A Simple Devotee's Views
To Read this in English, please click here, thanks
திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்தொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.
முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் “கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான்” என்று சொல்லி நம்மை அரங்கனிடம் அழைத்து செல்கிறார்.
அப்படியும் மக்கள் எல்லோரும் ஆழ்வார் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் அவர்களை விட்டு, பெருமாள் தனக்கு செய்த மிக பெரிய உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார்.
இதுவரை, எம்பெருமான் தனக்கு கொடுத்த அனுபவத்தை சொல்வது (1-3), தன்னுடைய அனுபவத்தை கொண்டு உபதேசம் செய்வது (4-14), மற்றும் எம்பெருமான் தனக்கு செய்த நன்மைகளை நினைத்துக் கொள்ளுதல்(15-24) என்ற முதல் மூன்று உட்பிரிவுகளை பார்த்தோம்.
இனி, தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை, எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட நான்காவது பகுதி. இதனை நம் சம்பிரதாயத்தில் நைச்சானுசந்தானம் என்று கூறுவார்கள். அதனை பார்ப்பதற்கு முன் மோக்ஷம் பற்றி சில கருத்துக்களை இங்கே சொல்வோம்.
எல்லா ஜீவாத்மாக்களுக்கும் தம் தம் கர்மாக்களை ஒழித்து பரமாத்மாவை அடைவதையே குறிக்கோளாக் கொண்டு தினமும் ஓடிக்கொண்டு இருக்கின்றன. இறைவனை அடைவதே முக்தி என்றும் மோட்சம் என்றும் கூறுகிறோம். அதை அடைவதற்கு சிலவழிகள்பற்றி சுருக்கமாக,
இவற்றில் எதன் மூலமும் மோக்ஷம் அடையலாம் என்று கண்ணன் பகவத் கீதையில் சொன்ன மூன்று ஸ்லோகங்களை இப்பொழுது காண்போம். முதலில், ஜனகன் முதலானோர் கர்மயோகத்தின் மூலம் மோக்ஷம் அடைந்தான் என்று கூறுகிறார் (3.20). கர்மயோகத்தைவிட அதில் உள்ள ஞான பாகமே முக்கியம் என்றும், எல்லா கர்மங்களும், எல்லா சாதனங்களும் ஞானத்திலேயே முடிவு பெறுவதாக கண்ணன் சொல்கிறார். (4.33). ஒரு பயனையும் எதிர்பாராத பக்தியினாலேயே தன்னை உண்மையாக அறியவும், பார்க்கவும், உட்புகவும் முடியும் என்று கண்ணன் கூறுகிறார். (11.54). இப்படி, மூன்று யோகங்களும் தனித்தனியே மோக்ஷத்தை அளிக்க வல்லன என்பதே ஆகும்.
மேலும் மூன்று யோகங்களில் ஒவ்வொன்றிலும் மற்ற இரண்டும் கலந்தே உள்ளன என்றும் இந்த மூன்று யோகங்களிலும் ஒன்று பிரதானமான சாதனமாகவும், மற்ற இரண்டும் ஆதரவு சாதனங்களாவும் இருக்கும் என்றும் நம் ஆச்சார்யர்கள் கூறுவர். அப்படி இரண்டினை ஆதரவாக கொண்டு கொண்டு மூன்றாவதை சாதனமாக்கி மோக்ஷத்தை அடைந்தவர்களுக்கு உதாரணங்களை பார்ப்போம். ஜனகர், ஞான யோகத்தையும், பக்தி யோகத்தையும் கொண்டு கர்ம யோகத்தை சாதனமாக்கி சாதித்தவர். ஜடபரதர், கர்மயோகத்தையும், பக்தி யோகத்தையும் ஆதாரமாகக் கொண்டு ஞானயோகத்தை சாதனமாகக் கொண்டவர். பிரஹ்லாதன், கர்ம, ஞான யோகங்களை ஆதாரமாகக் கொண்டு பக்தியோகத்தின் மூலம் மோக்ஷம் அடைந்தவர். இப்படி இந்த மூன்று யோகங்களுமே தனித்தனியாக மோக்ஷம் அளிக்க வல்லன.
கர்மயோகம் மூலம் தொடங்கிய சில காலத்திலே ஞான யோகம் ஏற்படக்கூடியது. ஞான யோகம் தொடங்கியவுடன் உணர்வது பரபக்தி. கர்மயோகம் செய்வதால் உண்டாகும் பலன்கள் என்றும் வீணாவதில்லை. அதாவது, ஒரு ஜீவாத்மா, கர்ம யோகம் செய்து, அது முடிவதற்கு முன்பே மரணம் அடைந்து விட்டால், அந்த கர்மயோகத்தின் பலன்கள், அந்த ஜீவாத்மாவை அதன் அடுத்த பிறவியில் வந்து அடையும். பொதுவாக, கர்ம, ஞான யோகங்கள் தொடங்கிய பின்னர் ஒரு ஜீவாத்மா பக்தி யோகம் அடைவது என்பது சாத்தியமாகிறது.
பக்தி யோகம் நமக்கு பிறக்காமல் இருப்பதற்கு தடையாக உள்ள விரோதிகள் நாம் செய்த பாவங்களே ஆகும். பற்பல பிறவிகளில் நாம் செய்த கர்ம, ஞான யோகங்கள், நம் பாவங்களை நீக்கி, நம்மை, கண்ணனிடம் பக்தி உடையவர்கள் ஆக்கி, நாம் பக்தி யோகம் செய்ய உதவுகின்றன என்று நம் சாஸ்திர நூல்கள் தெரிவிக்கின்றன.
நாம், நான்கு யுகங்கள் உள்ளன என்றும், அவை கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலியுகம் என்றும் பார்த்து உள்ளோம். கர்ம, ஞான, பக்தி யோகங்களை பின்பற்ற வேண்டிய திறமைகளும், அவகாசமும், ஆயுளும், சூழ்நிலைகளும் முதல் மூன்று யுகங்களுக்கு அதிகம் என்றும், கலியுகத்தில் அது கடினம் என்றும் சொல்வதை கேட்டு இருக்கிறோம். அதனால், நமக்காகவே, சரணாகதி என்ற மோக்ஷம் செல்லும் வழி உள்ளது என்பதையும் நாம் இங்கு நினைவில் கொள்ளலாம்.
அவன் மூலம், அவனை மட்டுமே அடைவது என்பது சரணாகதி என்று சுருக்கமாக கொள்ளலாம். அவன் திருவடிகளே சரணம் என்று வேறு எந்த வித உபாயமும் இன்றி அவனை அடைவது; அப்படி அவனை அடைந்தபின், அவனை தவிர வேறு எதுவும் அவனிடம் வேண்டுவதில்லை என்பதே இதன் உட்கருத்து. இவ்வாறு வேண்டுபவர்களை பகவத்லாபார்த்தி என்று கூறுவார்கள். இவ்வுலக இன்பங்களை வேண்டுபவர்கள் ஐஸ்வர்யார்த்தி என்றும், இவ்வுலக இன்பத்தைத்தாண்டி, பரமாத்மாவிடம் செல்லாமல் கைவல்யம் என்ற விருப்பத்தை வேண்டுபவர்கள் கைவல்யார்த்தி.
மோக்ஷம் என்பதை விரும்பாமல், கைவல்யம் என்பதை விரும்பும் சில ஜீவாத்மாக்கள் உள்ளன என்று நாம் பார்த்து உள்ளோம். அப்படி கைவல்யத்தை வேண்டுபவர்களுக்கு இந்த மூன்று யோகங்களுமே தனித்தனியே சாதனமாக கூடும் என்று ஆளவந்தார் என்ற ஆச்சார்யர் அருளிச்செய்து உள்ளார்.
பரமாத்மா கைவல்யார்த்திகளுக்கும் அவனை வந்துஅடைய, இறுதிவரை அந்த ஜீவாத்மாவிற்கு ஒரு சந்தர்ப்பம் அளிக்கிறார். தன்னுடைய இறுதி மூச்சின் போது, ஒரு கைவல்யார்த்திக்கு பரமாத்மாவை அனுபவிக்க வேண்டும் என்ற நினைப்பு ஏற்பட்டால், பரமாத்மா அந்த கைவல்யார்த்திக்கு மோக்ஷத்தை அளித்துவிடுவார். இத்தனையும் அருளி செய்தவர் ஆளவந்தார் என்ற ஆச்சார்யர்.
வராக சரமச் ஸ்லோகத்தில் “நல்ல நிலையில் மனதும் உடலும் இருக்கும் போது (இளமைக்காலத்தில்) என்னை ஒரு கணமேனும் மகாவிச்வாசத்துடன் ஒருவன் நினைப்பானாகில், அவன் வயதாகி உடல் தளர்ந்து மரக்கட்டையைப் போல் ஸ்மரணை இன்றி கிடக்கும்போது நான் அவனைப்பற்றி நினைக்கிறேன்” என்று சொல்வதில் இருந்து எந்த வழியில் சென்றாலும் இறுதி மூச்சின் போது அவனை நினைக்கவேண்டும் என்றும், நாமாக நினைக்கலாம், அல்லது அவன் நமக்காக நினைக்கிறான் என்றும் கொள்ளலாம்.
மோக்ஷம் பற்றி மேலே சொன்ன சில குறிப்புகளை நினைவில் கொண்டு, இப்பொழுது திருமாலை 25ம் பாசுரத்திற்குள் செல்வோம்.
குளித்து மூன்று அனலை ஓம்பும், குறிகொள் அந்தணமை தன்னை, ஒளித்திட்டேன் என் கண் இல்லை, நின் கணும் பத்தன் அல்லேன், களிப்பது என் கொண்டு நம்பீ, கடல் வண்ணா, கதறுகின்றேன், அளித்து எனக்கு அருள் செய் கண்டாய், அரங்க மா நகருளானே (திருமாலை 25)
ஆழ்வார், பிராம்மணன் என்ற குலத்தில் பிறந்திருந்தும், அது கர்மயோகம் செய்வதற்கு தரும் தகுதிகளை தான் இழந்துவிட்டதாகவும், தனக்கு ஆத்ம ஞானம் இல்லை என்றும், தான் பரமாத்மாவிடம் உண்மையான பக்தி உடையவன் இல்லை என்றும் அதனால், தான் மகிழ்வதற்கு ஒரு காரணமும் இல்லையே என்று கதறுகிறார். அரங்கன் தனக்குத் தகுதி முதல் தொடங்கி எல்லாவற்றையும் அருள வேண்டும் என்று இந்த பாசுரத்தில் வேண்டுகிறார்.
இதற்கு முன் உள்ள பத்து பாசுரங்களில் எம்பெருமான் தனக்கு செய்த பேருதவிகளை சொன்னார். சென்ற பாசுரத்தில், தனக்குள்ள பக்தி கள்ளத்தனமானது என்றார். இந்த உடலோடு சம்பந்தம் நீங்கி, பரமபதம் அடைந்து நித்யமும் அவனை அனுபவிக்க தனக்கு ஒரு சாதனமும் இல்லை, அதனால் இந்த பகவத்விஷயத்தை இழந்து விடுவோமோ என்று ஆழ்வார் தவிக்கிறார்.
இதைக்கண்ட பெரியபெருமாள், பிராம்மணர், க்ஷத்திரியர், வைசியர் இவர்கள் பின்பற்ற வேண்டிய கர்ம, ஞான பக்தி வழிமுறைகள் சாஸ்திரங்களில் உள்ளன என்றும், மற்றவர்கள், விலங்குகள் எல்லாவற்றிக்கும் வழிமுறைகளான சரணாகதி, திருநாம சங்கீர்த்தனம் போன்றவைகளும் உள்ளனவே என்றும் ஆழ்வாரிடம் கூறுகிறார். இந்த உபாயங்களை பின்பற்ற தனக்கு தகுதி தொடங்கி ஒன்றும் இல்லை என்றும் தம்மிடம் கர்ம, ஞான பக்தி யோகங்களில் எதுவும் இல்லை என்றும் இந்த பாடலில் ஆழ்வார் கூறுகிறார்.
இதற்கு முன் பாசுரங்களில் தனக்கு பக்தி மற்றும் ஞானம் இருப்பதாக ஆழ்வார் சொன்னது, எம்பெருமானை இந்த உலகில் அவனை அனுபவிக்க அவன் அருளியவையே தவிர, அவை பரமபதம் சென்று அவனை அனுபவிக்கவல்ல சாதனம் அல்ல என்றும் கூறுகிறார்.
ப்ராஹ்மணனாக பிறந்தவன் மூன்று விதமான குளியல் செய்யவேண்டும் என்றும் , மூன்று அக்னிகளை வளர்க்க வேண்டும், என்றும் வேதசாஸ்திரங்கள் சொல்லும் எதையும் பிறந்த நாளில் இருந்து தாம் செய்ததில்லை என்று ஆழ்வார் கூறுகிறார். மூன்று விதமான குளியல் என்பது, தினமும் மூன்று வேளைகளில் செய்யும் ஸ்னானம், கிரஹண காலங்களில் செய்யும் ஸ்னானம், மற்றும் பிராயச்சித்தம் செய்யும் முன் செய்ய வேண்டிய ஸ்னானம் ஆகும். இந்த மூன்று விதமான ஸ்னானங்களில் ஒன்றை செய்து மற்றதை செய்யாமல் இருக்க முடியாது. இவை அனைத்தும் பலவித கர்மங்களை செய்வதற்கான தகுதியை கொடுக்கும். (கர்மயோகத்திற்கான தகுதி). ஆழ்வார் சாஸ்திரங்கள் சொல்லும் கர்மங்களை பின்பற்றுவது ஒருபுறம் இருக்க அவைகளுக்கு உண்டான தகுதியை கொடுக்கும் குளிப்பது போன்ற செயல்களை பின்பற்றுவதே ஒரு அரியதான செயலாக உள்ளது என்கிறார். ஸ்னானம் போன்று உயரிய சொற்களை சொல்வதற்கும் தகுதி இல்லை என்பதை தெரிவிக்கவே ஸ்னானம் என்று சொல்லாமல் குளித்து என்று ஆழ்வார் சொல்கிறார்.
சாஸ்திரம் மூன்று அக்னிகளை ஆராதிக்க வேண்டும் என்று சொல்கின்றது. இங்கும் ஆழ்வார் அக்னி என்ற உயர்ந்த வார்த்தையை கூறாமல், அனல் என்ற சாதாரணமான வார்த்தையை கையாள்கிறார். இப்படி ஆழ்வார் அனல், குளித்து என்று சாதாரண நடைமுறை வார்தைகளை சொல்வது, அவர் தூய்மையான வார்த்தைகள்கூட அறிந்தவர் அல்லர் என்பதை எம்பெருமானுக்கு தெரிவிக்கவே ஆகும்.
ஒரு அனலை ஆராதிப்பதே அரிது ஏனெனில், போதும் என்ற நிலை எதற்கு கிடையாதோ அதற்கு அனல் என்று அர்த்தம். அதாவது எவ்வளவு ஆராதித்தாலும் போதாது, மேலும் மேலும் ஆராதிக்க வேண்டும் என்ற தன்மை உள்ள ஒரு அனலை ஆராதிப்பதே அரிது என்று ஆழ்வார் சொல்கிறார். அதுவும் மூன்று அனல்களை ஒரு அந்தணன் ஆராதிக்கவேண்டும் என்று சாஸ்திரம் சொல்வதை பின்பற்றுவது மிக கடினம் என்பது ஆழ்வார் வார்த்தைகளால் தெரிகிறது. குழந்தைக்கு சோறும் நீரும் கட்டிக்கொண்டு செல்லும் தாயை போல் அந்தணன் அனலை ஆராதிக்க உமியும் சமித்தும் (தீயில் இட குச்சிகள்) சுமந்து கொண்டு எப்பொழுதும் திரிய வேண்டி உள்ளது என்கிறார்.
உச்சரிக்கும் மந்திரத்தின் பலன் கிடைக்க மிகவும் ஜாக்கிரதையாக செயல் படுத்தவேண்டியது அந்தண்மை என்ற ப்ராஹ்மண்யம். இதில்
என்று ஏதாவது ஒன்றில் குறை ஏற்பட்டாலும் மந்திரத்தின் பலன் கிடைக்காமல் போகும். இது அஞ்சலி செய்தால் மன்னிப்பது போன்று எளிமையான ஒன்று அல்ல என்பதால் இதனை பின்பற்றுவதும் ஆழ்வாருக்கு சிரமம் என்று அவர் கூறுவது தெரியவரும்.
அப்படிப்பட்ட ப்ராஹ்மண்யம் தன்னிடம் இல்லை என்பதை ஒளித்திட்டேன் என்று கூறும் ஆழ்வார், இவரால் அந்த சமூகத்தில் உள்ள மற்றவர்க்கும் அவப்பெயர் உண்டாகும்படி தான் இருப்பதாகவும் கூறுகிறார். இதனால் ஆழ்வார் பெரியபெருமாளுக்கு தெரிவிக்கும் விஷயம் , கர்மயோகத்திற்கு தகுதியான ப்ராஹ்மண்யமே தன்னிடம் இல்லை, அதனால் கர்மயோகம் என்பது தன்னிடம் ஏற்பட வழியே இல்லை என்பதே ஆகும்.
கர்மயோகம் ஏற்பட வழி இல்லை என்றால், ஞான யோகத்திற்கு முயற்சி செய்யலாமே என்று பரமாத்மா / பெரியபெருமாள் ஆழ்வாரிடம் வினவிய போது, ஞான யோகத்திற்கு தகுதியான, தன்னை (ஜீவாத்மா / ஆத்மாவை) பற்றிய உண்மையான அறிவு தன்னிடம் இல்லை என்பதை என்கண் இல்லை என்று ஆழ்வார் கூறுகிறார். தன்னிடம் ஞான யோகத்திற்கு தகுதி இல்லை என்பதால், தன்னிடம் ஞான யோகத்திற்கான வழியும் இல்லை என்று ஆழ்வார் கூறுகிறார்.
கர்மயோகம் இல்லை என்ற போதே அதனால் ஏற்படக்கூடிய ஞான யோகம் கிடையாது என்று ஆகிவிட்ட பிறகும் ஆழ்வார் ஏன் மீண்டும் தனியாக ஞான யோகம் ‘என்கண் இல்லை‘ என்று சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டு அதற்கான விளக்கத்தை உரையாசிரியர் கூறுகிறார். சென்ற பிறவியில் கர்மயோகம் செய்து அதனால் ஏற்படக்கூடிய ஞானயோகம் பிறப்பதற்கு முன்னால் மரணம் ஏற்பட்டு அதனால் அடுத்த பிறவியின் ஆரம்பத்திலேயே ஞானயோகம் ஏற்பட்டு இருக்கலாம் என்ற ஒரு சாத்திய கூற்றினையையும் ஆழ்வார் மறுக்கிறார்.
கர்மயோகம், மற்றும் ஞானயோகம் இவற்றிற்கு தகுதி இல்லை என்றால் பக்தியோகம் செய்வது தானே என்று பெரியபெருமாள் கேட்டபோது அதற்கு தகுதியான பரமாத்மாவின் மேல் அன்பு தனக்கு சிறிது கூட இல்லை என்பதை நின் கணும் பக்தன் இல்லை என்று சொல்லி பக்தியோகத்திற்கும் வழி இல்லை என்று கூறுகிறார்.
முன்பு போல், கர்மயோகம் மற்றும் ஞான யோகம் இவை இரண்டும் இல்லை என்றால் அவற்றினால் ஏற்படும் பக்தியோகம் இல்லை என்று தனியாக சொல்ல வேண்டுமோ எனில், பற்பல பிறவிகளில் கர்ம, ஞான யோகங்களை செய்தவர்களுக்கு, பக்தியோக ஆரம்ப விரோதிகளான பாவங்கள் நீங்கப்பட்டு கண்ணனிடம் பக்தி உடையவர்கள் ஆவார்கள் என்று நம் சாஸ்திர நூல்கள் தெரிவிக்கின்றன என்பதை முன்பு பார்த்தோம். ஆழ்வார் அதுவும் தனக்கு இல்லை என்கிறார்.
இந்த மூன்று யோகங்களுமே தனித்தனியாக மோக்ஷம் அளிக்க வல்லனவாகையால், ஆழ்வார் இந்த மூன்றுக்கும் தேவையான தகுதிகளே தன்னிடம் இல்லை என்பதை தனி தனியாக கூறி உள்ளார்.
“குளித்து மூன்று அனலை ஓம்பும், குறிகொள் அந்தணமை தன்னை, ஒளித்திட்டேன் என் கண் இல்லை, நின் கணும் பத்தன் அல்லேன் ” என்ற இந்த முதல் இரண்டு வரிகளால் தொண்டரடிப்பொடி ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான பக்தி மார்க்கங்களில் ஒரு சிறிது தொடர்பும் இல்லை என்று கூறுகிறார். இனி மற்ற ஆழ்வார்கள் ஆச்சாரியார்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.
சுவாமி நம்மாழ்வார், “நோற்ற நோன்பிலேன், நுண்ணறிவிலேன் ” (திருவாய்மொழி 5.7.1) என்பது கர்மயோகமும், ஞான யோகமும் இல்லை என்று ஆழ்வார் சொல்வதாக தெரிகிறது. “கறவைகள் பின்சென்று” என்ற திருப்பாவை (28) பாசுரத்தில்ஆண்டாள் “அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலம்” என்று சொல்வதை, ‘அறிவு இல்லாத”, “அறிவு ஒன்று இல்லாத ” மற்றும் “அறிவு ஒன்றும் இல்லாத” என்ற பிரித்து கர்ம,ஞான மற்றும் பக்தி மார்க்கங்கள் ஒன்றும் தனக்கு இல்லை என்பதை சுருக்கமாக சொல்லி உள்ளார்.
ஆளவந்தார் என்ற ஆச்சாரியார் தன்னுடைய ஸ்தோத்திர ரத்தினம் என்ற நூலில் (22) ஸ்லோகத்தில் ‘ந தர்ம நிஷ்டோஸ்மி, நசாத்மவேதி, ந பக்திமான்” என்று சொல்வதின் மூலம் ‘கர்மயோகத்தில் நிலை நின்றவன் இல்லேன், ஆத்ம ஞானமும் உடையவன் இல்லேன், உன்னுடைய திருவடித்தாமரைகளில் சிறிதும் பக்தி உடையவன் இல்லேன்’ என்று சொல்லி, ஒரு சாதனமும் இல்லை, உன்னுடைய திருவடித் தாமரைகளே சாதனம் என்ற கருத்தை வலியுறுத்துகிறார். சரணாகதிக்கு தன்னிடம் ஒரு சாதனமும் இல்லை என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொன்னது போலவே தன்னிடம் கைமுதல் ஒன்றும் இல்லை அல்லது ஆகிஞ்சன்யம் என்ற வைஷ்ணவ தத்துவத்தை விளக்குகிறார்.
சரணாகதிக்கு தன்னிடம் ஒரு சாதனமும் இல்லை என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொன்னதற்கு பெரியபெருமாள், அறிவாளிகள் செய்வதுபோல், ஒரு சாதனமும் இல்லை என்ற வெறுமையை, ஆகிஞ்சன்யத்தை, சொல்வதும் மிகவும் அரிது, அப்படி ஆழ்வார் சொன்னபடியால், தம்மை அடைவதில் ஒன்றும் குறை இல்லையே என்று சொன்னார். அதற்கு ஆழ்வார், தன்னிடம் கர்ம, ஞான பக்தி யோகங்கள், இல்லையே என்ற வருத்தமும் இல்லை, கீதையில் (18.66) ‘மாம் ஏகம் சரணம் வ்ரஜ ‘ என்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவனையே பற்றும்படி சொன்னதற்கும் தன்னிடம் உள்ள ஆகிஞ்சன்யமும் ஒரு அனுதாபமும் இல்லாத ஒன்றாக இருப்பதால், தான் எதை கொண்டு ஆனந்தப்படுவது என்று கலங்குகிறார்.
அப்படியானால் ஆழ்வாரை கைவிடுவதை தவிர வேறு வழியில்லை என்று பெரியபெருமாள் உரைத்தபோது, ஆழ்வார், தன்னிடம் ஒன்றும் இல்லை என்றாலும், அவனிடம் எல்லா கல்யாண குணங்களும் இருக்கின்றன என்றும் அவற்றைக்கொண்டு தனக்கு பேற்றை அருளலாமே என்று ஆழ்வார் வேண்டுகிறார். அறிவு ஒன்றும் இல்லாத ஆய்குலத்தில் என்று சொன்ன பிறகு, குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா என்று ஆண்டாள் திருப்பாவை (28) பாசுரத்தில் சொன்னாற்போல், எம்பெருமானின் குண பூர்த்தியை, நம்பீ என்று தன்னுடைய வெறுமையை சொன்னபின் தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொல்கிறார்.
அவனுடைய உயர்ந்த, சீலம் போன்ற குணநலன்கள் தேவையில்லை என்றும் அவனுடைய வடிவழகே தனக்கு பரமபதம் அளிக்க போதும் என்பதை கடல்வண்ணா என்பதால் ஆழ்வார் தெரிவிக்கின்றார். கம்பராமாயணம் யுத்த காண்டம், (6718) பாடலில், “கருணையங்கடல் கிடந்தனன் கருங்கடல் நோக்கி ” என்று சொல்லி, ஒரு கடலோடு மற்றொரு கடல் போட்டி போட்டு சாய்ந்தாற்போல் பெரியபெருமாள் சயனித்து இருப்பது என்கிறார். ஐயப்பாடு அறுத்து தோன்றும் அழகன், (15), என்றும் ஆதரம் பெருக வைத்த அழகன் (16) என்றும் பாடிய ஆழ்வார் தனக்கு சரணாகதி அளிக்கும் பெரியபெருமாளுக்கு வடிவழகும் குணங்களும் குறைவின்றி இருப்பதால் தான் இழக்க வேண்டியது இல்லை என்பதை சொல்வதாக பொருள்.
ஆழ்வார் இந்த கதறுகின்றேன் என்பதன் மூலம் பல கருத்துக்களைத் தெரிவிக்கின்றார்
ஆழ்வார் பெரியபெருமாளிடம், தனக்கு அவரிடம் அனுதாபம் முதல் எல்லாம் பிறக்க அருள் செய்யவேண்டும் என்பதை ‘அளித்து‘ என்பதால் தெரிவிக்கின்றார். அதற்கான கருணை அவனிடம் இருப்பதால் அவன் அருள் பொழிய வேண்டும் என்று ஆழ்வார் வேண்டுகிறார்.
தான் ஏன் ஆழ்வாருக்கு, தகுதி முதல் எல்லாவற்றையும் அருள வேண்டும் என்று பெரியபெருமாள் கேட்டதற்கு, குறையற்றவர்களை மட்டும் அருள்வது என்று இருந்தால் அவன் பரமபதத்தில், முக்தர்களையும் நித்யர்களையும் அருள் செய்து கொண்டு அங்கேயே இருந்து இருக்கலாம், திருவரங்கத்திற்கு வந்து சயனித்து இருக்கும் கிடையழகையும், சீல குணங்களையும் காட்டுவது, தன்போன்றவர்களுக்கு அருள் பாலிக்கவே என்று சொல்லி, ஆழ்வார் இந்த பாசுரத்தை நிறைவு செய்கிறார்.
மீண்டும் அடுத்த பாசுரத்தில் பார்க்கலாம், நன்றி.
Our sincere thanks to my brother Mr R Ranganathan, for having corrected adiyen in the understanding of the concepts of Naichanusanthanam and Aakinjanyam. The same is updated in the post accordingly. Thanks and we value his time and contribution on this. Regards