028 திருக்காழிச்சீராம விண்ணகரம் Thirukazhisiramavinnagaram

லோகநாயகி தாயார் ஸமேத தாடாளப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருகாழிச்சீராம விண்ணகரம் / சீர்காழி / பாடலிகவனம் / உத்தமக்ஷேத்திரம்
மூலவர்த்ரிவிக்ரமன் தாடாளான் உலகளந்த நின்ற திருக்கோலம்
உத்ஸவர் லோகநாதன் / தாடாளன் / விட்டுப் பானைத் தாடாளன்
தாயார் லோகநாயகி / மட்டவிழ்குழலி
திருக்கோலம்நின்ற திருகோலம்
திசைகிழக்கு
பாசுரங்கள்10
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 10
தொலைபேசி+91 4364 – 270 ; +91 4364 207, +91 94424 – 19989

கோவில் பற்றி

இங்கு எம்பெருமான் தனது இடதுகாலைத் தூக்கி திரிவிக்ரம கோலத்தில் காட்சி அளிக்கிறார். வலது திருஅடிகளால் எம்பெருமான் பூவுலகத்தை அளந்ததும் இடது திருவடியால் மேலுலகத்தை அளந்தத்தையும் நினைவில் கொண்டால், எம்பெருமான் இடது கரத்தை தூக்கி மேலுலகை காட்டும் காட்சியாகவோ, மூன்றாவது அடியை எங்கே வைப்பது என்று மாவலியை கேட்பது போலவோ இருப்பதாக அனுபவித்து மகிழலாம்.

திரி விக்ரம அவதாரம் எடுத்து, தன் தாள்களால் எல்லா உலகங்களையும் அளந்ததால், இப்பெருமானுக்கு தாள் ஆளன், என்பது, தாளாளன் என்றுஆகி தாடாளன் என்ற திருநாமம் இத்தலத்து எம்பெருமானுக்கு ஆயிற்று.

முன் மண்டபத்தில், வாமன அவதாரம் எடுத்த பெருமாள், ஒரு கையில் குடையுடனும் வலது கை தானம் ஏற்கும் நிலையிலும் சாளக்ராம மாலை அணிந்து காட்சி அளிக்கிறார்.

எம்பெருமான் உலகத்தையே ஒரு காலால் அளந்ததால், பூமி நிலம் வாங்குவதற்கு / பூஜை செய்வதற்கு உகந்த கோவில்.

108 திவ்யதேசங்களில், சில ஸ்தலங்களே (6) விண்ணகர் (வைகுந்தம்) என்ற பெயர் பெற்றுள்ளன. அவை :

  • திருவிண்ணகர் (ஒப்பிலியப்பன் கோவில்)
  • நந்திபுர விண்ணகரம் (நாதன் கோவில்)
  • காழிச்சீராம விண்ணகரம் (சீர்காழி த்ரிவிக்ரமப் பெருமாள்)
  • அரிமேய விண்ணகரம் (திருநாங்கூர் திவ்யதேசம், குடமாடு கூத்தன் கோவில்)
  • வைகுண்ட விண்ணகரம் (திருநாங்கூர் திவ்யதேசம், வைகுண்ட நாதர் கோவில்)
  • பரமேச்சுர விண்ணகரம் (பரமபத நாதன், காஞ்சிபுரம்)

இந்த கோவிலுக்கு அருகிலேயே திருஞானசம்பந்தருக்கு பார்வதி தேவி பால் ஊட்டிய சட்டைநாதர் கோவில் உள்ளது.

ஸ்தல வரலாறு

பிரம்மனுக்குத் தன் ஆயுளைப்பற்றிக் கர்வம் இருந்ததாகவும் அதனை அடக்க உரோமசர் என்னும் முனிவர் மகா விஷ்ணுவைக் குறித்து இங்கு கடுந்தவம் செய்ததாகவும் முனிவரின் தவத்தை மெச்சிய மஹாவிஷ்ணு அவர் உடம்பில் உள்ள (தலையில் உள்ள) ஒரு உரோமம் உதிர்ந்தால் பிரம்மனின் ஆயுளில் ஒரு வருடம் குறையும் என்று கூறி பிரம்மனின் கர்வத்தை அழித்தார் என்றும், முனிவரின் வேண்டுகோளுக்கு இசைந்து எம்பெருமான் அவருக்கு திரிவிக்ரம அவதாரத்தைக் காட்டி அருளினார் என்றும் வரலாறு.

மஹாபலிச் சக்ரவர்த்தி யாகம் செய்த சித்தாஸ்ரமம் என்ற இடத்தில தானும் யாகம் செய்ய விரும்பி, அதற்கு எந்த இடையூறும் வராமல் காக்க, இராம இலக்குவர்களை விசுவாமித்திரன் அழைத்து வந்ததாக இராமாயணம் சொல்லும். அந்த சித்தாஸ்ரமம், பக்சார் என்று பிஹார் மாநிலத்தில் உள்ளது. அதேபோல் சித்தாஸ்ரமம் என்ற பெரியார் உள்ள இடம் இததலத்திற்கு அருகில் இருப்பதால், இது ராம விண்ணகரம் ஆயிற்று.

ஆழ்வார்

இத்திருத்தலத்திற்கும் திருமங்கையாழ்வாருக்கும் நிறைய சுவாரஸ்யமான தொடர்புகள் உண்டு. அவற்றில் சிலவற்றை நம் காண்போம்.

ஒரு சமயம் இத்தலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது, ஒரு மூதாட்டி உற்சவப் பெருமாளை மட்டும் தவிட்டுப் பானையில் வைத்துக் காத்து தினமும் திருவாராதனம் செய்து வந்தாள்.அதனால் “தவிட்டுப் பானைத் தாடாளன்” என்ற பெயரும் எம்பெருமானுக்கு உண்டு. திருமங்கையாழ்வார் இவ்வூருக்கு வந்த சமயம், அந்த மூதாட்டி, ஆழ்வாரிடம் எம்பெருமானை ஒப்படைக்க, அவர் எம்பெருமானை இங்கே பிரதிஷ்டை செய்தார்.

திருஞான சம்பந்தர், திருமங்கையாழ்வாரை ஒரு சமயம் வாதத்திற்கு இந்த ஸ்தலத்தில் அழைத்ததாகவும், அவர் கவி பாட ஆராதன விக்ரகம் வேண்டும் என்று தெரிவிக்க அவரது சீடர்கள் மூதாட்டியிடம் இருந்து தாடாள விக்ரகப் பெருமாளை பெற்று வந்து கொடுத்ததாகவும் கூறுவர்.

இந்த திருத்தலத்தில் திருஞானசம்பந்தரை, திருமங்கை ஆழ்வார் வாதத்தில் வென்றதற்காக, அவருடைய வேலை, ,திருமங்கையாழ்வாருக்குப் பரிசாக அளித்து கவுரவித்தது திருமங்கையாழ்வாரின் கவித்திறனை உலகிற்கு மேலும் பறைசாற்றும் ஒரு காரணமாக அமைந்தது.

வாதத்தின் போது திருமங்கையாழ்வார், ஒரு குறளாய் இருநிலம் மூவடி மண்வேண்டி….. அருமறையின் திறன் நான்கும் வேள்வி ஐந்தும் அங்கங்கள் அவைகள் ஆறும் இசைகள் எழும் என்று, (பெரிய திருமொழி, 3.4.1) தொடங்கி, ஒன்று, முதல் ஏழு வரை எண்வரிசையில் பாடி, தொடர்ந்து வரும் பத்துப் பாடல்களில் திருமாலின் பல அவதாரங்களை விளக்க, ஆழ்வாரின் திறமை கண்டு வியந்த திருஞான சம்பந்தர், ஆழ்வாருக்கு விருதுகள் தகும் என்று சொல்லி திருமங்கை ஆழ்வாரின் கால்களுக்கு தண்டையும் அணிவித்து மகிழ்ந்ததுவும் இத்திருத்தலத்தில்தான்.

திருமங்கையாழ்வார் தன் பாசுரங்களில் பலஸ்ருதி வரும் இடங்களில், பொதுவாக தம்முடைய பட்டப்பெயர்களில், ஒன்று அல்லது இரண்டு மட்டும் இணைத்துப் பாடுவார். ஆனால் இங்கே இவரை நாலுகவிப்பெருமாள் என்று மக்கள் பாராட்டியதால், தனது 8 விருதுப்பெயர்களையும் ஒரு பாடலில் சொல்கிறார்.

அவை,

  1. ஆலிநாடன்
  2. அருள்மாரி
  3. அரட்டமுக்கி
  4. அடையார் சீயம்
  5. கொங்குமலர் குழலியர்வேள்
  6. மங்கை வேந்தன்
  7. பரகாலன்
  8. கலியன்.

   

Google Map

திருக்காழிச் சீராம விண்ணகரம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருக்காழிச் சீராம விண்ணகரம் பற்றி தினம் ஒரு திவ்யதேசம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d bloggers like this: