A Simple Devotee's Views
ஸ்வேதபுஷ்பவல்லித் தாயார் ஸமேத செம்பொன்னரங்கப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
திவ்யதேசம் | திருசெம்பொன்செய் கோவில் (திருநாங்கூர் 4) | |||
மூலவர் | பேரருளாளன் | |||
உத்ஸவர் | ஹேமரங்கர் செம்பொன்னரங்கர் | |||
தாயார் | அல்லிமாமலர் நாச்சியார் | |||
திருக்கோலம் | நின்ற | |||
திசை | கிழக்கு | |||
பாசுரங்கள் | 10 | |||
மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 10 | |||
தொலைபேசி | +91 4364 – 236172 |
திருநாங்கூர் பற்றி இங்கே காணலாம்.
கோவில் பற்றி
பரமபதத்தில் இருந்து அருளுபவர் அருளாளன். இங்கு வந்து நமக்கு அருள் செய்பவன் பேரருளாளன். உறையூரில் இருந்த வந்த அழகியமணவாளன் இவன்.
இழந்த செல்வத்தை பெற விரும்புவோருக்கு இத்தலத்தின் எம்பெருமானை சேவிப்பது
மிக்க பயனும் வெற்றியும் தரும் என்பது ஒரு நம்பிக்கை.
ஸ்தல வரலாறு
இராவணவதம் முடிந்தபின் இராமபிரான், த்ருடநேத்திரர் என்ற முனிவரிடம், ப்ராஹ்மணனை வதம் செய்தால், மக்கள் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, தானும் அதை செய்து மக்களுக்கு ஒரு நீதியை செய்து காட்டுகிறார்.
த்ருடநேத்திரரின் ஆலோசனையின் பேரில், தங்கத்தினால் ஒரு பெரிய பசு செய்து அதற்குள் தான் ஒரு நான்கு நாட்கள் தங்கி இருந்து, பின்னர்
அந்த தங்க பசுவை ஒரு பிராம்மணர்க்குத் தானம் செய்தார். அதைக் கொண்டு அந்த பிராம்மணர் இந்தக் கோவிலை கட்டியபடியால், இதற்கு செம் பொன்னால் செய்த கோவில் என்றும் செம் பொன் செய் கோவில் என்றும் கூறுவர்.
எம்பெருமானின் இந்த கோவிலை, எம்பெருமானே கட்ட உதவினார் என்பதும் ஒரு சிறிய தகவல்.
ஆழ்வார்
திருமங்கையாழ்வார் 10 பாசுரங்களால் இந்த எம்பெருமானுக்கு மங்களாசாசனம் செய்கிறார். (பெரிய திருமொழி 4.3).
ஒவ்வொரு பாசுரத்திலும், “நாங்கை நன் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே’ என்று சொல்வது, செம்பொன்செய்கோவில், திருநாங்கூர் திவ்யதேசங்களில் நடுவே உள்ளது என்பதை சொல்வதற்கே ஆகும். ஆழ்வாரும் பெரிய திருமொழியில் திருநாங்கூர் பதினோரு திவ்ய தேசங்களை பாடும்போது, இந்த பதிகத்தை நடுவில் வைத்து, இதற்கு முன் ஐந்து திருநாங்கூர் திவ்யதேசங்களை பாடியும், இதற்கு பிறகு மீதம் உள்ள ஐந்து திவ்யதேசங்களை பாடி உள்ளார் என்பதும் ரசிக்க வேண்டியது.
“நந்தாவிளக்கே” என்று தொடங்கி (3.8) கம்ப மாகடல் (4.2) என்று ஒரு முன் ஐந்து, நடுவே பேரணிந்து (4.3) என்று இந்த ஸ்தலம், பிறகு ‘மாற்றரசர்‘ (4.4) என்று தொடங்கி “கவளயானை கொம்பொசித்த” (4..8) என்ற பின் ஐந்திணையும் நினைவில் கொள்ளலாம்.
இரண்டாவது பாசுரத்தில் எம்பெருமான் “‘இறப்பு எதிர், காலக்கழிவும் ஆனாவனை ” என்று எம்பெருமான், எக்காலத்திலும் உள்ளான் என்பதை இறந்த காலத்தில் இருந்தான், நிகழ்காலத்தில் உள்ளான், எதிர் காலத்தில் இருப்பான் என்கிறார். கழிந்து கொண்டே செல்லுகிற நிகழ்காலத்தை காலக் கழிவும்’ என்று அழகாக சொல்கிறார்.
ஒன்பதாவது பாசுரத்தில், தெளிந்த நான்மறையோர் என்று ஆழ்வார் சொல்வது எம்பெருமான் காப்பாற்றுவானா அல்லது கைவிட்டுவிடுவானா என்று தெளிவளில்லாமல் கலங்குவது என்று இல்லாமல் எப்போதும், எங்கும், எந்த சூழ்நிலையிலும், எம்பெருமான் காப்பாற்றுவான் என்று தெளிவாக உள்ளவர்கள் வாழும் திருநாங்கூர் என்கிறார். இப்படிப்பட்ட தெளிவு உடையவர்களுக்கு காட்சி கொடுக்கிறோம் என்ற மகிழ்ச்சியை “வளம் கொள் பேரின்பம் மன்னி நின்றானை” என்கிறார். .
Google Map
திருசெம்பொன்செய் கோவில் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
திருசெம்பொன்செய் கோவில் பற்றி தினம் ஒரு திவ்யதேசம்