A Simple Devotee's Views
செங்கமலவல்லித்தாயார் ஸமேத நீலமேகப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி அம்புஜ வல்லித்தாயார் ஸமேத மணிக்குன்ற பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
தஞ்சைநாயகி தாயார் ஸமேத வீரநரசிம்மஸ்வாமி திருவடிகள் போற்றி போற்றி
திவ்யதேசம் | திருத்தஞ்சை மா மணிக்கோவில் | மணிக்குன்றம் | தஞ்சையாளி | |||
மூலவர் | நீலமேக பெருமாள் | மணிக்குன்ற பெருமாள் | வீர நரசிம்மன் | |||
உத்ஸவர் | நாராயணர் | |||||
தாயார் | செங்கமலவல்லி | அம்புஜவல்லி | தஞ்சை நாயகி | |||
திருக்கோலம் | வீற்றிருந்த | வீற்றிருந்த | வீற்றிருந்த | |||
திசை | கிழக்கு | கிழக்கு | கிழக்கு | |||
பாசுரங்கள் | 5 | |||||
மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 3 பூதத்தாழ்வார் 1 நம்மாழ்வார் 1 | |||||
தொலைபேசி | +91 4362 223 384 |
கோவில் பற்றி
இது மூன்று கோவில்கள் சேர்ந்த ஒரு (1) திவ்யதேசம். பராசர க்ஷேத்திரம், வம்புலாஞ் சோலை, கருடாபுரி, தஞ்சையாளி நகர் என்று பலபெயர்கள் உண்டு.
இந்த மூன்று எம்பெருமான்களும், முன்காலத்தில் தஞ்சை நகரில் வெவ்வேறு இடங்களில் இருந்தனர். நீலமேகப் பெருமாள் மணிமுத்தா நதி அருகேயும், மணிக்குன்றப் பெருமாள் தஞ்சை அருகேயுள்ள களிமேட்டுப் பகுதியிலும், நரசிங்கப் பெருமாள் ஸ்ரீனிவாசபுரம் செவப்ப நாயக்கர் குளத்து அருகில் உள்ள சிங்கப் பெருமாள் குளத்திற்கு அருகேயும் இருந்தனர். தற்போதைய கோவில்கள், பிற்காலத்து நாயக்க மன்னர்களால் இப்படி வெண்ணாற்றங்கரையில் அமைக்கப்பட்டன.
இந்த திருத்தலத்தில் ஐந்து நரசிம்மர்கள் காட்சி அளிக்கிறார்கள்.
இதே போல் பஞ்ச நரசிம்மர், திருவாலி திருநகரியிலும் (திவ்யதேசம் 34) உள்ளது.
இந்நகரில் கருடனின் சக்தி இருப்பதாகவும், கருடன் பறந்து இந்நகரத்தை காப்பதாகவும் ஐதீகம். எனவே கருடன் பறப்பதால் இந்நகரில் பாம்பு கடிக்காது என்று சொல்வர்.
தஞ்சையைப் பார்த்த வண்ணம் விக்ரஹங்கள் அமைந்திருப்பதால், தஞ்சையைக் காத்தருளும் தெய்வம் என்றும் தஞ்சை மாமணி என்றும் போற்றப்படுகின்றன.
பங்குனி, சித்திரை, வைகாசி என்று தொடர்ந்து மூன்று கோவில்களுக்கும் மூன்று மாதங்களில் மூன்று ப்ரஹ்மோத்ஸவம் நடைபெறுகிறது. வைகாசியில் 18 கருட சேவை விசேஷம்.
ஸ்தல புராணம்
கிரேதாயுகத்தில் மது என்னும் அரசனது மரபில் தஞ்சகன், தண்டகன், கஜமுகன் என்னும் அசுரர் மூவர் பிறந்து சிவனைக் குறித்து கடுந்தவம் செய்ய, சிவன் அவர்கள் முன் தோன்றி தன்னால் அவர்கள் மூவருக்கும் மரணமில்லை என்று அருளினார். இதனால் இம்மூவரும் மிகவும் செருக்குற்று முனிவர்களின் தவத்தை சிதைத்து கொடுமைகள் புரிந்து வந்தனர். அப்போது பராசரர் என்னும் முனிவர் இவ்விடத்தில் தவம் செய்து வந்தார். அவரைத் துன்புறுத்தி அழிக்க, அவர் ஹரி, ஹரி என்று விஷ்ணுவை அழைக்க, எம்பெருமான் தானே நேரில் வந்து தஞ்சகனை சக்ராயுதத்தால் தலையைச் சீவினார். தவறுணர்ந்த தஞ்சகன் தன்னை மன்னிக்குமாறு வேண்டி தன் பெயரிலேயே இந்நகரம் திகழ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். எனவே தஞ்சகனூர் என்று மாறி, பிறகு தஞ்சாவூராயிற்று.
இதன் பிறகு கஜமுகன் என்னும் அரக்கன் யானை வடிவம் கொண்டு திருமாலைத் தாக்க அவர் நரசிம்ம ரூபமெடுத்து அவனைக் கொல்ல, அவன் இறக்கும் தருவாயில் தனக்கு மோக்ஷம் வேண்டும் என்று கேட்க அவனுக்கு திருநாடருளினார். இந்த தஞ்சையில் யாளியாகிய நரசிம்ம ரூபத்தில் நின்றதால் தஞ்சையாளி என்றே பெயராயிற்று.
இவ்வாறு இரண்டு சகோதரர்களும் மாண்டுவிட்டதைக் கண்ட தண்டகன் மிக்க சினத்துடன் திருமாலுடன் சண்டையிட்டு பின் பாதாளத்திற்குள் புகுந்து மறைந்து கொண்டான். திருமால் உடனே வராக உருவம் கொண்டு இந்த ஸ்தலத்தில், பூமியை பிளந்து, பூமிக்குள் சென்று, அவனைப் பின் தொடர்ந்து, ஸ்ரீமுஷ்ணம் என்ற இடத்தில வெளியே வந்து, அவனது தலையைக் கிள்ளி எறிந்தார். அவனும் எம்பெருமானின் பாதங்களில் வீழ்ந்து இவ்விடம் தன் பெயரால் வழங்கப்பட வேண்டும் என்று வேண்ட, அந்த காடு “தண்டகாரண்யம்” என்று ஆயிற்று. அதன் நடுவே ஸ்ரீமுஷ்ணம் என்னும் திவ்ய ஷேத்திரத்தில் நிலத்தில் இருந்து வெளியே வந்த எம்பெருமான் ஸ்ரீபூவராகப் பெருமாளாக காட்சி தந்தார்.
ஆழ்வார்கள்
“வெட்டுங்கலியன் வேல் வலியால் மந்திரத்தைத் தட்டிப் பறித்த மணங்கொல்லை” என்று திருமங்கை ஆழ்வார் பகவானிடம் திருமந்திரத்தை பெற்றுக் கொண்ட திருமணங்கொல்லை என்ற ஸ்தலமும் இந்த திவ்யதேசமும் ஒரே வெண்ணாற்றங்கரையில் தான் அமைந்துள்ளன. இது இந்த நதியின் ஒரு கோடியிலும் அது மற்றொரு கோடியிலும் உள்ளது. இங்கு விண்ணாறு எனப்படுகிறது. அங்கு வெண்ணாறு எனப்படுகிறது.
108 திவ்யதேசங்களில், 84 திவ்யதேசங்களை பாடிய திருமங்கையாழ்வார், ஆயிரத்து எண்பத்து நான்கு (1084) பாசுரங்கள் கொண்ட பெரிய திருமொழியில், ஆறாவது பாடலாக தஞ்சை மாமணி கோவிலை இரண்டாவது திவ்யதேசமாக பாடி உள்ளார். ஆழ்வார் பாடிய முதல் திவ்யதேசம் திருக்குடந்தை ஆகும்.
Google Map
திருத்தஞ்சை மாமணிக்கோவில் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
தினம் ஒரு திவ்யதேசம், திருத்தஞ்சை மாமணிக் கோவில் பற்றி