A Simple Devotee's Views
செங்கமலவல்லித் தாயார் ஸமேத செங்கண்மால் பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
திவ்யதேசம் | திருத்தேற்றியம்பலம் | |||
மூலவர் | செங்கண்மால், ரங்கநாதன், பள்ளிகொண்டபெருமாள் | |||
உத்ஸவர் | ரங்கநாதன் | |||
தாயார் | செங்கமலவல்லித்தாயார் | |||
திருக்கோலம் | கிடந்த (புஜங்க சயனம்) | |||
திசை | கிழக்கு | |||
பாசுரங்கள் | 10 | |||
மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 10 | |||
தொலைபேசி | +91 4364 – 275689 |
திருநாங்கூர் பற்றி இங்கே காணலாம்.
கோவில் பற்றி
திருத்தெற்றியம்பலம் என்றால் இங்கு பலருக்கும் தெரியாது. பள்ளிகொண்ட பெருமாள் சன்னதி என்றால் அனைவருக்கும் தெரியும்.
நான்கு புஜங்களுடன் ஆதிசேஷன் மேல் சயன திருக்கோலத்தில் இருக்கும் இந்த எம்பெருமான், செங்கண்மால் என்ற பதத்திற்கு ஏற்ப கண்ணழகு மிக்கவர்.
திருநாங்கூர் வந்த பதினொரு எம்பெருமான்களில் இவர் ஸ்ரீரங்கத்து அரங்கநாதன். ஆனால் இங்கு திருஇந்தளூர் போல் நான்கு திருக்கரங்களுடன் சயனத் திருக்கோலம்; மரக்காலைத் தலைக்கு வைத்து ஓய்வாகப் பள்ளிகொண்ட கோலம் என அழைக்கப்படுகிறது. வலது திருக்கரம் மரக்கால் மீது, இடது திருக்கரம் இடுப்பின் மீது என்று பள்ளிகொண்டுள்ள எம்பெருமானின் தலைப்பக்கம் ஸ்ரீதேவி நாச்சியாரும், திருவடிப்பக்கம் பூதேவி தாயாரும் சேவை சாதிக்கின்றனர்.
இவரும் கருடசேவைக்கு திருநாங்கூர் வருவார்.
108 திவ்யதேசங்களுக்குள் அம்பலம் என்ற பெயரில் உள்ள ஒரே திவ்யதேசம்.
ஸ்தல வரலாறு
எம்பெருமான் கூர்ம அவதாரம் எடுத்தபோது, தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது ஸ்ரீமகாவிஷ்ணுவின் அம்சமான தன்வந்திரி பகவான் அமிர்தம் ததும்பும் தங்க கலசத்துடன் வெளிவந்தார்.
அமிர்த கலசத்தை அசுரர்கள் பிடுங்கி ஓட, எம்பெருமான் மிக அழகுடைய பெண் வடிவில் மோகனியாக அவதாரம் எடுத்து அசுரர்களிடம் இருந்து அமிர்தத்தைப்பெற்று, அதனை முதலில் தேவர்களுக்கு கொடுத்தார். ராகு என்ற அசுரன் சூரியன், சந்திரன் என்ற இரண்டு தேவர்களுக்கு நடுவில் வர, எம்பெருமானுக்கு அவர்கள் அவனை காட்டிக்கொடுக்க, மோகினி, அந்த அசுரனை தன் கையில் உள்ள அகப்பையால் தட்ட அந்த அசுரன் தலையில்லாத ராகு என்ற கிரகமாக மாறி, சூர்ய சந்திர கிரஹணங்கள் வர காரணமாக உள்ளார். அதனால் பயந்த சூரியன் இங்குள்ள சூரிய புஷ்கரணி என்ற திருக்குளத்திலும் சந்திரன், அடுத்த திவ்யதேசமான மணிமாடம் என்ற திவ்யதேசத்தில் உள்ள திருக்குளத்திலும் மறைந்துகொண்டனர். அவர்களுக்கு எம்பெருமான் அருள் புரிந்தார்.
எம்பெருமான் வராக அவதாரம் எடுப்பதற்கு முன் பூமியைக் கவர்ந்து சென்ற இரண்யாட்சன் என்ற அசுரன் அதனை கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். திருமால் வெள்ளை வராகமாக (பன்றியாக) உருவெடுத்து அசுரனை கொன்று பூமிதேவியை மீது வர செல்வதற்கு முன், ஸ்ரீதேவி நாச்சியாரும், ஆதிசேஷனுமும் கலக்கமுற்றனர். எம்பெருமான் அவர்களை இந்த திவ்யதேசத்திற்கு வந்து இருக்க சொன்னதோடு, சிவபெருமானையும் இங்கு வரச்செய்தார்.
அசுரனைக் கொன்றதோடு, தண்ணீருக்குள் ஆழ்ந்து கிடக்கும் பூமியை வெளிக்கொணர்ந்து, அப்பூமியைத் தன் கொம்பில் தாங்கிக் கொண்டு அருள் செய்ததோடு பூமிதேவியையும் அழைத்துக்கொண்டு இந்த திவ்யதேசத்திற்கு வந்து ஓய்வாக பள்ளிகொண்டு உள்ளார்.
ஆழ்வார்
திருமங்கையாழ்வார் 10 பாடல்களால் (பெரிய திருமொழி 4.4) இத்திருத்தலத்து எம்பெருமானை மங்களாசாசனம் செய்து உள்ளார்.
இப்பெருமானைச் சேவிப்பவர்கள் அரசாளும் வல்லமை பெறுவர். திருமங்கைஆழ்வாரும் இதை “சீரணிந்த வுலகத்து மன்னராகிச் சேண் விசும்பில் வானவராய்த் திகழ்வார் தாமே” (பெரியாதிருமொழி 4.4.10) என்ற பாசுரத்தில் கூறியுள்ளார்.
Google Map
திருத்தெற்றியம்பலம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
திருதெற்றியம்பலம் பற்றி தினம் ஒரு திவ்யதேசம்