A Simple Devotee's Views
தாமரைநாயகி தாயார் ஸமேத தாமரையாள் கேள்வன் பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
திவ்யதேசம் | திருப்பார்த்தன்பள்ளி | |||
மூலவர் | தாமரையாள் கேள்வன் பார்த்தசாரதி | |||
உத்ஸவர் | பார்த்தசாரதி | |||
தாயார் | தாமரைநாயகி | |||
திருக்கோலம் | நின்ற | |||
திசை | மேற்கு | |||
பாசுரங்கள் | 10 | |||
மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 10 | |||
தொலைபேசி | +91 4364 – 275478 |
திருநாங்கூர் பற்றி இங்கே காணலாம்.
கோவில் பற்றி
11 எம்பெருமான்களில் ஒருவராக இங்கு வந்தவர்
குருக்ஷேத்திரத்திலிருந்து வந்த பார்த்த சாரதி. மூலவர், உற்சவர், இருவருமே ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி
என்று மூன்று தேவி மார்கள் சூழ காட்சி அளிக்கிறார்கள்.
இங்குள்ள மற்றொரு உற்சவருக்கு கோலவில்லிராமன் என்று திருநாமம். சங்கு, சக்கரம், கதை இவற்றுடன் வில்லும், அம்பும், கொண்டு காட்சி அளிக்கிறார்.
இந்த உற்சவரான கோலவில்லி ராமன் என்னும் திருநாமத்தில் திருவெள்ளியங்குடி திவ்ய தேசத்து மூலவரும் இருப்பது ரசிக்க வேண்டிய ஒன்று.
பார்த்தனாகிய அர்ஜூனனுக்கு இவ்விடத்து ஒரு சன்னதி உண்டு.
பார்த்த சாரதி என்ற பெயரில் திருவல்லிக்கேணியில்
எழுந்தருளியுள்ள எம்பெருமான் இரண்டு திருக்கரங்களுடன் சேவை சாதிக்கிறார். இங்கு சங்கு சக்கரங்களுடன் நான்கு புஜங்களுடன் காட்சி அளிக்கிறார்.
மூன்று நிலை ராஜகோபுரம், 75 அடி உயரத்தில் பிரமாண்டமாக உள்ளது.
ஸ்தல வரலாறு
அர்ஜூனன் இவ்விடத்திற்கு வந்த போது அதிகமான தாகமுடன் இருக்க, அங்கே தவம் செய்து
கொண்டிருந்த அகத்தியரிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்க, அகத்தியர் கமண்டலத்திலும் நீர் இல்லாததால் அர்ஜூனனை நோக்கி அவன் எப்போதும், எந்த உதவி வேண்டுமானாலும் கண்ணனைதானே அழைக்க
வேண்டும் என்று ஞாபகப்படுத்தினார். அர்ஜூனனும் தன் தவறை உணர்ந்து உடனே கண்ணனை நினைக்க கண்ணன் அவ்விடத்தே வந்து கத்தி ஒன்றை அர்ஜூனனிடம் கொடுத்தான். அக்கத்தியால் மண்ணைக் கீண்டிப் பூமியைப் பிளக்க உடனே அங்கு தூய கங்கை நீர் பெருகியது. கண்ணனிடமிருந்து வந்த கட்கம் (கத்தி) பெற்றுத் தீர்த்தம் உண்டாக்கியதால் இங்கு உள்ள திருக்குளம் கட்க புஷ்கரணியாயிற்று. பார்த்தனுக்காக உண்டான கோவிலானதால் பார்த்தன் பள்ளியாயிற்று.
தசரதன் இவ்விடத்தில் ஒரு யாகஞ்செய்ததாகவும் ஐதீஹம்.
ஆழ்வார்
திருமங்கையாழ்வார் பெரியதிருமொழியில் (4.8) 10 பாசுரங்களில் இந்த திவ்யதேசத்து எம்பெருமானை மங்களாசாசனம் செய்துள்ளார்
கீழ்வரும் பாடலில் தாமரையாள் கேள்வன் என்று எம்பெருமானின் திருநாமத்தை பொய்கையாழ்வார் குறிப்பிடுகிறார். ஆனால் இந்த திவ்ய தேசத்தின் பெயர் வராததால், இந்த திவ்யதேச பாசுரம் என்று சொல்லப் படுவதில்லை.
பெயருங் கருங்கடலே நோக்குமாறு, ஒண்பூ உயரும் கதிரவனே நோக்கும் – உயிரும் தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு (முதல் திருவந்தாதி-67),
Google Map
திருப்பார்த்தன் பள்ளி பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
தினம் ஒரு திவ்யதேசம், திருப்பார்த்தன் பள்ளி பற்றி சொல்வது
இத்துடன் திருநாங்கூர் பதினோரு திவ்யதேசங்கள் பற்றிய தொகுப்பு முடிவடைக்கின்றது. அடியேனுக்கு வேறு புது தகவல்கள் கிடைக்கும் போது சேர்க்கிறேன், நன்றி. தொடர்ந்து மீதியுள்ள சோழதேச திவ்யதேசமான திருச்சித்ரகூடம் என்ற சிதம்பரத்தைப் பற்றி அடுத்த வலைப்பதிவில் சொல்ல முயற்சிப்போம்.