A Simple Devotee's Views
பத்மாவதி தாயார் ஸமேத ஸ்ரீ நிவாசப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
திவ்யதேசம் | திருவெள்ளக்குளம் / அண்ணன் கோவில் | |||
மூலவர் | ஸ்ரீனிவாசன் / கண்ணன் / நாராயணன் / அண்ணன் பெருமாள் | |||
உத்ஸவர் | ஸ்ரீநிவாசன் | |||
தாயார் | பத்மாவதித் தாயார் / பூவார் திருமகள் / அலர்மேல்மங்கை | |||
திருக்கோலம் | நின்ற | |||
திசை | கிழக்கு | |||
பாசுரங்கள் | 10 | |||
மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 10 | |||
தொலைபேசி | +91 4364 – 266534 |
திருநாங்கூர் பற்றி இங்கே காணலாம்.
கோவில் பற்றி
திருவெள்ளக்குளம் என்ற சொல் இத்தலத்தின் முன்புறம் அமைந்துள்ள ஸ்வேத புஷ்கரணியால் உண்டாயிற்று. ஸ்வேதம் என்றால் ஸம்ஸ்க்ருதத்தில் வெண்மை என்று பொருள். எனவே ஸ்வேத புஷ்கரணி வெள்ளைக் குளமாகி, அதுவே திருவெள்ளக்குளமாயிற்று.
திருமலையில் ஸ்ரீனிவாசன் என்பது எம்பெருமானுக்கு (திருவேங்கடமுடையான்) திருநாமம் என்பதும்
பிராட்டிக்கு அலர்மேல் மங்கைத் தாயார் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதே பெயர்களில் வழங்கும் 108 திவ்யதேசங்களில் இன்னொரு இடம் இது ஒன்றுதான்.
வேங்கடத்தானுக்கு, வெள்ளக்குளத்தான் அண்ணன் என்பது ஐதீஹமாவதால் திருப்பதிக்கு வேண்டிக் கொண்ட வேண்டுதல்களை இங்கே செலுத்துவது ஒரு வழக்கமாகிறது. அண்ணன் குடிஇருக்கும் கோவில் அண்ணன் கோவில் ஆனதால், திருவெள்ளக்குளத்திற்கு அண்ணன் கோவில் என்றும் பெயருண்டாயிற்று.
இத்தலம் குமுதவல்லியாரின் அவதார ஸ்தலம் என்பதோடு மட்டுமின்றி திருமங்கையாழ்வார் குமுதவல்லி நாச்சியாரை முதலில் சந்தித்ததும் இங்கே தான். பிறகு நடந்தவை எல்லாம் ஒரு பெரிய சரித்திரம், அது நமக்கு கிடைத்த பெரிய வரப்பிரசாதம். ஒரு மங்கையினால் ஆழ்வாராக மாறியதால், அவர் திருமங்கை ஆழ்வாரானார்.
மணவாள மா முனிக்கு எம்பெருமான் காட்சி கொடுத்த திருத்தலம். இங்கு குளக்கரையில் இருவரும் சந்தித்து உரையாடினார்கள் என்பார்கள்.
ஸ்தல வரலாறு
துந்துமாரன் என்னும் மன்னனுக்கு சுவேதன் என்று ஒரு புத்திரன் இருந்தான். அவனுக்கு இளவயதில் மரண கண்டம் என்பதால், அதிலிருந்து மீள, தன்குல குருவான வசிட்டரை அணுகினான். அவர் இத்திருத்தலத்திற்கு சென்று, ஆயுள் விருத்தி மந்திரம் சொல்லி தவம் செய்யுமாறு கூறினார். எனவே இவ்விடம் வந்த சுவேதன்,
குளக்கரையில் வில்வ மரத்தடியில் ஆயுள் விருத்தி மந்திரத்தை ஐப்பசிமாதம் வளர்பிறை தசமி முதல், கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி வரை, ஒரு மாதம், கடுந்தவம் செய்தான். சிறுவனின் தவத்தை மெச்சிய மஹாவிஷ்ணு அவனுக்கு காட்சி கொடுத்து மரணகண்டத்தை நீக்கி நீடித்த ஆயுளை நல்கினார். இவ்விதம் சுவேதன் எம்பெருமானின் அருள் இந்த புஷ்கரணியில் கிடைத்ததால், ஸ்வேத புஷ்கரணி என்றாகி தமிழில் வெள்ளைக்குளம் ஆயிற்று.
ஆழ்வார்
திருமங்கையாழ்வாரால் பத்துப் பாசுரங்களால்
மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம்
தை மாதம் திருநாங்கூர் 11 கருட சேவைக்காக திருநகரியிலிருந்து திருமங்கையாழ்வார் குமுதவல்லி நாச்சியாருடன் புறப்பட்டு திருநாங்கூரில் மணிமாடக் கோவிலுக்குச் செல்வார். 11 கருட சேவை முடிந்து எல்லா எம்பெருமானுகளுக்கும் மங்களாசாசனம் செய்து முடித்தபின், ஆழ்வாரும் குமுதவல்லி நாச்சியாரும் நாச்சியாரின் பிறந்தவீடான திருவெள்ளக்குளம் சென்று பிறகு தான் தங்களுடைய இருப்பிடமான திருநகரி செல்வார்கள்.
திருமங்கையாழ்வார் திருவேங்கடவனையே இத்தலத்தில் காண்கிறார். திருவேங்கடவனே இத்தலத்தில் எழுந்து அருளி இருப்பதாகவும், திருமலை ஸ்ரீனிவாசனுக்கு, இந்த எம்பெருமானை அண்ணன் என்றும் அழைக்கிறார்.
திருமங்கையாழ்வார் அண்ணா, அடியேனிடரைக் களையாயே (பெரிய திருமொழி, 1.10.1) என்று தமது துன்பங்களைப் போக்குமாறு திருவேங்கடவனை அண்ணா என்று அழைத்து வேண்டுகிறார். அதேபோல் திருவெள்ளக்குளத்துள் அண்ணா, அடியேன் இடரை களையாயே (பெரிய திருமொழி 4.7.1) என்றும், திருவெள்ளக்குளத்துள் எந்தாய், அடியேன் இடரை களையாயே (பெரிய திருமொழி 4.7.2) என்றும், திருவெள்ளக்குளத்து உறைவானே, எல்லா இடரும் கெடுமாறு அருளாயே (பெரிய திருமொழி 4.7.6) என்றும் பாடியுள்ளார்
திருமங்கைஆழ்வார் வேறு எந்த எம்பெருமானையும் அண்ணா என்று அழைத்தது இல்லை. அவரைத்தவிர எந்த ஒரு ஆழ்வாரும் எந்த ஒரு எம்பெருமானையும் அண்ணா என்று அழைத்ததில்லை.
மேலும், திருமங்கையாழ்வார், இந்த எம்பெருமானையே, ‘வேடார் திருவேங்கடமேய விளக்கே” (பெரிய திருமொழி 4.7.5) என்று கூப்பிட்டு திருவேங்கடவனுக்கும் திருவெள்ளக்குளத்தானுக்கும் உள்ள தொடர்பை விளக்குகிறார்.
அலர் மேல் மங்கை உறை மார்பா (திருவாய்மொழி 6.10.10) என்று நம்மாழ்வார் திருவேங்கடவனை அழைக்கிறார். திருமங்கையாழ்வார் இந்த எம்பெருமானை பூவார் திருமகள் புல்கிய மார்பா (பெரிய திருமொழி 4.7.9) என்று அழைக்கிறார்.
திருவேங்கடவனுக்கு திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் 4 பதிகங்கள் பாடியுள்ளார். அவற்றில் பலச்ருதி பாடல் ஒன்றினில் (1.10,10) திருவேங்கடவனை “கலியன் சொன்ன மாலை வல்லாரவர் வானவராகுவார் தாமே” என்று சொன்னார். திருவெள்ளக்குளத்தில் இருக்கும் ஸ்ரீனிவாசனான அண்ணாவை சொல்லும் பதிகத்தில் “கலியன் சொன்ன மாலை வல்லரென வல்லவர் வானவர் தாமே” (பெரிய திருமொழி 4.7.10) என்று அதே போல் கூறி இவரை அண்ணா என்று முடிக்கிறார்.
Google Map
திருவெள்ளக்குளம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
திருவெள்ளக்குளம் பற்றி தினம் ஒரு திவ்யதேசம்