A Simple Devotee's Views
பூங்கோவல் நாச்சியார் ஸமேத திரிவிக்ரம பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
திவ்யதேசம் | திருக்கோவலூர் | |||
மூலவர் | த்ரிவிக்ரமன் , நடுநாட்டான் | |||
உத்ஸவர் | ஆயன் , இடைகழி ஆயன், வேணுகோபாலன் | |||
தாயார் | பூங்கோவல் நாச்சியார் புஷ்பவல்லி தாயார் | |||
திருக்கோலம் | நின்ற | |||
திசை | கிழக்கு | |||
பாசுரங்கள் | 21 | |||
மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 18 பொய்கைஆழ்வார் 2 பூதத்தாழ்வார் 1 | |||
தொலைபேசி | +91 94862 79990 |
Google Map
திருக்கோவலூர் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
திருக்கோவலூர் பற்றி தினம் ஒரு திவ்யதேசம் சொல்வது
கோவில் பற்றி
த்ரிவிக்ரம எம்பெருமான், இந்த திவ்யதேசத்தில், மிக பிரம்மாண்டமாய், இடது திருவடியை தரையில் ஊன்றி, வலது திருவடியை விண்ணை நோக்கித் தூக்கி, மேல் உள்ள ஏழு உலகங்களையும் அளந்த நிலையில், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம் ஆகும். . இதற்கு முன் நாம் காழிசீராம விண்ணகரம் என்ற சீர்காழி திருத்தலத்தில், த்ரிவிக்ரமனை சேவித்து உள்ளோம். அங்கு அவர் இடது திருவடியை விண்ணை நோக்கி தூக்கியும், வலது திருவடியை உலகை அளந்து தரையிலும் வைத்துள்ளார் என்பதை நினைவில் கொள்ளலாம்.
பொதுவாக எல்லா எம்பெருமான்களும், வலது திருக்கரத்தில் சக்கரமும், இடது திருக்கரத்தில் சங்கும் கொண்டு இருப்பார்கள். ஆனால் இங்கு இந்த எம்பெருமான், இடது திருக்கரத்தில் சக்கரம், வலது திருக்கரத்தில் சங்கும் கொண்டு வர்ண கலாபத்துடன், கருநீல மேக நிறத்தில் திருமேனியுடன், மார்பில் ஸ்ரீவத்ஸம், கழுத்தில் கௌஸ்துபம், காதுகளில் மஹரகுண்டலம், வைஜயந்தி வனமாலையுடன் ஒளி சிந்தும் திவ்யப் புன்னகையுடன் காட்சி அளிக்கிறார். இவரை சுற்றி, பிரகலாதன், மகாபலி, சுக்ராச்சார்யார், கருட, விக்ஷவக்சேனர் என்று பலருடன், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் எழுந்தருளி இருக்கிறார்.
கிருஷ்ண கோவில் என்று பெயர் பெற்ற இந்தத் திருத்தலம் பல சதுர் யுகங்களுக்கு முற்பட்டதாகும். நாரதரும், பிரம்மனும் அகத்தியரும், பரசுராமரும் மற்றும் பலரும் இந்தக் கிருஷ்ண ஷேத்திரத்தில் தவம் செய்து உள்ளனர் என்று புராணங்களிலும், இலக்கியத்திலும் காணலாம்.
பஞ்ச கிருஷ்ணச் ஷேத்திரங்களில் இதுவும் ஒன்றாகும். திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை, திருக்கண்ணங்குடி, திருக்கவித்தலம், என்ற நான்கு சோழதேச திவ்யதேசங்களும், நடுநாட்டில் உள்ள திருக்கோவிலூரும் சேர்ந்து பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்கள் என்று கூறப்படும்.
மிருகண்டு முனிவர் எம்பெருமானின் வாமன – திரிவிக்ரம அவதாரத்தைக் காண விரும்பி தவம் இயற்றிய திருத்தலம் இது. வாமன திரிவிக்ரம அவதார ஸ்தலம் என்றும் இது அழைக்கப் படுகிறது.
இடைகழியில் ஆழ்வார்களுக்கு எம்பெருமான் காட்சி கொடுத்ததாலும் இங்கு த்ரிவிக்ரம பெருமாள் வருவதற்கு முன்பே கண்ணன் திருத்தலம் ஆதலாலும் இந்த எம்பெருமானுக்கு இடைகழி ஆயன் என்னும் பெயர் உண்டு. விண்ணுலகிற்கும், பாதாள லோகத்திற்கும் நடுவில் நின்றதால் நடுநாட்டான் என்னும் பெயர் உள்ளது.
இங்கு மூலவர் திருமேனி தருவால் (மரத்தினால்) ஆனது. மிக உயரமான நின்ற திருக்கோலம். சாளக்ராமத்தால் ஆன வேணுகோபாலன் தனி சன்னதியில் சேவை சாதிக்கிறார். கேரளாவில் திருக்காட்கரை என்ற திவ்யதேசத்தில், வாமனனுக்கு என்று தனி கோவில் உள்ளது. இங்கே வாமனன் மூலவருக்கு பின் எழுந்தருளி உள்ளார்.
இங்கு பெருமாள் சன்னதிக்கு எதிரே 40 அடிஉயர தூண் ஒன்று உள்ளது, அதற்கு மேல் உள்ள சிறிய கோவிலில் கருடன் இருந்து எம்பெருமானை வணங்குகிறார். இந்த கோவில் பிரஹாரத்தில் விஷ்ணு துர்க்கை இருக்கிறார்.
எம்பெருமானும், இந்த துர்க்கையும் சுயம்பு மூர்த்திகளாக அருள் பாலிக்கிறார்கள்.
இங்குள்ள கோபுரம் 192 அடி உயரமுடன் பதினொரு நிலைகளோடு உள்ளது. இது தமிழ் நாட்டின் மூன்றாவது உயரமான கோபுரம் ஆகும். முதல் இடம், ஸ்ரீரங்கம், இரண்டாவது இடம் ஸ்ரீவில்லிபுத்தூர். இந்த கோவில் 5 ஏக்கர் பரப்பு உள்ளது.
ஸ்தல வரலாறு
எம்பெருமான் தவமிருந்த முனிவர்களுக்காக இங்கே மீண்டும் ஒரு முறை வாமன – திரிவிக்ரம அவதாரத்தைக் காட்டியதாக ஐதீஹம்.
பக்த பிரகலாதனின் பேரன், மகாபலி என்னும் மன்னன் ஆவான். அவன் நன்றாக ஆட்சி புரிந்து வந்தாலும், தேவர்களைத் கொடுமை படுத்தி அவர்களுக்கு துன்பம் இழைத்து வந்தான். அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் இவனுக்கும் குருவாக இருந்து, எல்லா சக்திகளையும் அளித்து அவனை தேவர்களுக்கு எதிராக தூண்டி விட்டும் வந்தார். மகாபலியின் துன்பம் பொறுக்க இயலாத தேவர்கள், மஹாவிஷ்ணுவை வணங்கி, தங்களை காத்து அருள வேண்டினர்.
கசியபர், அதிதி என்ற ரிஷி தம்பதியர் இருவருக்கும் எம்பெருமான் குட்டையான வடிவம் கொண்ட வாமன மூர்த்தியாக அவதரித்து பிரம்மச்சர்யம் மேற்கொண்டார்.
மஹாபலி தேவர்களுக்கு எதிரான தன்னுடைய முயற்சியில் வெற்றி பெற பல தானங்களும் யாகங்களும் நடத்தி வந்தான். வாமனன், மஹாபலியிடம் பூமிதானம் பெறுவதற்காக வந்தார். குட்டையான வாமன ரூபத்தைக் கண்டு வியந்த மஹாபலி, என்ன வேண்டுமென்று கேட்க அதற்கு அவர் தனக்கு, அவனுக்கு சொந்தமான மூன்றடி மண் வேண்டுமென சொல்ல, உடனே தருவேன் என்று வாக்களித்து மஹாபலி தானம் கொடுக்கத் தயாரானான்.
சுக்ராச்சாரியார் மஹாபலியிடம் சென்று, வந்திருப்பது மஹாவிஷ்ணு என்றும், தானம் கொடுப்பதை நிறுத்தவும் சொன்னார். மஹாபலி, கொடுத்த தன் வாக்கிலிருந்து மாற மறுத்தான். இதைத் தடுக்க நினைத்த சுக்ராச்சாரியார் ஒரு சிறிய வண்டின் உருவம் எடுத்து, தாரை வார்த்துக் கொடுக்கும் கமண்டலத்தின் துவாரத்தை அடைத்துக் கொண்டார். சுக்ராச்சாரியார் துவாரத்தை அடைத்து இருந்ததை அறிந்த வாமனன் ஒரு சிறிய தர்ப்பை புல்லால் அந்த துவாரத்தில் குத்த, வண்டாக இருந்த சுக்ராச்சாரியார் தன் ஒரு கண்ணை இழந்தார்.
இழந்த கண்ணை மீண்டும் பெறவும், பாவ மன்னிப்பு கேட்கவும், சுக்கிராச்சாரியார் திருவெள்ளியங்குடியில் திருமாலைக் குறித்து தவமிருந்து தனது கண்ணை மீண்டும் பெற்றார் என்று பார்த்தோம்.
கமண்டல நீர் வெளியே வர, அதைக்கொண்டு மஹாபலி தாரை வார்த்துக்கொடுத்து, தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற முயன்றான். வாமனன் கிடுகிடு வென்று த்ரிவிக்ரமனாக வளர்ந்து, தனது ஓரடியால் இந்த உலகு முழுவதும் அளந்து, இன்னொரு திருவடியை வானுலகு நோக்கி தூக்கி, விண்ணுலகம் எல்லாவற்றையும் முழுவதுமாக அளந்தார். மூன்று உலகுகளை மட்டுமே ஆட்சி புரிந்து வந்த மஹாபலிக்கு, ஏழு உலகுகளை அளந்து காட்டியவர் த்ரிவிக்ரமன். மூன்றாவது அடி அளக்க இடம் இல்லாததால், மகாபலியை பாதாள உலகிற்கு தள்ளினார்.
எம்பெருமான், மகாபலியை கொல்லாததற்கு இன்னொரு காரணம், அவர் பக்த பிரகலாதனுக்கு கொடுத்து இருந்த ஒரு வரம் ஆகும். நரசிம்ம அவதாரத்தின் போது, பிரகலாதனின் தந்தையை கொன்றதால், அதற்கு பிறகு, அவனுடைய அடியவனான பிரகலாதனின் வம்சத்தில் யாரையும் கொல்வதில்லை என்று அவனுக்கு எம்பெருமான் வரம் அளித்துஇருந்தார்.
ஈஸ்வர சம்ஹிதை என்ற நூலில், விஷ்ணுவிடம் இருந்த பக்தியினால், தர்மம், தண்ணீராக மாறியது என்றும், அப்படிப்பட்ட தண்ணீரை, சிறந்த பக்தியுடன் விஷ்ணுவின் திருவடிகளை, அவர் திருவிக்ரமனாக விண்ணுலகை அளந்த போது, தான் சுத்தம் செய்து மரியாதை செய்ததாகவும் பிரம்மன் கூறுகிறார். அந்த தண்ணீரைத் , தான், பரிசுத்தப்படுத்தபடத் தயாராக உள்ளதாகக் கூறி, சிவபெருமான் தன்னுடைய தலையினால் தாங்கிக் கொண்டு பிறகு சிறிது சிறிதாக பூமிக்கு விடுகிறார். அதுவே கங்கை என்று ஆனது.
இந்த திவ்யதேசத்தில், ஒரு விஷ்ணு துர்கை இருக்கிறாள். அவளுக்கு இங்கு கோவிலும், வழிபாடுகளும் உண்டு. அவள் ஸ்ரீகிருஷ்ணனுக்கு முன் யசோதைக்கு பிறந்த பெண் குழந்தை. இவள் தான் கிருஷ்ணனுக்கு பதிலாக கம்சனிடம் வாசுதேவரால் கொடுக்க பட்டவள். அன்று கம்சனுக்கு தெய்வ வாக்கு கொடுத்து மறைந்தவள். ஆக அண்ணன் தங்கை இருவருமே இந்த கோவிலில் காட்சி அளிக்கிறார்கள். திருமங்கையாழ்வாரும் இருவரையும் பாடி உள்ளார்.
ஆழ்வார்கள்
முதலாழ்வார்கள் மூவரும் பல ஸ்தலங்களைத் தரிசித்துக் கொண்டு திருக்கோவலூரை அடைந்தனர். இவர்களை ஒன்று சேர்க்க எண்ணிய எம்பெருமான் பெரும் மழையைப் பொழியச் செய்தார்.
முதலில் வந்த பொய்கை ஆழ்வார் மிருகண்டு முனிவரின் ஆசிரமத்தை அடைந்து, அங்கு இரவு தங்குவதற்கு இடம் வேண்டினார். முனிவர், ஒரு இடத்தைச் (இடைக்கழி) சுட்டிக் காட்டி இங்கு ஒருவர் படுக்கலாம் என்று கூறிச் சென்றார். சற்று நேரத்தில் அங்கு வந்த பூதத்தாழ்வார் தமக்கு தங்குவதற்கு இடம் வேண்டினார். ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம் என்று கூறி பொய்கையார் அவரை உள்ளே அழைத்துக் கொண்டார். பிறகு அவ்விடம் வந்த பேயாழ்வார் தங்க இடம் கேட்க, ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம் என்று கூறி அவரையும் சேர்த்துக்கொண்டனர்.
அந்த இரவு நேரத்தில், கொஞ்சம் கொஞ்சமாக மூவரும் இட நெருக்கடி ஏற்படுவது போல் உணர்ந்தனர். அவர்கள் மூவரைத் தவிர நான்காவதாக ஒருவர் உள்ளே இருந்து அவர்களை நெருக்குவதாகத் தோன்றியது. நாலாவதாக உள்ளவர் யார் என்பதை அறிய, அவர்கள் விளக்கு ஏற்ற நினைத்து பாட ஆரம்பித்தார்கள்.
முதலில், பொய்கையாழ்வார், நாம் அறிந்த மிகப்பெரிய பொருட்களைக் கொண்டு, “வையம் தகளியா வார்கடலே நெய்யாக, வெய்ய கதிரோன் விளக்காக, ” (முதல் திருவந்தாதி 1) என்று இந்த உலகத்தை தாங்கிப்பிடிக்கும் அகல் ஆகவும், ஆழ்ந்து சூழ்ந்து இருக்கும் கடல்தனை விளக்குக்கு நெய்யாகவும், சூரியனே திரியாகவும் கொண்டு அந்த இரவில், பாமாலையில் விளக்கு ஏற்றுகிறார். இதுவே நாலாயிர திவ்யப்ரபந்தத்திற்கு ஒரு துவக்கப் புள்ளியாக இருந்தது.
தொடர்ந்து, பூதத்தாழ்வார், அளவிடமுடியாத கருத்துக்களைக் கொண்டு ” அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக, இன்புருகு சிந்தை இடுதிரியா,” (இரண்டாம் திருவந்தாதி 1) என்று அவன் மீது உள்ள அன்பை அகலாகவும், அவன் மீது உள்ள ஆர்வத்தையே நெய்யாகவும், அவன் மீது உள்ள பக்தியினால் இன்பம் மிகுந்து அதையே திரியாகவும் கொண்டு அடுத்த விளக்கை ஏற்றுகிறார்.
இவர்கள் ஏற்றிய விளக்குகளால், பேரொளியாய்த் தோன்றிய எம்பெருமான் தம் திருமேனியைக் காட்டி அருள் புரிந்தார் என்பதை, மூன்றாவது ஆழ்வாரான பேய் ஆழ்வார் “திருக்கண்டேன், பொன் மேனி கண்டேன், திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன், செருக்கிளரும் பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன் ” என்று முதலில் மஹாலக்ஷ்மியை திருமார்பில் தரிசித்ததைச் சொல்லி, பிறகு மற்ற அழகினையும் பாடினார். (மூன்றாம் திருவந்தாதி 1).
இப்படி இவர்கள் பாடிய இடைக்கழி தான் இன்று நாம் தரிசிக்கும் த்ரிவிக்ரம சன்னதி. இவர்கள் பாடிய இடம் இந்த திவ்யதேசம் தான். மேல் சொன்ன இந்த பாசுரங்கள் இந்த திவ்யதேசத்திற்கு கிடையாது. பொய்கையாழ்வார் தன்னுடைய திருவந்தாதியில் இரண்டு பாசுரங்களில், பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்ததியில் ஒரு பாசுரத்தில் இந்த திவ்யதேசத்தை குறிப்பிட்டு உள்ளனர்.
இப்படி ஆழ்வார்கள் மூவரும் எம்பெருமானை தரிசித்து அனுபவித்ததை தேசிகன் என்ற ஆச்சாரியார், “மூன்று ஆழ்வார்களாகிய மூன்று உருளைகள் கரும்பைப் பிழிவதைப் போல, இனிய கரும்பான எம்பெருமானுடன் மிக நெருக்கமாக இருந்து அவருடைய திருக்குணங்கள் என்ற ரஸத்தைப் பருகுகிறார்கள் என்று விளக்குகிறார்.
திருமங்கை ஆழ்வார் தனியாக ஒரு பத்து பாடலைகளை (பெரிய திருமொழி 2.10) பாடியதோடு, பெரிய திருமொழியிலும் மற்றைய ப்ரபந்தங்களிலும் இன்னும் ஒரு எட்டு பாசுரங்களில் இந்த திவ்யதேசத்தை குறிப்பிட்டுள்ளார்.
திருநெடுந்தாண்டகத்தில், திருமங்கையாழ்வார், “நிலம் பரந்து வரும் கலுழிப் பெண்ணை ஈர்த்த ” என்று சொல்கிறார். அதாவது, தென்பெண்ணை ஆறாகிய பெண்மணி, ஆயனைப் பார்க்கும் மகிழ்ச்சியில், பேரார்வத்துடன் கரையை அழித்து, வரும் வழியில் உள்ள மூங்கில்களை எல்லாம் உடைத்துக்கொண்டு வருகிறாள் என்பதாகும்.
திருமங்கையாழ்வார் இந்த திவ்யதேசத்தில் உள்ள துர்க்கையை ‘விந்தம் மேவிய கற்புடை மடக்கன்னி காவல் பூண்ட கடி பொழில்’ என்று இந்த திருத்தலத்தை திருநெடுந்தாண்டகத்தில் புகழ்கிறார்.
மற்ற ஆழ்வார்கள் த்ரிவிக்ரமனை பற்றி பாடிய ஒரு சில பாடல்கள் :
ஆண்டாள் ஓங்கி உலகளந்த உத்தமன் என்று த்ரிவிக்ரமனை பாராட்டுகிறார். “உத்தமன் என்று உளன் கண்டாய் ” என்று பேய்ஆழ்வார் பாடுகிறார். வாமனாவதாரம் மற்றும் த்ரிவிக்ரம அவதாரங்களில் எம்பெருமான் யாரையும் ஸம்ஹாரம் (கொலை) செய்யவில்லை, அதனால் இந்த அவதாரம் உத்தமன் என்று ஆளவந்தார் என்ற ஆச்சாரியார் கூறுகிறார். இந்த அவதாரத்தின் போது எம்பெருமானின் திருவடிகளில் அம்ருதம் இருந்ததாம், தேன் வடியும் திருவடிகள் என்று ஆளவந்தார் சொல்கிறார்.
நம்மாழ்வார் “அண்டம் மோழை எழ, முடி பாதம் எழ” என்று பாடுகிறார். இதற்கு விளக்கம் கொடுக்கும் உரையாசிரியர், முடிக்கு மேல் பாதம் எழுகிறது என்று அர்த்தம் சொல்லி, எம்பெருமான் தனது பாதத்தை திருமுடிக்கு மேல் தூக்கி சென்றான் என்கிறார்.
“தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட எந்தாய்” என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமாலையில் (35), உலகத்தாருடைய தாழ்வுகளைப் பார்க்காமல், அவர்கள் எதுவும் கேட்காமல், எல்லோருக்கும் தன் திருவடிகளால் தீண்டி மோக்ஷம் அருளிய எம்பெருமான் த்ரிவிக்ரமன் என்று பாடுகிறார்.
எல்லா ஆழ்வார்களும் சொல்வது, உலகத்தை அளந்து, பாரபட்சம் இன்றி இவ்வுலகில் உள்ள எல்லோரையும், அவர்கள் கேட்காமலே ரக்ஷித்த அந்த உத்தமனை வணங்கி நாமும் நல்வழி தேடுவோம் என்பதே.