A Simple Devotee's Views
புண்டரீகவல்லி தாயார் ஸமேத பரிமளரங்கநாதப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
திவ்யதேசம் | திருஇந்தளூர் | |||
மூலவர் | பரிமள ரங்கநாதன், மருவினிய மைந்தன், சுகந்தவன நாதன் | |||
உத்ஸவர் | பரிமள ரங்கநாதன் | |||
தாயார் | சுகந்தவல்லி தாயார், புண்டரீகவல்லி, பரிமள ரங்கநாயகி, சந்திரசாப விமோசனவல்லி | |||
திருக்கோலம் | கிடந்த (வீர சயனம்) (நான்கு திருக்கரங்களுடன் சயன சேவை) | |||
திசை | கிழக்கு | |||
பாசுரங்கள் | 11 | |||
மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 11 | |||
தொலைபேசி | +91 4364-223 330. |
கோவில் பற்றி
சிறுவயது முதல் இன்றும் எங்களை, நாங்கள் எங்கு இருந்தாலும் அதீத கருணையுடன் வளர்த்து கொண்டு வரும் எங்கள் சுகந்தவல்லி தாயார் சமேத பரிமள ரங்கநாதனுக்கு எங்களின் கோடானகோடி நமஸ்காரங்களுடன் இந்த பதிவினை தொடங்குகிறோம்.
பஞ்ச ரங்க க்ஷேத்திரத்தில் இறுதியாக உள்ள க்ஷேத்திரம் இந்த திருஇந்தளூர்.
பஞ்ச ரங்க க்ஷேத்திரங்கள் ஐந்து. அவை,
நான்கு திருக்கரங்களுடன், சங்கு சக்கரங்களை ஏந்திக்கொண்டு மிக பெரிய திருஉருவில், ஆதிசேஷன் மேல் சயன திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். சங்கு சக்கரத்துடன் இருப்பதால் வீர சயனம் என்று போற்றப் படுகிறார்.
திருவடியருகில் காவிரித் தாயாரும், சிரசருகில் கங்கைத்
தாயாரும், வணங்குகின்றனர். . திருவடிக்கருகில் சந்திரனும், சரசுக்கு அருகில் சூரியனும் உள்ளனர். நாபிக்கமலத்தை பிரம்மன் ஆராதிப்பதாக ஐதீகம்.
ஏகாதசி மண்டபம் ஒன்று இந்த கோவிலில் உள்ளது. ஏகாதசி விரதம் தொடங்க இருப்பவர்கள் இந்த திருத்தல எம்பெருமானை தரிசித்து / எண்ணிக்கொண்டு ஆரம்பிப்பது சிறப்பு.
ஐப்பசி மாதம் முழுதும் இங்கே திருவிழாக் கோலமாக இருக்கும். துலா மாதத்தில் காவிரியில் நீராட இந்தியாவிலிருந்து இங்கு பக்தர்கள் வருவர். ஆண்டுதோறும் திருஇந்தளூர் பரிமள ரங்கன் சன்னதி ஐப்பசி அமாவாசை கருடசேவை புறப்பாடு நடைபெறும்.
ஐந்து அடுக்கு கோபுரம், 350 அடி நீளமும் 230 அடி அகலமும் உள்ள கோவில்.
ஸ்தல வரலாறு
சந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபங்களை போக்குதற்காக இந்த தலத்தில் எம்பெருமானைக் குறித்து தவம் இருந்து சாபம் நீங்கப் பெற்றதாகத் தல வரலாறு. இன்றும் திருஇந்தளூர் பரிமள ரங்கன் சன்னதி துலா ப்ரஹம்மோத்ஸவம் 4ம் திருநாள் காலை சந்திர சாப விமோசனம் நடைபெறுகிறது.
சந்திரனுக்கு இந்து என்ற ஒரு பெயர் உண்டு. தனக்கு சாபம் தீர்த்த இத்தலம் தனது பெயராலேயே அழைக்கப்பட வேண்டும் என்று வேண்ட, அதுவே திரு இந்தளூர் என்று ஆயிற்று.
ஏகாதசி விரதத்தின் சிறப்பு இந்த உலகத்திற்கு தெரிய உதவும் திருத்தலம். ஏகாதசி விரதம் இருந்த அம்பரீஷன் என்ற மன்னவனுக்கு தேவர்கள் துர்வாச முனிவர் மூலம் கொடுத்த தொந்தரவுகளில் இருந்து பரிமள ரங்கநாதன் காப்பாற்றியதாக சொல்வார்கள்.
மக்கள் தங்கள் பாவங்களைப்போக்கி கொள்ள புண்ணிய நதிகளுக்கு சென்று நீராடி வருவார்கள். அந்த பாவங்கள் தீர, அந்த புண்ணியநதிகள், துலா மாதத்தில் (தமிழ் மாதம் ஐப்பசி) காவிரி நதியில் நீராடி தங்கள் புனிதத் தன்மையை புதுப்பித்துக் கொள்வார்கள்.
Google Map
திருஇந்தளூர் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
தினம் ஒரு திவ்யதேசம் திருஇந்தளூர் பற்றி
ஆழ்வார்
திருமங்கைஆழ்வார் ஆண் பாவத்தில் ஊடல் பாசுரங்கள் பாடியுள்ள ஒரே ஸ்தலம்.
அடியேன், திருமங்கையாழ்வாரின் பாசுரங்களை சிறிது விளக்கங்களுடன் கொடுக்க முயற்சி செய்துள்ளேன்.
திருமங்கையாழ்வார் இத்தலத்திற்கு வந்தபோது பூஜைகள் முடிந்து கோவில் பூட்டப் பட்டுவிட்டது. தான் வருவதற்குள் எம்பெருமான் கதவுகளை மூடி கொண்டாரே என்று திருமங்கையாழ்வார், அவரை “வாழ்ந்தே போம் நீரே” என்று பாடியுள்ளார்.
“சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே, மருவினிய மைந்தா” என்று விளித்து, ஆழ்வார் எம்பெருமானின் அடிமை என்று தெரிந்திருந்தும் அவருக்கு காட்சி கொடுக்காது கதவுகளை மூடி கொண்டார் என்றும், ஆழ்வார், பரிமளரங்கனைக் காண ஆசைப்பட்ட போது, அப்படி செய்தான் என்ற பழிச்சொல் அவனுக்கு வந்து சேரும் என்றும் ஆகவே தனக்கு காட்சி கொடுக்க வேண்டும் என்றும் ஆழ்வார் பிரார்த்திக்கிறார்.
தனக்கு பழிச்சொல் வருவது பற்றி ஆழ்வார் கவலைப்பட வேண்டாம் என்று எம்பெருமான் சொல்ல, எம்பெருமானால் தாங்க முடியாதபடி அவனின் பக்தர் மீது பழிச்சொல் வரும், என்று ஆழ்வார் கூறுகிறார்.
ஆழ்வார், எம்பெருமான் புலப்படாது செல்லச் செல்ல மேலும் வளர்ந்து கொண்டே வருகிறது என்று சொல்கிறார்.
எம்பெருமானடைய ஸர்வஜ்ஞத்வத்திற்கும் (எல்லாம் தெரிந்தவர்) ஸர்வ சக்தித்வத்திற்கும் (எதையும் செய்ய முடியும்) குறை கூறுவது போல் இருந்தாலும், ஆழ்வாரின் விளக்கங்களை எம்பெருமான். மேலும் மேலும் கேட்க விரும்புகிறார்.
ஆழ்வார் திவ்யதேசங்களை சுற்றி திரிகிறார் என்பது எம்பெருமானுக்கும் தெரியும். அப்படி இருந்தும், ஆழ்வாருக்கு பொன்னின் ஒளியைக் காட்டிலும் சிறப்பாக உள்ள அவனின் வடிவழகைக் காட்டாமல் இருப்பதை எடுத்து உரைக்கிறார்.
பரமபதத்தில் நித்திய சூரிகளுக்கு காட்சி கொடுக்கும் பேரழகை, இந்த உலகத்தில் உள்ளவர்களுக்கு காட்டுவதற்காகவே அர்ச்சாவதாரம் எடுத்து உள்ளார் என்றும் இந்தளூரிலும் அப்படியே இருந்தாலும், தனக்கு நடையழகு காட்டாமல் இருப்பது குறித்தும் கேள்வி எழுப்புகிறார்.
எம்பெருமானுக்கு எல்லா விஷயங்களும் தெரிந்து இருந்தும், ஆழ்வாரையும் எல்லா பக்தர்களைப்போல் தன்னையும் எண்ணிவிட்டார் என்றும், பரதன் போல் 14 ஆண்டுகளோ, சீதா பிராட்டியைப்போல் ஒரு மாதமோ பெருமாளை பிரிந்து இருக்க முடியும் என்ற தன்மை இல்லாதவராய், ஒரு நொடி பொழுதும் பிரிய மாட்டாத தன்மையுடைவர் ஆழ்வார் என்றும் சொல்கிறார்.
ஒவ்வொரு யுகத்தில் ஒவ்வொரு நிறத்துடன் இருந்த, எம்பெருமானின் திருமேனி, இந்தளூரில் என்ன வண்ணம் என்று கேட்டு, “சிந்தை தன்னுள் முந்தி நிற்றிர், சிறிதும் திருமேனி, இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே!” என்று ஆழ்வார் முடிக்கிறார்.