது, ஆழ்வார் பாடலுக்கு பிறகு என்று சொல்வர்.

அஷ்டபுஜ கரத்தோனாக ஆகும் முன்பே இவ்விடத்தில்
ஆதிகேசவப் பெருமாள் என்னும் பெயரில் பெருமாள் எழுந்தருளியிருந்ததாகவும் அவரே அஷ்டபுஜக்கரமாக வந்தாரென்றும் ஒரு வரலாறும் உண்டு.

மகாசந்தன் என்னும் முனிவர் மஹாவிஷ்ணுவைக் குறித்து தவமிருந்தார். தனது பதவியைப் பெறுவதற்காக
இந்த முனிவர் தவமிருக்கிறார் என்று தவறாக நினைத்த இந்திரன், தேவலோக மாதர்களை அனுப்பி அவரின் தவத்தை கலைக்க முயற்சி செய்தான். முனிவரிடம் அது பலன் இல்லாமல் போக, அவனே ஒரு யானை வடிவத்தை எடுத்து, ஒரு யானை கூட்டத்தையும் அழைத்து சென்று முனிவர் முன்னால் காமக்களியாட்டம் நிகழ்த்தினான். இதைக் கண்ட முனிவர் மனம் தடுமாறி, தன் தவ வலிமை இழந்து, ஒரு யானையாக மாறி பெண் யானைகளுடன் இன்புற்று திரிந்தார்.

பல வருடங்கள் கழித்து ஒரு நாள் யானை வடிவிலிருந்த முனிவனுக்கு தீர்த்த மகிமையால் தனது முன்பிறவி ஞானம் வரலாயிற்று. ம்ருகண்டு முனிவரிடம் அவர் யானை தனது பாஷையில் விமோச்சனம் வேண்ட, ம்ருகண்டு முனிவர், அந்த யானையை காஞ்சிபுரத்திற்கு போகச் சொன்னார். இவரும் காஞ்சிபுரம் வந்து தேவப்பெருமாளுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்து வந்தது(வந்தார்). ஒருநாள் மலர் பறிக்க வரும் வழியில் அஷ்டபுஜகரத்தானைக் கண்டு அன்று முதற்கொண்டு அவனுக்கு புஷ்ப கைங்கர்யத்தைச் செய்தார். ஒருமுறை யானை ஒரு குளத்தில் இறங்கி அங்கிருந்த மலர்களை பறிக்க, அதிலிருந்த முதலை யானையின் காலை கவ்வியது. முன்பு, வேறு ஒரு கஜேந்திரன் ஆதிமூலமே என்று ஒரு அழைத்தது போல், இந்த முனிவரான யானையும் விஷ்ணுவை அழைக்க, அஷ்டபுஜகரத்தான் வந்து சக்கராயுதத்தால், முதலையின் தலையைக் கொய்ய, யானைக்கு சாபம் நீங்கியது. முனிவர் மோட்சம் வேண்ட, எம்பெருமானும் அவருக்கு மோட்சம் அளித்தார்.

ஆழ்வார்

திருமங்கையாழ்வார் 11 பாசுரங்களும் பேய்ஆழ்வார் ஒரு பாடலும் இந்த திவ்யதேச எம்பெருமான் மீது பாடி உள்ளனர்.

திருமங்கையாழ்வார் எம்பெருமானை அமர்ந்த, நின்ற, நடந்த, சயன திருக்கோலங்களில் சேவித்துள்ளார். இராம, கிருஷ்ண, திரிவிக்ரம, வாமன, வராஹ, நரசிம்ம என்று பற்பல அவதாரங்களையும் தரிசித்திருக்கிறார். நீர்வண்ணம், பால்வண்ணம், பொன்வண்ணம், மேக வண்ணம், கடல் வண்ணம் என்று பல வர்ணக் கலவைகளிலும் எம்பெருமானை கண்டு மகிழ்ந்து இருக்கின்றார். இரன்டு திருக்கரங்களுடனும், நான்கு திருக்கரங்களுடனும் சேவித்து உள்ளார். ஆனால் இங்கு எட்டு திருக்கரங்களுடன் கண்ட காட்சியை விவரிப்பதற்கு முன் அவனிடமே அவன் யார் என்று வினவ, அவன் அஷ்டபுயகரத்தான் என்று சொல்ல அப்படியே மங்களாசாசனம் செய்து உள்ளார்.

திருமங்கையாழ்வார் எம்பெருமானின் எட்டு திருக்கரங்களில் உள்ள பொருள்களை “செம் பொன் இலங்கு வலங்கை வாளி, திண்சிலை, தண்டொடு, சங்கம் ஓள்வாள், உம்பர் இருசுடர் ஆழியோடு, கேடகம், ஓண்மலர் பற்றி” என்று பெரியதிருமொழியில் (2.9.3) சொல்லி உள்ளார். இந்த பாசுரத்தில் வலது என்று சொல்லி, இடது சொல்லாததால், ஆழ்வாருக்கு எல்லாவற்றையும் வலது பக்கத்திலேயே வைத்து எம்பெருமான் காட்சி அளித்திருந்தாக கொண்டாலும் ரசிக்கத் தக்கதே. இதே பதிகத்தில் எட்டாவது பாசுரத்தில் வலது இடது இரண்டையும் அப்பால், இப்பால், என்று ஆழ்வார் குறிப்பிட்டுள்ளார்.

முற்காலத்தில் பலபல அரசர்கள் பல திவ்யதேசங்களை ஆதரித்து, பல சிறப்புகளைச் செய்து உள்ளார்கள். இந்த திவ்யதேசத்தை வயிரமேகம் என்னும் ஒரு தொண்டை நாடு அரசன் ஆதரித்தான் என்று ஆழ்வார் அதே பதிகத்தில் பத்தாவது பாசுரத்தில் அருளி செய்கிறார்.

பேய்ஆழ்வார் தனது மூன்றாம் திருவந்தாதியில், (99) அட்ட புயக்கரத்தான் அஞ்ஞான்று – குட்டத்துள், கோள்முதலை துஞ்சர் குறித்தெறிந்த சக்கரத்தான் என்று இந்த திவ்யதேசத்தில் நிகழ்ந்த, மகாசந்தன் என்ற முனிவரின் கஜேந்திர மோக்ஷத்தை குறிப்பிட்டுள்ளார். பேய் ஆழ்வார் அஷ்டபுஜகரத்தானிடம் கஜேந்திர மோட்ச காட்சியை தமக்கு காட்ட வேண்டும் என வேண்ட, அவரும் அவ்விதமே காட்சிஅளித்ததாகவும் ஒரு
வரலாறு உண்டு.

வேதாந்த தேசிகனும், மணவாள மாமுனிகளும் இந்த திவ்யதேசத்தை மங்களாசாசனம் செய்து உள்ளார்கள்.

Google Map

திருஅஷ்டபுஜகரம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருஅஷ்டபுஜகரம் பற்றி தினம் எஒரு திவ்யதேசம் சொல்வது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d bloggers like this: