034 திருவாலி திருநகரி Thirvaali Thirunagari

அம்ருதவல்லித்தாயார் ஸமேத வேதராஜப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

அம்ருதகடவல்லித்தாயார் ஸமேத வயலாளி மணவாளப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

.

திருவாலி, திருநகரி இரண்டும் தனித்தனியே சுமார் 5 கிலோமீட்டர் தள்ளி அமைந்து உள்ளன. திவ்யப்ரபந்தத்தில் பாடப்பெற்றுள்ள வயலாளி மணவாளன் திருவாலியில் இல்லாமல், திருநகரியில் இருப்பதால், இந்த இரண்டும் சேர்த்து 108ல் ஒரு திவ்யதேசமாகவே கருதப்படுகிறது. திருவாலி அம்ருதகடவல்லி தாயாரின் பிறந்த ஊர். அவர் வயலாளி மணவாளனை திருமணம் முடிந்து புகுந்த ஊர் திருநகரி.

இந்த திவ்ய தேசம் திருமங்கை ஆழ்வாரின் வரலாற்றோடு நெருங்கிய தொடர்பு கொண்டது. எப்படி ஆழ்வார்திருநகரி என்ற திவ்யதேசம் நம்மாழ்வாருக்கோ அதே போல், திருவாலிதிருநகரி திருமங்கையாழ்வாருக்கு.

இந்த திவ்யதேசம் திருநாங்கூர் திவ்ய தேசங்களுக்கு அருகில் இருந்தாலும், இது திருநாங்கூர் 11 திவ்ய தேசங்களில் ஒன்று இல்லை.

Google Map

திருவாலி திருநகரி பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

வலது தொடையில் மஹாலக்ஷ்மியுடன் நரசிம்மர் – Thanks to friends from whatsapp group

திருவாலி திருநகரி பற்றி தினம் ஒரு திவ்யதேசம் சொல்வது

திருவாலி திருநகரி screenshot thanks to Google
திவ்யதேசம்திருவாலி , லக்ஷ்மிநரஸிம்ஹ க்ஷேத்திரம், பூர்ணபுரி திருநகரி ,  ஸ்ரீபுரி, ஆலிங்கன புரி, பில்வாரண்ய க்ஷேத்திரம்
மூலவர்லக்ஷ்மிநரஸிம்ஹர், வயலாளி மணவாளன் வேதராஜன், வயலாளி மணவாளன்
உத்ஸவர்திருவாலி நகராளன் கல்யாண ரங்கநாதன்
தாயார்அம்ருதகடவல்லி தாயார் /
பூர்ணவல்லி நாச்சியார்
அம்ருதவல்லி
திருக்கோலம்வீற்று இருந்த திருக்கோலம் வீற்று இருந்த திருக்கோலம்
திசைமேற்கு மேற்கு
பாசுரங்கள்42
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 41
குலசேகராழ்வார் 1
தொலைபேசி+91 4364 – 256927 ; +91 94433 72567

திருவாலி கோவில் பற்றி

இரண்ய வதத்துக்குப் பிறகு, நரசிம்மரின் கோபத்தைத் தணிக்க, தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, மஹாலக்ஷ்மி இங்கு வந்து, நரசிம்மர் மடியில் வலது புறம் அமர்ந்து கொள்ள, எம்பெருமான் மஹாலக்ஷ்மியை ஆலிங்கனம் செய்து கொண்டார். மஹாலக்ஷ்மியை (திரு) ஆலிங்கனம் செய்ததால் திரு ஆலிங்கனம் என்று ஆகி, அது மருவி திருவாலி என்று பெயர் பெற்றது.

பொதுவாக லட்சுமி நாராயணர், லட்சுமி நரசிம்மன், லட்சுமி ஹயக்ரீவர், லட்சுமி வராகர் என்று லட்சுமியுடன் இருக்கும் எம்பெருமான்கள் லக்ஷ்மியை அவரது இடது புறம் அமர்த்தி சேவை சாதிப்பார்கள். இங்கு தேவியை எம்பெருமான் வலது தொடையில் அமர்த்தி காட்சி அளிக்கிறார்.

இந்த ஸ்தலத்தை சுற்றி பஞ்ச நரசிம்ஹர் இருக்கிறார்கள். அதனால் பஞ்ச நரசிம்மர் க்ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று. (இதற்கு முன்பு தஞ்சைமாமணிக்கோவிலில் பஞ்ச நரசிம்மர் பார்த்து உள்ளோம்)

  1. திருவாலியில் லட்சுமி நரசிம்மர்
  2. திருநகரியில் யோக நரசிம்மர்,
  3. திருநகரியில் ஹிரண்ய நரசிம்மர்
  4. திருமங்கையாழ்வாரின் அவதார ஸ்தலமான திருக்குறையலூரில் உக்கிர நரசிம்மர்.
  5. மங்கைமடத்தில் இருக்கும் வீர நரசிம்மர்

குமுதவல்லியாரின் கோரிக்கைப்படி ஆயிரம் ஸ்ரீவைஷ்ணவர்களுக்குத் தினந்தோறும் ததியாரதனம் (அன்னதானம்) செய்த இடம் இன்றும் மங்கை மடம் என்றே அழைக்கப் படுகிறது. திருக்குறையலூரிலிருந்து வெகு அருகாமையில் உள்ளது.

திருவாலி, திருமங்கையாழ்வாரின் தேவி குமுதவல்லி நாச்சியார் வளர்க்கப்பட்ட இடம்.

ஆழ்வார் தோட்டம் என்று ஒரு தோட்டமும், சிந்தனைக் கினியான் குட்டை என்று வழங்கப்படும் வயலும் இப்போதும் திருவாலியில் உள்ளன.  

திருவாலி ஸ்தல வரலாறு

திருமங்கைஆழ்வாருக்கு விரைவில் அருள்பாலிக்க வேண்டுமென்று பிராட்டி வேண்ட, எம்பெருமான், அவளை திருவாலியில் தவம் செய்து கொண்டு இருக்கும் பூர்ணமஹரிஷியின் மகளாக அவதாரம் செய்ய சொன்னார். அவரே வந்து திருமணக்கோலத்தில் தாயாரை ஏற்றுக்கொள்ளும் போது ஆழ்வாருக்கும் அருள் புரிவோம் என்று சொன்னனர். அதன்படி, திருவாலியில் பூர்ண மகரிஷிக்குப் புதல்வியாக அமிர்தவல்லி என்ற பெண்ணாகப் பிறந்த மகாலக்ஷ்மி திருநகரியில் பிறந்த வயலாலி மணவாளனாகப் பிறந்த எம்பெருமானைத் திருமணம் செய்து கொண்டாள்.

பூர்ண மஹரிஷி தவம் புரிந்தமையால் பூர்ண புரி என்ற பெயரும் உண்டு

திருநகரி கோவில் பற்றி

பத்ரிநாத்தில் எம்பெருமானே குருவாகவும், தானே சீடனாகவும் இருந்து (நாராயணனாகவும், நரநாராயணனாகவும்) திருமந்திரத்தை உபதேசித்த பிறகு, அவர் திருமந்திரத்தை திருமங்கையாழ்வாருக்கு உபதேசித்த இடம் என்பதால், இந்த திவ்யதேசத்தை பத்ரிநாத்திற்கு இணையானது என்று சொல்வார்கள்.

திருமங்கைஆழ்வார் ஆராதித்த நரசிம்மர் இரண்டு மூர்த்திகள் இங்கே உள்ளனர்.

ஐந்து பிரகாரங்கள் ஏழு நிலை,  ஐந்து நிலை,  மூன்று நிலை என்று கோபுரங்கள் இருக்கின்றன.

கோவிலுக்குள் திருமங்கையாழ்வாருக்கு தனி சன்னதி உள்ளது. அவர் ஞானசம்பந்தர் கொடுத்த வேலுடன் மிக அழகாக காட்சி தருகிறார். இந்த தனி சன்னதியில் திருமங்கையாழ்வார் ஆராதித்த சிந்தனைக்கினியான் என்ற மிகச்சிறிய உத்சவமூர்த்தி அமர்ந்து இருக்கிறார். அவர் இப்பொழுதும் திருமங்கையாழ்வார் உற்சவமூர்த்தியுடன் எழுந்து அருளுவார். ஆண்டாள் மனத்துக்குஇனியான் என்று கொண்டாடியதை இங்கே நினைவில் கொள்ளலாம். திருமங்கை ஆழ்வாரின் திருவடியின் கீழ் ஸ்வாமி ராமானுஜரின் சிறு வடிவிலான உற்சவ மூர்த்தி இருக்கிறது.

ஆழ்வாருக்கு தனி கொடிமரம் உண்டு. கொடியேற்றி உற்சவம் நடக்கும். வேதராஜப் பெருமாளுக்கு தனி கொடிமரம் உண்டு. மூன்று ஆழ்வார்களுக்கு மட்டுமே கொடிமரம் மற்றும் கொடியேற்றி உற்சவம் உண்டு. ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வாருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாருக்கும் உள்ள ஆழ்வார் சன்னதிகள் கொடிமரம் உள்ள மற்ற இரண்டு ஆகும்.

ரங்கநாத பெருமாள், தாயாருடன் இளம் திருமண தம்பதிகளாக திருமங்கையாழ்வாருக்கு காட்சி அளித்த ஸ்தலம். அதனால் இந்த எம்பெருமானுக்கு கல்யாண ரங்கநாதன் என்ற பெயர் ஏற்பட்டது.

தை மாதம் திருநாங்கூர் 11 கருட சேவைக்காக திருநகரியிலிருந்து  திருமங்கையாழ்வார் குமுதவல்லி நாச்சியாருடன் புறப்பட்டு மணிமாடக்கோவில், திருநாங்கூர் செல்வார்.  11 கருட சேவை முடிந்து எல்லா எம்பெருமானுகளுக்கும் மங்களாசாசனம் செய்து முடித்தபின், ஆழ்வாரும் குமுதவல்லி நாச்சியாரும் திருவெள்ளக்குளம் (38 வது திவ்யதேசம்) என்ற நாச்சியாரின் பிறந்த வீட்டுக்கு சென்று பிறகு தான் தங்களுடைய இருப்பிடமான திருநகரி செல்வார்கள்.

திருநகரி ஸ்தல வரலாறு

க்ருதயுகத்தில், பிரம்மாவின் ஐந்தாவது புதல்வர் கர்த்தமப் பிரஜாபதி மோக்ஷம் வேண்டும் என்று எம்பெருமானைக் குறித்துத் தவமிருந்தான். பிராட்டி எம்பெருமானிடம் அவனைப்பற்றி கூறி அவனுக்கு அருள்தர வேண்டும் என்றாள். எம்பெருமான் அதற்கு சம்மதித்தும், அவனுக்கு உடனே மோக்ஷம் தரவில்லை. அதனால் மகாலக்ஷ்மி கோபம் கொண்டு இந்தத் திருத்தலத்தில் உள்ள திருக்குளத்தில் ஒரு தாமரை மலருக்குள் புகுந்து கொண்டார்.

எம்பெருமான் இங்கு வந்து திருக்குளத்தை பார்த்த போது, நிறைய தாமரை மலர்கள் மூடிக்கொண்டு இருந்தன. எம்பெருமானின் திருக்கண்கள் சூரியனுக்கும் சந்திரனுமும் ஆகும். ஆகவே, எம்பெருமான் தன்னுடைய ஒரு கண்ணை, சிறிது மூடிக் கொண்டு, இடது கண்ணை பெரிதாக விரித்துப் பார்த்தான். தாமரை மலர்களில் ஒன்றை தவிர எல்லாம் விரிந்தன. அந்த ஒன்றில் தான் மஹாலக்ஷ்மி தாயார் இருந்தார், உடனே அவரை எம்பெருமான் ஆலிங்கனம் செய்து இந்த திருத்தலத்தில் சேவை சாதித்தான். எனவே இது ஆலிங்கன புரியாகவும், ஸ்ரீவந்து நின்றதால் ஸ்ரீபுரியும் ஆயிற்று. அப்பொழுது கர்த்தம ப்ராஜாபதி மோட்சமளிக்க வேண்டினார். எம்பெருமான் ப்ரம்ம புத்திரனை நோக்கி அவனுக்கு இப்போது மோட்சம் கிடையாதென்றும் அது கலியுகத்தில்தான் சித்திக்கும் என்று அருளினார்.

திரேதாயுகத்தில் இவரே உபரிசர வஸு என்னும் மன்னனாக பிறந்தார்.  ஆகாய மார்க்கமாக சஞ்சாரம் செய்பவர் என்பது பொருள். இவர் ஒரு சமயம் பறந்து இந்த ஸ்ரீபுரிக்கு மேலாக வரும்போது, மேற்கொண்டு செல்லமுடியாமல் விமானம் தடைபட்டு நின்றது. இவ்விடத்தின் மகிமையினையும் அறிந்து, இவ்விடத்திலேயே திருமாலைக் குறித்து கடும் தவம் செய்தார். நேரில் வந்த எம்பெருமானிடம், முக்தி அளிக்க வேண்டினார். எம்பெருமான் மீண்டும் அது கலியுகத்தில் கிடைக்கும் என்று கூறி மறைந்தார். இதன் பிறகு உபரிசர வசு இக்கோவிலுக்கு நெடுங்காலம் பல
கைங்கர்யங்களை செய்து வந்தார்.

துவாபுரயுகத்தில் காவிரி சங்கமமாகும் இடத்தில் நாட்டை ஆண்ட வஜ்ரகோஷன் என்னும் மன்னனுக்குப் புத்திரர் இல்லை. அதனால் அவர் சங்க பாலன் என்னும் ஒரு மந்திரியின் வைரமேகன், நிதிபாலன் என்ற இரண்டு புத்திரர்களுக்கு பொறுப்புகளை கொடுத்தார். வைரமேகனை நாட்டின் இளவரசனாக்கி, நிதிபாலனை மந்திரியாக்கினான். பிறகு சங்கபாலன் திக்விஜயம் மேற்கொண்டான்.  திக் விஜயத்தின் போது இந்த லட்சுமிபுரியின் மகாத்மியத்தைக் கேள்விப்பட்டு இங்கு பல மஹரிஷிகளை வைத்து பெரிய யாகம் செய்ய, அங்கு தோன்றிய திருமாலிடம் சங்கபாலன் தனக்கு மோட்சம் வேண்டும் என்று கேட்க எம்பெருமான் அது கலியுகத்தில்தான் நடக்கும் என்று கூறி மறைந்தார்.

கலியுகத்தில் திருநகரிக்கு அருகாமையில் உள்ள குறையலூரில் சோழனின் ஆளுகைக்குட்பட்ட சேனைத் தலைவனுக்கு ஒரு புத்திரன் பிறந்தார். இவரது திருமேனி நீலவண்ணமாயிருந்ததால் இவருக்கு நீலமேகன் (நீலன்) என்று பெயர் இட்டு அழைத்தனர். அவரே திருமங்கைஆழ்வாராக மாறி கலியுகத்தில் மோக்ஷம் அடைந்தார் என்பது வரலாறு.

ஆழ்வார்

குலசேகர ஆழ்வார் இத்தலத்து எம்பெருமானை ஒரு பாடலில் (பெருமாள் திருமொழி 8.7) ஆலிநகர்க்கு அதிபதியே, அயோத்தியனே, தாலேலோ என்று மங்களாசாசனம் செய்துள்ளார். 

திருமங்கையாழ்வார், திருநகரிக்கு அருகில் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருகுறையலூர் என்ற இடத்தில் தான் அவதரித்தார். ஒரு காலத்தில் இந்த இடம் ஆலி நாடு என்ற ஒரு குறுநிலப் பகுதியாக இருந்தது. அதற்கு நீலன் என்ற பெயரில் திருமங்கை ஆழ்வார் குறுநிலமன்னராக இருந்தவர்.

திருநாங்கூரில் உள்ள திருவெள்ளக்குளம், திருமங்கையாழ்வாரின் தேவியாரான குமுதவல்லி நாச்சியார் தோன்றிய இடம் ஆகும். திருவெள்ளக்குளத்தில் அப்சரஸாக வந்து திருவாலியில் வளர்ந்து வரும் குமுதவல்லியாரைப் பற்றி கேள்விபட்டு அவரைத் திருமணம் செய்து தரச் சொல்லி கேட்க, அதற்கு குமுதவல்லி நாச்சியார், “ஓராண்டிற்கு தினமும் ஆயிரம் வைஷ்ணவர்களுக்கு அன்னதானம் செய்து, வைஷ்ணவர்கள் போல் பஞ்சசம்ஸ்காரம் செய்து கொண்டால், திருமணம் செய்துக் கொள்கிறேன்” என்று கூற, நீலனும் அவ்வாறே முதலில் அன்னதானம் செய்ய துவங்கினான். தன்னிடம் இருந்த பொருள் தீர்ந்தபிறகு வழிப்பறி செய்து அதைக் கொண்டு அன்னதானம் செய்தான். நீலனின் துன்பங்களைப் பார்த்த பிராட்டி, அவருக்கு விரைவில் அருள்பாலிக்க வேண்டுமென்று திருமாலிடம் வேண்ட, எம்பெருமான் திருமணக்கோலத்தில் மணவாளனாக இத்தலத்திற்கு ஆலி மணவாளனாக எழுந்தருளி, பூர்ண மகரிஷியிடம் வளர்ந்த திருமகளை மணம் புரிந்துகொண்டார்.

எம்பெருமான் வயலாலி மணவாளராகப் புது மாப்பிள்ளையாக மனைவியுடன், திருவாலிக்கும், திருநகரிக்கும் இடைப்பட்டு, திருநகரியில் இருந்து சுமார் 0.5 மைல் தூரத்தில் உள்ள வேதராஜபுரத்தில் (திருமணங்கொல்லையில்) வந்து கொண்டிருந்த போது, அவரிடம் நீலன் கொள்ளை அடிக்க முயற்சித்தார். அப்பொழுது அவரின் மிடுக்கினைக் கண்டு எம்பெருமான் நீலனை, கலியன் என்று அழைத்தார். அவருக்கு திருமந்திர உபதேசம் செய்து, அதற்கு எல்லை நிலமான அர்ச்சாவதாரங்களையும் காட்டிக்கொடுத்து அவரை ஆட்கொண்டார்.

தெய்வங்களுக்கு எல்லாம் அரசனான எம்பெருமான், ஆலிநாட்டுக்கு அரசனான நீலனுக்கு, மந்திரங்களுக்கு எல்லாம் அரசனான (தலைமையான) திருமந்திரத்தை, மரங்களுக்கு அரசனான அரசமரத்தடியில் உபதேசித்தார். நீலன், திருமங்கையாழ்வார் ஆனார்.

திருமங்கை ஆழ்வாருக்குப்  எம்பெருமான், கல்யாண ரங்கநாதராகக் காட்சி அளித்தது திருநகரியில் தான். எட்டு இழையாய், மூன்று சரடாய், இருக்கின்ற ஒரு மங்கள சூத்திரத்தை, (திருமந்திரம்) திருமங்கையாழ்வாருக்கு காட்டின இடமாகையால் இதனைத் திருமணங் கொல்லை என்று சொல்வர். இதன் பெருமையை மணவாள மாமுனிகள், “இங்கேதான் வெட்டுங் கலியன், வாள் வலியால் வெறுட்டி நெடுமாலை எட்டெழுத்தும் தட்டிப் பறித்த இடம்” என்று அனுபவிப்பார்.

எம்பெருமான் இவருக்கு திருமந்திர உபதேசம் செய்த்தைக் குறிக்கும் வகையில் இன்றும் ஆண்டு தோறும் இங்கு பங்குனி உத்திரத்திற்கு முதல் நாள் இரவு வேடுபறி உத்சவம் நடைபெறுகிறது. எம்பெருமானிடம் திருமங்கைஆழ்வார் கொள்ளையிட்ட / வேடுபறி நடந்த இடத்தில் வேடுபறி மண்டபம் என்ற ஒரு மண்டபமும் உள்ளது.

பங்குனி உற்சவ திருவிழா 10 நாள் திருவிழாவாக நடைபெறுகின்றது. இத்திருவிழாவின் 9ம்நாள் இரவு வேடுபறி உற்சவம். 9ம் நாள், பகலில் திருவாலியில், திருநகரி வயலாளி மணவாளனுக்கும், அமிர்தகடவல்லி தாயாருக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகின்றது. இரவு வேடுபறி உற்சவம். பெருமாள் தாயார் பல்லக்கில் வர, ஆழ்வார் குதிரை வாகனத்தில், திருநகரியில் இருந்து எழுந்துஅருளி திருமணங்கொல்லையில் வேடுபறி உற்சவம் நடக்கிறது. இந்த மந்திர உபதேச நிகழ்ச்சி மின்சார விளக்குகள் இல்லாமல், பல தீவட்டிகள் வெளிச்சத்தில் நடைபெறுவது மிகவும் சிறப்பு.

திருமந்திர உபதேசம் பெற்றவுடன் அடியவர்கள் அனைவரும் வாடினேன் வாடி வருந்தினேன் என்ற பாசுரம் தொடங்கி ஆழ்வாரின் அனைத்து பாசுரங்களையும் பாடிக் கொண்டே வருகின்றனர், திருநகரி வந்து சேரும் போது அதிகாலையாகிவிடும். மறுநாள் காலையில் எம்பெருமானும் ஆழ்வாரும் தனித்தனித் தேரில் சேவை சாதிக்கின்றனர். பின் தீர்த்தவாரி நடக்கும்.

திருமங்கையாழ்வார், திருநறையூரில் பஞ்சசம்ஸ்காரம் செய்து கொண்டதை பற்றியும் திருநறையூர்க்கு 100 பாசுரங்கள் போல், திருக்கண்ணபுரத்திற்கும் 100 பாசுரங்கள் பாடியுள்ளார் என்றும் பார்த்தோம். அதில் ஒரு பாடலில் (பெரிய திருமொழி 8.2.2), நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள், காணுமோ கண்ணபுரம் என்று காட்டினாள் என்ற வரிகளில் வரும் நீணிலா முற்றம் என்பது இந்த திருநகரி திவ்யதேசத்தில் தான் உள்ளது. திருமங்கையாழ்வார் 41 பாசுரங்களால் இத்திருத்தலத்திற்கு மங்களாசாசனம் செய்து உள்ளார்.

ஆழ்வார்க்கு பரகாலன், கலியன், நீலன், கலி த்வம்ஶன், கவிலோக திவாகரன், சதுஷ்கவி ஶிகாமணி ஷட் பிரபந்தக் கவி, கலிவைரி, நாலுகவிப் பெருமாள், திருநாவீறுடைய பெருமான், மங்கையர்கோன், அருள்மாரி, மங்கைவேந்தன், ஆலிநாடன், அரட்டமுக்கி, அடையார் சீயம், கொங்குமலர்க் குழலியர் வேள், கொற்றவேந்தன், கொற்றவேல் மங்கை வேந்தன் என்னும் பல பட்டப் பெயர்கள் உண்டு.

ஆழ்வாரைப்பற்றி சொல்லி முடிக்க முடியாததால், மணவாள மாமுனிகள் திருவாலி திருநகரி திவ்ய தேசங்களுக்குச் சென்ற பொழுது, ஆழ்வாரின் திவ்ய திருமேனி ஸௌந்தர்யத்தில் மிகவும் ஈடுபட்டு, அந்தத் திருமேனி அழகு நம் கண்ணுக்கும் அழகாகப் புலப்படும்படி சமர்ப்பித்த பாசுரத்துடன், இந்த பதிவினை முடித்துக் கொள்வோம்.

அணைத்த வேலும், தொழுத கையும், அழுந்திய திருநாமமும், ஓம் என்ற வாயும், உயர்ந்த மூக்கும், குளிர்ந்த முகமும், பரந்த விழியும், பதிந்த நெற்றியும், நெறித்த புருவமும், சுருண்ட குழலும், வடித்த காதும், அசைந்த காது காப்பும், தாழ்ந்த செவியும், சரிந்த கழுத்தும், அகன்ற மார்பும் திரண்ட தோளும், நெளிந்த முதுகும், குவிந்த இடையும், அல்லிக்கயிறும், அழுந்திய சீராவும், தூக்கிய கருங்கோவையும், தொங்கலும் தனிமாலையும், தளிருமிளிருமாய் நிற்கிற நிலையும், சாற்றிய திருத்தண்டையும், சதிரான வீரக்கழலும் தஞ்சமான தாளிணையும், குந்தியிட்ட கனணக்காலும் குளிரவைத்த திருவடி மலரும், வாய்த்த மணங்கொல்லையும், வயலாலி மணவாளனும், வாடினேன் வாடி(என்று) வாழ்வித்தருளிய, நீலக்கலிகன்றி, மருவலர்தம் உடல்துணிய வாள்வீசும் பரகாலன், மங்கைமன்னனான வடிவே.

குமுதவல்லி நாச்சியார் சமேத திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d bloggers like this: