A Simple Devotee's Views
ஹேமாம்புஜவல்லி தாயார் ஸமேத தேவநாதப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
திவ்யதேசம் | திருவஹீந்திரபுரம் | |||
மூலவர் | தெய்வநாயகன் | |||
உத்ஸவர் | மூவராகிய ஒருவன். தேவ நாதன், திவிஷந் நாதன், விபுதநாதன், தாஸ ஸத்யன், அடியவர்க்கு மெய்யன் அச்சுதன் | |||
தாயார் | ஹேமாம்புஜவல்லி தாயார் , வைகுண்ட நாயகி , பார்கவி, செங்கமலம், தரங்காநந்தினி | |||
திருக்கோலம் | நின்ற திருக்கோலம் | |||
திசை | கிழக்கு | |||
பாசுரங்கள் | 10 | |||
மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 10 | |||
தொலைபேசி | +91 94434 44778 |
கோவில் பற்றி
திருவஹீந்திரபுரம், கல்விக்கான அவதார மூர்த்தி ஹயக்ரீவப் பெருமாள் எழுந்தருளி இருப்பதாலும், ஆதிசேஷன் மற்றும் கருடனின் மகத்துவத்தாலும், வேதாந்த தேசிகன் என்ற ஆச்சார்யராலும் பெருமையும் சிறப்பும் பெற்றது. திருவஹிந்திரபுரம் நான்கு வேதங்களையும் சகல கலைகளையும் உலகிற்கு அளித்த பெருமாளைப் பெற்றது.
இந்த திருத்தலம் இப்போது அயிந்தை என்று வழங்கப் படுகிறது.அருகில் இருந்த மலையில் பிரம்மா தவம் செய்ததால், ப்ரம்மாச்சலம் என்று கூறுவர். தேவர்களுக்குத் தலைவனாக இருந்து, எம்பெருமான் யுத்தம் செய்ததால், தேவநாதன் என்று திருநாமம் ஏற்பட்டது. தாயார் தேவர்களைக் காப்பாற்றுவதால் ஹேமாம்புஜவல்லி என்று திருநாமம்.
இந்த எம்பெருமானுக்கு
இவற்றில் தாஸ ஸத்யன் என்பதை அடியார்க்கு மெய்யன் என்றும் ஸ்தரஜ்யோதிஷ் என்பதை மேவு சோதியன் என்றும் த்ரிமூர்த்தி என்பதை மூவராகிய ஒருவன் என்றும் திருமங்கையாழ்வார் தன் பாடல்களில் கூறி உள்ளார்.
கல்வெட்டுக்கள் இப்பெருமாளை நின்றருளிய மகாவிஷ்ணு என்றும் ஏழிசை நாதப் பெருமான் என்றும் குறிக்கின்றன. இவர் யுகம் கண்ட பெருமாள் என்றும் போற்றப் படுகிறார்.
தன்னிடமிருந்தே பிரம்மனும், சிவனும் தோன்றினர் என்பதை இப்பெருமான் உணர்த்துகிறார். பிரம்மனுக்கு அடையாளமான தாமரைப் பூவினை கையிலும் விஷ்ணுவுக்கு அடையாளமான சங்கு சக்கரங்களையும் சிவனுக்கு அடையாளமான நெற்றிக்கண்ணும், சடையும் கொண்டு இப்பெருமான் திகழ்கிறார் என்பர்.
கருடனால் உருவாக்கப்பட்ட கெடில நதி, தெற்கில் இருந்து வடக்காக ஓடுகிறது. அது ஒரு ரிஷியின் சாபத்தால் சிவப்பு நிற நீர் கொண்டு ஓடுகிறது, அதே ரிஷியின் சாப விமோசனத்தினால், அந்த நீர் எப்பொழுதும் கலங்கல் இல்லாமல் தெளிவாகவே உள்ளது. எம்பெருமான் இரத உற்சவ நாட்களில் இந்த கெடில நதிக்கரைக்கு வந்து, பூஜைகளையும், தீர்த்தங்களும் ஏற்று கொள்கிறார்.
ஆதிசேஷன் கொண்டு வந்த, பாதாளகங்கை தீர்த்தமும் கருடன் கொண்டு வந்த விரஜாநதி தீர்த்தமும் இந்த திருத்தலத்தில் உள்ளன. பாதாள கங்கை தீர்த்தம், எம்பெருமானின் நிவேதியத்திற்கும் விராஜா நதி தீர்த்தம் திருமஞ்சனத்திற்கும் எடுத்து கொள்ள படுகின்றன.
இங்கு நரசிம்மர், இராமபிரான், வேணுகோபாலன், சக்கரத்தாழ்வார், பள்ளிகொண்ட நாதர், ஆண்டாள், ஆழ்வார் என்று பல சன்னதிகள் உள்ளன. இங்கு இரண்டு நம்மாழ்வார்கள் சேவை சாதிக்கின்றனர்
வடமொழியில் தேவநாயக பஞ்சாசத் என்னும் ஸ்தோத்ரமும், அச்யுத சதகம் என்ற ஸ்தோத்ரங்கள் அடங்கிய நூலும் இத்தலத்தைப் பற்றி சிறப்பாக பேசுகின்றன.
ஹயக்ரீவர்
தெய்வநாயகன் சன்னதிக்கு எதிரே உயரமான பகுதியில் அமைந்துள்ள ஒளஷதகிரி என்று அழைக்கப் படும் ஒரு இடம் மிகவும் பிரசித்தமானது. ஶ்ரீஅனுமன் சஞ்சீவி பா்வதத்தைக் கொண்டு செல்லும் போது அதிலிருந்து விழுந்த ஒரு சிறிய பகுதியே இந்த “ஔஷத மலை” என்றுசொல்வார். அங்கு திருமாலின் அவதாரங்களில் ஒருவரான ஹயக்ரீவ பெருமாளுக்கு ஒரு திருக்கோவில் அமைந்துள்ளது. குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவப் பெருமாள் சகல வித்தைகளுக்கும் ஆதாரமாக இருப்பவர், அதாவது இவர் கல்விக் கடவுள். ஞானத்தையும் கல்வியையும் அள்ளி வழங்குபவர். ஆயக் கலைகள் 64-ஐயும் நமக்கு அருளும் சரஸ்வதியின் குரு ஹயக்ரீவர். மூலவர் லட்சுமி ஹயக்ரீவர்.
ஞானானந்த மயம் தேவம், நிர்மல ஸ்படிகாக்ருதிம், ஆதாரம் ஸர்வ வித்யானாம், ஹயக்ரீவம் உபாஸ்மஹே என்ற இந்த ஸ்லோகத்தின் அர்த்தம், ஞானமயமாக கலக்கமற்ற ஸ்படிகம் போல் திகழும் இந்த தேவனே சகல வித்தைகளுக்கும் ஆதாரமான ஹயக்ரீவராவார்.
ஹயக்ரீவ பெருமாள், சந்திர மண்டலம் போல் வெளுத்த திருமேனியும் பஞ்சாயுதங்கள் ஏந்திய நான்கு திருக்கரங்களுடனும், குதிரை முகத்துடனும் நீண்ட காதுகளுடனும் வேதமாகிய அமுதம் நுரை தள்ளும் வாயும், கருணை பொங்கும் விழிகளும், பீதாம்பர ஆடை உடுத்தி, பெரிய பிராட்டியை திருமார்பில் கொண்ட திருக்கோலமும் கொண்டு உள்ளார்.
இந்த ஹயக்ரீவ மலைக்கு 74 படிகள், அவை ஸ்வாமி இராமானுஜர் ஏற்படுத்திய 74 சிம்மாசனாதிகளை குறிப்பதாகச் சொல்வர்.
ஹயக்ரீவ பெருமாள் ஆதித்திருமேனிகள் இந்தியாவில் இங்கேயும், மைசூரில் உள்ள பரகால மடதிலும் உள்ளதாக சொல்வர். எல்லா மூர்த்திகளும் மலர்மாலைகள் சார்த்திக் கொள்வார்கள், ஹயக்ரீவருக்கு மிகவும் உகந்த மாலை, ஏலக்காய் மாலை ஆகும்.
ஹயக்ரீவர் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் :
ஸ்தல வரலாறு
ஒரு காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் கடும் போர் ஏற்பட்டு யுத்தத்தில் அசுரர்கள் வெற்றி பெற்றனர். தேவர்கள் திருமாலைத் துதித்து உதவி வேண்டி நிற்க, அசுரர்கள் பிரம்மனிடம் உதவி கேட்டனர். பிரம்மன் அவர்களை சிவனிடம் அனுப்பினார். தேவர்களுக்காக திருமால் சக்ராயுதம் கொண்டு போரிட்டு அத்தனை அசுரர்களையும் அழித்தார். அசுரர்களின் உதவிக்கு வந்த சிவன் சக்ராயுதத்திற்கு எதிராக தனது சூலாயுதத்தை ஏவ அது சக்கரத்தில் பட்டு அதனுடன் ஒரு அணிகலன் போல் சேர்ந்து நின்றது. அதனைப் பார்த்த சிவனுக்கு, திருமால் தனது மும்மூர்த்தி வடிவத்தைக் காண்பித்தார். அந்த வடிவத்தில் திருமாலுடன், பிரம்மா, சிவன் தெரிய, சிவன் உடனே துதிக்க, எம்பெருமான் சக்ராயுதத்தை திரும்ப பெற்றுக்கொண்டு, சூலாயுதத்தையும் சிவனிடமே திரும்பி கொடுத்தார். தேவர்களின் வேண்டுகோளின்படி அங்கேயே கோயில் கொண்டார்.
எம்பெருமானுக்கு அப்போது தாகம் ஏற்பட, அவர் நீர் கேட்டார். நீர் கொண்டு வர கருடன் ஆகாயத்தின் மீது பறக்க, ஆதிசேஷன் தனது வாலால் பூமியை அடித்து அங்கு இருந்து பாதாள கங்கை நீர் பாய, அதனை எம்பெருமானுக்கு சமர்ப்பித்தார். இவ்வாறு ஆதிசேஷன் பூமியை பிளந்து உடனே எம்பெருமானுக்கு தீர்த்தம் கொண்டு வந்தார். அவர் பெயராலேயே இங்குள்ள தீர்த்தமும் சேஷ தீர்த்தம் என்றே அழைக்கப் படுகிறது.
ஆகாயத்தில் பறந்து சென்ற கருடன் விரஜா நதி தீர்த்தத்தை வைகுண்டத்திலிருந்து கொண்டு வந்தார். கருடனால் கொண்டு வரப்பட்ட தீர்த்தமே இங்கு நதியாக மாறி கருட தீர்த்தமாகி, காலப்போக்கில் கெடில நதியாகப் பெயர் மாறி தற்போதும் ஓடிக்கொண்டு இருக்கிறது.
பிருகு மகரிஷி இந்த வனத்தில் தவம் செய்யும் போது மூன்று வயது பெண் குழந்தையை கண்டு எடுத்தார் என்றும், அந்த குழந்தை கடலை நோக்கி சிரித்துக்கொண்டே இருந்தது என்றும் அதனால் அந்த பெண் குழந்தைக்கு தரங்காநந்தினி என்று பெயர் சுட்டி வளர்த்து வந்தார். தரங்கம் என்றால் கடல் அலை, ஆனந்தினி என்றால் மகிழ்ச்சி அடைவாள் என்று பொருள். அவள் திருமண வயதை அடைந்தவுடன், எம்பெருமானுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார். எம்பெருமானும் ஏற்றுக்கொண்டார்.
வ்ருத்தாசுரன் என்னும் அரக்கன் தனது தவபலத்தால் பெற்ற சக்தியைக் கொண்டு இந்திரனை வென்று இந்திரலோகத்தை கைப்பற்றினான். இந்திரன் பயந்து இங்குள்ள தாமரைத் தண்டில் ஒளிந்து கொண்டான். தேவர்கள், தங்கள் தலைவனைத் தந்தருள வேண்டும் என்று திருமாலிடம் வேண்ட, அவரும் அவர்களை அயிந்திரபுரத்தில் ஒரு வைஷ்ணவ யாகம் செய்தால் தாமரைத் தண்டில் ஒளிந்துள்ள இந்திரன் வருவான் என்று அருள, அவ்விதமே அவர்கள் யாகம் நடத்த, இந்திரன் தோன்றினான். திருமாலும் பிரத்யட்சமாகி இந்திரனுக்கு வஜ்ராயுதத்தைக் கொடுக்க அதனால் வ்ருத்தாசுரனைக் கொன்று மீண்டும் தன் நாட்டைப் பெற்றான்.
மது, கைடபன் என்னும் அரக்கர்கள் பிரம்மனிடமிருந்த படைப்புத் தொழில் நடத்தும் ரகசிய வேதத்தை எடுத்து மறைத்துக் கொள்ள, பிரம்மன் மேற்படி வேதத்தை தமக்கு மீட்டுத்தர திருமாலிடம் வேண்டினார். திருமால் ஹயக்ரீவ வடிவம் கொண்டு அரக்கர்களைக் கொன்று படைப்புத் தொழிலுக்கான வேதத்தை மீண்டும் பிரம்மனிடமே ஒப்படைத்தார். இதனால்தான் ஹயக்ரீவ பெருமாளை ‘நால்வேதப் பொருளைப் பரிமுகமாய் அருளிய பரமன்’ என்று போற்றுவர். இப்பெருமாளை வழிபடுவர்களுக்குத் தங்கு தடையற்ற கல்வியும், தெளிவான ஞானமும் உண்டாகும்.
சைவத்தின் மீது ஈடுபாடு கொண்ட ஒரு சோழ மன்னன், வைணவத்தலங்களுக்கு தீங்கு செய்து கொண்டு இருந்தான். அது போன்று, இந்த திருத்தலத்தையும் நாசம் செய்ய வந்த மன்னனிடம், ஒரு ஆடு மேய்க்கும் இடையன் அது சிவன் ஸ்தலம் என்று கூற, அந்த மன்னன் கர்ப்பக்ரஹத்தை உற்று நோக்க, எம்பெருமான் அவனுக்கு சிவனாக காட்சி அளித்தார் என்று சொல்வர். அதனால் அந்த மன்னன் இந்த கோவிலை ஒன்றும் செய்யாமல் சென்றான்.
ஆழ்வார்
திருமங்கையாழ்வாரால் பத்துப் பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம்.
திருமங்கையாழ்வார் மூவராகிய ஒருவனை என்று எம்பெருமானை மங்களாசாசனம் செய்தார். மூவரும் இவனே என்பதை நம்மாழ்வாரின் பெரிய திருவந்தாதி பாடலாலும் அறியலாம்.
முதலாம் திருவுருவம் மூன்றென்பர், ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் என்பர், முதல்வா, நிகர் இலகு கார் உருவா நின்னகத்த தன்றே
புகரிலகு தாமரையின் பூ (72)
மணவாள மாமுனிகள் பன்முறை மங்களாசாசனம் செய்த தலம். இங்கு மணவாள மாமுனிகளுக்கு ஒரு அழகான கோவில் ஒன்று உள்ளது.
வேதாந்த தேசிகன்
இன்றைக்கு சுமார் 750 வருடங்களுக்கு முன் பிறந்து, ஸ்வாமி ராமானுஜருக்கு பிறகு ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் “கவிதார்க்கிக சிம்மம்”, “சர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர்”, “வேதாந்ததாசரர்” என்று பல பட்டப் பெயர்களுடன் சிறப்பு பெற்றவர் தூப்புல் ஸ்ரீ வேதாந்த தேசிகன் என்ற ஆச்சாரியர்.
திருவேங்கடமுடையானுடைய திருஆராதன மணியின் அம்சமாக ஒரு மகான் அவதரிக்கப் போகிறார் என்று புராணங்களில் சொல்லியது போல், ஸ்ரீமாந் நிகாமந்த தேசிகர் இங்கே 40 ஆண்டுகாலம் எழுந்தருளியிருந்து வடகலை சம்பிரதாயத்திற்கு அரும் பெரும் தொண்டுகள் செய்து வளர்த்தார்.
சுவாமி தேசிகன், ஒளஷதகிரி என்ற திருத்தலத்தில், அச்வத்த மரத்தின் கீழ் அமர்ந்து கருட மந்திரத்தைகொண்டு தவம் புரிந்து, கருடனின் ஆசியை பெற்றார். கருடன், தேசிகனுக்கு காட்சி கொடுத்து, அவருக்கு ஹயக்ரீவ மந்திரத்தையும் சொல்லிக் கொடுத்தார். அதே இடத்தில, ஹயக்ரீவ மந்திரத்தைக் கொண்டு , மீண்டும் ஒரு கடுமையான தவம் புரிந்து, ஹயக்ரீவரின் அருளையும் பெற்றவர். வேதாந்த தேசிகரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூா்த்தியே திருவஹீந்திர புரத்தில் அருள்பாலிக்கும் ஶ்ரீஹயக்ரீவர் ஆவாா்.
ஹயக்ரீவரின் அருளையும், காட்சியையும் பெற்று மலையில் இருந்து திரும்பிய தேசிகன், வடபெண்ணை நதிக்கு சென்று கொண்டு இருந்தார். அவரை வழி மறித்து, அடியவர்க்கு உண்மையான தெய்வநாயகபெருமாள், காட்சி கொடுத்ததாக சொல்வர்.
தேசிகன், கருடன் மீதும், ஹயக்ரீவர் மீதும், தெய்வ நாயகன் மீதும் அளவற்ற பக்தி கொண்டு பல அரும் பெரும் நூல்கள் இயற்றினார். ஆச்சார்யர்களில் நாயிகா பாவத்தில் (தன்னை ஒரு பெண்ணாக பாவித்து) இறைவனை பாடல்கள் பாடி அனுபவித்து வழிபட்டவர் சுவாமி தேசிகன்.
ஸ்வாமி தேசிகன், அஹீந்த்ரபுர க்ஷேத்ரத்தில், அடியவர்க்கு மெய்யன் திவ்ய தம்பதியரை ஸேவித்து, ஒளஷதகிரி ஏறி முற்றிலும் அடர்ந்த வனமாகக் காட்சியளித்த ஸ்தலத்தில், ஆளரி ஸந்நிதியில் அவனையும் ஸேவித்து, மாதுலர் ஸ்ரீ அப்புள்ளாரின் நியமனப்படி,. காருட மந்த்ரத்தை ஜபிக்கத் தொடங்கினார். அவ்விடத்தே ஆதியில் எழுந்தருளியிருந்தது ஸ்ரீ ந்ருஸிம்ஹன்.
ஸ்ரீ ஹயக்ரீவன் இவ்விடத்தே ப்ரத்யக்ஷமாகி அருளியவுடன் ஸ்வாமி அநுபவித்து அருளியது ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம். ஆனால் இந்த ஸ்தோத்ரத்தின் இன்னொரு அர்த்தம் - ஸ்ரீ ந்ருஸிம்ஹனைப் பற்றியது என்றும், மஹான்கள், இந்தத் தெளிய உள்பொருளை ப்ரகாசிக்கச் செய்ய வேண்டுமென்றும் விண்ணப்பித்து இருந்தேன். ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரத்தைச் சொன்னோமானால்,. ஸ்ரீ ந்ருஸிம்ஹனையும் ஸ்தோத்தரிப்பதாக ஆகும். அடியேனுடைய மந்த புத்திக்குத் தெரிந்த வரையில், இப்படியான இரண்டு முக்ய அவதார வைபவத்தை, நமது மஹாசார்யன் ஸ்வாமி தேசிகனைப் போல, வேறு எந்த மத ஸ்தாபகரும், மஹாசார்யர்களும், மஹா பண்டிதர்களும் இதுவரை ஒரே ஸ்தோத்ரத்தில் சொன்னதில்லை. இப்போதும் ஒளஷதகிரியில் ஸ்ரீ ஹயக்ரீவன் ஸந்நிதியில், ந்ருஸிம்ஹனும் மேற்கு திக்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார். இப்படிப்பட்ட, ஸந்நிவேசம் - இங்கு ஒரு புண்ணிய இடத்தில்தான். ஆதலால், இங்கு ஆற அமர ஸேவித்து, ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரத்தைச் சொன்னோமானால், நரஸிங்கப் பெருமானின் க்ருபையும் ஒரு சேரக் கிடைக்கும்.
ஸ்ரீ உருப்பட்டூர் செளந்தரராஜன் ஸ்வாமி, ஸ்ரீ தேசிக ஸேவாவில்
சுவாமி தேசிகன் தன்னைப்போலவே தன்னுடைய திருக்கரங்களாலேயே ஓர் உற்சவ விக்கிரகம் செய்து போட்டியில் ஜெயித்த இடம் இந்த தி திவ்யதேசம் தான்.
40 ஆண்டுகள் இந்த திவ்யதேசத்தில் வாழ்ந்திருந்த சுவாமி தேசிகன் ஒரு திருமாளிகையும், அதில் தமது திருக்கரத்தால் ஒரு கிணறும் கட்டி இருந்தார். அவை இன்றும் இங்கே உள்ளன.
இந்த எம்பெருமானின் மீது வேதாந்த தேசிகன் மும்மணிக் கோவை என்ற நூலை அருளிச் செய்தார். சிருஷ்டித் தொழிலை மேற்கொண் டிருக்கும் நான்முகன் அனுதினமும் இத்தலத்தில் பூஜை செய்து வழிபடுவதாக தமது “மும்மணிக் கோவையில்” ஶ்ரீதேசிகா் அருளியுள்ளாா்.
திருவஹீந்திபுரத்தில் ஆனி மாதம் நடைபெறும் வசந்த உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இறைவனை நமக்குக் காட்டித்தரும் குரு உயர்ந்தவர் என்பதை மனதில் கொண்டு ஆனி மாதம் (ஜூன் 15 முதல் ஜூலை 14 வரை) வளர்பிறை சதுர்த்தசி அன்று நிறைவடையும் 10 நாள் உற்சவம் இந்த வசந்த உற்சவம். இதில் காலையில் திருமஞ்சனம் காணும் தேசிகன், மாலையில் புறப்பாடு நடைபெற்று, அதன்பின் வசந்த மண்டபத்தில் அடியவர்களுக்கு அருள் புரிவார். அவர் எழுதிய ““யானும் நீயே என்னுள் உறைதலின்!” (மும்மணிக்கோவை 7) என்பதின்படி, ஏழாம் திருநாளன்று, வேணுகோபால கிருஷ்ணன் அலங்காரத்திலும், எட்டாம் திருநாளன்று நாச்சியார் திருக்கோலத்திலும், ஒன்பதாம் திருநாளன்று பரவாசுதேவன் அலங்காரத்திலும் வேதாந்த தேசிகன் காட்சியளிப்பார். நிறைவு நாளன்று காலையில் திருமஞ்சனம் முடிந்தபின், ஔஷதகிரி மலை சென்று ஹயக்ரீவப் பெருமாளுடன் திருமஞ்சனம் கண்டருளுவார். அப்போது அவர் இயற்றிய ஹயக்ரீவ ஸ்தோத்ரம் பாராயணம் செய்யப்படும்.
புரட்டாசி மாதத்தில் இந்த ஸ்தலத்தில் நடைபெறும் தேசிக ப்ரமோத்ஸவம் மிக பிரசித்தி பெற்றது. தேசிகன் உற்சவத்தின் போது, காலை மற்றும் மாலையில் முத்துப் பல்லக்கு, தங்க விமானம், சூரிய பிரபை, யாளி வாகனம், சந்திர பிரபை, மோஹினி அவதாரம், வெள்ளி சிம்ம வாஹனம், சொர்ணாபிஷேகம், தங்க விமானம், குதிரை மற்றும் ஹம்ச வாஹனம் என்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தேசிகன் திருநட்சத்திரமான ப்ரமோத்ஸவம் திருவோணம் அன்று ஔஷத மலையில் உள்ள ஹயக்ரீவ சன்னதியில் தேசிகனுக்கு விஷேச பூஜைகளுடன், ரத்னாங்கி சேவை மிக சிறப்பாக நடைபெறும். பிறகு அவர் பல்வேறு சந்நிதிக்கு சென்று மாலை மரியாதை பெற்று கொண்டு, மாலையில் புறப்பாடும் இரவில் தெப்போஸ்தவமும் நடைபெற்று விடையாற்றி உத்சவத்துடன் தேசிக ப்ரோமோத்ஸவம் இனிதே நிறைவேறும். ஆச்சார்யனின் அருள் எல்லோருக்கும் கிடைக்கப் பிரார்த்தித்து இந்த பதிவினை முடிவு செய்வோம்.
நானிலமும் தான் வாழ, நான்மறைகள் தாம் வாழ,
மாநகரில் மாறன் மறை வாழ – ஞானியர்கள்
சென்னி அணி சேர் தூப்புல் வேதாந்த தேசிகனே
இன்னுமொரு நூற்றாண்டு இரும்!
திருவஹீந்திரபுரம் பற்றி தினம் ஒரு திவ்யதேசம்