A Simple Devotee's Views
செங்கமலவல்லித்தாயார் ஸமேத ஆமருவியப்ப பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
திவ்யதேசம் | தேரழுந்தூர் . கிருஷ்ணாரண்யம் (கிருஷ்ணின் காடு) | |||
மூலவர் | தேவாதிராஜன் / கோஸகன் | |||
உத்ஸவர் | ஆமருவியப்பன் | |||
தாயார் | செங்கமலவல்லி | |||
திருக்கோலம் | நின்ற திருக்கோலம் | |||
திசை | கிழக்கு | |||
பாசுரங்கள் | 45 | |||
மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 45 | |||
தொலைபேசி | +91- 4364-237 952 |
கோவில் பற்றி
தேவாதிராஜன் நின்ற திருக்கோலத்தில், 13 அடி உயரத்திலான சாளக்ராம திருவுருவம். மூலவருக்கு வலது புறம் ப்ரஹ்லாதாழ்வாரும், இடது புறம் கருடாழ்வாரும் சேவை சாதிக்கின்றனர். இடது புறம், காவிரி தாயார் மண்டியிட்டு சேவிக்கிறாள். உற்சவப் பெருமாளுக்கு முன்புறம் கன்றும் பின்புறம் பசுவும் அமைந்துள்ள
பேரழகு சொல்லி முடிக்க முடியாது.
கம்பர்
கம்பராமாயணம் இயற்றிய கம்பன் பிறந்த ஊர். கோபுரத்தின் உட்புறம், கம்பனும் அவர் மனைவியும் சிலைவடிவதில் உள்ளனர். அருகில் உள்ள கம்பன் மேடு என்ற இடத்தில வாழ்ந்தாக சொல்கிறார்கள். வருடம் தோறும் மிகச்சிறப்பாக கம்பன் விழா கொண்டப் படுகிறது.
ஸ்தலபுராணம்
கோகுலத்தில் கண்ணன், கோபாலர்களுடன் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்த போது, ஒரு பசுமந்தையை, பிரம்மா கண்ணனுக்கு தெரியாமல் (என்று நினைத்து) தேரழுந்தூருக்கு ஓட்டிவர, அதை அறிந்த கண்ணன். உடனே அதே போன்ற பசுமந்தையை படைத்த்தான். தன் தவறை உணர்ந்த பிரம்மா, கண்ணன் முன் தோன்றி, தேரழுந்தூரில் கோயில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ள, கண்ணனும் அப்படியே ஆமருவி நிரை மேய்க்கும் அமரர் கோமானாக வந்து அருளுகிறார்.
ப்ரஹ்லாதன், நரசிம்ம அவதாரத்தைக் கண்டு பயந்தபோது, எம்பெருமானின் சாந்தமான உருவத்தை வேண்டிய போது, சினம் குறைந்த சிங்கமாகப் பெருமாள் காட்சி தந்தும், பிரகலாதனின் அச்சம் குறையாமல் இருக்க, இத்தலத்தில் அமர்ந்துள்ள ஆமருவியப்பனாக காட்சி தந்து ப்ரஹ்லாதனின் பயத்தை போக்கினார். அதனால் மூலவர் அருகில் ப்ரஹ்லாதனும் இடம் பெற்று, நித்திய பூஜைகள் பெறுகிறான்.
இந்திரன் ஒரு வைரமுடியினையும் ஒரு விமானத்தையும், கருடனிடம் கொடுத்து, அவைகள் எந்தப் பெருமாளுக்கு உகந்தவைகளோ அவ்வவரிடம் சேர்ப்பிக்குமாறு வேண்ட, திருநாராயணபுரத்தில் (மேல்கோட்) உள்ள செல்லப் பிள்ளை பெருமாளுக்கு வைரமுடியினையும், தேவாதிராஜனுக்கு விமானத்தையும் அளித்தார். அதனால் இந்த ஸ்தல விமானம், கருட விமானம் ஆயிற்று. மேலும் எம்பெருமான் கருடனையும் தன் பக்கத்திலேயே வைத்துக் கொண்டார்.
அகத்தியரிடம் பெற்ற சாபத்தை போக்க தேரழுந்தூரில் தேவாதிராஜனைக் குறித்து காவிரி தவமிருந்து, தன்னுடைய சாபத்தை போக்கி கொண்டாள் என்று வரலாறு. இப்பெருமானை நோக்கித் தவம் இருந்த நிலையில் காவிரித் தாயார் மண்டியிட்டு மூலவர் சந்நிதியில் காட்சி அளிக்கிறாள்.
விமானத்தில் ஆகாசத்தில் பறக்கும் தவ வலிமை பெற்ற உபரிசரவசு, தன் விமானத்தின் நிழல் எதன் மேல் விழுந்தாலும் அது கருகிவிடும் என்ற வரம் பெற்று இருந்தான். அது கண்ணனின் பசுக்கூட்டத்திற்கு துன்பம் கொடுக்க, கண்ணன் அவனின் கர்வத்தை அடக்க, பறந்து கொண்டு இருந்த அவன் தேரினை பூமியில் விழ வைத்தார், அதனால் தேர் அழுந்தி, தேரழுந்தூர் என்று பெயர் பெற்றது.
இதுவே வேறு ஒரு விதத்திலும் சொல்லப்படுகிறது. விமானத்துடன் ஆகாசத்தில் சஞ்சரிக்கும் தவ வலிமை பெற்ற உபரிசரவசு என்னும் அரசன் தேவர்கட்கும் ரிஷிகளுக்கும் இடையில் நடந்த ஒரு விவாதத்தில் ஒருதலைப் பட்சமாகத் தீர்ப்பளிக்க, இதனால்
கோபமுற்று ரிஷிகளால் சபிக்கப்பட்டு விமானத்துடன் பூமியில் வீழ்ந்து அவன் தேர் அழுந்தி விட்டது. அதனால் இதற்குத் தேரழுந்தூர் என்ற பெயர்.
சிவன் பார்வதியை பசுவாக மாற சாபம் இட்டபொழுது லட்சுமி தேவியும் பசுவாக மாறி இந்த ஸ்தலத்திற்கு வர, எம்பெருமானும் கோசகனாக (ஆ மருவி அப்பனாக) இங்கு வந்து ஆட்சி புரிகிறார்.
சிறப்புகள்
மார்க்கண்டேயர் இந்த எம்பெருமானை வணங்கி மோட்சம் பெற்றார் என்பது ஒரு வரலாறு.
ஆழ்வார்
திருமங்கை ஆழ்வார் இந்த திவ்யதேசத்திற்கு 45 பாசுரங்கள் பாடி உள்ளார். “திருவுக்கும் திருவாகிய செல்வா” (பெரிய திருமொழி 7.7.1) என்று எம்பெருமானை போற்றுகிறார். “செங்கமல திருமகளும் புவியும் செம்பொன் திருவடியில்” (7.8.1) என்று இந்த திவ்யதேச தாயாரின் பெயர் கொண்டு ஆழ்வார் பாடியுள்ளது, தாயாரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்து உள்ளது போல் தோன்றுகிறது. (பெரியவாச்சான் பிள்ளை மற்றும் நம் ஆச்சார்யர்கள் இவ்வாறு விளக்கம் சொல்லவில்லை).
Google Map
தேரழுந்தூர் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
தேரழுந்தூர் பற்றி தினம் ஒரு திவ்யதேசம் சொல்வது
நம் வலைப்பதிவில் கம்பர் பற்றி ஸ்ரீ ஸ்வாமிநாதன்