A Simple Devotee's Views
சௌந்தர்யவல்லித் தாயார் ஸமேத சௌந்தர்யராஜப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
திவ்யதேசம் | திருநாகை / நாகப்பட்டினம் | |||
மூலவர் | நீலமேக பெருமாள் (கதையுடன் காட்சி அளிக்கிறார்) | |||
உத்ஸவர் | சௌந்தர்யராஜன் | |||
தாயார் | சௌந்தர்யவல்லி / கஜலக்ஷ்மி (உத்ஸவ தாயார்) | |||
திருக்கோலம் | நின்ற | |||
திசை | கிழக்கு | |||
பாசுரங்கள் | 10 | |||
மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 10 | |||
தொலைபேசி | +91 94422 13741; +91 4365 221 374 |
கோவில் பற்றி
நான்கு யுகம் கண்ட எம்பெருமான். இத்தலம் நான்கு யுகங்களில் பெருமை பெற்றுத் திகழ்ந்தது. ஒவ்வொரு யுகத்திலுமும் ஒவ்வொருவருக்கு காட்சி அளித்து உள்ளார். கிரேதாயுகத்தில் இங்குள்ள ஸார புஷ்கரணிக்கு அருகில் ஆதிசேஷனுக்கு காட்சி அருளிய ஸ்தலம். திரேதாயுகத்தில் பூமாதேவியும், துவாபர யுகத்தில் மார்க்கண்டேயனும் பகவானைக் குறித்து தவமிருந்து அருள் பெற்ற ஸ்தலம். இக்கலியுகத்திலேயே பக்தியில் சிறந்த சாலிசுகன் என்னும் சோழன் இப்பெருமானை வழிபட்டு அருள் பெற்றான்.
நின்ற, இருந்த, கிடந்த என்ற மூன்று திருக்கோலச் சேவையும் இங்குண்டு. மூலவர் நின்ற திருக்கோலம். “வீற்றிருந்த பெருமாள்” என்று அமர்ந்த திருக்கோலமும், பள்ளி கொண்ட திருக்கோலத்தில் அரங்கநாதனும் இங்கு காட்சி தருகின்றனர். நாகராஜனுக்கு மூன்று திருக்கோலங்களிலும் எம்பெருமான் ஸேவை சாதித்ததாகச் சொல்லுவர்.
தசாவதாரதத்தை விளக்கும் செப்பு தகடுகளால் ஆன மாலையை இந்த திருத்தல எம்பெருமான் இடையை அலங்கரிப்பதை சேவிப்பது பெரும் புண்ணியம் / பாக்கியம்.
இந்த திவ்யதேசத்தில் காட்சி அளிக்கும் ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி, எட்டு திருக்கரங்களுடன், பக்த பிரஹலாதனுக்கு ஓரு திருக்கரம் ஆசி வழங்குவதும், ஒரு திருக்கரம் அபயஹஸ்தமாகவும், மற்ற திருக்கரங்களால் ஹிரண்யனை வதம் செய்வது போலவும் இருப்பது சிறப்பாகும்.
இதேபோல், அஹோபிலம் திவ்ய தேசத்தில், ஜ்வால நரசிம்ம ஸ்வாமி, எட்டு திருக்கரங்களுடன் காட்சி அளிப்பதை நினைவில் கொள்ளலாம். அஹோபிலத்தில், இரண்டு திருக்கரங்கள் ஹிரண்யனை பிடித்து கொள்ள, இரண்டு திருக்கரங்கள் அவனின் குடலை கிழிக்க, இரண்டு திருக்கரங்கள் குடலை தனக்கு மாலையாக சார்த்திக் கொள்ளும்படியும். இரண்டு திருக்கரங்கள் சங்கு, சக்கரம் கொண்டும் அமைந்துள்ளன.
ஸ்தல புராணம்
இங்கு ஆதிசேஷன் (நாகம்) சார புஷ்கரணி என்ற ஒரு புஷ்கரணியை உருவாக்கி அதன் கரையில் இருந்து எம்பெருமானை குறித்து தவம் செய்து ஆராதனம் செய்தார். அதனால் இந்த ஸ்தலம் நாகன்பட்டினம் என்று தொடங்கி, நாகப்பட்டினம் என்று ஆயிற்று. அந்த புஷ்கரணியில் ஸ்னானம் செய்து எம்பெருமானை வழிபட்டால் வைகுந்தம் அடையலாம் என்று ஐதீகம்.
துருவன் நாரதர் மூலம், இந்த எம்பெருமானின் பெருமைகளை அறிந்து கடும் தவம் புரிந்தான். எம்பெருமான் கருடவாகனத்தில் வந்து தன்னுடைய பேரழகை அந்த சிறுவனுக்கு காட்டினார். அந்த அழகினில் ஆச்சரியப்பட்டு அந்த அழகினை எப்பொழுதும் தரிசித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று வேண்ட, எம்பெருமானும் அதனை இந்த திவ்யதேசத்தில் நிறைவேற்றினான்.
அழகு இரண்டு வகை என்று சொல்வார்கள்; ஒன்று லாவண்யம், மற்றொன்று சௌந்தர்யம். லாவண்யம் என்பது மொத்த அழகு, சமுதாய சோபை என்று அழைக்கப்படும். சௌந்தர்யம் என்பது பகுதி பகுதியாக ஒவ்வொன்றும் அழகாக இருக்கும் அவயவ சோபை என்பதாகும். 108 திவ்யதேசங்களில், லாவண்யத்திற்கு என்று திருக்குறுங்குடி என்ற திவ்யதேச எம்பெருமான் என்றும், சௌந்தர்யத்திற்கு என்று இந்த திவ்யதேசமான திருநாகையைச் சொல்வார்கள் திருநாகை எம்பெருமானை, நாகை அழகியார் என்றே அழைப்பார்கள்.
திருமங்கையாழ்வார் இந்த திருத்தலத்திற்கு 10 பாசுரங்கள் பாடி உள்ளார். முதல் 9 பாசுரங்களில் எம்பெருமானின் அழகில் மயங்கி, ‘அச்சோ, ஒருவன் அழகியவா‘ என்று பாடியவர் பத்தாவது பாடலில் தான் எம்பெருமானின் பெயரை “நாகை அழகியாரை ” என்று குறிப்பிட்டு உள்ளார்.