A Simple Devotee's Views
பெருந்தேவி தாயார் ஸமேத வரதராஜப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
திவ்யதேசம் | திருக்கச்சி ஸத்ய வ்ரத க்ஷேத்திரம் | |||
மூலவர் | வரதராஜன், பேரருளாளன், தேவாதிராஜன், தேவப்பெருமாள் , அத்தியூரான் மலையாளன் | |||
உத்ஸவர் | தேவாதிராஜன் | |||
தாயார் | பெருந்தேவித் தாயார் மஹாதேவி | |||
திருக்கோலம் | நின்ற திருகோலம் | |||
திசை | மேற்கு | |||
பாசுரங்கள் | 7 | |||
மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 4 பூதத்தாழ்வார் 2 பேயாழ்வார் 1 | |||
தொலைபேசி | + 91 |
தொண்டை நாட்டு திருப்பதிகள் பற்றி
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக புகழ் பெற்றிருக்கும் நகரம் காஞ்சி, ‘நகரேஷு காஞ்சி’ என்பர். ‘அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகாபுரி த்வராவதி சைவ சப்த ஏகா மோக்ஷ தாயகா’ என்ற வாக்கியத்தின்படி அயோத்யா, மதுரா, ஹரித்வார், காசி, காஞ்சி, உஜ்ஜயினி மற்றும் துவாரகா என்ற ஏழு க்ஷேத்திரங்களும் முக்தி தரும் ஸ்தலங்களாகும். பெண்கள் இடையில் அணியும் ஒரு அணிகலனுக்கு காஞ்சி என்று பெயர். இந்த நகரம், அந்த அணிகலன் வடிவில் இருந்ததால் காஞ்சி என்ற பெயர் ஏற்பட்டது. காஞ்சி ஒரு புண்ணிய பூமி. தொண்டை மண்டலத்தில் உள்ள 22 திவ்ய தேசங்களில் 14 திவ்ய தேசங்களை காஞ்சியிலே காணலாம்.
பெரிய காஞ்சியில் 9 திவ்ய தேசங்களும் (திருப்பாடகம், திருநிலாத்திங்கள் துண்டம், திரு ஊரகம், திரு நீரகம், திருக்காரகம், திருக்கார்வானம், திருக்கள்வனூர், திருப்பவளவண்ணம்-திருப்பச்சைவண்ணன், திருப்பரமேச்சுர விண்ணகரம்) சின்னக் காஞ்சியில் 5 திவ்ய தேசங்களும் (திருக்கச்சி, திருஅட்டபுயகரம், திருத்தண்கா, திருவேளுக்கை, திருவெஃகா ) உள்ளன.
இதேபோல், திருவிடவெந்தை வராகமூர்த்தியும், திருகடல்மல்லையில் கலைச் சிறப்பும் திருப்புட்குழி திவ்யதேஸ விஜயராகவனும் இராமனுஜரும், திருநீர்மலையில் நின்று, இருந்து, நடந்து மற்றும் சயன சேவையும் திருக்கடிகை யோகநரசிம்ஹரும், திருவள்ளூரில் வீரராகவனும் திருநின்றவூரில் என்னைபெற்ற தாயாரும் திருவல்லிகேணியில் ஐந்து மூர்த்திகளுக்கு பாசுரங்களும் என்று தொண்டை நாட்டு திவ்யதேசங்களின் சிறப்புகளை காண உள்ளோம்.
இதேபோல், தொண்டைநாடு, முதல் ஆழ்வார் மூவரும், திருமழிசை ஆழ்வாரும் அவதரித்த ஸ்தலங்களை கொண்ட பெருமை உடையது. ஜகதாச்சார்யர் என்று கொண்டாடப்படும் சுவாமி ராமானுஜர் அவதரித்த ஶ்ரீபெரும்புபுதூர் எனும் புண்ணிய பூமியும் இங்கேதான் இருக்கிறது. ஸ்ரீவைஷ்ணவத்தின் வடகலை ஸம்பிரதாயத்தில் முக்கிய ஆச்சாரியரான ஸ்வாமி வேதாந்த தேசிகனையும் தந்தது இந்த தொண்டை நாடே.
காஞ்சி வரதராஜனுக்குத் திரு ஆலவட்ட கைங்கர்யம் செய்த திருக்கச்சி நம்பிகள் அவதரித்த பூவிருந்தவல்லி, எம்பார் அவதரித்த மதுரமங்கலம், முதலியாண்டார் அவதரித்த பேட்டை எனப்படும் வரதராஜபுரம், கூரத்தாழ்வான் அவதரித்த கூரம் போன்ற புண்ணிய ஸ்தலங்களும் கொண்டது இந்த தொண்டைநாடு.
கோவில் பற்றி
நம் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் பலமுறை, ஒரு சில திவ்ய தேச மூர்த்திகளுடன் அதிகமாக ஈடுபட்டு இருந்தார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அவைகளில் சில, திருஅரங்கம், திருப்பதி மற்றும் திருக்கச்சி எனப்படும், காஞ்சி தேவப்பெருமாள் சன்னதி. ஆழ்வார்களால் பாடப்படாவிட்டாலும், மேல்கோட் என்ற திருநாரயணபுரமும் அந்த மூன்றுடன் சேர்க்கப்பட வேண்டிய ஒன்று. இவைகளின் பெருமையாக ஸ்வாமி ராமானுஜர் இயற்றிய ”ஸ்ரீரங்க மங்கள நிதிம் கருணா நிவாஸம், ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காளமேகம், ஸ்ரீ ஹஸ்திசைல சிகரோஜ்வல பாரிஜாதம், ஸ்ரீசம் நமாமி சிரஸா யது சைல தீபம்”. என்ற ஸ்லோகம் சான்று.
ஸயனகோலத்தில் அரங்கனாதன் அருள்புரியும் திருவரங்கம் ”போகமண்டபம் என்றும் நின்ற திருக்கோலத்துடன் திருமலையில் ”புஷ்ப மண்டபமாகவும்”, காஞ்சியில் “தியாக மண்டபமாகவும்”, மேல்கோட் என்ற திருநாரணபுரத்தில் ”ஞான மண்டபமாகவும்”, நம் முன்னோர்களால் பாராட்டி வணங்கப்படுகிறன.
இதில் முதல் மூன்று அர்ச்சா மூர்த்திக்களும் தங்கள் அர்ச்சையில் இருந்து வந்து சாமானிய மனிதர்களிடம் பேசியதும் நான்காவது மூர்த்தியான இராமப்ரியன், ஸ்வாமி இராமானுசரின் சொல் கேட்டு, நடந்து வந்து, செல்லபிள்ளையாக வந்து சேர்ந்ததும் அதிசயமே.
108 வைணவத்திருத்தலங்களில் கோவில் என்று திருவரங்கத்தையும், மலை என்று திருமலை என்ற திருவேங்கடத்தையும், பெருமாள் கோயில் என்று
இத்திருத்தலத்தையும் குறிப்பர்.
அனைவருக்கும் கேட்கும் வரமெல்லாம் கொடுப்பதால் எம்பெருமானுக்கு வரதர் என்னும் திருநாமம் ஏற்பட்டது.
தேவலோகத்தில் உள்ள ஐராவதம் என்ற யானையே மலை வடிவம் கொண்டு எம்பெருமானைத் தாங்கி நின்றதால், இதற்கு அத்திகிரி என்ற பெயர் ஏற்பட்டது.
ஐராவதம் என்பது வெள்ளை நிற யானை என்பதால் ஸ்வேதகிரி என்றழைக்கப்பட்டு வேதகிரி என மருவியது.
மலை மீது காட்சி தருவதால், மூலவருக்கு மலையாளன் என்ற திருநாமுமம் உண்டு.
இவர் பல யுகம் கண்ட எம்பெருமான். கிருத யுகத்தில் பிரம்மனும், திரேதாயுகத்தில் கஜேந்திரனும், துவாபர யுகத்தில் பிருஹஸ்பதியும், கலியுகத்தில் அனந்தனும் வழிபட்டு பல நற்பலன்களை அடைந்தனர். பிரம்மனே இங்கு நேரில் வந்து எம்பெருமானை வழிபடுவதாக
ஐதீஹம். அதே போல் திருவனந்தாழ்வான் எனப்படும் ஆதிசேஷனுமும் இங்கு வந்து வழிபடுவதாக சொல்லப் படுகிறது.
வாரணகிரி, அத்திகிரி என்ற ஒரு சிறிய மலைகளால் ஆனது இந்த திருத்தலம். வாரணகிரி என்ற முதல் தளத்தில் நரசிம்ம அவதார அமர்ந்த திருக்கோலத்தில் அழகிய சிங்கர் ஹரித்ரா தேவித் தாயாருடன் எழுந்தருளி உள்ளார். இரண்டாவது தளமான அத்திகிரியில் தேவப்பெருமாள் எழுந்து அருளி உள்ளார்.
இங்குள்ள அனந்தசரஸ் என்ற திருக்குளத்தில் இரண்டு நீராழி மண்டபங்கள் உள்ளன. அதில் தெற்கில் உள்ள மண்டபத்தில் அத்திவரதர் என்றழைக்கப்படும் அத்தி மரத்தால் ஆன எம்பெருமானை 40 வருடங்களுக்கு ஒரு முறை வெளியே எடுத்து பூஜை செய்து அடியார்கள் தரிசனத்திற்குப் பிறகு மீண்டும் திருக்குளத்தில் உள்ள நீராழி மண்டபத்திலேயே எழுந்தருள செய்கிறார்கள்.
இந்த குளக்கரையில் உள்ள சுதர்சன ஆழ்வார் என்று அழைக்கப்படும் சக்கரத்தாழ்வார் சன்னதி மிகவும் விஷேசமானது. மிக பெரியவடிவில், பதினாறு திருக்கரங்களுடன், காட்சி அளிக்கும் இந்த சக்கரத்தாழ்வாரை சுற்றி உள்ள அலங்கார வளைவில் 12 சக்கரத்தாழ்வார் உருவங்கள் செதுக்கப்பட்டு உள்ளன.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தாயார் புறப்பாடு, ஒவ்வொரு ஏகாதசியும் எம்பெருமான் புறப்பாடு. இரண்டும் சேர்ந்து வந்தால், இருவருக்கும் சேர்ந்து புறப்பாடு என்று அடியவர்களுக்கு ஆனந்தம்.
இங்கு நடைபெறும் வைகாசி விசாக கருட சேவை (3ம் நாள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதனை வையம் கண்ட வைகாசி திருநாள் என்று கொண்டாடுவர். இந்த கருட சேவையை குறிப்பிட்டு சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் கீர்த்தனை பாடி உள்ளார்.
உடையவர் திருமாளிகை என்று இராமானுஜர் இளமை காலத்தில் வாழ்ந்த இல்லம் இன்றும் இங்கு உள்ளது. இந்த கோவிலின் பிரகாரத்தில் தான் ஸ்ரீஆளவந்தார் என்ற ஆச்சாரியார், இராமானுஜரை முதன் முதலில் கண்டு ஆம், முதல்வன் இவன் என்று அருளியது. ஸ்வாமி இராமானுஜரை திருவரங்கத்திற்கு தந்தருளியதும் இந்த தேவப்பெருமாள் தான்.
ஸ்தல வரலாறு
ஒரு முறை பிரம்மா எம்பெருமானிடம் தான் ஓர் அஸ்வமேதயாகம் நடத்த வேண்டும் என்று கேட்க, அதற்கு எம்பெருமான், பிரம்மாவை சத்தியவ்ரத க்ஷேத்திரமான இந்த திருக்கச்சிக்கு வந்து யாகம் செய்ய சொன்னார். ப்ரம்மா சரஸ்வதி தேவி இல்லாமல் இந்த யாகத்தை காயத்திரி தேவியுடன் தொடங்கினார். இதனால் கோபம் கொண்ட சரஸ்வதி தேவி, இந்த யாகத்தைத் தடுக்க பல தடைகளை உருவாக்கினார். ஒவ்வொரு முறையும் எம்பெருமான் அந்த தடைகளை உடைத்து, பிரம்மாவின் யாகத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற காரணமாக இருந்தார்.
சரஸ்வதி, இருள்மயமாக, யாக குண்டத்தை மாற்றியபோது, திருத்தண்கா தீப பிரகாசராக (விளக்கொளிபெருமாள்) எம்பெருமான் வந்தார். சரஸ்வதி அரக்கர்களை அனுப்பி வைத்தார். அப்பொழுது எம்பெருமான் அஷ்டபுஜகரத்தானாக ஆதிகேசவ பெருமாளாக வந்து அரக்கர்களை விரட்டி அடித்தார். தொடர்ந்து, சரஸ்வதி யானைகளை கூட்டம் கூட்டமாக அனுப்பி வைத்து இந்த யாகத்தை தடை செய்ய முயற்சித்த போது, எம்பெருமான் வேளுக்கை யோகநரசிம்மராக வந்து யானைகளை விரட்டினார். சரஸ்வதி வேகவதி என்ற நதியில் வெள்ளமாக வந்தபோது, சொன்னவண்ணம்செய்த பெருமாளாக வந்து நதியின் குறுக்கே படுத்துக்கொண்டார்.
இப்படி, இங்குள்ள திவ்யதேச எம்பெருமான்கள் ஒரே காரணத்திற்காக ஒரே காலத்தில் எழுந்தருளி உள்ளனர்.
இப்படி எல்லா தடைகளையும் தாண்டியபின், பிரம்மாவின் யாககுண்டத்தில் இருந்து புண்ணியகோடி விமானத்துடன் தோன்றியவர் தான் இந்த திருக்கச்சி தேவப்பெருமாள். யாககுண்டத்தில் இருந்து அக்னி ஜுவாலைகளுக்கு மத்தியில் இருந்து வந்ததால் தான் இன்றும் எம்பெருமானின் திருமுகத்தில் அக்னி வடுக்கள் இருப்பதை நாம் காணலாம். பிரம்மா அத்தி மரத்தால் வடித்த ஒரு எம்பெருமானை இங்கே அத்தி வரதர் என்ற திருநாமத்துடன் பிரதிஷ்டை செய்தார்.
ஸ்ருங்கிபேரர் என்ற முனிவரின் இரண்டு சிஷ்யர்கள், குருவிற்கு எடுத்துவைத்த தீர்த்தத்தில் பல்லி ஒன்று விழுந்து இருந்ததை கவனிக்காததால், முனிவர் கோபம் கொண்டு அவர்கள் இருவரையும் பல்லியாக மாற சபித்தார். அவர்கள் தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்க, முனிவர் இந்திரன் திருக்கச்சிக்கு வரும்வரை காத்து இருந்தால், அவர்கள் மீண்டும் பழைய நிலை அடைவார்கள் என்று கூற அவர்களும், பல்லிகளாக திருக்கச்சியில் காத்து இருந்து, பின் கஜேந்திரன் என்ற யானையாக இந்திரன் இங்கு நுழைந்த போது, இருவரும் சாபம் தீர்ந்து பழைய நிலை அடைந்தார்கள் என்பது வரலாறு. அந்த பல்லிகளே இன்று தங்க, வெள்ளி பல்லிகளாக பிரகாரத்தில் உள்ளன. இவற்றை தரிசித்தால் எல்லா நோய்களும் அகலும் என்று நம்பிக்கை.
வைகாசி விசாக கருட சேவையைப் பற்றி ஒரு நிகழ்ச்சி. சோளிங்கரில் வசித்த தொட்டாச்சார்யார் என்ற பக்தர் தவறாமல் ஒவ்வொரு ஆண்டும் இந்த தரிசனத்தை காண்பார். ஒரு வருடம் உடல் நலம் குன்றியபோது அவரால் காஞ்சி வந்து இந்த திவ்ய சேவையை காண இயலவில்லை. அதனால் அவர் சோளிங்கரில் உள்ள குளக்கரை அருகே வந்து நின்று எம்பெருமானிடம் உருகி தன்னுடைய நிலையை சொல்லி வருந்தினார். எம்பெருமான் அவருக்கு உடனே அங்கேயே கருட சேவை காட்சியைக் கொடுத்தார். அதனால் இன்றும், காஞ்சியில் இந்த கருட சேவை போது, எம்பெருமானை ஒரு வினாடி குடைகளால் மூடி அந்த அடியவருக்கு காட்சி கொடுத்ததை நடத்தி காண்பிப்பார்கள்.
ஆழ்வார் ஆச்சார்யர்கள்
திருமங்கையாழ்வாரால் 4 பாசுரங்களாலும், பூதத்தாழ்வாரால் இரண்டு பாசுரங்களாலும், பேயாழ்வாரால் ஒரு பாசுரத்தாலும் இந்த திவ்யதேசத்திற்கு மங்களாசாசனம்.
திருமங்கை ஆழ்வார், ஸ்ரீஆளவந்தார், இராமானுஜர், ஸ்வாமி தேசிகன், திருக்கச்சி நம்பிகள், பெரிய நம்பி, கூரத்தாழ்வான் ஆகியோருக்கும் இந்த தேவப் பெருமாளுக்கும் உள்ள சம்பந்தமும் அவர்களுக்கு நேர்ந்த அனுபவங்களும் இனிமையானவை, நம் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு தூண்கள் போல் உறுதியாக வெகு காலமாக போற்றப்பட்டு வருகின்றன.
திருக்கச்சி என்பது காஞ்சியில் உள்ள எல்லா திவ்யதேச எம்பெருமான்களையும் சேர்த்தது தான் என்றும் தேவப்பெருமாளுக்கு என்று தனியாகப் பாசுரங்கள் இல்லை என்றும் சொல்லப் படுவது உண்டு. நம்மாழ்வார், திருவிருத்தம் முதல் பாடலில், இமையோர் தலைவா, மெய் நின்று கேட்டு அருளாய் என்றும் திருவாய் மொழி முதல் பாட்டில் அயர்வறு அமரர்கள் அதிபதி என்றும் சொல்வது இந்த எம்பெருமானைத்தான் என்று பெரியோர்கள் பொருள் கூறுவர். அதன்படி, வேறு எந்த ஸ்தலத்திலும் காட்டும் ஞானமுத்திரையைக் காட்டாமல், ஸ்வாமி நம்மாழ்வார் இங்கு தம் நெஞ்சில் கை வைத்து எழுந்து அருளி உள்ளார். இது துயரறு சுடர் அடிதொழுது எழு என் மனனே என்று கூறுவது போல் உள்ளது.
தேவப்பெருமாள் திருமங்கையாழ்வார் வரலாற்றிலும் மிகவும் நெருங்கிய சம்பந்தம் கொண்டு அவரை வழி நடத்தியுள்ளார். குமுதவல்லி நாச்சியாரின் வேண்டுதலால், நீலன் என்ற திருமங்கை ஆழ்வார், அரசுப் பணம் முழுதும் அடியார்க்கு உணவளிப்பதில் செலவிடுவதாக புகார் வர, அரசன் அவரிடம் சமாதானம் பேசினான். ஆழ்வாரை ஒரு கோவிலில் சிறை பிடித்து வைத்தான். திருமங்கையாழ்வார் கனவில் தேவப்பெருமாள் வந்து, வேதவதி ஆற்றில் மணலின் கீழ் மிகுந்த செல்வம் உள்ளதாகவும் அதை அரசனிடம் கொடுக்க சொன்னார். திருமங்கையாழ்வார் மன்னரின் ஆட்களோடு செல்ல, அங்கு அவர் தோண்டி எடுத்த மணல் நெல்லாக மாறியது கண்டு, அரசன் அவரிடம் மன்னிப்பு கேட்டு தானும் ஸ்ரீவைஷ்ணவனாக மாறி தான தர்மங்கள் செய்தான். தேவப்பெருமாள் தெரிவித்தபடியே வேகவதியில் ஆழ்வார் பெரும்புதையல் கண்டெடுத்து, அரசனின் மொத்த கடனையும் திருப்பி அழித்து தம் கைங்கர்யம் நிறைவேறத் திருக்குறையலூர் திரும்பினார் என்பது தேவப்பெருமாள் அடியாரை ஒரு நாளும் கைவிட மாட்டான் என்பதை மீண்டும் நிரூபிக்கிறது.
பூதத்தாழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதியில் (96), அத்தியூரான் புள்ளை ஊர்வான் என்று பாடி இருப்பது, இந்த திவ்யதேச எம்பெருமானான பேரருளாளன், கருட சேவையை முன்னிட்டு என்பதால் இன்றும் வரதனின் கருடசேவை பிரசித்தம்.
பேயாழ்வார் அருளிய மூன்றாம் திருவந்தாதியில் (26), நிறைந்தசீர் நீள்கச்சி யுள்ளும் என்று திருக்கச்சிக்கு நிரந்தசீர் என்று சிறப்பு அடைமொழி கொடுத்து உள்ளார். இதற்கு உரையாசிரியர், நிறைய திவ்யதேசங்களை உடைய காஞ்சி என்று விளக்கம் கொடுத்து உள்ளார்.
இங்கு வாழ்ந்த திருக்கச்சி நம்பிகள் இந்த எம்பெருமானுக்கு ஆலவட்ட கைங்கர்யம் செய்தார். அதாவது பெருமாளுக்கு விசிறி வைத்து காற்று வீசுவார். திருக்கச்சி நம்பிக்கு காஞ்சி பூர்ணர் என்ற சிறப்பு பெயர் உண்டு. எம்பெருமான், திருக்கச்சி நம்பிகள் தன்னுடன் நேரடியாக உரையாடும் அளவுக்கு அவருக்கு அருள் புரிந்து இருந்தான்.
ராமானுஜர், தம் முதல் குருவான யாதவப்பிரகாசருடன் வடநாட்டு யாத்திரை சென்ற போது, அவருக்கு எதிரான சதி, அவரின் சித்தி பிள்ளை கோவிந்தபட்டர், (பின்னாளில் எம்பார் என்ற ஆச்சார்யர்) மூலம் தெரிய வந்ததால் யாருக்கும் தெரியாமல் விந்திய மலையிலேயே தங்கிவிட்டார். பிறகு ஒரே இரவில், தேவப்பெருமாளும், பெரிய பிராட்டியும், வேடன், வேடுவச்சி வேடம் புனைந்து ராமானுஜரை காஞ்சிக்கு அருகில் உள்ள சாலைக்கிணறு என்ற இடத்தில கொண்டு விட்டார்கள்.
தமக்கு உதவி புரிந்தது தேவப்பெருமாளும் தாயாரும் என்று உணர்ந்து கொண்ட ராமானுஜர், திருக்கச்சி நம்பிகளை ஆச்சாரியனாக ஏற்றுக்கொண்டு, சாலைக் கிணற்றிலிருந்து தேவப்பெருமாளுக்கு திருமஞ்சனத்திற்குத் தீர்த்தம் கொண்டு வரும் கைங்கர்யத்தை மேற்கொண்டார். சுவாமி ராமானுஜருக்கு ஆரம்ப காலத்தில், நம் சம்பிரதாயத்தில் எழுந்த சந்தேகங்களுக்கு தேவப்பெருமாளுடன் பேசி, தேவப்பெருமாள் அருளிய ஆறு வார்த்தைகளை ராமானுஜருக்கு சொல்லியவர் திருக்கச்சி நம்பி ஆவார். இராமானுஜருக்கு அருளிய அந்த ஆறு வார்த்தைகள்.
அஹமேவ பரம்தத்வம் | ஸ்ரீமந் நாராயணனே எல்லாவற்றிக்கும் தத்துவமாய் விளங்கும் பரம்பொருள் |
தர்சனம் பேத ஏவச | ஜீவாத்மா, பரமாத்மா இரண்டும் வெவ்வேறானவை. |
உபாயேஷு ப்ரபத்தி ஸ்யாத் | மோட்சம் அடைய சரணாகதியே சிறந்தவழி |
அந்திமஸ்ம்ருதி வர்ஜனம் | இறுதி காலத்தில் எம்பெருமானை நினைக்க முடியாவிட்டால் தவறில்லை |
தேஹாவஸானே முக்திஶ்யாத் | அவனை உபாயமாகக் கொண்டவர்களுக்கு, பிறவி முடிந்ததும் மோக்ஷம் தருகிறார். |
பூர்ணச்யார்ய ஸமாச்ரய | பெரிய நம்பியை ஆச்சார்யராக ஏற்றுக் கொள்ளத்தக்கது |
ஸ்ரீ இராமானுஜருக்காக கிருமி கண்ட சோழ மன்னனிடம் தன்னுடைய கண்களை இழந்த
கூரத்தாழ்வான், ராமானுஜரின் ஆணைப்படி வரதராஜ ஸ்தவம் என்ற ஸ்தோத்ரத்தை இந்த எம்பெருமானுக்குகாக எழுதி, அவர் முன்னே சொல்ல, உடனே இந்த எம்பெருமான் அவருக்கு மீண்டும் கண் பார்வையை அருளினார்.
வேதாந்த தேசிகரிடம் ஒரு ஏழை பிரம்மச்சாரி பையன் தன் திருமணத்திற்காக நிதி உதவி கேட்க, அவர் பெருந்தேவி தாயார் சந்நிதியில், ஸ்ரீ ஸ்துதி என்ற இருபத்திஐந்து ஸ்லோகங்களை பாட, தாயாரின் மனதை தொட்ட ஸ்லோகங்கள், அங்கே ஒரு பொன்மழையை கொட்ட செய்து அந்த பையனின் துயரைத் தீர்த்தது. இது கனகதாரா ஸ்தோத்திரத்தின் மூலம் ஆதி சங்கரர் ஓர் ஏழைப் பெண்ணிற்காக தங்கமழை பெய்வித்ததைப் போலவே இந்த திவ்யதேசத்தில் நடந்த சரித்திர நிகழ்ச்சி. இதனால் இந்த தாயாருக்கு தங்கத்தாயார் என்ற திருநாமமும் உண்டு.
பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் இந்த திவ்யதேசத்தில் இருந்து வைணவத்திற்கு மிக பெரிய சேவை செய்து உள்ளார்.
அத்திகிரி அருளாளரும் தேசிகனும் |
an ebook – thanks to friends in whatsapp group, who shared this great content
இன்னும் பல சிறப்புகள் உள்ள இந்த திவ்ய தேசத்தைப் பற்றி மேலும் அறிந்து மெருகு ஏற்றுவோம்.
Adiyen would like to express my sincere thanks to my elder brother Sri R Ranganathan, for going through the above weblog and advised me to relook into history of Sristuti. I made an error in mentioning that a girl being helped by Swami Desikan in my previous version, in stead of a boy, who actually got the help from Swami Desikan. Once again my respects and thanks to my beloved brother.