A Simple Devotee's Views
புண்டரீகவல்லித்தாயார் ஸமேத கோவிந்தராஜப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
திவ்யதேசம் | திருச்சித்ரகூடம் தில்லைநகரம், சிதம்பரம் | |||
மூலவர் | கோவிந்தராஜன் | |||
உத்ஸவர் | தேவாதிதேவன், பார்த்தசாரதி, (வீற்று இருந்த திருக்கோலம்) சித்ரகூடத்திலுள்ளான் (நின்ற திருக்கோலம்) | |||
தாயார் | புண்டரீகவல்லித்தாயார் (தனி நாச்சியார் சன்னதி) | |||
திருக்கோலம் | கிடந்த (போக சயனம்) | |||
திசை | கிழக்கு | |||
பாசுரங்கள் | 32 | |||
மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 21 குலசேகராழ்வார் 11 | |||
தொலைபேசி | +91 4144 – 222 552, +91 98940 69422. |
கோவில் பற்றி
பிரம்மாண்ட புராணத்தில் பிரம்மன் நாரதரிடம், எல்லா உலகங்களிலும், பூவுலகம் சிறந்தது. அதில் சிறந்தது நாவலந்தீவு என்னும் பரதக் கண்டம். அதில் சிறந்தது தமிழ்நாடு. அதில் வட காவேரியின் வட திசை சிறந்தது. அதில் தில்லை வனம் சிறந்தது. அதில் சிறந்தது புண்டரீகபுரம். அதில் சிறந்தது சித்திரகூடம். அந்த சித்ரகூடத்தில், அனந்தாழ்வான் மேல் பள்ளி கொண்டுள்ள கோவிந்தராஜனைத் தானும் சிவ பெருமானும் இந்திரன் என்ற பலரும் போற்றி அவனிடம் இருந்து பல நன்மைகள் பெற்றதாக கூறுகிறார்.
இந்த கோவிலில், கோவிந்தராஜன் தனி கொடிமரத்துடன் தனிக்கோவில் மூலவராக இருக்கிறார். இங்குள்ள மண்டபத்தில் இருந்து பார்த்தால், பள்ளிகொண்ட கோவிந்தராஜனையும், அவரது நாபிக்கமலத்தில் நின்ற திருக்கோலத்தில் பிரம்மாவையும், நடனமாடும் கோலத்தில் நடராஜனையும் தரிசிக்கலாம், அது இங்கு ஒரு தனிச் சிறப்பு .
தன் எதிரில் நடராஜப் பெருமான் நடனமாடியதை எம்பெருமான் பள்ளிகொண்டு ரசித்ததால் இங்கு உள்ள சயனம், போக சயனம் என்று அழைக்கப்படுகிறது.
மூலவர் கோவிந்தராஜன் சயன திருக்கோலத்திலும், உற்சவர் தேவாதிதேவன் அமர்ந்த கோலத்திலும், இன்னொரு உற்சவராக சித்திரகூடத்திலுள்ளான் நின்ற திருக்கோலத்தில் காட்சி கொடுக்கின்றனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் இது ஆகாயஸ்தலம். இங்கு எம்பெருமான் ஆகாயத்தை நோக்கி பார்த்துக்கொண்டு சேவை சாதிப்பது விசேஷம்.
ப்ரம்மா திருமாலின் நாபிக்கமலத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் தான் எப்போதும் காட்சி அளிப்பார். ஆனால் இங்கு, பணிவுடன் நின்ற திருக்கோலத்தில் எம்பெருமானின் அருகில் அவரை தீர்ப்பு சொல்ல வேண்டும் என்று வேண்டிக்கொள்ளும், நின்ற திருக்கோலத்தில் உள்ளார்.
முன்னொரு காலத்தில் இங்கு சிவன் கோவிலும், பெருமாள் கோவிலும் தனித்தனியே இருந்தன. தில்லைத் திருச்சித்ரக்கூடம் என்று பெருமாள் கோவிலை ஆழ்வார்களும். சிற்றம்பலம் என்று நடராஜர் கோவிலை
சைவர்களும் வழங்கி வழிபட்டு வந்தனர்.
சிதம்பர ரகஸ்யம் என்பது நடராஜர் சன்னதியில் மூலஸ்தானத்தில் உள்ளது.
ஸ்தல வரலாறு
கலிங்க நாட்டு மன்னன் கவேரன் என்பவனுக்கு நெடுங்காலம் புத்திர பாக்கியம் இல்லாமல் இருக்க, அவனும் அவன் மனைவியும் பல தவங்களைப் புரிந்ததன் பயனாக காவேரியே அவர்களுக்கு குழந்தையாகப் பிறந்தாள். பிறகு காவேரி அகத்தியனால் நதியாக ஆன பின்பு காவேரனும் அவன் மனைவியும் நீராட வந்து, தாங்கள் எந்நாளும் வாழும் சாகா வரம் வேண்டும் என்று அவளிடம் வேண்டினார்கள். அதற்கு காவேரி அவர்களை தில்லைவனம் சென்று அங்குள்ள கோவிந்தராஜனை குறித்து கோவிந்தா, கோவிந்தா என்று கூறி தவம் இருக்குமாறு கூறுகிறாள். அவர்களுக்கு எம்பெருமான் காட்சி அளித்து மோக்ஷமும் கொடுத்து அருளினான். அதனால் இதனை மோக்ஷ ஸ்தலம் என்று கூறுவர்.
எம்பெருமான் தஞ்சகன், கஜமுகன், தண்டகாசுரன் என்ற மூன்று அரக்கர்களை வதம் செய்ததை தஞ்சை மாமணிக்கோயில் ஸ்தல வரலாற்றில் பார்த்ததை நினைவில் கொண்டு தொடருவோம்.
இந்த அரக்கர்களுக்கு சில்லி, தில்லி என்னும் இரு சகோதரிகள் இருந்தனர். அவர்கள் இருவரும், தம் சகோதரர்களை ஜெயித்த பூவராகப் பெருமானை சரணடைந்து தங்களுக்கும் நல்வழி காட்டுங்கள் என்று வேண்ட, பூவராக எம்பெருமான் அவர்களையும் காத்து அருளினான். ஸ்ரீமுஷ்ணத்திலேயே எம்பெருமானுக்கு காவல் புரிய வேண்டும் என்று சில்லி வேண்டிக் கொள்ள , அப்படியே நடக்க எம்பெருமானும் அருள் புரிந்தார்.
தில்லி மோக்ஷம் வேண்ட, எம்பெருமானும், அவளை புண்டரீகபுரம் சென்று அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி தன்னைக் குறித்து தவமிருக்குமாறு சொன்னார். அவளும் தவம் புரிய, எம்பெருமான் காட்சி கொடுத்தார். அவளும் எம்பெருமானின் அருகே மரமாக இருக்க வேண்டும் என்று வேண்டினாள். அதற்கும் எம்பெருமான் அருள் புரிந்தார். தில்லி இந்த க்ஷேத்திரத்தை சுற்றி, அழகான தில்லைக் காந்தார மரமாக விரிந்து பரந்து நின்றாள். எம்பெருமானும், தில்லைக் கோவிந்தனாகப் பள்ளி கொண்டார். தில்லி வேண்டியதால், இது தில்லைநகரம் ஆயிற்று.
பரமசிவனும் பார்வதியும் ஒரு சமயம் சிவலோகத்தில் மிக்க மகிழ்ச்சியுடன் மிக சிறப்பாக நடனம் ஆடினர். அவர்களில் யாருடைய நடனம் சிறப்பாக இருந்தது என்று இருவருமே தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தனர்.
அவர்கள் பிரம்மனிடம் சென்று தங்களில் யார் சிறப்பாக நடனம் ஆடுவர் என்று ஒரு போட்டி வைத்து தீர்ப்பு சொல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அவரும் அவர்களை திருவாலங்காட்டில் நடனம் ஆடும்படியும், அங்கு அவர் தீர்ப்பு கொடுப்பதாகவும் சொன்னார். அப்படியே அங்கு சிவனும் பார்வதியும் சிறப்பாக நடனமாட, பிரம்மனால் ஒரு தீர்ப்பும் சொல்ல முடியவில்லை. இருவரின் நடனத்தையும் வியந்து பேசி, முடிவை திருமாலிடம் கேட்கச் சென்றனர்.
திருமால் அவர்களை மீண்டும் ஒரு நடனம் புரிய தில்லை வனத்திற்கு வரச்சொன்னார். தெய்வத்தச்சனான விஸ்வகர்மாவை கொண்டு தில்லைவனத்தில் நடுவில் சித்ர கூடத்தை அமைக்கச் சொன்னார் அவனும் அரக்கர்களின் தச்சன் மயனையும் கொண்டு, ஐந்து பூதங்களை ஐந்து கலசமாக்கி நான்கு வேதங்களையும் நான்கு கோபுரமாக்கி சித்ரக்கூடத்தை கனகசபை, ரத்தின சபை, நாகசபை, தேவசபை, ராஜசபை, ஆகியன சூழ தோற்று வித்தான்.
சிறந்த சபையில் மீண்டும் இருவருடைய நடனமும் வழக்கம்போல் மிக சிறந்த முறையில் ஆரம்பித்தது. முடிவில் சிவன் தனது இடதுகாலைத் தரையில் ஊன்றி வலதுகாலைத் தலைமேல் தூக்கி நிறுத்தினான். பெண்மைக்குரிய நாணத்தால் தான் அவ்வாறு செய்யாமல் உமையவள் நின்றாள். நடராசனே வென்றான், என்று சபையில் அனைவரும் தீர்ப்புக் கூற, திருமாலும் அதனை ஆமோதித்தார். உமையவள் காளியாக மாறி தில்லை வனத்திற்குத் தெற்கே இன்றும் அங்கு ஒரு காவல்தெய்வமாய் நிற்கிறாள்.
சிவன் திருமாலிடம் இதே திருக்கோலத்தில் இங்கு எழுந்தருள வேண்டும் என்று கேட்க, எம்பெருமானும் இங்கு சயன திருக்கோலத்தில் காட்சி கொடுக்கிறார்.
ஆதிசேஷன் ஒரு முறை, சிவனின் நடனத்தை காண வேண்டும் என்று விருப்பம் கொண்டு, எம்பெருமானிடம் தெரிவிக்க அவரும் ஆதிசேஷனை இந்த திருத்தலத்திற்கு வந்து அந்த காட்சியை காணச்செய்தார். ஆதிசேஷன், இன்றும் பிரகாரத்தில், எம்பெருமானின் திருவடிகளை நோக்கியவாறு பதஞ்சலி சன்னதி என்றது ஒரு தனி சன்னதியில் சேவை சாதிக்கிறார்.
தில்லையில் ஒரே இடத்தில விஷ்ணுவான கோவிந்த ராஜரும் சிவபெருமானான நடராஜரும் ஒன்றாக இருந்ததை விரும்பாத சோழ அரசன் (கிருமி கண்ட சோழன், அவன் குலோத்துங்க சோழன் என்றும் (1 அல்லது 2), கோவிந்த ராஜரை பெயர்த்து கடலில் சேர்த்துவிட்டதாக ஒட்டக்கூத்தர் பாடிஉள்ளார்.
மூன்றில் கிடந்த தடங்கடல், போய் முன்னைக் கடல்புக, பிள்ளைத் தில்லை மன்றிற்கு, இடங்கொண்ட கொண்டல்
சோழன் கடலில் அமிழ்த்திய பிறகு அதனால் கோபம் கொண்டவர்கள் அப்பெருமானை மீண்டும் தேடி எடுத்து இப்போது இருக்கும் இடத்தில் பிரதிஷ்டை செய்தனர் என்றும், பின்னாளில் நடராஜர் கோவிலை விரிவு படுத்தும் போது, இந்த இரண்டு கோவில்களும் சேர்ந்து ஒரே கோவிலாக இன்னொரு சோழனால் கட்டப்பட்டது என்றும் கூறுவர்.
சோழ மன்னன் மூலமூர்த்தியை கடலில் தூக்கி வீசியபோது, அங்குள்ள சிலரால், உத்சவப் பெருமாள் காப்பாற்றப்பட்டு, திருவேங்கடத்தில், கோவிந்தராஜனாக பின்னாளில், இராமானுஜர் காலத்தில், அவரால் அங்கு நிறுவப்பட்டது என்று சொல்வர்.
ஆழ்வார்கள்
இராமன் சித்ரகூட மலையில் சீதாதேவியுடன் மிகவும் மகிழ்வோடு இருந்தான். அதே இராமன்தான் இன்று கோவிந்தராஜன் என்ற பெயரில் இந்த திருச்சித்ர கூடத்திலே திகழ்கிறான் என்று குலசேகராழ்வாரும் திருமங்கையாழ்வாரும் தமது பாடல்களில் கூறுகின்றனர்.
குலசேகர ஆழ்வார் இந்த எம்பெருமானை சித்திரகூடத்தில் இருந்த இராமபிரானாகவே எண்ணி, இராமாயணம் முழுவதையுமே 11 பாடல்களில் (பெருமாள் திருமொழி, பதிகம் 10) இந்த தில்லைநகர் திருச்சித்திரகூட எம்பெருமானுக்கு மங்களாசாசனம் செய்து உள்ளார். இதன் சிறிய விளக்கத்தை இங்கே காணலாம்.
மிகப்பெரும் மாடமதில்களையும், உயர்ந்த கோபுரங்களையும் எதிரிகளும் அஞ்சக்கூடிய நெடிய வாசல்களையும் பெற்றதாய்த் தில்லை விளங்குவதை “தெவ்வரஞ்சு நெடும்புரிசை யுயர்ந்த பாங்கர்த்
தில்லைநகர் திருச்சித்ர கூடந்தன்னுள்” என்று குலசேகராழ்வார் சொல்வதிலிருந்து தில்லையின் அந்த நாளைய பெருமைகளை நாம் காணலாம்.
தில்லை வாழ் அந்தணர்கள் மூவாயிரவர் இந்த எம்பெருமானைத் துதித்து வந்தனர் என்பதை,“தில்லை நகர் திருச்சித்ர கூடந் தன்னுள், அந்தணர்களொரு மூவாயிரவ ரேத்த, அணிமணி யாசனத் திருந்த வம்மான் றாணே” என்று குலசேகராழ்வாரும் *பெருமாள் திருமொழி, 10.2) “மூவாயிர நான் மறையாளர் நாளும், முறையால் வணங்க அணங்காய சோதி, தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத், திருச்சித்ர கூடம் சென்று சேர்மின்களே” (பெரிய திருமொழி 3.2.8) என்று திருமங்கையாழ்வாரும் பாடுவதிலிருந்து அறியலாம்.
உடம்பை வருத்தி, வெயிலில் உலர்த்தி, காய்கறிகளை உண்டு, தண்ணீரிலும், காடுகளிலும், மலைகளிலும் கடும் தவம் செய்து மோக்ஷத்தை அடைய விரும்புகிறீர்களே, அதற்கு மாற்றாக, திருச்சித்திரகூடம் சென்று எம்பெருமானை தரிசித்தால் அந்த பயனை துன்பம் இல்லமால் அடையலாம் என்று திருமங்கையாழ்வார் கூறுகிறார்.
நாதமுனிகளின் அவதார ஸ்தலமான காட்டுமன்னார் கோவில் இங்கிருந்து மிகச் சமீப தொலைவில் உள்ளது.
Google Map
திருச்சித்ரகூடம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
திருச்சித்ரகூடம் பற்றி தினம் ஒரு திவ்யதேசம் சொல்வது
நம் பதிப்புகளில் திருச்சித்திரகூடம்
இத்துடன், சோழ தேச திவ்யதேசங்கள் நாற்பதும் பார்த்து விட்டோம். இனி தொடர்வது, நாடு நாடு திவ்யதேசங்கள் இரண்டு, அவை திருவஹீந்திரபுரம் மற்றும் திருக்கோவிலூர். நன்றி