A Simple Devotee's Views
புண்டரீகவல்லித்தாயார் ஸமேத சாச்வததீபநாராயணப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
திவ்யதேசம் | திருமணிமாடக்கோவில் | |||
மூலவர் | நாராயணன், நந்தா விளக்கு | |||
உத்ஸவர் | 1. நாராயணன், 2. அளத்தற்கு அரியான் (இரண்டாவது உத்சவர்) | |||
தாயார் | புண்டரீகவல்லி தாயார் | |||
திருக்கோலம் | வீற்று இருந்த திருக்கோலம் | |||
திசை | கிழக்கு | |||
பாசுரங்கள் | 12 | |||
மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 12 | |||
தொலைபேசி | +91 4364 – 256 424, +91 4364 275 689, +91 94439 – 85843 |
திருநாங்கூர் பற்றி இங்கே காணலாம்.
கோவில் பற்றி
திருநாங்கூரில் உள்ள பதினோரு திவ்யதேசங்களில், இந்த திவ்யதேசத்திற்கே முதன் முதலில் பத்ரிநாத் நாராயணன் நான்கு வேதங்களை குதிரைகளாக்கி சிவனை சாந்தப்படுத்த, வந்தார்.
பத்ரியிலும் நாராயணன் என்ற பெயரிலேயே அமர்ந்த திருக்கோலம், இங்கும் அமர்ந்த திருக்கோலமே.
பத்ரிகாஸ்ரமத்தில்தான் ஸ்ரீமந்நாராயணன் திருமந்திரத்தை நரநாராயணனுக்கு உபதேசித்து அருளினார். எனவே எமக்கும் அந்த மந்திரத்தை அருளவேண்டும் என்று தேவர்கள் இங்கு வந்து வேண்டுகின்றனர். திருமந்திரம் உபதேசித்த பெருமாளே இங்கு எழுந்தருளியிருப்பதால் இது பத்ரிக்குச் சமமான ஸ்தலமாக கருதப்படுகிறது.
நாராயணர் தாமரை மலரின்மீது கால் பதித்து கிழக்கு முகமாக வீற்று இருக்கிறார். வருடத்தின் எல்லா நாட்களும் காலையில் சூரியஒளி எம்பெருமான் மீது வீசுகிறது என்று சொல்கிறார்கள். இதனால் எப்பொழுதும் அணையாத விளக்காக (நந்தா விளக்கு) எம்பெருமான் பாடப் படுகிறார்.
உற்சவர் நின்ற திருக்கோலத்தில், சக்கரத்தை பிரயோக சக்கரமாக தாங்கி உள்ளார். இவரை நரநாராயணர் என்றும் கூறுவதுண்டு. பத்ரிநாத் ஸ்தலத்தில், நரநாராயணனுக்கு நாராயணன் திருமந்திர உபதேசம் செய்ததை, திருநறையூர் திவ்யதேசத்தில் சொல்லி உள்ளோம் அதையும் இங்கு நினைவில் கொள்ளலாம்.
ஸ்வாமியின் பீடத்தின் கீழ் பிரம்மா உள்ளார்.
இந்த கோவில் மாடம் போன்ற அமைப்பில் உள்ளதால் மணிமாடக்கோவில் என்று பெயர் பெற்றது. (திருநறையூரும் மணிமாட கோவில் அமைப்பு தான்).
இந்த திருக்கோவிலில் தான், திருநாங்கூர் பதினோரு கருட சேவை தை மாத அமாவாசைக்கு அடுத்த நாள் நடைபெறுகிறது.
சுவாமி ராமானுஜருக்கு ஐந்து ஆச்சார்யார்களில் ஒருவரான திருகோஷ்டியூர் நம்பிக்கு இங்கு தனி சன்னதி உள்ளது.
இங்கு இரண்டு தீர்த்தங்கள். இந்திர புஷ்கரணி மற்றும் ருத்ர புஷ்கரணி என்பவை.
ஸ்தல வரலாறு
பதினோரு சிவன்களுக்கு காட்சி கொடுத்த சரித்திரம் இந்த திருத்தலத்தில் தான் நடந்தது. இந்த கோவிலுக்கு எதிரில் மதங்கீஸ்வரர் என்ற சிவன் கோவில் பெருமாளை பார்த்தவாறு உள்ளார். இந்த சரித்திரத்தை இங்கே காணலாம்.
இன்னொரு வரலாறு. சந்திரன் தன்னுடைய சாபம் தீர இந்த ஸ்தலத்தில் தவம் புரிந்தது அருள்பெற்றான். அவன் மட்டும் இல்லாமல், அவனுடைய ஐராவதம் என்ற யானையும் அருள் பெற்றது இந்த திருத்தலத்தில் தான். நாக என்ற சம்ஸ்க்ருத வார்த்தைக்கு யானை என்று பொருள். ஐராவதம் என்ற யானை அருள் பெற்றதால், இந்த ஊருக்கு நாங்கூர் என்ற பெயர் வந்தாக சொல்வர்.
ஆழ்வார்
வேதம் ‘ஸத்யம் ஞானம் அனந்தம் பிரஹ்மம்’ என்ற பிரஹ்ம ஸப்தத்தினால் ஸ்ரீமந் நாராயணனைக் கூறுகிறான். அதை அப்படியே தமிழில் திருமங்கைஆழ்வார், “நந்தா விளக்கே, அளத்தற்கு அரியாய் நரநாரணனே (பெரிய திருமொழி 3.8.1) என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.
ஆழ்வார், தாயார் புண்டரீகவல்லியையும் சேர்த்து “கொங்கு ஆர் இலை புண்டரிகத்தவள் இன்பம் அன்போடு அணைந்திட்ட” (பெரிய திருமொழி 3.8.3) என்று மங்களாசாசனம் செய்து உள்ளார்.
Google Map
திருமணிமாடக்கோவில் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
திருமணிமாடக் கோவில் பற்றி தினம் ஒரு திவ்யதேசம் சொல்வது