A Simple Devotee's Views
தலைச்சங்கநாச்சியார் ஸமேத நாண்மதியப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
திவ்யதேசம் | திருதலைச்சங்க நாண்மதியம் / தலைச்சங்காடு | |||
மூலவர் | நாண்மதிய பெருமாள், வெண்சுடர் பெருமாள், சந்திரசாபஹரர் | |||
உத்ஸவர் | வியோமஜோதிபிரான் வெஞ்சுடர்ப்பெருமாள் லோகநாதன் | |||
தாயார் | தலைச்சங்க நாச்சியார் / செங்கமலவல்லி தாயார் | |||
திருக்கோலம் | நின்ற | |||
திசை | கிழக்கு | |||
பாசுரங்கள் | 2 | |||
மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 2 | |||
தொலைபேசி | +91 99947 29773 |
கோவில் பற்றி
சந்திரனுக்கு உண்டான சாபத்தைத் தீர்த்து இவ்விடத்தில்
எம்பெருமான் சந்திரனுக்கு காட்சியளித்ததாக சரித்திரம். அதனால், சந்திர தோஷம் தீர்வதற்கான திவ்யதேசங்களில் இதுவும் ஒன்று. மற்ற இரண்டு, திருஇந்தளூர், மற்றும் திருவரங்கம். திருவரங்கம் கோயில் உள்ளேயே சந்திர புஷ்கரணி உள்ளதை நினைவில் கொள்ளவும்
இந்த திருத்தலத்தில், எம்பெருமான், சந்திரனை தலையில் சூடி, சிவன் போல், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
விலை மதிப்பற்ற சங்கு ஒன்றை இந்த எம்பெருமான், ஏந்தி கொண்டு இருப்பதால் சங்கம் என்ற பெயர் வந்தது என்பர். இந்த திருத்தலத்தின் அருகில் கடல் இருப்பதாலும், அங்கு அந்த காலத்தில் உயர்ந்த சங்குகள் கிடைத்து அவை அதிகமாக வாணிகம் செய்யப் பட்டதால் இந்த பெயர் ஏற்பட்டது என்று சொல்வதுண்டு.
மூலவர், நாண்மதிய பெருமாள் என்றும், உற்சவர் வெண்சுடர் பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். எம்பெருமானும் தேவிமார்களுடன் மிகப் பேரழகுடன் செப்பு மூர்த்திகளாக எழுந்தருளி உள்ளனர். கையில் ஏந்தி உள்ள சங்கும் மிகவும் பேரழகு வாய்ந்தது.
ஸ்தலபுராணம்
சந்திரன், தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது, மகாலட்சுமிக்கு முன் தோன்றியவர், அதனால், சந்திரன் லட்சுமியின் சகோதரன் ஆகிறார். நவகிரஹங்களில் சூரியனுக்கு அடுத்தபடியாக உள்ளவன்.
சந்திரன் தான் செய்த தவற்றினால் தேவகுருவால் சாபமிடப்பட்டான். சந்திரன், தான் எல்லோரிடமும் ஒரேபோல் அன்பு செலுத்துவதாக கூறியத்திற்கு மாறாக, தான் விரும்பி திருமணம் புரிந்துகொண்ட 27 நட்சத்திர மனைவிகளில் ரோகிணி என்ற ஒரு தேவிக்கு மட்டும், அதிக அன்பு செலுத்தி வந்தான். அதனால், நட்சத்திர மனைவிகளின் தந்தையான தக்கன் என்பவன் சந்திரன் தினமும் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து போக சாபமிட்டான். இந்த இரண்டு சாபங்களில் இருந்து விடுபட, சந்திரன், திருமாலிடம் வேண்டி அவர் சொல்படி, திருவரங்கம், திருஇந்தளூர் புஷ்கரணிகளில் ஸ்னானம் செய்து, பின் அருள் பெற்ற இடம் இத்திருத்தலம் ஆகும்.
ஆழ்வார்கள்
எம்பெருமானுக்கு அமைந்துள்ள பெயர் மிகவும்
ரசிக்கத்தக்கதாகும். எம்பெருமானின் திருமுகத்தை தண் என்னும் குளிர்ச்சியான சந்திர ஒளிக்கு ஒப்புமையாக பல ஆழ்வார்கள் கூறியுள்ளார்கள்.
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல் என்று திருப்பாவை (22) ஆண்டாளும், பல் நெடும் சூழ் சுடர் ஞாயிற்றொடு, பால் மதியேந்தி, என்று நம்மாழ்வாரும் (திருவாய்மொழி 8.2.10) , “திரைநீர்ச் சந்திர மண்டலம் போல் செங்கண்மால் கேசவன்” எனறு பெரியாழ்வாரும் (பெரியாழ்வார் திருமொழி, 1.8.10), சலம் பொதி உடம்பின் தழல் உமிழ் பேழ்வாய்ச் சந்திரன் வெங்கதிர் அஞ்ச, மலர்ந்தெழுந்த அணவு மணிவண்ண உருவின் மால் புருடோத்தமன் என்று பெரியாழ்வாரும் (பெரியாழ்வார் திருமொழி, 4.7.2), பாடியதில், சந்த்ர சூரிய ஒளிக்கற்றை எம்பெருமானின் திருமுகமண்டலத்திற்கு ஒப்பு சொன்னாற்போல், இங்கே, அதையே திருநாமமாக சூடிக்கொண்டுள்ளார்.
திருமங்கை ஆழ்வார் இரண்டு பாசுரங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார்.
ஆண்டாள், திருப்பாவை (1) பாசுரத்தில், கதிர்மதியம் போல் முகத்தான் என்று பாடியுள்ளது இந்த திவ்யதேச எம்பெருமானுக்கு பொருத்தமாக உள்ளது என்று எண்ணி அனுபவிக்கலாம், நம் ஆச்சார்யர்கள் கூற்று அப்படி இல்லை.
Google Map
திருதலைச்சங்க நாண்மதியம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
திருதலைச்சங்க நாண்மதியம் பற்றி தினம் ஒரு திவ்யதேசம்